சீர்காழி - 3


3. 081  திருத்தோணிபுரம்       திருவிராகம்     பண் - சாதாரி
                                                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
சங்குஅமரும் முன்கைமட மாதைஒரு
            பால்உடன் விரும்பி,
அங்கமுடன் மேல்உற அணிந்து,பிணி
            தீரஅருள் செய்யும்
எங்கள்பெரு மான்இடம் எனத்தகும்,
            முனைக்கடலின் முத்தம்
துங்கம்மணி இப்பிகள் கரைக்குவரு
            தோணிபுரம் ஆமே.

            பொழிப்புரை : முன்கையில் சங்குவளையல் அணிந்த உமா தேவியைத் தன்னுடைய உடம்பின் ஒரு பாகமாக விருப்பத்துடன் அமர்த்தி , எலும்பைத் தன் உடம்பில் நன்கு பொருந்தும்படி அணிந்து , தன்னைத் தியானிப்பவரது மும்மலப் பிணிப்பு நீங்கும்படி அருள் புரிகின்ற எங்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது அலை வீசுகின்ற கடலினின்றும் முத்துக்களும் , இரத்தினங்களும் , சங்குப்பூச்சிகளும் கரைக்கு வந்து சேருகின்ற திருத்தோணிபுரம் ஆகும் .

 
பாடல் எண் : 2
சல்லரி யாழ்முழவம் மொந்தை குழல்
            தாளம் அது இயம்பக்
கல்அரிய மாமலையர் பாவைஒரு
            பாகம் நிலை செய்து,
அல்எரிகை ஏந்திநடம் ஆடுசடை
            அண்ணல் இடம் என்பர்,
சொல்அரிய தொண்டர்துதி செய்யவளர்
            தோணிபுரம் ஆமே.

            பொழிப்புரை : சல்லரி , யாழ் , முழவம் , மொந்தை , குழல் , தாளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , பெரிய மலையாகிய இமயமலையரசரின் அரிய மகளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகப் பிரியாமல் கொண்டு , கையில் அனலை ஏந்தி இரவில் நடனமாடுகின்ற , சடைமுடியையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் , சொல்லுதற்கரிய பெருமையுடைய தொண்டர்கள் போற்ற நாளும் புகழ் வளரும் திருத்தோணிபுரம் ஆகும் .


பாடல் எண் : 3
வண்டுஅரவு கொன்றைவளர் புன்சடையின்
            மேல் மதியம் வைத்து,
பண்டுஅரவு தன்அரையில் ஆர்த்தபர
            மேட்டி, பழி தீரக்
கண்டுஅரவ ஒண்கடலின் நஞ்சம் அமுது
            உண்ட கடவுள்ஊர்,
தொண்டர்அவர் மிண்டிவழி பாடுமல்கு
            தோணிபுரம் ஆமே.

            பொழிப்புரை : வண்டுகள் மொய்த்து ஊதுகின்ற கொன்றைமலர் மாலையை அணிந்த வளர்ந்த சிவந்த சடையில் பிறைச்சந்திரனையும் தரித்து , பண்டைக்காலத்தில் இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய மேலான இடத்திலுள்ள சிவபெருமான் , திருமால் முதலியோர் தனது அருளின்றி அமுதம் கடையச் சென்ற தோடம் அவரைவிட்டு நீங்குமாறு , திருவருள் செய்து , அலைகளின் ஆரவாரத்தையுடைய சிறந்த பாற்கடலினின்றும் எழுந்த நஞ்சினை அமுதமென உண்ட கடவுளாய் வீற்றிருந்தருளும் ஊர் , திருத்தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செய்கின்ற வழிபாடுகள் மிகுந்த திருத்தோணிபுரம் ஆகும்.


பாடல் எண் : 4
கொல்லை விடை ஏறுஉடைய கோவணவன்,
                        நாஅணவுமாலை
ஒல்லை உடையான், அடையலர் ஆர்அணம்
                        ஒள்ளழல் விளைத்த
வில்லை உடையான், மிக விரும்புபதி,
                        மேவிவளர் தொண்டர்
சொல்லை அடைவாக இடர் தீர்த்துஅருள்செய்
                        தோணிபுரம் ஆமே.

            பொழிப்புரை : சிவபெருமான் முல்லைநிலத்ததாகிய இடப வாகனத்தை யுடையவன் . கோவண ஆடை அணிந்தவன் . அடியவர்கள் பாடிப் போற்றித் தொழும் பாமாலைகளை உடையவன் . தொண்டர்கள் பக்தியுடன் ஒலிக்கும் அரநாமமும் , சிவநாமமும் ஓதப் படும் பண்பினன் . பகைவரது மதில்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்த மேருவை வில்லாக உடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , இறைவனையே பற்றுக்கோடாகக் கொண்டு மேன் மேலும் பக்தி செய்கின்ற தொண்டர்களின் வேண்டுகோள்களை ஏற்று , அவர்களின் துன்பங்களைத் தீர்த்து அருள்செய்கின்ற திருத்தோணிபுரம் ஆகும்.


பாடல் எண் : 5
தேயும் மதியம் சடை இலங்கிட,
            விலங்கல் மலி கானில்
காயும் அடு திண்கரியின் ஈர்உரிவை
            போர்த்தவன், நினைப்பார்
தாய்என நிறைந்ததுஒரு தன்மையினர்,
            நன்மையொடு வாழ்வு
தூயமறை யாளர்முறை ஒதிநிறை
            தோணிபுரம் ஆமே.

            பொழிப்புரை : கலைகள் தேய்ந்து அழியும் நிலையிலிருந்த சந்திரனைச் சடைமுடியில் தரித்து மீண்டும் விளங்கி ஒளிருமாறு செய்தவர் சிவபெருமான் . மலைகள் மிக்க காட்டில் திரிகின்ற சினமுடைய, கொல்லும் தன்மையுடைய வலிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர் . தம்மையே சிந்தித்திருப்பவர்கட்குத் தாயைப் போலக் கருணை காட்டிப் பாதுகாப்பவர் . எங்கும் நிறைந்த தன்மையர் . அடியவர்கட்கு நன்மை புரிதலையே தம் கடனாகக் கொண்ட அப்பெருமானார் வீற்றிருந்தருளுகின்ற இடம் , தூய்மையுடைய வேதியர்கள் வேதங்களை ஓதி நிறைகின்ற திருத்தோணிபுரம் ஆகும் .


பாடல் எண் : 6
பற்றலர்தம் முப்புரம் எரித்து, அடி
            பணிந்தவர்கள் மேலைக்
குற்றம்அது ஒழித்து அருளும் கொள்கையினன் ,
            வெள்ளின்முது கானில்
பற்றவன், இசைக்கிளவி பாரிடம் அது
            ஏத்தநடம் ஆடும்
துற்றசடை அத்தன் உறைகின்ற பதி,
            தோணிபுரம் ஆமே.

            பொழிப்புரை : சிவபெருமான் பகைவர்களின் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் . தம் திருவடிகளைப் பணிந்து வணங்குபவர்களின் குற்றங்களை ஒழித்துத் திருவருள் புரியும் கொள்கையினையுடையவர் . பாடைகள் மலிந்த சுடுகாட்டில் பற்றுடையவர் . பூதகணங்கள் இசைப்பாடல்களைத் துதித்துப்பாட நடனமாடுபவர் . அடர்ந்து வளர்ந்த சடையையுடைய , அனைத்துயிர்க்கும் தந்தையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்ற தலம் திருத்தோணிபுரம் ஆகும்.

பாடல் எண் : 7
பண்அமரும் நான்மறையர், நூல்முறை
            பயின்றதிரு மார்பில்
பெண்அமரும் மேனியினர், தம்பெருமை
            பேசும்அடி யார்மெய்த்
திண்அமரும் வல்வினைகள் தீரஅருள்
            செய்தல்உடையான்ஊர்,
துண்என விரும்பு சரியைத் தொழிலர்
            தோணிபுரம் ஆமே.

            பொழிப்புரை : சிவபெருமான் பண்ணிசையோடு கூடிய நான்கு வேதங்களை அருளியவர் . வேதாகம சாத்திரங்களின் முடிவான கருத்தை , மோனநிலையில் சின்முத்திரையால் தெரிவித்தருளிய திருமார்பையுடையவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் . தமது பெருமை பேசும் அடியவர்களின் தீர்ப்பதற்கரிய வல்வினைகளைத் தீர்த்து அருளியவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது சரியையாதி தொழில்களை விரைவுடன் பணிசெய்தலில் விருப்புடைய மெய்த்தொண்டர் வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 8
தென்திசை இலங்கை அரையன் திசைகள்
            வீரம்விளைவித்து
வென்றுஇசை புயங்களை அடர்த்துஅருளும்
            வித்தகன் இடம்சீர்
ஒன்று இசைஇ யல்கிளவி பாட மயில்
            ஆடவளர் சோலை
துன்றுசெய வண்டுமலி தும்பிமுரல்
            தோணிபுரம் ஆமே.

            பொழிப்புரை : தென்திசையில் விளங்கிய இலங்கை மன்னனான இராவணன் எல்லாத் திசைகளிலும் திக்விஜயம் செய்து தனது வீரத்தை நிலைநாட்டி , வெற்றி கொண்ட தோள்களை நெருக்கிப் பின் அருளும் புரிந்த வித்தகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , இசையுடன் குயில்கள் பாட , மயில்கள் ஆட , வளம் பொருந்திய சோலைகளின் மலர்களிலுள்ள தேனை உண்ணும்பொருட்டு , வண்டுகளும் , மிகுந்த தும்பிகளும் சுருதிகூட்டுவது போல் முரல்கின்ற திருத்தோணிபுரம் ஆகும் .


பாடல் எண் : 9
நாற்றம் மிகு மாமலரின் மேல்அயனும்
            நாரணனும் நாடி,
ஆற்றல் அதனால் மிக அளப்பரிய
            வண்ணம் எரி ஆகி,
ஊற்றமிகு கீழ்உலகு மேல்உலகும்
            ஓங்கிஎழு தன்மைத்
தோற்றம்மிக நாளும் அரியான் உறைவு
            தோணிபுரம் ஆமே.

            பொழிப்புரை : நறுமணம் கமழும் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் தேட முயலத் தங்களது ஆற்றலால் அளந்தறிதற்கு அரிதாகும் வண்ணம் , நெருப்புப் பிழம்பாகி , கீழுலகு மேலுலகு ஆகியவற்றை வியாபித்து ஒங்கியெழுந்த தன்மையுடைய தோற்றத்தை உடையவனாய் ஒருநாளும் அவர்கள் அறிதற்கரியனாகிய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருத்தோணிபுரம் ஆகும் .


பாடல் எண் : 10
மூடுதுவர் ஆடையினர் வேடநிலை
            காட்டும் அமண் ஆதர்
கேடுபல சொல்லிடுவர் அம்மொழி
            கெடுத்த அடைவி னானக்
காடுபதி யாக நடம் ஆடிமட
            மாதொடு இரு காதில்
தோடுகுழை பெய்தவர் தமக்கு உறைவு
            தோணிபுரம் ஆமே.

            பொழிப்புரை : உடலை மூடி மறைக்கின்ற துவராடையணிந்த புத்தர்களும் , தமது வேடமாகிய ஆடையணியாத் தன்மையினைப் போல தமது அறிவும் உளது எனக் காட்டும் அறிவிலிகளாகிய சமணர்களும் தீமை விளைவிக்கக் கூடிய பல சொற்களைக் கூறுவர் . அத்தீய மொழிகளை நீக்கி , சுடுகாட்டைத் தமது இருப்பிடமாகக் கொண்டு , நடனமாடி , உமாதேவியோடு கூடி , இருகாதுகளிலும் முறையே தோடும் , குழையும் அணிந்தவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருத்தோணிபுரம் ஆகும் .


பாடல் எண் : 11
துஞ்சுஇருளில் நின்று நடம் ஆடிமிகு
            தோணிபுரம் மேய
மஞ்சனை வணங்குதிரு ஞானசம்
            பந்தனசொல் மாலை
தஞ்சம்என நின்றுஇசைமொ ழிந்தஅடி
            யார்கள்தடு மாற்றம்
வஞ்சம்இலர் நெஞ்சுஇருளும் நீங்கிஅருள்
            பெற்றுவளர் வாரே.

            பொழிப்புரை : அனைத்துலகும் ஒடுங்கிய பிரளயம் எனப்படும் பேரிருளில் நின்று நடனமாடுபவனாய்ப் , புகழ்மிகுந்த திருத்தோணி புரத்தை விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை வணங்கித் திருஞானசம்பந்தர் அருளிய இச்சொல்மாலைகளே தமக்குப் பற்றுக் கோடாகும் என்ற கருத்தில் நிலைத்துநின்று , அதனை இசையுடன் ஓதும் அடியவர்கள் நெறிதவறுதலும் அதற்குக் காரணமான வஞ்சனையும் இல்லாதவர்கள் . அவர்கள் நெஞ்சிலுள்ள அறியாமை என்னும் இருள் நீங்கப்பெற்று , இறைவனது அருள்பெற்றுச் சீலத்துடன் வளர்வர் .

                                                            திருச்சிற்றம்பலம்


3. 084    திருப்புறவம்     திருவிராகம்      பண் - சாதாரி
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பெண்இயல் உருவினர், பெருகிய புனல்விர வியபிறைக்
கண்ணியர், கடுநடை விடையினர், கழல்தொழும் அடியவர்
நண்ணிய பிணிகெட அருள்புரி பவர், நணுகு உயர்பதி
புண்ணிய மறையவர் நிறைபுகழ் ஒலிமலி புறவமே.

            பொழிப்புரை : சிவபெருமான் உமாதேவியைத் தம் இடப்பாகமாகக் கொண்ட வடிவமுடையவர் . பெருக்கெடுக்கும் கங்கை நீரோடு , பிறைச்சந்திரனையும் தலை மாலையாக அணிந்தவர் . விரைந்த நடையுடைய எருதினை வாகனமாகக் கொண்டவர் . தம் திருவடிகளைத் தொழுது போற்றும் அடியவர்களின் நோயைத் தீர்த்து அருள்புரிபவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற உயர்ந்த பதியாவது , புண்ணியம் தரும் மறைகளை ஓதும் அந்தணர்கள் நிறைந்து இறைவனைப் புகழ்கின்ற ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .

  
பாடல் எண் : 2
கொக்குஉடை இறகொடு, பிறையொடு, குளிர்சடை முடியினர்,
அக்குஉடை வடமும் ஓர்அரவமும் மலர்அரை மிசையினில்
திக்குஉடை மருவிய உருவினர், திகழ்மலை மகளொடும்
புக்குஉடன் உறைவது, புதுமலர் விரைகமழ் புறவமே.

            பொழிப்புரை : கொக்கின் இறகோடும் , பிறைச்சந்திரனோடும் கூடிய குளிர்ந்த சடைமுடியுடையவர் சிவபெருமான் . எலும்பு மாலை அணிந்தவர் . பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவர் . திசைகளையே ஆடையாகக் கொண்ட உருவினர் . அவர் மலைமகளான உமாதேவியோடு வீற்றிருந்தருளுவது அன்றலர்ந்த மலர்களின் நறுமணம் கமழும் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 3
கொங்குஇயல் சுரிகுழல் வரிவளை இளமுலை உமைஒரு
பங்குஇயல் திருவுரு உடையவர், பரசுவொடு இரலைமெய்
தங்கிய கரதலம் உடையவர், விடையவர், உறைபதி
பொங்கிய பொருகடல் கொளஅதன் மிசைஉயர் புறவமே.

            பொழிப்புரை : வாசனை பொருந்திய சுரிந்த கூந்தலையும் , வரிகளையுடைய வளையல்களையும் , இளமை வாய்ந்த முலைகளையும் உடைய உமாதேவியைத் தம் ஒருபாகமாகக் கொண்டு அர்த்த நாரீசுவர வடிவில் விளங்குபவர் சிவபெருமான் . அவர் மழுவோடு , மானையும் கரத்தில் ஏந்தியவர் , இடப வாகனமுடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது ஊழிக்காலத்தில் கடல் பொங்கிக் கரையில் மோதி உலகத்தை அழிக்க , அதில் மூழ்காது அக்கடலின்மீது உயர்ந்து மிதந்த சிறப்புடைய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 4
மாதவம் உடை மறையவன் உயிர் கொளவரு மறலியை
மேதகு திருவடி இறைஉற உயிர்அது விலகினார்,
சாதக உருவியல் கான்இடை உமைவெரு வுறவரு
போதக உரிஅதள் மருவினர், உறைபதி புறவமே.

            பொழிப்புரை : பெரிய தவம் செய்த மறையவனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைத் தம் பெருமை பொருந்திய திருவடி சற்றே பொருந்திய மாத்திரத்தில் அவனது உயிர் விலகும்படி செய்தவரும் , பூதகணங்கள் உலவும் காட்டில் உமாதேவி அஞ்சும்படி வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்தவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 5
காமனை அழல்கொள விழிசெய்து, கருதலா் கடிமதில்
தூமம் அதுஉறவிறல் சுடர்கொளு வியஇறை, தொகுபதி
ஓமமொடு உயர்மறை பிறஇய வகைதனொடு ஒளிகெழு
பூமகன் அலரொடு புனல்கொடு வழிபடு புறவமே.

            பொழிப்புரை : சிவபெருமான் மன்மதன் எரியுமாறு நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கியவர் . பகையசுரர்களது காவலுடைய மும்மதில்களும் புகையெழும்படி வலிய நெருப்புப் பற்றும்படி செய்தவர் . அவர் வீற்றிருந்தருளும் தலமாவது , வேள்வி வளர்த்து , வேத மந்திரங்கள் ஓதி , பிற வாத்தியங்கள் ஒலிக்க , தீபமேற்றிப் பிரமன் , மலரும் , நீரும் கொண்டு வழிபட்ட திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 6
சொல்நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர்,
பின்னையர் நடுவுணர் பெருமையர், திருவடி பேணிட
முன்னைய முதல்வினை அறஅரு ளினர், உறை முதுபதி
புன்னையின் முகைநிதி பொதிஅவிழ் பொழில்அணி புறவமே.

            பொழிப்புரை : இனிய சொற்களாலமைந்த பொருள் நயமிக்க தோத்திரங்களைச் சொல்பவர்களும், வேதங்கள் கடைப்பிடிக்கும் படிக் கூறிய கர்மாக்களைச் செய்பவர்களும் , வேதத்தின் பிற்பகுதியான உபநிடதங்கள் என்னும் ஞானகாண்டத்தைக் கடைப்பிடிப்பவர்களும் , வேதத்தின் நடுவில் அதன் உள்ளீடாக விளங்கும் பொருள் சிவனே என்பதை உணர்ந்த பெருமையுடையவர்களும் , தம் திருவடிகளைப் போற்றி வழிபட , அவர்களைத் தொன்றுதொட்டுத் தொடர்ந்துவரும் ஆணவம் , கன்மம் இவை அறும்படி செய்பவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது, பொன் முடிப்புப் போன்ற புன்னை யரும்பு, பொதியவிழ்வது போல மலர , அதிலிருந்து பொன் போன்ற மகரந்தம் சிந்தும் சோலைவளமுடைய அழகிய திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 7
வரிதரு புலியதள் உடையினர், மழுஎறி படையினர்,
பிரிதரு நகுதலை வடம்முடி மிசைஅணி பெருமையர்,
எரிதரும் உருவினர், இமையவர் தொழுவதொர் இயல்பினர்,
புரிதரு குழல்உமை யொடும் இனிது உறைபதி புறவமே.

            பொழிப்புரை : சிவபெருமான் வரிகளையுடைய புலியின்தோலை ஆடையாக உடுத்தவர் . பகைவர்மேல் வீசும் மழுப்படையையுடையவர் . யாகத்திலிருந்து பிரிந்து வந்த நகுதலையைத் திருமுடியின் மீது மாலைபோல் அணிந்து கொண்ட பெருமையுடையவர் . எரிபோல் மிளிர்கின்ற சிவந்த மேனியுடையவர் . தேவர்களால் தொழப்படும் தன்மையுடையவர் . இத்தகைய சிவபெருமான் பின்னிய கூந்தலையுடைய உமாதேவியோடு இனிதே வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 8
வசிதரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடுமுடி ஒருபது நெரிவுற
ஒசிதர ஒருவிரல் நிறுவினர், ஒளிவளர் வெளிபொடி
பொசிதரு திருவுரு உடையவர், உறைபதி புறவமே.

            பொழிப்புரை : வாளேந்திய கோலத்தோடு இடமகன்ற இவ்வுலகத்தைத் தன் வலிமையால் துன்புறுத்திய அரக்கனான இராவணனின் உடலோடு நெடிய தலைகள் பத்தும் நொறுங்கித் துவளும்படி தம் காற்பெருவிரலை ஊன்றியவரும் , ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற வெண்ணிறத் திருவெண்ணீற்றைப் பூசிய திருவுருவமுடையவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதி திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 9
தேன்அகம் மருவிய செறிதரு முளரிசெய் தவிசினில்
ஊன்அகம் மருவிய புலன்நுகர் உணர்வுடை ஒருவனும்,
வானகம் வரையகம் மறிகடல் நிலன்எனும் எழுவகைப்
போனகம் மருவினன், அறிவுஅரி யவர்பதி புறவமே.

            பொழிப்புரை : உள்ளிடத்தில் தேன் பொருந்திய , இதழ்கள் பல செறிந்த தாமரை மலராகிய ஆசனத்தில் அமர்ந்து , சிவபெருமானின் ஆணையினால் மன்னுயிர்கட்குத் தனு , கரண , புவன , போகங்களைப் படைக்கும் பிரமனும் , ஏழுவகையாக அமைந்த வானகம் , மலை , கடல் , நிலன் இவற்றை உணவாக உண்டவனான திருமாலும் அறிதற் கரியவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியானது திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 10
கோசரம் நுகர்பவர், கொழுகிய துவர்அன துகிலினர்,
பாசுர வினைதரு பளகர்கள், பழிதரு மொழியினர்,
நீசரை விடும்இனி, நினைவுறு நிமலர்தம் உறைபதி
பூசுரர் மறைபயில் நிறைபுகழ் ஒலிமலி புறவமே.

            பொழிப்புரை : நீரில் சஞ்சரிக்கின்ற மீன்களை உணவாகக் கொள்பவர்களும் , துவர் தோய்க்கப்பட்ட ஆடையணிபவர்களாகிய புத்தர்களும் ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறியாது வெறும் பாட்டைப் பாடுதலாகிய தொழிலையுடைய குற்றமுடையவர்கள் . பிறரைப் பழித்துப் புறங்கூறும் மொழிகளையுடையவர்கள் சமணர்கள் , இவ்விருவகை நீசர்களை விட்டு , சிவபெருமானைத் தியானியுங்கள் . இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , இப்பூவுலக தேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் வேதங்களைப் பயின்று இறைவனைப் புகழும் ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 11
போதுஇயல் பொழில்அணி புறவநல் நகர்உறை புனிதனை,
வேதியர் அதிபதி மிகுதலை தமிழ்கெழு விரகினன்,
ஓதிய ஒருபதும் உரியதொர் இசைகொள உரைசெயும்
நீதியர் அவர், இரு நிலன்இடை நிகழ்தரு பிறவியே.

            பொழிப்புரை : மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருப்புறவம் என்ற நல்ல நகரில் வீற்றிருந்தருளுகின்ற தூய உடம்பினனான சிவபெருமானைப் போற்றி , அந்தணர்களின் தலைவனும் , மிக்க முதன்மையுடைய தமிழ்ச் சமர்த்தனுமாகிய திருஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் உரிய இசையுடன் ஓதும் முறைமை தவறாதவர்கள் இப்பெரிய நிலவுலகில் இனி நிகழ்தலாகிய பிறவி இல்லாதவர்களாவர் .

                                                            திருச்சிற்றம்பலம்



3. 075 திருச்சண்பைநகர்   திருவிராகம்  பண் - சாதாரி
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
எந்தமது சிந்தைபிரி யாதபெரு மான்என இறைஞ்சி இமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மை அதனால்,
அந்திஅமர் சந்திபல அர்ச்சனைகள் செய்ய அமர் கின்றஅழகன்
சந்தம்மலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே.

            பொழிப்புரை : `எங்கள் சிந்தையிலிருந்து நீங்காத தலைவனே !` என்று தேவர்கள் தொழுது போற்ற , நறுமணம் கமழும் தூபதீபம் முதலிய உபசாரங்களோடு பூசாவிதிப்படி மாலை , முதலிய சந்தியா காலங்களில் அர்ச்சனைகள் செய்ய வீற்றிருக்கும் அழகனான சிவபெருமான், நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகின்ற தலம் திருச்சண்பைநகர் ஆகும் .


பாடல் எண் : 2
அங்கம்விரி துத்திஅரவு ஆமைவிரவு ஆரம் அமர் மார்பில்அழகன்,
பங்கய முகத்துஅரிவை யோடுபிரி யாதுபயில் கின்றபதிதான்,
பொங்குபர வைத்திரை கொணர்ந்துபவ ளத்திரள் பொலிந்த அயலே,
சங்குபுரி இப்பிதர ளத்திரள் பிறங்கு ஒளிகொள் சண்பைநகரே.

            பொழிப்புரை : திருமேனியிலே பரந்த புள்ளிகளையுடைய பாம்பையும் , ஆமையோட்டையும் கலந்த மாலையாக மார்பிலே விரும்பியணிந்த அழகனாகிய சிவபெருமான் , தாமரை மலர்போன்ற முகத்தையுடைய உமாதேவியாரோடு பிரியாது வாழ்கின்ற தலமாவது , பொங்கியெழும் கடலலைகள் அடித்துக்கொண்டு வந்து குவிக்கின்ற பவளத்திரள்களின் பக்கத்திலே , வலம்புரிச் சங்குகளும் , சிப்பிகளும் சொரிந்த முத்துக் குவியல்களின் மிகுதியான பிரகாசத்தைக் கொண்ட திருச்சண்பை நகராகும் .


பாடல் எண் : 3
போழும்மதி தாழும்நதி பொங்குஅரவு தங்குபுரி புன்சடையினன்,
யாழின்மொழி மாழைவிழி ஏழைஇள மாதினொடு இருந்தபதிதான்,
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை துன்னுபொழின் மாடுமடல்ஆர்
தாழைமுகிழ் வேழம்மிகு தந்தம்என உந்துதகு சண்பைநகரே.

            பொழிப்புரை : வட்டவடிவைப் பிளந்தாற் போன்ற பிறைச் சந்திரனும் , கீழே பாய்ந்து ஓடுகின்ற கங்கையாறும் , சீறும் பாம்புகளும் தங்குகின்ற முறுக்குண்ட செஞ்சடையுடையவன் சிவபெருமான் , யாழ் போன்ற இனிய மொழியையும் , மாம்பிஞ்சு போன்ற விழிகளையும் கொண்டு தன்னையே பற்றுக் கோடாகக் கொண்ட உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம் , வாழை , புலிநகக் கொன்றை , மகிழ் , புன்னை முதலிய மரங்கள் நிறைந்து அடர்ந்த சோலைகளின் பக்கத்தில் மடல்கள் பொருந்திய தாழையின் அரும்பை யானையின் ஒடிந்த தந்தம் என்று சூடாது அலட்சியம் செய்யும் திருச்சண்பை நகராகும் .


பாடல் எண் : 4
கொட்டமுழம் இட்டஅடி வட்டணைகள் கட்டநடம் ஆடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவுபதிதான்,
வட்டமதி தட்டுபொழில் உள்தமது வாய்மைவழு வாதமொழியார்
சட்டகலை எட்டுமருவு எட்டும்வளர் தத்தைபயில் சண்பைநகரே.

            பொழிப்புரை : முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , வைத்த பாதங்கள் வட்டணை என்னும் நாட்டிய வகைகளைச் செய்யத் திருநடனம் செய்யும் சிவபெருமான் பட்டத்தை நெற்றியில் அணிந்து , சூடிய மலர்மாலைகளின் நறுமணம் மிகுந்த பாவை போன்ற உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுகின்ற தலமாவது , எப்போதும் உண்மையே பேசுகின்ற , அறுபத்து நான்கு கலைகளையும் பயில்கின்ற கற்றவர்கள் கூறுவனவற்றை , சந்திரனொளி நுழைய முடியாதவாறு ஓங்கி உயர்ந்து அடத்தியாக உள்ள சோலைகளில் வளர்கின்ற கிளிகள் சொல்லும் பான்மையுடன் விளங்கும் திருச்சண்பை நகராகும் .


பாடல் எண் : 5
பண்அம்கெழுவு பாடலினொடு ஆடல்பிரி யாதபர மேட்டி, பகவன்,
அணங்கெழுவு பாகம்உடை ஆகம்உடை அன்பர்பெரு மானது, இடமாம்
இணங்குஎழுவி ஆடுகொடி மாடமதில் நீடுவிரை ஆர் புறவுஎலாம்
தண்அம்கெழுவி ஏடுஅலர்கொள் தாமரையில் அன்னம்வளர் சண்பைநகரே.

            பொழிப்புரை : பண்ணிசையோடு கூடிய பாடலும் , ஆடலும் நீங்காத பரம்பொருளும் , ஐசுவரியம் முதலிய ஆறுகுணங்களை உடையவனும் , உமாதேவியைத் தன் திருமேனியில் இடப்பாகமாகக் கொண்டவனும் , அன்பர்கட்கு அருள்புரிகின்ற பெருமானுமாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , ஒன்றோடொன்று இணங்கியாடுமாறு நாட்டப்பட்ட கொடிகளையுடைய மாடங்களும் , மதில்களும் உடையதும் , மணம் பொருந்திய புறவிடங்களிலெல்லாம் குளிர்ச்சி பொருந்திய இதழ்கள் விரிந்த தாமரைமலர்கள் மேல் அன்னங்கள் வளர்கின்ற இயல்பினதும் ஆகிய திருச்சண்பைநகர் ஆகும் .


பாடல் எண் : 6
பாலன்உயிர் மேல்அணவு காலன்உயிர் பாற உதை செய்த பரமன்,
ஆலும்மயில் போல்இயலி ஆயிழைத னோடும்அமர்வு எய்தும் இடமாம்,
ஏலமலி சோலையின வண்டுமலர் கிண்டிநறவு உண்டுஇசைசெயச்
சாலிவயல் கோலமலி சேல்உகள நீலம்வளர் சண்பைநகரே.

            பொழிப்புரை : பாலனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த எமனது உயிர் நீங்கும்படி உதைத்த பரமன் , ஆடுகின்ற மயில் போன்ற சாயலையுடைய ஆராய்ந்து தேர்ந்தெடுத்த ஆபரணங்களையணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளும் தலமாவது , ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் மிகுந்த சோலைகளில் வண்டுகளின் கூட்டம் மலர்களைக் கிளறி , தேனைக்குடித்து இசைபாட , அழகிய மீன்கள் துள்ளிப்பாய , நீலோற்பல மலர்கள் செழித்து வளர்கின்ற திருச்சண்பை நகர் ஆகும் .


பாடல் எண் : 7
விண்பொய்அத னால்மழைவி ழாது ஒழியி னும்விளைவு தான் மிகவுடை
மண்பொய்அத னால்வளம்இ லாதுஒழியி னும் தமது வண்மை வழுவார்,
உண்பகர வார்உலகின் உழிபல தோறும் நிலை ஆனபதிதான்,
சண்பைநகர் ஈசன்அடி தாழும்அடி யார் தமது தன்மை இதுவே.

            பொழிப்புரை : வானம் பொய்த்து மழை பெய்யாது ஒழிந்தாலும் , மிகுந்த விளைச்சலைத்தரும் நிலம் வறண்டதால் வளம் இல்லாமல் போனாலும் , அடியவர்கட்கும் , மற்றும் பசித்தவர்கட்கும் உணவுதரத் தம் கொடைத்தன்மையில் தவறாதவர்கள் , நெடிய உலகத்தில் பல ஊழிகளிலும் நிலையாக இருந்த தலம் திருச்சண்பைநகர் ஆகும் . அங்குக் கோயில் கொண்ட சிவபெருமான் திருவடிகளைத் தொழுது வணங்குகின்ற அடியார்களின் தன்மையும் அதுவேயாகும் .


பாடல் எண் : 8
வரைக்குல மகட்குஒரு மறுக்கம்வரு வித்தமதியில் வலியுடை
அரக்கனது உரக்கரசி ரத்துஉற அடர்த்து அருள் புரிந்தஅழகன்,
இருக்கைஅது அருக்கன்முத லானஇமை யோர்குழுமி ஏழ்விழவினில்,
தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டல்அன சண்பைநகரே.

            பொழிப்புரை : கயிலை மலையைப் பெயர்த்து இமயமலையரசனின் மகளான உமாதேவிக்கு அச்சத்தை உண்டாக்கிய , அறிவற்ற ஆனால் வலிமையுடைய இராவணனின் மார்பு , கைகள் , தலைகள் ஆகியவை மலையின்கீழ் நொறுங்கும்படி தன் காற்பெருவிரலை ஊன்றி , பின் அவன் தன் தவறுணர்ந்து இறைஞ்ச ஒளிபொருந்திய வெற்றிவாளும் , நீண்ட ஆயுளும் கொடுத்து அருள்புரிந்த அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , சூரியன் முதலான தேவர்கள் ஏழாந்திருவிழாவில் கூடிவந்து வணங்க , தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலையை நெருக்கும்படி , மேகம் படிந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த வளமிக்க திருச்சண்பைநகர் ஆகும்.


பாடல் எண் : 9
நீலவரை போலநிகழ் கேழல்உரு, நீள்பறவை நேர்உருவம் ஆம்
மாலும்மல ரானும்அறி யாமைவளர் தீஉருவம் ஆனவரதன்,
சேலும்இன வேலும்அன கண்ணியொடு நண்ணுபதி, சூழ்புறவு எலாம்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு கிள்ளைபயில் சண்பைநகரே.

            பொழிப்புரை : நீலமலைபோன்ற பெரிய பன்றி உருவம் கொண்ட திருமாலும் , பெரிய அன்னப்பறவையின் உருவம் தாங்கிய பிரமனும் , அறியாத வகையில் வளர்ந்தோங்கிய நெருப்புப் பிழம்பு வடிவாகிய வணங்குவோர்க்கு வேண்டும் வரங்கள் தருகின்ற சிவபெருமான் , சேல்மீனும் , வேலும் ஒத்த கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் தலம் , சுற்றியுள்ள அயலிடங்களிலெல்லாம் நெற்பயிர்கள் மலிந்ததும் , சோலைகளில் குயில்களும் , மற்ற பறவைகளோடு கிளிகளும் வசிக்கின்றதுமான திருச்சண்பை நகராகும் .


பாடல் எண் : 10
போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு வாதவகை உண்டு,பலபொய்
ஓதிஅவர் கொண்டுசெய்வது ஒன்றும்இலை, நன்றுஅதுஉணர்வீர், உரைமினோ,
ஆதிஎமை ஆள்உடைய அரிவையொடு பிரிவுஇலி அமர்ந்தபதிதான்,
சாதிமணி தெண்திரை கொணர்ந்துவயல் புகஎறிகொள் சண்பைநகரே.

            பொழிப்புரை : அரசமரத்தை வணங்கும் புத்தர்களும் , அசோக மரத்தை வணங்கும் சமணர்களும் நேரம்தோறும் தவறாது உண்டு பொய்ப்பொருளாம் நிலையற்ற உலகப்பொருள்களைப் பற்றிப் பேசுகின்ற , மெய்ப்பொருளாம் இறைவனைப் பற்றிப் பேசாத அவர்கள் உரைகளை மேற்கொண்டு , செய்யத்தக்க பயனுடைய செயல் யாதுமில்லை . பயன்தரும் நெறி எது என்று அறிபவர்களே ! முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானும் , எங்களை ஆட்கொள்ளும் உமா தேவியும் பிரியாது தங்கி இருக்கும் தலமாவது , உயர்ந்த சாதி இரத்தினங்களைத் தெளிந்த கடலலைகள் அடித்துக்கொண்டு வந்து வயல்களில் விழும்படி செய்கின்ற திருச்சண்பை நகராகும் . அதனைப் புகழ்ந்து பேசி அத்தலத்து இறைவனை வழிபடுவீர்களாக .


பாடல் எண் : 11
வாரின்மலி கொங்கைஉமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும்ஊர்,
சாரின்முரல் தென்கடல் விசும்புஉற முழங்குஒலிகொள் சண்பைநகர்மேல்,
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தன்உரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்பும்அவர் சேர்வர்சிவ லோகநெறியே.

            பொழிப்புரை : கச்சணிந்த கொங்கைகளையுடைய உமைநங்கையோடு எவ்வுயிர்கட்கும் நன்மையைச் செய்கின்ற சங்கரன் என்ற பெயர் கொண்ட சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் தலமாவதும் , வீதிகள் முதலிய இடங்களில் கடலோசைபோல் முழங்குகின்ற பேரொலியானது , வானுலகைச் சென்றடையுமாறு உள்ளதும் ஆகிய திருச்சண்பை நகரைப் போற்றி, இப்பூவுலகில் நிலைத்த புகழுடைய தமிழ் ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய இச்செந்தமிழ்ப் பாக்களைப் பாடுகிறவர்கள் சிவலோகத்தை அடைவர் .

                                                            திருச்சிற்றம்பலம்

1.019  திருக்கழுமலம்                      பண் – நட்டபாடை
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பிறைஅணி படர்சடை முடிஇடை பெருகிய புனல்உடை யவன்,இறை
இறைஅணி வளைஇணை முலையவள் இணைவனது எழில்உடை இடவகை
கறைஅணி பொழில்நிறை வயல்அணி கழுமலம் அமர்கனல் உருவினன்,
நறைஅணி மலர்நறு விரைபுல்கு நலமலி கழல்தொழல் மருவுமே.

            பொழிப்புரை :பிறை அணிந்த விரிந்த சடைமுடியின்கண் பெருகிவந்த கங்கையை உடைய இறைவனும், முன்கையில் அழகிய வளையலை அணிந்த உமையம்மையின் இரண்டு தனபாரங்களோடு இணைபவனும், அழகிய இடவகைகளில் ஒன்றான நிழல்மிக்க பொழில்கள் நிறைந்ததும் நெல்வயல்கள் அணி செய்வதுமாகிய திருக்கழுமலத்தில் எழுந்தருளியுள்ள அழல் போன்ற சிவந்த மேனியனுமாகிய சிவபிரானின் தேன்நிறைந்த மலர்களின் நறுமணம் செறிந்த அழகிய திருவடிகளைத் தொழுதல் செய்மின்கள்.


பாடல் எண் : 2
பிணிபடு கடல்பிற விகள்அறல் எளிதுஉளது, அதுபெரு கியதிரை
அணிபடு கழுமலம் இனிதுஅமர் அனல்உரு வினன்,அவிர் சடைமிசை
தணிபடு கதிர்வளர் இளமதி புனைவனை, உமைதலை வனை,நிற
மணிபடு கறைமிட றனை, நலம் மலிகழல் இணைதொழல் மருவுமே.

            பொழிப்புரை :இடைவிடாமல் நம்மைப் பிணிக்கும் கடல் போன்ற பிறவிகள் நீங்குதல் எளிதாகும். அப்பிறவிக்கடல் மிகப் பெரிதாகிய துன்ப அலைகளை உடையது. ஆதலின் அழகிய கழுமலத்துள் இனிதாக அமர்கின்ற அழலுருவினனும் விரிந்த சடைமீது குளிர்ந்த கிரணங்களை உடைய பிறைமதியைச் சூடியவனும், உமையம்மையின் மணாளனும், நீலமணிபோலும் நிறத்தினை உடைய கறைக்கண்டனும் ஆகிய சிவபிரானின் நலம் நிறைந்த திருவடிகளைத் தொழுதல் செய்மின்.


பாடல் எண் : 3
வரிஉறு புலிஅதள் உடையினன், வளர்பிறை ஒளிகிளர் கதிர்பொதி
விரிஉறு சடை,விரை புரைபொழில் விழஒலி மலிகழு மலம்அமர்
எரிஉறு நிறஇறை வனதுஅடி, இரவொடு பகல்பர வுவர், தமது
எரிஉறு வினைசெறி கதிர்முனை இருள்கெட, நனிநினைவு எய்தும்அதே.

            பொழிப்புரை :கோடுகள் பொருந்திய புலியின் தோலை ஆடையாக உடுத்தவனாய், ஒளி மிக்குத்தோன்றும் கிரணங்களையுடைய வளர்பிறையை அணிந்த சடையை உடையவனாய், மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும் திருவிழாக்களின் ஒலி நிறைந்ததும் ஆகிய கழுமலத்துள் அழல் வண்ணனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை, இரவும் பகலும் பரவுகின்றவர்களின் வருத்துகின்ற வினைகள் மிக்க ஒளியை உடைய ஞாயிற்றின் முன் இருள் போலக் கெட்டொழியும். ஆதலால், அப்பெருமான் திருவடிகளை நன்றாக நினையுங்கள்.


பாடல் எண் : 4
வினைகெட, மனநினைவு அதுமுடிக எனில், நனி தொழுதுஎழு குலமதி
புனைகொடிஇடைபொருள் தருபடு களிறினது உரிபுதை உடலினன்,
மனைகுட வயிறுஉடை யனசில வருகுறள் படைஉடை யவன், மலி
கனைகடல் அடைகழு மலம்அமர் கதிர்மதி யினன் அதிர் கழல்களே.

            பொழிப்புரை :உயர்ந்த பிறை மதி, கொடிபோன்ற இடையையுடைய கங்கை, மந்திரப் பொருளால் உண்டாக்கப்பட்டுத் தோன்றிய யானையின் தோல் இவற்றை உடைய உடலினனும், வீட்டுக் குடம் போலும் வயிற்றினை உடைய பூதங்கள் சிலவற்றின் படையை உடையவனும், ஆரவாரம் நிறைந்த கடற்கரையை அடுத்த கழுமலத்துள் ஞாயிறு திங்கள் ஆகியவற்றைக் கண்களாகக் கொண்டு அமர்ந்தவனுமாகிய சிவபெருமானின் ஒலிக்கும் கழற் சேவடிகளை, வினைகள் கெடவும் மனத்தில் நினைவது முடியவும் வேண்டின் நன்கு தொழுதெழுக.


பாடல் எண் : 5
தலைமதி புனல்விட அரவுஇவை தலைமையது ஒருசடை இடைஉடன்
நிலைமரு வவொர் இடம் அருளினன், நிழல்மழு வினொடுஅழல் கணையினன்.
மலைமரு வியசிலை தனில்மதில் எரியுண மனம்மரு வினன், நல
கலைமரு வியபுறவு அணிதரு கழுமலம் இனிதுஅமர் தலைவனே.

            பொழிப்புரை :நல்ல கலைமான்கள் பொருந்திய சிறுகாடுகள் புறத்தே அழகு பெறச் சூழ்ந்துள்ள கழுமலத்தில் இனிதாக எழுந்தருளிய இறைவன், ஒரு நாட்பிறை, கங்கை, நஞ்சு பொருந்திய பாம்பு ஆகியவற்றுக்குத் தன் தலைமையான சடைக் காட்டின் நடுவில் ஒன்றாக இருக்குமாறு இடம் அருளியவன். ஒளி பொருந்திய மழுவோடு அழல் வடிவான அம்பினை மேருமலையாகிய வில்லில் பூட்டி எய்தலால் திரிபுரங்கள் எரியுண்ணுமாறு மனத்தால் சிந்தித்தவன்.


பாடல் எண் : 6
வரைபொருது இழிஅரு விகள்பல பருகுஒரு கடல்வரி மணல்இடை
கரைபொரு திரைஒலி கெழுமிய கழுமலம் அமர்கனல் உருவினன்,
அரைபொரு புலிஅதள் உடையினன், அடிஇணை தொழ, அரு வினைஎனும்
உரைபொடிபட, உறு துயர்கெட, உயர்உலகு எய்தல்ஒரு தலையே.

            பொழிப்புரை :மலைகளைப் பொருது இழிகின்ற அருவிகள் பலவற்றைப் பருகுகின்ற பெரிய கடலினை அடுத்துள்ளவரிகளாக அமைந்த மணற் பரப்பில் அமைந்ததும், கரையைப் பொரும் கடல் அலைகளின் ஒசை எப்போதும் கேட்கின்றதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளியுள்ளவனும், கனல் போலும் சிவந்த திருமேனியனும், இடையிலே கட்டிய புலித்தோலை உடையவனுமாகிய சிவபிரானின் இணை அடிகளைத் தொழின், போக்குதற்கு அரியனவாகிய வினைகள் என்னும் வார்த்தையும் பொடிபட, மிக்க துயர்கள் நீங்க உயர்ந்த உலகமாகிய வீட்டுலகத்தைப் பெறுதல் நிச்சயமாகும்.


பாடல் எண் : 7
முதிர்உறி கதிர்வளர் இளமதி சடையனை, நறநிறை தலைதனில்
உதிர்உறு மயிர்பிணை தவிர்தசை உடைபுலி அதள்இடை இருள்கடி
கதிர்உறு சுடர்ஒளி கெழுமிய கழுமலம் அமர்மழு மலிபடை
அதிர்உறு கழல்அடி களதுஅடி தொழும்அறிவு அலதுஅறிவு அறியமே.

            பொழிப்புரை :மலர்கள் சூடுவதால் தேன் நிறைந்துள்ள திருமுடியில் உலகிற் பயிர்களை முதிர்விக்கும் கிரணங்கள் வளர்கின்ற மதியைச் சூடிய சடையை உடையவனாய், உதிரத்தக்க மயிர் பிணைந்து தசை தவிர்ந்துள்ள புலித்தோலை உடுத்த இடையை உடையவனாய், இருளை நீக்கும் கதிரவனின் சுடரொளி பொருந்திய மழுவாகிய படையை ஏந்திக் கழுமலத்துள் அமர்கின்ற பெருமானின் கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொழும் அறிவல்லது பிறவற்றை அறியும் அறிவை அறியோம்.


பாடல் எண் : 8
கடல்என நிறநெடு முடியவன் அடுதிறல் தெறஅடி சரண்என
அடல்நிறை படைஅரு ளியபுகழ் அரவுஅரை யினன், அணி கிளர்பிறை
விடம்நிறை மிடறுஉடை யவன், விரி சடையவன், விடைஉடை யவன்,உமை
உடன்உறை பதி, கடல் மறுகுஉடை உயர்கழு மலவியன் நகர்அதே.

            பொழிப்புரை :கடல் போன்ற கரிய நிறத்தினனும், நீண்ட முடியை அணிந்தவனும் ஆகிய இராவணனின் வலிமை கெடுமாறு செய்து பின் அவன் திருவடிகளே சரண் என வேண்ட அவனுக்கு வலிமை மிக்கவாட்படை அருளிய புகழுடையவனும், பாம்பை இடையில் கட்டியவனும், அழகுமிக்க பிறையை அணிந்தவனும், விடம் தங்கிய கண்டத்தை உடையவனும், விரித்த சடையை உடையவனும், விடை ஊர்தியனும் ஆகிய பெருமான் உமையம்மையோடு உறையும் பதி, கடல் அலைகளையுடைய உயர்ந்த கழுமலம் எனப்படும் பெரிய நகராகும்.


பாடல் எண் : 9
கொழுமலர் உறைபதி உடையவன், நெடியவன் எனஇவர் களும்,அவன்
விழுமையை அளவுஅறி கிலர்இறை, விரைபுணர் பொழில்அணி விழவுஅமர்
கழுமலம் அமர்கனல் உருவினன், அடியிணை தொழும்அவர் அருவினை
எழுமையும்இல, நில வகைதனில் எளிது இமை யவர்வியன் உலகமே.

            பொழிப்புரை :செழுமையான தாமரை மலரை உறையும் இடமாகக் கொண்ட பிரமன், திருமால் ஆகிய இவர்களும் சிவபெருமானது சிறப்பைச் சிறிதும் அறியார். அப்பெருமான், மணம் பொருந்திய பொழில்கள் சூழப் பெற்றதும் அழகிய விழாக்கள் பல நிகழ்வதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளிய அழல் உருவினன். அப்பெருமானுடைய திருவடி இணைகளைத் தொழுபவர்களின் நீங்குதற்கரிய வினைகள் இப்பூவுலகில் ஏழு பிறப்பின்கண்ணும் இலவாகும். இமையவர்களின் பெரிய உலகத்தை அடைதல் அவர்கட்கு எளிதாகும்.


பாடல் எண் : 10
அமைவன துவர்இழு கியதுகில் அணிஉடையினர், அமண் உருவர்கள்,
சமையமும் ஒருபொருள் எனும் அவை சலநெறி யனஅற வுரைகளும்,
இமையவர் தொழுகழு மலம்அமர் இறைவனது அடிபர வுவர்தமை
நமையல வினை, நலன் அடைதலில் உயர்நெறி நனிநணு குவர்களே.

            பொழிப்புரை :தமக்குப் பொருந்துவனவாகிய மருதந்துவர் ஊட்டின ஆடையை அணிந்தவர்களாகிய புத்தர்களும், ஆடையற்ற சமணர்களும் ஒரு பொருள் எனக்கூறும் சமய நெறிகளும் அறவுரைகளும் ஆகிய அவைவஞ்சனை மார்க்கத்தை வகுப்பன என உணர்ந்து தேவர்களால் தொழப்படுகின்ற கழுமலத்துள் எழுந்தருளிய இறைவன் திருவடிகளைப் பரவுவார்களை வினைகள் வருத்தா. நலன் அடைதலின் உயர்நெறிகளை அவர்கள் அடைவார்கள்.


பாடல் எண் : 11
பெருகிய தமிழ்விர கினன், மலி பெயரவன் உறைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடல்அடை கழுமலம் உறைவிடம் எனநனி
பெருகிய சிவன்அடி பரவிய பிணைமொழி யனஒரு பதும்உடன்
மருவிய மனம்உடை யவர், மதி உடையவர், விதிஉடை யவர்களே.

            பொழிப்புரை :பரந்துபட்ட நூல்களைக் கொண்டுள்ள தமிழ் மொழியை ஆழ உணர்ந்தவனும், மிக்க புகழாளனும் ஆகிய ஞான சம்பந்தன் நீர்த்துளிகளோடு மடங்கும் அலைகளுடன் கருமை நிறம் வாய்ந்த கடலின் கரையில் விளங்கும் கழுமலம் இறைவனது உறைவிடம் என மிகவும் புகழ் பரவிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடிய அன்பு பிணைந்த இப்பத்துப் பாடல்களையும் ஓதி மனம் பொருந்த வைக்கும் அன்பர்கள், நிறைந்த ஞானமும் நல்லூழும் உடையவராவர்.
                                                            திருச்சிற்றம்பலம்

2.073   திருப்பிரமபுரம்           பண் - காந்தாரம்
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
விளங்கியசீர்ப் பிரமன்ஊர், வேணுபுரம் ,
            புகலி,வெங் குரு,மேற்சோலை
வளங்கவரும் தோணிபுரம், பூந்தராய்,
            சிரபுரம், வண் புறவம், மண்மேல்
களங்கமில்ஊர் சண்பை,கமழ் காழி,வயங்
            கொச்சை,கழு மலம், என்றுஇன்ன
இளங்குமரன் தன்னைப்பெற்று இமையவர்தம்
            பகைஎறிவித்த இறைவன்ஊரே.

            பொழிப்புரை :இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப்பெயர்களை மாறிமாறிவரப் பாடியருளியது. இளங்குமரனாகிய முருகக்கடவுளைப் பெற்றுத் தேவர்களின் பகைவர்களாகிய சூரபன்மன் முதலானோரை அழியச் செய்தருளிய சிவபிரானது ஊர், விளங்கிய புகழை உடைய பிரமனூர் வேணுபுரம் முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப்பதியாகும்.


பாடல் எண் : 2
திருவளரும் கழுமலமே, கொச்சை ,
            தேவேந்திரன்ஊர், அயன்ஊர், தெய்வத்
தருவளரும் பொழிற்புறவம், சிலம்பனூர்,
            காழி,தகு சண்பை,ஒண்பா
உருவளர்வெங் குரு, புகலி, ஓங்குதராய்,
            தோணிபுரம், உயர்ந்ததேவர்
வெருவவளர் கடல்விடமது உண்டணிகொள்
            கண்டத்தோன் விரும்பும்ஊரே.

            பொழிப்புரை :பாற்கடலைக் கடையும்காலத்து உயர்ந்த தேவர்கள் அஞ்சப் பெருகி எழுந்த நஞ்சினை உண்டு அழகிய கண்டத்தோனாகிய சிவபிரான் விரும்பும் ஊர், திருமகள் வளரும் கழுமலம் முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.


பாடல் எண் : 3
வாய்ந்தபுகழ் மறைவளரும் தோணிபுரம்,
            பூந்தராய், சிலம்பன்வாழ்ஊர்,
ஏய்ந்தபுற வம், திகழும் சண்பை,எழிற்
            காழி,இறை கொச்சை,அம்பொன்
வேய்ந்தமதிற் கழுமலம், விண் ணோர்பணிய
            மிக்க அயன்ஊர், அமரர்கோன்ஊர்,
ஆய்ந்தகலை யார்புகலி, வெங்குரு, அது
            அரன்நாளும் அமரும் ஊரே.

            பொழிப்புரை :சிவபிரான் நாள்தோறும் எழுந்தருளிய ஊர், புகழ் பெற்றதும் வேதங்கள் வளர்வதுமான தோணிபுரம் முதலான பன்னிரு திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.


பாடல் எண் : 4
மாமலையாள் கணவன்மகிழ் வெங்குரு,மாப்
            புகலி,தராய், தோணிபுரம், வான்
சேமமதில் புடைதிகழும் கழுமலமே,
            கொச்சை, தேவேந் திரன் ஊர். சீர்ப்
பூமகன்ஊர், பொலிவுடைய புறவம், விறல்
            சிலம்பன்ஊர், காழி, சண்பை,
பாமருவு கலைஎட்டு எட்டு உணர்ந்துஅவற்றின்
            பயன்நுகர்வோர் பரவும்ஊரே.

            பொழிப்புரை :பாக்களில் பொருந்திய அறுபத்து நான்கு கலைகளையும் உணர்ந்து அவற்றின் பயனை நுகரும் அறிஞர்கள் போற்றும் ஊர், மலையான் மகளாகிய பார்வதி தேவியாரின் கணவராகிய பெருமானார் விரும்பும் வெங்குரு முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.


பாடல் எண் : 5
தரைத்தேவர் பணிசண்பை, தமிழ்க்காழி,
            வயம்கொச்சை, தயங்குபூமேல்
விரைச்சேருங் கழுமலம்,மெய் உணர்ந்தஅயன்ஊர்,
            விண்ணவர்தம் கோன்ஊர், வென்றித்
திரைச்சேரும் புனல்புகலி, வெங்குரு,
            செல்வம்பெருகு தோணிபுரம், சீர்
உரைச்சேர்பூந் தராய், சிலம்ப ன்ஊர், புறவம்
            உலகத்தில் உயர்ந்தஊரே.

            பொழிப்புரை :உலகின்கண் உயர்ந்தஊர், தரைத்தேவராகிய அந்தணர் பணியும் சண்பை முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.


பாடல் எண் : 6
புண்டரிகத் தார்வயல்சூழ் புறவம், மிகு
            சிரபுரம், பூங் காழி, சண்பை,
எண்திசையோர் இறைஞ்சியவெங் குரு, புகலி,
            பூந்தராய், தோணிபுரம், சீர்
வண்டுஅமரும் பொழில்மல்கு கழுமலம்,நல்
            கொச்சை,வா னவர்தங்கோன்ஊர்,
அண்டஅயன் ஊர், இவைஎன்பர் அருங்கூற்றை
            உதைத்துஉகந்த அப்பன்ஊரே.

            பொழிப்புரை :வெல்லுதற்கு அரிய கூற்றுவனை உதைத்து உகந்த சிவபெருமானது ஊர், தாமரை மலர்களால் நிறைந்த வயல்கள் சூழ்ந்த புறவம் முதலான பன்னிரு திருப்பெயர்கள் பெற்ற சீகாழிப்பதியாகும்.


பாடல் எண் : 7
வண்மைவளர் வரத்துஅயன்ஊர், வானவர்தம்
            கோன்ஊர், வண் புகலி, இஞ்சி
வெண்மதிசேர் வெங்குரு,மிக் கோர்இறைஞ்சு
            சண்பை,வியன் காழி,கொச்சை,
கண்மகிழும் கழுமலம், கற்றோர்புகழும்
            தோணிபுரம், பூந்தராய், சீர்ப்
பண்மலியும் சிரபுரம், பார் புகழ்புறவம்,
            பால்வண்ணன் பயிலும்ஊரே.

            பொழிப்புரை :வெண்ணீறு பூசிப் பால் போன்ற நிறமுடையோனாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர், கொடைத்தன்மை நிரம்பியோர் வாழும் மேன்மையான பிரமபுரம் முதலான பன்னிரு திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.


பாடல் எண் : 8
மோடிபுறங் காக்கும்ஊர், புறவம்,சீர்ச்
            சிலம்பன்ஊர், காழி, மூதூர்
நீடுஇயலும் சண்பை,கழு மலம், கொச்சை,
            வேணுபுரம், கமலம்நீடு
கூடியவன் ஊர், வளர்வெங் குரு, புகலி,
            தராய், தோணி புரம், கூடப்போர்
தேடிஉழல் அவுணர்பயில் திரிபுரங்கள்
            செற்றமலைச் சிலையன்ஊரே.

            பொழிப்புரை :போர் உடற்றத்தேடித் திரிந்த அவுணர்வாழும் திரிபுரங்களைச் செற்ற சிவபிரானது ஊர், துர்க்கையால் காவல் செய்யப் பெறும் புறவம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.


பாடல் எண் : 9
இரக்கம்உடை இறையவன்ஊர் தோணிபுரம்,
            பூந்தராய், சிலம்பன்தன்ஊர்,
நிரக்கவரு புனல்புறவம், நின்றதவத்து
            அயன்ஊர், சீர்த் தேவர்கோன்ஊர்,
வரக்கரவாப் புகலி,வெங் குரு,மாசுஇ
            லாச்சண்பை, காழி,கொச்சை,
அரக்கன்விறல் அழித்துஅருளி கழுமலம், அந்
            தணர்வேதம் அறாதஊரே.

            பொழிப்புரை :அந்தணர்களால் ஓதப்பெறும் வேதம் இடையறவுபடாத ஊர், கருணையே வடிவான சிவபிரானது தோணிபுரம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.


பாடல் எண் : 10
மேல்ஓதுங் கழுமலம்,மெய்த் தவம்வளரும்
            கொச்சை,இந் திரன்ஊர், மெய்மை
நூல்ஓதும் அயன்தன்ஊர், நுண்ணறிவார்
            குரு,புகலி, தராய், தூநீர்மேல்
சேல்ஓடு தோணிபுரம்,  திகழ்புறவம்,
            சிலம்பன்ஊர், செருச்செய்துஅன்று
மாலோடும் அயன்அறியான் வண்காழி,
            சண்பை, மண்ணோர் வாழ்த்தும் ஊரே.

            பொழிப்புரை :உலகினுள்ளோர் வாழ்த்தும் ஊர், மேலானதாக ஓதப்பெறும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.


பாடல் எண் : 11
ஆக்குஅமர்சீர் ஊர்சண்பை, காழி,அமர்
            கொச்சை,கழு மலம், அன்பானூர்
ஓக்கம்உடைத் தோணிபுரம், பூந்தராய்,
            சிரபுரம்,ஒண் புறவம், நண்பார்
பூக்கமலத் தோன்மகிழ்ஊர், புரந்தரன்ஊர்,
            புகலி,வெங் குருவும்என்பர்,
சாக்கியரோடு அமண்கையர் தாம்அறியா
            வகைநின்றான்தங்கும் ஊரே.

            பொழிப்புரை :சாக்கியர் சமணர்களால் அறியப் பெறாதவனாகிய சிவபிரான் தங்கும் ஊர், ஆக்கம் மிக்க ஊராகிய சண்பை முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.


பாடல் எண் : 12
அக்கரம்சேர் தருமன்ஊர், புகலி,தராய் ,
            தோணிபுரம்,  அணிநீர்ப்பொய்கை
புக்கரம்சேர் புறவம், சீர்ச் சிலம்பன்ஊர்,
            புகழ்க்காழி, சண்பை,தொல்ஊர்
மிக்கரன்சீர்க் கழுமலமே, கொச்சைவயம்,
            வேணுபுரம், அயன்ஊர், மேல்இச்
சக்கரம்சீர்த் தமிழ்விரகன் தான்சொன்ன
            தமிழ்தரிப்போர் தவம்செய்தோரே.

            பொழிப்புரை :புகழ்மிக்க தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் திருவருளில் திளைத்துச் சக்கரமாகச் சொன்ன இத்தமிழ் மாலையைப் போற்றி நாவில் தரிப்போர் தவஞ்செய்தோர் ஆவர்.

                                                            திருச்சிற்றம்பலம்



3. 094 திருவெங்குரு  திருமுக்கால்     பண் - சாதாரி
                                                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
விண்ணவர் தொழுதுஎழு வெங்குரு மேவிய
சுண்ணவெண் பொடிஅணி வீரே,
சுண்ணவெண் பொடிஅணி வீர், உம தொழுகழல்
எண்ணவல் லார்இடர் இலரே.

            பொழிப்புரை : தேவர்கள் தொழுது போற்றுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் , சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணிந்துள்ள சிவபெருமானே ! சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணியும் பெருமானாகிய உம் தொழத்தக்க திருவடிகளைத் தியானிக்க வல்லவர் துன்பம் அற்றவர்கள் ஆவர் .


பாடல் எண் : 2
வேதியர் தொழுதுஎழு வெங்குரு மேவிய
ஆதிய அருமறை யீரே,
ஆதிய அருமறை யீர், உமை அலர்கொடு
ஓதியர் உணர்வுஉடை யோரே.

            பொழிப்புரை : நால்வேதங்களையும் ஐயந்திரிபறக் கற்ற அந்தணர்கள் வழிபடுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும் , முதன்மையான வேதத்தின் பொருளானவரே ! முதன்மையான வேதத்தின் பொருளானவரான உம்மை மலர்கள் கொண்டு பூசித்துத் , தோத்திரம் செய்பவர்கள் சிவஞானம் உடையவர்கள் ஆவர் .


பாடல் எண் : 3
விளங்குதண் பொழில்அணி வெங்குருமேவிய
இளம்பிறை அணிசடை யீரே,
இளம்பிறை அணிசடை யீர், உமது இணைஅடி
உளங்கொள உறுபிணி இலரே.

            பொழிப்புரை : பெருமையுடன் விளங்குகின்ற குளிர்ந்த சோலைகளையுடைய அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் , இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையினையுடைய சிவபெருமானே ! இளம்பிறைச் சந்திரனைச் சடையில் அணிந்துள்ள உம்முடைய இரண்டு திருவடிகளையும் மனத்தால் நினைத்துத் தியானிப்பவர்கள் உற்றபிணிகள் இல்லாதவராவர் .

  
பாடல் எண் : 4
விண்டுஅலர் பொழில்அணி வெங்குரு மேவிய
வண்டுஅமர் வளர்சடை யீரே,
வண்டுஅமர் வளர்சடை யீர், உமை வாழ்த்தும்அத்
தொண்டர்கள் துயர்பிணி இலரே.

            பொழிப்புரை : முறுக்குடைந்து விரிகின்ற மலர்களையுடைய சோலைகளால் அழகுடன் திகழும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் , வண்டுகள் விரும்பும் நீண்ட சடையுடைய சிவபெருமானே ! வண்டுகள் விரும்பும் சடையினை யுடைய பெருமானாகிய உம்மை வாழ்த்தும் சிறப்புடைய தொண்டர்கள் துயரும் , பிணியும் அற்றவர்கள் ஆவர் .

  
பாடல் எண் : 5
மிக்கவர் தொழுதுஎழு வெங்குரு மேவிய
அக்கினொடு அரவுஅசைத் தீரே,
அக்கினொடு அரவுஅசைத் தீர், உமது அடிஇணை
தக்கவர் உறுவது தவமே.

            பொழிப்புரை : அன்பின் மிக்கார் தொழுது எழுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , அக்குப்பாசியோடு பாம்பையும் அணிந்துள்ள சிவபெருமானே ! அக்குப்பாசியோடு பாம்பையும் அணிந்துள்ள பெருமானாகிய உம் இணையடிகளைத் துதிக்கும் தகுதிபெற்ற அடியவர்கள் பெறுவது சிறந்த தவத்தின் பயனாகும் .


பாடல் எண் : 6
வெந்தவெண் பொடிஅணி வெங்குரு மேவிய
அந்தம்இல் பெருமையி னீரே,
அந்தம்இல் பெருமையினீர், உமை அலர்கொடு
சிந்தைசெய் வோர்வினை சிதைவே.

            பொழிப்புரை : சுடப்பட்ட வெண்ணிறத் திருவெண்ணீற்றினை அணிந்து , திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற அழிவில்லாத புகழுடைய சிவபெருமானே ! அழிதல் இல்லாத புகழுடைய உம்மை மலர்கள் கொண்டு வழிபட்டுத் தியானிப்பவர்களின் வினைகள் சிதைந்து போகும் .


பாடல் எண் : 7
விழமல்கு பொழில்அணி வெங்குரு மேவிய
அழல்மல்கும் அங்கையி னீரே,
அழல்மல்கும் அங்கையினீர், உமை அலர்கொடு
தொழ அல்லல் கெடுவது துணிவே.

            பொழிப்புரை : திருவிழாக்கள் நிறைந்ததும் , சோலைகள் அழகு செய்வதுமான திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் நெருப்பேந்திய அழகிய திருக்கரத்தையுடைய சிவபெருமானே ! நெருப்பேந்திய அழகிய திருக்கரமுடைய உம்மை மலர்கள் கொண்டு வழிபடுபவர்களின் துன்பங்கள் கெடுவது நிச்சயம் .


பாடல் எண் : 8
வித்தக மறையவர் வெங்குரு மேவிய
மத்தநன் மலர்புனை வீரே,
மத்தநன் மலர்புனை வீர், உமது அடிதொழும்
சித்தம் அதுஉடையவர் திருவே.

            பொழிப்புரை : சாமர்த்தியமுடைய , நான்மறைகளைக் கற்றுவல்ல அந்தணர்கள் நிறைந்த திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , ஊமத்த நன்மலரினைச் சூடியுள்ள , சிவ பெருமானே ! ஊமத்தம் மலர் சூடிய உம் திருவடிகளைத் தொழும் சித்தமுடையவர்கள் எல்லாச் செல்வங்களும் பெற்றவர் ஆவார் .


பாடல் எண் : 9
மேலவர் தொழுதுஎழு வெங்குரு மேவிய
ஆலநல் மணிமிடற் றீரே,
ஆலநல் மணிமிடற் றீர், உமது அடிதொழும
சீலம் அதுஉடையவர் திருவே.

            பொழிப்புரை : மேலான பக்தர்கள் தொழுதெழுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , விடம் தங்கிய அழகிய கண்டத்தை உடைய சிவபெருமானே ! விடம் தங்கிய அழகிய கண்டத்தையுடையவராகிய உம் திருவடிகளைத் தொழுகின்ற நல்லொழுக்கம் உடையவர்களே பேரின்பம் பெறுவர் .


பாடல் எண் : 10
விரைமல்கு பொழில்அணி வெங்குரு மேவிய
அரைமல்கு புலிஅத ளீரே,
அரைமல்கு புலிஅத ளீர், உமது அடிஇணை
உரைமல்கு புகழ்அவர் உயர்வே.

            பொழிப்புரை : நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , அரையில் கட்டிய புலித்தோல் ஆடையையுடைய சிவபெருமானே ! அரையில் கட்டிய புலித்தோலாடையையுடைய பெருமானாகிய உம் இணையடிகளை நிரம்பிய சொற்களால் புகழ்பவர்களே உயர்வு அடைவர் .

                                                            திருச்சிற்றம்பலம்



1.126   திருக்கழுமலம்   திருத்தாளச்சதி   பண் - வியாழக்குறிஞ்சி
                                                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பந்தத்தால் வந்துஎப்பால் பயின்றுநின்ற உம்பர்அப்
பாலேசேர்வுஆய் ஏனோர்கான் பயில்கண முனிவர்களும்
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடும்
சேர்வார் நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசுஅதுஎலாம்
சந்தித்தே, இந்தப் பார் சனங்கள் நின்று தம் கணால்
தாமேகாணா வாழ்வார், அத் தகவுசெய்த வனதுஇடம்,
கந்தத்தால் எண்திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தனக்
காடுஆர் பூஆர் சீர் மேவும் கழுமல வளநகரே.

            பொழிப்புரை :வினைவயத்தால் மண்ணுலகம் வந்து எல்லா இடங்களிலும் பொருந்தி அவ்விடங்களே தமக்கு இருப்பிடமாய் வாழும் தேவர்களும், மற்றவர்களாகிய கானகங்களில் வாழும் முனிவர்களும், மனத்தால் சிந்தித்து வழிபட்டு உய்தி பெறுமாறு, மலையரையன் மகளாகிய பார்வதி தேவியாரோடு சேர்ந்தவராய், நாளும் நாளும் நீண்டுயர்ந்த கயிலைமலையில் விளங்கும் திருவோலக்கச் சிறப்புக்கள் எல்லாவற்றையும் இந்த உலகில் வாழும் மக்கள் தங்கள் கண்களால் தாமே கண்டு வாழ்பவராகப் பெருங்கருணையோடு காட்சி நல்குபவனது இடம் எட்டுத் திசைகளிலும் மணம் கமழ்ந்து விளங்கும் மலர்களோடு கூடிய சந்தன மரக்காடுகள் சிறந்து வளர்ந்து செழிக்கும் கழுமலநகராகும்.


பாடல் எண் : 2
பிச்சைக்கே இச்சித்துப் பிசைந்து அணிந்த வெண்பொடி,
பீடுஆர் நீடுஆர் மாடுஆரும் பிறைநுதல் அரிவையொடும்,
உச்சத்தான் நச்சிப்போல் தொடர்ந்து அடர்ந்த வெங்கண்ஏறு
ஊராஊரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெய் இசை,
வச்சத்தால் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
வாரா நேரே மால் ஆகும் வசிவல அவனது இடம்,
கச்சத்தான் மெச்சிப் பூக் கலந்து இலங்கு வண்டுஇனம்
கார்ஆர் கார்ஆர் நீள்சோலைக் கழுமல வளநகரே.

            பொழிப்புரை :பிச்சை ஏற்பதை விரும்பி நீரில் குழைத்தணிந்த வெண்பொடியினராய்ப் பெருமை பொருந்தியவரும் புகழால் விரிந்தவருமாய், அருகில் விளங்கும் பிறை போன்ற நெற்றியினளாகிய உமையம்மையோடு உச்சிப்போதினை விரும்பித் தன்னை எதிர்ப்பவரைத் தொடர்ந்து கொல்லும் தறுகண்மையை உடைய விடையேற்றின் மீதமர்ந்து, ஊர்ந்து ஊர்ந்து நீண்ட தெருக்களில் விருப்பத்தோடு பாடுவதால், நச்சுதலுக்குரியனவும் முத்துவடங்கள் அணிந்தனவுமாகிய கொங்கைகளை உடைய மகளிர் அவ்விசையைக் கேட்டு வந்து தமக்கு முன்னே விரக மயக்கம் கொள்ளுமாறு வசீகரிக்கும் வன்மை பொருந்திய சிவபிரானது இடம். மேலைக் காற்றினால் அல்லது ஒற்றுமையோடு பூக்களைக் கலந்து விளங்கும் வண்டினங்களோடு கருமை நிறம் பொருந்திய மேகங்கள் தவழும் நீண்ட சோலைகளை உடைய கழுமல வளநகராகும்.


பாடல் எண் : 3
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின்
சேரே சேரே நீர்ஆகச் செறிதரு சுரநதியோடு
அங்கைச் சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண்தலைப்
பாலே மேலே மால்எயப் படர்வுஉறும் அவன்இறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
போதுஆர் தாரே தாம் மேவிப் புரிதரு சடையன்இடம்
கங்கைக்கு ஏயும் பொற்புஆர் கலந்துவந்த பொன்னியின்
காலே வாரா மேலே பாய் கழுமல வளநகரே.

            பொழிப்புரை :திங்கள், தும்பை, விளங்கித் தோன்றும் ஊமத்த மலர் ஆகியவற்றைச் சேர்த்துச் செறிந்த நீராகிய கங்கை நதி, அழகிய கையில் விளங்குவதையன்றி உடைந்த கபாலம், முடிகாண மயக்க உணர்வுடையனாய் மேலே பறந்து சென்ற பிரமனாகிய அன்னத்தின் இறகு, நஞ்சு பொங்கும் பாம்பு, கொன்றை மாலை ஆகியவற்றை அணிந்து, வளைத்துக் கட்டிய சடையை உடைய சிவபிரானது இடம்; கங்கைக்கு நிகரான அழகோடு கலந்து வந்த பொன்னி நதியின் வாய்க்கால்கள் பாய்ந்து வளஞ் சேர்க்கும் கழுமல வளநகராகும்.


பாடல் எண் : 4
அண்டத்தால் எண்திக்கும் அமைந்துஅடங்கு மண்டலத்து
ஆறேவேறே வான்ஆள்வார் அவர்அவர் இடம் அதுஎலாம்
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்து அலைந்த உம்பரும்
மாறு ஏலாதார் தாம் மேவும் வலிமிகு புரம் எரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த இஞ்சிசூழ்
மூவா மூதூர் மூதூரா முனிவு செய்த வனது இடம்
கண்டிட்டே செஞ்சொல் சேர் கவின் சிறந்த மந்திரக்
காலே ஓவாதார் மேவும் கழுமல வளநகரே.

            பொழிப்புரை :இம்மண்ணுலகில் இருந்துகொண்டே எண் திசைகளையும் உள்ளடக்கிய அனைத்துலகங்களுக்கும் சென்று வெற்றி கொண்டு வான்உலகை ஆளும் தேவர்களையும் நெருங்கிச் சென்று வெற்றிப்போர் செய்து, அத்தேவர்களாலும் எதிர்க்க இயலாதவர்களாய் விளங்கிய அவுணர்களின் வலிமை மிக்க முப்புரங்களைத் தன் நெற்றிவிழியால் வெந்து முடியுமாறு செய்து அவ்இஞ்சி சூழ்ந்த அழியாத பழமையான மூன்று ஊர்களும் முதுமை உடையவாய் அழியுமாறு சினந்த சிவபிரானது இடம், செஞ்சொற்களைக் கண்டு தேர்ந்து தொகுத்த அழகிய மந்திரங்களை மூச்சுக் காற்றாகக் கொண்டு உருவேற்றி வருவோர் வாழும் கழுமலமாகிய வளநகராகும்.


பாடல் எண் : 5
திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு மண்டலச்
சீறுஆர் வீறுஆர் போர்ஆர் தாரகன் உடல் அவன் எதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீப்
போலே பூநீர் தீகால் மீப் புணர்தரும் உயிர்கள் திறம்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்
தோடு ஏயாமே மா லோகத் துயர் களைபவனது இடம்
கைக்கப் பேர் யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
காடே ஓடா ஊரே சேர் கழுமல வளநகரே.

            பொழிப்புரை :எட்டுத் திசைகளுக்கும் காவலர்களாகிய தெய்வங்கள் அங்கங்கே இருந்து காவல் செய்து விளங்கும் இம் மண்ணுலகைச் சீறி அழித்தற்கு வந்த வலிய போர் வல்ல தாருகன் உடலை அவன் எதிரிலேயே புகுந்து வெட்டி வீழ்த்தி, புதைந்தெழுந்து வந்த ஊழித் தீப் போலத் தோன்றி மண் நீர் தீ கால் விண் ஆகிய ஐம்பூத வடிவாய் விளங்கும் இவ்வுலகில் வாழும் உயிர்களை அழிக்கச் சிவந்த கோபத்தோடு சொக்க நிருத்தத்தில் நடனமாடி வந்த காளியின் கோபத்தை அவளோடு எதிர் நடனம் ஆடி வென்று பெரிதான இவ்வுலக உயிர்களின் துயரைக் களைந்தவன் ஆகிய சிவபிரானது இடம் பலரும் வெறுக்கக் கனன்று வந்த பேரூழிக் காலத்தும் செறிந்த சோலைகளாகிய காடுகளோடு அழியாத ஊராக விளங்கும் கழுமல வளநகராகும்.

பாடல் எண் : 6
செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்த தும்பி மொய்ம்பு உறும்
சேரே வாரா நீள்கோதைத் தெரிஇழை பிடிஅது ஆய்
ஒற்றைச்சேர் முற்றல் கொம்பு உடைத்தடக்கை முக்கண்மிக்கு
ஓவாதே பாய் மாதானத்து உறு புகர்முக இறையைப்
பெற்றிட்டே மற்று இப்பார் பெருத்து மிக்க துக்கமும்
பேராநோய்தாம் ஏயாமைப் பிரிவுசெய்த வனது இடம்
கற்றிட்டே எட்டுஎட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
காணாதாரே சேரா மெய்க் கழுமல வளநகரே.

            பொழிப்புரை :சலந்தரன், திரிபுரத்தசுரர் முதலானவர்களைக் கொன்று வெற்றி பெற்று விளங்கும் வலிமை பொருந்திய ஆண் யானை வடிவு கொண்ட தன்னைச் சேர்தற் பொருட்டு வரும் நீண்ட மலர்மாலை அணிந்த உமையம்மை பெண்யானை வடிவு கொண்டு வந்து கூட முற்றிய ஒரு கொம்பையும் நீண்ட கையையும் மூன்று கண்களையும், இடைவிடாது மிகுந்து பொழியும் மதநீரையும் புள்ளிகளோடு கூடிய முகத்தையும் உடைய விநாயகனைப் பெற்றெடுத்து இவ்வுலகில் வாழும் மக்கட்குப் பெரிய துன்பங்களும் நோய்களும் வந்து பொருந்தாதவாறு செய்து காத்தருளிய சிவபிரானது இடம், அறுபத்து நான்கு கலைகளையும் முற்றக் கற்றுக் கரைகண்டு அவற்றின் வழி ஒழுகுவோர் சேர்ந்துறைவதும், அவ்வாறு ஒழுகாதார் அடைய முடியாததுமாகிய கழுமல வளநகராகும்.


பாடல் எண் : 7
பத்திப்பேர் வித்துஇட்டே, பரந்த ஐம்புலன்கள் வாய்ப்
பாலே போகாமே, காவாப் பகைஅறும் வகைநினையா,
முத்திக்கு ஏவிக் கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய்
மூடா ஊடா நால்அந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப் பரம்பொருள்,
சேர்வார் தாமே தான்ஆகச் செயும் அவன் உறையும்இடம்,
கத்திட்டோர் சட்டங்கங் கலந்து இலங்கும் நல்பொருள்
காலே ஓவாதார் மேவும் கழுமல வளநகரே.

            பொழிப்புரை :அன்பாகிய விதையை ஊன்றி, பரந்துபட்ட சுவை முதலிய ஐம்புலன்கள் வழி ஒழுகாது தம்மைக் காத்துக் காமம் முதலிய பகைகளைக் கடிந்து முத்திக்கு இடையூறாகும் முக்குணங்களின்வழி ஒழுகாது அந்தக்கரணங்கள் நான்கையும் ஒரு நெறிப்படுத்திச் சிந்தனையில் செலுத்தி விளங்கும், மெய்ப்பரம்பொருளாகிய தன்னையே எண்ணுபவர்களைத் தானாகச் செய்யும் சிவபெருமான் உறையும் இடம், ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்தோர் தம்மோடு கலந்து விளங்கும் சிவபரம் பொருளின் திருவடிகளை இடைவிடாது தியானித்து வாழும் கழுமல வளநகராகும்.


பாடல் எண் : 8
செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்து இலங்கு பைம்பொழில்
சேரே வாரா வாரீசத் திரை எறி நகர் இறைவன்
இம்பர்க்கு ஏதம் செய்திட்டு இருந்து அரன் பயின்றவெற்பு
ஏர்ஆர் பூநேர் ஓர்பாதத்து எழில் விரல் அவண் நிறுவிட்டு,
அம்பொன்பூண் வென்றித்தோள் அழிந்து வந்தனம் செய்தாற்கு
ஆர்ஆர் கூர்வாள் வாழ்நாள் அன்று அருள்புரி பவனது இடம்,
கம்பத்துஆர் தும்பித் திண் கவுள்சொரிந்த மும்மதக்
கார்ஆர் சேறுஆர் மா வீதிக் கழுமல வளநகரே.

            பொழிப்புரை :செம்பினால் இயன்ற மதில்களால் சூழப்பெற்றுச் செறிந்து விளங்குவதும், பசுமையான பொழில்கள் சேர்ந்ததும், நீண்ட கடல்களின் அலைகளால் மோதப் பெறுவதுமாகிய இலங்காபுரி நகருக்கு இறைவனாகிய இராவணன், இவ்வுலக மக்கட்குத் துன்பங்கள் செய்து வாழ்ந்ததோடு சிவபிரான் உறையும் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டபோது அழகிய மலர் போன்ற ஓர் திருவடி விரல் ஒன்றை ஊன்றி அழகிய பொன்னணிகலன்கள் பூண்ட அவனது வெற்றி நிறைந்த தோள்வலிமையை அழித்து அவன் பிழை உணர்ந்து வந்தனம் செய்த அளவில் அவனுக்கு அரிய கூரிய வாளையும் நீண்ட வாழ்நாளையும் அப்பொழுதே அருள் புரிந்தருளிய சிவபெருமானது இடம்; கம்பங்களில் கட்டிய யானைகளின் வலியகன்னங்கள் முதலியன பொழிந்த மும்மதங்களால் நிலம் கரிய சேறாகும் வீதிகளை உடைய கழுமலநகராகும்.


பாடல் எண் : 9
பன்றிக்கோ லம்கொண்டுஇப் படி த்தடம் பயின்றுஇடப்
பான் ஆமாறு ஆனாமே, அப் பறவையின் உருவுகொள
ஒன்றிட்டே அம்புச்சேர் உயர்ந்த பங் கயத்து அவ
னோதான் ஓதான் அஃது உணராது உருவினது அடிமுடியும்
சென்றிட்டே வந்திப்பத் திருக்களம் கொள் பைங்கணின்
தேசால் வேறுஓர் ஆகாரம் தெரிவு செய் தவனது இடம்,
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலந் நிறைக்கவும்
காலே வாரா மேலே பாய் கழுமல வளநகரே.

            பொழிப்புரை :திருமால் பன்றி உருவம் எடுத்து இவ்வுலகைப் பிளந்து சென்று பாதாளம்வரை தேடியும், நீரில் தோன்றிய தாமரை மலரில் உறையும் நான்முகன் வேதங்களை ஓதுபவனாக இருந்தும் அதன் உண்மைப் பொருளை உணராது அன்னப்பறவை வடிவம் எடுத்து வானவெளியில் பறந்து சென்று தேடியும் தம் எதிரே தோன்றிய வடிவினது அடிமுடிகளைக் காணாது அயர்த்துச் சென்று வழிபட அவர்களின் பசுமையான கண்களுக்கு அழகிய நீலகண்டத்தோடு தனது வல்லமையால் வேறோர் வடிவம் தெரியச் செய்தவனது இடம் ஆன் கன்றுகள் முன்றிலில் நிறைந்து கலந்து நின்று இல்லத்தை நிறைக்கவும் வாய்க்கால்கள் வந்து மேல் ஏறிப்பாயவும் வளத்தால் நிறைந்து விளங்கும் கழுமல வளநகராகும்.


பாடல் எண் : 10
தட்டு இட்டே முட்டிக்கைத் தடுக்கு இடுக்கி நின்று உணாத்
தாமே பேணாதே நாளும் சமணொடு உழல்பவரும்
இட்டத்தால் அத்தம்தான் இதுஅன்று அது என்று நின்றவர்க்கு
ஏயாமே வாய் ஏதுச்சொல் இலைமலி மருதம்பூப்
புட்டத்தே அட்டிட்டுப் புதைக்கும் மெய்க்கொள் புத்தரும்
போல்வார் தாம் ஓராமேபோய்ப் புணர்வு செய்தவனது இடம்
கட்டிக்கால் வெட்டித் தீங் கரும்பு தந்த பைம்புனல்
காலே வாரா மேலே பாய் கழுமல வளநகரே.

            பொழிப்புரை :தட்டைக் கையில்ஏந்தி வளைந்த கையில் தடுக்கை இடுக்கி நின்று உண்டு ஆடைகளால் தம்மைப் பேணாது நாள்தோறும் வருந்தித் திரியும் சமணர்களும், தம்விருப்பப்படி கேட்பவர்க்குத் தெளிவு ஏற்படாதவாறு பொருள் இது அன்று அதுதான் என்று வாய்க்கு வந்தபடி காரணம் கூறுபவரும், இலைகள் நெருங்கிய மருதமரத்தின் பூவை அரைத்துப் பின்புறத்தேப் பூசிச் சாயமூட்டிய ஆடையைத் தம் உடலின் பின்பாகத்தே சுற்றிக்கொண்டு உடலை மறைப்போரும் ஆகிய புத்தர்களும் போல்பவர் கண்டறியாதவாறு சென்று எழுந்தருளியுள்ள சிவபிரானது இடம் வெல்லக்கட்டிகளைத்தரும் இனிய கரும்பை வெட்டியதால் அக்கரும்பு தந்த இனியசாறு வாய்க்கால் வழியே வந்து மேல் ஏறிப்பாயும் வளமுடைய கழுமலவளநகராகும்.


பாடல் எண் : 11
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
கானே தேனே போர்ஆருங் கழுமல நகர் இறையை,
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநல் கலைத்துறை,
தாமே போல்வார் தேன்நேர்ஆர் தமிழ்விர கனமொழிகள்,
எஞ்சத் தேய்வு இன்றிக்கே இமைத்து இசைத்து அமைத்தகொண்டு
ஏழே ஏழே நாலே மூன்று இயல்இசை இசை இயல்பா
வஞ்சத்து ஏய்வு இன்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்,
மார்பே சேர்வாள் வானோர் சீர் மதிநுதல் மடவரலே.

            பொழிப்புரை :தாமரை மலரிலுள்ள தேனைக் குடித்துக்களித்த வண்டுகள் சண்பக மரச்சோலைகளில் உள்ள தேன் வண்டுகளோடு போரிடும் கழுமல வளநகர் இறைவனைத் தஞ்சமாகச் சார்ந்துள்ள சண்பைநகர்த் தலைவனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் குறைவின்றிப் பாடியமைத்த தேனுக்கு நிகரான இப்பதிகப் பாடல்களை நல்ல கலைகளில் துறைபோய்த் தமக்குத் தாமே நிகராய் இருபத்தொரு பண்முறையினால் இயல்பாக வஞ்சனையின்றி மனம் பொருந்தப்பாடுபவர்களின் மார்பினில் தேவர்களால் போற்றப் பெறும் சிறப்புமிக்க பிறை போன்ற நெற்றியினை உடைய திருமகள் சேர்வாள்.

திருச்சிற்றம்பலம்



2.074   திருப்பிரமபுரம்       திருக்கோமூத்திரி          பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பூமகன்ஊர், புத்தேளுக்கு இறைவன்ஊர், குறைவிலாப் புகலி,பூமேல்
மாமகள்ஊர், வெங்குரு,நல் தோணிபுரம், பூந்தராய், வாய்ந்தஇஞ்சிச்
சேமமிகு சிரபுரம், சீர்ப் புறவம், நிறை புகழ்ச்சண்பை, காழி,கொச்சை,
காமனைமுன் காய்ந்தநுதல் கண்ணவன்ஊர் கழுமலம், நாம் கருதும் ஊரே.

            பொழிப்புரை :நாம் கருதும் ஊர் பிரமபுரம் முதலான பன்னிரு பெயர்களையுடைய கழுமலமாகும்.


பாடல் எண் : 2
கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்,மெய்த் தோணிபுரம், கனகமாட
உருத்திகழ்வெங் குரு, புகலி, ஓங்குதராய், உலகுஆரும் கொச்சை,காழி,
திருத்திகழுஞ் சிரபுரம், தேவேந்திரன்ஊர் , செங்கமலத்து அயன்ஊர், தெய்வத்
தருத்திகழும் பொழில்புறவம், சண்பை, சடை முடிஅண்ணல் தங்கும்ஊரே.

            பொழிப்புரை :சடைமுடியை உடைய அண்ணலாகிய சிவபிரான் தங்கும் ஊர் நல்ல, எண்ணமுடைய மறையவர் வாழும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களை உடைய காழிப்பதியாகும்.


பாடல் எண் : 3
ஊர்மதியைக் கதுவஉயர் மதில்சண்பை, ஒளிமருவு காழி, கொச்சை,
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலம், மெய்த் தோணிபுரம், கற்றோர்ஏத்தும்
சீர்மருவு பூந்தராய், சிரபுரம், மெய்ப் புறவம், அயன்ஊர், பூங்கற்பத்
தார்மருவும் இந்திரன்ஊர், புகலி, வெங் குரு, கங்கை தரித்தோன்ஊரே.

            பொழிப்புரை :கங்கையைச் சடையில் தரித்த சிவபிரானது ஊர் விண்ணில் ஊர்ந்து செல்லும் மதியைத் தொடுமாறு உயர்ந்த மதில்களை உடைய சண்பை முதலிய பன்னிருபெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.


பாடல் எண் : 4
தரித்தமறை யாளர்மிகு வெங்குரு, சீர்த் தோணிபுரம், தரியார்இஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே, கொச்சை, பூந் தராய், புகலி, இமையோர்கோன்ஊர்,
தெரித்தபுகழ்ச் சிரபுரம், சீர் திகழ்காழி, சண்பை, செழு மறைகள்எல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம், விரைக் கமலத்தோன் ஊர், உலகில் விளங்கும் ஊரே.

            பொழிப்புரை :உலகில் விளங்கும் ஊர், வேதங்களை நாவில் தரித்த அந்தணர்கள் மிகுந்த வெங்குரு முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.


பாடல் எண் : 5
விளங்குஅயன்ஊர், பூந்தராய், மிகுசண்பை, வேணுபுரம், மேகம்ஏய்க்கும்
இளங்கமுகம் பொழில் தோணி புரம், காழி, எழிற்புகலி, புறவம், ஏர்ஆர்
வளங்கவரும் வயல்கொச்சை, வெங்குரு, மாச் சிரபுரம், வன் நஞ்சம்உண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலம், காமன்உடலம் காய்ந்தோன் ஊரே.

            பொழிப்புரை :காமன் உடலைக் காய்ந்த சிவபிரானது ஊர், விளங்கும் பிரமபுரம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.


பாடல் எண் : 6
காய்ந்துவரு காலனைஅன்று உதைத்தவன்ஊர் கழுமலம்,மாத் தோணிபுரம், சீர்
ஏய்ந்தவெங் குரு, புகலி, இந்திரன்ஊர், இருங்கமலத்து அயன்ஊர், இன்பம்
வாய்ந்தபுற வம்,திகழும் சிரபுரம், பூந் தராய், கொச்சை, காழி,சண்பை
சேந்தனைமுன் பயந்துஉலகில் தேவர்கள்தம் பகைகெடுத்தோன் திகழும் ஊரே.

            பொழிப்புரை :முருகப்பெருமானைப் பெற்றெடுத்து உலகில் தேவர்களின் பகைவனாகிய சூரபன்மனை அழித்தருளியவனும் சினந்துவந்த காலனை அன்று உதைத்தவனும் ஆகிய சிவபிரானது ஊர், கழுமலம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும்.


பாடல் எண் : 7
திகழ்மாட மலிசண்பை, பூந்தராய், பிரமன்ஊர், காழி, தேசுஆர்
மிகுதோணி புரம், திகழும் வேணுபுரம், வயம்கொச்சை, புறவம், விண்ணோர்
புகழ்புகலி, கழுமலம், சீர்ச் சிரபுரம், வெங் குரு,வெம்போர் மகிடற்செற்று
நிகழ்நீலி நின்மலன்தன் அடியிணைகள்  பணிந்துஉலகில் நின்ற ஊரே.

            பொழிப்புரை :கொடியபோரில் மகிடாசுரனைக் கொன்று விளங்கும் நீலியாகிய துர்க்கை சிவபிரான் அடியிணைகளைப் பணிந்து தனது கொலைப் பழியைப் போக்கிக் கொண்டு நின்ற ஊர், விளங்கும் மாடவீடுகளைக் கொண்ட சண்பை முதலிய பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப்பதியாகும்.


பாடல் எண் : 8
நின்றமதில் சூழ்தருவெங் குரு, தோணி புரம், நிகழும் வேணு,மன்றில்
ஒன்றுகழு மலம், கொச்சை, உயர்காழி, சண்பை, வளர் புறவம், மோடி
சென்றுபுறம் காக்கும்ஊர் சிரபுரம், பூந் தராய், புகலி, தேவர்கோன்ஊர்,
வென்றிமலி பிரமபுரம், பூதங்கள்  தாம்காக்க மிக்க ஊரே.

            பொழிப்புரை :பூதங்களால் தாங்கப் பெறும் ஆக்கம் மிக்க ஊர், நிலைத்துநின்ற மதில்களால் சூழப்பட்ட வெங்குரு முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.


பாடல் எண் : 9
மிக்ககம லத்துஅயன்ஊர், விளங்குபுற வம், சண்பை, காழி, கொச்சை,
தொக்கபொழில் கழுமலம், தூத் தோணிபுரம், பூந்தராய், சிலம்பன் சேர்ஊர்,
மைக்கொள்பொழில் வேணுபுரம், மதில்புகலி, வெங்குரு,வல் அரக்கன் திண்தோள்
ஒக்கஇரு பது முடிகள்ஒருபதும் ஈடு அழித்துஉகந்த எம்மான்ஊரே.

            பொழிப்புரை :வலிய அரக்கனாகிய இராவணனின் திண்ணிய தோள்கள் இருபது, முடிகள் பத்து ஆகியவற்றின் பெருமையை அழித்த எம்தலைவனாகிய சிவபிரானது ஊர், அழகு மிக்க தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலம் என்பது முதலான பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.


பாடல் எண் : 10
எம்மான்சேர் வெங்குரு, சீர்ச் சிலம்பன்ஊர், கழுமல,நல் புகலி, என்றும்
பொய்ம்மாண்பு இலோர்புறவம், கொச்சை, புரந் தரன்ஊர், நல் தோணிபுரம்,போர்க்
கைம்மாவை உரிசெய்தோன் காழி,அயன் ஊர், தராய், சண்பை, காரின்
மெய்ம் மால் பூ மகன்உணரா வகைதழலாய் விளங்கியஎம் இறைவன் ஊரே.

            பொழிப்புரை :மேகம் போன்ற கரிய மேனியனாகிய திருமால், தாமரைமலர் மேல் உறையும் நான்முகன் ஆகியோர் உணராத வகையில் தழல் உருவாய் நின்ற இறைவனது ஊர், எம் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெங்குருமுதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப்பதியாகும்.


பாடல் எண் : 11
இறைவன்அமர் சண்பை,எழில் புறவம், அயன்  ஊர், இமையோர்க்கு அதிபன் சேர்ஊர்,
குறைவில்புகழ்ப் புகலி,வெங் குரு, தோணி புரம், குணம்ஆர் பூந்தராய், நீர்ச்
சிறைமலிநல் சிரபுரம், சீர்க் காழி, வளர் கொச்சை, கழுமலம், தேசுஇன்றிப்
பறிதலையோடு அமண்கையர் சாக்கியர்கள் பரிசுஅறியா அம்மான் ஊரே.

            பொழிப்புரை :ஒளியின்றி மயிரைப் பறித்தெடுத்த முண்டிதராய அமண் கீழோர் சாக்கியர் ஆகியோரால் அறியமுடியாத தலைவராகிய சிவபெருமானது ஊர், இறைவனமர் சண்பை முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப்பதியாகும்.


பாடல் எண் : 12
அம்மான்சேர் கழுமலம்,மாச் சிரபுரம்,வெங் குரு, கொச்சை, புறவம், அம்சீர்
மெய்ம்மானத்து ஒண்புகலி, மிகுகாழி, தோணிபுரம்,  தேவர்கோன்ஊர்,
அம்மான்மன் உயர்சண்பை, தராய், அயன்ஊர் , வழிமுடக்கும் ஆவின்பாச்சல்
தம்மான்ஒன் றியஞான சம்பந்தன்  தமிழ்கற்போர் தக்கோர்தாமே.

            பொழிப்புரை :அம்மானாகிய சிவபிரான் எழுந்தருளிய கழுமலம் முதலான பன்னிரு திருப்பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியின் மீது வழியில் மாறிமாறி பாய்ந்துள்ள கோமூத்திரியின் அமைப்பில் அங்குள்ள சிவபிரான் மேல் ஒன்றிய மனமுடைய ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலையைக் கற்போர் தக்கவராவர்.

                                                            திருச்சிற்றம்பலம்


1.063  திருப்பிரமபுரம்                   பண் - தக்கேசி
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
எரிஆர் மழுஒன்று ஏந்திஅங்கை, இடுதலை யேகலனா,
வரியார் வளையார் ஐயம்வவ்வாய், மாநலம் வவ்வுதியே,
சரியா நாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன்
பெரியான் பிரமன் பேணிஆண்ட பிரம புரத்தானே.

            பொழிப்புரை :உச்சரிப்பு தவறாதவாறு நாவினால் வேதகீதங்களைப் பாடுபவனும், தாமரை மலர்மேல் விளங்குவோனும் ஆகிய நான்கு திருமுகங்களை உடைய பெரியவனாகிய பிரமன் விரும்பி வழிபட்டு ஆட்சிபுரிந்த பிரமபுரத்தில் விளங்கும் இறைவனே! எரியும் மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தி அழகிய கையில் பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து கொண்ட மண்டை ஓட்டையே உண்கலனாகக் கொண்டு வீதிகள்தோறும் பலி ஏற்பது போல் வந்து வரிகளை உடைய வளையல்களை அணிந்த இளம் பெண்கள் தரும் பிச்சையை ஏலாது அவர்களது மிக்க அழகைக் கவர்ந்து செல்கின்றாயே! இது நீதிதானா?


பாடல் எண் : 2
பெயல்ஆர் சடைக்குஓர் திங்கள்சூடிப் பெய்பலிக்கு என்று அயலே
கயல்ஆர் தடங்கண் அஞ்சொல் நல்லார் கண்துயில் வவ்வுதியே,
இயலான் நடாவி இன்பம்எய்தி இந்திரன்ஆள் மண்மேல்
வியல்ஆர்முரசம் ஓங்குசெம்மை வேணு புரத்தானே.

            பொழிப்புரை :இந்திரன் விண்ணுலகை இழந்து மண்ணுலகம் வந்து முறைப்படி ஆட்சி நடத்தி மகிழ்வெய்தி வழிபட்டு வாழ்ந்த சிறப்பினதும், பெரிதாய முரசுகள் ஓங்கி ஒலிப்பதும் நீதி நிலை பெற்றதும் ஆகிய வேணுபுரத்தில் எழுந்தருளிய இறைவனே, கங்கை தங்கிய சடைமுடியில் ஒரு திங்களைச் சூடி மகளிர்இடும் பலியை ஏற்பதற்கு என்றே வந்து அதனின் வேறாய் மீன் போன்ற தடங்கண்களையும் அழகிய சொற்களையும் உடைய இளம்பெண்களின் கண்கள் துயில் கொள்வதைக் கவர்ந்து அவர்களை விரகநோய்ப் படுத்தல் நீதியோ?


பாடல் எண் : 3
நகல்ஆர் தலையும் வெண்பிறையும் நளிர்சடை மாட்டுஅயலே
பகலாப் பலிதேர்ந்து ஐயம்வவ்வாய் பாய்கலை வவ்வுதியே
அகலாது உறையு மாநிலத்தில் அயல்இன்மை யால்அமரர்
புகலான்மலிந்த பூம்புகலி மேவிய புண்ணியனே.

            பொழிப்புரை :இம்மாநிலத்தில் தம்மை அடைக்கலமாக ஏற்போர் பிறர் இன்மையால் தேவர்கள் தமக்குப் புகலிடமாய் வந்தடைந்த சிறப்பினதும், அவர்கள் அகலாது உறைவதுமாகிய அழகிய புகலி நகரில் மேவிய புண்ணியனே! சிரிக்கும் தலையோட்டையும் வெண்மையான பிறைமதியையும் குளிர்ந்த சடையில் அணிந்து பகற்போதில் பலி ஏற்பது போல் வந்து, மகளிர்தரும் பிச்சைப் பொருள் கொள்ளாது அவர்கட்கு விரகதாபம் அளித்து, அதனால் அவர்கள் அணிந்துள்ள ஆடை முதலியன, நெகிழும்படி செய்து போதல் நீதியோ?


பாடல் எண் : 4
சங்கோடுஇலங்கத் தோடுபெய்து, காதில்ஓர் தாழ்குழையன்,
அங்கோல் வளையார் ஐயம்வவ்வாய், ஆனலம் வவ்வுதியே,
செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்கும் செய்வினை மெய்தெரிய
வெங்கோத் தருமன் மேவிஆண்ட வெங்குரு மேயவனே.

            பொழிப்புரை :கொடிய அரசன் எனப்படும் எமதருமராசன் தானும் குருவாகிச் செங்கோல் ஆட்சியை நடத்தித் தான் செய்யும் செயல்கள் நீதிநெறிக்கு உட்பட்டவை என்ற உண்மை எல்லோர்க்கும் தெரியுமாறு செங்கோல் முறைகளை வந்து கற்று அருள் புரிந்து ஆண்ட வெங்குரு என்னும் தலத்தில் எழுந்தருளியவனே! சங்கக் குண்டலத்தோடு விளங்குமாறு தோடணிந்தும் ஒரு காதில் தாழும் குழையணிந்தும் பலி ஏற்பதற்கென்று வந்து அழகிய திரண்ட வளையல்களை அணிந்த இளம் பெண்களின் அழகினைக் கவர்ந்து செல்லல் நீதியோ?


பாடல் எண் : 5
தணிநீர் மதியஞ் சூடிநீடு தாங்கிய தாழ்சடையன்,
பிணிநீர் மடவார் ஐயம்வவ்வாய், பெய்கலை வவ்வுதியே,
அணிநீர் உலகம் ஆகிஎங்கும் ஆழ்கட லால் அழுங்கத்
துணிநீர் பணியத் தான்மிதந்த தோணி புரத்தானே.

            பொழிப்புரை :மண்ணுலகம் அழகிய நீருலகம் ஆகி, அனைத்திடங்களும் ஆழமான கடலால் மூழ்கி வருந்தும் அவ்வேளையில், அச்சம் தரும் அக்கடல் பணியுமாறு தான் மட்டும் அவ்வூழி வெள்ளத்தில் அழியாது மிதந்த தோணிபுரத்து இறைவனே! தன்னை வந்து பணிந்த மதியைச் சூடி அம்மதியை நெடிது நாள் காத்தருளிய, தாழ்ந்து தொங்கும் சடைமுடியை உடையவனாய், காமநோயால் வருந்தும் மகளிர் பால் சென்று அவர்கள் தரும் பிச்சையை ஏலாது அவர்களின் ஆடைகளை நிலைகுலையச் செய்தல் நீதியாகுமா?


பாடல் எண் : 6
கவர்பூம்புனலும் தண்மதியும் கமழ்சடை மாட்டுஅயலே
அவர்பூம்பலியோடு ஐயம்வவ்வாய், ஆனலம் வவ்வுதியே,
அவர்பூண் அரையர்க்கு ஆதிஆய அடல்மன்னன் ஆள்மண்மேல்
தவர்பூம்பதிகள் எங்கும் எங்கும் தங்கு தராயவனே.

            பொழிப்புரை :அணிகலன்களை அணிந்த அரசர்களாகிய அவர்க் கெல்லாம் தலைவனாகிய வலிமை பொருந்திய மன்னனாகிய திருமால் வராக அவதாரத்தில் இரண்ய கசிபுவைக் கொன்ற பழிநீங்கப் பூசித்து ஆட்சி செய்த இம்மண்ணுலகில் உள்ளதும், தவமுனிவர்கள் எல்லா இடங்களிலும் தங்கும் சிறப்பினதும், ஆகிய பூந்தராயில் எழுந்தருளியவனே, இம்மண்ணுலகைக் கவரவந்த அழகிய கங்கையையும் தண்ணிய மதியையும் மணம் கமழும் சடைமிசைச்சூடி மகளிர் அருகருகே இடும் சுவைமிக்க பலியாகிய உணவை ஏலாது அவர்களின் அழகை வவ்வுகின்றாயே; இது நீதியா?


பாடல் எண் : 7
முலையாழ்கெழுவ மொந்தைகொட்ட முன்கடை மாட்டுஅயலே
நிலையாப் பலிதேர்ந்து ஐயம்வவ்வாய், நீநலம் வவ்வுதியே,
தலையாய்க் கிடந்துஇவ் வையம்எல்லாம் தன்னதொர் ஆணைநடாய்ச்
சிலையான் மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரம் மேயவனே.

            பொழிப்புரை :கரவாக அமுதுண்டதால் திருமாலால் வெட்டப் பெற்றுத் தலைமாத்திரமாய் நின்ற வில்வீரனாகிய சிலம்பன் என்னும் இராகு வழிபட்டு இவ்வையக மெல்லாவற்றையும் தன் ஆணைவழி நடத்தி ஆட்சி புரிந்த சிரபுரம் என்னும் நகரில் எழுந்தருளிய இறைவனே! முல்லையாழை மீட்டி மொந்தை என்னும் பறை ஒலிக்கச் சென்று வீட்டின் முன்கடையின் அயலே நின்று உண்பதற்காக அன்றிப் பொய்யாகப் பிச்சை கேட்டு மகளிர் தரும் உணவைக் கொள்ளாது நீ அவர்தம் அழகினைக் கவர்வது நீதியோ?


பாடல் எண் : 8
எருதேகொணர்க என்று ஏறிஅங்கை இடுதலையே கலனாக்
கருதுஏர்மடவார் ஐயம்வவ்வாய், கண்துயில் வவ்வுதியே,
ஒருதேர் கடாவி ஆர்அமருள் ஒருபது தேர்தொலையப்
பொருதுஏர்வலவன் மேவிஆண்ட புறவமர் புண்ணியனே.

            பொழிப்புரை :ஒரு தேரைச் செலுத்திய அரிய போரில் பத்துத்தேர்களை அழியுமாறு சண்டையிடும் தேர்வல்லவன் ஆகிய சிபிச்சக்கரவர்த்தி வீற்றிருந்து அரசாண்ட சிறப்பினதும் அவனை வஞ்சித்துப் புறாவின் எடைக்கு எடை தசைகேட்ட பாவம் தீரத் தீக்கடவுள் வழிபட்டதுமான புறவம் என்னும் சீகாழிப்பதியில் விளங்கும் இறைவனே! தனது எருது ஊர்தியைக் கொணர்க என ஆணையிட்டு அதன்மிசை ஏறித்தனது அழகிய கையில் ஏந்திய பிரமகபாலத்தையே உண்கலனாகக் கொண்டு விரும்பும் அழகுடைய மகளிரிடும் பலியைக் கொள்ளாது அவர்களின் உறக்கம் கெடுமாறு விரகதாபம் செய்து வருதல் நீதியோ?


பாடல் எண் : 9
துவர்சேர் கலிங்கப் போர்வையாரும் தூய்மை இலாச்சமணும்
கவர்செய்து உழலக் கண்டவண்ணம் காரிகை வார்குழலார்
அவர்பூம்பலியோடு ஐயம்வவ்வாய், ஆனலம் வவ்வுதியே,
தவர்செய் நெடுவேல் சண்டன்ஆளச் சண்பை அமர்ந்தவனே.

            பொழிப்புரை :உடலைத் துளைக்கும் நீண்ட வேலை உடைய இயமனை அடக்கிஆளச் சண்பையில் எழுந்தருளிய இறைவரே! காவி நிறம் சேர்ந்த ஆடையைப் போர்த்த புத்தரும், தூய்மையற்ற சமணரும் மனம் திரிந்து உழலுமாறு செய்து, பிச்சையேற்கும் கோலத்தவராய் மகளிர் வாழும் இல்லங்களை அடைந்து, நீண்ட கூந்தலை உடைய அம்மகளிர் கண்ட அளவில் மனம் திரிந்து நிற்க, அவர்கள் இடவந்த இனிய உணவாகிய பிச்சையை ஏலாது அவர்தம் அழகினைக் கவர்ந்து செல்கின்றீரே; இது நீதியோ?


பாடல் எண் : 10
நிழலால் மலிந்த கொன்றைசூடி, நீறுமெய் பூசி,நல்ல
குழலார் மடவார் ஐயம்வவ்வாய், கோல்வளை வவ்வுதியே,
அழலாய் உலகம் கவ்வைதீர ஐந்தலை நீள்முடிய
கழல் நாக அரையன் காவலாகக் காழி அமர்ந்தவனே.

            பொழிப்புரை :உலகம் அழலாக வெதும்பி வருத்திய துன்பம் தீருமாறு ஐந்து தலைகளையும் நீண்ட முடியையும் வீரக்கழலையும் அணிந்த நாகங்களின் தலைவனாகிய காளிதன் என்னும் பாம்பு காவல் புரிந்த காழிப்பதியில் அமர்ந்த தலைவனே! ஒளி நிறைந்த கொன்றை மலர் மாலையைச்சூடி, திருமேனியில் நீற்றினைப் பூசிக் கொண்டு பிச்சையேற்பவர் போல மகளிர் வாழும் வீதிகளில் சென்று அழகிய கூந்தலினை உடைய மகளிர்தரும் பிச்சையை ஏலாது அவர்களை விரகதாபத்தினால் மெலியச் செய்து அவர்தம் திரண்ட வளையல்களை வவ்வுகின்றீரே; இது நீதியோ?


பாடல் எண் : 11
கட்டுஆர் துழாயன் தாமரையான் என்றுஇவர் காண்பரிய
சிட்டார் பலிதேர்ந்து ஐயம்வவ்வாய், செய்கலை வவ்வுதியே,
நட்டார் நடுவே நந்தன்ஆள நல்வினை யால் உயர்ந்த
கொட்டாறு உடுத்த தண்வயல்சூழ் கொச்சை அமர்ந்தவனே.

            பொழிப்புரை :ஆற்றின் நடுவே பராசரமுனிவன் மச்சகந்தியைக் கூடிய பழிபோகும்படி; அம்முனிவன் செய்த பூசனையால், அம்முனிவர் அடையுமாறு அப்பெண்ணுக்கு மணத்தையும் நல்லொழுக்கத்தையும் அளித்து அம்முனிவனை வாழச்செய்த சிறப்பினதாகிய குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட கொச்சைவயம் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய இறைவனே! கட்டப்பட்ட துளசி மாலையை அணிந்த திருமால் நான்முகன் என்ற இவர்களாலும் காண்டற்கரிய மேன்மையனாகிய நீ பிச்சை ஏற்கச் சென்று மகளிர் தரும் பலியை ஏலாது அவர் தம் அழகிய ஆடைகளை வவ்வுதல் நீதியோ?


பாடல் எண் : 12
கடைஆர் கொடிநல் மாடவீதிக் கழுமலவூர்க் கவுணி,
நடைஆர் பனுவல் மாலையாக, ஞானசம் பந்தன், நல்ல
படைஆர் மழுவன் மேல்மொழிந்த பல்பெயர்ப் பத்தும்வல்லார்க்கு
அடையா வினைகள், உலகில் நாளும், அமர்உலகு ஆள்பவரே.

            பொழிப்புரை :வாயில்களிற் பொருந்திய கொடிகளோடு கூடிய மாடவீடுகளை உடைய வீதிகள் சூழ்ந்த கழுமலம் என்னும் சீகாழிப்பதியில் கவுணியர் குலத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் சந்தநடைகளோடு கூடிய இலக்கிய மாலையாக மழுப்படையை உடைய சீகாழி இறைவர்மேற்பாடிய பல்பெயர்ப்பத்து என்னும் இத்திருப்பதிகத்தை ஓதி வழிபட வல்லவர்களை இவ்வுலகில் துன்புறுத்தும் வினைகள் ஒருநாளும் வந்து அடையா. மறுமையில் அவர்கள் அமரருலகினை ஆள்வர்.

                                                            திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

 
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 951
தென்நாட்டு அமண்மாசு அறுத்துத் திருநீறே
அந்நாடு போற்றுவித்தார் வந்துஅணையும் வார்த்தைகேட்டு,
எந்நாள் பணிவது என ஏற்று எழுந்த மாமறையோர்
முன்ஆக வேதம் முழங்க எதிர்கொண்டார்.

            பொழிப்புரை : பாண்டிய நாட்டில் சமண் சார்பாய குற்றங்களை அழித்துத் திருநீற்றினை அந்நாடு முழுதும் அணியும்படி செய்தருளிய ஞானசம்பந்தர் வருகின்ற திருமொழியைக் கேட்டு, எந்நாளில் அவரைப் பணியப் பெறுவோம்? என்று ஆர்வம் கொண்டிருந்த மறையவர்கள், மறைகள் முழங்க அவர்முன் சென்று எதிர் கொண்டனர்.


பெ. பு. பாடல் எண் : 952
போத நீடுமா மறையவர் எதிர்கொள, புகலிகா வலரும்தம்
சீத முத்துஅணிச் சிவிகைநின்று இழிந்து, எதிர் செல்பவர் திருத்தோணி
நாதர் கோயில்முன் தோன்றிட நகைமலர்க் கரம்குவித்து இறைஞ்சிப்போய்,
ஓத நீரின்மேல் ஓங்குகோ யிலின்மணிக் கோபுரம் சென்று உற்றார்.

            பொழிப்புரை : ஞானம் மிக்க மாமறையவர்கள் தம்மை எதிர்கொண்டு வரவேற்கச் சீகாழித் தலைவரான பிள்ளையாரும், குளிர்ந்த முத்துகளால் இயன்ற சிவிகையினின்றும் இறங்கி, அவர்களின் எதிரே செல்பவர், அதுபொழுது திருத்தோணியில் வீற்றிருக்கும் திருக்கோயில் முன்னே தோன்ற, புதியதாய் மலர்ந்த தாமரை மலரனைய கைகளைக் கூப்பி, இறைஞ்சிச் சென்று, ஊழி வெள்ளத்தில் மேலே மிதந்த அக்கோயிலின் அழகிய கோபுர வாயிலைச் சென்றடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 953
அங்கம் மாநிலத்து எட்டு உற வணங்கிப்புக்கு, அஞ்சலி முடிஏற,
பொங்கு காதலில் புடைவலங் கொண்டு,முன் பணிந்து,போற்று எடுத்துஓதித்
துங்க நீள்பெருந் தோணியாம் கோயிலை அருளினால் தொழுது,ஏறி
மங்கை யோடு உடன் வீற்றிருந்து அருளினார் மலர்க்கழல் பணிவுற்றார்.

            பொழிப்புரை : தரையில் எட்டு உறுப்புக்களும் பொருந்த வணங்கிக் கோயிலுக்குள் புகுந்து, கைகள் குவித்தவாறு திருமுடியின் மீது பொருந்த, மேன் மேலும் மீதூர்ந்து எழும் அன்புடன் திருக்கோயிலைச் சூழ்ந்து வலமாக வந்து, திருமுன்னர்ப் பணிந்து, பெரிய நீண்ட பெருந்தோணியான கோயிலை அருளால் தொழுது, மலையின் மீது ஏறி, அம்மையாருடன் எழுந்தருளிய இறைவரின் தாமரை மலர் அனைய திருவடிகளை வணங்கியவராய்,


பெ. பு. பாடல் எண் : 954
முற்றும் மெய்எலாம் புளகங்கள் முகிழ்த்துஎழ, முகந்துகண் களிகூர,
பற்றும் உள்ளம்உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதர, பணிந்துஏத்தி,
"உற்றுஉமை சேர்வது" எனும் திரு இயமகம் உவகையால் எடுத்துஏத்தி,
வெற்றி யாகமீ னவன்அவை எதிர்நதி மிசைவரு கரன்என்பார்.

            பொழிப்புரை : திருமேனி முழுவதும் மயிர்க்கூச்செழவும், முன்னுறக் காணும் கண்கள் களிப்புக் கொள்ளவும், அம்மெய்ப்பாடுகளைக் கொண்ட திருவுள்ளத்தில் ஆனந்தம் பொங்கி வழியவும், வணங்கி `உற்றுமை சேர்வது\' எனத் தொடங்கும் `திருஇயமகத் திருப்பதிகத்தை\' மகிழ்வுடன் எடுத்துப் போற்றி, வெற்றிஆகுமாறு பாண்டியனின் அவையிலும், நீர் எதிர்த்துச் செல்ல வைகையாற்றிலும் வரும் திருவருள் செயல் கொண்டவர் எனப் போற்றுபவராய்,

            குறிப்புரை : `உற்றுமை சேர்வது' (தி.3 ப.113) எனத் தொடங்கும் திருப்பதிகம் பழம்பஞ்சுரப் பண்ணிலமைந்ததாகும். `பருமதில் மதுரையின்மன் அவையெதிரே பதிகம தெழுதிலை அவையெதிரே வருநதியிடைமிசை வருகரனே வகையொடும் அலர்கெட வருகரனே\' என வரும் இத்திருப்பதிகத் திருக்கடைக் காப்பினையுளங் கொண்ட வகையில் ஆசிரியர் சேக்கிழார் இவ்வாறு அருளுகின்றார்.
      
திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

3. 113திருக்கழுமலம்    திருஇயமகம்   பண்- பழம்பஞ்சுரம்
                                                            திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
உற்றுஉமை சேர்வது மெய்யினையே, உணர்வது நின்அருள் மெய்யினையே
கற்றவர் காய்வது காமனையே, கனல்விழி காய்வது காமனையே
அற்றம் மறைப்பதும் முன்பணியே, அமரர்கள் செய்வதும் உன்பணியே
பெற்றும் உகந்தது கந்தனையே, பிரம புரத்தை உகந்தனையே.

            பொழிப்புரை : இறைவரே ! உமாதேவியார் பிரியாது பொருந்தி இருப்பது உம் திருமேனியையே . சிவஞானிகள் உணர்ந்து போற்றுவது உமது பேரருளையே . கற்றுணர்ந்த துறவிகள் வெறுப்பது மனைவி முதலிய குடும்பத்தையே . நெற்றிக்கண் எரித்தது மன்மதனையே . உமது திருமேனியை மறைப்பது பாம்பே . தேவர்கள் செய்வது உமது பணிவிடையே . நீர் பெற்றெடுத்து விரும்பி அணைத்தது முருகப் பெருமானையே. நீர் திருப்பிரமபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றீர் .


பாடல் எண் : 2
சதிமிக வந்த சலந்தரனே, தடிசிர நேர்கொள் சலந்தரனே
அதிர்ஒளி சேர்திகி ரிப்படையால், அமர்ந்தனர் உம்பர்து திப்புஅடையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே, மருவிட மேற்பது கைச்சுஇலையே
விதியினில் இட்ட இரும் பரனே, வேணு புரத்தை விரும்புஅரனே.

            பொழிப்புரை : வஞ்சனை செய்து வந்தவன் சலந்தரன் என்னும் அசுரனே . அவன் தலையை வெட்டியவன் கங்கையைத் தாங்கிய அரன் . கண்டவர்கள் நடுங்கத்தக்க ஒளிபொருந்திய சக்கராயுதத்தால் சலந்தரனைக் கொல்லத் தேவர்கள் துதித்து மகிழ்ந்தனர் . சந்திர மண்டலத்தை அளாவிய மேருமலை , கையிலேந்திய வில்லாம் . பொருந்திய நஞ்சை உணவாக ஏற்பதில் வெறுத்திலீர் . விதிக்கப்பட்ட அறவழியில் உலகவர் ஒழுகுவதில் விருப்பத்தையுடைய பெரிய மேலான கடவுளே . வேணுபுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அரனே !


பாடல் எண் : 3
காதுஅம ரத்திகழ் தோடினனே, கானவ னாய்க்கடிது ஓடினனே
பாதம தால்கூற் றுஉதைத்தனனே, பார்த்தன் உடல்அம்பு தைத்தனனே
தாதுஅவிழ் கொன்றை தரித்தனனே, சார்ந்த வினைஅது அரித்தனனே
போதம் அமரும் உரைப்பொருளே, புகலி அமர்ந்த பரம்பொருளே.

            பொழிப்புரை : இறைவர் காதில் தோட்டை அணிந்தவர் . வேடுவனாகி மிக விரைந்து சென்றவர். யமனைக் காலால் உதைத்தவர் . அர்ச்சுனனது உடலைக் கவசம் போல் மூடினவர். மகரந்தத்தோடு மலர்ந்த கொன்றையை அணிந்தவர். அன்பர்களின் வினைகளை அழித்தவர். சிவஞானக் கருத்தடங்கிய உபதேச மொழியின் பொருளாயுள்ளவர். அவரே திருப்புகலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் பரம்பொருள்.


பாடல் எண் : 4
மைத்திகழ் நஞ்சுமிழ் மாசுணமே, மகிழ்ந்து அரை சேர்வது மாசுணமே
மெய்த்து உடல் பூசுவர், மேன்மதியே, வேதம்அது ஓதுவர் மேன்மதியே
பொய்த்தலை யோடுஉறு மத்தமதே, புரிசடை வைத்தது மத்தமதே
வித்தகர் ஆகிய எம்குருவே, விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே.

            பொழிப்புரை : கருநிறமுடைய நஞ்சைக் கக்கும் பாம்பை மகிழ்ந்து இடுப்பில் அணிந்துள்ளவர் . திருநீற்றினையே சந்தனம் போல் உடம்பில் பூசியவர் . அவர் தலைமேல் விளங்குவது சந்திரனே . அவர் வேதம் அருளியது உயிர்கட்கு மேலான ஞானம் அருளவே . மண்டையோடு ஏந்தி மயானத்தில் விளங்குபவர் . முறுக்குண்ட சடையில் அவர் அணிந்துள்ளது ஊமத்த மலரே . வித்தகராகிய அப் பெருமான் எம் குரு ஆவார் . அவர் விரும்பி வீற்றிருந்தருளுவதும் திருவெங்குரு என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 5
உடன்பயில் கின்றனன் மாதவனே, உறுபொறி காய்ந்துஇசை மாதவனே
திடம்பட மாமறை கண்டனனே, திரிகுண மேவிஅ கண்டனனே
படங்கொள் அரவுஅரை செய்தனனே, பகடுஉரி கொண்டுஅரை செய்தனனே
தொடர்ந்த துயர்க்குஒரு நஞ்சுஇவனே, தோணி புரத்துஉறை நம்சிவனே.

            பொழிப்புரை : இறைவனே ! திருமாலைத் தம்முடன் இடப் பாகத்தில் இருக்கும்படி செய்கின்றவர் . தம்வழிச் செல்லும் இயல்புடைய இந்திரியங்களை அடக்கும் பெரிய தவம் செய்தவர் . உறுதி பயக்கும் சிறந்த வேதங்களை அருளியவர் . முக்குண வயப்பட்டுச் செய்த புறச்சமயக் கொள்கைகளைக் கண்டனம் செய்பவர் . பட மெடுக்கும் பாம்பை இடுப்பில் அணிந்தவர் . யானையின் தோலை உரித்து அதைக் கொன்றவர் . தொடர்ந்த துன்பங்களை அழிப்பதில் இவர் விடம் போன்றவர் . இவரே திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் நம் சிவபெருமான் ஆவார் .


பாடல் எண் : 6
திகழ்கைய தும்புகை தங்குஅழலே, தேவர் தொழுவதும் தம்கழலே
இகழ்பவர் தாம்ஒரு மான்இடமே, இருந்தனு வோடுஎழில் மானிடமே
மிகவரு நீர்கொளும் அம்சடையே, மின்நிகர் கின்றதும் அம்சடையே
தகவிர தம்கொள்வர் சுந்தரரே, தக்க தராய்உறை சுந்தரரே.

            பொழிப்புரை : இறைவன் அழகிய கையில் ஏந்தியுள்ளது புகைகொண்டு எழும் நெருப்பே . தேவர்கள் போற்றுவது அவருடைய திருக்கழல்களையே . தம்மை இகழ்ந்த தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை இடக்கரத்தில் ஏந்தியுள்ளார் . பக்குவான்மாக்கட்கு ஞானோபதேசம் செய்ய அவர் காட்சி தந்தது மானிட உடம்பில் . பெருக்கெடுக்கும் கங்கையைத் தாங்கியது அழகிய சடையிலே . மின்னலைப் போன்று ஒளிரும் அழகிய சடையை உடையவர் . தகுந்த விரதம் கொள்ளும் சுந்தர வடிவினர் . அவர் எக்காலத்திலும் அழியாது நிலைத்து நிற்கும் பூந்தராய் என்னும் திருப்பதியில் வீற்றிருந்தருளும் அழகர் .


பாடல் எண் : 7
ஓர்வுஅரு கண்கள் இணைக்க அயலே, உமையவள் கண்கள் இணைக்கயலே
ஏர்மரு வும்கழல் நாகம்அதே, எழில்கொள்உ தாசனன் ஆகம்அதே
நீர்வரு கொந்து அளகம் கையதே, நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோக தியம்பகனே, சிரபுர மேய திஅம்புஅகனே.

            பொழிப்புரை : இறைவனையும் , அடியாரையும் காணாத கண்கள் புறம்பானவை . உமாதேவியின் கண்கள் இரு கயல்மீன்கட்கு ஒப்பானவை . அழகிய திருவடிகளில் கட்டியிருப்பது நாகத்தையே . அவருடைய திருமேனியானது நெருப்பு வண்ணம் உடையது நீர்மயமான கொத்தான கூந்தல் ஒழுங்காய் உள்ளது . நெடுஞ்சடையில் தங்கியுள்ளது , கங்கையே. சேர்தற்கரிய யோகநிலையைக் காட்டிய மூன்று கண்களையுடையவரே . நெருப்பாகிய அம்பைக் கையின் இடத்துக்கொண்டு சிரபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார் .


பாடல் எண் : 8
ஈண்டு துயில்அமர் அப்பினனே, இருங்கண் இடந்துஅடி அப்பினனே
தீண்டல ரும்பரிசு அக்கரமே, திகழ்ந்துஒளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகைத் தலையே, மிகைத்தஅவ ரோடு நகைத்தலையே
பூண்டனர் சேரலும் மாபதியே, புறவம் அமர்ந்த உமாபதியே

            பொழிப்புரை : பாற்கடலில் துயில் கொள்ளும் திருமால் , தமது பெரிய கண்ணைத் தோண்டிச் சிவபெருமானின் திருவடிகளில் அர்ச்சித்தனர் . தீண்டுதற்கரிய தன்மையுடைய அந்தக் கரத்தில் ஒளியுடையதாய் விளங்குவது சக்கரமே . தாருகாவனத்து முனிவர்கள் விரும்பி யாகம் செய்து சிரமப்படச் சிவனைக் கொல்ல வந்தது நகுவெண்டலை. அம்முனிவர்களைப் பரிகசிப்பது போல வெண்டலைகளை மாலையாக அணிந்து கொண்டனர் . அவர் சேர்வது எவற்றிலும் சிறந்த அடியார் உள்ளமாகிய இடமாம் . புறவம் என்னும் திருத் தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் அந்த உமாபதியே ஆவார் .


பாடல் எண் : 9
நின்மணி வாயது நீழலையே, நேசம் அதுஆனவர் நீழலையே
உன்னி மனத்துஎழு சங்கம்அதே, ஒளிஅத னோடுஉறு சங்கம்அதே
கன்னிய ரைக்கவ ரும் களனே, கடல்விடம் உண்ட கரும்களனே
மன்னிவ ரைப்பதி சண்பைஅதே, வாரி வயல்மலி சண்பைஅதே.

            பொழிப்புரை : சிவபெருமானே ! மணிகட்டிய உன் கோயில் வாசலின் நிழலையே அருளிடமாகக் கொண்ட நேசமுடைய அடியவர்களிடமிருந்து நீங்கமாட்டாய் . அவர்களின் அடிச்சுவட்டை எண்ணி . மனத்தில் தொழுகின்ற அடியவர்கள் விளங்குகின்ற இடமே அடியவர் திருக்கூட்டம் எனத்தகும் . அவர் தாருகாவனத்தில் வாழும் மகளிர் உள்ளத்தைக் கவர்ந்த கள்வர் . கடலில் எழுந்த விடத்தை உண்ட கரிய கண்டத்தர் . அப்பெருமான் நிலையாக விரும்பி வீற்றிருந்தருளும் வரையறுத்தலை உடையபதி சண்பைப்புல்லாலே அழகாகச் சூழப் பட்டதாகிய . கடல்வளமும் , வயல் வளமும் உடைய சண்பை நகராகும் .


பாடல் எண் : 10
இலங்கை அரக்கர் தமக்குஇறையே, இடந்து கயிலை எடுக்கஇறையே
புலன்கள் கெடவுடன் பாடினனே, பொறிகள் கெடஉடன்பாடினனே
இலங்கிய மேனி இராவணனே, எய்து பெயரும் இராவணனே
கலந்துஅருள் பெற்றது மா வசியே, காழி யரன்அடி மாவசியே.

            பொழிப்புரை : இலங்கை அரக்கர்கட்கு அரசனான இராவணன் கயிலையைப் பெயர்த்து எடுக்க , இறைவன் திருப்பாத விரலை ஊன்றக் கயிலையின் கீழ் நடுக்குண்டு , இந்திரியங்கள் மயங்கச் சோர்ந்து தான் பிழைக்கும் வண்ணம் இறையருளை வேண்டி உடனே பாடினன் . பழைய செருக்கு நீங்கி , பொறிகள் பக்தி நிலையில் செல்ல அவனுடைய பாடலுக்கு இறைவன் உடன்பட்டு அருளினன் . இரவு போன்ற கரிய நிறத்தை உடைய அவன் கயிலைமலையின் கீழ் நடுக்குண்டு அழுததனால் உண்டான பெயரே இராவணன் என்பதாம் . இறைவனின் அருளில் கலந்து அவன் பெற்றது சிறந்த வாளாயுதம் . சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடி சிறந்த வசீகரத்தை உடையதாகும் .


பாடல் எண் : 11
கண்நிகழ் புண்டரி கத்தினனே, கலந்துஇரி புண்டரி கத்தினனே
மண்இக ழும்பரிசு ஏனம்அதே, வானகம் ஏய்வகை சேனம்அதே
நண்ணி அடிமுடி எய்தலரே நளிர்மலி சோலையி எய்துஅலரே
பண்இயல் கொச்சை பசுபதியே, பசுமிக ஊர்வர் பசுபதியே.

            பொழிப்புரை : தாமரை போன்ற கண்களையுடைய திருமாலும், அவனோடு சேர்ந்து திரிந்த உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும் , பூமியைத் தோண்டும் பன்றியாகவும் , வானத்தில் பறக்கும் பருந்தாகவும் அடி , முடி தேட முயன்று அடையாதவர் ஆயினர் . குளிர்ச்சி மிக்க சோலைகளில் உள்ள மலர்கள் சிவபூசை பண்ணப் பயன்படத் திருக்கொச்சை வயம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் , உயிர்கட்கெல்லாம் தலைவரான பசுபதி எனப்படும் சிவபெருமான். அவர் ஆனேற்றில் ஏறுவதால் பசுபதி என்னும் பெயர் படைத்தவரும் ஆவார் .


பாடல் எண் : 12
பருமதில் மதுரைமன் அவைஎதிரே, பதிகம் அதுஎழுதுஇலை அவைஎதிரே
வருநதி இடைமிசை வருகரனே, வசையொடும் அலர்கெட வருகரனே
கருதல்இல் இசைமுரல் தரும்அருளே, கழுமலம் அமர்இறை தருமருளே
மருவிய தமிழ்விர கனமொழியே, வல்லவர் தம்இடர் திடம்ஒழியே.

            பொழிப்புரை : பெரிய மதில்களையுடைய மதுரை நகரின்கண் அரசனது அவைமுன்னர்த் , திருப்பதிகத்தை ஓலையில் எழுதி வைகை நதியின் மீது செலுத்த அதனை எதிர் நோக்கிச் செல்லுமாறு செய்த கரத்தையுடையவர் சிவபெருமான் . அவர் சைவர்கட்கு வந்த பழியும் , பழிதூற்றலும் கெடுமாறு சமணர்களை அழித்தவர் . நினைக்கவும் முடியாதபடி சைவர்களின் புகழ் உலகம் முழுவதும் ஒலிக்கும்படி செய்த வியப்பான செயல் . திருக்கழுமலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனின் அருளே . அவ்வருளைப் பெற்ற முத்தமிழ் விரகரது பாடல்களை ஓதவல்லவர்கள் இடர் ஒழிதல் நிச்சயம் .
                                                            திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------------------------


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு:

            மயிலையில் பூம்பாவையை உயிர்ப்பித்த பிள்ளையார், திருவான்மியூர், இடைச்சுரம், கழுக்குன்றம், அச்சிறுபாக்கம், அரசிலி புறவார் பனங்காட்டூர் ஆகிய தலங்களை வழிபட்டு, நற்றவர் குழாத்தோடும், ஆனந்த நடராஜர் ஞானநடஞ்செயும் தில்லையம்பதியின் எல்லையில் வணங்கிக்கொண்டு, திருக்கழுமலம் சென்றடைந்து, சீகாழிப் பதியைத் தூரத்தே கண்டதும், பல்லக்கை விட்டிறங்கி, ‘வண்டார் குழல் அரிவை‘ என்னும் இப்பதிகத்தைப் பாடியருளுகிறார்.


பெரிய புராணப் பாடல் எண் : 1140
தொண்டர்மனம் பிரியாத திருப்படியைத் தொழுதுஇறைஞ்சி,
மண்டுபெரும் காதலினால் நோக்கி, முகம் மலர்ந்து எழுவார்,
அண்டம்எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து
கண்டபேர் இன்பத்தின் கரைஇல்லா நிலை அணைந்தார்.

            பொழிப்புரை : தொண்டர்களின் மனத்தினின்றும் பிரியாது விளங்கும் திருக்களிற்றுப் படியை வணங்கி, செறிந்த பெருங் காதலால் நோக்கி முகமலர்ச்சி பெற்று எழுபவராய ஞானசம்பந்தர், அண்டங்கள் எங்கும் நிறைந்து எழுகின்ற சிவானந்தப் பெருக்கினுள் அலைந்து, தம் அநுபவத்துள் கண்ட பேரின்பத்தில் கரையில்லாத நிலையினை அடைந்தார்.
  

பெ. பு. பாடல் எண் : 1141
அந்நிலைமை அடைந்து, திளைத்து, ஆங்குஎய்தாக் காலத்தின்
மன்னுதிரு அம்பலத்தை வலங்கொண்டு, போந்துஅருளி,
பொன்அணிமா ளிகைவீதிப் புறத்துஅணைந்து, போதுதொறும்
இன்னிசைவண் தமிழ்பாடிக் கும்பிட்டு,அங்கு இனிதுஅமர்ந்தார்.

            பொழிப்புரை : அத்தகைய நிலையை அடைந்து, அந்த அநுபவத்தில் மூழ்கியிருந்து, அங்குத் தங்காத காலத்தில், நிலையான திருச்சிற்றம்பலத்தை வலமாக வந்து வெளியே சென்று, பொன்னால் அழகு பெற்ற மாளிகைகளையுடைய வீதியின் பக்கத்தை அடைந்து, காலந்தோறும் இனிய இசையுடன் கூடிய பாக்களைப் பாடியருளிக் கும்பிட்டுக் கொண்டு அங்கு இனிதாய்த் தங்கியிருந்தனர்.

            குறிப்புரை : அங்குத் தங்காத காலம் வழிபாட்டிற்கு உரியவல்லாத காலம். அவை கதவம் திருக்காப்பிட்டிருக்கும் காலமாகும். இறைவற்குத் திருமுழுக்கு முதலியன நிகழும் காலமும் ஆம். இது பொழுது அருளிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.


பெ. பு. பாடல் எண் : 1142
திருந்தியசீர்த் தாதையார் சிவபாத இருதயரும்
பொருந்துதிரு வளர்புகலிப் பூசுரரும் மாதவரும்
பெருந்திருமால் அயன்போற்றும் பெரும்பற்றப் புலியூரில்
இரும்தமிழா கரர்அணைந்தார் எனக்கேட்டு வந்துஅணைந்தார்.

            பொழிப்புரை : உலகம் திருந்துவதற்குக் காரணமான சிறப்புடைய தந்தையார் சிவபாத இருதயரும், பொருந்திய சைவத்திரு வளர்வதற்கு இடமான சீகாழியில் வாழும் அந்தணர்களும், சிவனடியார்களும் பெருந்திருவுடைய திருமாலும் நான்முகனும் போற்றி வரும் பெரும்பற்றப் புலியூரில், பெருந் தமிழாகரரான ஞானசம்பந்தர் வந்திருக்கின்றார் எனக்கேட்டு, தாங்கள் அங்கு வந்து அடைந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 1143
ஆங்குஅவரைக் கண்டு,சிறப்பு அளித்துஅருளி, அவரோடும்
தாங்க அரிய காதலினால் தம்பெருமான் கழல்வணங்க,
ஓங்குதிருத் தில்லைவாழ் அந்தணரும் உடனாக,
தேங்கமழ்கொன் றைச்சடையார் திருச்சிற்றம் பலம்பணிந்தார்.

            பொழிப்புரை : உலகம் திருந்துவதற்குக் காரணமான சிறப்புடைய தந்தையார் சிவபாத இருதயரும், பொருந்திய சைவத்திரு வளர்வதற்கு இடமான சீகாழியில் வாழும் அந்தணர்களும், சிவனடியார்களும் பெருந்திருவுடைய திருமாலும் நான்முகனும் போற்றி வரும் பெரும்பற்றப் புலியூரில், பெருந் தமிழாகரரான ஞானசம்பந்தர் வந்திருக்கின்றார் எனக்கேட்டு, தாங்கள் அங்கு வந்து அடைந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 1144
தென்புகலி அந்தணரும், தில்லைவாழ் அந்தணரும்,
அன்புநெறி பெருக்குவித்த ஆண்தகையார் அடிபோற்றி,
பொன்புரிசெஞ் சடைக்கூத்தர் அருள்பெற்றுப் போந்துஅருளி,
இன்புறுதோ ணியில்அமர்ந்தார் தமைவணங்க எழுந்துஅருள.

            பொழிப்புரை : அழகிய சீகாழி அந்தணர்களும், தில்லையில் வாழும் அந்தணர்களும், அன்பு நெறியைப் பெருகச் செய்து, இறைவரின் திருவடிகளைப் போற்றிப் பொன்போற் புரிந்த சடையை உடைய கூத்தரின் திருவருள் விடைபெற்று, வெளிவந்து, இன்பம் செய்யும் திருத்தோணியில் வீற்றிருக்கும் தோணியப்பரை வணங்குவதன் பொருட்டு,


பெ. பு. பாடல் எண் : 1145
நல்தவர்தம் குழாத்தோடும் நம்பர்திரு நடம்செய்யும்
பொன்பதியின் திருஎல்லை பணிந்துஅருளிப் புறம்போந்து,
பெற்றம்உயர்த் தவர்அமர்ந்த பிறபதியும் புக்குஇறைஞ்சி,
கற்றவர்கள் பரவுதிருக் கழுமலமே சென்றுஅடைவார்.

            பொழிப்புரை : நல்ல தவமுடைய அடியவர்களின் கூட்டத்துடன் கூடி, இறைவர் திருநடனம் செய்கின்ற அழகிய அப்பதியின் திரு எல்லையை வணங்கிப் புறத்தில் சென்று, விடைக் கொடியை உடைய இறைவர் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற பிற பதிகளையும் போய்த் தொழுது, கற்றவர்கள் போற்றுகின்ற சீகாழிப் பதியை அடைபவராய்,


பெ. பு. பாடல் எண் : 1146
பல்பதிகள் கடந்துஅருளி, பன்னிரண்டு பெயர்படைத்த
தொல்லைவளப் பூந்தராய் தூரத்தே தோன்றுதலும்,
மல்குதிரு மணிமுத்தின் சிவிகைஇழிந்து எதிர்வணங்கி,
செல்வமிகு பதிஅதன்மேல் திருப்பதிகம் அருள் செய்வார்.

            பொழிப்புரை : பலதிருப்பதிகளையும் கடந்துசென்று, பன்னிரண்டு பெயர்களையுடைய பழமையான வளம் வாய்ந்த சீகாழிப் பதியானது தொலைவில் காணப்பட, திருந்திய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி, வணங்கி, திருவருட் செல்வம் நிறைந்த அச்சீகாழிப் பதியின் மீது திருப்பதிகத்தை அருள்பவராய்,


பெ. பு. பாடல் எண் : 1147
மன்னும்இசை மொழி"வண்டார் குழல்அரிவை" என்றுஎடுத்து
மின்னுசுடர் மாளிகை"விண் தாங்குவபோல் வேணுபுரம்"
என்னும்இசைச் சொன்மாலை எடுத்துஇயம்பி எழுந்துஅருளிப்
புன்னைமணம் கமழ்புறவப் புறம்பணையில் வந்துஅணைந்தார்.

            பொழிப்புரை : நிலைபெற்ற இசையுடைய `வண்டார் குழல்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை அருளத் தொடங்கி, ஒளிவீசும் சுடர்களைக் கொண்ட மாளிகைகள் விண்தாங்குவன போல் உள்ளன என்னும் கருத்துக்கொண்ட இசையுடன் கூடிய திருப்பதிகத்தை எடுத்துப் போற்றி, மேற்சென்று, புன்னை மரங்களின் மணம் வீசுவதற்கு இடமான சீகாழியின் புறநகர்ப்பகுதியில் வந்து சேர்ந்தார்.

            குறிப்புரை : `வண்டார் குழல்' எனத் தொடங்கும் பதிகம் நட்டபாடைப் பண்ணிலமைந்ததாகும் (தி.1 ப.9). இப்பதிக முதற்பாடலில், `தண்டாமரை மலராளுறை தவளந்நெடுமாடம், விண்தாங்குவ போலும் மிகு வேணு புரம் அதுவே' எனவரும் கருத்தை முகந்தே ஆசிரியர் இங்ஙனம் அருளிச் செய்வாராயினர். புறம்பணை - புறத்தே உள்ள வயல்கள். புறநகர்ப் பகுதி.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.009 திருவேணுபுரம்                     பண் – நட்டபாடை
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வண்டுஆர்குழல் அரிவையொடு பிரியாவகை பாகம்
பெண்தான்மிக ஆனான்,பிறைச் சென்னிப்பெரு மான்ஊர்,
தண்தாமரை மலராள்உறை தவளந்நெடு மாடம்
விண்தாங்குவ போலும்மிகு வேணுபுரம் அதுவே.

            பொழிப்புரை :வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய பெண்ணாகிய உமையம்மை, தன்னிற் பிரியாதிருக்கத் தன் திருமேனியில் இடப்பாகத்தை அளித்து, அப்பாகம் முழுதும் பெண் வடிவானவனும், பிறையணிந்த திருமுடியை உடையவனும் ஆகிய பெருமானது ஊர், தாமரை மலரில் விளங்கும் திருமகள் வாழும் வெண்மையான பெரிய மாடங்கள் விண்ணைத் தாங்குவனபோல உயர்ந்து விளங்கும் வேணுபுரமாகும்.


பாடல் எண் : 2
படைப்பும்,நிலை, இறுதிப்பயன் பருமையொடு நேர்மை,
கிடைப்பல்கணம் உடையான்,கிறி பூதப்படை யான்,ஊர்
புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்
விடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுரம் அதுவே.

           
பொழிப்புரை :படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரிவோனும், அவற்றின் முடிந்த பயனாய வீட்டின்ப வடிவாய் விளங்குவோனும், பருமை நுண்மை இவற்றிற்கோர் எல்லையாக இருப்பவனும், வேதங்களை ஓதும் கணங்களை உடையோனும், வஞ்சகமான பூதப்படைகளை உடையவனும் ஆகிய சிவபிரானது ஊர், பக்கங்களில் வெடித்து மலர்ந்திருக்கும் கமுகம் பாளையின் மணத்தோடு புன்னை மலர்களின் மணத்தைத் தாங்கி மெல்லெனப் பெருமிதத்தோடு வரும் தென்றல் காற்று மிகுந்து வீசும் வேணுபுரம் ஆகும்.


பாடல் எண் : 3
கடம்தாங்கிய கரியைஅவர் வெருவஉரி போர்த்துப்
படம்தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழவூர்
நடம்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல்
விடம்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுரம் அதுவே.

            பொழிப்புரை :தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய மதநீர் ஒழுகும் யானையை அம்முனிவர்கள் வெருவுமாறு உரித்துப் போர்த்தவரும், படத்தோடு கூடிய பாம்பைக் குழையாக அணிந்தவரும் ஆகிய சிவபிரானது பழமையான ஊர், நடனத்துக்குரிய சதிகளோடு கூடிய நடையையும், அழகிய பவளம் போன்ற சிவந்த வாயினையும் மேலான விடத்தன்மையோடு கூடிய கண்களையும் உடைய அழகிய மகளிர் பலர் வாழும் வேணுபுரம் ஆகும்.


பாடல் எண் : 4
தக்கன்தன சிரம்ஒன்றினை அரிவித்து,அவன் தனக்கு
மிக்கவ்வரம் அருள்செய்தஎம் விண்ணோர்பெரு மான்ஊர்
பக்கம்பல மயில்ஆடிட மேகம்முழவு அதிர
மிக்கம்மது வண்டுஆர்பொழில் வேணுபுரம் அதுவே.

            பொழிப்புரை :தக்கனது தலையை வீரபத்திரக் கடவுளைக் கொண்டு அரியச் செய்து, பிழையை உணர்ந்து அவன் வேண்டியபோது அவனுக்கு மிகுதியான வரங்கள் பலவற்றை அளித்தருளிய வானோர் தலைவனாகிய சிவபெருமானது ஊர், மேகங்கள் முழவாக ஒலிக்க, நாற்புறமும் மயில்கள் ஆடுவதும், மிகுதியான தேனை வண்டுகள் அருந்தும் வளமுடையதுமான பொழில்கள் சூழ்ந்த வேணுபுரமாகும்.


பாடல் எண் : 5
நானாவித உருவால்நமை ஆள்வான்,நணு காதார்
வானார்திரி புரம் மூன்றுஎரி உண்ணச்சிலை தொட்டான்,
தேன்ஆர்ந்துஎழு கதலிக்கனி உண்பான்திகழ் மந்தி
மேல்நோக்கிநின்று இரங்கும்பொழில் வேணுபுரம் அதுவே.

            பொழிப்புரை :அன்போடு வழிபடும் நாம் எவ்வுருவில் நினைக்கின்றோமோ அவ்வுருவில் தோன்றி நம்மை ஆட்கொள்பவனும், தன்னை நணுகாதவராகிய அசுரர்களின் வானில் திரிந்த மூன்று புரங்கள் வெந்தழியுமாறு வில்லை வளைத்துக் கணை தொடுத்து எரியூட்டியவனும் ஆகிய சிவபிரானது ஊர், மரங்களில் அமர்ந்த மந்திகள் தேனின் சுவை பொருந்தியனவாய்ப் பழுத்துத் தோன்றிய வாழைப் பழங்களைக் கண்டு அவற்றை உண்ணுதற் பொருட்டு மேல் நோக்கியவாறே தாம் ஏறிப் பறிக்க இயலாத தம் நிலைக்கு வருந்தும் பொழில்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும். "வாழை மரத்தில் குரங்கு ஏறாதன்றோ".


பாடல் எண் : 6
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிம்மிக அஞ்சக்
கண்ணார்சலம் மூடிக்கடல் ஓங்கவ்உயர்ந் தான்ஊர்
தண்ணார்நறுங் கமலம்மலர் சாய இள வாளை
விண்ணார்குதி கொள்ளும்வியன் வேணுபுரம் அதுவே.

            பொழிப்புரை :மண்ணுலக மக்களும் விண்ணகத் தேவரும் கண்டு நடுங்கி மிகவும் அஞ்சுமாறு நிலமெல்லாம் நிறைந்த நீர் மூடிக் கடல் ஊழி வெள்ளமாய் ஓங்க, அவ்வெள்ளத்திலும் அழியாது உயர்ந்து தோணியாய்த் தோன்றுமாறு செய்த சிவபிரானது ஊர், தண்ணிய மணம் கமழும் தாமரை மலர்கள் சாயுமாறு இளவாளை மீன்கள் வானிடை எழுந்து குதிக்கும் நீர்வளம் சான்ற பெரிய வேணுபுரம் ஆகும்.


பாடல் எண் : 7  * * * * * * * *

பாடல் எண் : 8
மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி அரக்கன்
தலைதோள்அவை நெரியச்சரண் உகிர்வைத்தவன் தன்ஊர்
கலைஆறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்
விலைஆயின சொல் தேர்தரு வேணுபுரம் அதுவே.

            பொழிப்புரை :மலையரையன் மகளாகிய பார்வதி தேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிமை சான்ற இராவணனின் தலைகள் தோள்கள் ஆகியவை நெரியுமாறு கால் விரலை ஊன்றிய சிவபிரானது ஊர், ஆறு அங்கங்களோடு வேதங்களின் தொகுதியைக் கற்றுணர்ந்தோர் தம்முள் கூடும் கூட்டத்தில் விலை மதிப்புடைய சொற்களைத் தேர்ந்து பேசும் கல்வி நலம் சான்றவர் வாழும் வேணுபுரம் ஆகும்.


பாடல் எண் : 9
வயம் உண்தவ மாலும்அடி காணாதுஅல மாக்கும்
பயன்ஆகிய பிரமன்படு தலைஏந்திய பரன்ஊர்
கயம்மேவிய சங்கம்தரு கழிவிட்டுஉயர் செந்நெல்
வியல்மேவிவந்து உறங்கும்பொழில் வேணுபுரம் அதுவே.

            பொழிப்புரை :உலகை உண்ட திருமாலும் தன் அடிகளைக் காணாது அலமருமாறு செய்தவனும், மக்கள் அடையத்தக்க பயன்களில் ஒன்றான பிரமலோகத்தை உடைய பிரமனது கிள்ளப்பட்ட தலையோட்டினை ஏந்தியவனுமாகிய சிவபிரானது ஊர்; ஆழ்ந்த நீர் நிலைகளில் வாழும் சங்குகள், கடல் தரும் உப்பங்கழியைவிடுத்துச் செந்நெல் விளைந்த அகன்ற வயலில் வந்து உறங்கும் வேணுபுரமாகும்.


பாடல் எண் : 10
மாசுஏறிய உடலார் அமண் குழுக்கள்ளொடு தேரர்
தேசுஏறிய பாதம்வணங் காமைத்தெரி யான்ஊர்
தூசுஏறிய அல்குல் துடி இடையார்துணை முலையார்
வீசுஏறிய புருவத்தவர் வேணுபுரம் அதுவே.

            பொழிப்புரை :அழுக்கேறிய உடலினை உடையவர்களாகிய சமணர் கூட்டத்தினரோடு, புத்த மதத்தினராகிய தேரர்களும் ஒளி பொருந்திய திருவடிகளை வணங்காமையால் அவர்களால் அறியப் பெறாத சிவபிரானது ஊர்; அழகிய ஆடை தோயும் அல்குலையும், உடுக்கை போன்ற இடையையும், பருத்த தனங்களையும், ஆடவர் மேல் தம் குறிப்பு உணர்த்தி நெரியும் புருவங்களையும் உடைய அழகிய மகளிர் வாழும் வேணுபுரம் ஆகும்.


பாடல் எண் : 11
வேதத்துஒலி யானும்மிகு வேணுபுரம் தன்னைப்
பாதத்தினில் மனம்வைத்துஎழு பந்தன்தன பாடல்
ஏதத்தினை இல்லாஇவை பத்தும்இசை வல்லார்
கேதத்தினை இல்லார்சிவ கெதியைப்பெறு வாரே.

            பொழிப்புரை :ஞானசம்பந்தரின் ஏதம் இல்லாத இப்பத்துப் பாடல்களையும் இசையோடு பாடுவார் சிவகதி பெறுவார் என வினை முடிபு கொள்க./n மங்கல ஒலிகள் பலவற்றோடு வேத ஒலியாலும் மிக்குத்தோன்றும் வேணுபுரத்துப் பெருமானின் பாதங்களை மனத்துட் கொண்டு பாடப்பெற்ற ஞானசம்பந்தரின் துன்பந்தரல் இல்லாத இப்பதிகப் பாடல்களை இசையோடு பாடவல்லவர் துயர் நீங்குவர்; முடிவில் சிவகதியைப் பெறுவர்.


                                                            திருச்சிற்றம்பலம்

                                                                                      ----- தொடரும் -----

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...