சொன்னதைச் சொல்லும் இளம் கிளி




20. சொன்னதைச் சொல்லும் இளங்கிள்ளை

சொன்னத்தைச் சொல்லும் இளம் கிள்ளை என்பார்,
     தண்டலையார் தொண்டு பேணி
இன்னத்துக்கு இன்னது என்னும் பகுத்தறிவு ஒன்று
     இல்லாத ஈனர் எல்லாம்,
தன் ஒத்துக் கண்டவுடன் காணாமல்
     முறைபேசி, சாடை பேசி,
முன்னுக்கு ஒன்றாய் இருந்து பின்னுக்கு ஒன்-
     றாய் நடந்து மொழிவர் தாமே.
          
     இதன் பொருள் ---

     இளம் கிள்ளை சொன்னத்தைச் சொல்லும் என்பார் --- இளங்கிளியானது நாம் சொன்னத்தையே சொல்லும் என்று கூறுவார்கள்,

     (அவ்வாறு)

     தண்டலையார் தொண்டு பேணி இன்னத்துக்கு இன்னது  எனும் பகுத்தறிவு ஒன்று  இல்லாத ஈனர் எல்லாம் --- திருத்தண்டலை நீள்நெறி நாதருக்குத் தொண்டுகள் புரிந்து, இதற்கு இது என்று அறியும் பகுத்தறிவு சிறிதும் பெறாத இழிந்தவர்கள் எல்லோரும்,

     தன் ஒத்துக் கண்டவுடன் முறைபேசி --- தன்னை நேரே கண்டபோது தகுதிப் படி உரையாடி,
  
     காணாமல் சாடை பேசி --- காணாதபோது குறிப்பாக இகழ்ந்து கூறி,

     இவ்வாறு,

     முன்னுக்கு ஒன்றாய் இருந்து --- எதிரில் ஒருவாறு நடந்து  கொண்டும்,

     பின்னுக்கு ஒன்றாய் நடந்து --- காணாதபோது ஒருவாறு நடந்து கொண்டும்

     மொழிவர் --- அவ்வாறே முன்னுக்குப் பின் மாறுபாடாகப் பேசுவதும் செய்வார்கள்.

      விளக்கம் --- இறைவன் திருத்தொண்டிலை ஈடுபட்டால் இது நல்லது, இது தீயது என்னும் பகுத்தறிவினைப் பெறலாம். திருத்தொண்டுசெய்தால் பணிவு வரும். எல்லாம் இறைவன் அருளால் நிகழ்வது என்னும் தெளிவு வரும். யாரையும் வஞ்சிக்கும் எட்டம் வராது.

வஞ்சித்து ஒழுகும் மதி இலிகாள்! யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின் --- வஞ்சித்த
எங்கும் உளன் ஒருவன் காணும்கொல் என்று அஞ்சி,
அங்கும் குலைவது அறிவு.

என்பது நீதிநெறி விளக்கம்.

     போலி வேடம் பூண்டு பிறரை வஞ்சித்து வாழும் அறிவிலிகளே! எல்லோரையும் நாம் வஞ்சித்து விட்டோம் என்று நீங்கள் மகிழ வேண்டாம்.  அது அறிவு உடைமை அல்ல.  நீங்கள் வஞ்சித்த செயலை, பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைந்து இருக்கின்ற இறைவன் பார்த்துக் கொண்டு இருக்கின்றானே என்று நடுங்கி, உடல் பதைப்பதே அறிவு உடைமை ஆகும்.

     எனவே, திருத்தொண்டில் நின்று, பகுத்தறிவு பெறாத ஈனர் யாவரும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போன்றவர்கள்.  அத்தகையோர் ஒருவரைக் கண்டால் ஒன்றும்,  காணாதபோது  ஒன்றுமாகப் பேசியும் நடந்தும் வருவார்கள்.

     ‘சொன்னதைச்  சொல்லும் கிளிப்பிள்ளை' என்பது பழமொழி, ‘முறைபேசிச் சாடை பேசி' ‘முன்னுக்கு ஒன்றாய் இருந்து பின்னுக்கு ஒன்றாய் நடந்து மொழிவர்' என்பன மரபு மொழிகள். 


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...