அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தமிழோதிய குயிலோ
(திருவருணை)
திருவருணை முருகா!
மாதர் மயலில் முழுகி இருந்தாலும்
உன்னை ஒரு போதும் மறவேன்
தனனாதன
தனனாதன தாந்தன தாந்தனதந்
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் ......
தனதான
தமிழோதிய
குயிலோமயி லாண்டலை யாம்புறவங்
கிளிகாடையி னணிலேரளி யாங்குரல்
வாய்ந்ததிசெந்
தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின்......
சுவைசேரும்
தனபாரமு
மலையாமென வோங்கிட மாம்பொறிசிந்
திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை
மாந்துளிரின்
சரிரார்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின்......
சுடர்பாயக்
குமிழ்நாசியின்
முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ்
சரிதோடிணை செவியாடுச லாங்கள பூங்கமுகங்
கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர்
மாண்புரிமின்...... கொடிமாதர்
குணமோடம
ளியினாடினு ங்கியமோ பூங்கமலஞ்
சரணூபுர குரலோசையு மேந்திடு மாண்டலையின்
கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய
பாங்கையுமன்......
தகையேனே
திமிதோதிமி
திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்
தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்
திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகமென்......
றியல்பேரி
திசைமூடுக
கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங்
கரிதேர்பரி யசுரார்கள மாண்டிட நீண்டரவின்
சிரமீள்பட குவடோதுகள் வான்பெற வாங்கியவண்......
கதிர்வேலா
கமழ்மாவிதழ்
சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண்
தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி
தாங்கியவண்
கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளீன்றருள்மென்......
குரவோனே
கடையேனிரு
வினைநோய்மல மாண்டிட தீண்டியவொண்
சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின்
கலைநூலுடை முருகாவழ லோங்கிய வோங்கலின்வண்......
பெருமாளே.
பதம் பிரித்தல்
தமிழ்
ஓதிய குயிலோ? மயில் ஆண்டலையாம், புறவம்,
கிளி காடையின், அணில், ஏர் அளியாம் குரல் வாய்ந்து அதிசெந்
தகு மாமிடறு ஒலியார் இதழாம் சுளை
தேன்கனியின் ......
சுவைசேரும்,
தனபாரமும்
மலையாம் என ஓங்கிட, மாம்பொறி சிந்-
திட, வேல்விழி நுதலோ, சிலை, வான்பிறை, மாந்துளிரின்
சரிர, ஆர் குழல் இருளா நகை ஓங்கிய வான்கதிரின்......
சுடர்பாய,
குமிழ்நாசியின், முகமோ மதியாம், குளிர் சேங்கமலம்
சரி தோடு இணை செவியாடு உசலாம், கள பூங்கமுகம்,
கொடிநூல் இடை உடையார் அனமாம் ப்ரியர், மாண் புரி மின்...... கொடிமாதர்,
குணமோடு
அமளியின் ஆடினும், ஓங்கிய பூங்கமலம்,
சரண் நூபுர குரல் ஓசையும், ஏந்திடும் ஆண்டலையின்
கொடியோடு, எழுத அரிதாம் வடிவு ஓங்கிய பாங்கையும், மன்......
தகையேனே.
திமிதோதிமி
திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்
தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்
திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகம் என்று......
இயல்பேரி
திசைமூடுக, கடல் ஏழ் பொடியாம் படி, ஓங்கிய வெம்
கரி தேர் பரி அசுரார்கள மாண்டிட, நீண்ட அரவின்
சிரம் மீள்பட, குவடோ துகள் வான்பெற, வாங்கிய வண்......
கதிர்வேலா!
கமழ்
மா இதழ் சடையார், அடியேன் துயர்
தீர்ந்திட, வெண்
தழல் மாபொடி அருள்வோர், அடல் மான் துடி தாங்கிய வண்-
கரர் மாடு அருள் உமையாள் எமை ஈன்றவள் ஈன்று அருள்மென்......
குரவோனே!
கடையேன்
இரு வினை நோய், மலம் மாண்டிட, தீண்டிய ஒண்
சுகமோகினி, வளிநாயகி, பாங்கன் எனாம் பகர், மின்
கலைநூல் உடை முருகா! அழல் ஓங்கிய ஓங்கலின் வண் ......
பெருமாளே.
பதவுரை
திமிதோதிமி
திமிதோதிமி தாங்கண தீங்கண தொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்
திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகம் என்று இயல் பேரி --- திமிதோதிமி
திமிதோதிமி தாங்கண தீங்கண தொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கட தொந்
திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகம் என்று ஒலிக்கின்ற பேரி என்ற வாத்தியம்,
திசை மூடுக கடல் ஏழ்
பொடியாம்படி
--- திசைகள் எல்லாம் மூடும்படியும் கடல்கள் எழும் பொங்கும்படியாகவும்
ஓங்கிய வெங் கரி தேர் பரி அசுரார்கள
மாண்டிட --- போரொலியுடன் வந்த கொடிய யானைகளும், தேர்களும், குதிரைகளும், அசுரர்களும் போர்க்களத்தில் இறந்துபட,
நீண்ட அரவின் சிரம் மீள் பட --- அதனால்
பெரிய ஆதிசேடனுடைய தலை பூபாரத்தினின்றும் மீட்சி பெற,
குவடோ துகள் வான்பெற வாங்கிய வண்
கதிர்வேலா --- மலைகளின் பொடிகள் விண்ணளவு உயர, செலுத்திய வளமும் ஒளியும் உடைய வேலாயுதரே!
கமழ் மா இதழ் சடையார்
---
மணம் வீசும் அழகிய கொன்றை மலரைச் சூடிய சடையை உடையவரும்,
அடியேன் துயர் தீர்ந்திட --- அடியேனுடைய கவலைகள் தீரும் பொருட்டு
வெண் தழல் மாபொடி அருள்வோர் --- வெண்மையானதும்
நெருப்பில் வெந்ததும், பெருமை வாய்ந்ததும்
ஆன திருநீற்றைத் தரித்தவரும்,
அடல் மான் துடி தாங்கிய வண் கரர் --- வலிமை உடைய
மானையும், உடுக்கையையும் ஏந்திய
ஈகையை உடைய திருக்கரத்தினரும் ஆகிய சிவபெருமானுடைய
மாடு அருள் உமையாள் --- பக்கத்தில்
இருந்து அருளும் உமையவளும்,
எமை ஈன்றவள் --- எம்மைப் பெற்றவளும்
ஆகிய பார்வதியம்மை
ஈன்று அருள் மென் குரவோனே --- பெற்றருளிய
அமைதி வாய்ந்த குருநாதரே!
கடையேன் இருவினை நோய் --- கீழ்
மகனாகிய என்னுடைய இருவினைகளும்,
பிறவி
நோயும்,
மலம் மாண்டிட --- மும்மலங்களும்
அழியும்படி
தீண்டிய --- பரிச தீட்சை செய்த,
ஒண் சுக மோகினி --- ஒளி பெற்ற சுகத்தைத் தரும் மோகினியான
வளிநாயகி பாங்கன் எனாம் பகர் --- வள்ளி
பிராட்டியின் கணவன் என்று சொல்லப்படுகின்ற,
மின் கலைநூல் உடை முருகா --- விளங்குகின்ற கலை
நூல்களில் வல்ல முருகக் கடவுளே!
அழல் ஓங்கிய ஒங்கலின்
வண் பெருமாளே
--- நெருப்பு உருவாய் ஓங்கி நின்ற திருவண்ணாமலையில் வளப்பம் பொருந்திய பெருமையில்
சிறந்தவரே!
தமிழ் ஒதிய குயிலோ --- தமிழ்
போன்ற இனிய குரலை உடைய குயிலோ,
மயில், ஆண்டலையாம், புறவம், --- மயிலோ, கோழிதானோ, புறாவோ,
கிளி, காடையின் அணிலோ அளியாம் குரல் வாய்ந்து --- கிளியோ, காடையோ, அன்றிலோ, வண்டோ, என்னும்படி புள்குரல் வாய்ந்து,
அதிசெந் தகும் ஆம் மிடறு ஒலியார் --- மிகுந்த
செம்மையும் தகுதியும் உடைய கண்டத்து ஒலியுடைய மாதர்களின்
இதழாம் சுளை தேன் கனியின் சுவை சேரும் --- வாயிதழானது பலாச்சுளை தேன்
பழம் இவைகளின் சுவை சேர்ந்ததாம்,
தனபாரமும் மலையாம் என
ஓங்கிட
--- கொங்கைப் பாரம் மலைபோல் பருத்து ஓங்க,
மாம்பொறி சிந்திட --- தேமல் பொறி அங்கும் இங்கும் சிதறிட,
வேல்விழி நுதலோ, சிலை வான்பிறை --- அழகிய கண் வேலோ, நெற்றியானது வில்லோ, சிறந்த பிறையோ,
மாந்துளிரின் சரிர --- அவர்களின் உடல்
மாந்துளிரோ,
ஆர்குழல் இருளா --- கூந்தல் இருளோ,
நகை ஓங்கிய வான்கதிரின் சுடர் பாய --–
பற்கள் வானில் உள்ள சிறந்து சூரியனது ஒளியோ,
குமிழ் நாசியின் --- மூக்கு குமிழம் பூவோ,
முகமோ மதியாம் குளிர் சேங்கமலம் --- முகமானது
சந்திரனோ, குளிர்ந்த செந்தாமரையோ,
சரி தோடு இணை செவி ஆடு உசலாம் --- பொருத்தமாய்
உள்ள தோடுகள் விள்ங்கும் இரண்டு காதுகள் அசைகின்ற ஊஞ்சலோ,
களம் பூங்கமுகம் --- கழுத்து அழகிய கமுகோ,
கொடி நூல் இடை --- இடை கொடியோ, நூலோ என்னுமாறு
உடையார்
--- இந்த அங்கங்களை உடையவர்
அனமாம் --- அன்னம் போல்பவர்கள்,
ப்ரியர் --- பிரியம் காட்டுவர்,
மாண் புரி மின் கொடி மாதர் --- பெருமை வாய்ந்த
மின்னல் கொடி போன்றவர்களாகிய பொதுமாதர்களின்
குணமோடு அமளியின்
ஆடினும்
--- குணத்தில் ஈடுபட்டு, படுக்கையில்
அவர்களுடன் விளையாடினாலும்,
ஓங்கிய பூங்கமலஞ் சரண் நூபுர குரல் ஓசையும் --- விளங்குகின்ற
அழகிய தாமரை போன்ற, தேவரீருடைய
திருவடியின் சிலம்பின் இனிய ஓசையையும்,
ஏந்திடும் ஆண்டலையின் கொடியோடு --- நீர் ஏந்தியுள்ள
கோழிக்கொடியையும்,
எழுத அரிதாம் வடிவு ஓங்கிய பாங்கையும்
--- எழுத ஒண்ணாத ஒளி
சிறந்த அழகையும்,
மன் தகையேனே --- மிகுதியாக என்
நினைவில் வருவதை அடியேன் தடுக்கமாட்டேன்.
மறவாமல் நன்கு நினைப்பேன்.
பொழிப்புரை
திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கண தொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட
டீந்தகம் என்று ஒலிக்கின்ற பேரி என்ற வாத்தியம், திசைகள் எல்லாம் மூடும்படியும் கடல்கள்
எழும் பொங்கும்படியாகவும் போரொலியுடன் வந்த கொடிய யானைகளும், தேர்களும், குதிரைகளும், அசுரர்களும் போர்க்களத்தில் இறந்துபட, அதனால் பெரிய ஆதிசேடனுடைய தலை
பூபாரத்தினின்றும் மீட்சி பெற, மலைகளின் பொடிகள்
விண்ணளவு உயர, செலுத்திய வளமும்
ஒளியும் உடைய வேலாயுதரே!
மணம் வீசும் அழகிய கொன்றை மலரைச் சூடிய
சடையை உடையவரும், அடியேனுடைய கவலைகள்
தீரும் பொருட்டு வெண்மையானதும் நெருப்பில் வெந்ததும், பெருமா வாய்ந்ததும் ஆன திருநீற்றைத்
தரித்தவரும், வலிமை உடைய மானையும், உடுக்கையையும் ஏந்திய ஈகையை உடைய
திருக்கரத்தினரும் ஆகிய சிவபெருமானுடைய பக்கத்தில் இருந்து அருளும் உமையவளும், எம்மைப் பெற்றவளும் ஆகிய பார்வதியம்மை
பெற்றருளிய அமைதி வாய்ந்த குருநாதரே!
கீழ் மகனாகிய என்னுடைய இருவினைகளும், பிறவி நோயும், மும்மலங்களும் அழியும்படி பரிச தீட்சை
செய்த, ஒளி பெற்ற சுகத்தைத்
தரும் மோகினியான வள்ளி பிராட்டியின் கணவன் என்று சொல்லப்படுகின்ற, விளங்குகின்ற கலை நூல்களில் வல்ல
முருகக் கடவுளே!
நெருப்பு உருவாய் ஓங்கி நின்ற
திருவண்ணாமலையில் வளப்பம் பொருந்திய பெருமையில் சிறந்தவரே!
தமிழ் போன்ற இனிய குரலை உடைய குயிலோ, மயிலோ, கோழிதானோ, புறாவோ, கிளியோ, காடையோ, அன்றிலோ, வண்டோ, என்னும்படி புள்குரல் வாய்ந்து, மிகுந்த செம்மையும் தகுதியும் உடைய
கண்டத்து ஒலியுடைய மாதர்களின் வாயிதழானது பலாச்சுளை தேன் பழம் இவைகளின் சுவை
சேர்ந்ததாம், கொங்கைப் பாரம் மலைபோல்
பருத்து ஓங்க, அழகிய தேமல் பொறி
அங்கும் இங்கும் சிதறிட, கண் வேலோ, நெற்றியானது வில்லோ, சிறந்த பிறையோ, அவர்களின் உடல் மாந்துளிரோ, கூந்தல் இருளோ, பற்கள் வானில் உள்ள சிறந்து சூரியனது
ஒளியோ, மூக்கு குமிழம் பூவோ, முகமானது சந்திரனோ, குளிர்ந்த செந்தாமரையோ, பொருத்தமாய் உள்ள தோடுகள் விள்ங்கும்
இரண்டு காதுகள் அசைகின்ற ஊஞ்சலோ,
கழுத்து
அழகிய கமுகோ, இடை கொடியோ, நூலோ என்னுமாறு இந்த அங்கங்களை உடையவர்
அன்னம் போல்பவர்கள், பிரியம் காட்டுவர், பெருமை வாய்ந்த மின்னல் கொடி
போன்றவர்களாகிய பொதுமாதர்களின் குணத்தில் ஈடுபட்டு, படுக்கையில் அவர்களுடன் விளையாடினாலும், விளங்குகின்ற அழகிய தாமரை போன்ற, தேவரீருடைய திருவடியின் சிலம்பின் இனிய
ஓசையையும், நீர் ஏந்தியுள்ள
கோழிக்கொடியையும், எழுத ஒண்ணாத ஒளி
சிறந்த அழகையும், மிகுதியாக என்
நினைவில் வருவதை அடியேன் தடுக்கமாட்டேன்.
மறவாமல் நன்கு நினைப்பேன்.
விரிவுரை
இத்
திருப்புகழில் மூன்று அடிகள் விலைமகளிரது அவயவ நலன்களை வியந்து கூறுகின்றன.
தமிழ்
ஒதிய குயிலோ, மயில், ஆண்டலையாம், புறவம், கிளி, காடையின் அணிலோ
அளியாம் குரல் வாய்ந்து அதிசெந் தகும் ஆம் மிடறு ஒலியார் ---
தமிழ்
- இனிமை.பெண்களின் குரல் மிகவும் இனிமையாக பறவைகளின் குரல் போல் இருக்கும். குயில், மயில், கோழி, புறா, கிளி, காடை, அன்றில், வண்டு முதலிய பறவைகளை இங்கு
கூறியுள்ளார். இதே போல் வேறு
திருப்புகழ்ப் பாடல்களிலும் கூறி உள்ளார்...
மயில்
காடை கோகில நற்புற வத்தொடு
குக்குட
ஆரணியப் புள்வ கைக்குரல் கற்று... --- (கோமள) திருப்புகழ்.
அளிகாடை
மயில்குயில் அன்றில் எனும்புளின்
பலகுரல்
செய்திருந்து.... …. --- (வரைவில்)
திருப்புகழ்.
பொருகாடை
குயில் புறா மயில் குக்கில்
சுரும்பினம்
வனபதாயுதம் ஒக்குமெனும்படி
குரல்
விடா.... …. --- (குவளை)
திருப்புகழ்.
குணமோடு
அமளியின் ஆடினும் ஓங்கிய பூங்கமலஞ் சரண்
நூபுர குரல் ஓசையும் ஏந்திடும் ஆண்டலையின் கொடியோடு
எழுத அரிதாம் வடிவு ஓங்கிய பாங்கையும் மன்
தகையேனே
---
இந்தப்
பாடலில் அருணகிரிநாதர் தமக்குள்ள முருக பக்தியின் உறுதியை உரைக்கின்றார்.
முருகா!
பொது மாதர்களின் கலவி இன்பத்தில் அழுந்தினாலும், உனது திருவடியின் சிலம்போசையையும், சேவல் கொடியையும், அழகிய வடிவையும் ஒரு சிறிதும் மறவேன்.
இதனால், அருணகிரிநாதர் இவ்வாறு மாதர் கலவி
நலத்தில் முழுகினார் என்பதன்று.
உலகமயல்
தன்னை மயக்காது என்கின்றார். இதேபோல் வேறு இடங்களிலும் கூறியிருக்கின்றார்.
கண்டுண்ட
சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக் கள்ளை
மொண்டு உண்டு
அயர்கினும் வேல் மறவேன்..... --- கந்தர் அலங்காரம்.
பகடிஇடுகினும்
அமளியில் அவர்தரும் அநுராகப்
பரவை
பயியினும் வசமழியினும் முதல்
அருணை
நகர்மிசை கருணையொடு அருளிய
பரம்
ஒருவச னமுமிரு சரணமு மறவேனே..... --- (மகரமெறி) திருப்புகழ்.
கமழ்
மா இதழ் சடையார் ---
கமழ்
மா இதழ். இதழி என்ற சொல், இதழ் என வந்தது. இதழி - கொன்றை. சிவபெருமானுக்கு உகந்த மலர் கொன்றை. நல்ல நறுமணம் வீசும் அழகிய மலர் கொன்றை.
அடியேன்
துயர் தீர்ந்திட வெண்தழல் மாபொடி அருள்வோர் ---
அருணகிரிநாதர்
ஒருமுறை அருணாசலேசுவரர் ஆலயம் சென்றபோது, சிவபெருமான்
அரச்சகர் வடிவில் வந்து விபூதிப் பிரசாதம் வழங்கி அருளினார்.
எரியில்
இட்டவை யாவும் கருமையாகும் இயல்பு உடையவை.
வெண்மையான துணியை நெருப்பில் இட்டால் கரியாகின்றது. ஆனால் கருமையான சாணத்தை நெருப்பில் இட்டால் அது
வெண்மை ஆகின்றது. அதுபோல் திருநீறிட்டார் உள்ளத்தின் கருமை நீங்கி, சுத்தமாவார் என்பது புலனாகின்றது. ஆதலால், தழலில் வெந்தது, வெண்ணிறமானது திருநீறு. இது முத்தி
தருவது. இத் திருநீற்றை சிவபெருமானே எழுந்தருளி அருணகிரியார்க்குத் தந்து
அருளினார் என்றார். அருணகிரியாருடைய
பெருமை நம்மனோரால் அளக்கற்பாற்றோ?
கடையேன்
இருவினை நோய் மலம் மாண்டிட தீண்டிய ஒண் சுக மோகினி, வளிநாயகி ---
அருணகிரிநாதர்
முன் வள்ளியம்மையார் தோன்றித் திருக்கரத்தால் அருணகிரியாரைத் தொட்டு பரிச தீட்சை
செய்து, அருணகிரியாருடைய
இருவினை, மும்மலம், பிறவி நோய் முதலியவைகளைக் களைந்து அருள்
புரிந்தார்.
இத்
திருப்புகழின் 7, 8 அடிகள்
அருணகிரியாருடைய சரித்திரக் குறிப்புக்களுடன் கூடியவை.
கருத்துரை
அருணை
மேவும் அண்ணலே, மாதர் மயக்கிலும்
உம்மை மறவேன்.
No comments:
Post a Comment