திருவண்ணாமலை - 0566. தருணமணி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தருணமணி (திருவருணை)

திருவருணை முருகா!
மயிலேறி நாளும் வந்து,
இந்தப் பெண்ணின் தனிமையை இனிமையாக்கி அருள்.


தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான


தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
     தழலமளி மீதெ றிக்கு ...... நிலவாலே

தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த
     தறுகண்மத வேள்தொ டுத்த ...... கணையாலே

வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்று
     மருவுமென தாவி சற்று ...... மழியாதே

மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர
     மயிலின்மிசை யேறி நித்தம் ...... வரவேணும்

கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி
     கலவிதொலை யாம றத்தி ...... மணவாளா

கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த
     கடியமல ராத ரித்த ...... கழல்வீரா

அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி
     அருணைநகர் கோபு ரத்தி ...... லுறைவோனே

அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி
     அமரர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தருண மணி வான் நிலத்தில், ருணமணி ஆல விட்ட
     தழல் அமளி மீது எறிக்கும் ...... நிலவாலே,

தலைமை தவிரா மனத்தின் நிலைமை அறியாது எதிர்த்த
     தறுகண் மதவேள் தொடுத்த ...... கணையாலே,

வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச, முற்று
     மருவும் எனது ஆவி சற்றும் ...... அழியாதே,

மகுடம் அணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு சித்ர
     மயிலின்மிசை ஏறி நித்தம் ...... வரவேணும்.

கருணை அகலா விழிச்சி, களபம் அழியா முலைச்சி,
     கலவி தொலையா மறத்தி ...... மணவாளா!

கடு உடை அரா நிரைத்த சடில முடி மீது வைத்த
     கடியமலர் ஆதரித்த ...... கழல்வீரா!

அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும் வெற்றி
     அருணைநகர் கோபுரத்தில் ...... உறைவோனே!

அசுரர் குலம் வேர் அறுத்து, வட அனலை மீது எழுப்பி,
     அமரர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.

    
பதவுரை


      கருணை அகலா விழிச்சி --- கருணை நீங்காத கண்களையுடையவரும்,

     களபம் அழியா முலைச்சி --- சந்தனக் கலவை எப்போதும் விளங்கும் முலைகளை உடையவரும்,

     கலவி தொலையா மறத்தி மணவாளா --- தேவரீரிடம் ஒரு போதும் பிரியாது உறைபவரும் ஆகிய வள்ளி பிராட்டியாரது கணவரே!

      கடு உடை அரா நிரைத்த சடிலமுடி மீது வைத்த --- நஞ்சை உடைய நாகங்களின் வரிசை கொண்ட சிவபெருமானுடைய சடை முடியின் மீது வைத்த

     கடிய மலர் ஆதரித்த கழல் வீரா --- வாசனை மலர்களை ஏற்றுக்கொண்ட வீரக் கழலை அணிந்த வீரமூர்த்தியே!

      அருண மணியால் அமைத்த கிரணமணி சூழும் --- சிவந்த இர்த்தினங்களில் அமைந்துள்ள ஒளி போல் ஒளிக்கிரணங்கள் வீசும் சூரியன் வலம் வருகின்ற

     வெற்றி அருணை நகர் கோபுரத்தில் உறைவோனே --- வெற்றி விளங்குவதான திருவருனையம்பதியின் கோபுரத்தில் உறைபவரே!

      அசுரர் குலம் வேர் அறுத்து --- அசுரர்களுடைய குலத்தை அடியுடன் அறுத்து,

     வட அனலை மீது எழுப்பி --- வடவாக்கினி போன்ற தீயை அவர்கள் மீது செலுத்தி,

     அமரர் சிறை மீள விட்ட பெருமாளே --- தேவர்களைச் சிறையினின்றும் விடுத்துக் காத்தருளிய பெருமையில் சிறந்தவரே!

      தருண மணி வான் நிலத்தில் --- சமயம் பார்த்து ஒளி வீசுகின்ற விண்ணுலகில் நின்று

     அருணமணி ஆல விட்ட --- மாணிக்கம் போலச் செந்நிறத்ததாய் ஒளிர்ந்து,

     தழல் அமளி மீது எறிக்கும் நிலவாலே --- நெருப்பைப் படுக்கை மீது வீசுகின்ற நிலவாலும்,

      தலைமை தவிரா மனத்தின் நிலைமை அறியாது எதிர்த்த --- தலைவனிடத்தினின்றும் நீங்காத என் மனத்தின் நிலைமையை அறியாது எதிர்த்த

     தறுகண் மதவேள் தொடுத்த கணையாலே --- அஞ்சாத செருக்குள்ள மன்மதன் செலுத்திய கணைகளாலும்,

      வருண மட மாதர் கற்ற வசையின்மிகை பேச --- அறியாமை கொண்ட பல குலத்துப் பெண்கள் தெரிந்த பேசும் வசைச் சொற்களே மிகுதியாகப் பேசுவதாலும்,

     முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே --- முழுமையும் உமது விஷயத்தில் ஈடுபட்டு அழுந்தியுள்ள என்னுடைய ஆவி சிறிதேனும் அழியாமல்,

      மகுடம் அணிவார் இசைக்கும் --- மணிமகுடம் புனைந்த தேவர்கள் புகழ்கின்ற

     விகடமது உலாவு சித்ர மயிலின் மிசை ஏறி --- அழகுடன் உலாவுகின்ற அழகிய மயிலின் மீது ஏறி

     நித்தம் வரவேணும் --- நாள்தோறும் வந்தருள வேண்டும்.


பொழிப்புரை


         கருணை நீங்காத கண்களையுடையவரும், சந்தனக் கலவை எப்போதும் விளங்கும் கொங்கைகளை உடையவரும், தேவரீரிடம் ஒரு போதும் பிரியாது உறைபவரும் ஆகிய வள்ளி பிராட்டியாரது கணவரே!

         நஞ்சை உடைய நாகங்களின் வரிசை கொண்ட சிவபெருமானுடைய சடை முடியின் மீது வைத்த வாசனை மலர்களை ஏற்றுக்கொண்ட வீரக் கழலை அணிந்த வீரமூர்த்தியே!

         சிவந்த இரத்தினங்களில் அமைந்துள்ள ஒளி போல் ஒளிக்கிரணங்கள் வீசும் சூரியன் வலம் வருகின்ற வெற்றி விளங்குவதான திருவருணையம்பதியின் கோபுரத்தில் உறைபவரே!

         அசுரர்களுடைய குலத்தை அடியுடன் அறுத்து, வடவாக்கினி போன்ற தீயை அவர்கள் மீது செலுத்தி, தேவர்களைச் சிறையினின்றும் விடுத்துக் காத்தருளிய பெருமையில் சிறந்தவரே!

         சமயம் பார்த்து ஒளி வீசுகின்ற விண்ணுலகில் நின்று மாணிக்கம் போலச் செந்நிறத்ததாய் ஒளிர்ந்து, நெருப்பைப் படுக்கை மீது வீசுகின்ற நிலவாலும், தலைவனிடத்தினின்றும் நீங்காத என் மனத்தின் நிலைமையை அறியாது எதிர்த்த அஞ்சாத செருக்குள்ள மன்மதன் செலுத்திய கணைகளாலும், அறியாமை கொண்ட பல குலத்துப் பெண்கள் தெரிந்த பேசும் வசைச் சொற்களே மிகுதியாகப் பேசுவதாலும், முழுமையும் உமது விஷயத்தில் ஈடுபட்டு அழுந்தியுள்ள என்னுடைய ஆவி சிறிதேனும் அழியாமல், மணிமகுடம் புனைந்த தேவர்கள் புகழ்கின்ற அழகுடன் உலாவுகின்ற அழகிய மயிலின் மீது ஏறி நாள்தோறும் வந்தருள வேண்டும்.


விரிவுரை


இத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது.

தருணமணி வானிலத்தில் அருணமணி …. மீதெறிக்கு நிலவாலே ---

நாயகனைப் பிரிந்து நிற்கும் நாயகிக்கு குளிர்ந்த நிலா நெருப்பைப் போல் துன்புறுத்தும்.

தருணம் - சமயம் பார்த்து சந்திரன் விண்ணில் தோன்றி மாணிக்கம் போல் ஒலித்துக்கொண்டு படுக்கையின் மீது நெருப்பைச் சொரிவான்.

தலைமை தவிரா மனத்தில் ---

தலைவி தலைவனிடத்து என்றும் நீங்காத பற்றுடையவளாய் இருக்கின்றாள். 

எங்கும் முருகனையே காண்கின்றாள்.  எங்கும் முருகன் நாமமே கேட்கின்றது. எல்லாம் முருக மயமாய் விளங்குகின்றது.

நிலைமை அறியாது எதிர்த்த ---

இந்தத் தலைவியின் அதி தீவிர அன்பின் தகைமையை அறியாது மன்மதன் எதிர்க்கின்றான்.

தறுகண் மதவேள் தொடுத்த கணையாலே ---

தறுகண் - அஞ்சாமை.  மதம் - செருக்கு.

அஞ்சாமையும் செருக்கும் உடைய மன்மதன் கரும்பு வில்லை வளைத்து மலர்க்கணைகளைச் சொரிந்து துன்புறுத்துகின்றான்.

வருண மடமாதர் ---

பல குலத்தினராகிய பெண்கள்.  அறியாமையுடன் கூடியவர்கள்.

கற்ற வசையின் மிகை பேச ---

பலகாலும் அப்பெண்கள் இப்படிப்பட்ட காலம் பார்த்துத் தாம் கற்றபடி என் மீதி வசைமொழி கூறுகின்றார்கள்.

முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே ---

முற்றும் - முழுவதுமாக.  மருவும் - ஈடுபட்டு அழுந்தியுள்ள என் உயிரானது சிறிதும் அழியாவண்ணம்.

கருணை அகலா விழிச்சி ---

வள்ளி பிராட்டியாரது விழியன் பெருமையை இது எடுத்து விளக்குகின்றது.  அம்பிகையின் கண்களில் சதா கருணை குடிகொண்டு விளங்கும்.

கடுவுடை அரா நிரைத்த சடிலமுடி மீதுவைத்த கடியமலர் ஆதரித்த கழல் வீரா ---

பாம்பைச் சடையில் அணிந்த சிவபெருமானுடைய முடியில் இருக்கும் மலர் முடிமாலை, அப் பெருமான் முருகப் பெருமானிடம் உபதேசம் கேட்கும் போது திருமுடிய சாய்த்ததனால் முருகன் அடிமீது வீழ்ந்தது.  இது சிவபெருமான் செய்த திருவிளையாடல் ஆகும்.

வடவனலை மீது எழுப்பி ---

1008 அண்டங்களிலிருந்தும் அசுரசேனைகள் ஆரவாரத்துடன் வந்தபோது முருகவேள் சிரித்தார்.  அச் சிரிப்பில் தோன்றிய எரியால் அத்தனையும் சாம்பர் ஆயின.

சங்கரித்த மலைமுற்றும்
சிரித்தெரி கொளுத்தும் கதிர்வேலா --- (சினத்தவர்) திருப்புகழ்.

கருத்துரை

அருணை மேவும் ஐயனே, மயிலின் மீது வந்து என் தனிமையை இனிமையாக்கி அருள் செய்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...