அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தலையை மழித்து
(திருவருணை)
திருவருணை முருகா!
வெளிவேடத்தால் அடியேன் படும் துயர்
தீர்த்து அருள்.
தனன
தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த
தனன தனத்தத் தனந்த ...... தனதான
தலையை
மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து
சடையை வளர்த்துப் புரிந்து ...... புலியாடை
சதிரொடு
வப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து
தவமொரு சத்தத் தறிந்து ...... திருநீறு
கலையை
மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து
கதறு நிலைக்கைக் கமர்ந்த ...... எழிலோடே
கனக
மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து
கவலை யொழித்தற் கிரங்கி ...... அருள்வாயே
அலைகட
லிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து
மமரு லகத்திற் புகுந்து ...... முயரானை
அருளொடு
கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்து
மறிவு ளபத்தர்க் கிரங்கும் ...... இளையோனே
மலையை
வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து
வறிது நகைத்திட் டிருந்த ...... சிவனார்தம்
மதலை
புனத்திற் புகுந்து நரவடி வுற்றுத் திரிந்து
மறம யிலைச்சுற் றிவந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
தலையை
மழித்து, சிவந்த துணியை அரைக்குப் புனைந்து,
சடையை வளர்த்துப் புரிந்து, ...... புலிஆடை
சதிரொடு
உவப்பப் புனைந்து, விரகொடு கற்கப் புகுந்து,
தவம்ஒரு சத்தத்து அறிந்து, ...... திருநீறு
கலையை
மிகுத்திட்டு அணிந்து, கரண வலைக்குள் புகுந்து,
கதறும் நிலைக்கைக்கு அமர்ந்த ...... எழிலோடே,
கனகம்
இயற்றித் திரிந்து, துவளும் எனைச்சற்று அறிந்து,
கவலை ஒழித்தற்கு, இரங்கி ...... அருள்வாயே.
அலை
கடலில் கொக்கு அரிந்தும், அருவரையைப் பொட்டு எறிந்தும்,
அமர் உலகத்தில் புகுந்தும் ...... உயர் ஆனை
அருளொடு
கைப்பற்றி வந்தும், அருணகிரிப் புக்கு இருந்தும்,
அறிவு உள பத்தர்க்கு இரங்கும் ...... இளையோனே!
மலையை
வளைத்துப் பறந்து, மருவு புரத்தைச் சிவந்து,
வறிது நகைத்திட்டு இருந்த ...... சிவனார் தம்
மதலை!
புனத்தில் புகுந்து, நர வடிவு உற்றுத் திரிந்து,
மற மயிலைச் சுற்றி வந்த ...... பெருமாளே.
பதவுரை
அலைகடலில் கொக்கு
அரிந்தும்
--- அலைகள் வீசுகின்ற கடலில் தோன்றிய மாமரத்தை அரிந்தும்,
அருவரையைப் பொட்டு எறிந்தும் --- அரிய
கிரவுஞ்ச மலையைத் தூறாகுமாறு செய்தும்,
அமர் உலகத்தில் புகுந்தும் --- தேவலோகத்தில் சென்று
உயர் ஆனை அருளொடு கைப்பற்றி வந்தும்
--- பெருமையால் உயர்ந்த தெய்வயானை அம்மையை கருணையோடு கரம் பற்றி வந்தும்,
அருணகிரிப் புக்கு இருந்தும் --- திருவண்ணாமலையில் வந்து எழுந்தருளி
இருந்தும்,
அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே
--- அறிவு நிறைந்த அன்பர்களாகிய அடியவர்க்கு இரங்கி அருள் புரிகின்ற இளம்பூரணரே!
மலையை வளைத்து --- மேரு மலையை
வில்லாக வளைத்து,
பறந்து மருவு புரத்தைச் சிவந்து --- பறக்கின்ற
ஆற்றல் உடைய திரிபுரங்களின் மீது கோபித்து,
வறிது நகைத்திட்டு இருந்த சிவனார் தம் மதலை
--- சிறிது சிரித்து இருந்த சிவபெருமானுடைய குழந்தையே!
புனத்தில் புகுந்து நர வடிவு உற்றுத்
திரிந்து
--- தினைப்புனத்தில் சென்று மனித உருவம் கொண்டு திரிந்து,
மற மயிலைச் சுற்றி வந்த பெருமாளே --- வேடர் மயிலாகிய
வள்ளி நாயகியை வளைத்துக் கவர்ந்த பெருமையில் சிறந்தவரே!
தலையை மழித்து --- தலையை மொட்டை
அடித்தும்,
சிவந்த துணியை அரைக்குப் புனைந்து ---
சிவந்த காவித்துணியை இடுப்பில் அணிந்தும்,
சடையை வளர்த்துப் புரிந்து --- சடையாகத்
தலைமயிரை வளர்த்துக் கொண்டும்,
புலி ஆடை சதிரொடு உவப்பப் புனைந்து
--- புலித்தோல் ஆடையை பெருமையாகத் தரித்து மகிழ்ந்தும்,
விரகொடு
கற்கப் புகுந்து --- விருப்பத்துடன் சாமர்த்தியமாகக் கற்க ஆரம்பித்தும்,
தவம் ஒரு சத்தத்து
அறிந்து
--- தவம் என்பதை அந்த சொல்லின் ஓசையால் மட்டும் அறிந்தும்,
திருநீறு கலையை
மிகுத்திட்டு அணிந்து --- திருநீற்றை உடம்பில் மிகுதியாகப்
பூசியும்,
கரண வலைக்குள் புகுந்து --- இந்திரிய
வலைக்குள் அகப்பட்டும்,
கதறும் நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே ---
வேதனைப்படுகின்ற நிலைக்கு உண்டான அழகுடனே,
கனகம் இயற்றித்
திரிந்து துவளும் எனை --- பொன் செய்யும் முயற்சியில்
ஈடுபட்டு, சோர்வடைகின்ற அடியேனை,
சற்று அறிந்து --- சிறிது அறிந்து,
கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே ---
என்னுடைய கவலையை அகற்றுமாறு அடியேன் மீது இரக்கம் கொண்டு அருள் புரிவீராக.
பொழிப்புரை
அலைகள் வீசுகின்ற கடலில் தோன்றிய
மாமரத்தை அரிந்தும், அரிய கிரவுஞ்ச
மலையைத் தூறாகுமாறு செய்தும், தேவலோகத்தில் சென்று பெருமையால்
உயர்ந்த தெய்வயானை அம்மையை கருணையோடு கரம் பற்றி வந்தும், திருவண்ணாமலையில் வந்து எழுந்தருளி
இருந்தும், அறிவு நிறைந்த
அன்பர்களாகிய அடியவர்க்கு இரங்கி அருள் புரிகின்ற இளம்பூரணரே!
மேரு மலையை வில்லாக வளைத்து, பறக்கின்ற ஆற்றல் உடைய திரிபுரங்களின்
மீது கோபித்து, சிறிது சிரித்து
இருந்த சிவபெருமானுடைய குழந்தையே!
தினைப்புனத்தில் சென்று மனித உருவம் கொண்டு
திரிந்து, வேடர் மயிலாகிய வள்ளி
நாயகியை வளைத்துக் கவர்ந்த பெருமையில் சிறந்தவரே!
தலையை மொட்டை அடித்தும், சிவந்த காவித்துணியை இடுப்பில்
அணிந்தும், சடையாகத் தலைமயிரை
வளர்த்துக் கொண்டும், விருப்பத்துடன்
புலித்தோல் ஆடையை பெருமையாகத் தரித்து மகிழ்ந்தும், சாமரத்தியமாகக் கற்க ஆரம்பித்தும், தவம் என்பதை அந்த சொல்லின் ஓசையால்
மட்டும் அறிந்தும், திருநீற்றை உடம்பில்
மிகுதியாகப் பூசியும், இந்திரிய வலைக்குள்
அகப்பட்டும், வேதனைப்படுகின்ற
நிலைக்கு உண்டான அழகுடனே, பொன் செய்யும்
முயற்சியில் ஈடுபட்டு, சோர்வடைகின்ற அடியேனை, சிறிது அறிந்து, என்னுடைய கவலையை அகற்றுமாறு அடியேன்
மீது இரக்கம் கொண்டு அருள் புரிவீராக.
விரிவுரை
தலையை
மழித்து ---
இத்
திருப்புகழில் அருணகிரிநாதர் சீலமும் சிவபத்தியும் இல்லாத வெறும் வேடங்களைக்
கண்டிக்கின்றார்.
தலையை
மொட்டை அடித்துக் கொள்ளுதல் ஒரு சடங்கு.
அதுவே ஞானநெறி ஆகாது. சீலமில்லாத
கோலம் பயன் தராது.
இதனைத்
திருவள்ளுவரும், பின் வருமாறு
கூறுகின்றார்....
மழித்தலும், நீட்டலும் வேண்டா, உலகம்
பழித்தது
ஒழித்து விடின்.
சிவந்த
துணியை அரைக்குப் புனைந்து ---
துறவிகள்
தரிப்பது காவித் துணி.
நமது
உடம்பில் ஒரு விஷப்பூச்சி சீண்டிப் புண் வருமானால் செம்மண்ணை நீரில் குழைத்துப்
போடுவார்கள். அதனால் அவ் விஷப்புண் ஆறும். சுவர் ஓரங்களில் விஷப்பூச்சிகள் சேராவண்ணம்
செம்மண் கோடு போடுவார்கள். துறவிகள் சத்திரத்திலும் இடிந்த திண்ணைகளிலும்
படுப்பதனால், விஷப் பூச்சிகளால்
இடர் உண்டாகாது இருக்க, செம்மண்ணில் நனைத்த உடையை உடுத்துவார்கள். உள்ளம் செம்மை
அடைந்த குறிப்பை கல்லாடை உணர்த்தும்.
இத்தகைய
பெருமை மிகுந்த கல்லாடைய மனத்துறவு பெறாது, வெறும் வேடம் மாத்திரம் காரணமாக
உடுப்பது பொருளாகாது. இதனை
அருணகிரியார்.....
காவி
உடுத்தும் தாழ்சடை வைத்தும்
காடுகள்
புக்கும் திரியாதே
என்று
ஒரு திருப்புகழில் கண்டிக்கின்றார்.
நெஞ்சில்
துறவார், துறந்தார்போல்
வஞ்சித்து
வாழ்வாரின்
வன்கணார் இல்.
என்று
திருவள்ளுவர் வன்மையாகக் கண்டிக்கின்றார்.
சடையை
வளர்த்துப் புரிந்து புலியாடை சதிரொடு உவப்பப் புனைந்து ---
நீளமாகச்
சடையை வளர்த்தும், புலித்தோலை
பெருமிதமாக உடுத்தும் திரிவர்.
காடே
திரிந்துஎன்ன, காற்றைப்
புசித்துஎன்ன, கந்தைசுற்றி
ஓடே
எடுத்துஎன்ன, உள்ளன்புஇலாதவர்
ஒங்கு விண்ணோர்
நாடே
இடைமருதீசர்க்கு மெய்யன்புர் நாரியர்பால்
வீடே
இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டுஇன்பம் மேவுவரே
என்கின்றார்
முற்றத்துறந்த முனிவர் பெருமான் பட்டினத்தார்.
விரகொடு
கற்கப் புகுந்து ---
விரகு
- சாமர்த்தியம். ஏதாவது வித்தை தனைச் சாமர்த்தியமாகக் கற்கத் தொடங்குவார்கள். நீர்மேல் படுத்து பூமிக்குள் புதையுண்டு
இருப்பது. இப்படிச் சில வித்தைகள்.
தவம்
ஒரு சத்தத்து அறிந்து ---
தவம்
என்பதைப் பேர் மாத்திரத்தால் அறிந்திருப்பர்.
அதனை ஒரு சிறிதும் மேற்கொள்வதில்லை.
திருநீறு
கலையை மிகுத்திட்டு அணிந்து ---
விபூதியை
உடம்பில் மிகுதியாகப் பூசிக்கொண்டிருப்பர்.
அதன்மீது அன்பினால் புனைவதில்லை.
கலை - உடம்பு.
நீற்றைப்
புனைந்து என்ன, நீராடப் போய் என்ன, நீ மனமே
மாற்றிப்
பிறக்க வகை அறிந்தாய் இல்லை, மாமறை நூல்
ஏற்றிக்
கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்,
ஆற்றில்
கிடந்தும் துறை அறியாமல் அலைகின்றையே. ---
பட்டினத்தார்.
கரண
வலைக்குள் புகுந்து ---
பொறிபுலன்களின்
வலைப்பட்டு மயங்குவர்.
இந்திரிய
வயம் மயங்கி, இறப்பதற்கே காரணமாய்,
அந்தரமே
திரிந்து போய், அருநரகில் வீழ்வேற்கு,
சிந்தை
தனைத் தெளிவித்து, சிவமாக்கி எனைஆண்ட
அந்தம்இலா
ஆனந்தம், அணிகொள் தில்லைக் கண்டேனே. --- திருவாசகம்.
கனகம்
இயற்றித் திரிந்து ---
தாம்பிரத்தைத்
தங்கம் ஆக்கும் வித்தையாகிய இரசவாதம் செய்து வேதனைப் படுவர். இதற்காகக் காடுகளில் மூலிகை தேடி, முப்பூ தேடித் திரிவர். என்னே பேதைமை.
இரதாதிகளால்
நவலோகம்
இடவே
கரியாம் இதில் ஏது.. --- (வரதாமணி) திருப்புகழ்.
அலைகடலில்
கொக்கு அரிந்து ---
கொக்கு
- மாமரம். சுரபன்மன் கடல் நடுவிலே எஃகு
மாமரமாக நின்றான். கிளைகளை அசைத்து
அண்டங்களை நடுங்க வைத்தான். முருகப்
பெருமான் வேலாயுதத்தை ஏவி மாமரத்தைப் பிளந்து அருளினார்.
அறிவுள
பத்தர்க்கு இரங்கும் இளையோனே ---
சிவஞானம்
உடைய அன்பர்கட்கு முருகன் கருணை புரிகின்றான்.
முதல்
மூன்று அடிகளில் வெற்று வேடத்தைக் கண்டித்தார்.
இங்கு மெய்ஞ்ஞானத்தை வற்புறுத்துகின்றார்.
அன்பினால் அகம் குழையும் அறிஞர்க்கு ஐயன் அருள் பாலிக்கின்றான்.
பறந்து
மருவு புரம்
---
பொன்
வெள்ளி இரும்பு மயமான மூன்று கோட்டைகளுடன் பறந்து வந்து உலகுக்குத் துயர்
விளைவித்தார்கள் முப்புரத்தார்கள்.
சிவபெருமான் சிரித்தார். புரத்தை எரித்தார்.
என்னசெயம்
கொண்டார் இவர் என்றான், முப்புரத்தைச்
சொன்ன
மயமாய்ச் சமைத்த சோழீசர் - பின்னும்
சிரித்துச்
செயம்கொண்டார், சித்தசனைக் கண்ணால்
எரித்துச்
செயம்கொண்டார் இவர்.
கருத்துரை
அருணை
மேவும் ஆறுமுகத்தரசே, அடியேனுடைய கவலையை
ஒழித்து அருள்.
No comments:
Post a Comment