திருவண்ணாமலை - 0568. திருட்டு வாணிப





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

திருட்டு வாணிப (திருவருணை)

திருவருணை முருகா!
பொதுமாதர் காதலால் அழியாமல் காத்து அருள்.


தனத்த தானன தத்தன தத்தன
     தனத்த தானன தத்தன தத்தன
          தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான


திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்
     மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
          செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள் ...... மிகநாணார்

சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக
     ளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள்
          சிரித்து மாநுடர் சித்தமு ருக்கிகள் ...... விழியாலே

வெருட்டி மேல்விழு பப்பர மட்டைகள்
     மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினை
          மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி .....மிகநீறால்

விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள்
     தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனை
          விடுத்து நானொரு மித்திரு பொற்கழல் ...பணிவேனோ

தரித்த தோகண தக்கண செக்கண
     குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
          தகுத்த தீதிகு தக்குகு திக்குகு            ...... எனதாளந்
  
தடக்கை தாளமு மிட்டியல் மத்தள
     மிடக்கை தாளமு மொக்கந டித்தொளி
          தரித்த கூளிகள் தத்திமி தித்தென        ...... கணபூதம்

அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடு
     மிரத்ந மாமுடி யைக்கொடு கக்கழ
          லடக்கை யாடிநி ணத்தையெ டுத்துண   ....அறவேதான்

அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி
     திருக்கை வேல்தனை விட்டரு ளிப்பொரும்
          அருட்கு காவரு ணைப்பதி யுற்றருள்    .....பெருமாளே.


பதம் பிரித்தல்


திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்,
     மதத்த ரூபிகள், துர்ச்சன பொட்டிகள்,
          செகத்து நீலிகள், கெட்ட பரத்தைகள், ...... மிகநாணார்,

சிலைக்கு நேர் புருவப் பெரு நெற்றிகள்,
     எடுப்பு மார்பிகள், எச்சில் உதட்டிகள்,
          சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள், ...... விழியாலே

வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள்,
     மிகுத்த பாவிகள், வட்ட முகத்தினை
          மினுக்கி, ஓலைகள் பித்தளையில் பணி .....மிகநீறால்

விளக்கியே குழை இட்ட புரட்டிகள்,
     தமக்கு மால்கொடு நிற்கும் மருள் தனை
          விடுத்து, நான் ஒருமித்து இரு பொன்கழல் ...... பணிவேனோ!

தரித்த தோகண தக்கண செக்கண
     குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
          தகுத்த தீதிகு தக்குகு திக்குகு   ...... என தாளம்

தடக்கை தாளமும் இட்டு, இயல் மத்தளம்,
     இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி
          தரித்த கூளிகள் தத்திமி தித்து என, ...... கணபூதம்

அருக்கன் ஆர் ஒளியில் ப்ரபை உற்றிடும்,
     இரத்ன மாமுடியைக் கொடு உக, கழல்
          அடக்கை ஆடி, நிணத்தை எடுத்து உண ......அறவேதான்,

அரக்கர் சேனைகள் பட்டு விழ, செறி
     திருக்கை வேல்தனை விட்டு அருளிப் பொரும்
          அருள் குகா! அருணைப் பதி உற்று அருள்    .......பெருமாளே.


பதவுரை


      தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என --- தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என்ற ஒலியுடன்

     தாளம் தடக்கை தாளமும் இட்டு --- தாள பேதங்களை, பெரிய கைகளால் தாளம் இட்டும்,

     இயல் மத்தளம் --- பொருந்திய மத்தளம்,

     இடக்கை --- இடக்கையால் கொட்டும் தோல்கருவி,

     தாளமும் ஒக்க நடித்து --- தாளம் என்ற இவையெல்லாம் ஒலிக்க, அத் தாளங்களுக்கு ஏற்ப நடனம் செய்து,

     ஒளி தரித்த கூளிகள் தத்திமி தித்தென --- ஒளியுடன் கூடிய பேய்கள் தித்திமி தித்தெனவும்,          

      கணபூதம் அருக்கன் ஆர் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்ன மாமுடியைக் கொடு உக --- தக் கூட்டங்கள் நிறைந்த சூரியனுடைய ஒளிபோல ஒளி வீசும் இரத்தினங்கள் பதித்த சிறந்த கிரீடங்களைக் கொண்டு, அவை சிந்தும்படி

     கழல் அடக்கை ஆடி --- பூ கழற்சிக் காய்களைக் கொண்டு விளையாடுதல் போல் வெற்றி பெறக் கையில் வைத்து விளையாடி,

     நிணத்தை எடுத்து உண ---- மாமிசத்தை எடுத்து உண்ணும்படியும்,

      அறவே தான் அரக்கர் சேனைகள் பட்டு விழ --- அடியுடன் அற்றுப் போய் அசுரருடைய சேனைகள் அழிந்து விழவும்,

     செறி திருக்கை வேல்தனை விட்டு அருளி, பொரும் அருள் குகா --- திருக்கரத்தில் கொண்டுள்ள வேலாயுதத்தை செலுத்தியருளிப் போர் செய்த கருணை நிறைந்த குகப் பெருமானே!

      அருணைப் பதி உற்று அருள் பெருமாளே --- திருவண்ணாமலைத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமையில் சிறந்தவரே!

      திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் --- திருட்டு வியாபாரம் செய்வதில் சாமர்த்தியம் கொண்ட துட்டர்கள்,

     மதத்த ரூபிகள் --- ஆணவத்தின் வடிவானவர்கள்,

     துர்ச்சன பொட்டிகள் --- தீயவருடன் பழகும் உள்ளீடு இல்லாதவர்கள்,

     செகத்து நீலிகள் --- இவ்வுலகில் மிகவும் தந்திரவாதிகள்,

     கெட்ட பரத்தைகள் --- கெட்டுப் போன பரத்தைமார்கள்,

     மிக நாணார் --- மிகவும் நாணம் இல்லாதவர்கள்,

      சிலைக்கு நேர் புருவப் பெரு நெற்றிகள் ---  வில்லைப் போன்ற புருவத்தையும், விசாலமான நெற்றியையும் உடையவர்கள்,

     எடுப்பு மார்பிகள் --- எடுப்பாக விளங்கும் மார்பினை உடையவர்கள்,

     எச்சில் உதட்டிகள் --- எச்சில் செய்த உதட்டை உடையவர்கள்,

     சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் --- சிரிப்பதனாலேயே ஆண்மக்களுடைய உள்ளத்தை உருக்குபவர்கள்,

      விழியாலே வெருட்டி மேல்விழு பப்பர மட்டைகள் ---  கண்களால் அஞ்ச வைத்து, மேல் விழுந்து கூத்தாடும் பயனிலிகள்,

     மிகுத்த பாவிகள் --- மிகுந்த பாவம் செய்தவர்கள்,

     வட்ட முகத்தினை மினுக்கி --- வட்டமான முகத்தை மினுக்கி,

     ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால் விளக்கியே --- காதோலைகள், பித்தளையினால் ஆன நகைகளை அதிக சாம்பல் இட்டு விளக்கம் செய்து,

     குழை இட்ட புரட்டிகள் --- குழையாகக் காதில் தரித்து, மாறுபட்ட பேச்சினை உடையவர்கள்,

     தமக்கு --- இத்தகைய பொதுமாதர்களின் மீது

     மால் கொடு நிற்கும் மருள் தனை விடுத்து --- காதல் கொண்டு நிற்கும் மயக்கத்தை விட்டு,

     நான் ஒருமித்து --- அடியேன் ஒருமையான உள்ளத்தோடு,

     இரு பொற்கழல் பணிவேனோ --- உமது அழகிய இரு திருவடிகளை வணங்குவேனோ?


பொழிப்புரை


         தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என்ற ஒலியுடன் தாள பேதங்களை, பெரிய கைகளால் தாளம் இட்டும், பொருந்திய மத்தளம், இடக்கையால் கொட்டும் தோல்கருவி, தாளம் என்ற இவையெல்லாம் ஒலிக்க, அத் தாளங்களுக்கு ஏற்ப நடனம் செய்து, ஒளியுடன் கூடிய பேய்கள் தித்திமி தித்தெனவும், பூதக் கூட்டங்கள் நிறைந்த சூரியனுடைய ஒளிபோல ஒளி வீசும் இரத்தினங்கள் பதித்த சிறந்த கிரீடங்களைக் கொண்டு, அவை சிந்தும்படி கழற்சிக் காய்களைக் கொண்டு விளையாடுதல் போல் வெற்றி பெறக் கையில் வைத்து விளையாடி, மாமிசத்தை எடுத்து உண்ணும்படியும், அடியுடன் அற்றுப் போய் அசுரருடைய சேனைகள் அழிந்து விழவும், திருக்கரத்தில் கொண்டுள்ள வேலாயுதத்தை செலுத்தியருளிப் போர் செய்த கருணை நிறைந்த குகப் பெருமானே!

          திருவண்ணாமலைத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமையில் சிறந்தவரே!

         திருட்டு வியாபாரம் செய்வதில் சாமர்த்தியம் கொண்ட துட்டர்கள், ஆணவத்தின் வடிவானவர்கள், தீயவருடன் பழகும் உள்ளீடு இல்லாதவர்கள், இவ்வுலகில் மிகவும் தந்திரவாதிகள், கெட்டுப் போன பரத்தைமார்கள், மிகவும் நாணம் இல்லாதவர்கள்,
 வில்லைப் போன்ற புருவத்தையும், விசாலமான நெற்றியையும் உடையவர்கள், எடுப்பாக விளங்கும் மார்பினை உடையவர்கள், எச்சில் செய்த உதட்டை உடையவர்கள், சிரிப்பதனாலேயே ஆண்மக்களுடைய உள்ளத்தை உருக்குபவர்கள், கண்களால் அஞ்ச வைத்து, மேல் விழுந்து கூத்தாடும் பயனிலிகள், மிகுந்த பாவம் செய்தவர்கள், வட்டமான முகத்தை மினுக்கி, காதோலைகள், பித்தளையினால் ஆன நகைகளை அதிக சாம்பல் இட்டு விளக்கம் செய்து, குழையாகக் காதில் தரித்து, மாறுபட்ட பேச்சினை உடையவர்கள், இத்தகைய பொதுமாதர்களின் மீது காதல் கொண்டு நிற்கும் மயக்கத்தை விட்டு, அடியேன் ஒருமையான உள்ளத்தோடு, உமது அழகிய இரு திருவடிகளை வணங்குவேனோ?

விரிவுரை


இந்தத் திருப்புகழில் விலைமாதருடைய தன்மைகளை விரித்து அடிகளார் கூறுகின்றார்...

வட்ட முகத்தினை மினுக்கி, ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால் விளக்கியே குழையிட்ட புரட்டிகள் ---

பொதுமாதர்கள் பித்தளையால் செய்த காதணிகள், கைவளைகள், கழுத்துச் சங்கிலிகள் இவைகளைச் சாம்பலினால் மினுக்கித் தரித்துப் புரட்டு வித்தைகளைச் செய்வார்கள்.

முட்டு அற்ற மஞ்சளை எண்ணெயில் கூட்டி, முகம் மினுக்கி,
மெட்டி இட்டு, பொட்டு இட்டு, பித்தளை ஓலை விளக்கி இட்டு,
பட்டப் பகலில் வெளிமயக்கே செயும் பாவையர் மேல்
இட்டத்தை நீ தவிர்ப்பாய், இறைவா! கச்சி ஏகம்பனே.     ---  பட்டினத்தார்.

மால்கொடு நிற்கும் மருள்தனை விடுத்து ---

மால் - மயக்கம். காமத்தால் வரும் மயக்கம். மண்ணாசையும் பொன்னாசையும் மனிதப் பிறவிக்கு மட்டுமே உண்டு. பெண்ணாசை எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து வருவது.  இது மிகவும் வன்மையானது.

ஆதலால், காமனை எரித்த கண்ணில் இருந்து ஞானச்சுடராக வந்த முருகப் பெருமானை வேண்டி இதனை அகற்றவேண்டும் என்கின்றார் அடிகளார்.


ஒருமித்து ---

ஒருமைப்பாடு தான் மனிதனை உய்விக்கும்.  பலப்பல நெறிகளில் சென்று இடர்ப்படக் கூடாது.  ஒருமை நெறி இருமையும் தரும்.

அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கை அலர்மேய
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை
ஒருநெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே.     --- திருஞானசம்பந்தர்.

பத்திப்பேர் வித்துஇட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்
பாலே போகாமே காவாப் பகைஅறும் வகைநினையா
முத்திக்கு ஏவிக் கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய்
மூடா ஊடா நால்அந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப் பரம்பொருள்
சேர்வார் தாமே தான்ஆகச் செயும் அவன் உறையும்இடம்
கத்திட்டோர் சட்டங்கங் கலந்து இலங்கும் நல்பொருள்
காலே ஓவாதார் மேவும் கழுமல வளநகரே.         --- திருஞானசம்பந்தர்.

பைத்த படத்தலை ஆடுஅர வம்பயில்
         கின்ற இடம் பயி லப்புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடம் திகழ்
         கின்ற இடம் திரு வான் அடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
         வைத்த இடம்மழு வாள் உடைய
அத்தன் இடம் அழல் வண்ணன் இடம் கலிக்
         கச்சி அனேகதங் காவதமே.              ---  சுந்தரர்.
 
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்..            ---  திருவருட்பா.


இருபொற்கழல் பணிவேனோ ---

இறைவனுடைய திருவடி ஞானமே ஆகும்.  ஞானக் கழலோனே என்ற திருப்புகழாலும், ஞானமேயான சேவடி உடையாய் என்ற வில்லிபாரதத்தாலும் அறிக. பரஞானம் அபரஞானம் என்ற இரு ஞானங்கள் திருவடிகள்.

சிவன்அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்,
பவம்அதனை  அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்,
உவமைஇலாக் கலைஞானம், உணர்வுஅரிய மெய்ஞ்ஞானம்,
தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில். ---  பெரியபுராணம்.

ஞானமேயாய திருவடியைப் பணிதல் வேண்டும்.  அவ்வாறு பணிந்தால் அஞ்ஞானம் தானே நீங்கும்.  விளக்கினை ஏற்றினால் இருள் தானே நீங்குமாப்போல் எனத் தெளிக.


கணபூதம் அருக்கன் ஆர் ஒளியில் ப்ரபை உற்றிடும்
இரத்ந மாமுடியைக்கொடு உக, கழல் அடக்கை ஆடி ---

போர்க்களத்தில் பூதகணங்கள் அசுரர்களின் மணிமகுடங்களைக் கழற்சிக் காய்களைக் கொண்டு இமைகளில் விளையாடுவது போல் விளையாடினவாம்.

பூதங்கள் ரத்தின முடிகளின் ரத்தினங்களைக் கொண்டு ஒற்றையா, இரட்டையா என்னும் விளையாட்டைப் பந்தயம் போட்டுக்கொண்டு விளையாடின.  பூதவேதாள வகுப்பிலும் அடிகளார் அழகாகக் கூறுகின்றார்....

யுத்தகளத் தினில் ரத்ன மணிக்குவை
ஒட்டரோ யொற்றை இரட்டை அடிப்பன...

கருத்துரை

அருணை மேவும் அண்ணலே, மாதர் மயக்கமற்று உன் மலரடி வணங்க அருள் செய்.




No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...