திருவண்ணாமலை - 0569. துகிலும் ம்ருகமத





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

துகிலும் ம்ருகமத (திருவருணை)

திருவருணை முருகா!
மாதர் மயல் எனும் கடலில் அலையும் எனது உயிர்,
சிவஞானக் கடலில் முழுகிப் பேரின்பம் பெற அருள்.


தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான


துகிலு ம்ருகமத பரிமள அளகமு
     நெகிழ இருதன கிரியசை தரஇடை
          துவள மனிதரு மமரரு முநிவரும் ......   உடனோடித்

தொடர வனமணி மகரமி லகுகுழை
     யடரு வனவிட மிளிர்வன ரதிபதி
          சுருதி மொழிவன கயல்விழி புரள்தர ......     நடுவாக

வகிரு மதிபுரை தநுநுதல் பனிவர
     வனச பதயுக பரிபுர மொலிபட
          மறுகு தொறுமுல வியினிய கலவியை ..விலைகூறும்

வரைவி லரிவையர் தருசுக சலதியி
     லலையு மெனதுயி ரநுதின நெறிதரு
          மவுன சிவசுக சலதியில் முழுகுவது ...... ஒருநாளே

முகிலு மதியமும் ரவியெழு புரவியு
     நெடிய குலைமிட றிடறமு துககன
          முகடு கிழிபட வளர்வன கமுகினம் ...... மிசைவாளை

முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ்
     தடமு முளரிய அகழியு மதிள்களு
          முழுது முடையதொ ரருணையி லுறைதரும் .....இளையோனே

அகிலு மருதமு முகுளித வகுளமு
     மமுத கதலியும் அருணமும் வருடையு
          மபரி மிதமத கரிகளு மரிகளும் ...... உடனேகொண்டு

அருவி யிழிதரு மருவரை தனிலொரு
     சவர வனிதையை முநிதரு புனிதையை
          அவச முடன்மல ரடிதொழு துருகிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


துகிலும், ம்ருகமத பரிமள அளகமும்
     நெகிழ, இருதன கிரி அசைதர, இடை
          துவள, மனிதரும் அமரரும் முநிவரும் ......உடன் ஓடித்

தொடர, வனமணி மகரம் இலகு குழை
     அடருவன, விடம் மிளிர்வன, ரதிபதி
          சுருதி மொழிவன, கயல்விழி புரள்தர, ......     நடுவாக

வகிரும் மதிபுரை தநுநுதல் பனிவர,
     வனச பதயுக பரிபுரம் ஒலிபட,
          மறுகு தொறும் உலவி, இனிய கலவியை ......விலைகூறும்,
  
வரைவு இல்அரிவையர் தரு சுக சலதியில்
     அலையும், எனது உயிர் அநுதினம், நெறிதரு
          மவுன சிவசுக சலதியில் முழுகுவது ...... ஒருநாளே?

முகிலும் மதியமும் ரவி எழு புரவியும்
     நெடிய குலை மிடறு இடற, முது ககன
          முகடு கிழிபட, வளர்வன கமுகு இனம் ......   மிசை, வாளை
  
முடுகு கயல் உகள் வயல்களும், முருகு அவிழ்
     தடமும், முளரிய அகழியும், மதிள்களும்,
          முழுதும் உடையது ஒர்அருணையில் உறைதரும் ...... இளையோனே!

அகிலும் மருதமும் முகுளித வகுளமும்
     அமுத கதலியும் அருணமும் வருடையும்
          அபரிமித மத கரிகளும் அரிகளும் ...... உடனேகொண்டு

அருவி இழிதரும் அருவரை தனில், ஒரு
     சவர வனிதையை, முனிதரு புனிதையை,
          அவசமுடன் மலரு அடிதொழுது உருகிய...பெருமாளே.


பதவுரை

       முகிலும் மதியமும் இரவி எழு புரவியும் --- மேகமும், சந்திரனும், சூரியனுடைய எழு குதிரைகளும்

     நெடிய குலை மிடறு இடற --- தமது நீண்ட குலைகளின் கழுத்துப் பகுதியில் இடறவும்,

     முது ககன முகடு கிழிபட --- பழமையான ஆகாயத்தின் உச்சி கிழிபடவும், 

      வளர்வன கமுகு இனம் மிசை --- வளர்ந்துள்ள பாக்கு மரங்களின் கூட்டத்தின் மேல்

     வாளை முடுகு கயல் உகள் வயல்களும் --- பாயும் வாளை மீன்களும், அவ் வாளை மீன்களால் வெருட்டப்படும் கயல் மீன்களும் உலாவும் கழனிகளும்,

     முருகு அவிழ் தடமும் --- நறுமணம் கமழும் தடாகங்களும்,

     முளரிய அகழியும் --- தாமரை மலர்கள் விளங்குகின்ற அகழிகளும்,

     மதிள்களும் முழுதும் உடையதொர் --- மதில்களும் ஆகிய இவைகள் யாவும் பொருந்திய ஒப்பற்ற

     அருணையில் உறைதரும் இளையோனே ---  திருவண்ணாமலையில் எழுந்தருளி இருக்கும் இளம் பூரணரே!

      அகிலும் மருதமும் --- அகில் மரமும், மருத மரமும்,

     முகுளித வகுளமும் --- மலர்விடும் மகிழ மரமும்,

     அமுத கதலியும் --- அமுதம் போல இனிக்கும் வாழை மரங்கமளும்,

     மலர்விடும் மகிழ மரமும் --- மலர்விடும் மகிழ மரமும்,

     அருணமும் வருடையும் --- செம்மறி ஆடும், மலை ஆடும்,

     அபரிமித மதகரிகளும் அரிகளும் உடனே கொண்டு --- அளவற்ற மதம் பொழியும் யானைகளும், சிங்கங்களும் உடனே இழு பட்டு வரப் பாயும்,

      அருவி இழிதரும் அருவரை தனில் --- அருவிகள் இழிந்து வரும் அருமையான மலையில்

     ஒரு சவர வனிதையை --- ஒப்பற்ற வேடப் பெண்ணை,

     முநிதரு புனிதையை --- சிவமுனிவர் தவத்தால் வந்த புனிதமான மாதினை

     அவசம் உடன் மலர் அடி தொழுது உருகிய பெருமாளே --- காதல் மயக்கத்துடன் வசம் இழந்து அவருடைய மலர்ப்பாதத்தைத் தொழுது உருகிய பெருமையில் சிறந்தவரே!

      துகிலும் ம்ருகமத பரிமள அளகமும் நெகிழ --- ஆடையும், கத்தூரி மணம் கமழ்கின்ற கூந்தலும் நெகிழ்ந்து குலைய,

     இருதன கிரி அசை தர --- இரண்டு கொங்கைகள் ஆகிய மலைகள் அசைய,

     இடை துவள --- இடையானது துவண்டு நிற்க,

     மனிதரும் அமரரும் முநிவரும் உடனே ஓடித் தொடர --–மனிதர்களும், தேவர்களும், முனிவர்களும் கூடவே ஓடி வந்து தொடர,

      வனமணி மகரம் இலகு குழை அடருவன --- அழகு மணிகள் மகர மீன் வடிவில் அமைந்த தோடுகளைத் தாக்குவனவாய்,

     விடம் மிளிர்வன --- நஞ்சு உமிழ்வனவாய்,

      ரதிபதி சுருதி மொழிவன --- இரதியின் கணவனான மன்மதனுடைய நூலை எடுத்துக் கூறுவனவாய் விளங்குகின்ற,

     கயல் விழி புரள் தர --- கயல் மீன்கள் போன்ற கண்கள் புரள,

      நடுவாக வகிரும் மதி புரை தநு நுதல் பனி வர --- நடுவே கீறுபட்ட சந்திரனைப் போல், வில்லைப் போல் வளைந்த நெற்றியில் வியர்வைத் துளிகள் துளிர்க்க,

      வனச பதயுக பரிபுரம் ஒலி பட --- தாமரை போன்ற பாதங்கள் இரண்டிலும் சிலம்புகள் ஒலி செய்ய,

     மறுகு தொறும் உலவி --- தெருக்கள் தோறும் உலாவி,

     இனிய கலவியை விலை கூறும் --- இனிய புணர்ச்சி இன்பத்தை விலை கூறுகின்ற,

       வரைவில் அரிவையர் தரு சுக சலதியில் அலையும் எனது உயிர் --- வரைவு இல்லாத பொதுமாதர்கள் தருகின்ற இன்பக் கடலிலே அலைகின்ற அடியேனுடைய உயிரானது,

     அநுதினம் நெறிதரு மவுன சிவசுக சலதியில் முழுகுவது ஒருநாளே --- நாள்தோறும் நன்னெறியில் செலுத்தும் மவுன நிலையில் விளையும் மங்கலமான பேரின்பக் கடலில் மூழ்கும்படியான வாய்ப்பு உடைய ஒருநாள் உண்டாகுமோ?


பொழிப்புரை


         மேகமும், சந்திரனும், சூரியனுடைய எழு குதிரைகளும் தமது நீண்ட குலைகளின் கழுத்துப் பகுதியில் இடறவும், பழமையான ஆகாயத்தின் உச்சி கிழிபடவும்,  வளர்ந்துள்ள பாக்கு மரங்களின் கூட்டத்தின் மேல் பாயும் வாளை மீன்களும், அவ் வாளை மீன்களால் வெருட்டப்படும் கயல் மீன்களும் உலாவும் கழனிகளும்,  நறுமணம் கமழும் தடாகங்களும், தாமரை மலர்கள் விளங்குகின்ற அகழிகளும், மதில்களும் ஆகிய இவைகள் யாவும் பொருந்திய ஒப்பற்ற திருவண்ணாமலையில் எழுந்தருளி இருக்கும் இளம் பூரணரே!

         அகில் மரமும், மருத மரமும், மலர்விடும் மகிழ மரமும், அமுதம் போல் இனிக்கும் வாழையும், செம்மறி ஆடும், மலை ஆடும், அளவற்ற மதம் பொழியும் யானைகளும், சிங்கங்களும் உடனே இழு பட்டு வரப் பாயும்,

         அருவிகள் இழிந்து வரும் அருமையான மலையில் ஒப்பற்ற வேடப் பெண்ணை, சிவமுனிவர் தவத்தால் வந்து புனிதமான மாதினை காதல் மயக்கத்துடன் வசம் இழந்து அவருடைய மலர்ப்பாதத்தைத் தொழுது உருகிய பெருமையில் சிறந்தவரே!

         ஆடையும், கத்தூரி மணம் கமழ்கின்ற கூந்தலும் நெகிழ்ந்து குலைய, இரண்டு கொங்கைகள் ஆகிய மலைகள் அசைய, இடையானது துவண்டு நிற்க, மனிதர்களும், தேவர்களும், முனிவர்களும் கூடவே ஓடி வந்து தொடர,  அழகு மணிகள் மகர மீன் வடிவில் அமைந்த தோடுகளைத் தாக்குவனவாய், நஞ்சு உமிழ்வனவாய், இரதியின் கணவனான மன்மதனுடைய நூலை எடுத்துக் கூறுவனவாய் விளங்குகின்ற, கயல் மீன்கள் போன்ற கண்கள் புரள, நடுவே கீறுபட்ட சந்திரனைப் போல், வில்லைப் போல் வளைந்த நெற்றியில் வியர்வைத் துளிகள் துளிர்க்க, தாமரை போன்ற பாதங்கள் இரண்டிலும் சிலம்புகள் ஒலி செய்ய, தெருக்கள் தோறும் உலாவி, இனிய புணர்ச்சி இன்பத்தை விலை கூறுகின்ற, வரைவு இல்லாத பொதுமாதர்கள் தருகின்ற இன்பக் கடலிலே அலைகின்ற அடியேனுடைய உயிரானது, நாள்தோறும் நன்னெறியில் செலுத்தும் மவுன நிலையில் விளையும் மங்கலமான பேரின்பக் கடலில் மூழ்கும்படியான வாய்ப்பு உடைய ஒருநாள் உண்டாகுமோ?


விரிவுரை

இத் திருப்புகழ் விலைமகளிரது அவயவ நலங்களை மிகவும் எழில்பட இயம்புகின்றது.

மனிதரும் அமரரும் முநிவருடன் ஓடி தொடர் ---

அழகிய பொதுமாதர்களின் அழகில் மயங்கி மனிதர்களும் தேவர்களும் தவமுனிவர்களும் தம் வசம் இழந்து, அவர்கள் பின்னே தொடர்ந்து ஓடுவார்கள்.

காசிபர் மாயையைக் கண்டு மயங்கிய தன்மையைக் கந்த புராணத்தில் காண்க. மாதர் மயக்கின் வலிமையைக் கூறும் இந்தத் தனிச் செய்யுளையும் காண்க.

நடந்தாள் ஒரு கன்னி மாரார கேசரி நாட்டில், கொங்கைக்
குடம்தான் அசைய ஒயிலாய், அதுகண்டு கொற்றவர்பின்
தொடர்ந்தார், சந்யாசியர் யோகம் விட்டார், சுத்த சைவரெல்லாம்
மடந்தான் அடைத்து சிவபூஜையும் கட்டி வைத்தனரே.

வரைவில் அரிவையர் ---

தம் பால் வருபவர் ஆவார் ஆகாதவர், மேலோர் கீழோர் என்ற ஒரு வரைவு இல்லாதவர் வரைவில் மகளிர்.

திருவள்ளுவர் வரைவில் மகளிர் என்றே ஒரு அதிகாரம் வகுத்துள்ளார்.

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரை இலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.                 ---  திருக்குறள்.


மவுன சிவசுக சலதியில் முழுகுவது ---

சலதி - கடல். மனம் அற்ற சமாதி நிலை. அலை ஓய்ந்த கடல் போல் விளங்கும். அதில் இன்பம் விளையும். அதில் உண்டாகும் இன்பம் இத் தன்மைத்து என்று உரையால் உரைக்க ஒண்ணாது.

போக்கும் வரவும், இரவும் பகலும், புறம்பும் உள்ளும்,
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாது ஒன்று, வந்து வந்து
தாக்கும், மனோலயம் தானே தரும், எனைத் தன் வசத்தே
ஆக்கும், அறுமுகவா, சொல்லொணாது இந்த ஆனந்தமே. ---  கந்தர் அலங்காரம்.

முகிலும் மதியமும் மிசை வாளை ---

இந்த அடி உயர்வு நவிற்சி அணி. திருவண்ணாமலையின் அருகில் பாக்கு மரங்கள் வானளாவி வளர்ந்து ஓங்கி உள்ளன.  அவற்றின் குலைகளில் மேகமும், சந்திரனும், சூரியனுடைய எழு குதிரைகளும் இடறித் தடைபடுகின்றன.  அத்துணை உயர்ந்த பாக்கு மரங்களின் மீது வாளை மீன்கள் தாவிக் குதிக்கின்றன.

முடுகு கயலுகள் …......  இளையோனே -

இந்த ஆறாவது அடியில் திருவண்ணாமலையின் சிறப்பு கூறப்படுகின்றது.

திருவண்ணாமலையில் கயல் மீன்கள் நிறைந்த வயல்களும், மணம் வீசும் வாவிகளும், தாமரை பூத்த அகழிகளும், திருமதில்களும் நிறைந்திருக்கின்றன.

அகிலு …......  உடனே கொண்டு அருவி இழிதரு -

இந்த ஏழாவது அடி வள்ளிமலையின் அருவியின் திறத்தை இனிது கூறுகின்றது.

வள்ளிமலையில் பாயும் அருவி, அகில் மரம், மருதமரம், மகிழமரம், வாழைமரம், செம்மறியாடு, மலையாடு, யானை, சிங்கம் முதலியவற்றை உருட்டிக்கொண்டு இழிகின்றது.

இந்த அடி அடியில் வரும் திருமுருகாற்றுப்படையை ஒத்து இருக்கின்றது....

         வேறு பஃறுகிலின் நுடங்கி, அகில் சுமந்து,
         ஆரம் முழு முதல் உருட்டி, வேரல்
         பூவுடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு,
         விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த
         தண்கமழ் அலர்இறால் சிதைய, நன்பல
        
        ஆசினி முதுசுளை கலாவ, மீமிசை
         நாக நறுமலர் உதிர, யூகமொடு
         மாமுக முசுக்கலை பனிப்ப, பூநுதல்
         இரும்பிடி குளிர்ப்ப வீசி,  பெரும்களிற்று
         முத்து உடை வான்கோடு தழீஇத் தத்துற்று,

         நன்பொன் மணிநிறம் கிளர, பொன்கொழியா,
         வாழை முழுமுதல் துமிய, தாழை
         இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கி,
         கறிக்கொடிக் கரும்துணர் சாய, பொறிப்புற
         மடநடை மஞ்ஞை  பலவுடன் வெரீஇ,

         கோழி வயப்பெடை இரிய, கேழலோடு
         இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
         குரூஉமயிர் யாக்கை குடாஅடி உளியம்,
         பெரும்கடல் விடர்அளைச் செறிய, கரும்கோட்டு
         ஆமா நல்ஏறு சிலைப்ப, சேண்நின்று
        
         இழும்என இழிதரும் அருவி,
         பழமுதிர் சோலை மலை கிழவோனே.

முனி தரு புனிதை ---

திருமால் சிவமுனிவராகத் தோன்றி வள்ளமலையில் மாதவம் செய்து கொண்டிருந்தார். மகாலட்சுமி மானாகத் தோன்றினாள். அம் மானைத் சிவமுனிவர் விரும்பிப் பார்த்தார். அங்கு தவம் செய்து கொண்டிருந்த திருமாலின் புதல்வி, மான் வயிற்றில் புகுந்து கருவாகிப் பிறந்தாள்.

மாதவனோர் மாதவனாய் மாதவம் செய்திடலும்
     வனமானாய் வந்தெதிர் மலர் மானை புணரப்
பூதல மங்கையர் உருவாய் அவதரித்து வள்ளிப்
     பொருப்புறையும் பொருப்பர் மணை விருப்பமுடன் வளர்ந்து
தீதகலும் திணை காத்து வேங்கை உருவெடுத்த
     செவ்வேளை அவ்வேளை சேர்ந்திருக்கை கோளும்
காதலுடன் புரிந்திறைவன் வளர் பாகத்தருளும்
     கன்னி எனும் வள்ளி கழல் உன்னி வழுத்திடுவாம்.

இந்த வரலாற்றை அருணகிரிநாதர் இந்த இடத்தில் மிக அழகாகவும் சுருக்கமாகவும், உருக்கமாகவும், "முநி தரு புனிதை" என்று கூறியருளினார்.

 
கருத்துரை

         அருணை உறை அப்பனே, மவுன சிவசுகக் கடலில் மூழ்கி அடியேன் உய்ய அருள் செய்.
        

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...