திரு இராமனதீச்சரம்





திரு இராமனதீச்சரம்
(திருக்கண்ணபுரம்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புகலூரில் இருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, திருக்கண்ணபுரம் சென்று கிழக்கே சென்றால் இத்தலத்தை அடையலாம். திருப்புகலூரில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், திருச்செங்காட்டங்குடி தலத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது.

     நன்னிலம், திருப்புகலூர் முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன


இறைவர்                   : இராமனதீசுவரர்.

இறைவியார்               : சூளிகாம்பாள், சரிவார்குழலி.

தல மரம்                   : சண்பகம் (தற்போது மகிழமரம் தான் உள்ளது)

தீர்த்தம்                    : இராம தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - சங்கொளிர் முன்கையர்.


ஆலய முகவரி
அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில்
திருக்கண்ணபுரம்
திருக்கண்ணபுரம் அஞ்சல்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 609704

         கிழக்கு நோக்கிய இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. ஆலயத்திற்கு எதிரில் இராமதீர்த்தம் உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலீபீடத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம். இங்கு கொடிமரம் இல்லை. அதன்பின் விசாலமான முற்றவெளி உள்ளது. வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சரிவார்குழலி சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். வெளிச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, காலபைரவர், சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. மூலவர் கருவறை உள்ள மண்டபத்தின் நுழைவாயில் மேல் ரிஷபத்தின் மீதமர்ந்த சிவன், பார்வதி சுதைச் சிற்பத்தைக் காணலாம். உள்ளே கருவறையிலுள்ள மூலவர் சிவலிங்கத் திருமேனி பெரியது. உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். தீபாராதனையின் போது மூலவர் லிங்கத் திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது சிறப்பு. கோஷ்டமூர்த்தங்களாக, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதியும் அதற்குரிய இடத்தில் அமைந்துள்ளது.

         ராமர், சீதையை மீட்க இலங்கை சென்ற போது, போரில் ராவணன் உட்பட பல வீரர்களை வீழ்த்தினார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த அவர், அயோத்தி திரும்பும் வழியில் பல தலங்களில் சிவ வழிபாடு செய்தார். அவர் செண்பக வனமான இவ்வழியே வரும்போது, ஒரு மரத்தின் அடியில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்ததைக் கண்டார். சிவனுக்கு பூஜை செய்ய ஆயத்தமானார். நந்தி தேவர், ராமரை மானிடர் என நினைத்து சிவனை நெருங்கவிடாமல் தடுத்தார். அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்து காட்சி தந்ததாகவும், பின்பு இராமர் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. ராமர் சிவ வழிபாடு செய்து பின்பு அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. இராமரால் வழிபடப்பட்டவர் என்பதால் சுவாமி "ராமநாதசுவாமி" என்று பெயர் பெற்றார்.

         இராமர் கோயில்களில் அவரது திருநட்சத்திரமான புனர்பூசத்தன்று விசேஷ பூஜை நடக்கும். இராமர் வழிபட்ட தலமென்பதால் இங்கு சிவனுக்கு அந்நாளில் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. தற்போதும் சாயரட்சை பூஜையை இராமரே செய்வதாக ஐதீகம். இவ்வேளையில் சுவாமி தரிசனம் செய்வது விசேஷமானதாக கருதப்படுகிறது. இங்குள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ மூர்த்தி) மிக விசேஷமானவர். இச்சிலை ராமர் சிவனை வழிபடுவதற்காக அம்பிகை நந்தியை இழுத்த அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது.

         இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான அருள்மிகு சௌரிராசப் பெருமாள் கோயில் உள்ளது. இராமநாதேசுவரர் கோவில் இராமநாதசுவாமி தரிசனத்திற்குப் பிறகு இந்த வைணவத்  திருத்தலத்தையும் வழிபடலாம்.

         திருக்கண்ணபுரத்திற்கு பக்கத்தில் திருமருகல், திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர் முதலிய பாடல் பெற்ற திருமுறைத் திருத்தலங்களும் உள்ளன.

         காலை 8-30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மித்தை உற்ற காமனது ஈசம் கெடவே, கண் பார்த்து அருள் செய்த இராமனது ஈசம் பெறு நிராமயனே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 488
சீரின் மலிந்த சிறப்பின் மேவும்
         சிறுத்தொண்டர் நண்புடன் செல்ல நல்ல
வேரி நறுந்தொங் கல்மற்று அவரும்
         விடைஅரு ளப்பெற்று மீண்ட பின்பு
நீரின் மலிந்த சடையர் மேவி
         நிகழும் பதிகள் பலப ணிந்து
பாரின் மலிந்து நிறைந்த செல்வம்
         பயில்புக லூர்நகர்ப் பாங்கு அணைந்தார்.

         பொழிப்புரை : சீர்மை மிகுந்த சிறப்புடைய சிறுத்தொண்டர் நட்பின் பிணிப்பால் தம்மோடு வர, நல்ல தேன் பொருந்திய மணம் உடைய மாலையைச் சூடிய அந்நாயனாரும் விடைகொடுக்கப் பெற்றுத் தம் நகருக்குத் திரும்பிய பின்பு, கங்கை பொருந்திய சடையை யுடைய இறைவர் எழுந்தருளியிருக்கும் பல பதிகளையும் பணிந்து சென்று பிள்ளையார், உலகில் பெருகி நிறைந்த செல்வம் மிக்க புகலூர் நகரின் அருகணைந்தார்.

         `விடையருளப் பெற்று' என்றார், சிறுத்தொண்டருக்கு உடன் வரும் விருப்பே மீதூர்ந்து இருந்தமை தோன்ற.

     பதிகள் பல என்பன, திருஇராமனதீச்சரம், திருப்பனையூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இராமனதீச்சரப் பதிகம் ஒன்றேயுள்ளது. அது `சங்கொளிர்' (தி.1 ப.115) எனத் தொடங்கும் வியாழக்குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.115 திருஇராமனதீச்சரம்        பண் - வியாழக்குறிஞ்சி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சங்குஒளிர் முன்கையர், தம்இடையே
அங்குஇடு பலிகொளும் அவன்,கோபப்
பொங்குஅரவு ஆடலோன், புவனியோங்க
எங்கும் மன்இராமன தீச்சரமே.

         பொழிப்புரை :சங்கு வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய முனி பன்னியர் வாழும் வீதிகளிடையே சென்று அங்கு அவர்கள் இடும் பலியை மகிழ்வோடு கொள்பவனும், சினம் பொங்கும் அரவைப் பிடித்து ஆட்டுபவனும், உலக மக்கள் உயர்வுபெற எங்கும் நிறைந்திருப்பவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.


பாடல் எண் : 2
சந்தநன் மலர்அணி தாழ்சடையன்,
தந்தம தத்தவன் தாதையோதான்,
அந்தம்இல் பாடலோன், அழகன், நல்ல
எந்தவன் இராமன தீச்சரமே.

         பொழிப்புரை :அழகிய நல்ல மலர்களை அணிந்து தாழ்ந்து தொங்கும் சடையினை உடையவனும், தந்தத்தையும் மதத்தையும் உடைய விநாயகப் பெருமானின் தந்தையும், முடிவற்ற இசைப்பாடல்களைப் பாடுபவனும், அழகனும், எங்கள் தவப்பேறாய் விளங்கும் நல்லவனுமாய சிவபிரானது தலம், இராமனதீச்சரம்.


பாடல் எண் : 3
தழைமயில் ஏறவன் தாதையோதான்,
மழைபொழி சடையவன், மன்னுகாதில்
குழையது விலங்கிய கோலமார்பின்
இழையவன் இராமன தீச்சரமே.

         பொழிப்புரை :தழைத்த பீலியோடு கூடிய மயில்மீது ஏறிவரும் முருகனது தந்தையும். உலகிற்கு நீர்வளந்தரும் கங்கை பாயும் சடையினை உடையவனும், காதில் நிலைபெற்று விளங்கும் குழையை அணிந்தவனும், அழகிய மார்பில் குறுக்காக முப்புரிநூல் அணிந்தவனு மாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.


பாடல் எண் : 4
சத்தியுள் ஆதிஓர் தையல்பங்கன்,
முத்தி அதுஆகிய மூர்த்தியோதான்,
அத்திய கையினில் அழகுசூலம்
வைத்தவன் இராமன தீச்சரமே.

         பொழிப்புரை :சத்திகளில் முதல்வியாக விளங்கும் உமையம் மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், உயிர்கட்கு முத்திப்பேறாக விளங்கும் கடவுளும், தீயேந்திய கையில் அழகிய சூலத்தைத் தாங்கியவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.


பாடல் எண் : 5
தாழ்ந்தகு ழற்சடை முடியதன்மேல்
தோய்ந்த இளம்பிறை துலங்குசென்னிப்
பாய்ந்தகங் கையொடு படஅரவம்
ஏய்ந்தவன் இராமன தீச்சரமே.

         பொழிப்புரை :தலையில், தாழ்ந்த கூந்தலால் இயன்ற சடை முடியின்மேல், அழகு தோய்ந்த இளம்பிறை, பாய்ந்துவரும் கங்கை, படம் பொருந்திய அரவம் ஆகியவற்றைச் சூடிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.


பாடல் எண் : 6
சரிகுழல் இலங்கிய தையல்காணும்
பெரியவன், காளிதன் பெரியகூத்தை
அரியவன், ஆடலோன் அங்கைஏந்தும்
எரியவன் இராமன தீச்சரமே.

         பொழிப்புரை :பிடரியின்மேல் விளங்கும் சுருண்ட கூந்தலினளாகிய உமையம்மை அருகிலிருந்து காணும் பெரியவனும், காளியின் பெரிய கூத்தோடு போட்டியிட்டு அவளால் அறிதற்கு அரியவனாய், நடனமாடுபவனும், அழகிய கையில் எரி ஏந்திவிளங்குபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.


பாடல் எண் : 7
மாறிலா மாதுஒரு பங்கன்,மேனி
நீறுஅது ஆடலோன், நீள்சடைமேல்
ஆறுஅது சூடுவான், அழகன்,விடை
ஏறவன் இராமன தீச்சரமே.

         பொழிப்புரை :தனக்கு ஒப்பாரில்லாத அழகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், திருமேனியில் திருநீற்றை அணிந்தவனும், நீண்ட சடைமுடியின்மேல் கங்கையைச் சூடியவனும் அழகனும், விடையின்மேல் ஏறிவருபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.


பாடல் எண் : 8
தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன்,
படஅரவு ஆட்டிய படர்சடையன்,
நடம்அது ஆடலான் நான்மறைக்கும்
இடம்அவன் இராமன தீச்சரமே.

         பொழிப்புரை :பெரிய கயிலை மலையால் இராவணனின் தலையை நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பை ஆட்டி மகிழ்பவனும், விரிந்த சடைமுடியை உடையவனும், நடனம் புரிபவனும், நான்கு வேதங்கட்கும் இடமாக விளங்குபவனும் ஆகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.


பாடல் எண் : 9
தனமணி தையல்தன் பாகன்தன்னை,
அனம்அணி அயஅன்ணி முடியும்காணான்,
பனமணி அரவுஆரி பாதம் காணான்,
இனமணி இராமன தீச்சரமே.

         பொழிப்புரை :அழகிய தனபாரங்களையுடைய உமையம்மையின் கேள்வனும், அன்னமாகத் தன்னை மாற்றிக் கொண்டு, அழகிய முடியைக் காணாது திரும்பிய நான்முகன், திருவடியைக் காணாத, படங்களில் மணிகளையுடைய ஆதிசேடனாகிய அணையில் துயிலும் திருமால் ஆகியோர் வணங்க அருள் புரிந்தவனுமாகிய சிவபிரானது தலம் பல்வகையான மணிக்குவைகளையுடைய இராமனதீச்சரம் ஆகும்.


பாடல் எண் : 10
தறிபோலாம் சமணர்சாக் கியர்சொற்கொளேல்,
அறிவுஓரா நாமம் அறிந்துஉரைமின்,
மறிகையோன் தன்முடி மணியார்கங்கை
எறிபவன் இராமன தீச்சரமே.

         பொழிப்புரை :மரத்தால் இயன்ற தடிபோன்ற அறிவற்ற சமண புத்தருடைய சொற்களைக் கேளாதீர். மெய்ஞ்ஞானியர்கள் வாயினால் இறைவன் திருப்பெயரை அறிந்து சொல்வீர்களாக. அப்பெருமான் மான் இளங்கன்றை ஏந்திய கையனாய்த் தனது முடியில், மணிகளோடு கூடிய கங்கை நதி அலை, மோதுபவனாய், இராமனதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான். சென்று வழிபடுக.


பாடல் எண் : 11
தேன்மலர்க் கொன்றையோன்
* * * * * * * *
         பொழிப்புரை :தேன் பொருந்திய கொன்றை மாலையைச் சூடியவன் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 16

  "நாயாய்ப் பிறந்திடின் நல்வேட்டை ஆடி நயம்புரியும், தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய், காயா மரமும், வறளாம் குளமும், கல...