திருப் பயற்றூர்
(திருப்பயத்தங்குடி)
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
மக்கள் திருப்பயத்தங்குடி என்று வழங்குகின்றனர்.
திருவாரூரிலிருந்து
கங்களாஞ்சேரி சென்று அங்கிருந்து வலப்பக்கம் பிரியும் நாகூர்ச் சாலையில் சென்றால்
மேலப்பூதனூர் கிராமம் வரும். அங்கிருந்து திருமருகல் செல்லும் சாலையில் சென்றால்
இத்திருத்தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது
இறைவர்
: முக்தபுரீசர், திருப்பயற்றுநாதர்.
இறைவியார்
: நேத்ராம்பிகை, காவியங்கண்ணி.
தல
மரம் : சிலந்தி மரம்
(தட்சிணாமூர்த்தி சந்நிதியில் உள்ளது.)
தீர்த்தம் : கருணா தீர்த்தம் ( பிரம
தீர்த்தம் )
தேவாரப்
பாடல்கள் : அப்பர் - உரித்திட்டார்
ஆனை.
ஆலய
முகவரி
அருள்மிகு
திருப்பயற்றுநாதர் திருக்கோயில்
திருப்பயத்தங்குடி
திருப்பயத்தங்குடி
அஞ்சல்
வழி
கங்களாஞ்சேரி
நாகப்பட்டிணம்
மாவட்டம்
PIN - 610101
முன்னொரு காலத்தில் சிவபெருமானிடத்தே
பேரன்பு கொண்ட வணிகர் ஒருவர் மிளகு வாணிகம் செய்து வந்தார். அவர் ஒருமுறை கடல்
மூலம் சரக்கை ஏற்றுமதி செய்ய கடல்துறை நோக்கி இத்தலத்தின்வழியே செல்லும்போது
சுங்கச்சாவடி அண்மையில் இருக்கக்கண்டார். அந்நாளில் மிளகுக்கு சுங்கவரி
விதிக்கப்படும் வழக்கம் இருந்தது. ஆனால் பயறு மூட்டைகளுக்கு சுங்கவரி இல்லை.
வணிகர் இத்தலத்தின் பெருமானையடைந்து, பயற்றுக்கு
வரியில்லையாதலால் தம்முடைய மிளகையெல்லாம் பயறாக மாற்றும்படி வேண்டினார். சிவ
பக்தராகிய இவர் இத்தல சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டபடி மறுநாள் காலை வணிகர்
எழுந்து பார்த்த போது மிளகு மூட்டைகள் எல்லாம் பயறு மூட்டைகளாக மாறி இருப்பதைக்
கண்டார். மகிழந்த வணிகர் நாகப்பட்டினம் நோக்கி பயணத்தை துவக்கினார். சுங்கச்சாவடி
வந்தது. சுங்க அதிகாரிகள் அனைத்து மூட்டைகளையும் சோதனை செய்தனர். பயறு மூட்டைகளாக
இருப்பதை அறிந்து வரி விதிக்காமல் அனுப்பி விட்டனர். சுங்கச்சாவடி கடந்த பின் பயறு
மூட்டைகள் அனைத்தும் மிளகு மூட்டைகளாக மாறிவிட்டன. வணிகர் மிக்க இலாபம் பெற்றார்.
வணிகர் மிளகு விற்ற பணத்தில் கிடைத்த லாபத்தையெல்லாம் சிவன் சேவைக்கு செலவு செய்து
இறைவனை அடைந்தார். இதனால் இத்தலம் "திருப்பயற்றூர்" எனவும், இறைவன் "திருப்பயற்றுநாதர்"
எனவும் அழைக்கப்படுகிறார். மேற்கண்ட செவிவழிக் கதையால் இத்தலத்தின் பெயரும்
சிறப்பும் விளங்குகின்றது.
இத்தல கல்வெட்டு
ஒன்றின்படி திருப்பயற்றூரில் வாழ்ந்து வந்த பஞ்சநதவாணன் என்பவன் கண் நோயால்
வருந்திய போது, அவன் கண்
நன்றாகும்படி இத்தல இறைவனை வேண்டிக் கொண்டு, அவன் சாதியார் அறுநூறு காசுக்குத்
திருச்சிற்றம்பலமுடையானுக்குச் சொந்தமாயுள்ள கிடங்கு நிலம் அரைமா வாங்கிச்
சிவபெருமானுக்கு உரிய நிலமாக விட்டுள்ளனர். ஆகையால் யாருக்கேனும் கண் நோய்
இருப்பின், இத்தலத்தினை அடைந்து
கருணா தீர்த்தத்தில் மூழ்கி நேத்திராம்பிகை என வழங்கப்பெறும் காவியங்கண்ணியையும், திருப்பயற்றுநாதரையும் வழிபட்டால்
கண்நோய் நீங்கப் பெறுவர் என்ற உண்மையும் புலனாகின்றது.
கிழக்கு நோக்கி
அமைந்துள்ளது. கிழக்கு வாயில் வழியே உட்சென்றால் நந்தி, பலிபீடம் இருப்பதைக் காணலாம். வெளிப்
பிரகாரத்தில் தண்டபாணி சந்நிதி வடபுறம் தனியே உள்ளது. வெளிச்சுற்றுப் பிரகாரத்தில்
சித்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவ மகரிஷி, வள்ளி தெய்வானையுடன் முருகர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மகாலட்சுமி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், வீரமாகாளி, பைரவர், சூரியன், சந்திரன், சோமாஸ்கந்தர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன.
இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். கார்த்திகைச் சோமவார நாட்களில் சுவாமிக்கு விசேஷ ஆராதனைகள்
செய்யப்படுகின்றன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் வலக்கை
அபயமும், இடக்கையில் ருத்ராக்ஷ
மாலை, மற்றொரு வலக்கையில்
தாமரை, இடக்கையைத் தொடையில்
ஊன்றியவாறு, நான்கு கரங்களுடன்
காட்சி தருகின்றாள். அம்பாளுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விசேஷமாக அபிஷேக
ஆராதனைகள் நடைபெறுகின்றன.
பெரிய மண்டபத்தில் உள்ள சோமாஸ்கந்தர்
சந்நிதி மிகவும் சிறப்பாகவுள்ளது. பைரவ மகரிஷி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளார்.
இவருக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது. இங்கு துர்க்கை கிடையாது. வீரமாகாளி தனி
சன்னதியில் அருள்பாலிக்கிறாள். கண்திருஷ்டி மற்றும் தீய சக்திகளால்
பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபாடு செய்தால் பாதிப்பு விலகும் என்பது தொன்று தொட்டு
வரும் நம்பிக்கை.
காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "தோம் உள் மயல் தூர்
பறித்த மனத்துள் விளைந்த பயற்றூர் திசை அம்பரனே" என்று போற்றி உள்ளார்.
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 291
சோலை
மறைக்காட்டு அமர்ந்துஅருளும்
சோதி அருள்பெற்று, அகன்றுபோய்,
வேலை
விடம்உண் டவர்வீழி
மிழலை மீண்டும்
செல்வன் என,
ஞாலம்
நிகழ்ந்த நாகைக்கா
ரோணம் பிறவும்
தாம்பணிந்து,
சாலும்
மொழிவண் தமிழ்பாடித்
தலைவர் மிழலை
வந்துஅடைந்தார்.
பொழிப்புரை : சோலைகள் சூழ்ந்த
திருமறைக்காட்டில் விரும்பி வீற்றிருக்கும் பேரொளிப் பிழம்பாய சிவபெருமானின்
திருவருளைப் பெற்று, அங்கிருந்து நீங்கிச்
சென்று, கடலில் தோன்றிய
நஞ்சினை உண்ட சிவபெருமானின் திருவீழிமிழலையை மீண்டும் அடைவேன் என்று எண்ணிய
நிலையில், உலகில் விளங்கிய
திருநாகைக் காரோணத்தையும், அப்பதி முதலாய பிற
பதிகளையும் வணங்கிச் சால்புடைய மொழிகளால் ஆய திருப்பதிகங்களைப் பாடித் தலைவரின்
திருவீழிமிழலையை அடைந்தார்.
திருநாகைக்காரோணத்தில் அருளிய பதிகங்கள்:
1.
`மனைவிதாய்` (தி.4 ப.71) - திருநேரிசை.
2. `வடிவுடை மாமலை` (தி.4 ப.103) - திருவிருத்தம்.
3. `பாணத்தான்` (தி.5 ப.83) - திருக்குறுந்தொகை.
4. `பாரார் பரவும்` (தி.6 ப.22) - திருத்தாண்டகம்.
பிற பதிகளாவன:
1. திருப்பயற்றூர் - `உரித்திட்டார்` (தி.4 ப.32) - திருநேரிசை.
2. திருக்கொண்டீச்சரம்:
`வரைகிலேன்` (தி.4 ப.67) - திருநேரிசை.
`கண்ட
பேச்சினில்` (தி.5 ப.70) – திருக்குறுந்தொகை..
4. 032 திருப்பயற்றூர் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
உரித்துஇட்டார்
ஆனை யின்தோல்
உதிர ஆறு ஒழுகி ஓட
விரித்திட்டார், உமையாள் அஞ்சி
விரல்விதிர்த்த
அலக்கண் நோக்கித்
தரித்திட்டார்
சிறிது போது,
தரிக்கிலர் ஆகித்
தாமும்
சிரித்திட்டார்
எயிறு தோன்றத்
திருப்பயற் றூர னாரே.
பொழிப்புரை : திருப்பயற்றூர்ப்
பெருமானார் குருதிவெள்ளம் ஆறாக ஓட யானையின் தோலை உரித்துத் தம் திருமேனியில்
விரித்துப் போர்த்தார் . யானைத்தோலை உரித்ததனையும் போர்த்ததனையும் கண்டு
பார்வதிதேவியார் அஞ்சித்தம் விரல்களைப் பலகாலும் உதறி வருந்தியதனைக் கண்டு , சிறிதுநேரம் அத்தோலைப் போர்த்தியபின்
அவ்வாறு தொடர்ந்து போர்த்தும் ஆற்றல் இல்லாதவரைப் போலக் காட்சி வழங்கித் தாமும்
பற்கள்தோன்றச் சிரித்துவிட்டார் .
பாடல்
எண் : 2
உவந்திட்டுஅங்கு
உமைஓர் பாகம்
வைத்தவர் ஊழி ஊழி
பவந்திட்ட
பரம னார்தாம்
மலைசிலை நாகம்
ஏற்றிக்
கவர்ந்திட்ட
புரங்கள் மூன்றும்
கனல்எரி ஆகச் சீறிச்
சிவந்திட்ட
கண்ணர் போலும்
திருப்பயற் றூர னாரே.
பொழிப்புரை : திருப்பயற்றூரனார் பல
ஊழிகளையும் படைத்த பெருமானாராய் ,
விரும்பிப்
பார்வதிபாகராய் , மலையை வில்லாகக்
கொண்டு , பாம்பை அதற்கு
நாணாகக் கட்டி , உலகங்களில் பலரையும்
சென்று பற்றி வருத்திய மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு , வெகுண்டு சிவந்த கண்களையுடையவர் .
பாடல்
எண் : 3
நங்களுக்கு
அருளது என்று
நான்மறை ஓது வார்கள்
தங்களுக்கு
அருளும் எங்கள்
தத்துவன் தழலன் தன்னை
எங்களுக்கு
அருள்செய் என்ன
நின்றவன், நாகம் அஞ்சும்
திங்களுக்கு
அருளிச் செய்தார்
திருப்பயற் றூர னாரே.
பொழிப்புரை : திருப்பயற்றூரனார்
நமக்கு அருள்கிட்டும் என்று நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்களுக்கு அவ்வாறே
அருள் செய்யும் உண்மைப் பொருளாய்த் தீ நிறத்தவராய் எங்களுக்கு அருள் செய்வீராக
என்று எல்லா உயிர்களும் வேண்டித் தொழுமாறு அழியாது நின்ற முதல்வராய்ப் பாம்பினை
அஞ்சும் பிறைமதிக்கு அஞ்சவேண்டாதவாறு அருள் செய்துள்ளார் .
பாடல்
எண் : 4
பார்த்தனுக்கு
அருளும் வைத்தார்,
பாம்புஅரை ஆட
வைத்தார்,
சாத்தனை
மகனா வைத்தார் ,
சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும்
பாட வைத்தார்,
கோள்அரா மதியம் நல்ல
தீர்த்தமும்
சடையில் வைத்தார்,
திருப்பயற் றூர னாரே.
பொழிப்புரை : திருப்பயற்றூரனார்
அருச்சுனனுக்கு அருளி , பாம்பினை இடுப்பில்
ஆடுமாறு இறுகக்கட்டி , சாத்தனை மகனாக
ஏற்றுக் காளிக்காகச் சாமவேதம் பாடியவாறு கூத்து நிகழ்த்திக் கொடிய பாம்பு , பிறை , கங்கை ஆகிய இவற்றைச் சடையில்
அணிந்தவராவார் .
பாடல்
எண் : 5
மூவகை
மூவர் போலும்,
முற்றுமா நெற்றிக்
கண்ணர்,
நாவகை
நாவர் போலும்,
நான்மறை ஞானம்
எல்லாம்
ஆவகை
ஆவர் போலும்,
ஆதிரை நாளர் போலும்,
தேவர்கள்
தேவர் போலும்,
திருப்பயற் றூர னாரே.
பொழிப்புரை : திருப்பயற்றூரனார்
அருவம் அருவுருவம் உருவம் என்ற மூவகைப்பட்ட இலயசிவம் , போகசிவம் , அதிகாரசிவம் என்ற மூவராய் , நிறைந்த நெற்றிக்கண்ணராய் , முறையாக வைகரி முதலான நால்வகை ஒலிகளை
வெளிப்படுத்தும் நாவினை உடையவராய் ,
நான்கு
வேதங்கள் சிவாகமம் முதலிய ஞானநூல்கள் என்பவற்றின் வடிவினராய் , திருவாதிரை நாளை உகப்பவராய்த்
தேவர்களுக்குத் தலைவராய் விளங்குபவராவார் .
பாடல்
எண் : 6
ஞாயிறுஆய்
நமனும் ஆகி,
வருணனாய்ச் சோமன் ஆகி,
தீஅறா
நிருதி வாயுத்
திப்பிய சாந்தன் ஆகி,
பேய்அறாக்
காட்டில் ஆடும்
பிஞ்ஞகன் எந்தை
பெம்மான்
தீஅறாக்
கையர் போலும்,
திருப்பயற் றூர னாரே.
பொழிப்புரை : திருப்பயற்றூரனார் தீ
நீங்காத கையினராய் , தீபங்கள் நீங்காத
சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவராய் , தலைக்கோலம்
அணிந்தவராய் , நமக்குத் தந்தையாராய்
, தலைவராய் , ஞாயிறு , சந்திரன்களாகவும் , யமன் , வருணன் , அக்கினி , நிருருதி , வாயு , மேம்பட்ட சாந்த வடிவினனாகிய ஈசானன் ஆகிய
எண்திசை காப்போராகவும் உள்ளார் .
பாடல்
எண் : 7
ஆவிஆய், அவியும் ஆகி,
அருக்கமாய்ப்
பெருக்கம் ஆகி,
பாவியர்
பாவம் தீர்க்கும்
பரமனாய்ப் பிரமன் ஆகி,
காவிஅம்
கண்ணள் ஆகி,
கடல்வண்ணம் ஆகி நின்ற
தேவியைப்
பாகம் வைத்தார்,
திருப்பயற் றூர னாரே.
பொழிப்புரை : திருப்பயற்றூரனார்
வேள்வித் தீயின் புகையாய் , வேள்வியில் தேவருக்கு
வழங்கப்படும் அவி உணவாய் , நுண் பொருளாய் , மிகப்பெரும் பொருளாய் , தீவினை செய்தவருடைய தீவினைகளை எல்லாம்
போக்கும் பெருமானாய், பிரமனாய் , கருங் குவளைபோன்ற கண்களை உடையளாகிக்
கடல் போன்ற நீலநிறம் உடைய பார்வதிபாகராகயும் உள்ளார் .
பாடல்
எண் : 8
தந்தைஆய், தாயும் ஆகி,
தரணிஆய், தரணிஉள் ளார்க்கு
எந்தையும்
என்ன நின்ற
ஏழ்உலகு உடனும் ஆகி,
எந்தைஎம்
பிரானே என்றுஎன்று
உள்குவார் உள்ளத்து
என்றும்
சிந்தையும்
சிவமும் ஆவார்,
திருப்பயற் றூர னாரே.
பொழிப்புரை : திருப்பயற்றூரனார் , தந்தையாராய்த் தாயாராய் உலகங்களாய் , உலகில் உள்ளார் அனைவருக்கும் தலைவராய் , ஏழு உலகங்களில் உள்ள உயிர்களின்
செயற்பாட்டிற்கு உடனாய் நின்று இயக்குபவராய் , ` எந்தையே ! எம்பெருமானே!` என்று தியானிப்பவர்கள் உள்ளத்திலே
சிந்தையும் சிந்திக்கப்பெறும் சிவமுமாகி உள்ளவராவார் .
பாடல்
எண் : 9
புலன்களைப்
போக நீக்கிப்
புந்தியை ஒருங்க
வைத்து,
இலங்களைப்
போக நின்று,
இரண்டையும் நீக்கி
ஒன்றாய்,
மலங்களை
மாற்ற வல்லார்
மனத்தின்உள் போகம்
ஆகி,
சினங்களைக்
களைவர் போலும்
திருப்பயற் றூர னாரே.
பொழிப்புரை : திருப்பயற்றூரனார் , சுவை , ஒளி , ஊறு , ஓசை , நாற்றம் என்ற ஐம்புல நுகர்ச்சிகளையும்
அடியோடு போக்கி , உள்ளத்தை ஒருவழிப்பட
நிலைநிறுத்தி , மூலாதாரம் முதலிய ஆறு
ஆதாரங்களையும் கடக்க நான் , தான் என்ற இரண்டையும்
நீக்கி அவனேதானே ஆகிய அந்நெறியாளராய் , மாயை
, கன்மம் என்ற
மலங்களைச் செயற்படாதவாறு செய்ய வல்ல அடியவர் மனத்திலே இன்பவடிவினராய்ச் சினத்தை
விளைக்கும் பிறவித் துன்பங்களை நீக்கி நிற்பவராவர் .
பாடல்
எண் : 10
மூர்த்திதன்
மலையின் மீது
போகாதா, முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான்
பூமி மேலால்
பாய்ந்துஉடன் மலையைப்
பற்றி
ஆர்த்திட்டான்
முடிகள் பத்தும்
அடர்த்துநல் அரிவை
அஞ்சத்
தேத்தெத்தா
என்னக் கேட்டார்
திருப்பயற் றூர னாரே.
பொழிப்புரை : திருப்பயற்றூரனார் , சிவபெருமானுடைய கயிலைமலையைக் கடந்து
புட்பகவிமானம் போகாதாக , அச்செய்தியைச்
சொல்லிய தேரோட்டியை வெகுண்டுநோக்கி , மனத்தான்
நோக்கிப் பூமியில் தேரினின்றும் குதித்து விரைந்து கயிலைமலையைப் பெயர்க்க
முற்பட்டு இராவணன் அதனைப் பெயர்த்து ஆரவாரம் செய்தபோது மலை நடுங்குதல் கண்டு
பார்வதி அஞ்சும் அளவில் அவன் தலைகள் பத்தையும் விரலால் நசுக்கிப் பின் பாடிய
தேத்தெத்தா என்ற இசையைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்பவரானார் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment