திருச் செங்காட்டங்குடி




                                    திருச் செங்காட்டங்குடி

        சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலத்தில் இருந்து நாகூர் செல்லும் சாலை வழியில் திருப்புகலூர் அடைந்து, அங்கிருந்து தெற்கே திருக்கண்ணபுரம் செல்லும் சாலை வழியாகச் சென்று திருசெங்காட்டங்குடி திருத்தலத்தை அடையலாம்.

         நன்னிலத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருசெங்காட்டங்குடியில் இருந்து அருகில் உள்ள திருமருகல், திருசாத்தமங்கை, திருப்புகலூர் ஆகிய மற்ற திருத்தலங்களையும் வழிபடலாம்.

         திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., தூரத்திலுள்ள திருப்புகலூர் சென்று அங்கிருந்து 4.5 கி.மீ. சென்று இக்கோயிலை அடையலாம்.

இறைவர்               : உத்தராபதீசுவரர், ஆத்திவனநாதர்,                                                                     மந்திரபுரீசுவரர்,  கணபதீசுவரர்,                                                                     பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்.

இறைவியார்           : சூளிகாம்பாள் (குழலம்மை), திருகுகுழல் உமைநங்கை.

தல மரம்                : ஆத்தி.

தீர்த்தம்                : தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில்.

தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. நறைகொண்ட மலர்தூவி,
                                                        2. பைங்கோட்டு மலர்ப்புன்னை.

                                          2. அப்பர் -1. பெருந்தகையைப் பெறற்கரிய.


ஆலய முகவரி   
அருள்மிகு உத்தராபசுபதீசுவரர் திருக்கோயில்
திருசெங்காட்டங்குடி
திருக்கண்ணபுரம் அஞ்சல்
நாகப்பட்டினம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN - 609704


         கஜமுகன் என்னும் யானை முகம் கொண்ட அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். தேவர்கள் கஜமுகாசுரனிடமுருந்து தங்களைக் காக்கும்படி சிவனை வேண்டினர். சிவபெருமான் கணபதியை அனுப்பி அசுரனை சம்ஹாரம் செய்தார். இதனால் கணபதிக்கு தோஷம் உண்டாகவே, பூலோகம் வந்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தவமிருந்தார். சிவன் அவரது தோஷம் நீக்கியருளினார். மேலும் அவரது வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த இடத்தில் லிங்கமாக எழுந்தருளி கணபதீஸ்வரர் என்றும் பெயர் பெற்றார். இத்தலமும் கணபதீச்சுரம் என்று பெயர் பெற்றது. விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி (ரத்தம்) இப்பகுதியில் காடாய்ப் பெருகியமையால் இத்தலம் "திருச்செங்காட்டங்குடி" எனப் பெயர் பெற்றது.

         கிழக்கு நோக்கியுள்ள 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் உள்ளது. கோயில் வாயிலில் சத்திய தீர்த்தம் எனப்படும் திருக்குளம் உள்ளது. கோபுரத்தின் உட்புறம் தல விருட்சமான ஆத்தி மரம் உள்ளது. இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை அமுது செய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது. முன் மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். உட்பிராகாரத்தில் பிட்சாடனர், சிறுத்தொண்டர், அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, மகன் சீராளதேவர், அவரது வீட்டு பணியாள் சந்தனநங்கை ஆகியோர் மூலத் திருமேனிகளையும், 63 மூவர் திருமேனிகளையும் தரிசிக்கலாம். பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், சித்தி விநாயகர், நால்வர், சங்கபதுமநிதிகள் ஆகிய சந்நிதிகள் அடுத்து உள்ளன. வாதாபி கணபதி தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார்.

         இவ்வாலயத்திலுள்ள அஷ்டமூர்த்தி மண்டபம் கண்டு தொழத்தக்கது. துர்க்கை, வீரட்டலிங்கம், விஸ்வலிங்கம், புஜங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிட்சாடனார், திரிபுராரி, பைரவர், விநாயகர் ஆகியோரின் அருமையான வேலைப்பாடுடைய மூலத் திருமேனிகள் இம் மண்டபத்தில் உள்ளன.

         இவ்வாலயத்திலுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

     விநாயகர் வழிபாடு தமிழகத்தில் உருவாக காரணமாக இருந்தவர் இத்தலத்திலுள்ள வாதாபி விநாயகர். பல்லவ மன்னன் நரசிம்மவர்மனிடம் சேனாதிபதியாக இருந்த பரஞ்ஜோதி ஒருசமயம் வடநாட்டிற்கு போருக்குச் சென்றார். சாளுக்கிய மன்னன் புலிகேசியை வென்று, சாளுக்கிய நாட்டின் தலைநகரமான வாதாபி என்ற ஊரில் இருந்த கணபதி சிலையை, தன் வெற்றியின் அடையாளமாக தமிழகம் கொண்டு வந்தார். தன்னுடைய சொந்த ஊரான இத்தலத்தில் அந்தச் சிலையை பிரதிஷ்டை செய்தார். வாதாபியிலிருந்து வந்ததால் இந்த விநாயகர் வாதாபி விநாயகர் என்ற பெயர் பெற்றார். இந்த விநாயகர் ஒட்டிய வயிறுடன் காட்சி தருவது விசேஷம். விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படும்.

      "உத்ராபதியார் " திருமேனி உருவான விதம் பற்றி சொல்லப்படும் வரலாறாவது - ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத் தொண்டருக்கு இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு வந்து, பல நாட்கள் தங்கி வழிபட்டு வந்தார். உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், "இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், யாம் சண்பகப்பூ மணம் வீசக் கட்சி தருவோம்" என்றருளினார். ஐயடிகள் அவ்வாறே செயல்படலானார். கொல்லர்கள் உத்ராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர். பல இடர்பாடுகள் - கும்பாபிஷேக நாள் நெருங்கியது. மன்னனோ விரைவில் முடிக்க கட்டளையிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர். இறைவன் சிவயோகியார் வடிவில் அங்கு வந்து நீர் கேட்டார். இருந்தவர்கள், "உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது; வேண்டுமானால் ஊற்றுகிறோம்" என்றனர். சிவயோகியார், "நல்லது; அதையே ஊற்றுங்கள்" என்றார். கொல்லர்கள் காய்ச்சிய மழுவை ஊற்ற, வாங்கியுண்ட சிவயோகியார் அங்கிருந்து மறைந்தார் - உத்தராபதீஸ்வரர் உருவானார். செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து - கும்பாபிஷேகம் செய்வித்தான். ஐயடிகள் காடவர்கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம் வீச, காட்சித் தந்தருளினார். (ஆதாரம் - கோயில் வரலாறு.)

         மூலவர் கணபதீஸ்வரருக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் உத்தராபசுபதீஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். காவியுடை அணிந்து, கையில் திருவோடு, திரிசூலம், உடுக்கை வைத்திருக்கிறார். சிவன் சிலையாக மாறியபோது நெற்றியில் சிறிய புடைப்பு இருந்தது. அதனை சிற்பிகள் செதுக்கவே ரத்தம் பீறிட்டது. கலங்கிய சிற்பிகள் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைத்தவுடன் ரத்தம் நின்றது. தற்போதும் நெற்றியில் இந்த காயத்துடன் உத்திராபசுபதீஸ்வரர் காட்சி தருகிறார். சாயரட்சை பூஜையின்போது மட்டும் காயத்தில் பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ வைக்கின்றனர். சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை மாதப்பிறப்பன்றும், சித்திரை பரணி, வைகாசி திருவோணம், ஐப்பசி பரணி ஆகிய நாட்களில் 2 முறையும் என மொத்தம் வருடத்திற்கு பத்து நாட்கள் மட்டும் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

         சிவபெருமான் ஆடிய நவதாண்டவங்களில் திருசெங்காட்டங்குடியில் ஆடியது உபயபாத நர்த்தனம் எனப்படுகிறது.

         இறைவன், அடியார் பொருட்டு பூமியில் வந்து, தம் திருப்பாதம் தோய நடந்து அருள் செய்தத் திருத்தலங்களான சிதம்பரம், திருஆலவாய், திருவாரூர், திருக்கச்சூர் ஆலக்கோயில், திருகுருகாவூர் வெள்ளடை, திருஅம்பர்மாகாளம், திருமறைக்காடு, திருவாய்மூர், திருப்பஞ்ஞீலி, திருப்பெருந்துறை, திருச்சாய்க்காடு, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஆகிய தலங்கள் வரிசையில் இத்தலம் இறைவன் உத்திராபதீஸ்வரராகத் தோன்றி, சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதலாக கணபதீச்சர ஆலய ஆத்திமரம் வரை தனது பொற்பாதம் பதித்த சிறப்புடையது.

         காலை 6-45 முதல பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "இயற்றும் சீர் ஆச்சிரம் மேவும் செங்காட்டங்குடியின் அம் கணபதீச்சரம் வாழும் சந்திரசேகரனே" என்று போற்றி உள்ளார்.


சிறுத்தொண்டர் வரலாறு

         இந்த நாயனாரின் இயற்பெயர் - பரஞ்சோதியார். திருச்செங்காட்டங்குடி என்னும் திருத்தலத்தில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர். ஆயுள்வேதக் கலைகளிலும் வடமொழிக் கலைகளிலும் புலமை வாய்ந்தவர். படைத் தொழில், யானையேற்றம், குதிரையேற்றம் முதலியவற்றிலும் பயிற்சி பெற்றவர்.  சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்தவர்.

         பரஞ்சோதியார் சோழ மன்னனிடத்தில் அமைச்சராய் அமர்ந்து கடனாற்றி வந்தார்.  அவர், வேற்றரசர்களை வெல்வதிலும், அவர்கள் நாடுகளைப் பற்றுவதிலும் பேர்பெற்று விளங்கினார்.  ஒரு முறை வடபுலத்திலே உள்ள வாதாபி என்னும் நகரத்தில் போர் மூண்டது.  அப் போரில் பரஞ்சோதியார் தலைப்பட்டு வெற்றி பெற்றார்.  அவ் வெற்றியின் பயனாக மணி, நிதி முதலியவற்றைக் குவியல் குவியலாகவும், யானை குதிரை முதலியவற்றைக் கூட்டம் கூட்டமாகவும் பரஞ்சோதியார் திரட்டி வந்தார்.  அவற்றைக் கண்ட மன்னன், பரஞ்சோதியார் திறத்தை வியந்து பேசினான்.  அப்பொழுது அங்கு இருந்த மற்றை அமைச்சர்கள் மன்னனைப் பார்த்து, "இவர் சிவனடியார்.  இவருக்கு எதிராவார் ஒருவரும் இல்லை" என்று சொன்னார்கள்.  அது கேட்ட மன்னன் நடுக்குற்றான். "அந்தோ கெட்டேன். இதுவரை இவரைச் சிவனடியார் என்று உணர்ந்தேனில்லை. போர்முகத்துக்கு அனுப்பினேன், பாவியானேன்" என்று வருந்தினான். பரஞ்சோதியார் காலில் விழுந்து, "அடியவரே, என் பிழை பொறுத்து அருளல் வேண்டும்" என்று வேண்டினான். பரஞ்சோதியார், "என் கடமையைச் செய்தேன், அதனால் என்ன தீங்கு" என்றார். மன்னன் அவருக்கு நிதிக்குவியல்களையும், விருத்திகளையும் கொடுத்து, "உமது மெய்ந்நிலையை நான் அறியாதவாறு நடந்து வந்தீர். இனி என் கருத்துக்கு இசைந்து நடக்குமாறு வேண்டுகிறேன். இனி, இப்பணி செய்தல் வேண்டாம். திருத்தொண்டு செய்தல் வேண்டும்" என்று வணங்கி விடை கொடுத்தான். பரஞ்சோதியார் விடைபெற்றுத் தம் திருப்பதி சேர்ந்தார்.

         பரஞ்சோதியார் திருச்செங்காட்டங்குடியில் உள்ள கணபதீச்சரப் பெருமானை வழிபடுவார். தமக்கு இல்லக் கிழத்தியாக வாய்த்த திருவெண்காட்டு நங்கையார் என்னும் பெருமாட்டியுடன் கலந்து நல்லறம் ஓம்புவார்.  சிவனடியார்களுக்கு அமுதூட்டிய பின்னர்த் தாம் உண்பார்.  அவர், அடியவர்களிடத்தில் மிகச் சிறியராய் நடப்பார். அதனால், அவருக்குச் "சிறுத்தொண்டர்" என்னும் திருப்பெயர் வழங்கலாயிற்று.

         இவ்வாறு ஒழுகி வரும் நாளில், சிறுத்தொண்டர் மனைவியார் கருவுற்றார். அவருக்கு ஒரு மகன் பிறந்தான்.  சீராளதேவர் என்னும் திருப்பெயர் சூட்டப்பட்டது. அவர் தக்க பருவத்தில் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

         திருச்செங்காட்டங்குடிக்குத் திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளினார். அவர் தம் வருகையைக் கேள்வியுற்ற சிறுத்தொண்டர், அவர் எதிர்கொண்டு அழைத்து வந்தார்.  அன்பில் மூழ்கிப்  பலவித உபசாரம் செய்தார்.  திருஞானசம்பந்தப் பெருமான் தமது திருப்பதிகத்தில் வைத்துச் சிறப்பித்து அருளினார்.

         சிறுத்தொண்டரின் திருத்தொண்டு திருக்கயிலையையும் ஈர்த்தது. அவர் அன்பை நுகரச் சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். ஒரு வயிரவத் திருக்கோலம் தாங்கி, திருச்செங்காட்டங்குடி சேர்ந்தார். பசியால் பீடிக்கப் பட்டார் போல் நடந்தார். "சிறுத்தொண்டரின் வீடு எங்கே" என்று கேட்டு வந்தார்.  வீட்டின் வாயிலில் வந்து நின்று, "சிறுத்தொண்டர் வீட்டில் உள்ளாரா" என்று கேட்டார். தாதியாராகிய சந்தன நங்கையார், "மாதவர் வந்துள்ளார்" என்று விரைந்து வந்து வயிரவர் திருவடியிலே விழுந்து வணங்கி, "நாயனார் அடியவர்களைத் தேடிச் சென்றிருக்கிறார். அடிகள் உள்ளே எழுந்தருளலாம்" என்று சொன்னார். அதற்கு வயிரவர், "பெண்கள் உள்ள இடத்தில் நாம் தனித்துப் புகுவதில்லை" என்று திருவாய் மலர்ந்து அருளினார்.  அவ்வுரை திருவெண்காட்டு நங்கையாருக்குக் கேட்டது.  'அடியவர் போய் விடுவாரோ' என்று எண்ணி ஓடி வந்தார். வந்து, "அடிகளே, நாயனார், அடியவர்கட்கு நாள்தோறும் அமுது செய்விப்பது வழக்கம். இன்று ஓர் அடியவரும் வரவில்லை.  அதனால், அவர் அடியவர்களைத் தேடிப் போயுள்ளார்.  இப்பொழுது வருவார். புதிதாக அடிகள் எழுந்தருளி இருக்கிறீர்.  அடிகள் திருவேடத்தைப் பார்த்தால் நாயனார் மகிழ்வெய்துவார்.  அடிகள் உள்ளே எழுந்தருள்க" என்று வேண்டினார்.  அவ் வேண்டுதலுக்கு இசையாது, "நாம் இருப்பது வடதேசம்.  சிறுத்தொண்டரைக் காணவே வந்தோம். அவர் இல்லாத வேளையில் இங்கே தங்கமாட்டோம். கணபதீச்சரத்தில் திருஆத்தியின் கீழ் இருப்போம். சிறுத்தொண்டர் வந்ததும் தெரிவியுங்கள்" என்று கூறிக் கணபதீச்சரத்தைச் சேர்ந்தார்.

         அடியவர்கள் யாரையும் காணாது சிறுத்தொண்டர் வீடு வந்தார்.  நிலைமையை மனைவியார்க்குக் கூறி வருந்தினார்.  அம்மையார், நாயனாரைப் பார்த்து, "இப்பொழுது இங்கே ஒரு வயிரவர் வந்தார்" என்று சொன்னார். அதைக் கேட்டதும் நாயனார் "உய்ந்தேன், உய்ந்தேன்" என்று கூத்தாடினார். அவர் எங்கே என்று கேட்டு,  ஓடோடிச் சென்று வயிரவரைக் கண்டார், வணங்கினார். வயிரவர், நாயனாரைப் பார்த்து,  "பெரிய சிறுத்தொண்டர் நீரோ" என்றார். நாயனார் வயிரவரை மீண்டும் வணங்கி, "சிவனடியார்கள் எளியேனை அப்படிச் சொல்வது வழக்கம். அடிகளே, ஏழைக் குடிலுக்கு எழுந்தருளல் வேண்டும்" என்று முறையிட்டார். வயிரவர் சிறுத்தொண்டரைப் பார்த்து, "உம்மைக் காண வந்தோம்.  நாம் வடதேசத்தினோம். எமக்கு அமுதளிக்க உம்மால் இயலாது" என்றார். அதற்குச் சிறுத்தொண்டர், "அடிகளின் உணவு முறையைத் தெரிவியுங்கள்.  அவ்வாறே செய்விப்பேன். அருமை ஒன்றும் இல்லை"  என்றார்.  அதுகேட்ட வயிரவர், "நாம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை உண்போம். அந்த நாள் இந்நாள் ஆகும். பசுவைக் கொன்று சமைத்து உண்பது எமது வழக்கம். இது உமக்கு அருமையானது அன்றோ" என்றார். அதற்குச் சிறுத்தொண்டர், "சால நன்று எமக்கு முந்நிரையும் உண்டு. ஒன்றும் குறைவில்லை. அடிகளுக்குத் திருவமுது ஆகும் பசு இன்னதென்று தெரிவித்தல் வேண்டும்.  தெரிந்தால், நான் போய் விரைவில் அமுதாக்குவித்துத் திரும்புவேன்" என்றார்.

         வயிரவர், "தொண்டரே, நாம் உண்ணும் பசு நரப் பசுவாகும்.  ஐந்து வயது உடையதாய், உறுப்பில் பழுது இல்லாததாய் இருத்தல் வேண்டும். இன்னும் அதன் இயல்பைக் கூறுவோம். கூறினால், அது உமக்கு புண்ணில் வேல் எறிந்தால் போல் தோன்றும்" என்றார்.  சிறுத்தொண்டர் "நன்றாகக் கூறலாம்" என்றார்.  வயிரவர், "அச் சிறுவன் ஒரு குடிக்கு ஒருவனாய் இருத்தல் வேண்டும். அவனைத் தாய் உவந்து பிடிக்கத் தந்தை உவந்தே அரிதல் வேண்டும். இவ்வாறு அரிந்து சமையல் செய்தால் நாம் உண்போம்" என்றார். சிறுத்தொண்டர், "இதுவும் எமக்கு அரிது அன்று. அடிகள் திருவமுது செய்ய இசைவது போதும்" என்றார்.

         சிறுத்தொண்டர் பேரானந்தத்துடன் வீடு நோக்கி வந்தார்.  அவரது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த திருவெண்காட்டுநங்கையார், நாயனார் முகமலரச்சியோடு வருதவதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார். நாயனார் வயிரவர் விருப்பத்தைத் தெரிவித்தார். அது கேட்ட அம்மையார், "ஒரு குடிக்கு ஒருவனாக உள்ள சிறுவனுக்கு ஏங்கே போவது" என்றார்.  நாயனார் அம்மையாரைப் பார்த்து, "நினைவு நிரம்பப் பொருள் கொடுத்தாலும், பிள்ளையை யாரும் தரமாட்டார்கள். தந்தாலும் உவப்புடன் அரியும் பெற்றோர் இருப்பாரா? இனிக் காலம் தாழ்த்தல் ஆகாது. நமது அருமைப் புதல்வனை அழைப்போம்" என்றார். அம்மையார், "நம் குலமணியைப் பள்ளியில் இருந்து அழைத்து வாரும்" என்றார்.

         பள்ளியிலிருந்து ஓடி வந்து தன்னைத் தழுவிக்கொண்ட சீராளதேவனை, தோள் மேல் சுமந்து வீட்டுக்கு வந்தார்.  அம்மையார் பிள்ளையை வாங்கினார். தலைமயிரைத் திருத்தினார். முகம் துடைத்தார். திருமஞ்சனமாட்டி அலங்கரித்துத் தமது ஆருயிர்க் கணவரிடம் கொடுத்தார்.  சிறுவனை அன்போடு வாங்கிய சிறுத்தொண்டர் அடுக்களைக்குச் செல்லாமல் வேறோர் இடம் சென்றார். அம்மையார் பாத்திரங்களைக் கழுவி எடுத்துக் கொண்டு பின் சென்றார்.  பிள்ளையின் தலையைச் சிறுத்தொண்டர் பிடிக்க, அம்மையார் பிள்ளையின் கால்களை மடியிலே இறுக்கினார். இரண்டு கைகளையும் தமது இரண்டு கைகளால் பற்றினார். சீராளதேவர் பெற்றோர் மகிழ்வதாகக் கருதி நகை செய்தார்.  சிறுத்தொண்டரும் அம்மையாரும், நம் புதல்வன் நமக்குப் பெரும்பேற்றை அளித்தான் என்று மகிழ்வெய்தினர்.  அம் மகிழ்வுடன் செயற்கரும் செய்கையினைச் செய்தனர்.

         "தலை இறைச்சி அமுதுக்கு உதவாது" என்று அதை விலக்குமாறு தோழியாரிடம் அம்மையார் கூறினார். மற்ற உறுப்புக்கள் எல்லாம் சமைக்கப்பட்டன. சோறும் ஆக்கப்பட்டது.

         நாயனார் களிகூர்ந்து, திரு ஆத்தியை அடைந்து, "அடிகள் விரும்பியவாறு சமையல் செய்யப்பட்டது. அருள் கூர்ந்த எழுந்தருள்க" என்று வேண்டினார். இருவரும் வீடு சேர்ந்தனர்.

         நாயனாரும் அம்மையாரும் முறைப்படி வயிரவருக்கு வழிபாடு செய்து "அமுது படைக்கு வகை எப்படி" என்று கேட்டனர். "சோற்றுடன் கறிகளையும் ஒக்கப் படைக்க" என்றார் வயிரவர். திருவெண்காட்டுநங்கை பரிகலம் திருத்தி, சோறு கறிகளை முறைப்படி படைத்தார். அதனைப் பார்த்த வயிரவர், "பசுவின் உறுப்புக்கள் எல்லாவற்றையும் சமைத்தீரா" என்று கேட்டார். "தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாது என்று அதனைக் கழித்தோம்" என்றார் திருவெண்காட்டுநங்கையார்.  "தலையும் வேண்டும்" என்றார் வயிரவர். நாயனாரும் அம்மையாரும் திகைத்து நிற்கையில், தாதியாராகிய சந்தன நங்கையார், "வயிரவர் திருவமுது செய்யம்போது அவர்தம் எண்ணம் தலை இறைச்சியின் மீது செல்லினும் செல்லும் என்று நினைந்து, அதையும் சமையல் செய்து வைத்திருக்கிறேன்" என்றார். திருவெண்காட்டுநங்கையார் அகமகிழ்ந்து தலை இறைச்சியையும் கொண்டு வந்து படைத்தார்.

         பிறகு வயிரவர், சிறுத்தொண்டரைப் பார்த்து, "நாம் தனியே உண்பதில்லை. சிவனடியார்களுடன் உண்பதே வழக்கம்.  அவர்களை அழைத்து வாரும்" என்றார்.  நாயனாருக்கு வருத்தம் மேலிட்டது. "ஐயோ, இரு திருவமுது செய்ய இடையூறு நேர்ந்ததே" என்று ஏங்கியபடியே வெளியே போனார். சிவனடியார் ஒருவரையும் காணவில்லை. நிலையை வயிரவருக்குத் தெரிவித்தார். "திருநீரு அணிந்தவர்க்கே நான் சோறிடுவது வழக்கம்" என்று சொல்லி வணங்கினார்.

         வயிரவர், நாயனாரை நோக்கி, "உம்மைப் போலத் திருநீறு இட்டவரும் உளரோ? ஆகவே, நீர் எம்மோடு திருவமுது செய்வீர்" என்றார். நங்கையாரை நோக்கி, "நமக்குப் படைத்த சோறு கறிகளில் இருந்து எடுத்து இவருக்கும் படைக்க" என்று பணித்தார். நங்கையாரும் அப்படியே செய்தார். 'நாம் உண்டால் வயிரவரும் உண்பார்' என்று எண்ணி, சிறுத்தொண்டர் உண்ணப் புகுந்தார். நாயனாரைப் பார்த்து வயிரவர், "நாம் உண்டு ஆறு மாதங்கள் ஆயிற்று. நீரோ நாளும் உண்பவர். நாம் உண்ணும் வரை பொறுக்கல் ஆகாதா? நம்முடன் உணவு கொள்வதற்குப் புத்திரன் இல்லையோ? இருப்பின், அவனை அழையும்" என்றார்.  நாயனார், "எனக்குப் புதல்வன் உண்டு. ஆனால் அவன் இப்போது இங்கு உதவான்" என்றார். வயிரவர், "அவன் வந்தால் அன்றி நாம் உண்ணோம். அவனைத் தேடி அழைத்து வாரும்" என்றார்.

         நாயனாரும் நங்கையாரும் செய்வது அறியாமல், திருவருளை நினைந்து வெளியே வந்து,  "மைந்தா! மணியே! சீராளா! வாராய்! வாராய்! வயிரவர் உண்ண அழைக்கின்றார், வாராய்! வாராய்!" என்று ஓலமிட்டு அழைத்தனர். ஆண்டவன் அருளால், சிராளதேவர் பள்ளியினின்று ஓடி வருபவர் போல வந்தார். அம்மையார் அருமைப் புதல்வரை எடுத்து அணைத்து, நாயனார் கையில் கொடுத்தார். நாயனார், "அடியவர் அமுது செய்யப் பெற்றோம் பெற்றோம்" என்று ஆனந்தம் கொண்டார்.  பிள்ளையுடன் வீட்டிற்கு விரைந்து வந்தார். அதற்கு முன்னரே வயிரவர் மறைந்தருளினார். சிறுத்தொண்டர் திகைத்தார், விழுந்தார், எழுந்தார், மயங்கினார். "வயிரவர் எங்கே எங்கே" என்றார். இறைச்சியும் அமுதும் கலத்தில் காணோம். நடுக்குற்று வெளியே வந்தார்.

         அப்பொழுது சிவபெருமான் உமாதேவியாருடனும், முருகப் பெருமானுடனும் மழவிடைமேல் காட்சி தந்தார். பெருமான் அந்த நால்வருக்கும் அருள் சுரந்து, தங்களைப் பிரியாத பெருவாழ்வு நல்கி, உடன் அழைத்துச் சென்றார்.



திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 467
கழிக்கானல் மருங்குஅணையும் கடல்நாகை
         அதுநீங்கி, கங்கை ஆற்றுச்
சுழிக்கானல் வேணியர்தம் பதிபலவும்
         பரவிப்போய், தோகை மார்தம்
விழிக்காவி மலர்பழனக் கீழ்வேளூர்
         விமலர்கழல் வணங்கி ஏத்தி,
மொழிக்காதல் தமிழ்மாலை புனைந்துஅருளி,
         அங்குஅகன்றார் மூதூர் நின்றும்.

         பொழிப்புரை : உப்பங்கழிகள் நிறைந்த சோலைகளின் பக்கங்களில் உள்ள நாகப்பட்டினத்தை நீங்கிச் சென்று, கங்கையாற்றின் சுழிகளில் ஒலித்தல் பொருந்திய சடையையுடைய இறைவரின் பதிகள் பலவும் வணங்கிச் சென்று, மயில் போன்ற சாயலை உடைய மகளிரின் கண்கள் போன்ற கருங்குவளை மலர்கள் மலர்வதற்கு இடனான வயல்கள் சூழந்த திருக்கீழ்வேளூரில் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளை வணங்கிப் போற்றி, அன்பு மிகுதியால் தமிழ்ப் பதிகங்களான மாலைகளைப் பாடி, அப்பழைய பதியினின்றும் புறப்பட்டார்.


பெ. பு. பாடல் எண் : 468
அருகுஅணையும் திருப்பதிகள் ஆனஎலாம்
         அங்கணரைப் பணிந்து போற்றி,
பெருகியஞா னம்பெற்ற பிள்ளையார்
         எழுந்துஅருளும் பெருமை கேட்டு,
திருமருவு செங்காட்டங் குடிநின்றும்
         சிறுத்தொண்டர் ஓடிச் சென்று, அங்கு
உருகுமனம் களிசிறப்ப எதிர்கொண்டு,
         தம் பதியுள் கொண்டு புக்கார்.

         பொழிப்புரை : பெருகிய ஞானத்தைப் பெற்ற பிள்ளையார், அருகிலுள்ள பதிகளில் எல்லாம் இறைவரை வணங்கிப் போற்றி, எழுந்தருளி வருகின்ற செய்தியைச் செவியேற்றுச் செல்வம் பொருந்திய திருச்செங்காட்டங்குடி என்ற பதியினின்றும், சிறுத்தொண்ட நாயனார், அங்கு ஓடிச் சென்று, அன்பால் உருகும் மனம் மகிழ்ச்சி மிக, எதிர் கொண்டு வரவேற்றுத் தம்பதியுள் அழைத்துக் கொண்டு சென்றார்.


பெ. பு. பாடல் எண் : 469
சிறுத்தொண்டர் உடன் கூடச் செங்காட்டங்
         குடியில்எழுந் தருளி, சீர்த்தி
நிறுத்துஎண்திக் கிலும்நிலவும் தொண்டர்அவர்
         நண்புஅமர்ந்து, நீல கண்டம்
பொறுத்து,அண்டர் உயக்கொண்டார் கணபதீச்
         சரத்தின்கண், போகம் எல்லாம்
வெறுத்து உண்டிப் பிச்சைநுகர் மெய்த்தொண்ட
         ருடன்அணைந்தார் வேதகீதர்.

         பொழிப்புரை : சிறுத்தொண்ட நாயனாருடன் கூடத் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளிச் சென்று, தம் சிறப்பை எண்திசையிலும் நிலை நிறுத்திவரும் பெருந்தொண்டரான அவருடைய நட்பை விரும்பி, உலகியல் இன்பங்களை எல்லாம் வெறுத்துத் துறந்து பிச்சை ஏற்ற உண்டியைத் துய்த்துவரும் மெய்த்தொண்டர்களுடனே சேர்ந்து, நீலகண்டத்தைத் தாம் தாங்கித் தேவர்களை உய்யுமாறு கொண்ட இறைவரின் `கணபதீச்சரம்' என்ற கோயிலில், மறைப்பொருளை இசைப் பாடல்களாகப் பாடும் சம்பந்தர் சென்று அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 470
அங்குஅணைந்து கோயில்வலம் கொண்டுஅருளி
         அரவுஅணிந்தார் அடிக்கீழ் வீழ்ந்து,
செங்கண்அரு விகள்பொழிய, திருமுன்பு
         பணிந்து, எழுந்து, செங்கை கூப்பித்
தங்கள்பெருந் தகையாரைச் சிறுத்தொண்டர்
         தொழஇருந்த தன்மை போற்றி,
பொங்கிஎழும் இசைபாடிப் போற்றிஇசைத்து, அங்கு
         ஒருபரிசு புறம்பு போந்தார்.

         பொழிப்புரை : சென்றவர் கணபதியீச்சரக் கோயிலைச் சேர்ந்து, அதனை வலமாக வந்து, பாம்பை அணிந்த இறைவரின் திருவடிகளில் விழுந்து வணங்கிக் கண்களிலிருந்து கண்ணீர் அருவி இழிய, திரு முன்பு பணிந்து எழுந்து, சிவந்த கைகளைக் குவித்து வணங்கி, தம்மை ஆண்ட இறைவரைச் சிறுத்தொண்ட நாயனார் தொழுமாறு வீற்றிருந்த தன்மையைப் போற்றி, மேலும் மேலும் பொங்கி எழுகின்ற பதிகத்தைப் பாடிப் பரவி, அங்கிருந்து ஒருவாறாக அரிதின் நீங்கி வெளியே வந்தார்.

         இதுபொழுது அருளிய பதிகங்கள் இரண்டாம்.

1. `பைங்கோட்டு மலர்ப் புன்னை' : (தி.3 ப.63) - பஞ்சமம்
2. `நறை கொண்ட' : (தி.1 ப.61) - பழந்தக்கராகம்.



         3. 063    திருச்செங்காட்டங்குடி       பண் - பஞ்சமம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பைங்கோட்டு மலர்ப்புன்னைப்
         பறவைகாள், பயப்புஊரச்
சங்காட்டம் தவிர்த்துஎன்னைத்
         தவிராநோய்  தந்தானே,
செங்காட்டங் குடிமேய
         சிறுத்தொண்டன்  பணிசெய்ய
வெங்காட்டுள் அனல்ஏந்தி
         விளையாடும் பெருமானே.

         பொழிப்புரை : பசுமையான கிளைகளில் மலர்களையுடைய புன்னைமரத்தில் வீற்றிருக்கும் பறவைகளே! தலைவனான சிவபெருமான் என்னைப் பிரிந்ததால் உடம்பு பசலைநிறம் பெற, ஓடி ஆடி உல்லாசமாக இயங்கிய என் மகிழ்ச்சியை நீக்கி எனக்குத் தாங்காத துன்பம் தந்தான். அவன் திருச்செங்காட்டங்குடி என்னும் திருத்தலத்தில் சிறுத்தொண்டர் பணி செய்ய சுடுகாட்டுள், கையில் அனல் ஏந்தி திருநடனம் புரியும் பெருமானாவான்.


பாடல் எண் : 2
பொன்னம்பூங் கழிக்கானல்
         புணர் துணையோடு உடன்வாழும்
அன்னங்காள், அன்றில்காள்,
         அகன் றும்போய் வருவீர்காள்
கல்நவில்தோள் சிறுத்தொண்டன்
         கணபதீச் சரமேய
இன்அமுதன் இணைஅடிக்கீழ்
         எனதுஅல்லல் உரையீரே.

         பொழிப்புரை : பொன்போன்ற மகரந்தத்தை உதிர்க்கும் புன்னைப் பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் தம் துணையோடு சேர்ந்து வாழும் அன்னப் பறவைகளே! அன்றில் பறவைகளே! நீங்கள் இச்சோலையிலிருந்து வெளி இடங்கட்கும் சென்று வரும் இயல்புடையவர்கள். கல் போன்று திண்மையான அழகிய தோள்களையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யக் கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற இனிய அமுது போன்ற சிவபெருமானின் திருவடிக்கீழ் இருந்து என்னுடைய துன்பத்தைச் சொல்லமாட்டீர்களா?


பாடல் எண் : 3
குட்டத்தும் குழிக்கரையும்
         குளிர்பொய்கைத் தடத்துஅகத்தும்
இட்டத்தால் இரைதேரும்
         இருஞ்சிறகின் மடநாராய்,
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன்
         செங்காட்டங் குடிமேய
வட்டவார் சடையார்க்குஎன்
         வருத்தஞ்சென்று உரையாயே.

         பொழிப்புரை : குட்டை, குழி, குளிர்ந்த பொய்கை ஆகிய இடங்களில் விருப்பத்துடன் இரையைத் தேர்கின்ற பெரிய இரு சிறகுகளை உடைய இள நாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் நியமத்தோடு வழிபடத் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற நீண்ட அடர்ந்த சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைக்க மாட்டாயோ? உரைப்பாயாக என்பது குறிப்பு.


பாடல் எண் : 4
கான்அருகும், வயல்அருகும்,
         கழிஅருகும், கடல்அருகும்,
மீன்இரிய வருபுனலில்
         இரைதேர்வெண் மடநாராய்
தேன்அமர் தார்ச் சிறுத்தொண்டன்
         செங்காட்டங் குடிமேய
வான்அமரும் சடையார்க்குஎன்
         வருத்தஞ்சென்று உரையாயே.

         பொழிப்புரை : கடற்கரைச் சோலையின் அருகிலும், வயல், கழி, கடல் ஆகியவற்றின் அருகிலும் பெருகும் நீரில் ஓடுகின்ற மீன்களை இரையாகத் தேரும் வெண்ணிறமான மட நாரையே! தேன் துளிக்கும் மாலைகளையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யத் திருச்செங்காட்டங் குடியில் வீற்றிருந்தருளுகின்ற, மாலை வானம் போன்ற சிவந்த சடையுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைப்பாயாக.


பாடல் எண் : 5
ஆரலாம் சுறவம்மேய்ந்து
         அகன்கழனிச் சிறகுஉலர்த்தும்
பார்அல்வாய்ச் சிறுகுருகே,
         பயில்தூவி மடநாராய்,
சீர்உலாம் சிறுத்தொண்டன்
         செங்காட்டங் குடிமேய
நீர்உலாம் சடையார்க்குஎன்
         நிலைமைசென்று உரையீரே.

         பொழிப்புரை : ஆரல், சுறவம் ஆகியன பாய்கின்ற அகன்ற கழனிகளில் சிறகுகளை உலர்த்துகின்ற நெடிய மூக்கையுடைய சிறிய உள்ளான் பறவையே!. அடர்ந்த சிறகுடைய இளநாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் பணி செய்ய திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என்னுடைய நிலையினை உரைப்பீர்களாக.


பாடல் எண் : 6
குறைக்கொண்டார் இடர்தீர்த்தல்
         கடன்அன்றே, குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே,
         துணைபிரியா மடநாராய்
கறைக்கண்டன் பிறைச்சென்னிக்
         கணபதீச்  சரமேய
சிறுத்தொண்டன் பெருமான்சீர்
         அருள்ஒருநாள் பெறலாமே.

         பொழிப்புரை : தங்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுபவர்களின் துன்பத்தைப் போக்குதல் தலைவரானவரின் கடமை அன்றோ? குளிர்ந்த குளத்தின் கரையில் கெண்டை மீனைக் கவர்ந்து இரையாகக் கொள்ளும் பறவையே! துணையைப் பிரியாதிருக்கும் மடநாரையே! நீலகண்டரும், பிறைச்சந்திரனைத் தலையிலே சூடியுள்ளவரும், கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் சிறுத்தொண்டரால் வழி படப்படுபவரும் ஆகிய சிவபெருமானது சீராகிய எய்ப்பிடத்து உதவும் பேரருளை நான் பெறுமாறு தூது சென்றுரைப்பீர்களாக!


பாடல் எண் : 7
கருஅடிய பசுங்கால்வெண்
         குருகே, ஒண் கழிநாராய்,
ஒருஅடியாள் இரந்தாள்என்று
         ஒருநாள்சென்று உரையீரே,
செருவடிதோள் சிறுத்தொண்டன்
         செங்காட்டங் குடிமேய
திருவடிதன் திருவருளே
         பெறலாமோ திறத்தவர்க்கே.

         பொழிப்புரை : கரிய சேற்றில் அளைந்த பசுங்காலையுடைய வெண்குருகே! அழகிய கழியிலுள்ள நாரையே! போர் செய்வதால் வலிமை பெற்ற அழகிய வடிவுடைய தோள்களையுடைய சிறுத் தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியிலுள்ள திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் திரு வடிகளை வழிபடும் திறத்தவர்களே அவன் திருவருளைப் பெறலாமோ? ஓர் அடியாள் அவருடைய திருவருளைக் கெஞ்சி வேண்டினாள் என்று ஒரு நாளாவது சென்று அவரிடம் உரைப்பீராக!


பாடல் எண் : 8
கூர்ஆரல் இரைதேர்ந்து
         குளம்உலவி வயல்வாழும்
தாராவே, மடநாராய்,
         தமியேற்கு ஒன்று உரையீரே,
சீராளன் சிறுத்தொண்டன்
         செங்காட்டங் குடிமேய
பேராளன் பெருமான்தன்
         அருள்ஒருநாள் பெறலாமே.

         பொழிப்புரை : கூர்மையான அலகால் இரையைக் கொத்திக் குளங்களிலும், வயல்களிலும் வாழ்கின்ற தாரா என்ற பறவையே! மட நாரையே! என் பொருட்டுச் சிவபெருமானிடம் சென்று ஒரு செய்தியைச் சொல்வீரோ? சிறந்த புகழுடைய சிறுத்தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற கீர்த்தியுடைய சிவபெருமான் திருவருளை ஒருநாள் அடியேன் பெறுதல் இயலுமா?

  
பாடல் எண் : 9
நறப்பொலிபூங் கழிக்கானல்
         நவில்குருகே, உலகுஎல்லாம்
அறப்பலிதேர்ந்து உழல்வார்க்குஎன்
         அலர்கோடல் அழகியதே,
சிறப்புஉலவான் சிறுத்தொண்டன்
         செங்காட்டங் குடிமேய
பிறப்புஇலிபேர் பிதற்றிநின்று
         இழக்கோ,எம் பெருநலமே.

         பொழிப்புரை : தேனுடைய பூக்கள் நிறைந்த கழியின் கரையிலுள்ள சோலையில் வாழ்கின்ற பறவையே! உலக மக்களெல்லாம் அறத்தைக் கருதி இடுகின்ற பிச்சையை ஏற்று உழல்கின்ற சிவபெருமானுக்குப் பிறர் என்னைத் தூற்றுமாறு செய்வது அழகாகுமா? சிறப்புடைய சிறுத்தொண்டன் வழிபடும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற பிறப்பிலியாகிய சிவபெருமானுடைய திருநாமத்தைப் போற்றித் துதிசெய்யும் நான் எல்லாவிதப் பெருமைக்குரிய நலங்களை இழப்பது முறைமையா?


பாடல் எண் : 10
* * * * * * * * * *

பாடல் எண் : 11
செந்தண்பூம் புனல்பரந்த
         செங்காட்டங் குடிமேய
வெந்தநீறு அணிமார்பன்
         சிறுத்தொண்டன் அவன்வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி
         அடிகளையே அடிபரவும்
சந்தம்கொள் சம்பந்தன்
         தமிழ்உரைப்போர் தக்கோரே.

         பொழிப்புரை : சிறந்த, குளிர்ந்த, அழகிய ஆறுபாயும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற, திருவெண்ணீறு அணிந்த மார்புடைய சிவனை, சிறுத்தொண்டர் வழிபட்டபடி, அழகிய, குளிர்ந்த ஒலிமிக்க காழியிலுள்ள இறைவனின் திருவடிகளை வணங்கும் ஞானசம்பந்தன் சந்தம் மிகுந்த திருத்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் மனிதப்பிறவி எடுத்ததன் தகுதியைப் பெற்றவராவர்.

                                             திருச்சிற்றம்பலம்



1.061  திருச்செங்காட்டங்குடி        பண் - பழந்தக்கராகம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நறைகொண்ட மலர்தூவி
         விரைஅளிப்ப நாள்தோறும்
முறைகொண்டு நின்றுஅடியார்
         முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டுஅறையும்
         செங்காட்டங் குடிஅதனுள்
கறைகொண்ட கண்டத்தான்
         கணபதீச் சரத்தானே.

         பொழிப்புரை :அடியவர்கள் நாள்தோறும் விதிப்படி தேன் பொருந்திய நாண்மலர்களைத் தூவி மணம்கமழச் செய்வித்துத் தவறாமல் நின்று பணிசெய்துவழிபட, விடக்கறை பொருந்திய கண்டத்தினனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயில், சிறகுகளை உடைய வண்டினங்கள் ஒலிக்கும் திருச்செங்காட்டங் குடியில் விளங்கும் கணபதீச்சரமாகும்.


பாடல் எண் : 2
வார்ஏற்ற பறைஒலியும்
         சங்குஒலியும் வந்துஇயம்ப
ஊர்ஏற்ற செல்வத்தோடு
         ஓங்கியசீர் விழவவுஓவாச்
சீர்ஏற்றம் உடைத்துஆய
         செங்காட்டங் குடிஅதனுள்
கார்ஏற்ற கொன்றையான்
         கணபதீச் சரத்தானே.

         பொழிப்புரை :கார்காலத்தே மலரும் கொன்றை மலரை அணிந்த சிவபிரான், வாரால் இழுத்துக் கட்டப்பட்ட பறைகளின் ஒலியும், சங்குகளின் ஒலியும் வந்திசைக்க ஊர் முழுதும் நிறைந்த செல்வ வளங்களோடு பரவிய புகழை உடைய திருவிழாக்கள் இடைவிடாது நிகழும் திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 3
வரந்தையான், சோபுரத்தான் ,
         மந்திரத்தான், தந்திரத்தான்,
கிரந்தையான், கோவணத்தான்,
         கிண்கிணியான், கையதோர்
சிரந்தையான், செங்காட்டங்
         குடியான்செஞ் சடைச்சேரும்
கரந்தையான், வெண்ணீற்றான்,
         கணபதீச் சரத்தானே.

         பொழிப்புரை :கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், வரந்தை, சோபுரம் ஆகிய தலங்களில் எழுந்தருளியிருப்பவன். வேதாகமங்களை அருளிச்செய்தவன். கோவணம் அணிந்தவன். காலிற் கிண்கிணி அணிந்தவன். கையில் உடுக்கை ஒன்றை ஏந்தியவன். சிவந்த சடைமுடிமீது கரந்தை சூடியவன். திருவெண்ணீறு அணிந்தவன். அப்பெருமான் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 4
தொங்கலும் கமழ்சாந்தும்
         அகிற்புகையும் தொண்டர்கொண்டு
அம்கையால் தொழுதுஏத்த
         அருச்சனைக்குஅன்று அருள்செய்தான்,
செங்கயல்பாய் வயல்உடுத்த
         செங்காட்டங் குடிஅதனுள்
கங்கைசேர் வார்சடையான்,
         கணபதீச் சரத்தானே.

         பொழிப்புரை :மணம் கமழும் மாலைகளும் சந்தனமும், அகில் புகையும் கொண்டு தொண்டர்கள் தம் அழகிய கைகளால் தொழுது போற்றி வணங்கி அருச்சிக்க அவர்கட்கு உடனே அருள்செய்த பெருமானும் கங்கை தங்கிய நீண்ட சடைமுடியை உடையவனுமாகிய சிவ பிரான், சிவந்த கயல் மீன்கள் பாயும் வளமான வயல்கள் புறமாகச் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 5
பாலினால் நறுநெய்யால்
         பழத்தினால் பயின்றுஆட்டி
நூலினால் மணமாலை
         கொணர்ந்துஅடியார் புரிந்துஏத்தச்
சேலின்ஆர் வயல்புடைசூழ்
         செங்காட்டங் குடிஅதனுள்
காலினால் கூற்றுஉதைத்தான்
         கணபதீச் சரத்தானே.

         பொழிப்புரை :தனது இடத்திருவடியால் இயமனை உதைத்தருளிய இறைவன், அடியவர்கள் ஆகம விதிப்படி பாலினாலும் மணம் கமழும் நெய்யாலும், பழவர்க்கங்களாலும் விரும்பி அபிடேகித்து மணமாலைகளைக் கொண்டு வந்து சூட்டி அன்போடு வழிபடுமாறு சேல்மீன்கள் நிறைந்த வளமான வயல்கள் புடைசூழ்ந்துள்ள திருச் செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 6
நுண்ணியான், மிகப்பெரியான்,
         நோவுளார் வாய்உளான்,
தண்ணியான், வெய்யான்,நம்
         தலைமேலான், மனத்துஉளான்,
திண்ணியான், செங்காட்டங்
         குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான், கண்ணுதலான்,
         கணபதீச் சரத்தானே.

         பொழிப்புரை :திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் நுண்ணியனயாவற்றினும் மிகநுண்ணியன். பருமையானபொருள்கள் யாவற்றிலும் மிகப்பருமையானவன். நோய் முதலியவற்றால் வருந்துவோர் தம் வாயினால் துதிக்கப் பெறுபவன். தண்மையானவன். புறச்சமயிகட்கு வெய்யவன். நமது முடிமீதும் மனத்தின் கண்ணும் உறைபவன். உறுதியானவன். தனது சிவந்த சடைமீது பிறைமதிக் கண்ணியைச் சூடியவன். நெற்றியில் கண்ணுடையவன்.


பாடல் எண் : 7
மையின்ஆர் மலர்நெடுங்கண்
         மலைமகள்ஓர் பாகமாம்
மெய்யினான், பைஅரவம்
         அரைக்குஅசைத்தான், மீன்பிறழச்
செய்யின்ஆர் அகன்கழனிச்
         செங்காட்டங் குடிஅதனுள்
கையின்ஆர் கூர்எரியான்
         கணபதீச் சரத்தானே.

         பொழிப்புரை :கருங்குவளை மலர் போன்ற நீண்ட கண்களை உடைய மலைமகளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ள திருமேனியனும், படம் பொருந்திய பாம்பை இடையிலே கட்டியவனும், கையின்கண் மிகுந்துள்ள தீயை ஏந்தியவனுமாகிய சிவபிரான், மீன்கள் விளங்கித் திரியும் வயல்களாலும் அகன்ற கழனிகளாலும் சூழப்பட்ட திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 8
தோடுஉடையான், குழைஉடையான்,
         அரக்கன்தன் தோள்அடர்த்த
பீடுஉடையான், போர்விடையான்,
         பெண்பாகம் மிகப்பெரியான்
சேடுஉடையான், செங்காட்டங்
         குடிஉடையான், சேர்ந்துஆடும்
காடுஉடையான், நாடுஉடையான்
         கணபதீச் சரத்தானே.

         பொழிப்புரை :திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச் சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், ஒரு காதில் தோட்டினை அணிந்தவன். பிறிதொருகாதில் குழை அணிந்தவன். கயிலையைப் பெயர்த்த இராவணனின் தோள்களை நெரித்த பெருமை உடையவன், போரிடும் காளையை உடையவன். பெண்ணை ஒரு பாகமாகக் கொண்டவன். மிகவும் பெரியவன். பெருமைகட்கு உரியவன். பூதகணங்களோடு சேர்ந்தாடும் சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டவன். நாடுகள் பலவற்றிலும் கோயில் கொண்டு அருள்புரிபவன்.


பாடல் எண் : 9
ஆன்ஊரா உழிதருவான்,
         அன்றுஇருவர் தேர்ந்துஉணரா
வான்ஊரான், வையகத்தான்,
         வாழ்த்துவார் மனத்துஉளான்,
தேன்ஊரான் செங்காட்டங்
         குடியான்,சிற் றம்பலத்தான்,
கான்ஊரான், கழுமலத்தான்,
         கணபதீச் சரத்தானே.

         பொழிப்புரை :விடைமிசை ஏறி அதனை ஊர்ந்து பல இடங்களிலும் திரிபவன். முன்னொரு காலத்தே திருமால் பிரமன் ஆகிய இருவர் அடிமுடிகளைத் தேர்ந்து உணர முடியாதவாறு வானளாவ ஓங்கி நின்றவன். இவ்வுலகில் சிற்றம்பலத்திலும் தேனூரிலும் கானூரிலும் கழுமலத்திலும் விளங்குபவன். அவ்விறைவன் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 10
செடிநுகரும் சமணர்களும்
         சீவரத்த சாக்கியரும்
படிநுகராது அயர்உழப்பார்க்கு
         அருளாத பண்பினான்
பொடிநுகரும் சிறுத்தொண்டர்க்கு
         அருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான்
         கணபதீச் சரத்தானே.

         பொழிப்புரை :முடைநாற்றத்தை நுகரும் சமணர்களும், காவி யாடை கட்டிய புத்தர்களும் எம்பெருமானுடைய இயல்புகளை அறிந்துணராது துன்புறுபவர்கள். அவர்கட்கு அருள்புரியாத இயல்பினனாகிய சிவபிரான் திருநீற்று மணத்தையே நுகரும் சிறுத்தொண்டர்க்கு அருள்செய்யும் பொருட்டுத் திருச்செங்காட்டங்குடியை விளங்கிய தலமாகக் கொண்டு அங்குள்ள கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 11
கறைஇலங்கு மலர்க்குவளை
         கண்காட்டக் கடிபொழிலின்
நறைஇலங்கு வயல்காழித்
         தமிழ்ஞான சம்பந்தன்
சிறைஇலங்கு புனல்படப்பைச்
         செங்காட்டங் குடிசேர்த்தும்
மறைஇலங்கு தமிழ்வல்லார்
         வான்உலகத்து இருப்பாரே.

         பொழிப்புரை :கருமை பரவி விளங்கும் மலராகிய குவளை கண்போல் மலர்ந்து விளங்குவதும், மணம் கமழும் சோலைகளிலுள்ள தேனின் மணம் வீசுவதுமான, வயல்களால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் தோன்றிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் கரைகளோடு கூடி நீர் நிறைந்து தோன்றும் வயல்கள் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரத்து இறைவர் மீது பாடிய வேதப்பொருள் நிறைந்த இத் திருப்பதிகத் தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகில் வாழ்வர்.
                                             திருச்சிற்றம்பலம்


         திருஞானசம்பந்தப் பெருமான் திருமருகல் நகரில் எழுந்தருளி இருந்த காலையில், அங்கு வந்து, மீண்டும் திருசெங்காட்டங்குடிக்கு எழுந்தருள சிறுத்தொண்ட நாயனார் வேண்ட, நிகழ்ந்த நிகழ்வு மற்றும் திருப்பதிகம்..


பெரிய புராணப் பாடல் எண் : 484
மற்றுஅவர்க்கு விடைகொடுத்துஅங்கு அமரும் நாளில்
         மருகல்நக ரினில்வந்து, வலிய பாசம்
செற்றபுகழ்ச் சிறுத்தொண்டர் வேண்ட, மீண்டும்
         செங்காட்டங் குடியில்எழுந்தருள வேண்டிப்
பற்றிஎழும் காதல்மிக மேன்மேல் சென்று,
         பரமனார் திறத்துஉன்னிப் பாங்கர் எங்கும்
சுற்றும் அருந் தவரோடும் கோயில் எய்திச்
         சுடர்மழுஆண் டவர்பாதம் தொழுவான் புக்கார்.

         பொழிப்புரை : வணிகனுக்கும் அப்பெண்ணுக்கும் விடைதந்து, சீகாழித் தலைவர், திருமருகலில் தங்கி இருக்கும் நாள்களில் வலிய ஆணவமலத் திண்மையினை அழித்த புகழுடைய சிறுத்தொண்ட நாயனார், திருமருகல் நகரில் வந்து வேண்டிக் கொள்ள, மீண்டும் பிள்ளையார் திருச்செங்காட்டாங்குடியில் எழுந்தருளுவதற்கான, மேன்மேலும் தொடர்ந்து எழுகின்ற பெருவிருப்புமிக, இறைவரின் திருவருளைப் பெற எண்ணி, சூழ்ந்திடும் அடியார் கூட்டத்தோடும் திருக்கோயிலை அடைந்து, ஒளியுடைய மழுப்படையை உடைய இறைவரின் திருவடிகளைத் தொழுவதற்காக உள்ளே புகுந்தார்.


பெ. பு. பாடல் எண் : 485
புக்குஇறைஞ்சி எதிர்நின்று போற்று கின்றார்,
         பொங்குதிரை நதிப்புனலும் பிறையும் சேர்ந்த
செக்கர்முடிச் சடைமவுலி வெண்நீற் றார்தம்
         திருமேனி ஒருபாகம் பசுமை ஆக,
மைக்குலவு கண்டத்தார் மருகல் கோயில்
         மன்னுநிலை மனங்கொண்டு வணங்கு வார்முன்,
கைக்கனலார் கணபதீச் சரத்தின் மேவும்
         காட்சிகொடுத்து அருளுவான் காட்டக் கண்டார்.

         பொழிப்புரை : கோயிலுக்குள் புகுந்து வணங்கிப் போற்றுகின்ற பிள்ளையார், பொங்கும் அலைகளையுடைய நீர் நிறைந்த கங்கையும் பிறைச் சந்திரனும் கூடிய சிவந்த சடையான மகுடமுடைய திருவெண்ணீற்றை அணிந்த இறைவரின் திருமேனி ஒருபாகம் பசுமையாக, நஞ்சு விளங்கும் கழுத்தையுடைய இறைவர், திருமருகல் கோயிலில் எழுந்தருளியிருந்த நிலைமையினை உள்ளத்தில் எண்ணிக் கொண்டு வணங்குவாராக அவர் முன்பு, கையில் தீயையுடைய இறைவர், கணபதீச்சரத்தில் பொருந்திய காட்சியை இங்குத் தந்தருளும் பொருட்டுக் காட்டியருளக் கண்டார்.


பெ. பு. பாடல் எண் : 486
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம்
         மல்குசெங் காட்டங் குடியின் மன்னிப்
பெருகு கணபதி ஈச்ச ரத்தார்
         பீடுஉடைக் கோலமே ஆகித் தோன்ற,
உருகிய காதலும் மீது பொங்க,
         உலகர்முன் கொள்ளும் உணர்வு நீட,
அருவிகண் வார்வுறப் பாடல் உற்றார்,
         "அங்கமும் வேதமும்" என்றுஎடுத்து.

         பொழிப்புரை : திருமருகலில் விரும்பி நிறைந்த கோலமானது, பொருந்திய திருச்செங்காட்டங்குடியில் நிலைபெற்றுக் காணத்தகும் கணபதீச்சரத்தாரின் பெருமையுடைய கோலமேயாகித் தோன்ற, உள்ளம் உருகுவதால் உள்ளதான காதல் மேன்மேலும் பொங்கவும், உலகத்தார்க்கு அறிவுறுத்தும் கருணை உணர்வு நீடவும், கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் அருவி போல வடிய, `அங்கமும் வேதமும்\' எனத் தொடங்கிப் பாடுவாராய்,

         இத்தொடக்கமுடைய பதிகம் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும் (தி.1 ப.6). பாடல்தொறும், `கணபதியீச்சரம் காமுறவே, மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்' என வருவதே இவ்வகையில் ஆசிரியர் கூறுதற்குக் காரணமாயிற்று. `மைந்த சொல்லாய்' எனப் பதிகம் முழுதும் அமைந்திருத்தலின் வினாவுரைப் பதிகமாயிற்று.


பெ. பு. பாடல் எண் : 487
கண்டுஎதிர் போற்றி வினவிப் பாடி,
         கணபதி ஈச்சரம் காத லித்த
அண்டர் பிரானை வணங்கி, வைகும்
         அப்பதி யில்சில நாள்கள் போற்றி,
தொண்டர் உடன்அருள் பெற்று, மற்றத்
         தொல்லைத் திருப்பதி எல்லை நீங்கி,
புண்டரி கத்தடஞ் சூழ் பழனப்
         பூம்புக லூர்தொழப் போது கின்றார்.

         பொழிப்புரை : அவ்வகையில் தோன்றப் பார்த்து, நேரே போற்றி, இவ்வாறு அருளுதற்குக் காரணம் என்ன? என வினவிய கருத்துப்படப் பாடி, கணபதீச்சரத்தில் விரும்பி எழுந்தருளியிருக்கும் தேவதேவரைச் சென்று வணங்கி, அத்திருச்செங்காட்டங்குடியில் சில நாள்கள் தங்கிப் போற்றித் தொண்டர்களுடன் விடைபெற்று, அப் பழைய பதியை நீங்கி, தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த வயல்களை யுடைய பூம்புகலூரினைச் சென்று வணங்குதற்கு எழுந்தருளுவாராகி,


1.006 திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்             பண் –  நட்டபாடை
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அங்கமும் வேதமும் ஓதும்நாவர்
         அந்தணர் நாளும் அடிபரவ,
மங்குல் மதிதவழ் மாடவீதி
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்,
செங்கயல் ஆர்புனல் செல்வமல்கு
         சீர்கொள்செங் காட்டங் குடிஅதனுள்,
கங்குல் விளங்குஎரி ஏந்திஆடும்
         கணபதி ஈச்சரம் காமுறவே.

         பொழிப்புரை :நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதும் நாவினராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க, வானமண்டலத்திலுள்ள சந்திரன் தவழ்ந்து செல்லுதற்கு இடமாய் உயர்ந்து விளங்கும் மாடவீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளியுள்ள இறைவனே! செங்கயல்கள் நிறைந்த புனல்சூழ்ந்ததும், செல்வ வளம் நிறைந்ததுமான புகழார்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியைக்கையில் ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதல் ஏன்? சொல்வாயாக.


பாடல் எண் : 2
நெய்தவழ் மூஎரி காவல்ஓம்பும்
         நேர்புரி நூல்மறை யாளர்ஏத்த
மைதவழ் மாட மலிந்தவீதி
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்,
செய்தவ நான்மறை யோர்கள்ஏத்தும்
         சீர்கொள்செங் காட்டங் குடிஅதனுள்
கைதவழ் கூர்எரி ஏந்திஆடும்
         கணபதி ஈச்சரம் காமுறவே.

         பொழிப்புரை :அவியாக அளிக்கப் பெறும் நெய் தவழ்ந்து எரியும் முத்தீயைப் பாதுகாப்பாக ஓம்பி வரும் நேர்மையாளரும், முப்புரி நூல் அணிந்த வேத வித்துக்களும் ஆகிய அந்தணர் ஏத்த, கரிய மேகங்கள் தவழும் மாட வீடுகள் நிறைந்த வீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளிய இறைவனே! தவங்கள் பலவும் செய்யும் நான்மறையோர் போற்றும் புகழ் பொருந்திய திருச்செங்காட்டங்குடியில், திருக்கரத்தில் மிக்க தீயை ஏந்தி ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.


பாடல் எண் : 3
தோலொடு நூல்இழை சேர்ந்தமார்பர்
         தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்,
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
         சீர்கொள்செங் காட்டங் குடிஅதனுள்
கால்புல்கு பைங்கழல் ஆர்க்கஆடும்
         கணபதி ஈச்சரம் காமுறவே.

         பொழிப்புரை :மான் தோலோடு கூடிய முப்புரிநூல் அணிந்த மார்பினராய்த் திரளாய்நின்று வேதம் வல்ல அந்தணர்கள் வளர்த்த செந்தீயிலிருந்து எழுந்த கரிய புகைபோய் மிகவும் மிகுதியாக வெளிப்படும் மாடங்களோடு கூடிய வீதிகளை உடைய திருமருகலில் விளங்கும் இறைவனே, சேல்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களை அடுத்த சோலைகளால் சூழப்பட்ட சிறப்புமிக்க திருச்செங்காட்டங்குடியில் காலில் கட்டிய கழல்கள் ஆர்க்க ஆடிக்கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக் காரணம் என்ன? சொல்வாயாக.


பாடல் எண் : 4
நாமரு கேள்வியர், வேள்விஓவா
         நான்மறை யோர்வழி பாடுசெய்ய,
மாமரு வும்மணிக் கோயில்மேய
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்,
தேமரு பூம்பொழில் சோலைசூழ்ந்த
         சீர்கொள்செங் காட்டங் குடிஅதனுள்
காமரு சீர்மகிழ்ந்து எல்லிஆடும்
         கணபதி ஈச்சரம் காமுறவே.

         பொழிப்புரை :நாவிற் பொருந்திய வாய்ப்பயிலப்பட்டுவரும் வேதங்களை ஓதி உணர்ந்தவர்களும், வேள்விகளை இடைவிடாமல் செய்து வருபவர்களுமாகிய நான்மறையாளர் வழிபடச் செல்வம் மருவிய மணிக்கோயிலை உடைய மருகலில் விளங்கும் மைந்தனே! தேன் நிறைந்த அழகிய பொழில்களால் சூழப்பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் விளங்குகின்ற அழகும் பெருமையும் மிக்க கணபதியீச்சரத்தைக் காமுற்று இராப்போதில் நடனம் ஆடுதற்குக் காரணம் யாது? சொல்வாயாக.

  
பாடல் எண் : 5
பாடல் முழவும் விழவும்ஓவாப்
         பன்மறை யோர்அவர் தாம்பரவ,
மாட நெடுங்கொடி விண்தடவும்
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்,
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
         சீர்கொள்செங் காட்டங் குடிஅதனுள்,
காடுஅக மேஇட மாகஆடும்
         கணபதி ஈச்சரம் காமுறவே.

         பொழிப்புரை :பாடலும், அதற்கிசைந்த முழவு ஒலியும், திருவிழாக்கள் ஒலியும்,இடைவிடாமல் நிகழ்வதும் மாட வீடுகளில் கட்டிய கொடிகள் வானைத்தடவுவதும் ஆகிய சிறப்புக்களை உடைய திருமருகலில் வேதங்கள் பலவும் கற்ற அந்தணாளர் பரவ எழுந்தருளிய இறைவனே! உயரமான மணம் மிக்க மலர்ச்சோலைகளால் சூழப்பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில், காட்டிடமே நாடகமாடுதற்கு இடமாக இருக்கவும், ஆடுதற்குரிய இடமாகக் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.


பாடல் எண் : 6
புனைஅழ லோம்புகை அந்தணாளர்
         பொன்அடி நாள்தொறும் போற்றிசைப்ப,
மனைகெழு மாடம் மலிந்தவீதி
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்,
சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த
         சீர்கொள்செங் காட்டங் குடிஅதனுள்
கனைவளர் கூர்எரி ஏந்திஆடும்
         கணபதி ஈச்சரம் காமுறவே.

         பொழிப்புரை :கிரியைகள் பலவற்றாலும் அழகு செய்யப்பெற்ற முத்தீயை வளர்க்கும் கைகளை உடைய அந்தணர்கள், நாள்தோறும் தன் திருவடிகளைப்போற்ற, இல்லங்களும் விளங்கும் மாடங்களும் நிறைந்த வீதிகளை உடைய திருமருகலில் விளங்கும் இறைவனே! நெற்பயிர்கள் திளைத்து வளரும் தண் வயல்களையடுத்த சோலைகளால் சூழப்பெற்ற நீர்வளம் மிக்க செங்காட்டங்குடியில் எரியேந்திக் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.


பாடல் எண் : 7
      * * * * 
பாடல் எண் : 8
பூண்தங்கு மார்பின் இலங்கைவேந்தன்
         பொன்நெடுந் தோள்வரை யால்அடர்த்து,
மாண்தங்கு நூன்மறை யோர்பரவ,
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்,
சேண்தங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
         சீர்கொள்செங் காட்டங் குடிஅதனுள்
காண்தங்கு தோள்பெயர்த்து எல்லிஆடும்
         கணபதி ஈச்சரம் காமுறவே.

         பொழிப்புரை :கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அணிகலன்கள் பொருந்திய மார்பினை உடைய இலங்கை மன்னன் இராவணனின் அழகிய பெரிய தோள்களை அம்மலையாலேயே அடர்த்து, மாட்சிமை பொருந்திய நான்மறையோர் பரவத் திருமருகலில் எழுந்தருளி விளங்கும் இறைவனே! வானளாவிய மண மலர்ச்சோலைகளால் சூழப்பெற்ற சீர்மிக்க செங்காட்டங்குடியில் அழகிய உன் திருத்தோள்களை அசைத்து இரவில் நடமிடுதற்கு இடனாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக.


பாடல் எண் : 9
அந்தமும் ஆதியும் நான்முகனும்,
         அரவுஆணை யானும் அறிவரிய
மந்திர வேதங்கள் ஓதுநாவர்
         மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்,
செந்தமி ழோர்கள் பரவிஏத்தும்
         சீர்கொள்செங் காட்டங் குடிஅதனுள்
கந்தம் அகில்புகை யேகமழும்
         கணபதி ஈச்சரம் காமுறவே.

         பொழிப்புரை :நான்முகனும் அரவணையானும் ஆதியாய முடியையும் அந்தமாகிய அடியையும் அறிதற்கு அரியவனாய், மந்திர வடிவான வேதங்களை ஓதும் நாவினரான அந்தணர் பரவி ஏத்தத் திருமருகலில் விளங்கும் இறைவனே! செந்தமிழ் வல்லோர் பரவித் துதிக்கும் சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் அகில் புகை மணமே கமழும் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக.


பாடல் எண் : 10
இலைமரு தேஅழ காகநாளும்
         இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்
நிலைஅமண் தேரரை நீங்கிநின்று
         நீதர்அல் லார்தொழு மாமருகல்,
மலைமகள் தோள்புணர் வாய்அருளாய் ,
         மாசுஇல்செங் காட்டங் குடிஅதனுள்
கலைமல்கு தோல்உடுத்து எல்லிஆடும்
         கணபதி ஈச்சரம் காமுறவே.

         பொழிப்புரை :மருத மரத்து இலையின் சாற்றினால் நிறமூட்டிய ஆடைகளை அணிந்த புத்தர், கடுக்காய், சுக்கு, இவற்றைத் தின்னும் சமணர் ஆகியோரை விடுத்து, சைவர்கள் தொழத்திருமருகலில் மலைமகளோடு உறையும் மைந்தனே! குற்றமற்ற செங்காட்டங்குடியில் மான்தோலை உடுத்தி நள்ளிருளில் ஆடுதற்கு இடனாய்க்கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.


பாடல் எண் : 11
நாலும் குலைக்கமுகு ஓங்குகாழி
         ஞானசம் பந்தன், நலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடம்ஓங்கும்
         மருகலின் மற்றுஅதன் மேல்மொழிந்த
சேலும் கயலும் திளைத்தகண்ணார்
         சீர்கொள்செங் காட்டங் குடிஅதனுள்
சூலம்வல் லான்கழல் ஏத்துபாடல்
         சொல்லவல் லார்வினை இல்லையாமே.

         பொழிப்புரை :தொங்குகின்ற குலைகளோடு பாக்கு மரங்கள் ஓங்கி வளரும் சீகாழிப்பதியினனாய ஞானசம்பந்தன், நலம் திகழ்வதும், மேகமும் பிறையும் தவழும் மாடங்கள் ஓங்கியதுமான திருமருகல் இறைவனையும், சேல் கயல் ஆகிய மீன்வகைகளை ஒத்த கண்களை உடைய மகளிர் வாழ்வதும் சிறப்பு மிக்கதும் ஆகிய செங்காட்டங்குடியில் முத்தலைச் சூலம் ஏந்தியவனாய் விளங்கும் பெருமானையும் புகழ்ந்து ஏத்திய பாடல்களைச் சொல்லித் துதிக்க வல்லார் வினைகள், இல்லையாகும்.
                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 240
சீர்தரு செங்காட் டங்குடி, நீடுந் திருநள்ளாறு,
ஆர்தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி,
வார்திகழ் மென்முலை யாள்ஒரு பாகன் திருமருகல்,
ஏர்தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்.

         பொழிப்புரை : அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் சிறப்பு உடைய திருச்செங்காட்டங்குடி, செல்வம் மிகும் திருநள்ளாறு, பூமரங்கள் நிறைந்த சோலைகள் சூழந்த திருச்சாத்தமங்கையிலுள்ள அயவந்தி, கச்சுப் பொருந்திய மார்பகங்களையுடைய அம்மையை ஒரு கூற்றில் கொண்டருளும் சிவபெருமானின் திருமருகல் ஆகிய திருப்பதிகளை எல்லாம் அன்புடன் சென்று வணங்கி இன்பம் அடைந்தார்.

         இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

1.    திருச்செங் காட்டங்குடி: `பெருந்தகையை` (தி.6 ப.84) - திருத்தாண்டகம்.
2.    திருநள்ளாறு: (அ). `உள்ளாறாத` (தி.5 ப.68) - திருக்குறுந்தொகை. (ஆ). `ஆதிக்கண்` (தி.6 ப.20) - திருத்தாண்டகம்.
3.    திருமருகல்: `பெருகலாம்` (தி.5 ப.88) - திருக்குறுந்தொகை.

         திருச்சாத்தமங்கைக்குரிய பதிகம் கிடைத்திலது.



6. 084     திருச்செங்காட்டங்குடி      திருத்தாண்டகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பெருந்தகையை, பெறற்குஅரிய மாணிக் கத்தை,
         பேணிநினைந்து எழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்குஅதனை, நின்ற பூமேல்
         எழுந்தருளி இருந்தானை, எண்தோள் வீசி
அருந்திறல்மா நடமாடும் அம்மான் தன்னை,
         அங்கனகச் சுடர்க்குன்றை, அன்று ஆலின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வர்க்கு அருள்செய் தானை,
         செங்காட்டங் குடிஅதனில் கண்டேன் நானே.

         பொழிப்புரை :பெருமையாம் தன்மை உடையானும் , பெறற்கு அரிய மாணிக்கம் போன்றவனும், விரும்பி நினைந்தவாறே துயிலெழுவார் மனத்தில் நிலைபெற்றுநின்ற மணிவிளக்கு ஆனவனும், நீர்நிலையில் தாள்மேல் நின்ற தாமரை மலரில் எழுந்தருளியிருந்தவனும், எட்டுத் தோள்களையும் வீசி உலகத்தைத் தொழிற்படுத்தும் அரிய ஆற்றல் மிக்க பெரிய கூத்தினை இயற்றும் பெருமானும், அழகிய கனகக் குன்று போல்வானும், பண்டு ஆலின் கீழ் நால்வர்க்கும் திருந்திய மறைப்பொருளை உபதேசித்து அருள்செய்தானும் ஆகிய சிவபெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன் .


பாடல் எண் : 2
துங்கநகத் தால்அன்றித் தொலையா வென்றித்
         தொகுதிறல்அவ் இரணியனை ஆகம் கீண்ட
அங்கனகத் திருமாலும், அயனுந் தேடும்
         ஆர்அழலை, அநங்கன்உடல் பொடியாய் வீழ்ந்து
மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை,
         வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற
செங்கனகத் திரள்தோள்எம் செல்வன் தன்னை,
         செங்காட்டங் குடிஅதனில் கண்டேன் நானே.

         பொழிப்புரை :உயர்ந்த நகத்தாலன்றிப் பிற கருவிகளால் அழியாதவனும் தன் ஆற்றலால் பலரையும் வென்று கூட்டிய வெற்றிகளை உடையவனும் ஆகிய இரணியனை மார்பைப் பிளந்தவனும் , அழகிய கற்றூணில் தோன்றிச் சிரித்தவனும் ஆகிய திருமாலும் , நான்முகனும் தேடும் அணுகுதற்கரிய நெருப்புப் பிழம்பானவனும் , மன்மதன் உடல் எரிந்து சாம்பராய் உருக்குலைந்து மங்கவும் அவன் மனைவி இரதி அவனைப் பெற்று நகுமாறு செய்யவல்ல அமுதம் ஆனவனும் , வளவிய கயிலை மாமலைமேல் நிலைத்து நின்றவனும் , செம்பொன் நிறங்கொண்டு திரண்ட தோள்களைப்பெற்ற செல்வனும் ஆகிய சிவ பெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன் .


பாடல் எண் : 3
உருகுமனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை,
         உம்பர்மணி முடிக்குஅணியை, உண்மை நின்ற
பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னை,
         பேணியஅந் தணர்க்குமறைப்பொருளை, பின்னும்
முருகுவிரி நறுமலர்மேல் அயற்கும் மாற்கும்
         முழுமுதலை, மெய்த்தவத்தோர் துணையை, வாய்த்த
திருகுகுழல் உமைநங்கை பங்கன் தன்னை,
         செங்காட்டங் குடிஅதனில் கண்டேன் நானே.

         பொழிப்புரை :நினைந்துருகும் அடியாருடைய மனத்தில் ஊற்றெடுக்கும் தேன் ஆனவனும் , தேவர்களுடைய மணிகள் இழைத்த மகுடங்களுக்கு அணியாய் நிற்கும் திருவடிகளை உடையவனும், உண்மைக் கண்ணே நின்றாராய் உயர்ந்தோர் கூறும் உறுதிச் சொற்களை ஏற்றுப் பெருகுநிலையாகிய வீடு அடைதலையே குறிக் கோளாய்க் கொண்டவருடைய அறிவாய் விளங்குபவனும், தன்னை விரும்பித் தொழும் அந்தணருக்கு விளங்கித் தோன்றும் மறைப் பொருள் ஆனவனும், பிற்படுவோராம் மணங்கமழும் தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் முற்பட்ட பரமகாரணன் ஆனவனும், மெய்யான தவத்தைச் செய்வார்க்கு அமைந்த உறுதுணைவனும் , சுருண்ட குழலினையுடைய உமைநங்கைக்கு வாய்த்த பங்கனும் ஆகிய சிவபெருமானைச் செங்காட்டங்குடியில் நான் கண்டேன் .


பாடல் எண் : 4
கந்தமலர்க் கொன்றைஅணி சடையான் தன்னை,
         கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
சந்தமலர்த் தெரிவை ஒரு பாகத்தானை,
         சராசரநல் தாயானை, நாயேன் முன்னைப்
பந்தம்அறுத்து ஆளாக்கப் பணிகொண்டு, ஆங்கே
         பன்னியநூல் தமிழ்மாலை பாடுவித்து,என்
சிந்தைமயக்கு அறுத்ததிரு வருளினானைச்
         செங்காட்டங் குடிஅதனில் கண்டேன் நானே.

         பொழிப்புரை :மணங்கமழும் கொன்றை மலரையணிந்த சடையானும் சிறந்த மரகதமணி உமிழும் ஒளியுடனே விளங்கும் பொன்னின் ஒளிபோல அழகிய மலரணிந்த உமையின் ஒரு பாகத்தொடு தன் பாகம் விளங்குபவனும் , இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்களுக்கு நற்றாய் ஆனவனும், நாயேனுடைய பழைய வினையை அறுத்து அடிமை கொள்ள என் தொண்டினை மதித்துக் கொண்டாற் போல முன்னையோர் உரைத்த இலக்கண நெறியின் அமைந்த தமிழ் மாலையை யான் பாடச் செய்து அதனால் என் மனத்துமண்டிய மயக்கத்தைப் போக்கிய திருவருளைச் செய்தவனும் ஆகிய சிவ பெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் .


பாடல் எண் : 5
நஞ்சுஅடைந்த கண்டத்து நாதன் தன்னை,
         நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாசமாக
வெஞ்சினத்தீ விழித்ததுஒரு நயனத் தானை,
         வியன்கெடில வீரட்டம் மேவி னானை,
மஞ்சுஅடுத்த நீள்சோலை மாட வீதி
         மதில்ஆரூர் இடங்கொண்ட மைந்தன் தன்னை,
செஞ்சினத்த திரிசூலப் படையான் தன்னை,
         செங்காட்டங் குடிஅதனில் கண்டேன் நானே.

         பொழிப்புரை :நஞ்சு பொருந்திய கண்டத்தை உடைய தலைவனும் குளிர்ந்த மலர்களாகிய அழகிய அம்புகளைக் கொண்ட மன்மதன் அழியுமாறு கொடிய சினமாகிய நெருப்பு எழ விழித்த ஒரு நெற்றிக் கண்ணினனும், கெடில நதிக்கரையில் விளங்கும் பரந்த அதிகை வீரட்டம் மேவினவனும், மேகம் தவழும் நீண்ட சோலைகளை உடையதும் மாடவீதிகள் நிறைந்ததும் மதிலால் வளைப்புண்டதுமாகிய ஆரூரைத் தனது இடமாகக் கொண்ட மைந்தனும், சினத்தால் சிவந்து தோன்றும் திரிசூலப் படையினனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியிற் கண்டேன் .


பாடல் எண் : 6
கன்னியைஅங்கு ஒருசடையில் கரந்தான் தன்னை,
         கடவூரில் வீரட்டம் கருதி னானை,
பொன்னிசூழ் ஐயாற்றுஎம் புனிதன் தன்னை,
         பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானை,
பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் தன்னை,
         பரிந்துஇமையோர் தொழுதுஏத்திப் பரனே யென்று
சென்னிமிசைக் கொண்டுஅணிசே வடியி னானை,
         செங்காட்டங் குடிஅதனில் கண்டேன் நானே.

         பொழிப்புரை :கங்கையைத் தன் ஒப்பற்ற சடையின் ஒரு பால் மறைத்தவனும், கடவூர் வீரட்டானத்தைச் சிறந்த இடமாகக் கருதினவனும், காவிரி சூழும் ஐயாற்றில் விளங்கும் எம் புனிதனும், பூந்துருத்தி நெய்த்தானம் ஆகிய பதிகளில் நிலைபெற்றவனும், தான் உரைத்த நான்மறைகளின் பொருளைத் தக்கவர்க்கு விளங்க விரித்து உரைக்கும் இயல்பினனும், தேவர்கள் அன்பு கொண்டு வணங்கிப் புகழ்ந்து `பரனே` என்று முழங்கித் தம் தலைமீது அணியாகச் சூடிக் கொள்ளும் சிவந்த அடிகளை உடையவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் .


பாடல் எண் : 7
எத்திக்கும் ஆய்நின்ற இறைவன் தன்னை,
         ஏகம்பம் மேயானை, இல்லாத் தெய்வம்
பொத்தித்தம் மயிர்பறிக்கும் சமணர் பொய்யில்
         புக்குஅழுந்தி வீழாமே போத வாங்கி,
பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்து,
         பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கி,
தித்தித்துஎன் மனத்துஉள்ளே ஊறும் தேனை,
         செங்காட்டங் குடிஅதனில் கண்டேன் நானே.

         பொழிப்புரை :எல்லாத் திக்குகளுமாய் நின்ற இறைவனும், ஏகம்பத்தில் பொருந்தி நிற்பவனும், தெய்வத்தன்மை இல்லாத ஒன்றைத் தெய்வமாக மனத்துட் கொண்டு தம் மயிரைப் பறிக்கும் சமணருடைய பொய் ஒழுக்கப் படுகுழியில் நான் புக்கழுந்தி வீழாமல் , தன் திருவடியாகிய கரையில் புகும்படி என்னைஎடுத்துப் பத்திக்குரிய வழியைக் காட்டிப் பாவத்தைத் தீர்த்து பழைய வினைப் பயனாக விளைவன எல்லாவற்றையும் விலக்கி என் மனத்துள்ளே ஊறுந் தேனாய்த் தித்திப்பவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங் குடியில் கண்டேன் .


பாடல் எண் : 8
கல்லாதார் மனத்துஅணுகாக் கடவுள் தன்னை,
         கற்றார்கள் உற்றுஓரும் காத லானை,
பொல்லாத நெறிஉகந்தார் புரங்கள் மூன்றும்
         பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை,
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க
         நிறைதவத்தை அடியேற்கு நிறைவித்து, என்றும்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானை,
         செங்காட்டங் குடிஅதனில் கண்டேன் நானே.

         பொழிப்புரை :உண்மை நூல்களைக் கல்லாதார் மனத்தை அணுகாது அகலும் கடவுளும், மெய்ந்நூல்களைக் கற்றவர்கள் ஆராய்ந்து அடையும் அன்பனும், பிறர்க்குத் துன்பமிழைத்தலாகிய பிழைபட்ட நெறியை விரும்பினவருடைய புரங்கள் மூன்றும் அழிந்து விழுமாறு போர் செய்யவல்ல அம்பினைத் தொடுத்தவனும் நிலையற்ற புலாற்குடிலாகிய உடலிடத்து நரைதிரை மூப்புப் பிணி இறப்பு முதலியவற்றால் நிகழும் மாறுபாடு நீங்க நலங்கள் நிறைவதற்குரிய தவத்தை என்பால் செய்து வேறு இடத்திற்குக் கொண்டு செல்லாத செவ்விய நெறியிலே என்னைச் செலுத்துபவனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன் .


பாடல் எண் : 9
அரியபெரும் பொருள்ஆகி நின்றான் தன்னை,
         அலைகடலில் ஆலாலம் அமுது செய்த
கரியதுஒரு கண்டத்துச் செங்கண் ஏற்றுக்
         கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை,
உரியபல தொழில் செய்யும் அடியார்தங்கட்கு
         உலகம்எலாம் முழுதுஅளிக்கும் உலப்பி இலானை,
தெரிவைஒரு பாகத்துச் சேர்த்தி னானை,
         செங்காட்டங் குடிஅதனில் கண்டேன் நானே.

         பொழிப்புரை :கிடைத்தற்கரிய பெரும்பொருளாய்த் திகழ்பவனும் , அலையை உடைய கடலிடத்துத் தோன்றிய ஆலால நஞ்சினை உண்ணக் கழிந்த கண்டத்தினனும், சிவந்த கண்களையுடைய இடபத்தின் மேலேறி ஒளிவிடும் சிறந்த மாணிக்க மணிபோல் விளங்குந் தோற்றத்தை உடையவனும், தத்தம் நிலைக்கு ஏற்ற தொண்டினைச் செய்யும் அடியார்க்கு உலகங்களைக் கற்பம் முடியுமளவும் ஆள அளிப்பவனும், அழிவில்லாதவனும், உமையம்மை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபெருமானை நான் செங் காட்டங்குடியில் கண்டேன் .


பாடல் எண் : 10
போர்அரவ மால்விடைஒன்று ஊர்தி யானை,
         புறம்பயமும் புகலூரும் மன்னி னானை,
நீர்அரவச் செஞ்சடைமேல் நிலாவெண் திங்கள்
         நீங்காமை வைத்தானை, நிமலன் தன்னை,
பேர்அரவப் புட்பகத்தேர் உடைய வென்றிப்
         பிறங்குஒளிவாள் அரக்கன்முடி இடியச் செற்ற
சீர்அரவக் கழலானை, செல்வன் தன்னை,
         செங்காட்டங் குடிஅதனில் கண்டேன் நானே.

         பொழிப்புரை :போரிடத்து எழுப்பும் ஒலியை உடையதும் பெருமை மிக்கதும் ஆகிய ஒரு விடையை ஊர்தியாக உடையவனும், புறம்பயத்தும் புகலூரிலும் நிலைத்து நின்றவனும், கங்கையும், பாம்பும் நிலவும் செஞ்சடைமேல் நிலாக்காலும் வெண்டிங்கட்பிறையை என்றும் நீங்காதவாறு வைத்தவனும், நிமலனும், மிக்க ஒலியுடைய புட்பக விமானத்தை உடையவனாய், வெற்றியால் மூவுலகங்களிலும் விளங்கிய புகழுடைய கொடிகள் அரக்கனாகிய இராவணனுடைய முடிகள் பொடியாகும்படி ஒலிக்கும் அழகிய கழலினனும், செல்வனும் ஆகிய சிவபெருமானை நான் செங்காட்டங்குடியில் கண்டேன்.
                                             திருச்சிற்றம்பலம்









No comments:

Post a Comment

பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இருவினைகள் ஈட்டும் (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதனன தாத்த தனதனன தாத்த      தனதனன தாத்த ...... தன...