ஒன்று இல்லாமையால் பாழ் ஆகும்





34. ஒன்றின் இல்லாமையால் பாழ்படல்

தாம்பூல தாரணம் இலாததே வருபூர்ண
     சந்த்ரன்நிகர் முகசூ னியம்!
  சற்சனர் இலாததே வெகுசனம் சேர்ந்துவாழ்
     தரும்பெரிய நகர்சூ னியம்!

மேம்பாடு இலாதமன் னவர்கள் வந்துஆள்வதே
     மிக்கதே சச்சூ னியம்!
  மிக்கசற் புத்திரன் இலாததே நலமான
     வீறுசேர் கிருகசூ னியம்!

சோம்பாத தலைவர்இல் லாததே வளமுடன்
     சொல்உயர் சபாசூ னியம்!
  தொல்உலகில் அனைவர்க்கும் மாநிதியம் இல்லதே
     சுத்தசூ னியம்என் பர்காண்!

ஆம்பல்வத னத்தனைக் குகனை ஈன்று அருள்செய்த
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

               இதன் பொருள் ---

     ஆம்பல் வதனத்தனை --- யானை முகம் படைத்த விநாயகப் பெருமானையும்,

     குகனை ஈன்று அருள் செய்த அத்தனே --- முருகப் பெருமானையும் அளித்து அருள் செய்த தலைவனே!

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

      தாம்பூல தாரணம் இலாததே வரு பூரண சந்திரன் நிகர் முக சூனியம் --- தாம்பூலம் தரித்துக் கொள்ளாமல் இருப்பதே முழுமதி என விளங்கும் முகத்தின் அழகைப் பாழாக்கும்,

     சற்சனர் இல்லாததே வெகுசனம் சேர்ந்து வாழ் தரும் பெரிய நகர் சூனியம் --- நல்லோர்கள் இல்லாததே மக்கள் பலரும் கூடி வாழும் பெரிய நகர்க்குப் பாழாகும்,

     மேம்பாடு இலாத மன்னவர்கள் வந்து ஆள்வதே மிக்க
தேசச் சூனியம் --- உயர்ந்த பண்பு இல்லாத அரசர்கள் வந்து ஆட்சி புரிவது பெரிய நாட்டுக்குப் பாழாகும்,

     மிக்க சற்புத்திரன் இலாததே நலமான வீறுசேர் கிருக சூனியம் --- சிறந்த நல்ல மகன் இல்லாமையே அழகிய பெருமை பெற்ற வீட்டுக்குப் பாழாகும்,

     சோம்பாத தலைவர் இல்லாததே வளமுடன் சொல் உயர் சபா சூனியம் --- ஊக்கம் சிறிதும் குறைவு படாத தலைவர் இல்லாமையே செழிப்புடன் சொல்லப்படுகின்ற சபைக்குப் பாழாகும்,

     தொல் உலகில் அனைவர்க்கும் மாநிதியம் இல்லதே சுத்த சூனியம் என்பர் --- பழமையான உலகத்தில் யாவருக்கும் பெருஞ்செல்வம் இல்லாமையே பெரும் பாழாகும் என்றும் அறிந்தோர் கூறுவர்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...