மூடர்களில் உயர்வு தாழ்வு




35. மூடர்களில் உயர்வு தாழ்வு

பெண்புத்தி கேட்கின்ற மூடரும், தந்தைதாய்
     பிழைபுறம் சொலும்மூ டரும்,
  பெரியோர்கள் சபையிலே முகடுஏறி வந்தது
     பிதற்றிடும் பெருமூ டரும்,

பண்புற்ற சுற்றம் சிரிக்கவே இழிவான
     பழிதொழில்செய் திடுமூ டரும்,
  பற்றற்ற பேர்க்குமுன் பிணைநின்று பின்புபோய்ப்
     பரிதவித் திடுமூ டரும்,

கண்கெட்ட மாடுஎன்ன ஓடிஇர வலர்மீது
     காய்ந்துவீழ்ந் திடுமூ டரும்,
  கற்றுஅறி விலாதமுழு மூடருக்கு இவரெலாம்
     கால்மூடர் அரைமூ டர்காண்,

அண்கற்ற நாவலர்க் காகவே தூதுபோம்
     ஐயனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

               இதன் பொருள் ---

     அண்கற்ற நாவலர்க்காகவே தூது போம் ஐயனே --- உன்னை அடுத்து இருப்பது ஒன்றையே அறிந்து இருந்த சுந்தரருக்காகப் பரவையாரிடம் தூது சென்ற தலைவனே!,

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     பெண் புத்தி கேட்கின்ற மூடரும் --- பெண்ணின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் அறிவில்லாதவரும்,

     தந்தை தாய் பிழை புறம் சொலும் மூடரும் --- தந்தை தாய் செய்யும் குற்றத்தை வெளியிலே சொல்லுகின்ற அறிவு இல்லாதவரும்,

     பெரியோர்கள் சபையிலே முகடு ஏறி வந்தது பிதற்றிடும் பெரு மூடரும் --- சான்றோர் வீற்றிருக்கும் சபையிலே மேடை ஏறி நின்று வாய்க்கு வந்ததைப் பிதற்றுகின்ற பெரு மூடரும்,

     பண்பு உற்ற சுற்றம் சிரிக்க இழிவான பழிதொழில் செய்திடும் மூடரும் --- நற்பண்புகளை உடைய உறவினர் சிரித்து இகழுமாறு இழிந்த பழிப்புக்கு இடமான செயல்களைப் புரியம் மூடரும்

     பற்று அற்ற பேர்க்கு முன் பிணை நின்று பின்பு போய்ப் பரிதவித்திடும் மூடரும் --- எந்த ஆதரவும் இல்லாதவர்களுக்கு முதலில் ஆராயாமல் பிணையாகச் சென்று, பிறகு வருந்துகின்ற மூடரும்,

     கண் கெட்ட மாடு என்ன ஓடி இரவலர் மீது காய்ந்து வீழ்ந்திடும் மூடரும் --- கண் இல்லாத குருட்டு மாட்டைபோல ஓடி, இல்லை என்று வந்து இரந்தவர் மேல் சீறி விழுகின்ற மூடரும்,

     இவர் எலாம் --- ஆகிய இவர்கள் யாவரும் மூடர்களே ஆனாலும்,

     கற்று அறிவிலாத முழு மூடருக்குக் கால்மூடர் அரைமூடர் --- அறிவு நூல்களைக் கற்று, அவற்றின் பொருளை உணர்ந்து, அவற்றின்படி நடக்கும் அறிவு இல்லாதவர்களே முழுமையான மூடர்கள். இவர்களைப் பார்க்க, மேலே குறித்தோர் யாவரும் கால் மூடரும் அரை மூடரும் ஆவர்.

     கருத்து --- மற்ற மூடர்கள் யாவரிலும் சிறந்த முழுமையான மூடர் என்போர், அறிவு நூல்களைக் கற்று, உணர்ந்து, அவற்றின்வழி நடவாதவர்களே என்று சொல்லப்பட்டது.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...