விடியும் மட்டும் மழை பெய்தாலும் பயனில்லை





21. விடியல் மட்டும் மழைபெயினும் பயனில்லை.

கொடியருக்கு நல்லபுத்தி சொன்னாலும்
     தெரியாது! கொடை இல்லாத
மடையருக்கு மதுரகவி உரைத்தாலும்
     அவர்கொடுக்க மாட்டார் கண்டீர்!
படி அளக்கும் தண்டலைநீள் நெறியாரே!
     உலகம் எலாம் பரவி மூடி
விடியல்மட்டும் மழைபெயினும், அதில்ஓட்டாங்
     குச்சில்முளை வீசி டாதே!

               இதன் பொருள் ---

     படி அளக்கும் தண்டலைநீள் நெறியாரே --- உயிர்கள் எல்லாவற்றிற்கும் அவற்றின் வினைக்கு ஏற், தக்க பயனை ஊட்டும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய நீள் நெறியாரே!;

     உலகம் எலாம் பரவி மூடி விடியல் மட்டும் மழை பெயினும் --- உலகம் எல்லாம் படர்ந்து கவிந்து விடியும் வரையில் மழை பெய்தாலும்,

     அதின்  ஓட்டாங்குச்சில் முளை  வீசிடாது --- அதனால், ஓட்டாங்குச்சில் முளைக்காது,

     அது போலவே,

     கொடியருக்கு நல்ல புத்தி சொன்னாலும் தெரியாது --- தீயோருக்கு நல்ல அறிவுரைகளைக் கூறினாலும் அவருக்கு விளங்காது,

     கொடை இல்லாத மடையருக்கு மதுரகவி உரைத்தாலும் --- ஈகைப்பண்பு அற்ற பேதையருக்கு இனிய பாடல்களைப் பாடினாலும்,

     அவர் கொடுக்கமாட்டார் --- அப் பேதையர் ஒன்றும் கொடுக்க மாட்டார்.

           விளக்கம் --- படி அளத்தல் - உயிர்களின் ஊழ்வினைக்கு  ஏற்றவாறு பயனை நுகர உலகையும், உலகப் பொருள்களையும் படைத்து அளித்தல். ‘ஓட்டாங் குச்சில் முளைக்காது' என்பது பழமொழி. விடியும் மட்டும் மழை பொழிவது, என்பது கொடுக்கும் பண்பு இல்லாதவனுக்கு அளவில்லாத செல்வம் வாய்த்ததைக் குறிக்கும். தீய குணம் உள்ளோருக்கு பலவிதமான அறிவுரைகளைச் சொல்வதைக் குறிக்கும். அளவில்லாத அறிவுரைகளைச் சொன்னாலும் தீயவருக்கு ஏறாது.  


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...