திருப்பரங்குன்றம் - 0009. கரு அடைந்து




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கருவடைந்து (திருப்பரங்குன்றம்)

முருகா!
பிறவியில் உழன்றது போதும்
திருவருள் பெற அருள்வாய்

தனனதந்த தத்தத்த தந்த
     தனனதந்த தத்தத்த தந்த
     தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான


கருவடைந்து பத்துற்ற திங்கள்
     வயிறிருந்து முற்றிப்ப யின்று
     கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்

கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
     முலையருந்து விக்கக்கி டந்து
     கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி

அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
     இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
     அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி

அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
     பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
     தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று .....பெறுவேனோ

இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
     னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
     யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் .....நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரற்சி றந்த
     அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
     எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று
     அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
     அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே

அயனையும்பு டைத்துச்சி னந்து
     உலகமும்ப டைத்துப்ப ரிந்து
     அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கரு அடைந்து, பத்து உற்ற திங்கள்
     வயிறு இருந்து, முற்றிப் பயின்று,
     கடையில் வந்து உதித்துக் குழந்தை ...... வடிவாகி,

கழுவி அங்கு எடுத்து, சுரந்த
     முலை அருந்துவிக்கக் கிடந்து,
     கதறி, அங்கை கொட்டித் தவழ்ந்து ...... நடமாடி,

அரை வடங்கள் கட்டி, சதங்கை
     இடு குதம்பை பொன் சுட்டி தண்டை
     அவை அணிந்து முற்றிக் கிளர்ந்து ...... வயது ஏறி,

அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து,
     பிணி உழன்று, சுற்றித் திரிந்த்து,
     அமையும், உன் க்ருபைச் சித்தம் என்று ....பெறுவேனோ?

இரவி இந்த்ரன், வெற்றிக் குரங்கின்
     அரசர் என்றும், ஒப்பற்ற உந்தி
     இறைவன் எண்கு இனக்கர்த்தன் என்றும்,.....நெடுநீலன்

எரியது என்றும், ருத்ரன் சிறந்த
     அநுமன் என்றும், ஒப்பற்ற அண்டர்
     எவரும் இந்த வர்க்கத்தில் வந்து ...... புனம் மேவ,

அரிய தன் படைக்கர்த்தர் என்று,
     அசுரர் தம் கிளைக் கட்டை வென்ற,
     அரிமுகுந்தன் மெச்சு உற்ற பண்பின் ......மருகோனே!

அயனையும் புடைத்துச் சினந்து,
     உலகமும் படைத்து, பரிந்து
     அருள் பரங்கிரிக்குள் சிறந்த ...... பெருமாளே.


பதவுரை


      இரவி இந்த்ரன் --- சூரியனும் தேவேந்திரனும்,

     வெற்றிக் குரங்கின் அரசர் என்றும் --- வெற்றியை உடைய வாநரங்களுக்கு அரசர்களாகவும் (சுக்ரீவன், வாலியாகவும்)

     ஒப்பு அற்ற --- சமானமில்லாத,

     உந்தி இறைவன் --- நாராயணரது உந்திக் கமலத்தில் தோன்றிய உலகிற்கு இறைவனாகிய பிரமதேவன்,

     எண்கு இனக் கர்த்தன் என்றும் --- கரடிக் குலத்திற்கு அதிபதியாகவும் (ஜாம்புவான்),

     நெடு நீலன் எரியது என்றும் --- அக்கினி பகவான் வல்லபத்தால் உயர்ந்த நீலன் என்கிற வாநர வீரனாகவும்,

     ருத்திரன் சிறந்த அனுமன் என்றும் --- உருத்திரமுர்த்தி அறிவாலும் ஆற்றலாலும் கல்வியாலும் ஒழுக்கத்தாலும் சிறந்த அனுமானாகவும்,

     ஒப்பு அற்ற --- சமானமில்லாத,

     அண்டர் எவரும் --- தேவர்கள் யாவரும்,

     இந்த வர்க்கத்தில் வந்து --- இத்தன்மையுடைய வாநர குலத்தில் வந்து பிறந்து,

     புன மேவ --- (நீங்கள் போய் முன்னதாகப் பிறந்து இருங்கள் என்று உத்தரவு செய்தவாறு) ஆரண்யத்தில் அடைந்திருக்க,

     அரிய தன் படைக் கர்த்தர் என்று --- அவ் வாநர சிரேட்டர்களை அருமையான சேனைகளாகவும் சேனாதிபதியாகவும் ஏற்றுக்கொண்டு,

     அசுரர் தம் கிளை கட்டை வென்ற --- இராவண கும்பகர்ணாதி இராக்கதர்களின் ஒற்றுமை மிகுந்த வமிசம் முழுவதையும் அழித்து வெற்றி பெற்ற,

     அரி --- பாவங்களை நீக்குபவரும்,

     முகுந்தன் --- முக்தியைக் கொடுப்பவருமாகிய இராமச் சந்திரமூர்த்தி,

     மெச்சுற்ற பண்பின் --- மெச்சத் தகுந்த அருமைக் குணத்தையுடைய,

     மருகோனே --- மருமகனாக எழுந்தருளினவரே!

      அயனையும் புடைத்துச் சினந்து --- பிரமன் (செருக்குற்று வந்ததால்) படைத்தற் றொழிலுக்கு அதிபனாயிருந்துங்கூட அவனைப் பொருள்படுத்தாது (குடிலையின் பொருள் வினவி) கோபித்து (நான்கு சிரங்களிலும்) ஓங்கி அறைந்து,

     உலகமும் படைத்து --- (அப்பிரமனைச் சிறையிலடைத்து) தானே சிருஷ்டி கர்த்தாவாக இருந்து உலகங்களை எல்லாம் படைத்து,

     பரிந்து அருள் --- மீண்டும் பிரமனுக்கும் அடியார்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும்) அன்புடன் திருவருள் புரியும்,

     பரங்கிரிக்குள் சிறந்த --- திருப்பரங்குன்றம் என்கிற புனிதத் தலத்தில் சிறந்து விளங்குகின்ற,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே,

      கரு அடைந்து --- கருப்பையைச் சேர்ந்து,

     பத்து உற்ற திங்கள் --- பத்து மாதங்கள் வரை,

     வயிறு இருந்து --- தாயாருடைய (சிறிய) வயிற்றில் வாசம் புரிந்து,

     முற்றி பயின்று --- கருவானது முதிர்ந்து ஒலித்துக் கொண்டு,

     கடையில் வந்து உதித்து --- கடை வழியில் வந்து பிறந்து,

     குழந்தை வடிவாகி --- குழந்தையின் வடிவத்தை அடைந்து,

     கழுவி அங்கு எடுத்து --- அவ்வாறு பிறந்த அவ்விடத்தில் நீர் தெளித்து சுத்தஞ் செய்து எடுத்து,

     சுரந்த முலை அருந்துவிக்கக் கிடந்து --- தாயார் முலைப்பாலை உண்ணவைக்க படுத்தவண்ணமாக்கி,

     கதறி --- ஓவென்று கதறி அழுது,

     அம் கை கொட்டி --- அழகிய கரத்தை ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்துத் தட்டி,

     தவழ்ந்து --- மார்பால் நீந்தித் தவழ்ந்து,

     நடம் ஆடி --- நடமாட்டத்தை அடைந்து,

     அரை வடங்கள் கட்டி --- அரைஞாண்களைக் கட்டியும்,

     சதங்கை --- கால்களில் சதங்கைகளையும்,

     இடு குதம்பை --- தரிக்கத் தகுந்த காதணிகளையும்,

     அவை அணிந்து --- இவை முதலிய திருவாபரணங்களை அணிந்து கொண்டு,

     முற்றி கிளர்ந்து --- நன்றாகச் சரீரம் பலப்பட்டு வளர்ந்து,

     வயது ஏறி --- ஆண்டுகள் நிறைந்து வாலிபப் பருவத்தையுற்று,

     அரிய பெண்கள் --- அருமையான பெண்களது,

     நட்பை புணர்ந்து --- சினேகிதத்தைச் சேர்ந்து,

     பிணி உழன்று --- (அதனால்) வியாதிகளால் பீடிக்கப்பட்டு சுழற்சியை அடைந்து,

     சுற்றித் திரிந்தது அமையும் --- சொர்க்கலோகத்திற்கும் நரகலோகத்திற்கும் பூலோகத்திற்குமாக (புண்ணிய பாவங்களால்) சுற்றித் திரிந்தது போதும்,

     உன் க்ருபை சித்தம் --- தேவரீரது கருணைச் சித்தத்தை,

     என்று பெறுவேனோ --- என்றைக்குப் பெறுவேனோ?


பொழிப்புரை


         சூரியனும் இந்திரனும் வெற்றி பொருந்திய வாநரங்களுக்கு அரசராக (சுக்ரீவ,வாலியாக)வும், துழாய் முடியோனது உந்தியின்கண் உதித்த சமானமற்ற இறைவனாகிய பிரமன் கரடிமுகச் சேனைகளுக்குத் தலைவனாக (சாம்புவனாக)வும், அக்கினி பகவான் ஆற்றலில் சிறந்த நீலனாகவும், உருத்திர மூர்த்தி அறிவு, கல்வி, ஞானம், பக்தி, பணிவு, வைராக்கியம், பிரமசரியம் முதலியவைகளால் சிறப்பு வாய்ந்த அனுமனாகவும், இணையற்ற தேவர்கள் யாவரும் இத்தகைய வாநர வர்க்கத்தில் உதித்து முன்னதாக வனத்தில் வந்து இருக்க (தான் இராமனாக அவதரித்து வந்து) அவ் வாநர வீரர்களைத் தனக்கு அரிய சேனைகளாகவும் சேனைத் தலைவர்களாகவும் கொண்டு இராவணாதி அசுர குலங்களின் கூட்டத்தை அழித்து வெற்றி பெற்ற அரிமுகுந்தராகிய இராகவன் மெச்சுவதற்குத் தகுந்த சிறந்த குணங்களையுடைய மருகனாக எழுந்தருளினவரே!

         (கயிலை மலைக்குத் தருக்குற்று வந்ததால் குடிலையின் பொருளை வினவி அதனை உரைக்காது விழித்ததால்) பிரமனாக இருந்தும் கூட அவனைப் பொருட்படுத்தாது கோபித்து உதைத்து (சிறையிட்டு) சிருட்டி கர்த்தாவாக இருந்து உலகங்களைப் படைத்து (மீண்டும் பிரமனுக்கும் அடியார்களுக்கும் உயிர்களுக்கும் அன்போடு அருள்புரிந்து திருப்பரங்குன்றம் என்கிற திருத்தலத்தில் சிறந்து விளங்குகின்ற பெருமையிற் சிறந்தவரே!

         கருவில் சேர்ந்து, தாயாருடைய (சிறிய) வயிற்றில் பத்து மாதம் இருந்து முதிர்ந்து, ஓவென்று ஒலித்துக் கொண்டு கடைவழியாக வந்து பிறந்து குழந்தை வடிவாகி, நீர் தெளித்துச் சுத்தி செய்து எடுத்துத் தாயார் முலைப்பாலை உண்ண வைக்க, படுத்தவண்ணமாகக் கிடந்து, கதறி அழுது, அழகிய கரத்தைக் கொட்டித் தவழ்ந்து நடந்து விளையாடல்களைப் புரிந்து, அரைஞாண்களைக் கட்டி, சதங்கை, அணியத்தக்க காதணி, பொன்னாலாகிய முகச்சுட்டி, தண்டை முதலிய ஆபரணங்களை அணிந்துகொண்டு, சரீரமானது பலப்பட்டு வளர்ந்து, ஆண்டுகள் நிறைந்து, வயது ஏறிய பின், அருமையான பெண்களது நேயத்தை அடைந்து, அதனால் நோய்வாய்ப்பட்டு சுழற்சி அடைந்து சுவர்க்க நரக உலகங்களுக்குப் போவதும் வருவதுமாகச் சுற்றித் திரிந்து உழன்றது போதும்; தேவரீரது கருணைச் சித்தத்தை என்று பெறுவேனோ?


விரிவுரை


கருவடைந்து பத்து உற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி ---

     உயிர்கள் தாம் செய்த நல்வினைகளால் புண்ணிய உலகமாகிய ஒளி உலகையும், தீவினைகளால் நரகவுலகமாகிய இருள் உலகையும் அடைந்து இன்பதுன்பங்களை நுகர்ந்து பின்னர், கலப்பான வினைப்பயனை நுகர்தல் பொருட்டு இறைவன் ஆணையால் விண்ணிலிருந்து மழை வழியாக இப்பூதலத்தைச் சேர்கின்றன. காய், கனி, மலம், நீர், தானியம் முதலியவற்றில் கலந்து நிற்கின்றன. அவற்றை உண்ட ஆணிடம் நியதியின்படி சேர்ந்து அறுபது நாட்கள் கருவிலிருந்து பின் அடியிற் கண்ட விதம் பெண்ணிடம் சேர்கின்றன. இதனை அருணகிரியார் சுருங்கக் கூறி விளங்க வைத்திருக்கின்றனர்.

மணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய திருவாசகத்தில் கூறுமாறு காண்க...

யானை முதலா எறும்பு ஈறாய
ஊனமில் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செலவினில் பிழைத்தும்

ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்

ஆறு திங்களில் ஊறுஅலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்......
 
கடையில் வந்து உதித்து ---

     பத்தாவது மாதத்தில் தனஞ்சயன் என்கிற வாயுவினால் தள்ளப்பட்டுத் தலைகீழாக வந்து குழந்தை உதிக்கின்றது. அக்கால் மலையின் மேலிருந்து ஒருவன் உருண்டால் எத்துணைத் துன்பம் உண்டாகுமோ அத்துணைத் துன்பம் உண்டாகும். அதனாலன்றோ நம் பெரியோர்களெல்லாம் “பிறவாதிருக்க வரந்தரல் வேண்டும்” என்று ஆண்டவனை வேண்டினார்கள்.


வயதேறி, அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து ---

     பதினாறு வயதானவுடன் பிறவியின் அருமையையும் விலை மதிக்க முடியாத காலத்தின் உயர்வையும், பிறவி எடுத்த நோக்கத்தையும் உன்னி, பிறவிக் கடலினின்றும் உய்ந்து முத்திக் கரை சேர வழி தேடாது, “சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அன்பர் திருவடிகளே நினைந்து துதியாமல் தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று” திரிந்து “அவமாயை கொண்டு உலகில் விருதா” மக்கள் அழிகின்றனர்.

      வயதுபதினாறு சென்று         வடிவாகி
கனகமுலை மாதர்தங்கள் வலையில்மிக வேஉழன்று
     கனிவதுட னேஅணைந்து    பொருள்தேடிக்
கசடன்எனை ஆளஉன்தன்        அருள்தாராய்”      --- (வனிதையுடல்) திருப்புகழ்.

பிணி உழன்று ---

     ஏகபத்தினி விரதத்தை மேற்கொள்ளாமற் படிக்கு அனேக மாதர்களை நேசித்து, மதன காமத்தையே சுருதியென நினைத்து கங்குல் பகலாய்க் காலங்கழித்ததனால் அதன் பயனாக பல வியாதிகள் வந்து பற்றுகின்றன.

சுற்றித் திரிந்தது அமையும் ---

     பாவங்களைப் புரிந்து நரகலோகத்திலும், புண்ணியங்களைப் புரிந்து சுவர்க்க லோகத்திலும், எஞ்சி நின்ற பாவபுண்ணியங்களை அனுபவிப்பதற்குப் பூவுலகத்திலுமாக மாறிமாறிக் காற்றாடி போல் சுழன்று அலைந்தது போதும்; இனி அது வேண்டாம்.

உன் க்ருபைச் சித்தம் என்று பெறுவேனோ? ---

     அத் துன்பம் நீங்கதேவரீரது கருணைச் சித்தத்தை அடியேன் என்று பெறுவேனோ? என்று வருந்துகிறார்.

இரவி இந்த்ரன்.......புனமேவ ---

     இராவணாதி அசுரர்களின் கொடுமையால் வருந்திய பிரமாதி தேவர்கள் அரவணைச் செல்வராகிய அச்சுதர்பால் அணுகி, “ஆலிலைச் சயன! இராவணாதி அசுரர்களால் மிகவும் வருந்தினோம். அவர்களை அழித்து அடியேங்களைக் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பம் புரிய, திருமால் “தேவர்களே! இராவணன் மானிடரையும் வாநரத்தையும் அற்பப் பிராணிகளென்று கருதி இவைகளை ஒழித்து ஏனைய பிராணிகளால் அழியாத வரம் பெற்றுள்ளான். ஆதலால் மானிட வடிவத்தையும் வாநர வடிவத்தையும் அடைந்து அசுரர் குலத்தை அழிக்க வேண்டும். நிருதரை நீறாக்குவதற்காக சூரிய குல மன்னனாகிய தசரதனுக்கு மகனாக வந்து நாம் பிறக்கிறோம். சங்கு சக்ரசேஷர் தம்பிகளாக வந்து நம்முடன் தோன்றுவார்கள். அயோத்தியா நகரத்தில் இராமாவதாரம் புரிந்து நும் குறையை நீக்குதும். அஞ்சும் தன்மையை அகற்றுமின், என்றனர்.

மசரத மனையவர் வரமும் வாழ்வுமோர்
நிசரத கணைகளால் நீறு செய்ய யாம்
கசரத துரகமாக் கடல்கொள் காவலன்
தசரதன் மதலையா வருதும் தாரணி.

வளையொடு திகிரியும் வடவை தீதர
விளைதரு கடுவுடைய விரிகொள் பாயலும்
இளைஞர்க ளெனவடி பரவ வேகிநாம்
வளைமதில் அயோத்தியில் வருதும் என்றனன் ---இராமாயணம்.

     அது கேட்ட தேவர்கள் அவ்வண்ணமே பிறப்பதற்கு உடன்பட்டார்கள். பிரமதேவர், “யான் முன்னொரு காலத்தில் ஜாம்பவான் என்ற கரடி வேந்தனை எனது அமிசமாக என் கொட்டாவியிலிருந்து உண்டாக்கியிருக்கிறேன்!” என்றனர்.

     அதுபோல் இந்திரனது அமிசமே மந்தர மலைக்கு ஒப்பான வாலி என்கிற சிறந்த வானர வீரனாகத் தோன்றியது.

     சூரியன் தனது அமிசத்தை விடுத்து சுக்ரீவனைத் தோன்றவைத்தான்.

     அக்கினி பகவான் தம் அமிசமானது அனலைப் போன்று விளங்குகின்ற அழகான நீலனாகப் பிறக்க வைத்தான்.

     வாயு அமிசத்தோடு ருத்ர அமிசமும் கலந்து அனுமார் பிறந்தார்.

     இந்திரன் தம்பி உபேந்திரன் அங்கதனாகவும்,

     விஸ்வகர்மா நளனாகவும்,

     அசுவினி தேவர்கள் மைந்தன் துவிதர்களாகவும்

     வருணன் சுஷேணனாகவும்,

     இப்படி தேவர்கள், கந்தருவர்கள் வித்தியாதரர்கள் முதலியோர் இராவணவதத்தின் பொருட்டு மலைபோன்ற சரீரத்தோடும், அளவிட முடியாத ஆற்றலோடும், ஆயிரக்கணக்கான வானர வீரர்களாக மலைப் பிரதேசங்களில் அவதரித்தார்கள்.

     உருத்திரன் அனுமனாகப் பிறந்தார் என்ற செய்தியை, சிவபெருமானே அனுமனாகத் தோன்றினார் என, குறைந்த அறிவுடையோர் குழறுபடக் கூறி மீளா நரகுக்கு ஆளாகின்றனர். சிவபெருமான் பிறப்பு இறப்பு இல்லாதவர்.

வைச்சபொருள் நமக்குஆகும் என்றுஎண்ணி நமச்சிவாய
அச்சம்ஒழிந் தேன்அணி தில்லைஅம்பலத்து ஆடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல்அசைந்த
கச்சின்அழகு கண்டால்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.

பேரவன்காண் பிறப்பொன்று மில்லாதான் காண்”     --- அப்பர்.

எல்லார் பிறப்பும் இறப்பும்இயற் பாவலர்தம்
சொல்லால் தெளிந்தேம், நஞ்சோணேசன் --- இல்லில்
பிறந்தகதை யுங்கேளேம், பேருலகில் வாழ்ந்துஉண்டு
இறந்த கதையுங்கேட்டி லேம்.           ----குகை நமச்சிவாயர்.

என்ற வேத வசனங்களாலும், ஆன்றோர் வசனங்களாலும் சிவபெருமான் பிறப்பில்லா முழுமுதற் கடவுள் என்பது அசையா முளையாகத் தாபிக்கப்பட்டதை உணர்க. இதுவேயும் அன்றி வைணவப் பெரியாராகிய வில்லிபுத்தூராழ்வாரும் சிவபெருமான் பிறப்பிலி என்பதை நன்குணர்ந்து பசுமரத்தாணிபோல் பகர்கின்றதைக் காண்க. 

வேதம் அடி உண்டன, விரிந்த பல ஆகம
     விதங்கள் அடி உண்டன, ஒர் ஐம்
பூதம் அடி உண்டன, விநாழிகைமுதல் புகல்செய்
     பொழுதொடு சலிப்பின் பொருளின்
பேதம் அடிஉண்டன, பிறப்பிலி, இறப்பிலி,
     பிறங்கல் அரசன் தன்மகளார்
நாதன், அமலன், சமர வேட வடிவங்கொடு
     நரன் கை அடியுண்ட பொழுதே      ---மகாபாரதம்.

     சிவபெருமான் வேறு. உருத்திரன் வேறு. உருத்திரனுக்கு குணம் செயல் முதலியன உண்டு. சிவமூர்த்திக்கு குணம், குறி, தொழில் முதலியன இல்லை. பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஈன்ற மூன்று மூர்த்திகளுக்கும் மேலானவர் சிவபெருமான்.

மூவர்காண் மூவர்க்கும் முதலானான் காண்” ---அப்பர் தேவாரம்.

அயன் என ஆகி அரி என ஆகி அரன் என ஆகி அலர்மேலாய்”
                                                                      ---(அகரமுகமாகி) திருப்புகழ்.

இத்தகைய அனேக பிரமாணங்களால் சிவம் வேறு உருத்திரன் வேறு என்பது மலை இலக்காக வெளிப்பட்டது.

     அவ்வுருத்திரரும் பலர். ஏகாதச (பதினோரு) ருத்திரர். இதுவுமன்றி பதினோரு கோடி உருத்திரர்களும் உளர்; இவர்கள் சிவசாரூபம் பெற்றவர்கள்.

இந்த உருத்திரர்களில் ஒருவர் அனுமனாகத் தோன்றினர்.

     இத்தகைய வேதங்களையும், ஆன்றோர் அமுத வாக்கியங்களையும் உணராதார் மேற்கூறியவாறு கருத்துவேறுபாடு கொண்டு சிவபரஞ்சுடரே அனுமன் எனப் பிதற்றிப் பெரும் பித்துற்று உழல்வர்.

கூர்த்தமதி உடையீர்! மேற்காட்டிய அரிய பெரிய சான்றுகளை ஆராய்ந்துணர்க.

அசுரர்தம் கிளைக்கட்டை வென்ற ---

     வாநர வீரர்களுடன் இரகு நாயகர் இரவணாதி அசுரர்களை அழித்து, “வில்லாளிகள் நாயகன் என” விண்ணவரும் மண்ணவரும் புகழ வெற்றி மாலையைச் சூடிக்கொண்டனர்.

நீடிய அரக்கர்சேனை நீறுபட்டு அழியவாகை
 சூடிய சிலை இராமன்”                       ---கம்பர்.

ஓதகட லோடுவிறல் ராவண குழாம்அமரில் பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
     பாணிதிரு மார்பன்அரி கேசன்மரு காஎனவெ
     ஓதமறை ராமெசுர மேவுகும ராஅமரர் பெருமாளே” --- (வாலவயதாகி) திருப்புகழ்.

அரி  ---

     பக்தர்களுக்கு வரும் இடையூறுகளைப் போக்குபவர்.

முகுந்தன் ---

     முக்தியைக் கொடுப்பவர். மு-முக்தி, கு-பூமி, த-இவற்றைக் கொடுப்பவன்; பரலோகத்தையும், இந்த உலகத்தையும் அன்பர்களுக்கு அருள்புரிபவன் என்னும் பொருள்படும்.

மெச்சுற்ற பண்பின் மருகோனே ---

     விஷ்ணு, தான் இராமாவதாரமெடுத்து வாநர வீரர்களின் துணைகொண்டு பத்துத் தலைகளையுடைய இராவணனை சம்மாரம் செய்தார்.

     முருகப் பெருமானோ ஆயிரந்தலைகளை உடைய சிங்கமுகாசுரனை சம்மரித்தார். தான் மலைகளைக் கொண்டு கடலை அணைகட்டித் தாண்டினார்.

     முருகனோ, சூரன் மாவிருட்சமாகக் கடல் நடுவில் முளைத்தபோது வேலாயுதத்தால் அக்கடலை வற்றச்செய்தனர். இராம்பிரான் இரண்டாயிரம் வெள்ளம் அசுரர்களை அழித்தனர்.

     முருக நாயகனோ ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் எள்ளளவும் இடமில்லாது நிறைந்து வந்த அசுர சேனைகளைப் பார்வையாலும், நகையாலும் எரித்து அழித்தனர்.

     ஆதலால் அரிமுகுந்தர் சதாகாலமும் முருகக்கடவுளது அளப்பெரும் பெருமையை உன்னி உன்னி உள்ளம் உவந்து மெச்சுகின்றனர். அத் திருமால் மெச்சத் தகுந்த பொருளாக முருகவேள் விளங்குகின்றனர்.

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்” --- (முத்தைத்தரு) திருப்புகழ்.


அயனையும் புடைத்துச் சினந்து ---

அயனைச் சிறை புரிந்த வரலாறு

         குமாரக்கடவுள் திருவிளையாடல் பல புரிந்து வெள்ளி மலையின்கண் வீற்றிருந்தருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடுஞ் சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கயிலாயமலையை நண்ணினர். பிரமனை ஒழிந்த எல்லாக் கணர்களும் யான் எனது என்னும் செருக்கின்றி சிவபெருமானை வணங்கி வழிபட்டுத் திரும்பினார்கள். ஆங்கு கோபுரவாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும் புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டாலென்ன எழுந்தருளி வந்து அடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.

     பிரமதேவர் குமரக் கடவுளைக் கண்டு வணங்காது, “இவன் ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப் பெருமான் சிவன் வேறு தான் வேறு அன்று, மணியும் ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை நீக்கித் திருவருள் புரியவும் திருவுளங் கொண்டார்.


     தருக்குடன் செல்லுஞ் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது கைகுவித்து வணங்கிடாத பாவனையாக வணங்கினன். கந்தப்பெருமான் “நீ யாவன்” என்றனர். பிரமதேவர் அச்சங்கொண்டு “படைத்தலு தொழிலுடைய பிரமன்” என்றனன். முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர். பிரமன் “உணர்ந்திருக்கிறேன்” என்றனன். “நன்று! வேத உணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய இருக்கு வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர். சதுர்முகன் இருக்கு வேதத்தை "ஓம்" என்ற குடிலை மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன். உடனே இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி! நிற்றி! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்குதி என்றனர்.

தாமரைத் தலை இருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாமறைத் தலை எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர்பெற்று உடைக் குமரவேள், நிற்றி, முன் கழறும்
ஓம் எனப்படு மொழிப்பொருள் இயம்புக,ன்று உரைத்தான். ---கந்தபுராணம்.

     ஆறு திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன் வினவுதலும், பிரமன் அக்குடிலை மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன. சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய ஆணவம் அகன்றது. வெட்கத்தால் தலைகுனிந்தனன். நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை உணராமற் போனோமே? என்று ஏங்கினன்; சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான் கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை யஉணராது மருண்டு நின்றனன்.

     குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர்.

     பிரமன் “ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன்.

     அது கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம் முதலெழுத்திற்குப் பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும் புரிகின்றனையோ? பேதாய்!” என்று நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.

சிட்டி செய்வது இத் தன்மை யதோ?னச் செவ்வேள்
 குட்டினான் அயன் நான்குமா முடிகளுங் குலுங்க”     ---கந்தபுராணம்.

     பிரமதேவனது அகங்காரம் முழுதும் தொலைந்து புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன் பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.

வேதநான்முக மறையோ னொடும் விளை
  யாடியே குடுமியிலே கரமொடு
  வீரமோதின மறவா”               --- (காணொணா) திருப்புகழ்.

அயனைக் குட்டிய பெருமாளே”       ---- (பரவை) திருப்புகழ்.

ஆர ணன்றனை வாதாடி ஓருரை
 ஓது கின்றென வாராது எனாஅவன்
 ஆண வங்கெட வேகாவலாம்அதில்      இடும்வேலா --- (வாரணந்) திருப்புகழ்.

      “.......................................படைப்போன்
அகந்தை உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று
     உகந்த பிரணவத்தின்உண்மை -- புகன்றிலையால்
சிட்டித் தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
     குட்டிச் சிறைஇருத்தும் கோமானே”          --- கந்தர் கலிவெண்பா.


உலகமும் படைத்து ---

     பிரமனைச் சிறை புரிந்த பின் குமாரபரமேசுரன், படைப்புத் தொழிலைத் தாமே புரியத் திருவுளங் கொண்டார். முத்தொழிலுக்குந் தலைவர் அவரேயல்லவா? மூவர்க்கும் முதல்வராம் முழுமுதற் கடவுளாம் முருகநாயகன் கந்தமால் வரையில் ஒரு சார் திருக்கோயில் புரிவித்து, ஆங்கு நடுவண் இடப்பட்ட அரியணை மீதிருந்து, திருமால், புருகூதன், நவவீரர்கள், இலக்கம் வீரர்கள், ஏனைய கணர்கள் சூழ சிருஷ்டித் தொழில் புரிவாராயினர். அப்பெருமானுக்கு அத்தொழில் அரியதோ? “சத்யசங்கல்பன்” என்று சுருதிகள் முறையிடு கின்றது அல்லவா? காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடுங் காலாதீதனாகிய கந்தப் பெருமானுக்கு அஃதோர் திருவிளையாடலாக இருந்தது.

     ஒரு கரத்தில் உருத்ராக்க மாலையும், ஒரு கரத்தில் கமண்டலமும், மற்ற இருகரங்கள் அபயவரதமாகவும், நான்கு திருக்கரங்களோடும், ஒரு முகமுடனும் எழுந்தருளி படைப்புத் தொழிலை எம்பெருந்தலைவன் புரிந்தனர்.

ஒருகரந் தனில் கண்டிகை வடம்பரித்து, ருதன்
கரதலந் தனில் குண்டிகை தரித்து, ரு கரங்கள்
வரதமோடு அபயந்தர, பரம்பொருள் மகன் ஓர்
திருமுகங் கொடு சதுர்முகன் போல்விதி செய்தான்.    --- கந்தபுராணம்.

     இங்ஙனம் எம்பெருமான் சிருட்டித் தொழிலைப் புரியுங்கால், அத்தொழிலுக்கேற்பத் திருமகள் நாயகன் திதித் தொழிலைப் புரியும் ஆற்றலின்றி ஏங்கியதால் அக் காத்தல் தொழிலையும், அங்ஙனமே சங்காரத் தொழிலையும் தாமே செய்தருளினார். எனவே, முத்தொழிலையும் முறையுறப் புரிந்து வந்தனர். முத்தொழிலுக்கும் மும்மூர்த்திகளுக்கும் தாமே முதல்வன் என்பதைத் தெற்றென விளக்கியருளினர்.

     தேவவருடங்கள் பல கழிந்தன. வேண்டுதல் வேண்டாமை இல்லா செவ்வேட்பரமன் புரியும் படைப்பில் தோன்றிய உயிர்களின் பேற்றை அளவிட்டுரைக்க வல்லார் யாவர்? அனந்தனும் அஞ்சுவனன்றோ? அப்படைப்பில் வந்த ஆன்மாக்களனைவரும் புண்ணிய வடிவாக விளங்கினர். பாவம் என்பது ஒரு சிறிதும் இலதாயிற்று. எங்கும் மெய்ஞ்ஞானம் மிளிர்ந்தது. சிவமணங் கமழ்ந்தது.

மலர்அயனை நீடு சிறைசெய்து,அவன் வேலை
 வளமைபெற வேசெய்          முருகோனே”   --- (எழுகுநிறை) திருப்புகழ்.

கருத்துரை

         இராமாவதாரம் எடுத்து இராக்கதரை வென்ற அரி முகுந்தனது மருகோனே! அயனைச் சிறை செய்து அவனியைப் படைத்த அண்ணலே! திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளிய இறைவரே! மாதாவுடைய கருவில் சேர்ந்து பத்து மாதம் கிடந்து பிறந்து வளர்ந்து, அரிவையர் மயக்கத்தில் ஆழ்ந்து பிணி உழன்று (சுழல் காற்றில் அகப்பட்ட சருகுபோல்) சுற்றித் திரிந்தது போதும், அச் சுழற்சி நீங்க, தேவரீரது கருணைச் சித்தத்தை அடியேன் என்று பெறுவேனோ?


                 

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...