திரு மாகறல்.


திரு மாகறல்

தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்

         காஞ்சிபுரத்தில் இருந்து செல்லலாம். காச்சிபுரம் - உத்திரமேரூர் ஓரிக்கை வழியாக செல்லும் பாதையில் 16 கி.மீ. தொலைவு. காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது.

     சிறிய அழகான திருக்கோயில். தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றது.

இந்திரன் வழிபட்ட திருத்தலம்.  இராசேந்திர சோழனுக்கு, இறைவன் பொன் உடும்பு வடிவில் தோன்றி, அவன் அது கண்டு துரத்த, புற்றில் ஓடி ஒளிந்து, பின் சிவலிங்கமாக வெளிப்பட்டது.

இறைவன் பெயர் --    மாகறலீசுவரர், அடைக்கலங்காத்த நாதர்உடும்பீசர்

இறைவி பெயர்   --    திரிபுவனநாயகி

தலமரம்            --        எலுமிச்சை

தீர்த்தம்            --         அக்கினி தீர்த்தம், சேயாறு.

பதிகம்             --    திருஞானசம்பந்தர் - விங்குவிளை
    
     செய்யாற்றின் வடகரையில் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகரங்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. வடக்குப் பிராகாரத்தில் தலமரம் எலுமிச்சை உள்ளது. பிராகாரத்தில் பொய்யாவிநாயகர், ஆறுமுகர், 63 நாயன்மார்கள், நால்வர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், சிறிய தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை முதலிய திருமேனிகள் உள்ளன. விசாலமான வெளிப்பிரகாரம் வலமாக வந்து படிக்கட்டுகளையேறி, விநாயகரையும், மறுபுறம் சுப்பிரமணியரையும் வணங்கியவாறே, துவாரபாலகர்களைக் கடந்து உட்புகுந்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். இறைவன் மாகறலீசுவரர் எங்கும் காண இயலாத உருவில் உடும்பின் வால் போன்று விளங்கக் காணலாம். இராஜேந்திர சோழ மன்னருக்கு பென்னுடும்பின் வால் வடிவில் இவ்வாலயத்தின் இறைவன் காட்சியளித்துள்ளதாக வழங்கப்படுகிறது.

         இத்தலத்தில் முருகப்பெருமான் மயில்மீது ஆறு திருமுகங்களுடன் இருதேவியர் உடனிருக்க வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இவ்வாலயத்தின் தீர்த்தங்களாக அக்னி தீர்த்தமும், செய்யாறும் உள்ளன. அக்னி தீர்த்தத்தில் நீராடி அகத்தீசுவரரை வணங்கினால் எமலோக பயம் நீங்கி சிவலோகத்தில் எப்பொழுதும் வாழலாம் என்று தலபுராணம் விவரிக்கிறது. மற்றொரு தீர்த்தமான சேயாறு இத்தலத்திற்குத் தெற்கில் ஓடுகிறது. இத்தலத்தில் சோமவார தரிசனம் விசேடமாகும். பிள்ளைப்பேறு இல்லாதவர் இக்கோயிலை உடலால் வலம் வந்தால் பிள்ளைப்பேற்றை அடைவர் என்பர். இத்தலத்தைத் தேவேந்திரன் வழிபட்டுப் பேறு பெற்றான்.

         திருக்கோயில் வரலாறு: மும்மூர்த்திகளில் தானே சிறந்தவன் என்று செருக்குற்று இருந்த பிரம்மாவை சிவபெருமான் சபித்தார். தனது சாபம் நீங்க பிரம்மா இத்தலம் வந்து ஒரு லிங்கம் பிரதிஷடை செய்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார். அதன்பின் சத்தியலோகம் திரும்பிச் செல்லுமுன் இத்தல எல்லையில் தினம் ஒரு பழம் தரும் அதிசய பலாமரத்தை உண்டாக்கிச் சென்றார். இம்மரத்தின் சுவைமிக்க பலாப்பழத்தைப் பற்றி கேள்விப்பட்ட இராஜேந்திர சோழ மன்னன், இப்பழத்தை தினந்தோறும் சிதம்பரம் நடராஜருக்கு நிவேதனம் செய்து, அதன்பின் தனக்கு கொண்டுவந்து கொடுக்க வேண்டும் ஊர் மக்களுக்குத் தெரிவித்தான். ஊர் மக்களும் அவ்வாறே செய்து வந்தனர். ஆனாலும் ஊர் மக்கள் தினந்தோறும் சிதம்பரம் சென்று அதன்பின் சோழ மன்னனின் தலைநகர் சென்று அரசனுக்கு பழத்தை அளித்துவிட்டு திரும்ப சிரமப்படுவதைக் கண்ட ஒரு அந்தணன் மகன் பலாமரத்தை வெட்டிவிட்டான். பழம் வருவது நின்று போனதைக் கண்ட மன்னன் அதைப் பற்றி விசாரித்து மரம் வெட்டப்பட்டதை அறிந்தான். பலாமரத்தை வெட்டியவனை நாடு கடத்தும் படி உத்தரவிட்டான். இரவு முழுவதும் பயணம் செய்து எவ்வளவு தொலைவில் விடமுடியுமோ அவ்வளவு தூரம் சென்று விட்டுவிடும் படி காவலருக்குச் சொல்லி அரசன் தானும் கூடச் சென்று தண்டனை நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்துகொண்டு திரும்பினான்.

         மன்னன் ஊர் திரும்பும்போது இத்தல எல்லையில் புதர் மண்டிய ஓரிடத்தில் பொன்னிற உடும்பு ஒன்று அரசனின் கண்களுக்குத் தென்பட்டது. அதனைப் பிடிக்க முயலும் போது அவ்வுடும்பு ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. மன்னன் ஆட்கள் சிலரை அழைத்து புற்றைச் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டான். ஆட்கள் ஆயதங்களால் புற்றை அகழ்ந்த போது உடும்பின் வாலில் ஆயுதம் பட்டு இரத்தம் பீறிட்டுவர அதைக் கண்ட மன்னன் மயங்கிக் கீழே விழுந்தான். மயக்கம் தெளிந்து எழுந்த அரசனுக்கு தான் அவ்விடம் இருப்பதை உணர்த்தி அங்கு சிவாலயம் எடுக்குமாறு அசரீரியாக கட்டளையிட்டு அரசனுக்கு அருளினார். இராஜேந்திர சோழ மன்னனும் அவ்வாறே இறைவன் பணித்தபடி திருமாகறல் தலத்தில் இறைவனுக்கு பெரிய சிவாலயம் ஒன்றைக் கட்டி நாள்தோறும் வழிபாடுகள் செய்வித்து இறையருள் பெற்றான்.

         இத்தலத்திற்கான சம்பந்தர் பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகம் வினை தீர்க்கும் பதிகம் என்று போற்றப்படுகிறது. திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இப்பதிகத்தை உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

     காலை 7-30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தோயும் மன யோகு அறல் இலாத் தவத்தோர் உன்ன விளங்கு திருமாகறலில் அன்பர் அபிமானமே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 984
அங்கண் அமரர் பெருமானைப்
         பணிந்து போந்து, ஆடுஅரவினுடன்
பொங்கு கங்கை முடிக்குஅணிந்தார்
         மகிழும் பதிகள் பலபோற்றி,
மங்கை பாகர் அமர்ந்துஅருளும்
         வயல்மா கறலை வழுத்திப்போய்,
கொங்கு மலர்நீர்க் குரங்கணில்முட்
         டத்தைச் சென்று குறுகினார்.

         பொழிப்புரை : அவ்விடத்துத் தேவதேவரான இறைவரை வணங்கிச் சென்று, ஆடும் பாம்புடன் பெருகும் நீரையுடைய கங் கையை முடியில் சூடிய இறைவர் மகிழும் பதிகள் பலவற்றையும் போற்றி, உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவர் வீற்றி ருக்கும் வயல்கள் சூழ்ந்த திருமாகறலைப் போற்றிச் சென்று, மணம் கமழும் மலர்களையுடைய நீர் சூழ்ந்த திருக்குரங்கணில்முட்டத்தின் அருகில் செல்வாராயினர்.

         குறிப்புரை : பதிகள் பல என்றது, திருவன்பார்த்தான் பனங்காட்டூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருமாகறலில் அருளிய பதிகம் `விங்கு விளை\' (தி.3 ப.72) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


3.    072    திருமாகறல்                       பண் - சாதாரி
                                 திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
         பாடல்விளை யாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி
         நீடுபொழில் மாகறல்உளான்,
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
         திங்கள்அணி செஞ்சடையினான்,
செங்கண்விடை அண்ணல்அடி சேர்பவர்கள்
         தீவினைகள் தீரும்உடனே.

         பொழிப்புரை : நன்றாக இஞ்சி விளையும் வயலில் பணிசெய்யும் பள்ளத்தியர்களின் பாடலும் , ஆடலுமாகிய ஓசை விளங்க , மேகத்தைத் தொடும்படி நீண்ட கொடிகளும் , உயர்ந்த மாடமாளிகைகளும் , அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான் . நறுமணம் கமழும் கொன்றை மலரும் , கங்கையும் , பிறைச்சந்திரனும் அணிந்த சிவந்த சடையை உடையவனும் , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை உடையவனுமான அப்பெருமானின் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் தீவினைகள் உடனே தீரும் .


பாடல் எண் : 2
கலையின்ஒலி மங்கையர்கள் பாடல்ஒலி
         ஆடல்கவின் எய்திஅழகார்
மலையின்நிகர் மாடம் உயர் நீள்கொடிகள்
         வீசுமலி மாகறல்உளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன்
         ஏந்திஎரி புன்சடையின்உள்
அலைகொள்புனல் ஏந்துபெரு மான்அடியை
         ஏத்தவினை அகலும்மிகவே.

         பொழிப்புரை : வேதாகமக் கலைகளைக் கற்பவர்களின் ஒலியும் , பெண்களின் பாடல் , ஆடல் ஒலிகளும் சேர்ந்து இனிமை தர , அழகிய மலையை ஒத்த உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட கொடிகள் அசைய செல்வ வளமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . இலைபோன்ற அமைப்புடைய வேலையும் , கூர்மையான நுனியுடைய சூலத்தையும் , வலக்கையிலே ஏந்தி , நெருப்புப் போன்ற சிவந்த புன்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய அச்சிவபெருமானின் திருவடிகளைப் போற்ற வினை முற்றிலும் நீங்கும் .


பாடல் எண் : 3
காலையொடு துந்துபிகள் சங்குகுழல்
         யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள்
         ஏத்திமகிழ் மாகறல்உளான்,
தோலைஉடை பேணிஅதன் மேலொர்சுடர்
         நாகம்அசையா அழகிதாப்
பாலைஅன நீறுபுனை வான்அடியை
         ஏத்தவினை பறையும்உடனே.

         பொழிப்புரை : துந்துபி, சங்கு, குழல், யாழ், முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, காலையும் மாலையும் வழிபாடு செய்து முனிவர்கள் போற்றி வணங்க மகிழ்வுடன் சிவபெருமான் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் தோலாடையை விரும்பி அணிந்து , அதன்மேல் ஒளிவிடும் நாகத்தைக் கச்சாகக் கட்டி , அழகுறப் பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசி விளங்குகின்றான் . அவனுடைய திருவடிகளைப் போற்றி வணங்க, உடனே வினையாவும் நீங்கும் .


பாடல் எண் : 4
இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள்
         உந்திஎழில் மெய்யுள்உடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுனல்
         ஆடிமகிழ் மாகறல்உளான்,
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்கள்அணி
         செஞ்சடையி னான்அடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி
         பாடுநுகரா எழுமினே.

         பொழிப்புரை : ஒளிர்கின்ற முத்து , பொன் , மணி இவற்றை ஆபரணங்களாக அணியப்பெற்ற பெண்கள் தங்கள் துணைவர்களுடன் நீராடி மகிழ்கின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் நறுமணம் கமழும் கொன்றையையும் , குளிர்ந்த சந்திரனையும் சிவந்த சடையில் அணிந்துள்ளான் . அவனுடைய திருவடிகளை உங்கள் வினைதீர மிகவும் போற்றி வழிபட எழுவீர்களாக .


பாடல் எண் : 5
துஞ்சுநறு நீலம்இருள் நீங்க,ஒளி
         தோன்றும் மது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட
         மாடமலி மாகறல்உளான்,
வஞ்சமத யானைஉரி போர்த்துமகிழ்
         வானொர்மழு வாளன், வளரும்
நஞ்சம்இருள் கண்டம்உடை நாதன்அடி
         யாரைநலி யாவினைகளே.

         பொழிப்புரை : நறுமணம் கமழும் நீலோற்பல மலர்கள் இருட்டில் இருட்டாய் இருந்து , இருள்நீங்கி விடிந்ததும் நிறம் விளங்கித் தோன்றுகின்றன . நிறையப் பூக்கும் அம்மலர்கள் தேனை வயல்களில் சொரிகின்றன . அருகிலுள்ள , மேகங்கள் படிந்துள்ள பூஞ்சோலைகளில் மயில்கள் நடனமாடுகின்றன . இத்தகைய சிறப்புடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் வஞ்சமுடைய மதயானையின் தோலை உரித்துப் போர்த்து மகிழ்கின்றான் . ஒப்பற்ற மழுப்படையை உடையவன் . நஞ்சையுண்டு மிக இருண்ட கழுத்தையுடையவன் . அத்தலைவனான சிவபெருமானின் அடியார்களை வினைகள் துன்புறுத்தா .


பாடல் எண் : 6
மன்னுமறை யோர்களொடு பல்படிம
         மாதவர்கள் கூடிஉடனாய்
இன்னவகை யால்இனிது இறைஞ்சி,இமை
         யோரில்எழு மாகறல்உளான்,
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள்
         கங்கையொடு திங்கள்எனவே
உன்னும்அவர் தொல்வினைகள் ஒல்க, உயர்
         வானுலகம் ஏறல்எளிதே.

         பொழிப்புரை : என்றும் நிலைத்திருக்கும் வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களும், பலவிதத் தவக்கோலங்கள் தாங்கிய முனிவர்களும் கூடி இறைவனை இனிது இறைஞ்சும் தன்மையில் தேவர்களை ஒத்து விளங்குகின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் மின்னல்போல் ஒளிரும் விரிந்த செஞ் சடையின்மேல் மலர்களையும், கங்கையையும், பிறைச் சந்திரனையும் அணிந்துள்ளான். அப்பெருமானை நினைந்து வழிபடுபவர்களின் தொல்வினைகள் நீங்க, உயர் வானுலகை அவர்கள் எளிதில் அடைவர்.


பாடல் எண் : 7
வெய்யவினை நெறிகள்செல வந்துஅணையும்
         மேல்வினைகள் வீட்டல்உறுவீர்,
மைகொள்விரி கானல்மது வார்கழனி
         மாகறல்உளான் எழில்அதுஆர்
கையகரி கால்வரையின் மேலதுஉரி
         தோல்உடைய மேனிஅழகுஆர்
ஐயன்அடி சேர்பவரை அஞ்சி,அடை
         யாவினைகள் அகலும்மிகவே.

         பொழிப்புரை : கொடிய வினைகள் தாம் வந்த வழியே செல்லவும் , இனி இப்பிறவியில் மேலும் ஈட்டுதற்குரிய ஆகாமிய வினைகளை ஒழிக்க வல்லவர்களே ! மேகங்கள் தவழும் ஆற்றங்கரைச் சோலைகளிலுள்ள பூக்களிலிருந்து தேன் ஒழுகும் வயல்களையுடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் யானையின் தோலை உரித்துப் போர்த்த அழகிய திருமேனியுடையவன் . யாவர்க்கும் தலைவனான அப் பெருமானின் திருவடிகளை நினைந்து வழிபடுபவர்களை வினையானது அடைய அஞ்சி அகன்று ஓடும் .


பாடல் எண் : 8
தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு
         தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள்
         ஓதிமலி மாகறல்உளான்,
பாசுபத இச்சை,வரி நச்சுஅரவு
         கச்சைஉடை பேணிஅழகார்
பூசுபொடி ஈசன்என ஏத்த, வினை
         நிற்றல்இல போகும்உடனே.

         பொழிப்புரை : பொன்மயமான மாடங்களின் உச்சியில் கட்டப்பட்டுள்ள வெண்துகிலாலான கொடிகள் கருநிற மேகத்தைத் தொடுகின்ற மாசுபடு செய்கை தவிர வேறு குற்றமில்லாத , பெரிய தவத்தார்கள், வேதங்கள் ஓத விளங்கும் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் பாசுபத கோலத்தை விரும்பி, வரிகளையுடைய விடமுடைய பாம்பைக் கச்சாக அணிந்த அழகுடையவன் . திருவெண்ணீற்றைப் பூசியவன் . அவனைப் போற்றி வழிபட வினையாவும் நில்லாது உடனே விலகிச் செல்லும் .


பாடல் எண் : 9
தூயவிரி தாமரைகள், நெய்தல்,கழு
         நீர்,குவளை தோன்ற, மதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும்
         ஓசைபயில் மாகறல்உளான்,
சாயவிரல் ஊன்றிய இராவணன
         தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுகழ் ஏத்தும்அடி யார்கள்வினை
         ஆயினவும் அகல்வதுஎளிதே.

         பொழிப்புரை : தூய்மையான தாமரை , நெய்தல் , கழுநீர் , குவளை போன்ற மலர்கள் விரிய , அவற்றிலிருந்து தேனைப் பருகும் வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசையோடு பாடுதலால் ஏற்படும் ஓசை மிகுந்த திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அவன் தன் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமை கெடுமாறு செய்தவன் . அப்பெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியவர்களின் வினை எளிதில் நீங்கும் .


பாடல் எண் : 10
காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின்
         மேல்உணர்வு காமுறவினார்
மாலும்மல ரானும்அறி யாமைஎரி
         ஆகிஉயர் மாகறல்உளான்,
நாலும்எரி தோலும்உரி மாமணிய
         நாகமொடு கூடிஉடனாய்
ஆலும்விடை ஊர்திஉடை அடிகள்அடி
         யாரைஅடை யாவினைகளே.

         பொழிப்புரை : பைம்பொன்னாலாகிய வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும் , நீண்ட சடைமுடியையும் காணவேண்டும் என்ற விருப்பமுடன் முயன்ற திருமாலும் , பிரமனும் அறியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் திருமாகறலில் வீற்றிருந்தருளுகின்றான். உடம்பில் நாலிடத்து நெருப்பைக் கொண்டும் , தோலுரித்து மாணிக்கத்தைக் கக்கும் பாம்பணிந்தும், அசைந்து நடக்கின்ற இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள சிவபெருமானின் அடியார்களை வினைகள் அடைய .


பாடல் எண் : 11
கடைகொள்நெடு மாடம்மிக ஓங்குகமழ்
         வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யால்பரவி, அரனைஅடி
         கூடுசம் பந்தன்உரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில்
         மாகறல்உளான் அடியையே
உடையதமிழ் பத்தும்உணர் வார்அவர்கள்
         தொல்வினைகள் ஒல்கும்உடனே.

         பொழிப்புரை : வாயில்களையுடைய மிக உயர்ந்த நீண்ட மாடங்களும், நறுமணம் கமழும் வீதிகளும் உடைய சீகாழியில் வாழ்பவர்கட்குத் தலைவனான திருஞானசம்பந்தன், சிவபெருமானைச் சேர்தற்குரிய நெறிமுறைகளால் துதித்து, மடைகளில் தேங்கிய தண்ணீர் ஓடிப் பாய்கின்ற வயல்களும், நெருங்கிய சோலைகளுமாக நீர்வளமும் , நிலவளமுமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும்.

                                             திருச்சிற்றம்பலம்

அடியேனுடைய அனுபவக் குறிப்பு........

         இத்திருப்பதிகத்தில் பாடல்கள்தோறும் அடியாரை வினை அணுகா, நலியா, அடையா, போகும், அகலும், தீரும் என்றெல்லாம் பெருமான் அருளி உள்ளார். வழிபடுவதன் நோக்கமே அதுதானே.  மக்கள்செல்வம் இல்லாக் குறையுடையோர் இந்நாளிலும் இத்திருக்கோயிலில் புரண்டு வலம் வந்து வழிபடுகின்றனர் என்பது அருள்திரு இராமநாத அடிகளார் நமக்குக் காட்டிச் சென்றுள்ளார்..
        
         சேலம் சைவப்பெரியார் சிவத்திரு கி. சுப்பராயப்பிள்ளை அவர்களுக்கு வலது முழங்கால் எலும்பும், விலாவெலும்பும் 84 -ஆம் வயதில் கீழே விழுந்தமையால் ஒடிந்து போயின. ஒன்றாலும் குணம் அடையவில்லை. திருமுறையில் கயிறு சாத்திப் பார்த்து,  இந்தத் திருப்பதிகம் கிடைத்தது. திருமாகறல் அடைந்து திருப்பதிகத்தை ஓதித் தவம் புரிந்தார்.  ஓராண்டுக்குள் படிப்படியாக குணம் அடைந்து பிறர் உதவி இன்றி வாழ்ந்தார்கள். 

         சேலம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர் சேக்கிழார் அடிப்பொடி, சிவத்திரு மு.கிருட்டிணன், இ.ஆ.ப., அவர்கள்.  சேக்கிழார் அடிப்பொடியோடு பழகும் பேறு பெற்றவன் இச்சிறியேன். 1970 களில்  சேலத்திற்கு அரசுப் பணி நிமித்தமாக நான் சென்று வருவது வழக்கம். "சேலம் சென்றாயே, சுப்பராயப் பிள்ளையைப் பார்த்தாயா" என்று அவ்வப்போது வினவுவார்.  சிறியவனுக்கு அந்தப் பாக்கியம் வாய்க்கவில்லை. இத் திருப்பதிகத்தை நாளும் ஓதியே நன்மைகள் பலவற்றை அடியேன் பெற்று உள்ளேன். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, எனது அனுபவத்தில்,  பல அன்பர்களும் நோய் நீக்கம், குழந்தைப் பேறு, திருமணப் பேறு, துன்பம் நீக்கம் போன்ற பல்வேறு பேறுகளைப் பெற்று உள்ளனர். விரிக்கப் புகுந்தால் அளவு இன்றிப் பெருகும். இவ்வாறான அற்புதங்கள் இன்றும் தொடர்கிறன. திருமுறையை நாளும் நமக்காகவும் ஓதுவோம். அன்பர்களுக்காகவும் ஓதுவோம். அருள் நலம் பெறுவோம்.  அருள் நலம் பரவ வழிவகுப்போம்.

எலும்பு முறிவுக்கு என்று இத் திருப்பதிகத்தை ஒதுக்கி வைக்க வேண்டாம்.  எல்லா நன்மைகளையும் தருவதோடு, வினைகளையும் அறுக்கலாம்.

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...