திருப்பரங்குன்றம் - 0010. கறுக்கும் அஞ்சன


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கறுக்கும் அஞ்சன (திருப்பரங்குன்றம்)

முருகா!
பொதுமகளிரால் வரும் துயர் அற அருள்வாய்

தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான


கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு
     நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
     கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ..... நகையாலே

களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
     மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்
     கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகி

நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற
     அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர
     நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு ......மிடறூடே

நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
     இசைத்து நன்கொடு மனமது மறுகிட
     நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ......அருள்வாயே

நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
     உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
     நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ......வரைபோலும்

நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
     சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு
     நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா

திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு
     புழைக்கை தண்கட கயமுக மிகவுள
     சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் ...... இளையோனே

சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய
     பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
     திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கறுக்கும் அஞ்சன விழி இணை அயில்கொடு
     நெருக்கி, நெஞ்சு அற எறிதரு பொழுது, ஒரு
     கனிக்குள் இன்சுவை அமுது உகும் ஒருசிறு ....நகையாலே,

களக் கொழும் கலி வலைகொடு விசிறியெ,
     "மனைக்கு எழுந்திரும்" என, மனம் உருக, ஒர்
     கவற்சி கொண்டிட, மனைதனில் அழகொடு .....கொடுபோகி,

நறைத்த பஞ்சணை மிசையினில், மனம் உற
     அணைத்து, அகந்தனில் இணைமுலை எதிர்பொர,
     நகத்து அழுந்திட, அமுத இதழ் பருகியும் ......மிடறுஊடே

நடித்து எழும் குரல் குமுகுமு குமு என
     இசைத்து, நன்கொடு மனம்அது மறுகிட,
     நழுப்பு நஞ்சு அன சிறுமிகள் துயர்அற, ......அருள்வாயே.

நிறைத்த தெண் திரை மொகுமொகு மொகு என,
     உரத்த கஞ்சுகி முடி நெறு நெறு என,
     நிறைத்த அண்ட முகடு கிடு கிடு என, ...... வரைபோலும்

நிவத்த திண்கழல் நிசிசரர் உரமொடு
     சிரக் கொடும் குவை மலை புரை தர, இரு
     நிணக் குழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா!

திறல் கருங்குழல் உமையவள் அருள் உறு
     புழைக்கை தண்கட கயமுகம் மிகவுள
     சிவக்கொழுந்து அன கணபதியுடன் வரும் .....இளையோனே!

சினத்தொடும் சமன் உதைபட நிறுவிய
     பரற்கு, உள் அன்பு உறு புதல்வ, நன் மணி உகு
     திருப்பரங்கிரி தனில் உறை சரவண ...... பெருமாளே.


பதவுரை


      நிறைத்த தெண் திரை --- குறைவின்றி நிறையச் செய்துள்ள கடலின் தெளிந்த அலைகள்,

     மொகு மொகு மொகு என --- மொகுமொகு என்னும் ஒலியைச் செய்யவும்,

     உரத்த கஞ்சுகி --- வலிபெற்ற பாம்பாகிய ஆதிசேடனது,

     முடி நெறு நெறு என --- தலை நெறு நெறு என்ற ஓசையுடன் முறியவும்,

     நிறைந்த அண்ட முகடு --- நிறைந்துள்ள அண்டத்தின் உச்சியானது,

     கிடுகிடு என --- கிடுகிடு என்று அசைந்து நடுங்கவும்,

     வரை போலும் நிவத்த --- மலைபோன்று உயர்ந்த,

     திண் கழல் --- உறுதிபெற்ற வீரகண்டாமணிகளை அணிந்துள்ள கால்களுடைய,

     நிசி சரர் --- இரவில் சஞ்சரிப்பவராகிய அசுரரது,

     உரமோடு --- மார்போடு,

     சிரம்கொடு குவை --- கொடுமையாகிய சிரங்களின் குவியல்,

     மலை புரைதர --- மலைபோல் உயர்ந்து குவிந்திருக்க,

     இருநிணம் குழம்பொடு --- பெரிய கொழுப்பின் குழம்போடு,

     குருதிகள் சொரி தர --- மிகுந்த இரத்தஞ் சொரியவும்,

     அடு தீரா --- போர்புரியும் தைரியமுடையவரே,

      திறல் --- வலிமை பொருந்திய,

     கருங்குழல் உமையவள் --- கரிய கூந்தலையுடைய உமாதேவியாரது,

     அருள் உறு --- திருவருள் நிறைந்துள்ளவரும்,

     புழை கை --- தொளையை உடையத் தும்பிக்கையை உடையவரும்,

     தண்கடம் --- தனது திருவருளாகிய மதம் பொழிகின்ற,

     கய முகம் மிகவுள --- யானை முகமாகிய விசேடம் பொருந்தியவரும்,

     சிவக் கொழுந்து அன --- சிவமாகிய செஞ்சுடரின் கொழுந்து போன்றவரும்,

     கணபதி உடன் வரு --- கணநாதருமாகிய விநாயகப் பெருமானுக்குச் சகோதரராகத் தோன்றி வருகின்ற,

     இளையோனே --- இளமைப் பருவத்தை உடையவரே!

      சினத்தொடும் --- கோபத்தோடும்,

     சமன் உதைபட --- கூற்றுவன் உதைபடும்படி,

     நிறுவிய --- அடியார் பெருமையை நிலை நிறுத்திய,

     பரற்கு --- சிவபெருமானுக்கு,

     உள் அன்புறு புதல்வ --- உள்ளன்பு பொருந்திய திருக்குமாரரே!

      நல்மணி உகு --- நல்ல இரத்தின மணிகளைச் சொரிகின்ற,

     திருப்பரங்கிரி தனில் --- திருப்பரங்குன்றம் என்னும் திருத்தலத்தின்கண்,

     உறை --- வாசம் புரிகின்ற,

     சரவண பெருமாளே --- சரவண தடாகத்தில் எழுந்தருளிய பெருமையிற் சிறந்தவரே!

      கறுக்கும் அஞ்சன விழி இணை --- கோபிக்கும், மை தீட்டிய இரண்டு விழிகளாகிய,

     அயில்கொடு --- வேலாயுதத்தைக் கொண்டு,

     நெறுக்கி நெஞ்சு அற --- கிட்டிவந்து அவர்கள் வசமாகவே நெஞ்சம் அழிந்து போகும்படி,

     எறிதரு பொழுது --- வீசுகின்ற காலத்தில்,

     ஒரு கனிக்குள் --- ஒப்பற்ற கோவைப் பழத்தை நிகர்த்த,

     இன்சுவை --- இனிய சுவை பொருந்திய,

     அமுது உகு --- அதர அமிர்தத்தைப் பொழிகின்ற,

     ஒரு சிறு நகையாலே --- ஒப்பற்ற புன்முறுவலால்,

     களக் கொழும் கலி --- வளமான கண்டத்தொனி என்னும்,

     வலைகொடு விசிறி --- வலையைக்கொண்டு வீசி,

     ம் மனைக்கு எழுந்திரும் --- எமது வீட்டிற்கு எழுந்து வருவீர்,

     என மனம் உருக --- என்று மனம் உருகும்படியாகவும்,

     ஓர் கவற்சி கொண்டிட --- ஒப்பற்ற வருத்தத்தை அடையவும்,

     மனை தனில் --- தம்முடைய வீட்டிற்கு,

     அழகொடு கொடு போகி --- அழகாக அழைத்துக்கொண்டு சென்று,

     நறைத்த --- வாசனையை உடைய,

     பஞ்சணை மிசையினில் --- பஞ்சணையின்மேல்,

     மனம் உற அணைத்து --- உள்ளம் அவர்கள் வசத்திலேயே பொருந்தும்படி தழுவி,

     அகம் தனில் --- மார்பினில், (ஆகம் என்பது அகம் எனத் திரிந்தது)

     இணைமுலை எதிர்பொர --- இரு முலைகளும் எதிராகப் பொருந்தவும்,

     நகத்து அழிந்திட --- நகக் குறிகள் அழுந்தவும்,

     அமுது இதழ் பருகியும் --- இதழில் பொருந்திய அமிர்தத்தைச் சுவைத்தும்,

     மிடறு ஊடு --- கழுத்தின் மத்தியில்,

     நடித்து எழும் குரல் --- நடித்துக்கொண்டு எழும் குரலொலியானது,

     குமுகுமு குமு என இசைந்து --- குமுகுமு குமு என்ற ஓசையுடன், ஒலித்து,

     நன்கொடு --- நன்றாக,

     மனம் அது மறுகி --- மனமானது சுழன்றிட,

     நழுப்பும் --- வஞ்சனையைச் செய்யும்,

     நஞ்சு அன சிறுமிகள் --- விடத்திற்கு நிகரான இளம் பெண்களாகிய விலைமகளிரது,

     துயர் அற அருள்வாயே --- துன்பம் நீங்குமாறு திருவருள் புரிவீர்.

பொழிப்புரை


         குறைவின்றி நிறைந்துள்ள கடலின் தெளிந்த அலைகள் மொகுமொகு மொகு என்று ஒலிக்கவும், வலிபெற்ற பணியரசனாகிய ஆதிசேடனது பணாமுடிகள் நெறு நெறு என்று முறியவும், ஆகாயத்தில் அளவின்றி நிறைந்துள்ள அண்டங்கள் கிடு கிடு என்று நடுங்கவும், மலைபோன்று உயர்ந்தவரும், வீரகழல் அணிந்தவரும், இரவில் சஞ்சரிப்பவருமாகிய அரக்கரது மார்பும் கொடுமையான சிரமும் மலைபோல் குவியவும், பெரிய கொழுப்பின் குழம்பொடு உதிரம் மிகுதியாகச் சொரியவும் போர்ப் புரிந்த தீரரே!

         வல்லபத்தை உடையவரும் கரிய அளகபாரத்தை உடையவருமாகிய உமாதேவியாரது திருவருளை உடையவரும், தொளையுடைய துதிக்கையையும், மதம் பொழியும் ஆனை முகத்தையும், உடையவருமாகிய சிவக்கொழுந்தனைய கணபதிக்குத் துணைவராக எழுந்தருளி வருகின்ற என்றும் அகலாத இளையவரே!

         (மார்க்கெண்டேயரைப் பற்றவந்த காலத்தில்) கோபத்தோடு இயமனை உதைத்து அடியார் பெருமையை நிலை நிறுத்திய சிவ பெருமானுக்கு உள்ளன்புடையத் திருக்குமாரரே!

         நல்ல இரத்தினங்களைச் சொரிகின்ற திருப்பரங்குன்றம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சரவணப் பெருமாளே!

         மை எழுதப்பட்டு (பொருள் தராதவரை) கோபிக்கும் இருவிழிகளாகிய வேலாயுதத்தைக் கொண்டு நெருங்கி வந்து அவர் வசத்திலேயே நெஞ்சம் அழியும்படி வீசுகின்றபோது கோவைக் கனியை ஒத்த சுவையுடைய அதராமிர்தம் சொரிகின்ற புன்முறுவலால், வளமான கண்டத்தொனி என்னும் வலைகொண்டு வீசி “எம்முடைய வீட்டிற்கு எழுந்தருளுவீர்” என்று மனமுருக இதமுறப் பேசிய பின்னர் (பொருள் தீர்ந்து வருந்தும்படி) தங்கள் வீட்டிற்கு அழகொடு அழைத்துச் சென்று வாசனை தாங்கிய பஞ்சணையின்மீது மனம் அவர்கள்பால் பொருந்த மார்பில் இரு தனங்களும் பதியத் தழுவி, நகக் குறிகள் அழுந்தவும் அதரபானத்தை அருந்தியும், தொண்டையில் துடிப்புடன் குமு குமு குமு என்று புள்ளொலி செய்யவும், நன்றாக மனம் சுழலவும் வஞ்சனையைப் புரியும் விடத்திற்கு நிகரான இளமையை உடைய பொது மகளிரது துன்பம் அடியேனை விட்டு நீங்குமாறு திருவருள் புரிவீர்.


விரிவுரை

கறுத்தல் ---

     கோபித்தல், பொருள் தராதவரிடத்தில் கோபிக்கும் விழி. கறுத்தல் என்பதிலுள்ள வல்லினத்தை இடையினரகரமாக்கி கருமை நிறமெனப் பொருள் கொள்வாருமுளர்.

வலை கொடு விசிறி ---

     கண்வலையும் சொல்வலையும் வீசி ஆடவரை மயக்குவர்; அவ்வலையில் அகப்பட்டார் உய்வது அரிது.

விழிவலை மகளிரொ டாங்கு கூடிய வினையேனை”   ---(தரையினில்) திருப்புகழ்.


திண்ணிய நெஞ்சப்பறவை சிக்கக் குழற்காட்டில்
கண்ணிவைப்பர் மாயங் கடக்கும் நாள் எந்நாளோ.   ---தாயுமானவர்.


மனமது மறுகிட நழுப்பு ---

     ஆடவர்கள் மனம் சுழலும்படி வஞ்சனையைச் செய்வர். அதனால் ஆடவர்கள் ஊசலைப்போல் அலைந்து அல்லல்படுவர். அவ் இருமனப்பெண்டிர் மயக்கு உற்றார் அலையாழித் துரும்பு போல் அமைதியின்றிச் சுழல்வர்.

மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப்
 பட்டுஊசல் படும் பரிசுஎன்று ஒழிவேன்”    --- கந்தர்அநுபூதி

நஞ்சன சிறுமிகள் துயரற அருள்வாயே ---

     விடத்தைப்போல் தம்மை அடைந்தாரைப் பொருள் பறித்துக் கொல்லும் விலைமகளிரது துன்பத்தினின்றும் நீங்கி இன்பமுற இறைவனை வேண்டுகிறார்.

     இக் காமவேட்கை அரும் தவராலும் அகற்றுதற்கு முடியாத வேகமுடையது. ஆகையால், மாயைக்குச் சூழ ஒண்ணா வடிவேற் கடவுளது திருவருளை நாடுகிறார். முருகவேளது திருவருள் துணைகொண்டே விலக்கற்கரிய அவ்வாசையை நீக்க வேண்டும். அவனது அருளாலேயே ஆசையாகிய கட்டு தூள்படும். “நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகளாயின” என்ற அருள் மொழியைக் காண்க.

இதனைச் சிதம்பர சுவாமிகள் திருவாக்காலும் உணர்க.

மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல் பெருநகரம், --- ஓதில்அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை, போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.

நிறைத்த தெண்டிரை......அடுதீரா ---

     சமுத்திர ஒலி மிகவும், ஆதிசேடன் முடிகள் நெறியவும், அண்டங்கள் நடுங்கவும், அசுரர்கள் தலைகளும் சரீரங்களும் மலைப்போல் குவியவும், உதிரம் ஆறுபோற் பெருகவும் முருகவேள் போர் புரிந்தனர், பிரமாதி தேவர்களால் கண்ணெடுத்துப் பார்க்கவும் முடியாத அத்துணைப் பெரும்படையை அழித்ததனால் `தீரா’ என்று விளித்தனர்.

              உரகன் முடித்தலை
நெறுநெறெனத்திசை யதிரஅடைத்திட
மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட விடும்வேலா!    --- (குருவியென)திருப்புகழ்.

தீரதீர தீராதிதீரப் பெரியோனே’        --- (பேரவா) திருப்புகழ்

திறல் கருங்குடல் உமை ---

     சகலலோகங்களையும் ஈன்றவள் அவளாதலாலும், ஆக்கல் அளித்தல் அழித்தல் என்னும் முத்தொழிலும் சக்தியின்றி நடவாதாகலானும், சராசரங்களெல்லாம் சக்தியின் துணையின்றி நிலைபெறாவாகலானும் உமையவளுக்குத் திறல் என்னும் அடை கொடுத்தனர். அவ்வகிலாண்ட நாயகியின் அருளில் அணுத்துணையேனும் பெற்றிடில் சிறு துரும்பும் முத்தொழிற் செய்யும் என்ற வாக்கை நோக்குக.

ஒளிமருவும் உனதுதிரு வருள்அணுத் துணையேனும்
     உற்றிடில் சிறு துரும்பும்
உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும்என
     உயர்மறைகள் ஓர்அனந்தம்
தெளிவுற முழக்குவது கேட்டும்,நின் திருவடித்
     தியானம் இல்லாமல் அவமே
சிறுதெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள்பால்
     சேராமைஎற்கு அருளுவாய்.     --- இராமலிங்க சுவாமிகள்.


சினத்தொடுஞ் சமனுதைபட :-

இயமனை உதைத்த வரலாறு

         அநாமயம் என்னும் வனத்தில் கவுசிக முனிவரது புத்திரராகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர் முற்கால முனிவரது புத்திரியாகிய மருத்துவதியை மணந்து, தவமே தனமாகக் கொண்டு சித்தத்தைச் சிவன்பால் வைத்திருந்தனர். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி, காசி என்னும் திருத்தலத்தை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி, விசுவேசரை நோக்கி ஓராண்டு பெருந்தவம் புரிந்தனர்.


     வேண்டுவார் வேண்டிய வண்ணம் நல்கும் விடையூர்தி விண்ணிடைத் தோன்றி, “மாதவ! நினக்கு யாது வரம் வேண்டும்?” என்றனர். முனிவர் பெருமான் புரமூன்றட்ட பூதநாயகனைப் போற்றி செய்து புத்திரவரம் வேண்டுமென்றனர். அதுகேட்ட ஆலமுண்ட அண்ணல் புன்னகை பூத்து “தீங்குறுகுணம், ஊமை, செவிடு, முடம், தீராப்பிணி, அறிவின்மையாகிய இவற்றோடு கூடிய நூறு வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோ? அல்லது சகலகலா வல்லவனும் கோல மெய்வனப்புடையவனும் குறைவிலா வடிவுடையவனும் நோயற்றவனும் எம்பால் அசைவற்ற அன்புடையவனும் பதினாறாண்டு உயிர்வாழ்பவனுமாகிய மைந்தன் வேண்டுமா? பகருதி” என்றனர். முனிவர், “வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே வேண்டும்” என்றனர். அவ்வரத்தை நல்கி அரவாபரணர் தம் உருக் கரந்தனர்.

         ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தரும பத்தினியாகிய மருந்துவதி காலனது இடத்தோள் துடிக்கவும், பூதல இடும்பை நடுங்கவும், புரை தவிர் தருமமோங்கவும், மாதவமுனிவ ருய்யவும், வைதிக சைவம் வாழவும் கருவுற்றனள். பத்து மாதங்களுக்குப் பின் இளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. தேவ துந்துபிக ளார்த்தன. விண்ணவர் மலர்மழைச் சிந்தினர். முனிவர் குழாங்கள் குழுமி ஆசி கூறினர். பிரம்மதேவன் வந்து "மார்க்கண்டன்" என்று பேர் சூட்டினன். ஐந்தாவது ஆண்டில் சகல கலையுங் கற்றுணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்தி, அறிவு, அடக்கம், அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு உறைவிடமாயினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது தந்தையுந்தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக் கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர் இரு முதுகுரவரையும் பணிந்து “நீங்கள் வருந்துவதற்கு காரணம் யாது?’ என்று வினவ, “மைந்தா! நீ யிருக்க எமக்கு வேறு துன்பமும் எய்துமோ? சிவபெருமான் உனக்குத் தந்த வரம் பதினாறு ஆண்டுகள்தாம். இப்போது நினக்குப் பதினைந்தாண்டுகள் கழிந்தன. இன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேருமென எண்ணி ஏங்குகின்றோம்’ என்றனர்.

     மார்க்கண்டேயர், “அம்மா! அப்பா! நீவிர் வருந்த வேண்டாம்; உமக்கு வரமளித்த சிவபெருமான் இருக்கின்றனர், அபிஷேகம் புரிய குளிர்ந்த நீரிருக்கிறது, அர்ச்சிக்க நறுமலரிருக்கிறது, ஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு மெய்த்துணைகளாக இருக்கின்றன. இயமனை வென்று வருவேன் நீங்கள் அஞ்சன்மின்” என்று கூறி விடைபெற்று,  மணிகர்ணிகையில் நீராடி, சிவலிங்கத்தைத் தாபித்து, நறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி வழிபாடு புரிந்து நின்றனர். என்பெலாம் உருகி விண்மாரி எனக் கண்மாரி பெய்து, அன்பின் மயமாய்த் தவம் இயற்றும் மார்க்கண்டேயர்முன் சிவபெருமான் தோன்றி “மைந்தா!  நினக்கு யாது வரம் வேண்டும்” என்றருள் செய்தனர். மார்க்கண்டேயர் மூவருங்காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல் வீழ்ந்து,

ஐயனே அமலனே அனைத்தும் ஆகிய
 மெய்யனே பரமனே விமலனே அழல்
 கையனே கையனேன் காலன் கைஉறாது
 உய்யநேர் வந்து நீ உதவுஎன்று ஓதலும்’      ---கந்தபுராணம்.

     சங்கரா! கங்காதரா! காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரமிரந்தனர். கண்ணுதல் “குழந்தாய்! அஞ்சேல், அந்தகனுக்கு நீ அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.

         மார்க்கண்டேயர் காலந்தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து இயமதூதன் விண்ணிடை முகிலென வந்து சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி சமீபிக்கக் கூடாதவனாய் திரும்பி சைமினி நகரம் போய், தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக் கூற, இயமன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டன் ஈறில்லாத ஈசனோ?” என்று தனது கணக்கராகிய சித்திரகுத்திரரை வரவழைத்து மார்க்கண்டரது கணக்கை உசாவினன். சித்திர குத்திரர் “இறைவ! மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர் உலகில் ஒருவருமில்லை; மார்க்கண்டேயருடைய சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால் நமது உலகை அடைவதற்கு நியாயமில்லை; கயிலாயம் செல்லத் தக்கவர்” என்று கூறினர். இயமன் உடனே தம் மந்திரியாகிய காலனை நோக்கி “மார்க்கண்டேயனை பிடித்து வருவாயாக” என்றனன். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும் இடையறா அன்பின் தகைமையையும் புலனாகுமாறு தோன்றி, முனிகுமாரரை வணங்கி காலன் அழைத்ததைக் கூறி “அருந்தவப் பெரியீர்! எமது இறைவன் உமது வரவை எதிர் பார்த்துளன். உம்மை எதிர்கொண்டு வணங்கி இந்திர பதவி நல்குவன். வருவீர்” என்றனன். அதுகேட்ட மார்க்கண்டேயர் “காலனே! சிவனடிக்கன்பு செய்வோர் இந்திரனுலகை விரும்பார்.”

நாதனார் தமது அடியவர்க்கு அடியவன்  நானும்
ஆதலால் நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,
 வேதன்மால் அமர்பதங்களும் வெஃகலன், விரைவில்
 போதிபோதி என்று உரைத்தலும் நன்றுஎனப் போனான்.”
                                    
         அது கேட்ட காலன் நமன்பால் அணுகி நிகழ்ந்தவை கூற, இயமன் வடவனல் போல் கொதித்து புருவம் நெறித்து விழிகளில் கனற்பொறி சிந்த எருமை வாகனத்தை ஊர்ந்து பரிவாரங்களுடன் முனிமகனார் உறைவிடம் ஏகி, ஊழிக் காலத்து எழும் கருமேகம் போன்ற மேனியும் பாசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன் தோன்றினன். அந்தகனைக் கண்ட அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த வண்ணமாயிருந்தனர். கூற்றுவன் “மைந்தா! யாது நினைந்தனை? யாது செய்தனை? ஊழ்வினையைக் கடக்கவல்லார் யாவர்? ஈசனாரது வரத்தை மறந்தனை போலும், நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது யான் வீசும் பாசத்தை விலக்குமோ? கடற்கரை மணல்களை எண்ணினும் ககனத்து உடுக்கைகளை எண்ணினும் எண்ணலாம்; எனது ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோ? பிறப்பு இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு கமலாசனுக்கும் உண்டு. எனக்கும் உண்டு. ஆகவே பிறப்பு இறப்பற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர் காப்பினும், மூவர் காப்பினும் மற்ற எவர் காப்பினும், உனது ஆவி கொண்டல்லது மீண்டிடேன். விரைவில் வருதி” என்றனன்.

         மார்க்கண்டேயர் “அந்தக! அரனடியார் பெருமை அறிந்திலை; அவர்களுக்கு முடிவில்லை. முடிவு நேர்கினும் சிவபதமடைவரே அன்றி, நின் புரம் அணூகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையார். தணிந்த சிந்தையுடைய அடியார் பெருமையை யாரே உரைக்கவல்லார். அவ்வடியார் குழுவில் ஒருவனாகிய என்னாவிக்குத் தீங்கு நினைத்தாய்; இதனை நோக்கில் உன் ஆவிக்கும் உன் அரசுக்கும் முடிவு போலும்.

தீதுஆகின்ற வாசகம் என்தன் செவிகேட்க
ஓதா நின்றாய்,மேல் வரும்ஊற்றம் உணர்கில்லாய்,
பேதாய், பேதாய், நீ இவண் நிற்கப் பெறுவாயோ,
போதாய் போதாய்” என்றுஉரை செய்தான் புகரில்லான். --- கந்தபுராணம்

     இவ்விடம் விட்டு விரைவில் போதி” என்ற வார்த்தைகளைக் கேட்ட மறலி மிகுந்த சினங்கொண்டு, “என்னை அச்சுறுத்துகின்றனை? என் வலிமையைக் காணுதி” என்று ஆலயத்துள் சென்று பாசம் வீசுங்கால், மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவி சிவசிந்தனையுடன் நின்றனர். கூற்றுவன் உடனே பாசம் வீசி ஈர்த்திடல் உற்றான். பக்தரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு “குழந்தாய்! அஞ்சேல், அஞ்சேல், செருக்குற்ற இயமன் நின் உயிர்வாங்க உன்னினன்” என்று தனது இடது பாதத்தை எடுத்து கூற்றுவனை உதைத்தனர். இயமன் தன் பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா ஆயுளை நல்கி மறைந்தனர். மார்க்கண்டேயர் தந்தை தாயை அணுகி நிகழ்ந்தவைக் கூறி, அவர்கள் துன்பத்தை நீக்கினர். நெடுங்காலத்துக்குப் பின் மரணாவத்தை இன்றி பூபார மிகுந்தது. தேவர்கள் வேண்ட சிவபிரான் இயமனை உயிர்ப்பித்தனர்.

சிதைத்தான் வாமச் சேவடி தன்னாற் சிறிது உந்தி
உதைத்தான், கூற்றன் விண் முகில்போல் மண் உறவீழ்ந்தான்”   --- கந்தபுராணம்.

அந்தணாளன்உன் அடைக்கலம் புகுத
         அவனைக்காப்பது காரணமாக
வந்தகாலன் தன்ஆருயிர் அதனை
         வவ்வினாய்க்கு உன்தன் வண்மைகண்டு,டியேன்
எந்தை!நீ எனைநமன் தமர்நலியில்
         இவன்மற்றுஎன்அடி யான்எனவிலக்கும்
சிந்தையால் வந்துஉன் திருவடி அடைந்தேன்
         செழும்பொழிலு திருப்புன் கூர்உளானே    ---சுந்தரர் தேவாரம்

தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட உதைத்துக்கோத்த 
தோள்உடை என்அப்பர்க்கு ஏற்றி      திரிவோனே.      ----(வார்குழல்) திருப்புகழ்

பரற்குள் அன்பு உறு புதல்வ  ---

     குடிலை மந்திரப் பொருள் உணர்த்திய குழந்தைக் குருமணியாதலால், சிவபெருமானுக்கு அன்புடைப் புதல்வனாக குமாரக்கடவுள் விளங்குகின்றனர்.


நன்மணியுகு திருப்பரங்கிரி ---

     அநேக நாக இனங்கள் வாழுதலால் இரத்தின மணிகளும், யானைகளும், மூங்கில்களும் விசேடித்து இருப்பதால் முத்து மணிகளும் திருப்பரங்குன்றத்தில் சொரிகின்றன என்றனர்.


கருத்துரை


         கடல் கதற சேடன் முடி நெறிய அண்டம் நடுங்க அரக்கர்தலை மலைபோல் குவிய உதிரநதி பெருக போர்புரிந்த தீரரே! உமாதேவியாரது திருவருளுடைய சிவக்கொழுந்தன்ன கணபதிக்கு இளைய சகோதரரே! மறலியை உதைத்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றிய மகாதேவரது புதல்வரே! திருப்பரங்குன்றத்தில் உறைபவரே! மாதர் மயக்கமாகிய துன்பத்தை நீக்கி நல்லருள் புரிவீர்.


No comments:

20. துட்டனைக் கண்டால் தூர விலகு

“கொம்புஉளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம், வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, - வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே ந...