அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கனகந்திரள் கின்ற
(திருப்பரங்குன்றம்)
முருகா!
பாவப் பிறவி ஒழிய
அருள்வாய்
தனதந்தன
தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன ...... தனதான
கனகந்திரள்
கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே
கடமிஞ்சிஅ
நந்தவி தம்புணர்
கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே
பனகந்துயில்
கின்றதி றம்புனை
கடல்முன்புக டைந்தப ரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே
பலதுன்பம்உழன்றுக
லங்கிய
சிறியன்புலை யன்கொலை யன்புரி
பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே
அனகன்பெயர்
நின்றுரு ளுந்திரி
புரமுந்திரி வென்றிட இன்புடன்
அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே
அடல்வந்துமு
ழங்கியி டும்பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர்
மனமுந்தழல்
சென்றிட அன்றவர்
உடலுங்குட லுங்கிழி கொண்டிட
மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ......பெரியோனே
மதியுங்கதி
ருந்தட வும்படி
உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கனகம்
திரள்கின்ற பெருங் கிரி
தனில்வந்து, தகன் தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டை எறிந்திடு ......
கதியோனே!
கடமிஞ்சி
அநந்த விதம் புணர்
கவளம் தனை உண்டு வளர்ந்திடு
கரியின் துணை என்று பிறந்திடும்
......முருகோனே!
பனகம்
துயில்கின்ற திறம் புனை,
கடல் முன்பு கடைந்த பரம்பரர்,
படரும் புயல் என்றவர் அன்புகொள்
...... மருகோனே!
பல
துன்பம் உழன்று கலங்கிய
சிறியன்க, புலையன், கொலையன், புரி
பவம் இன்று கழிந்திட வந்து அருள்
...... புரிவாயே.
அனகன்
பெயர் நின்று உருளும் திரி
புரமும் திரி வென்றிட, இன்புடன்
அழல் உந்த நகும் திறல்
கொண்டவர்....புதல்வோனே!
அடல்வந்து
முழங்கி இடும் பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டு, என
அதிர்கின்றிட, அண்டம் நெரிந்திட ......
வருசூரர்
மனமும்
தழல் சென்றிட, அன்று அவர்
உடலும் குடலும் கிழி கொண்டிட,
மயில் வென் தனில் வந்து அருளும் கன
......பெரியோனே!
மதியும்
கதிரும் தடவும் படி
உயர்கின்ற வனங்கள் பொருந்திய
வளம் ஒன்று பரங்கிரி வந்து அருள்
...... பெருமாளே.
பதவுரை
கனகம் திரள்கின்ற --- பொன் திரளுகின்ற,
பெரும் கிரி தனில் வந்து --- பெரிய
மலையாகிய மேருகிரியை அடைந்து, (அம்மேருகிரியின்
செருக்கை அடக்கும் பொருட்டு)
தகன் தகன் என்றிடு --- தகதக என்று
மின்னுகின்ற,
கதிர் மிஞ்சிய --- ஒளிமிகுந்த,
செண்டை எறிந்திடு --- செண்டாயுதத்தை
எறிந்திட்ட,
கதியோனே --- புகலிடமானவரே!
கடம் மிஞ்சி --- மதம் மிகுந்து,
அநந்த விதம் புணர் --- அளவில்லாத
வகைகளாகப் புரிந்த பட்சணங்களின்,
கவளந்தனை உண்டு --- கவள அளவாக எடுத்து
உண்டு,
வளர்ந்திடு --- வளர்ந்திடும்படியான,
கரியின் துணை என்று பிறந்திடு ---
யானை முகத்தை உடைய விநாயகமூர்த்தியினது சகோதரராகத் தோன்றிய,
முருகோனே --- முருகப்பெருமானே!
பனகம் --- பாம்பாகிய
ஆதிசேடன்மீது,
துயில்கின்ற திறம் புனை ---
அறிதுயிலாகிய யோக நித்திரை புரிவதில் வல்லவரும்,
கடல் முன்பு கடைந்த ---
திருப்பாற்கடலை முன்னாளில் (தேவர் பொருட்டு) கடைந்தவரும்,
பரம்பரர் --- பெரிய பொருளாக
விளங்குபவரும்,
படரும் புயல் என்றவர் --- ஆகாயத்தில்
படருகின்ற மேகத்திற்குச் சமானமாகிய நீல நிறத்தையுடையவருமாகிய நாராயணமூர்த்தி,
அன்புகொள் மருகோனே --- மிகுந்த அன்பு
கொள்ளுகின்ற மருகனாக எழுந்தருளியவரே!
அனகன் பெயர் நின்று --- பாவமில்லாதவன்
என்கிற பெயருடன் நிலைபெற்றிருந்து,
உருளும் திரிபுரமும் திரி ---
நிலையற்று உருண்டுகொண்டு திரிகின்ற மூன்று புரங்களையும்,
வென்றிட --- வெற்றிபெறும் பொருட்டு,
இன்புடன் --- இன்பத்துடன்,
அழல் உந்த --- அக்கினி எழுந்து
சாம்பாராகும்படி,
நகுந்திறல் கொண்டவர் ---
நகைக்கும்படியான வல்லபத்தை உடையவராகிய சிவபெருமானது,
புதல்வோனே --- திருக்குமாரரே!
அடல் வந்து --- வாள் வலியாலும்
தோள் வலியாலும் சிறந்து வந்து,
முழங்கியிடும் பறை --- நன்றாக
முழங்குகின்ற பறைவாத்தியங்கள்,
டுடுடுண் டுடுடுண் டுடுடுண்டு என ---
டுடுடுண் டுடுடுண் டுடுடுண்டு என்கிற ஒலியைச் செய்ய,
அதிர்கின்றிட --- உலகம் அதிர்ச்சியடையவும்,
அண்டம் நெரிந்திட --- கூட்டம்
மிகுதியினால் அண்டங்கள் நெரியவும்,
வருசூரர் --- போர்க்களத்திற்கு வந்த
சூரர்களது,
மனமும் தழல் சென்றிட ---
மனத்தினிடத்தும் அக்கினி சென்று சுடும்படி,
அன்று அவர் --- அந்த நாளில்
அவர்களுடைய,
உடலும் குடலும் கிழிகொண்டிட ---
உடல்களும் குடல்களும் கிழிந்து அழியும்படியாகவும்,
மயில்வென் தனில் --- மயில்வாகனத்தின்
முதுகின்மேல்,
வந்து அருளும் --- வந்து
அருள்புரியும் படியான,
கன பெரியோனே --- பெருமை பொருந்திய வல்லமையாலும்
அறிவாலும் பெரியவனே!
மதியும் கதிரும் --- சந்திரனும்
சூரியனும்,
தடவும் படி --- உராய்ந்து
கொள்ளும்படியாக,
உயர்கின்ற --- உயர்ந்து ஓங்கி
வளர்ந்துள்ள,
வனங்கள் பொருந்திய --- சோலைகள்
சூழ்ந்துள்ள,
வளம் ஒன்று --- வளம்பொருந்திய,
பரங்கிரி வந்து அருள் ---
திருப்பரங்குன்றத்தில் (அடியார் பொருட்டு) எழுந்தருளித் திருவருள் புரியும்,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
பல துன்பம் உழன்று
கலங்கிய
--- பல துன்பங்களால் மனம் சுழன்று கலக்கமுற்ற,
சிறியன் --- அறிவு முதலியவற்றால்
மிகவுஞ் சிறியவனும்,
புலையன் --- கீழ்மகனானவனும்,
கொலையன் புரி --- கொலைத் தொழில்
புரிபவனுமாகிய அடியேன் செய்கின்ற,
பவம் இன்று கழிந்திட --- பாவங்கள்
இன்றோடு அழிந்து போகும்படி,
வந்து அருள் புரிவாயே --- தேவரீர்
அடியேன் முன் தோன்றி திருவருள் புரியவேண்டும்.
பொழிப்புரை
பொன் திரளுகின்ற பெருங்கிரியாகிய
மகாமேரு கிரியை அடைந்து அதன் செருக்கை அகற்றுவான் தகன் தகன் என்று ஒளி வீசுகின்ற
செண்டாயுதத்தை எறிந்த புகலிடமானவரே!
மதம் மிகுந்து முடிவில்லாத வகை வகையாகப்
புரிந்த பட்சணங்களை கவளங் கவளமாக உண்டு வளர்கிற யானை முகத்தையுடைய
விநாயகமூர்த்திக்கு இளைய சகோதரரே!
பன்னகத்தின் மிசை அறிதுயில் அமர்வதில்
வல்லவரும், முற்காலத்தில்
தேவர்கள் பொருட்டு கூர்மாவதார மெடுத்து கடல் கடைந்தவரும், பெரிய பொருளும், ஆகாயத்தில் படர்ந்துலவுகின்ற நீலமேகம்
போன்ற திருமேனியை உடையவருமாகிய நாராயணமூர்த்தி மிகவும் அன்பு கொள்ளும் திருமருகரே!
பாவம் இல்லாதவரென்ற திருநாமத்துடன்
நிலைபெற்று நின்று, மூன்று உலகத்திலும்
திரிந்து உழன்ற திரிபுரங்களும் அழியும்படி அக்கினிப் பொரி தோன்ற நகைக்குந்
திறனுடைய சிவபெருமானது திருக்குமாரரே!
வல்லபத்தால் வந்து மிகுந்து முழங்கும்
பறைவாத்தியங்கள் டுடுடுண்
டுடுடுண் என்று அதிரவும், அண்டங்கள் நெரியவும்
இரணகளத்திற்கு வருகிற சூராதி அவுணர் குழாங்களது மனத்திலும் அக்கினி சென்று
தகிக்குமாறு அந்நாளில் அவ்வசுரர்களின் உடலுங் குடலும் கிழிந்து அழியும்படி மயில்
முதுகினில் எழிந்தருளி வந்த முருகப் பெருமானே!
சந்திர சூரியர்கள் மிக்க
திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமையிற் சிறந்தவரே!
பல துன்பங்களால் சுழற்சியை அடைந்து
கலங்கிய சிறியவனும், புலையனும், கொலையனும் ஆகிய அடியேனது பாவங்கள் இன்றே
நீங்குமாறு தேவரீர் அடியேனது முன் தோன்றி அருள் புரிவீர்.
விரிவுரை
கனகந்
திரள்கின்ற.........செண்டை யெறிந்திடு கதியோனே ---
முருகப்பெருமானது சாரூபம் பெற்ற அபர்
சுப்ரமணிய மூர்த்திகளுக்குள் ஒன்று முருகவேளது திருவருட்கலையுடன் சம்பந்தப்பட்டு
உக்கிரப் பெருவழுதியாகத் தோன்றியது. இதனை உணராதார் முருகப் பெருமானே உக்கிரப்
பெருவழுதியாகத் தோன்றினாரெனக் கூறி இடர்ப்படுவார். முருகவேள் பிறப்பு இறப்பு இல்லாதவர்
என்பதை நம் அருணகிரியார், "பெம்மான் முருகன்
பிறவான் இறவான்" என்று கூறியுள்ளதால் அறிக.
சுப்ரமண்ய சாரூபம் பெற்றோர் பலர் என்பதை
அடியில் கண்ட பிரபல பிரமாணம் வலியுறுத்துமாறு காண்க.
ஒர்ஏழு
கோடி பைங்கரர், கோடி
வயிரவர் ஒன்பது கோடி,
சீர்கெழும்
எண்தோள் நீலிகண்மயின் மேற்செல்லும்
வேல் உழவர் எண்கோடி,
ஏர்பெறும்
இயக்கர் ஒன்றரைகோடி,
இசைநவில் கின்னரர் கோடி,
கூர்நுதிப்
பிறைப்பல் புயங்கம்ஓர்
மூன்றுகோடி, தானவர்இரு கோடி. --- காசிகண்டம்.
இன்னணம் சாருபம் பெற்ற அபர சுப்ரமணிய
மூர்த்திகளில் ஒன்றே திருஞானசம்பந்தராக வந்தது. இதை கூர்த்தமதி கொண்டு உணராதார்
மூவருக்கு முதல்வனும், மூவரும் பணிகேட்க, முத்தொழிலைத் தந்த முழுமுதற் கடவுளும், தாரகப் பொருளாய் நின்ற தனிப்பெருந்
தலைவனுமாகிய பதிப்பொருட் பரஞ்சுடர் வடிவேலண்ணலே திருஞானசம்பந்தராகவும்
உக்கிரகுமாரராகவும் பிறந்தாரென எண்ணுகின்றனர். தெய்வ இலக்கணங்கள் யாதுயாது உண்டோ
அவையனைத்தும் ஒருங்கே உடைய முருகப்பெருமான் பிறப்பிலி என்பதை வேதாகமங்களால் நுணுகி
ஆராய்ந்தறிக.
மேருவைச் செண்டால் எறிந்த
வரலாறு
அறுபத்து நான்கு சக்திபீடங்களில்
சிறந்ததும் துவாதசாந்தத் திருத்தலமும் ஆகிய மதுரையம்பதியில் சோமசுந்தரக்கடவுள்
திருவருளால் தடாதகைப் பிராட்டியாரது திருவுதரத்தில் புகாது, அயோநிஜராக முருகவேளது
திருவருட்சத்தியுடன் சேர்ந்து முருக சாரூபம் பெற்ற அபரசுப்ரமண்ய மூர்த்திகளில்
ஒருவர் உக்கிரகுமார பாண்டியராகத் தோன்றி, அறனெறி
பரப்பி அரசாண்டு கொண்டிருந்த ஞான்று, கோள்கள்
திரிந்ததால் மழை பொழியாதாயிற்று. அதனால் நதிகள், குளங்கள், கிணறுகள், முதலிய நீர் நிலகள் வற்றி, விளைபொருள் குன்றி, கொடிய பஞ்சம் ஏற்பட்டது. மாந்தர்கள்
பசியால் வாடி வருந்தினார்கள். உக்கிரகுமார பாண்டியர் “மழை வளம் வறந்தது யாது காரணம்”
என்று வினவ, கால அளவுகளை நன்கு உணர்ந்த
புலவர்கள் சோதிட நூலை ஆராய்ந்து “மன்னர் பெருமானே! அழியாத பிரமகற்பம் மட்டும் ஏனைய
கிரகங்கள் கதிரவனை அடைந்து பார்த்து நிற்றலால் ஓராண்டு வரை வானத்தினின்றும் மழை
பொழியாது” என்றனர்கள்.
அதுகேட்ட உக்கிரகுமாரர் குழந்தையின்
நோயைக் கண்டு வருந்தும் நல் தாய்போல் குடிகளிடத்து மனமிரங்கி, அத் துன்பத்தை நீக்கும் உபாயத்தை உன்னி, ஆலயம் சென்று மதிநதி அணிந்த சோமசுந்தரக்
கடவுளைக் கண்டு பணிந்து, “தேவதேவ! மகாதேவ!
தென்னாடுடைய சிவபரஞ்சுடரே! எந்நாட்டவர்க்கும் இறைவ! மழையின்றி மாந்தர்கள் பசியால்
வாடி மெலிகின்றனர். தேவரீர் திருவருள் புரியவேண்டும்” என்று குறையிரந்தனர். முறையே
மும்முறை வலம் வந்து வணங்கி தம் இருக்கை புக்கு கங்குல் வந்ததும் துயில்
புரிவாராயினர். வெள்ளியம்பலத்தில் கால் மறியாடிய வித்தகர் உக்கிரப்பெருவழுதியார்
கனவில் வந்து தோன்றி, “சீருடைச் செல்வ!
இக்காலத்து மழை பெய்தல் அரிது. அதனைக் குறித்து வருந்தாதே. மலைகட்கு அரசாயிருக்கிற
மேருமலையின் கண் ஒரு குகையில் அளவு கடந்த ஒரு வைப்புநிதி சேமம் செய்து உள்ளது. ஆங்கு நீ சென்று அம்மலையின் செருக்கழிய
செண்டால் எறிந்து, உனது ஆணைவழிப்படுத்தி, சேமநிதியில் வேண்டியவற்றை எடுத்து அந்த
அறையை மூடி நின் அடையளமிட்டு மீளுதி” என்று அருளிச் செய்தனர்.
உக்கிரகுமாரர் கண்விழித்தெழுந்து
மகிழ்ந்து காலைக் கடனாற்றி, அங்கையற்கண் அம்மையுடன்
எழுந்தருளியுள்ள ஆலவாயானை வழிபட்டு விடைபெற்று, நால்வகைப் படைகள் சூழ சங்குகள் முழங்கவும், ஆலவட்டங்கள் வீசவும் வந்தியர்கள்
பாடவும் இரதத்தின் மீதூர்ந்து, வடதிசையை நோக்கிச்
செல்வாராயினர். தென்கடலானது வடதிசையை நோக்கி செல்வது போலிருந்தது அக்காட்சி.
எதிர்ப்பட்ட மன்னர்களால் வணங்கப் பெற்று இமவரையைக் கடந்து பொன்மயமாய்த் திகழும்
மகாமேருகிரியின் சாரலை அடைந்து அம்மேருமலையை நோக்கி “எந்தையாகிய சிவபெருமானது அரிய
மலையே! உலகிற்கு ஓர் பற்றுக்கோடே! கதிரும் மதியும் உடுக்களும் சூழ்ந்து வலம்வரும்
தெய்வத வரையே! தேவராலயமே!’ என்று அழைத்தனர். வழுதியர்கோன் அழைத்தபோது மேருமலையரசன்
வெளிப்பட்டுவரத் தாமதித்ததால், இந்திரனை வென்ற
இளங்காவலன் சினந்து மேருமலையின் தருக்கு அகலுமாறு வானளாவிய அம் மகாமேருவின்
சிகரத்தை செண்டாயுதத்தால் ஓங்கி அடித்தனர். மேருமலை அவ்வடி பட்டவுடனே பொன்னால்
செய்த பந்துபோல் துடித்தது. எக்காலத்தும் அசையாத அம்மலை அசைந்து நடுங்கியது.
சிகரங்கள் சிதறின. இரத்தினங்களைச்
சொரிந்தது.
மேருமலையின் அதிதேவதை உடனே அட்டகுல
பருவதங்கள் போன்ற எட்டுப் புயங்களையும் நான்கு சிகரங்களையும் கொண்டு நாணத்துடன்
வெளிப்பட்டு உக்கிர குமார பாண்டியரை வணங்கியது. பாண்டிய நாட்டிறைவன் சினந்தணிந்து
“இதுகாறும் நின் வரவு தாமதித்த காரணம் யாது?” என்று வினவ, மேருமலையின் அதிதேவதை “ஐயனே! அங்கயற்கண்
அம்மையுடன் எழுந்தருளியுள்ள சோமசுந்தரேசுவரரை இவ்வடிவத்துடன் ஒவ்வொருநாளும் சென்று
வழிபடும் நியமம் பூண்டிருந்தேன். இன்று அறிவிலியாகிய அடியேன் ஒரு மடவரலைக் கண்டு
மனமருண்டு வெங்காம சமுத்திரத்தில் மூழ்கி ஆலவாய்க் கடவுளை வழிபடும் நியமத்தை
மறந்து வாளாயிருந்தேன். எம்பெருமானது திருவடிக்குப் பிழைசெய்த இத்தீங்கின்
காரணத்தால் தேவரீரது செண்டாயுதத்தால் அடியும் பட்டேன். புனிதனாயினேன். சிவ
வழிபாட்டினின்றுந் தவறிய எனது அஞ்ஞானத்தை நீக்கி உதவி செய்தனை. அண்ணலே! இதைக்
காட்டிலும் சிறந்த உதவி யாது உளது?
இதற்குக்
கைம்மாறு அடியேன் யாது செய்ய வல்லேன். பற்றலர் பணியும் கொற்றவ? இங்கு வந்த காரணம் என்கொல்? திருவாய் மலர்ந்து அருளவேண்டும்” என்று
வினவ, உக்கிர குமாரர்
“வரையரசே! பொன்னை விரும்பி நின்பால் வந்தனன்” என்றனர். மலையரசன் “ஐயனே! பொன் போன்ற
தளிரையுடைய மாமர நிழலில் ஓர் அறையில் ஒரு பாறையில் மூடப்பட்டுக் கிடக்கிறது.
அச்சேம நிதியில் நினக்கு வேண்டியவற்றைக் கொண்டு நின் குடிமக்களுக்கு ஈந்து வறுமைப்
பிணியை மாற்றுதி” என்று கூற, வருணனை வென்ற
மாபெருந் தலைவராகிய உக்கிரப் பெருவழுதி அவ்வறைக்குள் சென்று, மூடி இருந்த பாறையை எடுத்து, அளவற்ற பொன்களை எடுத்துக் கொண்டு, மீண்டும் அப்பாறையை மூடி மிகுந்த
பொருளையுந் தம்முடையதாகத் தமது கயல் முத்திரையை அப்பாறை மேல் எழுதி, ஆங்கிருந்து புறப்பட்டு, மதுரையம்பதியை யணுகி, தேரை விட்டிழிந்து முக்கட் பரமனுடைய
திருவாலயம் புகுந்து மூவர் முதல்வனை மும்முறை வணங்கி அந்நிதிகளை யெல்லாம்
மாந்தர்களுக்கீந்து பசி நோயை நீக்கி இன்பந் தந்து இனிது அரசாண்டனர்.
பனகந்
துயில்கின்ற திறம் புனை ---
ஆயிரந்தலைகளை உடைய ஆதிசேடப் பன்னாகப் பாயலின்
மீது நாராயணர் அறிதுயில் (யோக நித்திரை) புரிந்து ஆன்மாக்களுக்குத் திருவருள்
புரிகிறார்.
கடல்
முன்பு கடைந்த பரம்பரர் ---
முற்காலத்தில் தேவர்களுக்கு நரை திரை மூப்பு
முதலியன இருந்தன. அதனால் தேவர்கள் வருந்தி திருமாலிடம் தங்கள் குறை கூறி அதனை
நீக்கியருளுமாறு வேண்ட, நாராயணர்
திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தபானம் புரிவீரே ஆகில் நுமக்கு நரை திரை முதலியன
உண்டாகா என்று கூறி அமிர்த மதனம் புரிவதற்காக பாற்கடலில் மந்தரமலையை மத்தாக
விடுத்து வாசுகியைத் தாம்பாகப் பிடித்து தேவர்கள் வால்புறத்தும், அவுணர்கள் தலைப்புறத்தும் இருந்து மாறிமாறி
இழுத்துக் கடையத் தாம் மந்தரமலை கடலில் ஆழா வண்ணம் கூர்ம வடிவமேற்று அம்மலையைத்
தாங்கி பல கரங்களைக் கொண்டு அமரருடன் பாற்கடலைக் கடைந்தனர்.
அன்பு
கொள் மருகோனே
---
நாராயணர் கடல் கடைந்து விண்ணவர்க்கு
அமிர்தமீந்தனர். முருகவேள் “அகில புவனாதி எங்கும் வெளியுற மெய்ஞ்ஞான இன்ப அமுதை
ஒழியாது அருந்த” விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் அருள்பவரானபடியால் நாராயணர் அன்பு
கொள் மருகோனாக முருகவேள் மிளிர்கிறார்.
பல
துன்பம் உழன்று கலங்கிய சிறியன் ---
மாதா உதரத்தில் கருப்பையில் முந்நூறு நாட்கள்
கிடந்து உதராக்கினியாலும், கிருமிகளாலும்
ஏற்படுகிற துன்பத்தாலும், தலைகீழாகப் பிறந்த
பின்னும், பசியாலும்
நோய்களாலும் பேய்களாலும் உண்டாகிற துன்பத்தாலும், வயதேறிய பின் மனைவி மக்களால் உண்டாகிற
துன்பத்தாலும், அவர்களைக்
காப்பாற்றும் பொருட்டு பல திசைகளிலும் சென்று ஓய்வின்றி உழைத்துப் பொருள் தேடுவதால்
உண்டாகிற துன்பத்தாலும், தேடிய பொருளைக்
காப்பாற்றுவதால் ஏற்படுகிற துன்பத்தாலும், கள்வர் பகைவர் முதலானவர்களால் உண்டாகிற
துன்பத்தாலும், பசிதாக மூப்பு முதலிய
துன்பத்தாலும், மரண அவத்தையால் உண்டாகிற
அளப்பருந் துன்பத்தாலும், பிறந்தது முதல்
இறக்கிற வரையிலும் உயிர் மிகமிகத் துன்புறுகிறது. இத்தகையப் பல துன்பங்களால்
உழன்று அறிவும் மனமும் கலங்கிய சிறியன்.
புலையன் ---
புலால் உண்பவன் புலையன்: இதனை அடியிற்காணும்
ஆன்றோர் வாக்காலறிக.
"ஆம்உயிர்
கொல்லார் மேலோர்,
அறிவினை அறிந்த நல்லோர்.
தீமனம்
அடக்க வல்லார்,
இவர்களே தேவராவர்,
காமராய்க்
கற்பழித் தோர்
களவுசெய்து உடல்வளர்த்தோர்
மாமிசம்
தின்போர் எல்லாம்
மானிடப் புலையர்தாமே...
கொலையன் ---
கொலையைக் காட்டிலும் இழிந்த பாவம்
வேறொன்றுமில்லை என்பதைப் பொதுமறையாசிரியரும் போதிக்குமாறு காண்க.
"அறவினை
யாதுஎனில் கொல்லாமை, கோறல்
பிறவினை
எல்லாம் தரும்"
அறங்களுக்கெல்லாம் தலைசிறந்து விளங்குவது
கொல்லாமையே ஆகும். விரதங்களில் சிறந்ததும் கொல்லா விரதமே ஆம்.
பவம்
இன்று கழிந்திட வந்து அருள் புரிவாயே ---
எத்துணைப் பாவங்கள் புரிந்தாரேனும் பாவ நாசகனாகியக்
குமாரக் கடவுள் தரிசனை உண்டாகுமேல், பாவங்கள் முழுவதும்
நீங்கப்பெற்றுத் தூயவராவர். கோடிக்கணக்கான காக்கைகள் கூடியிருந்தாலும் ஒரு கல்லின்
முன் நிற்காதல்லவா? சருகுகள் செந்தழலின்
முன் நிற்காதல்லவா? மகாகொடிய
மறச்செயல்களைப் புரிந்த சூரபன்மன் நம் முருகப்பெருமானது சன்னிதியில் சென்று
அப்பரமனது தண்ணருள் நோக்கம் பட்டவுடனே பாவங்கள் அறவே நீங்கி ஒருவராலும்
பெறுதற்கரிய பேற்றைப் பெற்றனன்.
"தீயவை
புரிந்தா ரேனும்
குமரவேள் திருமுன் உற்றால்
தூயவர்
ஆகி மேலைத்
தொல்கதி அடைவர் என்கை
ஆயவும்
வேண்டும் கொல்லோ?
அடுசமர் அந்நாள் செய்த
மாயையின்
மகனும்அன்றோ
வரம்பிலா அருள்பெற்று உய்ந்தான். ---
கந்தபுராணம்.
அனகன் ---
சிவபெருமான் பாபமில்லதவர்.
திரிபுரமும்............நகும்
திறல் கொண்டவர் ---
திரிபுரம் எரித்த
வரலாறு
தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள்
வாள்வலியாலும் தோள்வலியாலும் தலைசிறந்து ஒப்பாரும் மிக்காருமின்றி இருந்தனர். அவர்கள்
பிரமனை நோக்கி அநேக காலம் பெருந்தவம் புரிகையில் கலைமகள் நாயகன் அவர்கட்கு
முன்தோன்றி யாது வரம் வேண்டுமென்ன,
மூவரும்
பத்மயோநியைப் பணிந்து நின்று பலவகையாகத் துதித்து “அண்ணலே! அடியேங்களுக்கு
அழியாவரம் அருள வேண்டும்?” என, மலரவன், “மைந்தர்களே! அழியாதவர்களும்
அழியாதவைகளும் உலகில் ஒருவரும் ஒன்றும் இல்லை. கற்ப காலங்கழியின் யானும் இறப்பேன்.
எந்தையும் அப்படியே! கங்கைக்கரையில் உள்ள மணல்கள் எத்துணையோ அத்துணை இந்திரர்
அழிந்தனர். ஏனைய தேவர்களைப் பற்றிக் கூறுவானேன். ஈறில்லாதவர் ஈசன் ஒருவரே!
தோன்றியது மறையும். மறைந்தது தோன்றும். தோற்றமும் மறைவும் இல்லாதவர்
சிவபரஞ்சுடராகிய நெஞ்சடைக்கடவுள் ஒருவரே! ஆதலால் அது நீங்க வேறு ஒன்றை வேண்டில் தருதும்”
என, தானவர் பொன், வெள்ளி இரும்பினால் அமைந்த மதில்கள்
பொருந்திய முப்புரம் பூமி, அந்தரம், சுவர்க்கம் என்னும் மூவுலகங்களிலும்
வேண்டும். அவை ஆயிரவருடத்திற்கொரு முறை விரும்பிய இடத்திற்குப் பெயரவேண்டும். அப்
புரமூன்றும் ஒன்றுபட்டபொழுது சிவபெருமானே ஒரு கணையால் அழித்தாலன்றி வேறொருவராலும்
மாளாத வரம் வேண்டும்” என்று கேட்க திசைமுகன் அவர்கள் விரும்பியவாறு வரமீந்து தனது
இருக்கை சேர்ந்தனன்.
தாரகாக்ஷன் முதலிய மூவசுரர்களும்
அளவில்லாத அவுணர் சேனைகளை உடையவராய், மயன்
என்னும் தேவதச்சனைத் தருவித்து தங்கள் விருப்பின்படி மண்ணுலகில் இரும்பு மதிலும், அந்தரவுலகில் வெள்ளிமதிலும் விண்ணுலகில்
பொன் மதிலுமாக, பல வளங்களும்
பொருந்திய முப்புரங்களை உண்டாக்கிக் கொண்டு குறைவற வாழ்ந்து சிவபூஜை காலந்தவறாது
புரிந்து வந்தார்கள். ஆயினும் அசுரகுலத்தின் தன்மைப்படி வைகுந்தம் முதலிய தேவ
நரகங்களையும், உலகிலுள்ள
பலபதிகளையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து தேவர் கூட்டங்களுக்கு இடுக்கண் பலவிளைத்தனர்.
அது கண்ட அரவணைச் செல்வராம் நாராயணர், இந்திரன்
முதலிய இமையவர் கணங்களுடன் சென்று எதிர்த்து திரிபுரர்களிடந் தோல்வியுற்று மிகவும்
களைத்து, சிவபரஞ்சுடரே
கதியென்று உன்னி, தேவர் குழாங்களுடன்
திரும்பி மேருமலையின் வடபாலில் பலகாலம் தவம் செய்தனர். அத்தவத்திற்கு இரங்கிய
விரிசடைக் கடவுள் விடையின் மேல் தோன்ற,
விண்ணவர்கள் பன்முறை பணிந்து திரிபுரத்தவர் புரியும் தீமையை விண்ணப்பம் புரிய, கண்ணுதற் கடவுள், “அவர்கள் நமது அடியார். ஆதலின், அவர்களைச் அழித்தல் அடாது” என்றருளி
மறைந்தனர்.
திருமால் தேவர்களே அஞ்சாதீர்களென்று
புத்த வடிவு கொண்டு, நாரத முனிவர் சீடராக
உடன் வரத் திரிபுரமடைந்து பிடகாகமம், பிரசங்கித்து
அவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையில் அகப்படாதார் மூவரே. ஆதலின் திருமால்
ஏனையோரைப் பார்த்து “நீங்கள் அம்மூவர்களையும் பாராது ஒழியுங்கள். அவர்கள்
இழிதொழில் பூண்டோர் என்று கூறி,
நாரதருடன்
மேருமலையடைந்து தேவகூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்து தவத்திருந்தனர். ஆலமுண்ட
அண்ணல் அஃதறிந்து அருள்வடிவாகிய திருநந்தி தேவரை விளித்து “அமரற்பால் சென்று
திரிபுரத்தவரைச் செயிக்க இரதம் முதலிய போர்க் கருவிகளைச் சித்தஞ் செய்யக்
கட்டளையிடுக” என, நந்தி அண்ணல் மேருவரை
சேர்ந்து, சிவாக்ஞையை
தேவர்பால் கூறிச்சென்றனர். அதுகேட்ட அமரர் ஆனந்தமுற்று இரதம் சிங்காரிக்கலாயினர்.
மந்தரகேசரி மலைகள் அச்சாகவும், சந்திர சூரியர் சக்கரங்களாகவும், இருதுக்கள் சந்திகளாகவும், பதினான்கு லோகங்கள் பதினான்கு
தட்டுகளாகவும், உதயாஸ்த கிரிகள்
கொடிஞ்சியாகவும், நதிகளும், நதங்களும் நாட்டுங் கொடிகளாகவும், நட்சத்திரங்கள் நல்ல விதானமாகவும், மோட்ச லோகம் மேல் விரிவாகவும், மகங்கள் சட்டமாகவும், நாள் முதலியன எண்ணெயூற்றும் இடுக்கு
மரமாகவும், அட்டப்பருவதங்கள்
தூண்களாகவும், எட்டுத் திக்குயானைகள்
இடையிற்றாங்கவும், ஏழு சமுத்திரங்கள்
திரைச்சீலையாகவும், ஞானேந்திரிய
கண்மேந்திரியங்கள் கலன்களாகவும்,
கலைகள்
முனைகளாகவும், புராணம் வேதாங்கம், சாத்திரம் மனுக்கள் மணிகளாகவும், மருத்துகள் படிகளாகவும், அமைந்த திவ்வியமான ஒரு இரதத்தைச் செய்து, சதுர்முகனை சாரதியாக நிறுத்தி பிரணவ
மந்திரத்தையே குதிரை தூண்டுங்கோலாகக் கொண்டு கங்கை அதிதி முதலிய தேவநங்கையர்
நாற்புறமுஞ் சாமரை யிரட்டவும், துப்புரு நாரதர் இசை
பாடவும், அரம்பை முதலிய
அட்சரசுகள் நடனமாடவும் அமைத்து மேருமலையை வில்லாகவும், நாகராஜன் நாணியாகவும், பைந்துழாயலங்கல் பச்சை வண்ணன்
பாணமாகவும், சரஸ்வதி
வில்லிற்கட்டிய மணியாகவும், அக்கினிதேவன் அம்பின்
கூர்வாயாகவும், வாயுதேவன்
அற்பிற்கட்டிய இறகாகவும், ஏற்படுத்தி
திருக்கைலாய மலையை யடைந்து திருநந்தி தேவரை இறைஞ்சி, “அமரர் அமர்க்கருவிகளை யமைத்துக்
கொண்டடைந்திருப்பதாக அரனாரிடம் விண்ணப்பம் புரியுமாறு வேண்டி நின்றனர்.
நந்தியெம்பெருமான் சந்நிதியுள் சென்று, தேவர்கள் போர்க் கருவிகளுடன்
வந்திருப்பதைக் கூற, இறைவர் இமவரை தரும் கருங்குயிலுடன்
*இடபாரூடராய் இரதத்தை அடைந்து இமையவர் எண்ணத்தின் படி அதில் கால் ஊன்ற, அதன் அச்சு முறிந்தது.
தச்சு
விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு
முறிந்தததுஎன்றுஉந்தீபற
அழிந்தன
முப்புரம் உந்தீபற --- திருவாசகம்.
உடனே நாராயணர் இடபமாக வடிவெடுக்க, அவ்விடபமேல் எம்பெருமான் ஏறுதலும்
திருமால் தாங்கும் சக்தியற்றுத் தரைமேல்விழ, சிவபெருமான் திருவருள்கொண்டு இறங்கி
இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர சம்மாரகாலத்தில்
சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகனார் மறைமொழியாலுங் காண்க.
"கடகரியும்
பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே
இடபம்உகந்து
ஏறியவாறு எனக்குஅறிய இயம்பு ஏடி,
தடமதில்கள்
அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த்
தாங்கினான் திருமால்காண் சாழலோ".
விரிஞ்சன் விநாயக பூசனை புரிய, அவரருளால் இரதம் முன்போலாக, சிவபெருமான் தேவியாருடன் தேர்மேல்
எழுந்தருளினார். மூத்தபிள்ளையார்,
இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில்
ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள்
எழுவரும் வாழ்த்தவும், திருநந்திதேவர்
பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன், வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள்
வாச்சியம் இசைக்கவும், கறைமிடற்று அண்ணல்
இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்தில் சமீபித்தனர்.
அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து
“அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க அழலுருவாகிய
சிவபெருமான் தமது திருக்கரத்தேந்திய மேருமலையாகிய வில்லில் பணியரசாகிய நாணை ஏற்றினர்.
(அதில் அம்பு பூட்டித் திரிபுரத்தை அழிப்பின், அந்தரர் அந்தமில்லா அகந்தை உறுவர்
என்றும், தனக்கு ஓர் ஆயுதமேனும், படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை
தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய
வல்லான் என்பதை உலகம் உணருமாறும்) இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக்
கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின.
பெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்துவந்த மூவரும் யாதொரு தீமையுமின்றிப்
பெருமான்பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத்
துவாரபாலகராக அருளி, தேவர்களை
அரவரிடத்திற்கு அனுப்பி வெள்ளிமாமலைக்கு எழுந்தருளினார். இமையவர் இடுக்கண் அகன்று
இன்புற்றனர்.
குன்றாத
மாமுனிவன் சாபம் நீங்கக்
குரைகழலால் கூற்றுவனைக் குமைத்த கோனை,
அன்றாக
அவுணர்புரம் மூன்றும் வேவ
ஆரழல்வாய் ஓட்டி அடர்வித் தானைச்
சென்றாது
வேண்டிற்று ஒன்று ஈவான் தன்னைச்
சிவனே, எம் பெருமான் என்று இருப்பார்க்க் என்றும்
நன்றாகும்
நம்பியை, நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே --- அப்பர்
வளைந்தது
வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற. --- மணிவாசகர்.
ஈர்அம்பு
கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓர்அம்பே
முப்புரம் உந்தீபற,
ஒன்றும்
பெருமிகை உந்தீபற.
--- மணிவாசகர்.
“உருவு கரியதொர்
கணைகொடு பணிபதி
இருகு தையுமுடி தமனிய தனுவுடன்
உருளை இருசுடர் வலவனும் அயன்என மறைபூணும்
உறுதி
படுசுர ரதமிசை அடியிட
நெறுநெ றெனமுறி தலு,நிலை பெறுதவம்
உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ஒருகோடி
தெருவு
நகரிய நிசிசரர் முடியொடு
சடச டெனவெடி படுவன, புகைவன,
திகுதி
கெனஎரி வன,அனல் நகையொடு
முனிவார்தம் சிறுவ”
--- (அருவமிடை) திருப்புகழ்.
மனமும்
தழல் சென்றிட ---
சூரபன்மனது அளப்பரும் அசுரப்படைகள்
ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் நிறைந்து வந்து முருகவேளைக் கடல் போல் சூழ்ந்தன, அதுகண்ட பிரமனாதி தேவர்கள் கண்
விழித்துப் பார்க்கவும் ஆற்றல் அற்றவர்களாகி ஊழிக்காலத்தில் உலகை அழிக்க எழுகின்ற
வடவா முகாக்கினியோ? பிரளய வெள்ளமோ? ஆலகால விஷமோ? இடியுடன் சேர்ந்த மேக சாலமோ? என்செய்வது? என்று மூலைக்கு ஒருவராக
ஓடியொளிந்தார்கள். அது காலை அவுணசேனைகள் அண்டங்கள் வெடிபடுமாறு ஆர்த்து, ஏழு மேகங்களும் சேர்ந்து விடாது மழை
பொழிந்த்தைப் போல, குமர நாயகன்மீது
இடைவிடாது பாணங்களைப் பொழிந்தன. விண்ணும் மண்ணும் இடைவெளியின்றி கணைகள் நிறைந்தன.
அதனால் எங்கும் அனற்பிழம்பு பொங்கியது. பாணங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் மேக
ஒலி போன்ற முழக்கம் எங்கும் உண்டாகியது. திசை யானைகள் பீறிட்டன. தேவர்கள் காதுகள்
செவிடுபட்டன. பூதப்படைகள் புறங்கொடுத் தோடின. அவ்வுற் பாதங்களைக் கண்டு
“முழுதுலகந்தாவி எழுகடல் மண்டூழி முடிவினு மஞ்சாத பெருமாளாகிய” நங்குமார மூர்த்தி
ஆறு முகங்களிலுமுள்ள அக்கினி நேத்திரங்களைச் சிறிது திறந்தனர்.
அவ்விழிகளினின்று தோன்றிய சிறு தீப்பொறியால்
அளவிடற்கரிய அத்துணை அவுண சேனைகளும் உடனே ஒரு கணப்பொழுதில் சாம்பராயின. முழுவதும் வெற்றிடமாயிற்று.
"அடலையி
னலத்தை வீட்டியரும்பெற லாக்கஞ் சிந்தி
யடலையி
னுணர்வின் றாகுமவுணர்கோன் றானைமுற்று
மடலையின்
நெடுவேலண்ண லழலெழவிழித்த லோடு
மடலையி
னுருவாயண்டத் தொல்லுருவழித்த மன்னோ". --- கந்தபுராணம்.
கன
பெரியோனே ---
குமாரக் கடவுள் ஒருவரே மூவர்க்கும்
தேவர்க்கும் மற்றும் யாவருக்கும் பெரியவர். சகலமும் அவரது திருமேனியினின்று தோன்றி
மீண்டும் அவருடையத் திருமேனியிலேயே ஒடுங்குகின்றது.
அப்பரமபதி
ஒருவரே பழைய வடிவு. முழுமுதற் கடவுளும் அவரே!
“மூதக்கார்க்கு
மூதக்கவன் முடிவிற்கு முடிவாய்
ஆதிக்கு ஆதியாய்” --- கந்தபுராணம்.
“பழைய வடிவாகிய
வேலா” --- (இருவர்)
திருப்புகழ்.
“மூவர் தேவாதிகள்
தம்பிரானே” --- (வாரிமீதே)
திருப்புகழ்.
மதியுங்கதிர் ---
திருப்பரங்குன்றம் மூலாதாரத் திருத்தலம். ஆனபடியால்
`மதியுங் கதிர்’
என்பது சந்திரநாடி சூரியநாடி (இடா பிங்கலா) என்பனவற்றைக் குறிப்பிடுகிறது.
கருத்துரை
மேருவைச் செண்டாலெறிந்தவரே! விநாயகரது
சகோதரரே! பன்னகசயனரது மருகரே! திரிபுரங்கள் தீயெழ நகைத்த சிவபெருமானது
திருக்குமாரரே! அண்டங்கள் நிறைந்த அவுணரை யழித்த அண்ணலே! திருப்பரங்குன்றத்தில்
எழுந்தருளிய தேவதேவரே! பல துன்பங்களா லுழன்று கலங்கிய சிறியேனது பாவங்கள் இன்றே அழிந்துபோக,
எதிர்த் தோன்றி இன்னருள் புரிவீராக.
No comments:
Post a Comment