திருப்பரங்குன்றம் - 0012. காது அடரும் கயல்.





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

காதடருங்கயல் (திருப்பரங்குன்றம்)

முருகா!
திருவடித் தாமரையை அடைய அருள்வாய்

தானன தந்தன தந்தனந் தந்தன
     தானன தந்தன தந்தனந் தந்தன
     தானன தந்தன தந்தனந் தந்தன ...... தனதான


காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி
     வாளிம யங்கம னம்பயந் தந்திருள்
     கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு ...... தொருகோடி

காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை
     யாழியு டன்கட கந்துலங் கும்படி
     காமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு ...... மயலாலே

வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கித
     மாகந டந்தவர் பின்திரிந் துந்தன
     மார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பம ...... துழலாதே

வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி
     மாலைக ரங்கொளும் அன்பர்வந் தன்பொடு
     வாழநி தம்புனை யும்பதந் தந்துன ...... தருள்தாராய்

போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர
     மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ
     போதவ ளஞ்சிவ சங்கரன் கொண்டிட ...... மொழிவோனே

பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி
     ரீவம டந்தைபு ரந்தரன் தந்தருள்
     பூவைக ருங்குற மின்கலந் தங்குப ...... னிருதோளா

தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி
     டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல
     சேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடு ...... திறலோனே

சீதள முந்தும ணந்தயங் கும்பொழில்
     சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி
     தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


காது அடரும் கயல் கொண்டு, இசைந்உ ஐம்பொறி
     வாளி மயங்க, மனம் பயம் தந்து இருள்
     கால் தர, இந்து விசும்பு இலங்கும் பொழுது ...... ஒருகோடி

காய் கதிர் என்றுஒளிர் செஞ்சிலம்பும், கணை
     ஆழியுடன் கடகம் துலங்கும் படி,
     காமன் நெடுஞ்சிலை கொண்டு அடர்ந்தும் பொரு ......மயலாலே,

வாது புரிந்தவர், செங்கை தந்த், இங்கித-
     மாக நடந்தவர் பின் திரிந்தும், தன
     மார்பில் அழுந்த அணைந்திடும் துன்பம்அது .....உழலாதே,

வாசம். மிகுந்த கடம்ப மென் கிண்கிணி
     மாலை கரம் கொளும் அன்பர் வந்து, அன்பொடு
     வாழ, நிதம் புனையும் பதம் தந்து உனது ......அருள்தாராய்.

போதில் உறைந்து அருள்கின்றவன் செஞ்சிரம்
     மீது தடிந்து, விலங்கு இடும் புங்கவ!
     போத வளம் சிவசங்கரன் கொண்டிட ...... மொழிவோனே!

பூகம் உடன் திகழ் சங்குஇனம் கொண்ட,
     கிரீவ மடந்தை, புரந்தரன் தந்து அருள்
     பூவை, கரும் குறமின் கலம் தங்கு  ...... பனிருதோளாப!

தீது அகம் ஒன்றினர், வஞ்சகம் துஞ்சியி
     டாதவர், சங்கரர் தந்த தென்பும் பல
     சேர் நிருதன்குலம் அஞ்ச, முன் சென்றுஅடு .....திறலோனே!

சீதளம் உந்து மணம் தயங்கும் பொழில்
     சூழ்தர, விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி,
     தேவர் பணிந்து எழு தென்பரங்குன்றுஉறை ...... பெருமாளே.


பதவுரை


       போதில் உறைந்து அருள்கின்றவன் --- தாமரை மலரிலிருந்து உலகங்களை அருளுகின்ற பிரமதேவனது,

     செம் சிர மீது தடிந்து --- செவ்விய தலையில் குட்டி,

     விலங்கு இடும் புங்கவ --- அவன் காலில் விலங்கு பூட்டிய தூயவரே!

      போத வளம் --- ஞானத்தின் வளமையை,

     சிவசங்கரன் கொண்டிட மொழிவோனே --- சிவபெருமான் பெறுமாறு உபதேசித்தவரே!

     பூகமுடன் --- பாக்கின் தன்மையையும்,

     சங்கின் அம் கொண்ட --- சங்கின் அழகையும் கொண்டுள்ள,

     கிரீவ மடந்தை --- கழுத்தையுடைய பெண்மணியும்,

     புரந்தரன் தந்தருள் பூவை --- இந்திரன் வளர்த்தருளிய மங்கையும் ஆகிய தெய்வயானையம்மை,

     கரும் குறமின் --- கருமை நிறமுடைய வள்ளியம்மை என்ற இருவர்களின்,

     கலம் தங்கு --- திருவாபரணங்கள் தங்கும்படியான,

     பன்னிரு தோளா --- பன்னிரண்டு புயங்களை உடையவரே!

      தீது அகம் ஒன்றினர் --- தீய உள்ளம் பொருந்தினவர்களும்,

     வஞ்சகம் துஞ்சியிடாதவர் --- வஞ்சனை குறையாதவர்களும்,

     சங்கரன் தந்த தென்பும் பலசேர் நிருதன் குலம் --- சிவமூர்த்தி தந்த பலவரங்களால் தருக்குடைய சூரபன்மனுடைய கூட்டத்தினருமாகிய அசுரர்கள்,

     அஞ்ச --- அஞ்சுமாறு,

     முன்சென்று அடு திறலோனே --- முன்னே சென்று அழித்த பேராற்றலுடையவரே!

      சீதளம் --- குளிர்ச்சியும்,

     உந்து மணம் தங்கும் --- உயர்ந்த மணமும் நிறைந்த,

     பொழில் சூழ்தர --- சோலை சூழ்ந்ததும்,

     விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி --- வித்தியாதரர்கள் வந்து வணங்கும் தலமும்,

     தேவர் பணிந்து எழ --- தேவர்கள் தொழுது எழுகின்றதும் ஆகிய,

     தென் பரங்குன்று உறை --- அழகு மிகுந்த திருப்பரங்குன்றத்தில் வாழ்கின்ற,

     பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!

      காது அடரும் கயல் கொண்டு --- காதளவும் நீண்டதும் கயல் மீன் போன்றதுமாகிய கண்களைக் கொண்டு,

     இசைந்து --- வருபவர்பால் இசைவுகாட்டி,

     ஐம்பொறி வாளி மயங்க --- மெய் வாய் கண் நாசி செவி என்ற ஐந்து இந்திரியங்களாகிய கணைகளால் மயங்கும்படிச் செய்து,

     மனம் பயம் தந்து --- மனம் அவர்கள் பால் அச்சப்படுமாறு புரிந்து,

     இருள் கால் தர --- இருள் நீங்க,

     இந்து விசும்பில் இலங்கும் பொழுது --- சந்திரன் ஆகாயத்தில் விளங்கும் பொழுதாகிய இரவில்,

     ஒருகோடி காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும் --- ஒரு கோடி சூரியர்கள் போல் ஒளி செய்கின்ற சிவந்த (மணிகள் இழைத்த) சிலம்பும்,

     கணையாழியுடன் --- மோதிரமும்,

     கடகம் துலங்கும்படி --- கரத்தில் தரிக்கும் கடகமும் விளங்க,

     காமன் நெடும் சிலைகொண்டு அடர்ந்து பொரு மயலாலே --- மன்மதன் நீண்ட கரும்பு வில்லைக் கொண்டு நெருங்கி நின்று போர் புரிவதனால் வரும் மயக்கத்தினால்,

     வாது புரிந்தவர் --- பொருள் காரணமாகப் பிணங்கி வாதம் புரிந்தவர்களும்,

     செங்கை தந்து இங்கிதமாக நடந்தவர் --- சிவந்த கரத்தால் தொட்டு இனிமையாக நடந்தவர்களுமாகிய விலை மகளிரின்,

     பின் திரிந்தும் --- பிறகே திரிந்து அலைந்தும்,

     தனம் மார்பில் அழுந்த அணைந்திடும் --- முலைகள் மார்பில் அழுந்துமாறு தழுவியும் (கெடுகின்ற),

     துன்பமது உழலாதே --- துன்பத்தில் கிடந்து சுழற்சியடையாமல்,

     வாசம் மிகுந்த --- வாசனை மிகுந்த,

     கடம்ப மென் கிண்கிணி மாலை --- மெல்லிய கடப்ப மலரால் தொடுத்த கிண்கிணி என்ற மாலையை,

     கரம் கொளும் அன்பர் வந்து --- கரத்தில் கொண்டு அன்புடையவர்கள் வந்து,

     அன்பொடு வாழ நிதம் புனையும் --- அன்புடன் என்றும் வாழும் பொருட்டு சூட்டுகின்ற,

     பதம் தந்து --- திருவடியைத் தந்து,

     உனது அருள் தாராய் --- தேவரீருடைய திருவருளைத் தந்து அருள் புரிவீர்.

பொழிப்புரை


         தாமரை மலரில் வாழ்கின்ற பிரம தேவருடைய செம்மையான சிரத்தில் குட்டி விலங்கு பூட்டிய தூயவரே!

     சிவஞானத் தெளிவை சிவபெருமானுக்கு உபதேசித்த குருநாதரே!

         பாக்கு மரம் போலவும், சங்கைப் போலவும், அழகுடையக் கருத்தை யுடையவரும் இந்திர குமாரியுமாகியத் தெய்வயானை யம்மையார், கருமை நிறமுடைய வள்ளியம்மையார் என்ற இரு தேவிகளின் திருவாபரணங்கள் தங்கியுள்ள பன்னிருபுயங்களை உடையவரே!

         தீய உள்ளமுடையவர்களுக்கும் குறைவில்லாத வஞ்சனை உடையவர்களும் சிவபெருமான் தந்த வரபலமுடைய சூரனது குலத்தினருமாகிய அசுரர்கள் முன்னே சென்று (அவர்களை) அழிந்த பெருந்திறல் உடையவரே!

         குளிர்ச்சியும் உயர்ந்த வாசனையும் தங்கிய சோலை சூழ்ந்து வித்தியாதரர்களும் தேவர்களும் பணிந்து அன்பு செய்கின்ற திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளிய பெருமிதம் உடையவரே!

         காதுவரை நீண்டு மீன்போன்ற கண்களைக் கொண்டு தம்மிடம் வருபவரிடம் இசைவு செய்து மெய் வாய் கண் நாசி செவி என்ற ஐந்து இந்திரியங்களாகிய கணைகளால் மயங்கச் செய்து, மனதில் அச்சத்தையும் உண்டாக்கச் செய்து, இருள் விலக விண்ணில் நன்றாக சந்திரன் ஒளி செய்கின்ற காலத்தில், ஒரே கோடி சூரியனைப் போல் ஒளி செய்கின்ற சிவந்த இரத்தினங்களைப் பதித்த சிலம்பு மோதிரம் கடகம் முதலிய ஆபரணங்களை அணிந்துகொண்டு, அதே சமயத்தில் மன்மதன் ஒரு புறம் நின்று நெடிய வில்லைக் கொண்டு பாணங்களைத் தொடுத்து மயக்கவும், வாதிட்டுப் பிணங்கியும், கரங்களால் தொட்டு இணங்கியும் இங்கிதமாக நடக்கின்ற விலைமகளிரின் பின்சென்று திரிந்து அவர்களுடைய தனம் மார்பில் அழுந்தத் தழுவுகின்ற துன்பத்தில் அழுந்தாமல், மணமிகுந்த கடப்ப மலரால் புனைந்த கிண்கிணி மாலையைக் கரத்தில் கொண்டு வந்து முத்தியுலகில் நிரந்தரமாக வாழும்பொருட்டு அடியார்களுக்குச் சூட்டுகின்ற திருவடியை அடியேனுக்குத் தந்து திருவருள் புரிவீர்.

விரிவுரை


காது அருடங் கயல்கொண்டு ---

     விலைமகளிர் ஆடவரை மயக்குவதற்குரிய ஆயுதங்கள் பலவற்றுள் முதன்மையானது கண்கள். காதளவு நீண்ட கண்களால் ஆடவரை மயக்குவர்.


ஐம்பொறி வாளி ---

     மெய், வாய், கண், நாசி,செவி என்ற ஐம்பொறிகளும் ஆடவர் மயங்குதற்கு உரியவையாதலின் அவைகள் மன்மத பாணத்திற்கு நிகராகும்.

கண்டு கேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.                ---  திருக்குறள்.

மனம் பயம் தந்து ---

     அவர்கள்பால் செல்லுவோர், அவர்கள் மனங்களிக்கும் அளவிற்குப் பொருள் தருவது எவ்வாறு என்று அஞ்சுவர். அன்றியும் வேறு யாராவது தமது இழிந்த செயலைக் கண்டு பழிப்பரோ என்றும் அஞ்சுவர்.

இருள் கால்தர இந்து விசும்பு இலங்கும் பொழுது ---

     ஆண் பெண் இருபாலர்கட்கும் முழுமதி விளங்குகின்ற இரவில் ஆசைநோய் மிகுதிப்படும். நிலவொளி காதலரை வேதனைப்படுத்தும். எல்லோர்க்கும் குளிர்ந்திருக்கின்ற நிலவொளி காதலுடையார்க்கு நெருப்பை யள்ளிக் கொட்டியதுபோல் வெப்பத்தைச் செய்யும்.

தினகரன் என வேலையிலே சிவந்து உதிக்கும் மதியாலே” ---  (தெருவினில்) திருப்புகழ்.

வாது புரிந்தவர் ---

     தம்மிடம் வரும் ஆடவரின் பொருள் முதலியன தருமாறு வாதிடுவர். “வாதினையடர்ந்த வேல் விழியர் தங்கள் மாயம்.”

இங்கிதமாக நடந்தவர் ---

     விரும்பிய பொருளைத் தந்தவரிடம் மிகவும் இனிமையாக நடந்துகொள்வர்.

வாசம் மிகுந்த கடம்பமென் கிண்கிணி மாலை ---

     முருகவேளுக்கு மிகவும் உவந்த மலர் கடப்பம். அம்மலரால் கிண்கிணி என்ற ஆபரணம் போல் தொடுத்து அடியார்கள் அப்பரமனுக்குப் புனைவர்.

மாலை கரங்கொடு அன்பர் வந்து ---

     திருக்கோயிலுக்குச் செல்லும் அன்பர்கள் மலர்கள் ஏந்திக் கொண்டு சென்று இறைவனுக்குச் சூட்டவேண்டும்.

கைகாள் கூப்பித் தொழீர் கடிமாமலர் தூவி நின்று
 பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
 கைகாள் கூப்பித் தொழீர்.        ---  அப்பமூர்த்திகள் தேவாரம்.

வாழ நிதம் புனையும் பதம் ---

     மலரிட்டு வணங்கும் அடியவர்கள் என்றென்றும் சிவலோகத்தில் இன்புற்று வாழ்வார்கள்.

     பூவும் நீருங் கொண்டு நிறைந்த அன்புடன் வழிபட்ட மார்க்கண்டேயர் என்றென்றும் பதினாறு பெற்று வாழ்கின்றார் என்பது உலகறிந்த ஒன்று.

போதில் உறைந்து அருளுகின்றவன்......புங்கவ ---

     போது --- தாமரை மலர்.

     தாமரை மலரைத் தனது இருக்கையாகக் கொண்ட பிரமதேவரை, முருகப் பெருமான் சிறை புரிந்த வரலாறு வருமாறு.....

         குமாரக்கடவுள் திருவிளையாடல் பல புரிந்து வெள்ளி மலையின்கண் வீற்றிருந்தருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடுஞ் சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கயிலாயமலையை நண்ணினர். பிரமனை ஒழிந்த எல்லாக் கணர்களும் யான் எனது என்னும் செருக்கின்றி சிவபெருமானை வணங்கி வழிபட்டுத் திரும்பினார்கள். ஆங்கு கோபுரவாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும் புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டாலென்ன எழுந்தருளி வந்து அடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.

     பிரமதேவர் குமரக் கடவுளைக் கண்டு வணங்காது, “இவன் ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப் பெருமான் சிவன் வேறு தான் வேறு அன்று, மணியும் ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை நீக்கித் திருவருள் புரியவும் திருவுளங் கொண்டார்.

     தருக்குடன் செல்லுஞ் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது கைகுவித்து வணங்கிடாத பாவனையாக வணங்கினன். கந்தப்பெருமான் “நீ யாவன்” என்றனர். பிரமதேவர் அச்சங்கொண்டு “படைத்தலு தொழிலுடைய பிரமன்” என்றனன். முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர். பிரமன் “உணர்ந்திருக்கிறேன்” என்றனன். “நன்று! வேத உணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய இருக்கு வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர். சதுர்முகன் இருக்கு வேதத்தை "ஓம்" என்ற குடிலை மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன். உடனே இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி! நிற்றி! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்குதி என்றனர்.

தாமரைத் தலை இருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாமறைத் தலை எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர்பெற்று உடைக் குமரவேள், நிற்றி, முன் கழறும்
ஓம் எனப்படு மொழிப்பொருள் இயம்புக,ன்று உரைத்தான். ---கந்தபுராணம்.

     ஆறு திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன் வினவுதலும், பிரமன் அக்குடிலை மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன. சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய ஆணவம் அகன்றது. வெட்கத்தால் தலைகுனிந்தனன். நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை உணராமற் போனோமே? என்று ஏங்கினன்; சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான் கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை யஉணராது மருண்டு நின்றனன்.

     குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர்.

     பிரமன் “ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன்.

     அது கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம் முதலெழுத்திற்குப் பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும் புரிகின்றனையோ? பேதாய்!” என்று நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.

சிட்டி செய்வது இத் தன்மை யதோ?னச் செவ்வேள்
 குட்டினான் அயன் நான்குமா முடிகளுங் குலுங்க”     ---கந்தபுராணம்.

     பிரமதேவனது அகங்காரம் முழுதும் தொலைந்து புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன் பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.

வேதநான்முக மறையோ னொடும் விளை
  யாடியே குடுமியிலே கரமொடு
  வீரமோதின மறவா”               --- (காணொணா) திருப்புகழ்.

அயனைக் குட்டிய பெருமாளே”       --- (பரவை) திருப்புகழ்.

ஆர ணன்றனை வாதாடி ஓருரை
 ஓது கின்றென வாராது எனாஅவன்
 ஆண வங்கெட வேகாவலாம்அதில்      இடும்வேலா    --- (வாரணந்) திருப்புகழ்.

      “.......................................படைப்போன்
அகந்தை உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று
     உகந்த பிரணவத்தின்உண்மை -- புகன்றிலையால்
சிட்டித் தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
     குட்டிச் சிறைஇருத்தும் கோமானே”  --- கந்தர் கலிவெண்பா.

     பிரமனைச் சிறை புரிந்த பின் குமாரபரமேசுரன், படைப்புத் தொழிலைத் தாமே புரியத் திருவுளங் கொண்டார். முத்தொழிலுக்குந் தலைவர் அவரேயல்லவா? மூவர்க்கும் முதல்வராம் முழுமுதற் கடவுளாம் முருகநாயகன் கந்தமால் வரையில் ஒரு சார் திருக்கோயில் புரிவித்து, ஆங்கு நடுவண் இடப்பட்ட அரியணை மீதிருந்து, திருமால், புருகூதன், நவவீரர்கள், இலக்கம் வீரர்கள், ஏனைய கணர்கள் சூழ சிருஷ்டித் தொழில் புரிவாராயினர். அப்பெருமானுக்கு அத்தொழில் அரியதோ? “சத்யசங்கல்பன்” என்று சுருதிகள் முறையிடு கின்றது அல்லவா? காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடுங் காலாதீதனாகிய கந்தப் பெருமானுக்கு அஃதோர் திருவிளையாடலாக இருந்தது.

     ஒரு கரத்தில் உருத்ராக்க மாலையும், ஒரு கரத்தில் கமண்டலமும், மற்ற இருகரங்கள் அபயவரதமாகவும், நான்கு திருக்கரங்களோடும், ஒரு முகமுடனும் எழுந்தருளி படைப்புத் தொழிலை எம்பெருந்தலைவன் புரிந்தனர்.

ஒருகரந் தனில் கண்டிகை வடம்பரித்து, ருதன்
கரதலந் தனில் குண்டிகை தரித்து, ரு கரங்கள்
வரதமோடு அபயந்தர, பரம்பொருள் மகன் ஓர்
திருமுகங் கொடு சதுர்முகன் போல்விதி செய்தான்.       --- கந்தபுராணம்.

     இங்ஙனம் எம்பெருமான் சிருட்டித் தொழிலைப் புரியுங்கால், அத்தொழிலுக்கேற்பத் திருமகள் நாயகன் திதித் தொழிலைப் புரியும் ஆற்றலின்றி ஏங்கியதால் அக் காத்தல் தொழிலையும், அங்ஙனமே சங்காரத் தொழிலையும் தாமே செய்தருளினார். எனவே, முத்தொழிலையும் முறையுறப் புரிந்து வந்தனர். முத்தொழிலுக்கும் மும்மூர்த்திகளுக்கும் தாமே முதல்வன் என்பதைத் தெற்றென விளக்கியருளினர்.

     தேவவருடங்கள் பல கழிந்தன. வேண்டுதல் வேண்டாமை இல்லா செவ்வேட்பரமன் புரியும் படைப்பில் தோன்றிய உயிர்களின் பேற்றை அளவிட்டுரைக்க வல்லார் யாவர்? அனந்தனும் அஞ்சுவனன்றோ? அப்படைப்பில் வந்த ஆன்மாக்களனைவரும் புண்ணிய வடிவாக விளங்கினர். பாவம் என்பது ஒரு சிறிதும் இலதாயிற்று. எங்கும் மெய்ஞ்ஞானம் மிளிர்ந்தது. சிவமணங் கமழ்ந்தது.

மலர்அயனை நீடு சிறைசெய்து,அவன் வேலை
 வளமைபெற வேசெய்          முருகோனே”      --- (எழுகுநிறை) திருப்புகழ்.


பூகமுடன் திகழ் சங்கினங் கொண்ட க்ரீவ ---

     பெண்மணிகளின் கழுத்து சங்கைப் போலவும், பாக்கு மரம் போலவும் படிப்படியாக அழகாக இருக்கும்.

தீதகம் ஒன்றினர் ---

     உள்ளத்தில் தீமை நிறைந்தவர் அசுரர். கொலை புலை முதலிய துர்க்குணங்கள் நிறைந்தவர்.

வஞ்சகந் துஞ்சியிடாதவர் ---

     துஞ்சுதல் - குறைதல்

     வஞ்சனை மிகுந்தவர்கள்.

சங்கரர் தந்த தென்பும் பலசேர் நிருதர் :---

     சிவபிரானை நிந்தித்துத் தக்கன் புரிந்த யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் அச் சிவத்துரோகத்தினின்று விலகி உய்யும் பொருட்டு, சூரபன்மனுக்குச் சிவபெருமான் நிரம்ப வரமளித்தனர். அவ்வர பலத்தால் சூரபன்மன் தேவர்களைத் தண்டித்தனன்.

     தமது புதல்வரிடம் தாய் தந்தையர் குற்றங் கண்டபோது பிறரை ஏவித் தண்டிப்பது போல் என்று அறிக.

நிருதன் குலம் அஞ்ச முன்சென்று அடு திறலோனே ---

     தேவர்களைச் சூரபன்மன் அளவுக்கு மேற்படத் தண்டித்தனன். அவனுக்கு அளவற்ற வரம் அளித்த சிவபெருமானுடையத் திருக்குமாரர் சென்று அமரரைச் சிறையிலிருந்து விடுமாறு அறிவுரை கூறினார். அதுகேட்டு அவன் திருந்தாமையால் வேல் கொண்டு அவனைக் குலத்தோடு அழித்தனர்.


தென்பரங்குன்று ---

     தென் திசையில் உள்ள பதி என்றும், இனிமை நிறைந்த பதி என்றும் பொருள்படும். தென் பரங்குன்றம் என்றதனால் வடபரங்குன்றம் ஒன்று உண்டோ என்று ஐயுற வேண்டாம், வெண்ணிலா என்பதனால் கருநிலா ஒன்று உளதோ என்று வினாவுதல் கூடாதல்லவா?

     திருப்பரங்குன்றம் முதற்படைவீடு.  தேவாரப் பாடல் பெற்றது. நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் இத்தலத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றார்.

கருத்துரை


         சிவகுருநாதரே! வள்ளி தேவசேனையின் கணவரே! அசுர குலகாலரே! பராசல்மேவிய பரம் பொருளே! மாதர் மயலுறாது தேவரீர் மலர்ப்பதம் தந்து அருள் புரிவீர்.


No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...