அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
முத்தைத் தரு (நூல்)
முருகா!
அடியேனை அன்போடு
காப்பாற்றுகின்ற நாள் ஒன்று உளதோ?
தத்தத்தன
தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
முத்தைத்தரு
பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ......
எனவோதும்
முக்கட்பர
மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ......
அடிபேணப்
பத்துத்தலை
தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ......
இரவாகப்
பத்தற்கிர
தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ......
ஒருநாளே
தித்தித்தெய
ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ......
கழுதாடத்
திக்குப்பரி
அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ......
எனவோதக்
கொத்துப்பறை
கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ......
முதுகூகை
கொட்புற்றெழ
நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
முத்தைத்
தரு பத்தித், திருநகை
அத்திக்கு இறை, சத்திச் சரவண,
முத்திக்கு ஒரு வித்து, குருபர, ...... எனஓதும்,
முக்கண்
பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்து, இருவரும்
முப்பத்துமு வர்க்கத்து அமரரும் ......அடிபேண,
பத்துத்தலை
தத்தக் கணை-தொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருது, ஒரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவுஆகப்
பத்தற்கு
இரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும்
...... ஒருநாளே,
தித்தித்தெய
ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக் கழுகொடு ...... கழுது
ஆடத்
திக்குப்பரி
அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனஓதக்
கொத்துப்பறை
கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடிஎன ...... முதுகூகை
கொட்பு
உற்றுஎழ நட்பு அற்ற அவுணரை
வெட்டி, பலி இட்டு, குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
தோற்றுவாய்
திருவருணையிலே அருணகிரிநாத சுவாமிகள்
முருகப்பெருமானிடம், “சும்மா இரு சொல்லற”
என்ற மௌன மந்த்ர உபதேசம் பெற்று நிர்விகற்ப சமாதியில் வீற்றிருந்த ஞான்று, மூவிருவதன முழுமுதற்கடவுள் மயில்மிசைத்
தோன்றி, “நம் புகழைப் பாடுவாயாக”
என்று அருள்புரிய, அருணகிரியார், “ஆண்டவனே! மறைகளாலும் சாற்றுதற்கரியத்
தேவரீரது புகழை `ஏடெழுதா முழு ஏழை’ ஆகிய
அடியேன் எங்ஙனம் பாடுவேன்’ என்னலும்,
நம்பிஆரூருக்கு `நகையால் மதனுருவந்
தீத்த’ `நம்பன்’ “பித்தா
பிறைசூடி” என்று அடியெடுத்துத் தந்தது போல, உலகம் உய்யும் பொருட்டாக செந்தமிழ்ப்
பரமாசிரியனாம் செவ்வேட் பரமன் தனது “ஞானமூறு செங்கனிவாய்” மலர்ந்து கனத்த
செந்தமிழால், “முத்தைத் தரு” என்று
மதுரம் மிகுந்த சொற்றொடர் அடியெடுத்துத் தந்தவுடனே, கடல் மடைத் திறந்த வெள்ளம்போல் நம்
அருணகிரியார் இத்திருப்புகழைப் பாடுவாராயினர்.
பதவுரை
முத்தைத் தரு --- முத்தை நிகர்த்த,
பத்தி திருநகை --- ஒழுங்காகவும்
அழகாகவும் அமைந்த (இள) நகையையுடைய,
அத்திக்கு இறை --- தெய்வானை
அம்மையாருக்குத் தலைவரே!
சத்தி சரவண --- சத்திவேற்படையைத்
தாங்கிய முருகக்கடவுளே!
முத்திக்கு ஒரு வித்து --- மோட்ச
வீட்டிற்கு ஒப்பற்ற விதையாக (மூலமாக) இருப்பவரே!
குரு பர --- மேலான குருமூர்த்தியே,
என ஓதும் --- என்று துதிக்கின்ற
முக்கண் பரமற்கு --- மூன்று
விழிகளையுடையப் பெரிய பொருளாகியச் சிவபெருமானுக்கு,
சுருதியின் முற்பட்டது ---
வேதங்களுக்கு முதன்மையானதாகிய “ஓம்” என்ற தனிமந்திரத்தை,
கற்பித்து --- உபதேசித்து,
இருவரும் --- பிரமவிட்டுணுக்களும்,
முப்பத்து மூவர்க்கத்து அமரரும் ---
முப்பத்து முக்கோடி தேவர்களும்,
அடிபேண --- திருவடியை வணங்கவும்,
தித்தித்தெய ஒத்த --- தித்தித்தெய
என்னும் ஒலிக்கு இசைந்த,
பரிபுர --- சிலம்புகளணிந்த,
நிர்த்த பதம் வைத்து --- நடனஞ்
செய்கின்ற திருவடிகளை வைத்து,
பயிரவி --- காளிகள்,
திக்கு ஒக்க --- திசைகளில்
பொருந்துமாறு;
நடிக்க --- தாண்டவஞ் செய்யவும்,
கழுகொடு கழுது ஆட --- கழுகுகளோடுப்
பேய்கள் சேர்ந்து ஆடவும்,
திக்கு --- எட்டுத்திக்குகளிலே இருந்து,
பரி அட்ட பயிரவர் --- உலகங்களைத்
தாங்குகின்ற பயிரவர் எண்மரும்,
சித்ர பவுரிக்கு --- அழகிய கூத்துக்கு,
தொக்குத்தொகு தொக்குத் தொகு தொகு த்ரிகடக
என ஓத --- தொக்குத்தொகு தொக்குத்தொகு தொகு என்னும் ஒசையைக் கூறவும், கொத்துப்
பறை கொட்ட --- கூட்டமாகப் பற்பல பறைவாத்தியங்களை முழக்கவும்,
களம் மிசை --- போர்க்களத்தில்,
குக்குக்குகு குக்குக் குகுகுகு ---
இவ்விதமான ஓசையோடு,
முது கூகை --- முதிர்ந்த கோட்டான்,
குத்தி புதை புக்கு பிடியென ---
குத்திப்புதை புகுந்துபிடி என்று குழறவும்,
கொட்பு உற்று எழ --- சுழலுந் தன்மையை அடைந்து
மேலே எழுந்திருக்க,
நட்பு அற்ற அவுணரை --- (வேண்டிய
வரமளித்த சிவபுத்திரர் என்கின்ற) சிநேக எண்ணந் தவிர்த்த நிருதர் கூட்டங்களை,
வெட்டி பலியிட்டு --- கொன்று
பலிகொடுத்து,
குலகிரி --- அசுரர் குலத்திற்கு
இயைந்து நின்ற கிரவுஞ்சமலையானது;
குத்துப் பட --- குத்துப்பட்டு
அழிந்து போகும்படி,
ஒத்து பொர வல --- (அறமார்க்கத்திற்கு)
பொருந்தி நின்று போர் செய்யவல்ல,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!’
பத்து தலை தத்த --- [இராவணனுடைய]
பத்துத்தலைகளும் சிதறி விழுமாறு,
கனை தொடு --- இராமாவதாரமெடுத்துக்
கணைத் தொட்டு,
ஒற்றை கிரி --- ஒப்பற்ற
மந்திரமலையாகிய,
மத்தை பொருது --- மத்தால்
திருப்பாற்கடலை (கூர்மாவதாரம் எடுத்து) கடைந்து,
ஒரு பட்டபகல் --- பகற்பொழுது ஒன்றை,
வட்ட திகிரியில் --- வட்ட வடிவமாயுள்ள
சக்ராயுதத்தால்,
இரவு ஆக --- இரவு ஆகும்படிச் செய்து,
பத்தற்கு --- அருச்சுனனாகிய
பத்தனுக்கு,
இரதத்தை கடவிய --- (அன்பினால்) பாகனாக
இகந்து தேர் நடத்திய,
பச்சைப் புயல் --- பசுமையான நீலமேக
வண்ணராகிய திருமால்,
மெச்சத் தகுபொருள் --- மெச்சுவதற்குத்
தகுந்த பரம்பொருளே!
பட்சத்தொடு --- அன்போடு,
ரட்சித்து அருள்வதும் --- காத்து அருள்புரிவதாகிய,
ஒரு நாளே --- ஒரு நாளும் உளதோ?
பொழிப்புரை
முத்தைப்போல் வரிசையாக அமைந்து அழகு
செய்வதாகிய இளநகை யுடைய தெய்வயானையம்மையாருக்கு இறைவரே!
ஞானசக்தியாகிய வேலாயுதத்தை யுடையவரே!
சரவணப் பொய்கையில் எழுந்தருளியவரே!
முத்தி வீட்டிற்கு மூலகாரணமாக வுள்ளவரே!
குருமூர்த்தியாக விளங்கும் பரம் பொருளே!
என்று துதிக்கின்ற சோமசூரியாக்கினி
என்கிற முச்சுடர்களையும் மூன்று கண்களாகவுடைய சிவபெருமானுக்கு, வேதங்களுக்கு முதலாகிய “ஓம்!” என்கிற
குடிலை மந்திரத்தை உபதேசித்து, பிரமன், திருமால் என்கிற இருவரும், முப்பத்து முக்கோடி தேவர்களும்
(காப்பாற்ற வேண்டுமென்று) திருவடிகளை விரும்பி வணங்கவும், தித்தித்தெய என்கிற ஓசைக்கு ஒத்த
சிலம்புகளை அணிந்த நடனம் புரியும் திருவடியை வைத்துக் காளிகள் திசைகளுக்குப்
பொருந்துமாறு நடிக்கவும், கழுகுகளோடு பேய்கள்
கூத்தாடவும், திக்குகளிலேயிருந்து
உலகங்களைத் தாங்குகின்ற அட்ட பயிரவர்களும் தொக்குத்தொகு தொக்குத்தொகுதொகு த்ரிகடக
என்ற தாள ஒத்துக்களைக் கூறவும்,
பற்பல
பறை வாத்தியங்கள் முழங்கவும், போர்க்களத்தில்
முதிர்ந்த கோட்டானானது குக்குக்குகு குக்குக்குகுகுகு என்ற ஒலியுடன் குத்திப் புதை
புக்குப்பிடி என்று கூக்குரலிடவும்,
(வேண்டிய
வரமும் வாழ்வும் அளித்த சிவபெருமானது திருக்குமாரர் முருகக் கடவுள் என்ற) சிநேக
எண்ணமற்ற அவுணர் குழாங்களை சுழற்சியுற்று எழுந்திருக்க வெட்டிப் பலியிட்டும், அசுரர் குலத்தின் மாயைக்கு ஒத்து நின்ற
கிரவுஞ்ச மலையை அழித்தும், அறநெறியில் நின்று
போர் செய்யவல்ல பெருமையிற் சிறந்தவரே!
இராமாவதாரமெடுத்து இராவணனுடையத் தலைகள்
பத்தும் சிதறிவிழக் கணைகளை விடுத்தவரும், கூர்மாவதாரமெடுத்து
ஒப்பற்ற மந்தரமலையால் பாற்கடலைக் கடைந்தவரும், ஒரு பகற்பொழுதை வளைந்த சக்கரத்தால்
இரவாகும்படிச் செய்து பக்தனாகிய அர்ச்சுனனுக்கு பாகனாகித் தேரை விடுத்தவரும், பசுமை நிறமுடைய மேகம்போன்ற
திருமேனியுடையவரும் ஆகிய நாராயணமூர்த்தி மெச்சுவதற்குத் தகுந்த பொருளே! அன்புடன்
அடியேனைக் காப்பாற்றி யருள்வதாகிய ஒருநாள் உளதோ?
விரிவுரை
முத்தைத்
தரு ---
“மெய்யின்
இயக்கம் அகரமொடு சிவணும்” என்ற தொல்காப்பியச் சூத்திரப்படி ஒவ்வோர் எழுத்திலும்
அகர உயிரின் சம்பந்தம் இருப்பதால், ஆரம்ப எழுத்தாகிய
“மு” என்ற எழுத்தில் அகரமும், மகர மெய்யின் மீது
உகர உயிரேறி முகரமாக ஆனபடியால் உகாரமும் மகாரமெய்யும் சேர்ந்துள்ளது. ஆகவே அ, உ, ம் இந்த மூன்றின் சமூகம் “ஓம்” என்ற
பிரணவ மந்திரமாயிற்று. எனவே தமிழ் வேதமாகியத் திருப்புகழின் ஆரம்பத்தில் பிரணவ
மந்திரம் முதலாவதாகத் திகழ்கின்றதைக் கூர்த்த மதியினர் ஆராய்ந்துணர்க.
முத்தம்மையாரது குமாரர் அருணகிரியார்
ஆனபடியால் முன்னறித் தெய்வமாகியத் தாயாரை முதலில் நினைக்கவேண்டு மென்கிற
நியாயப்படியும் முத்து என ஆரம்பித்தனர்.
முத்து வெண்மை நிறமுடையதால் திருப்புகழைப்
பயில்வோர் மனமுந் தூய்மையாக இருக்கவேண்டுமென்ற கருத்தும் அதிலே தோன்றுவது காண்க.
அத்திக்கு
இறை ---
தெய்வயானை கிரியாசக்தியானபடியால் கர்மயோகத்தை
முதலாவதாக அனுஷ்டிக்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காக கிரியாசக்தியை
முதலாவதாக வைத்தனர்.
சரவண
---
வானவர் பொருட்டும், மானவர் பொருட்டும் சரவணப் பொய்கையில்
அருளுருவாகத் தோன்றியத் திருவருளைக் காட்டுகிறது.
மறைகளின்
முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கஒணாமல்
நிறைவுடன்
யாண்டும்ஆகி நின்றிடும் நிமலமூர்த்தி,
அறுமுக
உருவாய்த் தோன்றி, அருளொடு, சரவணத்தின்
வெறிகமழ்
கமலப் போதில் வீற்றிருந்து அருளினானே --- கந்தபுராணம்.
“சரவணஜாதா நமோநம” --- (சரவண) திருப்புகழ்.
முத்திக்கு
ஒரு வித்து ---
முழுமுதற் கடவுளாகிய முருகப்பெருமானே முத்தி
வீட்டிற்கு மூலகாரணர்.
“கதிக்கு நாதன் நீ” --- (விலைக்கு) திருப்புகழ்.
“தெரிசன பரகதி ஆனாய் நமோநம” --- (அவகுண) திருப்புகழ்.
குருபர
என ஓதும் ---
சிவபெருமான்
சிஷ்யபாவ மூர்த்தியாகித் துதித்ததை,
“விசும்பின் புரத்ரயம்
எரித்த பெருமானும்
நிருபகுரு
பரகுமர என்றென்று பக்தி கொடு
பரவ
அருளிய மௌன மந்த்ரந் தனைப்பழைய
நினது
வழி யடிமையும் விளங்கும்படிக்ககு இனிது உணர்த்தி அருள்வாயே. ---
(அகரமுத)
திருப்புகழ்.
“நாதபோற்றி என முது
தாதை கேட்க” --- (ஆலமேற்ற)
திருப்புகழ்.
என்ற
வாக்குகளால் தெளிக.
முக்கட்
பரமன் ---
ஏனைய தேவர்கட்கு இல்லாத முக்கண்
சிவபெருமானுக்கே உளதாதலால் அவரே தேவதேவராம்; மகாதேவராம். அவரைத் தியானிப்பவருக்கே
இருள் நீங்கி ஞானவொளித் தோன்றும். ஆதலால், அவரைப் பரமன் என்று வியந்தனர்.
முக்கண்ணனாய், நீலகண்டனாய், மிக்க சாய்ந்தனா, பூதகாரணனாய், சமஸ்த சாட்சியாய் உள்ளவனை முனிவன்
தியானித்து இருளைக் கடந்தெய்துகின்றனன்; அவனையறிந்து
மிருத்யுவதைத் தாண்டுகின்றனன். விடுதலைக்கு வேறுவழியில்லை.
“முந்திய வல்வினைகள்
தீர்ப்பான் தன்னை
மூவாதமேனி முக்கண்ணினானை” --- அப்பர்.
சுருதியின்
முற்பட்டது ---
பிரணவ மந்திரமே வேதங்கள் அனைத்திற்கும் முதன்மையானதாகும்.
அதனிடத்திலேயே வேதங்கள் தோன்றுகின்றன. வேதமாதா அதுவே.
“ஏமுறப்படு மறைக்கெலாம்
ஆதி பெற்று இயலும் ஓம்” --- கந்தபுராணம்
கற்பித்து
---
பிரணவப்பொருள் வினவி அறுமுகனார் அயனைச் சிறை
செய்த ஞான்று, கண்ணுதற் கடவுள்
கந்தப் பெருமானை நோக்கி, பிரமனறியாத
குடிலையின் பொருளை நீ உணர்வாயோ?”
என்ன, குகக்கடவுள் உணர்வேம் என; அக்காலை சிவமூர்த்தி அவ்வொரு மொழியின்
பொருளை ஓதுதி என்று வழிபாடு செய்ய,
பிதாவினது
செவியில் பிரணவ மந்த்ரோபதேசம் புரிந்து புத்ரகுருவாக விளங்கினார்.
“அரவு புனைதரு
புனிதரும் வழிபட
மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
அறிவை அறிவது பொருள்என அருளிய பெருமாளே” --- (குமரகுரு) திருப்புகழ்
“செழுமகுட நாகமொய்த்த
ஒழுகுபுனல் வேணிவைத்து
சிவனைமுதல் ஓதுவித்த குருநாதா” --- (முழுகிவட) திருப்புகழ்
இருவரும்......அமரரும்
அடிபேண ---
பிரம்ம விட்டுணுக்களுக்கும் தேவருக்கும் முழுமுதற்
கடவுள் முருகப் பெருமானே. ஆதலின் அவர்கள் அறுமுக வள்ளலின் அடிமலர்களை விரும்பி
வணங்குகின்றார்கள்.
திருமருவு
புயன்அயனோடு அயிராவதக் குரிசில்
அடிபரவு பழநிமலை கதிர்காமம் உற்றுவளர்
சிவசமய
அறுமுகவ திருவேரகத்தில் உறை பெருமாளே.
--- (குமரகுரு) திருப்புகழ்.
அரிப்பிரமர்
அளப்பரிய பதக்கமலம் அருள்வாயே... --- (குறிப்பரிய) திருப்புகழ்.
பட்டப்பகல்
வட்டத் திகிரியில் இரவாக ---
பாண்டவர்கட்கும் சுயோதனாதிகட்கும் நிகழ்ந்த
பதின்மூன்றாம் நாள் போரில் கௌரவர்கள் தனுர்மறைக்கு மாறாக அதமத்தின் வழிநின்று அனேக
வீரர்களாக வளைந்து அருச்சுனனுடையப் புத்திரனும், மகாவீரனும், அதிரதனும் ஆகிய அபிமன்யுவைக்
கொன்றார்கள். தனஞ்சயன் கண்ணனுடன் சம்சப்தகர் மீது போர் புரியச் சென்றிருந்தான்.
தனஞ்சயன் நீங்கிய பாண்டவர் நால்வர்களையும் அவர்கள் படைகளையும் ஜயத்ரதன்
உருத்திரரது வரத்தின் வன்மையால் தடுத்து அபிமன்யுவின் வதத்திற்குக் காரணமாக
நின்றான். அதனை உணர்ந்த அருச்சுனன், புத்ர சோகத்தால் பீடிக்கப்பட்டுப்
பெரிதும் வருந்தி துன்பக் கடலில் ஆழ்ந்தான். ஒருவாறு தேறி சினங்கொண்டு கண்கள்
சிவந்து “நாளை சூரியன் மேற்கடலில் அத்தமிப்பதற்குள் அபிமன்யுவின் வதத்திற்குக்
காரணமாக இருந்த ஜயத்ரதனைக் கொல்லப் போகிறேன். அங்ஙனம் ஜயத்ரதனைக் கொல்லா விடில் ..........
தாய்தந்தையர்களுக்கு
அன்னங் கொடுக்காதவர்களுக்கும்,
குருதார
கமனஞ்செய்கிறவர்களுக்கும்,
கோள்
சொல்கிறவர்களுக்கும்,
சாதுக்களைக்
கண்டு வெறுக்கின்றவர்களுக்கும்,
பிறர்
மீது பழி கூறுகின்றவர்களுக்கும்,
மனச்
சாக்ஷிக்கு விரோதமாக நடப்பவர்களுக்கும்,
நன்றி
மறந்தவர்களுக்கும்
எந்த
கதியுண்டாகுமோ, அந்த கோரமான கதியை
நான் அடையக் கடவேன்.” இவை முதலான பற்பல சபதங்கூறி முடிவில், “அந்தப் பாவியாகிய ஜயத்ரதன் கொல்லப்
படாமல் இருக்கும்பொழுது ஆதித்தன் அத்தமித்தானேயானால் உடனே அக்கினியில் நான்
பிரவேசிப்பேன்” என்று பயங்கரமான சூளுரைக் கூறினான்.
'சிந்து பதி ஆகிய செயத்திரதனைத்
தேர்
உந்து
அமரின் நாளை உரும் ஏறு என உடற்றா,
அந்தி
படும் அவ் அளவின் ஆவி கவரேனேல்,
வெந்
தழலின் வீழ்வன்; இது வேத மொழி!' என்றான்.
'இன்று அமரில், வாள் அபிமன் இன் உயிர் இழக்கக்
கொன்றவனை, நாளை உயிர் கோறல் புரியேனேல்,
மன்றில்
ஒரு சார்புற வழக்கினை உரைக்கும்
புன்
தொழிலர் வீழ் நரகு புக்கு உழலுவேனே!
'மோது அமரின் என் மகன்
முடித் தலை துணித்த
பாதகனை
நான் எதிர் படப் பொருதிலேனேல்,
தாதையுடனே
மொழி தகாதன பிதற்றும்
பேதை
மகன் எய்து நெறி பெற்றுடையன் ஆவேன்!
'சேய் அனைய என் மதலை பொன்ற
அமர் செய்தோன்
மாய, முன் அடர்த்து, வய வாகை புனையேனேல்,
தாயர்
பசி கண்டு, நனி தன் பசி தணிக்கும்
நாய்
அனைய புல்லர் உறு நரகில் உறுவேனே!
'வஞ்சனையில் என் மகனை எஞ்ச
முன் மலைந்தோன்
நெஞ்சம்
எரி உண்ண அமர் நேர் பொருதிலேனேல்,
தஞ்சு
என அடைந்தவர் தமக்கு இடர் நினைக்கும்
நஞ்சு
அனைய பாதகர் நடக்கு நெறி சேர்வேன்!
'வினையில் என் மகன்தன்
உயிர் வேறு செய்வித்தோனைக்
குனி
சிலையின் நாளை உயிர் கோறல் புரியேனேல்,
மனைவி
அயலான் மருவல் கண்டும், அவள் கையால்
தினை
அளவும் ஓர் பொழுது தின்றவனும் ஆவேன்!'
பதினான்காம் நாள் யுத்தத்தில் எதிரிகளால்
வெல்லப்படாதவனும், மகாவீரனும், சவ்யசாசியுமாகிய விஜயன் கண்ணபிரானால்
தூண்டப்படும் இரதத்தின் மீதூர்ந்து கௌரவ சேனையில் நுழைந்து கொழுந்து விட்டெரிகின்ற
பெரிய அக்கினியைப்போல சைன்யங்களை அழித்துக் கொண்டு சென்றான். ஸ்ருதாயுதன், பூரிசிரவன் முதலிய அநேகரைக் கொன்றான்.
சூரர் என்று எண்ணங்கொண்ட துரியோதனாதிகளும் அவர்களின் சைன்யங்களும் அருச்சுனனை
எதிர்த்து, நெருப்பை எதிர்த்த
விட்டிற் பூச்சிகளுக்குச் சமானமாக ஆனார்கள்.
மேற்கடலில் சூரியன் அத்தமிக்கும் முன்
பக்தனாகிய பார்த்தனைக் காப்பாற்றுவதற்காக கண்ணபிரான் தம்முடைய சக்ராயுதத்தால்
சூரியனை மறைத்து இருளை உண்டு பண்ணினார். சிந்து தேசாதிபதியாகிய ஜயத்ரதன் தலையை
நீட்டி சூரிய அத்தமனத்தைப் பார்த்தான். உடனே கண்ணபிரான் “அருச்சுனா! சிந்துராசன்
தலையையும் கழுத்தையும் உயரத் தூக்கி சூரிய மண்டலத்தைப் பார்க்கிறான். அவனுடைய
தலையை விரைவாக அரிந்து விடு” என்றார். சூரியனை மறைத்து இருளுண்டாக்கிய வாசுதேவரது
கருணையை வியந்து தனஞ்செயன் வச்சிராயுதத்திற்கு நிகரானதும், தேவர்களாலுந் தாங்க முடியாததும், கூர்மையுள்ளதும், சந்தன புட்பங்களால் ஆராதிக்கப்பட்டதுமான
திவ்யாஸ்திரத்தை எடுத்து விடுத்தான். அந்த அத்திரமானது விரைந்துச் சென்று, பருந்தானது மரத்தின் உச்சியிலுள்ள
மற்றொரு பறவையைக் கவர்வதுபோல் ஜயத்ரதனுடையத் தலையைக் கவர்ந்தது.
அந்தத் தலை கீழே விழுவதற்குள், கண்ணபிரான் காண்டீபதரனை நோக்கி
“கௌந்தேய! இந்தத் தலையானது பூமியில் விழாதபடி நீ செய், அதன் காரணத்தைக் கூறுகின்றேன்” என்றனர்.
கர வேகத்தாலுஞ் சர வேகத்தாலும் மிகுந்த பார்த்தன் அநேக பாணங்களை விடுத்து
அத்தலையைக் குறுக்கிலும் மேலும் கீழும் சஞ்சரிக்கும்படி செய்தான். எல்லோரும் ஆச்சரியப்படும் படியாகவும்
விளையாடுபவனைப் போலவும் அருச்சுனன் அத்தலையை அம்புகளால் கீழே விழாதபடி சமந்த
பஞ்சகத்திற்கு வெளியே கொண்டு போனான். பின்னர் பார்த்தன் கேசவரை நோக்கி, “எவ்வளவு தூரம் நான் கொண்டு போவேன்? ஏன் இத்தலையைப் பூமியில் தள்ளக்கூடாது? இதனை எவ்விடம் கொண்டு போகும்படிச்
செய்யவேண்டும்”? என்று வினவினான்.
கண்ணபிரான், “அருச்சுனா! ஜயத்ரதனுடையப் பிதாவாகிய
விருத்தக்ஷத்திரன் தன் மகனது தலையை எவன் ஒருவன் பூமியில் தள்ளுவனோ அவனுடைய தலையும்
நூறு துணுக்காகச் சிதறவேண்டுமென்று சமந்த பஞ்சகத்திற்கு வெளியே கடுந்தவம் புரிந்து
கொண்டிருக்கிறான். ஆதலால் ஜயத்ரதனுடையத் தலையை நீ பூமியில் விழும்படிச் செய்தால்
உன் தலை நூறு துண்டாகப் போகும்.
ஐயமில்லை.
குந்தி நந்தனா! கணைகளாலே இந்த ஜயத்ரதன் தலையை அவன் பிதாவாகிய விருத்தக்ஷத்திரன்
மடியில் தள்ளு. இதனை அவனறியாதபடிச் செய். உன்னால் ஆகாத காரியம் மூன்று உலகத்திலும்
இல்லை” என்றனர். அப்படியே அருச்சுனன் அந்தத் தலையை விருத்தக்ஷத்திரன் மடியில்
கொண்டு போய்த் தள்ளினான். அவன் எழுந்தவுடனே அவனுடைய தலையும் நூறு துண்டுகளாக வெடித்துப் போய்விட்டது. விண்ணவரும்
மண்ணவரும் புகழ்ந்தார்கள்.
இவ்வாறு ஜயத்ரதனுடைய வதத்தின்பொருட்டு அருச்சுனனது
சபதம் நிறைவேற பகலை இரவாகச் செய்து,
பகவானாகிய
கண்ணபிரான் அர்ச்சுனனைக் காப்பாற்றினார்.
பத்தற்கு
இரதத்தைக் கடவிய ---
இராவண சங்காரஞ்செய்தவரும், திருப்பாற் கடலை கடைந்தவரும் ஆகிய
கிருஷ்ணபகவான் கருணையினால் தேர் ஓட்டுவதாகிய இழிந்த செயலை செய்தார்.
“சீர்படைத்த கேண்மையினால்
தேர் ஊர்தற்கு
இசைந்து அருளும் செங்கண்மாலை” --- வில்லிபாரதம்
பச்சைப்
புயல் ---
நாராயணனுடையத் திருமேனி மரகதம் போன்று
விளங்குவதை,
“பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே.”
என்ற
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவாக்காலும் உணர்க.
மெச்சத்
தகு பொருள் ---
ஆயிரந்தலைகளும் இரண்டாயிரங்கரங்களும்
உடையவனும் பிரமாதி தேவர்களைச் சிறை செய்தவனும் ஆகிய சிங்கமுகனையும் ஆயிரத்தெட்டு அண்டங்களையும்
நூற்றெட்டு யுகங்களாக அரசு செலுத்திய சூரபன்மனையும், அலகிலா அவுணர் குழாங்களையும், மாயாவியாகியத் தாரகனையும்
அழித்தவரானபடியால் அக் குகக் கடவுளை நாராயணர் எப்போதும் மெச்சுகின்றனர். அவரால்
மெச்சத்தக்க பொருள் அப்பரம்பொருளாகிய குமாரமூர்த்தியே.
நட்பற்ற
அவுணர் ---
சூரபன்மன் தவம் புரிந்தபோது எதிர்த்தோன்றி
ஆயிரத்தெட்டு அண்டங்களின் அரசாட்சியும், அவற்றை
எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் போய்ப் பார்த்து வருவதற்குரிய இந்திர ஞாலத்தேரும், ஆக்ஞா சக்கரமும், சிங்க வாகனமும், பாசுபதம் முதலிய பற்பல
திவ்யாஸ்திரங்களும், வச்சிர சரீரமும், வேண்டிய வரங்களும் உதவிய
சிவமூர்த்தியினது திருக்குமாரராகிய குமாரமூர்த்தியிடம் நேயங்கொள்ளாது பகைத்து
நன்றி மறந்து போர் தொடுத்ததால் நட்பு அற்ற அவுணர் என்றனர்.
ஒன்றுஒரு
பயன்தனை உதவினார் மனம்
கன்றிட
ஒருவினை கருதிச் செய்வரேல்,
புன்தொழில்
அவர்க்கு,முன் புரிந்த நன்றியே
கொன்றிடும், அல்லது கூற்றும்
வேண்டுமோ. --- கந்தபுராணம்.
கருத்துரை
முருகா!
அடியேனை
அன்போடு காப்பாற்றுகின்ற நாள் ஒன்று உளதோ?
No comments:
Post a Comment