திருக் குரங்கணில் முட்டம்





திருக் குரங்கணில் முட்டம்

தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்

     காஞ்சிபுரம் - வந்தவாசி பேருந்து சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 11 கி.மி. தொலைவில் இத் திருத்தலம் உள்ளது. காஞ்சீபுரத்திலிருந்து பயணம் செய்யும் போது பாலாற்றைக் கடந்தால் சுமார் 9 கி.மீ. தொலைவில் தூசி என்ற கிராமத்தை அடைந்து, அங்கிருந்து பிரியும் குரங்கணில்முட்டம் பாதையில் 2 கி.மீ. சென்றால் கிராமத்தின் எல்லையில் பாலாற்றின் கரைக்கு அருகில் திருக்கோயில்  அமைந்துள்ளது.

இறைவர்              : வாலீசுவரர், கொய்யாமலைநாதர்.

இறைவியார்           : இறையார் வளையம்மை.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - விழுநீர்மழு வாள்படை.

         வாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இத்தலத்தில் இறைவனை தனித்தனியே வழிபட்டதால் இத்தலம் குரங்கணில்முட்டம் என்ற பெயரைப் பெற்றது. இறைவனை வழிபடும் நிலையில் இம்மூன்றின் உருவங்களும் புடைப்புச் சிறபமாக ஆலய வாயிலில் அமைக்கப் பெற்றிருக்கின்றன. வாலி முதலிலும், பிறகு இந்திரனும், பின்பு எமனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இறைவன் சிறிய இலிங்க உருவில் மேற்குப் பார்த்த சந்நிதியில் அருட்காட்சி தருகிறார். கருவறையும் மிகச் சிறியதாக உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இத்தலத்தின் தல விருட்சம் இலந்தை மரம். தீர்த்தம் "காக்கை தீர்த்தம்" (காக்கை மடு). இது எமன் சிவபூசை செய்வதற்காக காக்கை உருவில் இருந்தபோது தன் அலகினால் பூமியைக் குத்தி உண்டாக்கிய மடு என்பது ஐதீகம்.

     கல்வெட்டில் இத் திருத்தலம், "காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரம் ஆன குரங்கணில் முட்டம்" என்றும்,  இறைவன், "திருக்குரங்கணில் முட்டம் உடைய நாயனார்" என்றும் "கொய்யா மலர் ஈசுவர தேவர்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

         காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

         திருக் கோயில் அமைப்பு: மதிற்சுவருடன் கூடிய ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்திருக்கிறது. வாயிலைக் கடந்தவுடன் பலிபீடமும், நந்தி மண்டபமும் இருக்கக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள்வாயிலைக் கடந்து சென்றால் நேரே மூலவர் வாலீசுவரர் சந்நிதி உள்ளது. இறைவன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். உள்பிராகாரத்தில் விநாயகர்,சுப்பிரமணியர், காசிவிசுவநாதர், பைரவர், சூரியன், நவக்கிரகம், துர்க்கை, சப்தமாதர்கள், நால்வர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம்.

         இக்கோயிலுக்கு வடக்கே சுமார் அரை கி.மி. தொலைவில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்திய குடைவரைக் கோவில் ஒன்றுள்ளது.

     வள்ளல் பெருமான் தாம் பாடியருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "முச்சகமும் ஆயும் குரங்கணில் முட்டப் பெயர் கொண்டு, ஓங்கு புகழ் ஏயும் தலம் வாழ் இயல்மொழியே" என்று பாடியுள்ளார்.

     திருஞானசம்பந்தப் பெருமான் பாடி அருளிய ஒரு திருப்பதிகம் உள்ளது.


                           திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரி புராணப் பாடல் எண் : 984
அங்கண் அமரர் பெருமானைப்
         பணிந்து போந்து,  ஆடுஅரவினுடன்
பொங்கு கங்கை முடிக்குஅணிந்தார்
         மகிழும் பதிகள் பலபோற்றி,
மங்கை பாகர் அமர்ந்துஅருளும்
         வயல்மா கறலை வழுத்திப்போய்,
கொங்கு மலர்நீர்க் குரங்கணில்முட்
         டத்தைச் சென்று குறுகினார்.

         பொழிப்புரை : திருவோத்தூரில் திருக்கோயில் கொண்டுள்ள தேவதேவரான இறைவரை வணங்கிச் சென்று, ஆடும் பாம்புடன் பெருகும் நீரையுடைய கங்கையை முடியில் சூடிய இறைவர் மகிழும் பதிகள் பலவற்றையும் போற்றி, உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவர் வீற்றி ருக்கும் வயல்கள் சூழ்ந்த திருமாகறலைப் போற்றிச் சென்று, மணம் கமழும் மலர்களையுடைய நீர் சூழ்ந்த திருக்குரங்கணில்முட்டத்தின் அருகில் செல்வாராயினர்.


பெரிய புராணப் பாடல் எண் : 985
ஆதி முதல்வர் குரங்கணில்முட்
         டத்தை அணைந்து, பணிந்து,ஏத்தி
நீதி வழுவாத் திருத்தொண்டர்
         போற்ற, நிகரில் சண்பையினில்
வேத மோடு சைவநெறி
         விளங்க வந்த கவுணியனார்,
மாதொர் பாகர் தாம்மன்னும்
         மதில்சூழ் காஞ்சி மருங்குஅணைந்தார்.

         பொழிப்புரை : ஆதிமுதல்வரான சிவபெருமானின் திருக்குரங்கணில்முட்டத்தைச் சேர்ந்து வணங்கிப் போற்றிச் சைவநெறியில் வழுவாத ஒழுக்கமுடைய திருத்தொண்டர் போற்றச் சென்று, ஒப்பில்லாத சீகாழிப் பதியில் மறைநெறியுடனே சைவநெறியும் விளங்குமாறு தோன்றியருளிய கவுணியரான ஞானசம்பந்தர், உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட ஏகம்பவாணர் நிலையாக எழுந்தருளியுள்ள மதில் சூழ்ந்த காஞ்சிப் பதியின் அருகில் அடைந்தார்.

         குறிப்புரை : முட்டம் - காகம். குரங்கு, அணில், காகம் ஆகிய மூன்றும் வழிபட்ட திருப்பதியாதலின் இப்பெயர் பெற்றது. இப்பதியில் அருளிய பதிகம் `விழுநீர்` (தி.1 ப.31) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


1.031 திருக்குரங்கணின்முட்டம்                பண் – தக்கராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
விழுநீர் மழுவாள் படைஅண் ணல்விளங்கும்
கழுநீர் குவளைம் மலரக் கயல்பாயும்
கொழுநீர் வயல்சூழ்ந் தகுரங் கணின்முட்டம்
தொழுநீர் மையர், தீது உறுதுன்பம் இலரே.

         பொழிப்புரை :பெருமைக்குரிய கங்கையை முடிமிசை அணிந்த வரும், மழுவாட்படையைக் கையில் ஏந்தியவரும் ஆகிய சிவபிரான் உறைவது கழுநீர், குவளை ஆகியன மலர்ந்து, கயல்மீன்கள் துள்ளுமாறு விளங்கும் நீர் நிலைகளை உடையதும், செழுமையான வயல்களால் சூழப்பட்டதுமாகிய திருக்குரங்கணில்முட்டம் ஆகும். இத்தலத்தைத் தொழுபவர் தீமையால் வரும் துன்பம் இலராவர்.
  
பாடல் எண் : 2
விடைசேர் கொடிஅண் ணல்விளங்கு உயர்மாடக்
கடைசேர் கருமென் குளத்துஓங் கியகாட்டில்
குடைஆர் புனன்மல்கு குரங் கணின்முட்டம்
உடையா ன்எனைஆள் உடைஎந் தைபிரானே.

         பொழிப்புரை :உயர்ந்து விளங்கும் மாடங்களின் கடை வாயிலைச் சேர்ந்துள்ள கரிய மெல்லிய காட்டிடையே அமைந்த குடைந்து ஆடுதற்குரிய நீர் நிலைகள் நிறைந்த குரங்கணில்முட்டத்தை உடையானும் விடைக்கொடி அண்ணலுமாகிய சிவபிரான் என்னை ஆளாக உடைய தலைவன் ஆவான்.

பாடல் எண் : 3
சூலப் படையான், விடையான், சுடுநீற்றான்,
காலன் தனைஆர் உயிர்வவ் வியகாலன்,
கோலப் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டத்து
ஏலம் கமழ்புன் சடை,எந் தைபிரானே.

         பொழிப்புரை :அழகிய சோலைகளால் சூழப்பெற்ற குரங்கணில் முட்டத்தில் எழுந்தருளிய மணம்கமழும் சடைமுடியை உடையோனாகிய எந்தை பிரான் சூலப்படையையும் விடை ஊர்தியையும் உடையவன். திருவெண்ணீறு பூசியவன். காலனின் உயிரை வவ்வியதால் கால காலன் எனப்படுபவன்.

பாடல் எண் : 4
வாடா விரிகொன் றைவலத்து ஒருகாதில்
தோடுஆர் குழையான் நலபால் அனநோக்கி
கூடா தனசெய் தகுரங் கணின்முட்டம்
ஆடா வருவார் அவர்அன் புடையாரே.

         பொழிப்புரை :வாடாது விரிந்துள்ள கொன்றை மாலையைச் சூடிய வனும், வலக் காதில் குழையையும் இடக்காதில் தோட்டையும் அணிந்துள்ளவனும், நன்றாக அனைத்துயிர்களையும் காத்தலைத் திருவுளம் கொண்டு தேவர் எவரும் செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்பவனுமாகிய குரங்கணில்முட்டத்துள் திருநடனம் புரியும் இறைவன் எல்லோரிடத்தும் அன்புடையவன்.
  
பாடல் எண் : 5
இறைஆர் வளையா ளையொர்பா கத்துஅடக்கிக்
கறைஆர் மிடற்றான், கரிகீ றியகையான்,
குறைஆர் மதிசூ டிகுரங் கணின்முட்டத்து
உறைவான் எமைஆள் உடைஒண் சுடரானே.

         பொழிப்புரை :இறையார் வளையாள் என்னும் திருப்பெயர் கொண்ட உமையம்மையை ஒருபாகத்தே கொண்டவனும், நீலகண்டனும், யானையின் தோலை உரித்துப் போர்த்த கையினனும் ஆகிப் பிறைமதியை முடியில் சூடிக் குரங்கணில் முட்டத்தில் உறையும் இறைவன் எம்மை ஆளாக உடைய ஒண் சுடராவான்.

 
பாடல் எண் : 6
பலவும் பயன்உள் ளன,பற் றும்ஒழிந்தோம்,
கலவும் மயில்கா முறுபே டையொடுஆடிக்
குலவும் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டம்
நிலவும் பெருமான் அடிநித் தல்நினைந்தே.

         பொழிப்புரை :தோகைகளை உடைய ஆண் மயில்கள் தாம் விரும்பும் பெண் மயில்களோடு கூடிக் களித்தாடும் பொழில்களால் சூழப்பட்ட குரங்கணில்முட்டத்தில் உறையும் பெருமான் திருவடிகளை நாள்தோறும் நினைந்து உலகப் பொருள்கள் பலவற்றிலும் இருந்த பற்றொழிந்தோம்.

பாடல் எண் : 7
மாடார் மலர்க்கொன் றைவளர் சடைவைத்துத்
தோடுஆர் குழைதான் ஒருகா தில்இலங்கக்
கூடார் மதில்எய் துகுரங் கணின்முட்டத்து
ஆடுஆர் அரவம் அரைஆர்த்து அமர்வானே.

         பொழிப்புரை :சிவபிரான் பொன்னையொத்த கொன்றை மலர் மாலையைச் சடைமீது அணிந்து, காதணியாகிய குழை ஒரு காதில் இலங்கத் திரிபுரத்தை எரித்தழித்து, ஆடும் பாம்பை இடையிலே வரிந்துகட்டிக் குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளியுள்ளான்.

பாடல் எண் : 8
மையார் நிறமேனி அரக் கர்தம்கோனை
உய்யா வகையால் அடர்த்து,இன் அருள்செய்த
கொய்ஆர் மலர்சூ டிகுரங் கணின்முட்டம்
கையால் தொழுவார் வினைகாண் டல்அரிதே.

         பொழிப்புரை :கரிய மேனியை உடைய அரக்கர் தலைவனாகிய இராவணனைப் பிழைக்க முடியாதபடி அடர்த்துப் பின் அவனுக்கு இனிய அருளை வழங்கியவனும், அடியவர் கொய்தணிவித்த மலர் மாலைகளுடன் குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளியுள்ளவனுமாகிய சிவபெருமானைக் கைகளால் தொழுபவர் வினைப்பயன்களைக் காணுதல் இலராவர்.

பாடல் எண் : 9
வெறிஆர் மலர்த்தா மரையா னொடுமாலும்
அறியாது அசைந்துஎத் தஒர் ஆரழல்ஆகும்
குறியால் நிமிர்ந்தான் தன்குரங் கணின்முட்டம்
நெறியால் தொழுவார் வினைநிற் ககிலாவே.

         பொழிப்புரை :மணம் கமழும் தாமரை மலரில் உறையும் நான் முகனும், திருமாலும் அடிமுடி அறிய முடியாது வருந்தி வணங்க அழல் உருவாய் ஓங்கி நின்றருளிய சிவபிரான் விளங்கும் குரங்கணில் முட்டத்தை முறையாக வணங்குவார் வினைகள் இலராவர்.

பாடல் எண் : 10
கழுவார் துவரா டைகலந் துமெய்போர்க்கும்
வழுவாச் சமண்சாக் கியர்வாக்கு அவைகொள்ளேல்,
குழுமின் சடைஅண் ணல்குரங் கணின்முட்டத்து
எழில்வெண் பிறையான் அடிசேர் வதுஇயல்பே.

         பொழிப்புரை :தோய்க்கப்பட்ட துவராடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தர், தம்கொள்கையில் வழுவாத சமணர் ஆகியோர் உரைகளைக் கொள்ளாதீர். மின்னல்திரள் போலத் திரண்டு உள்ள சடைமுடியை உடையவனும், அழகிய வெண்பிறையை அணிந்தவனும் ஆகிய குரங்கணில் முட்டத்து இறைவன் திருவடிகளைச் சென்று வணங்குவதே நம் கடமையாகும்.

பாடல் எண் : 11
கல்ஆர் மதில்கா ழியுள்ஞான சம்பந்தன்
கொல்ஆர் மழுஏந் திகுரங் கணின்முட்டம்
சொல்லார் தமிழ்மாலை செவிக்கு இனிதாக
வல்லார்க்கு எளிதாம் பிறவா வகைவீடே.

         பொழிப்புரை :கருங்கல்லால் இயன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், கையில் கொல்லனது தொழில் நிறைந்த மழுவாயுதம் ஏந்திய குரங்கணில் முட்டத்து இறைவன்மீது பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைச் செவிக்கு இனிதாக ஓதி ஏத்த வல்லார்க்குப் பிறவா நெறியாகிய வீடு எளிதாகும்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...