அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அருக்கு மங்கையர்
(திருப்பரங்குன்றம்)
முருகா!
பொது மகளிர் கலவியில்
மகிழுதல் தவிர அருள்வாய்
தனத்த
தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
அருக்கு
மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ......
இருதோளுற்
றணைத்தும்
அங்கையின் அடிதொறும் நகமெழ
உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென ......
மிகவாய்விட்
டுருக்கும்
அங்கியின் மெழுகென உருகிய
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உறக்கை யின்கனி நிகரென இலகிய ......
முலைமேல்வீழ்ந்
துருக்க
லங்கிமெய் உருகிட அமுதுகு
பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற
உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது ......
தவிர்வேனோ
இருக்கு
மந்திரம் எழுவகை முநிபெற
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக ......
எழில்வேளென்
றிலக்க
ணங்களும் இயலிசை களுமிக
விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை ......
புனைவோனே
செருக்கும்
அம்பல மிசைதனில் அசைவுற
நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய ......
குருநாதர்
திருக்கு
ழந்தையு மெனஅவர் வழிபடு
குருக்க ளின்திற மெனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
அருக்கு
மங்கையர் மலர் அடி வருடியெ,
கருத்து அறிந்து, பின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும், அங்கு உள அரசஇலை தடவியும்,
...... இருதோள் உற்று,
அணைத்தும்,
அங்கையின் அடிதொறும் நகம்எழ,
உதட்டை மென்று, பல் இடு குறிகளும் இட,
அடிக் களம் தனில் மயில்குயில் புறவு என
...... மிக,
வாய் விட்டு,
உருக்கும்
அங்கியின் மெழுகு என உருகிய,
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உற, கையின் கனி நிகர் என இலகிய ...... முலைமேல்
வீழ்ந்து,
உருக்
கலங்கி, மெய் உருகிட, அமுது உகு
பெருத்த உந்தியின் முழுகி, மெய் உணர்வு அற,
உழைத்திடும் கன கலவியை மகிழ்வது ......
தவிர்வேனோ?
இருக்கு
மந்திரம் எழுவகை முனிபெற,
உரைத்த சம்ப்ரம சரவண பவ!குக!
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக! ......
எழில்வேள்என்று
இலக்கணங்களும்
இயல் இசைகளும் மிக
விரிக்கும், அம்பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை ......
புனைவோனே!
செருக்கும்
அம்பல மிசைதனில் அசைவுற
நடித்த சங்கரர், வழிவழி அடியவர்,
திருக் குருந்தடி அருள்பெற அருளிய ......
குருநாதர்
திருக்
குழந்தையும், என அவர் வழிபடு
குருக்களின் திறம் என வரு பெரியவ!
திருப்பரங்கிரி தனில்உறை சரவண ......
பெருமாளே.
பதவுரை
இருக்கு மந்திரம் --- இருக்கு
வேதத்திலுள்ள (முற்பட்டதாகிய பிரணவ) மந்திரத்தின் தத்துவங்களை,
எழுவகை முனி பெற --- சப்த இருடிகளும்
உணருமாறு,
உரைத்த --- உபதேசித்தருளிய,
சம்ப்ரம --- மகிழ்ச்சியுடையவரே!
சரவணபவ --- சரவண தடாகத்தில்
அவதரித்தவரே!
குக --- ஆன்மாக்களது இதயத்
தாமரை வெளியில் உறைபவரே!
இதத்த --- இனிமை உடையவரே!
இங்கிதம் இலகிய அறுமுக --- இன்பம் விளங்கிய ஆறு திருமுகங்களை உடையவரே!
எழில்வேள் என்று --- அழகுமிக்க
முருவேளே என்று,
இலக்கணங்களும் இயல் இசைகளும் --- இலக்கணங்களும்
இயற்றமிழ் இசைத் தமிழ்களும்,
மிக விரிக்கும் --- மிக
விரித்துரைக்கும்,
அம் பல மதுரிதம் --- அழகுறு பல
வகையாகிய இனிமையான,
கவி தனை இயற்று --- பாமாலையைச் செய்கின்ற,
செந்தமிழ் விதமொடு --- செந்தமிழ்ப்
பிரபந்தங்களை விதவிதமாக,
புயமிசை புனைவோனே --- திருத்தோள்களின்
மேல் தரித்துக் கொண்டிருப்பவரே!
செருக்கும் அம்பலம்
மிசைதனில் ---
களிப்பினை நல்கும், திருச்சிற்றம்பலமாகிய
ஞானசபையின்கண்,
அசைவுற --- எல்லா வுயிர்களும்
அசைவுற்று, ஐந்தொழிலும்
நடைபெறுமாறு,
நடித்த சங்கரர் --- திருநடனம்
புரிந்தருளிய நடேசப் பெருமானும்,
வழிவழி அடியவர் --- வழிவழியாக
அடிமைத்திறம் வந்த, மெய்யடியாராகிய
மாணிக்கவாசகர்,
திருக் குருந்தடி --- மேன்மை
பொருந்திய குருந்த மரத்தடியிலே,
அருள் பெற --- திருவருள் பெறுமாறு,
அருளிய --- அருள் புரிந்த,
குருநாதர் --- குருநாதராக
எழுந்தருளியவருமாகிய சிவபெருமானது,
திருக்குழந்தையும் என --- தெய்வீகம்
நிறைந்த குழந்தை என்றும்,
அவர் வழிபடு --- அந்த சிவபரஞ்சுடர்
சிஷ்யபாவமாக இருந்து வழிபடுகின்ற,
குருக்களின் திறம் என வரு ---
ஆசாரியன் என்றும் பெருமையுடையோன் என்றும் எழுந்தருளி வருகின்ற,
பெரியவ --- பெரியவரே!
திருப்பரங்கிரிதனில் உறை ---
திருப்பரங்குன்றம் என்னும் திருத்தலத்தில் வாழ்கின்ற,
சரவண --- சரவணோற்பவரே!
பெருமாளே --- பெருமையிற்
சிறந்தவரே!
அருக்கு மங்கையர் --- அருமையான
மங்கைப் பருவமுடைய பெண்களுடைய,
மலர் அடி வருடியே --- தாமரை ஒத்த
பாதங்களைத்
தடவி, (ஏ அசை)
கருத்து அறிந்து பின் --- உள்ளக் கருத்தைத்
தெரிந்து கொண்ட பின்,
அரைதனில் உடைதனை அவிழ்த்தும் ---
இடையில் உடுத்தியுள்ள ஆடையை நீக்கியும்,
அங்கு உள --- அவ்விடத்து உள்ள,
அரசு இலை தடவியும் --- அரசிலை போன்ற
அல்குலைத் தடவியும்,
இரு தோள் உற்று --- இரண்டு தோள்களைப்
பொருந்தி,
அணைத்தும் --- தழுவிக் கொண்டும்,
அம் கையின் --- அழகிய கரத்தினால்,
அடிதொறும் --- ஒவ்வொரு இடத்தும்,
நகம் எழ --- நகக் குறித் தோன்றவும்,
உதட்டை மென்று --- அதரத்தைக் கடித்து,
பல் இடு குறிகளும் இட --- பல்லால்
செய்யப்படும் அடையாளங்களைச் செய்யவும்,
அடிக் களந்தனில் --- கழுத்தின்
கீழ்ப்பாகத்தின் கண் (நெஞ்சக் குழியில்)
மயில் குயில் புறவு என --- மயில்
குயில் புறா என்று சொல்லும்படி,
மிக வாய்விட்டு --- மிகவும்
வாயைவிட்டு ஒலி செய்யவும்,
உருக்கும் அங்கியின் --- உருக்குகின்ற
அக்கினியிலே,
மெழுகு என உருகிய --- மெழுகைப்போல்
உருகிய,
சிரத்தை மிஞ்சிடும் ---
விருப்பமிகுந்த,
அநுபவம் உறு பலன் உற --- அந்த இன்ப
சுக அனுபவத்தினது மிக்க பலனை அடைய,
கையின் கனி நிகர் என --- கரத்தில்
பொருந்தியுள்ள பழத்திற்கு இணையென்று சொல்லும்படி,
இலகிய முலைமேல் வீழ்ந்து --- விளங்கிய முலைகளின்மேல் விழுந்து,
உரு கலங்கி --- மேனி கலக்கமடைந்து,
மெய் உருகிட --- உடம்பு தளர்ந்து
நெகிழ,
அமுது உகு --- அமிர்தம் சொரிகின்ற,
பெருத்த உந்தியின் முழுகி --- பெரிய
உந்திச் சுழியில் அழுந்தி,
மெய் உணர்வு அற --- உண்மையறிவு
கெட்டுப்போக,
உழைத்திடும் --- வருந்தும்படியான,
கன கலவியை --- மிக்க புணர்ச்சி இன்பத்தை,
மகிழ்வது தவிர்வேனோ --- விருப்பம்
கொள்வதை நீங்குவேனோ?
பொழிப்புரை
இருக்கு வேதத்தில் முதன்மொழியாம் தனி
மந்திரத்தின் பொருளை அகத்தியர் முதலிய ஏழு முனிவர்களுக்கும் உபதேசித்தருளிய
மகிழ்ச்சியை உடையவரே!
சரவணப் பொய்கையில் தோன்றினவரே!
குக மூர்த்தியே!
இனிமையை உடையவரே!
இன்பம் விளங்கிய ஆறுமுகங்களை உடையவரே!
அழகிய குமரவேளே என்று, இலக்கணங்களும் இயற்றமிழும் இசைத்தமிழும்
மிகவும் விரித்துரைக்கும் அழகிய பலவகையான மதுரம் பொருந்திய கவிகளைச் செய்யும்
செந்தமிழ்ப் பிரபந்தங்களை விதம் விதமாகப் புனைந்து கொண்டிருக்கின்ற திருத்தோள்களை உடையவரே!
களிப்பை விளைக்கின்ற
சிற்றம்பலமாகிய தகராகாயத்தின்கண் சகல உயிர்களும் அசையுந் தன்மையை அடையுமாறு
திருநடனம் புரிகின்றவரும், சுகத்தைக்
கொடுப்பவரும், பரம்பரையாக
அடிமைத்திறம் பூண்ட அடியவராம் மாணிக்கவாசகர் திருக்குருந்த மரத்தினடியில் நல்லருள்
பெற அனுக்கிரகம் புரிந்த குருநாதருமாகிய சிவபெருமானது தெய்வீகக் குழந்தையாகவும்
அப்பெருமான் வழிபாடு புரிய குருமூர்த்தியாகவும் வருகின்ற பெருந்தகையே!
திருப்பரங்குன்றத்தில் வசிக்கின்ற
சரவணப் பெருமாளே!
அருமையான மங்கைப் பருவத்தையுடைய மாதரது
மலரனைய பாதங்களைத் தடவி, அவர்களது கருத்தை அறிந்தபின்
இடையில் உலுள்ள துகிலை அவிழ்த்து அங்குள்ள அரசிலை என்ன உள்ள அல்குலைத் தடவியும், இரு தோள்களும் பொருந்தத் தழுவியும், அழகிய கரத்தால் அந்தந்த அங்கங்களில்
நகக் குறி வைத்தும், அதரபானம் புரிந்து
பற்குறிகளை வைத்தும், காம வேட்கை
மிகுதியால் நெஞ்சக் குழியில் மயில்,
குயில், புறா இனங்களைப்போல் புள்ளொளி செய்யவும்
இளகப் புரியும் கனலிலிட்ட மெழுகைப் போல் உருகிய விருப்பம் மிகவும், இன்ப சுகானுபவத்தின் பலம் அடையவும், கரத்திற் பொருந்திய கனிக்கு
நிகராக விளங்கும் தனங்களின் மேல் வீழ்ந்து, மேனி கலங்கி சரீரம் தளர்ந்து
நெகிழ்ச்சியை யடைய அமுதம் சொரிகின்ற பெரிய உந்திச் சுழியில் முழுகி மெய்யறிவு
நீங்குமாறு உழைத்திடும்படியான பெரிய புணர்ச்சியை மகிழ்கின்றதை விட்டு நீங்க
மாட்டேனோ?
விரிவுரை
கலவியை
மகிழ்வது தவிர்வேனோ ---
பெண்ணாசையானது பிறவிகள் தோறும் தொடர்ந்து
வருவதால், இதனை நமது
முயற்சியாலும் அறிவினாலும் நூல் கேள்வியாலும் நீக்குவது மிகவும் அரியது. ஆதலினால்
மகாமாயை களைந்திட வல்ல பிரானாகிய குமாரக் கடவுளை இவ் ஆசையினின்றும் நீங்குவனோ
என்று வேண்டுகிறார்.
இப்பெண்ணாசை நீங்கினால் ஏனைய மண்ணாசையும்
பொன்னாசையும் தானே நீங்கும்.
ஞானமே உருவாகிய நாயகனாம் சத்திதரப்
பெருமானைச் சதாகாலமும் வழிபட்டு அவனது திருவருளாலேயே இப் பெரும் பற்றை நீக்க முயல
வேண்டும்.
இருக்கு
மந்திரம்
---
இருக்கு வேதத்தில் முதன்முதலில்
ஆரம்பிக்கப்படுவது குடிலையே. அம்மந்திரத்தை உபதேசிக்கத் தக்க ஆசான் குமாரகுருபரன்
ஒருவனே. ஆதலால் அக்கந்தப் பெருமானுடைய திருநாமங்களில் “ஆசான்” , “குரு” என்று திருநாமங்கள் மிளிர்கின்றன.
எழுவகை
முனி ---
முனிவர் என வரவேண்டியது முனியென ஒன்றன்பாலில்
வந்தது. இது பால்வழுவமைதி.
இச் சப்த இருடிகளாவோர் அகத்தியர்,
ஆங்கீரசர், கௌதமர், காசிபர், புலத்தியர், மார்க்கண்டர், வசிட்டர், இம்முனிவர் எழுவர்க்கும் முருகப்
பெருமானேகுரு மூர்த்தியாக எழுந்தருளி உபதேசித்தனர். இம் முனிபுங்கவர்கள்
குகமூர்த்தியின் சீடர்களானபடியால் அப்பெருமானைப் பாடி வழிபட்டுளார் என்றும், அவர்களது பாடலில் பொருள்வடிவாக
குகமூர்த்தி எழுந்தருளி வருகிறார் என்றும் அருணகிரியார் பிறிதோரிடத்தில்
கூறியிருப்பதைக் காண்க.
“வசிட்டர் காசிபர்
தவத்தான யோகியர்
அகத்ய மாமுனிய யிடைக்காடர் கீரனு
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே”
--- (விலைக்கு) திருப்புகழ்.
சரவணபவ ---
தேவர்களது இன்னலை நீக்குவான் கருதி பிறப்பும்
இறப்பும் இல்லா நெடுஞ்சுடர் வடிவேலண்ணல்,
சரவண தடாகத்தில் ஆறுமுகங்களும் பதினெட்டு விழிகளும், பன்னிரு தோள்களுமாக வெளிப்பட்டனர்
என்பது சரித்திரம்.
குக ---
முருகன் குறிஞ்சி நிலத் தெய்வமாய் இருத்தலினால்
“மலைக்கு நாயக” என்றபடி மலைக் குகைகளில் வசிப்பவன் என்பது பொருள். குகை என்பது
தகராகாசமாம். தகரமாகிய இதய புண்டரீகத்தில் சிதாகாசமாகிய வித்தை இருத்தலின் அது தகர
வித்தை என்றும் சொல்லப்படும்.
இந்த இதய குகையிலிருப்பவன் குகன் எனப்படுவன்.
அதனால், குகனாகிய முருகன்
சகல ஆன்மாக்களின் இதய கமலங்களில் வாசஞ் செய்கின்ற அந்தர்யாமி எனலாம்.
இங்கித
மிலகிய அறுமுக
---
முருகப் பெருமானது ஆறுமுகங்களிலும் மாறா
இன்பம் இலகுகின்றது.
எழில்
வேள்
---
அழகு மிக்கோன் ஆனபடியால் அப்பெருமானை
எல்லோரும் விரும்புகின்றனர். வேள் - விரும்பப்படுபவன் எனப் பொருள்படும். ஆண்மகன்
என்றும் பொருள்படும்.
இலக்கணங்களும்............புனைவோனே ---
புலவர்களால் முத்தமிழ்கொடு இலக்கண முறைப்படி
மிக மதுரமாக வகைவகையான பாவினங்களால் தொடுத்த செந்தமிழ்ப் பாமாலைகளை முருகவேள் தமது
பன்னிரு புயங்களிலும் தரித்திருக்கிறார். செவ்வேட்பரமன் செந்தமிழ்ப் பரமாசாரியனான
படியால் செந்தமிழில் மிகவும் அன்புடையவன் என்பது இதனாற் புலனாகும்.
“செந்தமிழ் சொல்
பாவின் மாலைக்கார” ---(முந்துதமிழ்)
திருப்புகழ்.
“செந்தில் வாழ்
செந்தமிழ்ப் பெருமாளே” ---(பங்கமேவு)
திருப்புகழ்.
தேவயானை அம்மையாரது கலவி இன்பத்தினும்
நக்கீரர் துதித்த திருமுருகாற்றுப்படை என்னும் செந்தமிழ் நூல் தித்தித்தது என்றால்
முருகப் பெருமானுக்குச் செந்தமிழ் எத்துணை மகிழ்ச்சியைத் தருகிறது என்பதைத்
தமிழ்மொழி பேசும் பாக்கியம் பெற்றோர் அனைவரும் சிந்திக்க.
“கைமாமயில் செவ்வி
நற்கீரர் சொற் றித்தித்ததே” --- கந்தரந்தாதி
“ஆயிரமுகத்து நதி
பாலனும் அகத்தடியர்
ஆனவர் தொடுத்த கவிமாலைக் காரனும்” --- திருவேளைக்காரன் வகுப்பு.
மேலும், அருணகிரியாரது பாடலை மிகமிக அன்போடு
சூடிக்கொள்ளுகிறார் என்பதனை,
“மல்லே புரி பன்னிரு
வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே”
என்ற
அநுபூதி வாக்காலும் உணர்க. இதுவேயும் அன்றித் தமிழ் தெய்வமொழி என்பதற்குச் சான்று:
சிவபெருமான்
ஆரூரருக்குத் திருவெண்ணெய் நல்லூரில் `பித்தா
பிறை' என்றும்,
சேக்கிழாருக்கு
தில்லையில் `உலகெலாம்’ என்றும்,
முருகவேள்
நக்கீரருக்கு “உலகம் உவப்ப” என்றும்,
அருணகிரியாருக்கு
“முத்தைத்தரு” என்றும்,
இன்னோரன்ன
பிறவும் தமிழால் அடியெடுத்துத் தந்தனேரே அன்றி, வேறு ஒருவருக்கு, வேற்று மொழியில் அடியெடுத்துக்
கொடுக்கவில்லை என்பது ஒன்றே அமையும்.
எலும்பைப் பெண்ணாக்கியதும், முதலை வாய்ப்பட்ட மகனை உயிர்ப்பித்ததும், அனல்வாதம் புனல்வாதம் புரிந்து
வென்றதும், தூணிடையிருந்து
குமாரக் கடவுளை வெளிப்படுத்தியதும் இத் தமிழ்மொழி.
அம்பல
மிசைதனில் அசைவுற நடித்த ---
புறத்தே தில்லையம்பலத்திலும், அகத்தே இதய கமலத்திலும் இறைவன் ஓவாது
பஞ்சகிருத்திய ஆனந்தத் திருநடனம் புரிகின்றான். இறைவன் அருட்கூத்தில் ஐந்தொழிலும்
நிகழுமாறு காண்க.
அரன்துடி
தோற்றம், அமைத்தல் திதியாம்,
அரன்அங்கி
தன்னில் அறையில் சங்காரம்,
அரன்உற்ப
அணைப்பில் அமருந் திரோதாயி,
அரன்அடி
என்றும் அனுக்கிரகம் என்னே. --- திருமந்திரம்.
தோற்றம்
துடிஅதனில், தோயும்
திதிஅமைப்பில்,
சாற்றியிடும்
அங்கியிலே சங்காரம், ---ஊற்றமா
ஊன்றும்
மலர்ப்பதத்தில் உற்றற திரோதம், முத்தி
நான்ற
மலர்ப்பதத்தே நாடு. --- உண்மை
விளக்கம்.
உடம்பிற்கு எப்படி இதயதாமரை நடுவோ, அப்படியே உலகிற்கு நடு சிதம்பரம். ஆதலால் சிதம்பரம் அண்ட தகராகாசமாம்.
இதயதாமரை பிண்ட தகராகாசமாம். அண்டத்தும் பிண்டத்தும் அந் நடேசபிரான் உலகம்
இயங்குதற் பொருட்டு ஒழியாது அசைதலே அவனது அருட்கூத்தாகும்.
சிதம்பர நடன வரலாறு
தவமே தனமாகக் கொண்ட மத்தயந்தன முனிவர்
என்பார் ஒருவர் இருந்தனர். அவருக்கு அருமையான புத்திரர் ஒருவர் தோன்றினார்.
அப்புதல்வர் கலைகள் முழுவதுங் கற்றுணர்ந்து மெய்ஞ்ஞானம் பெற்றுச் சிறந்ததோர் இடஞ்
சென்று சிவபெருமானை வழிபட வேண்டுமென்று விரும்பினார். புதல்வரது கருமத்தை உணர்ந்த
பிதா, ஈசனை வழிபடுவதற்குச்
சிறந்த இடம் தில்லைவனமே என்று அறிவுறுத்த, அப்புதல்வர் தந்தை பால் விடைபெற்று
தில்லைவனத்தை அடைந்து, ஒர் அழகிய
பொய்கையும், அதன் தென்புறத்தில்
ஓர் ஆலமரத்தின் நிழலில் ஒரு சிவலிங்கமும் இருக்கக்கண்டு அகமிக மகிழ்ந்து, ஆங்கு ஓர் பர்ணசாலை அமைத்து, அரனாரை வழிபட்டு வந்தனர். நாள் தோறும்
ஈசனை அருச்சிப்பதற்குப் பறிக்கும் நறுமலர்களை ஒரு நாள் ஆராய்ந்து பார்க்கையில், அவற்றுள் பழையனவும் பழுதுபட்டனவுமான பல
மலர்கள் கலந்திருக்கக் கண்டு வருந்தி, “கதிரவன்
உதித்த பின் மலர் எடுக்கில் வண்டுகள் வந்து அம் மலர்களை எச்சில் புரிந்து
விடுகின்றன; பொழுது புலராமுன்
சென்று மலர் பறிப்போமாயின் மரம் அடர்ந்த இக்கானகத்தில் வழியறிதல் முடியாது.
மரங்களில் ஏறினாலும் பனியால் கால் வழுக்கும்; ஆதலால் இதற்கு என் செய்வது?” என மனங்கவன்று இறைவனைத் துதிக்க, உடனே சிவபெருமான் அந்த இளைய முனிவரெதிரே
தோன்ற, முனிமகனார் அரனாரை
வணங்கி, “அரவாபரணா! தேவரீரை வழிபடுதற்
பொருட்டு அடியேன் வைகறை எழுந்து சென்று,
மலர் பறிக்க, மரங்களில்
வழுக்காமல் ஏறுவதற்கு, என் கை கால்களில்
வலிய புலி நகங்கள் உண்டாக வேண்டும். வழி தெரிந்து செல்வதற்கும் பழுதற்ற பனிமலரைப்
பறிப்பதற்கும் நகங்கள் தோன்றும் கண்களும் உண்டாகவேண்டும்” என்று வரங்கேட்டனர்.
வேண்டுவோர்க்கு வேண்டிய வண்ணம் அருளும் விடையூர்தி அவ்வரத்தை நல்கி மறைந்தருளினர்.
அன்று முதல் அம்முனிச் சிறுவர்க்கு வியாக்ரபாதர் என்று வடமொழியிலும், புலிக்கால் முனிவர் என்று தமிழிலும்
பெயர்களுண்டாயின. பின்னர் அவர் தாம் விழைந்தவாறு புதுமலர் கொணர்ந்து புர மெரித்த
புராதனனை ஆராதனை புரிந்து மகிழ்ந்திருந்தனர். புலிக்கால் முனிவர் வழிபட்டதனால்
தில்லைமாநகர் புலியூர் என்னும் பெயரும் உடைத்தாயிற்று.
வியாக்ரபாதர் இங்ஙனமிருக்க இவர்
தந்தையார் மந்தியந்தன முனிவர் இவர்பால் வந்து, இவருக்குத் திருமண முடிக்க வேண்டுமென்னும்
தமது கருத்தைத் தெரிவிக்க, புதல்வரும் இசைய, வசிட்ட முனிவரது தங்கையாரை மணம்பேசி
புலிப்பாதருக்கு வாழ்க்கைத் துணைவியாக்கினர். அன்னார் செய்த அருந்தவப் பலனாய்
உபமன்யு என்னும் அருமந்த புத்திரன் தோன்றினன். அக்குழவியை அருந்ததி தமது இருக்கைக்குக்
கொண்டுபோய் காமதேனுவின் பால் தந்து வளர்த்தனள். பின்னர் மகவின் விருப்பத்தால் தாய்
தந்தையர் மகனைத் தமது இருப்பிடங் கொண்டு வந்தனர். அம்மகவு பாலுக்கு அழ, மாவு கரைத்த நீரைக் கொடுத்தனள். அம்மகவு
அதனை உண்ணாது கதறியழ, தாய் தந்தையர்
வருந்தி சிவ சந்நிதியில் பிள்ளையைக் கிடத்தினர். அக்குழந்தை சிவலிங்கப்
பெருமான்பால் பால் வேண்டி அழ, அடியவர்க்கு அருளும்
அண்ணல், அருள் சுரந்து, இனிய பாற்கடலையே உணவாக, பால் நினைந்து அழும் போதெல்லாம்
நல்கினர்.
துன்பம் நீங்கி சிவயோக இன்பத்தில்
வியாக்கிரபாதர் நிலைத்திருக்குங்கால், இறைவன்
தேவதாரு வனத்தில் இருடிகள் பொருட்டு நிகழ்த்திய ஆனந்த நடனத்தின் வரலாறு தமது
அகக்கண்களுக்கு வந்து தோன்ற, ஐயன் அருள் நடனம்
புரியுங்கால், அத் தேவதாரு
வனத்தில் அடியேன் இருக்கப் பெறாமல் இவ்விடத்தில் இருக்கப் பெற்றனனே! ஆண்டவனது
திருவருள் நடனத்தை யான் காணுமாறு எவ்விதம்? என்று மிகவும் உள்ளங் கசிந்துருகி நிற்ப, `இத் தில்லையே இந் நிலவுலகதித்திற்கு
நடுநாடியாய் இருத்தலால், இதன் கண்ணேதான்
ஆண்டவன் என்றும் ஐந்தொழிற் கூத்து நிகழ்த்துவன், ஆதலால் இத்தில்லைத் தலத்தின்கண் யான்
புறத்தேயும், அத்திருநடனத்தைக்
காணப் பெறுவேன்” என்று தவக் காட்சியால் உணர்ந்து, அவிடத்திலேயே வழிபாடு புரிந்து
கொண்டிருந்தார்.
தேவதாரு வனத்தின்கண் இருந்த
நாற்பத்தெண்ணாயிரம் முனிவரரும் மீமாஞ்சை நூல் கோட்பாட்டின்படி கன்மமே பலனை நல்கும். பலனை நல்குவதற்கு
இறைவன் வேறு ஒருவன் வேண்டுவதில்லை என்பவை முதலிய கொள்கைகளை உடையாராய் நிற்ப, அன்னார் செருக்கை அகற்றி நல்வழி தருமாறு
திருவுளங் கொண்டு சிவபெருமான் திருமாலோடு அவ்வனத்திற் சென்று அம்முனிவரது
தவத்தையும் அவர் மனைவியரது கற்பையும் அழித்தனர். முனிவர் தெளிந்து புலி, யானை, பாம்பு, மழு முதலியவைகளை சிவன்மேலேவ, அவைகளை ஆபரணமாகவும் ஆடையாகவுங் கொண்டார்.
முயலகனையும் பல மந்திரங்களையும் ஏவ மந்திரங்களைச் சிலம்புகளாக அணிந்து முயலகன்
மீது பயங்கர நடனத்தைப் புரிந்தனர். அரனாரது கொடுங்கூத்தைக் கண்ட முனிவரரும்
தேவரும் அஞ்சி அபயம்புக இறைவன் அக்கொடிய நடனத்தை மாற்றி ஆனந்தத் தாண்டவஞ்
செய்தனர். முனிவரரது ஆணவ வலிகளெல்லாம் தம் திருவடிக் கீழ் கிடக்கும் முயலகன்பால்
வந்தொடுங்க அருள் செய்துமறைந்தனர்.
பின்னர் நாராயணர் தம் இருக்கை சேர்ந்து
இறைவன் செய்தருளிய ஆனந்தக் கூத்தை நினைந்து பெருங்களிப்பால் கண் துயிலாதிருந்து
தமது அணையான ஆதிசேடர்க்கு அத் திருநடனத்தின் திறத்தை விளம்ப, ஆதிசேடர் அதனைக் கேட்டு இறைவன்
திருநடனத்தைக் காணும் விழைவு மேற்பட்டு கண்ணீர் ததும்பி நிற்க, அது கண்ட மதுசூதனர் “நீர் இறைவனுக்கு
அன்பராயின்மையின் இனி நீர் தவம் புரிதலே இயல்பு” என்று விடை தந்து அனுப்ப, ஆதிசேடர் கயிலைமலைச் சார்ந்து அம்மலைக்கு
அருகில் சிவபெருமானை நினைத்துப் பெருந்தவம் ஆற்றினர். அவர் முன் முக்கண் மூர்த்தி
தோன்றி, “அன்ப! யாம் தேவதாரு
வனத்தின் கண் திருநடனம் புரிகையில் அவ்விடம் நிலத்திற்கு நடு அன்மையின், அஃது அசைந்தது. ஆதலால் அருட் கூத்தை
ஆங்கு இயற்றாது விடுத்தோம். இப்போது இங்கு அதனை இயற்றுதற்கும் இது தக்க இடமன்று.
அதனைச் செய்தற்குரிய தில்லை மன்றத்தின்கண்ணே நமது ஐந்தொழில் ஆனந்த நடனம் என்றும்
நடைபெறா நிற்கும். அஃது ஏனெனில் உடம்பும் உலகமும் அமைப்பில் ஒப்பனவாம். உடம்பின் உள்ளோடும்
இடை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளில் சுழுமுனை நாடி உடம்பின் நடுவிலோடும்.
அங்ஙனமே இந்நிலத்திற்குச் சுழுமுனை நாடியும் தில்லைக்கு நேரே ஓடும். உடம்பின்கண்
அந்நடு நாடியின் நடுவே விளங்கும் இதயத் தாமரையினுள் ஞான ஆகாசத்திலே யாம் ஓவாது
அருள் நடனம் புரிவது போலவே, புறத்தே
தில்லைத்தலத்தில் சிவலிங்கத்திற்குத் தெற்கேயுள்ள அருள் அம்பலத்தின்கண் என்றும்
இடையறாது திருநடனம் இயற்றுவோம். அதனை அங்கே காணும் ஞானக்கண்ணுடையார் பிறவிப்
பெருங்கடலைத் தாண்டுவர். ஆதலால், நீ இவ்வுருவை ஒழித்து, அத்திரி முனிவர் மனைவியிடத்தே
முன்னொருகால் ஐந்தலைச் சிறு பாம்பாய் வந்தனையன்றோ? அவ்வுருவத்தினையே எடுத்து தில்லைத்
தலத்தின்கண் சென்று இருப்பாயாக. அங்கு நின்னைப்போல் திருநடன தரிசனங் காண விழைந்து
தவமியற்றும் வியாக்ரபாத முனிவனுக்கும் நினக்கும் தைப்பூசத்தன்று சிற்சபையில்
திருநடனத்தைக் காட்டி அருள்வோம்” என்று உரைத்து மறைந்தருளினர். பதஞ்சலியார் இறைவன்
திருமொழிப்படியே தில்லவனஞ் சேர்ந்து புலிப்பாதருடன் அளவளாவி அருந்தவமியற்றி
நின்றனர். குன்றவில்லி அவ்விரு முனிவரருக்கும் குறித்த நாளில் திருநடனம்
புரிந்தருளினர்.
வழிவழி
அடியவர் திருக் குருந்தடி அருள்பெற அருளிய குருநாதர் ---
கல்லாலின் கீழிருந்து சனகாதி
நால்வர்களுக்கும் உபதேசித் தருளியவாறு,
சிவபெருமான் மண்ணுலகத்தில் திருப்பெருந் துறையில் குருந்தமரத்தின் கீழ் குரு
மூர்த்தியாக எழுந்தருளி மாணிக்கவாசகருக்கு உபதேசித்தருளின அருட்பெருந் திறத்தைக்
குறிப்பிட்டனர்.
வாதவூரருக்கு உபதேசம்
பாண்டிவள நாட்டின்கண் வாயுபகவான்
வழிபட்ட தன்மையால் வாதவூர் என்னும் பெயர் பெற்ற திருத்தலத்தில் மானமங்கலத்தார்
மரபிலே ஆமாத்தியர் குலத்து சிவகணத் தலைவரொருவர் வந்து உதித்தனர். அவர் பெயர்
“வாதவூரர்” என்பர்.
அவர் பதினாறாண்டு நிரம்பு முன்னரே கலைகள் முழுதும் ஒருங்கே ஓதியுணர்ந்தார். அவர்
வெற்றியைப் பாண்டியன் கேட்டு அவரை வரவழைத்து அவருக்குத் “தென்னவன் பிரமராயன்” எனப்
பட்டப் பெயர் சூட்டி, மந்திரித் தொழிலில்
இருத்தினன். அவர் கலை வன்மையாலும் சிலை வன்மையாலும் சிறந்து அமைச்சர்
தலைவனாயிருந்து பாவக்கடலினின்றும் தப்பி முத்திக்கரை சேரும் உபாயத்தை
நாடியிருந்தனர். பாண்டியன் குதிரைகளை வாங்கும் பொருட்டு அளப்பரும் நிதிகளை அளித்தனுப்பினன்.
பாண்டியன் பால் விடைபெற்ற வாதவூரார் திருவாலயம் சென்று மீனாட்சியம்மையையும்
சொக்கலிங்கப் பெருமாளையும் வழிபட்டு பாண்டியன் செல்வம் நல்வழியில் செலவழிய
வேண்டுமென்று வணங்கி, வேதியர் ஒருவர்
எதிர்ப்பட்டு அளித்த திருநீற்றை அணிந்துகொண்டு, நற்குறியென்று வந்து சேனைகள் சூழப் புறப்பட்டு
திருப்பெருந்துறையை அடைந்தார். அத்தலத்தைச் சாரும் முன்னரே, காயமும் நாவும் நெஞ்சும் ஒரு வழிபட்டு
பேரன்பு மிகுதலால் கண்ணீர் மல்கிக் கசிந்துருகி சிரமிசைக் கரங்குவித்து மயிர்
சிலிர்த்து அனலில் பட்ட மெழுகென உருகினார். பண்டைத் தவப்பயன் கைகூடப் பெற்ற
வாதவூரர் அதிசயம் உற்று, “இத்தலத்தை அணுகுத் முன்னரே
பேரன்பு முதிர்ந்தது. சிவத் திருத்தலங்களில் இதனை ஒத்தது வேறில்லை; இங்கு வந்து சேர்தற்கு என்ன மாதவஞ்
செய்தோமோ? என்று தம்முள்
நினைத்து உடன் வந்தாரை நோக்கி “ஆடி மாதத்தில் குதிரை வருதல் இல்லை. ஆவணி
மாதத்தில்தான் குதிரைகள் வந்திறங்கும்; நானே
அவைகளைக் கொண்டு வருவேன். பாண்டியற்கு இதனை உணர்த்துமின்” என்று அன்னாரைப் போக
விடுத்தார்.
பின்னர் வாதவூரர் பொய்கையில் நீராடித்
திருநீறு தரித்து, சிவபெருமானை வணங்குதற்குத்
தனியே ஆலயத்துள் புகுந்தார். அத்திருக்கோயிலினுள் ஒரு குருந்த மரத்தின் நிழலில்
தாராகணங்களால் சூழப்பெற்ற தண்மதி என்னும்படியாக, மாணவர் குழாம் சூழ
குருவடிவம் தாங்கி சிவபெருமான் வீற்றிருந்தனர். அத் தேசிகேசனைக் கண்ட திருவாதவூரர்
செயலிழந்து உடல் நடுங்கி எட்டு அங்கங்களும் நிலமிசை தோயப் பன்முறை வணங்கி விண்மாரி
என்ன கண்மாரி பொழிந்த வண்ணமாக நின்றனர். தன்வசமிழந்து நின்ற மெய்யடியாரைக்
கண்ணுதற் கடவுள் கண்டு திருநோக்கஞ் செய்து அருகில் அழைத்து, முறைப்படி தீட்சை முதலியன செய்து
ஐந்தெழுத்தை உபதேசித்து நல்லருள் பாலித்தனர்.
அன்னவ
ரொல்கி மெல்ல அஞ்சியஞ் சலியிற் செல்லப்
பன்முறை
முறுவல் கூர்ந்து பாவனை செய்து பண்பில்,
தன்னடி
சூட்டி, நாமஞ் சாத்தி, ஆசாரம் பூட்டிச்
சின்மய
அஞ்செழுத்தைச் செவிப்புலத்து உபதேசித்தான்.
--- திருவிளையாடல்
(புலியூர் நம்பி)
திருக்குழந்தையும்..................பெரியவ ---
தனக்கு உவமையில்லாத் தனிப்பெருந் தலைவராகிய
சிவபெருமானுக்குத் திருக்குமாரராக வந்ததாலும், குருமூர்த்தியாக வந்து மணிவாசகருக்கு
உபதேசித்தருளிய அப்பரமாசிரியருக்குக் குருநாதராக நின்று உபதேசித்ததாலும் "பெரியவ"
என்றனர். நம் குகேசன் வடிவில் இளையோனும் அறிவிற் பெரியோனும் ஆவர்.
“ஏடவிழ் கடப்பமலர்
கூதளம் முடிக்கும் இளை-
யோனும் அறிவில் பெரிய மேன்மைக்காரனும்” ---திருவகுப்பு
கருத்துரை
சப்த இருடிகளுக்கும் குருநாதரே! சரவணபவ!
குக! இன்ப வடிவினரே! அறுமுகக் கடவுளே! செவ்வேளே! என்று செந்தமிழால் இலக்கண
முறைப்படி இயற்றிய பாமாலைகளை அணிபவரே! சிற்றம்பலத்தில் திருநடனம் இயற்றுபவரும், வாதவூரடிகளுக்குக் குருந்த மரத்தடியில்
உபதேசித்து அருளியவருமான சிவபெருமானுக்குப் புதல்வரெனவும் அவருக்குக்
குருநாதரெனவும் எழுந்தருளிய பெருமையிற் சிறந்தவரே! அவமே பெண் மயக்கில் ஆழ்ந்து
வருந்தும் தன்மையை என்று நீங்குவனோ?
No comments:
Post a Comment