0005. நினது திருவடி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

விநாயகர் துதி
நினது திருவடி

முருகா! உம்மை எப்போதும் தியானிக்கும் அறிவைப் பெறும் பொருட்டு 
விநாயகரை வணங்குகின்றேன்.


தனன தனதன தத்தன தத்தன
     தனன தனதன தத்தன தத்தன
          தனன தனதன தத்தன தத்தன ...... தனதான


நினது திருவடி சத்திம யிற்கொடி
     நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
          நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ......நிகழ்பால்தேன்

நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
     நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
          நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்

மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
     மகர சலநிதி வைத்தது திக்கர
          வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக

மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
     வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
          வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே

தெனன தெனதென தெத்தென னப்பல
     சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
          திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை

செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
     நிரைய அரவநி றைத்தக ளத்திடை
          திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே
  
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
     துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
          டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
     இரண பயிரவி சுற்றுந டித்திட
          எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நினது திருவடி, சத்தி, மயில்,கொடி
     நினைவு கருதிடு புத்தி கொடுத்திட,
          நிறைய அமுதுசெய் முப்பழம், அப்பமும், ...... நிகழ்பால்,தேன்

நெடிய வளைமுறி, இக்கொடு, லட்டுகம்,
     நிறவில் அரிசி, பருப்பு, அவல், எள், பொரி
          நிகர்இல் இனி கதலிக்கனி வர்க்கமும், ...... இளநீரும்,

மனது மகிழ்வொடு தொட்ட கரத்து, ஒரு
     மகர சலநிதி வைத்த துதிக்கர,
          வளரும் கரிமுக ஒற்றை மருப்பனை ...... வலம்ஆக


மருவு மலர்புனை தொத்திர சொல்கொடு,
     வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு,
          வனச பரிபுர பொன்பத அர்ச்சனை ...... மறவேனே,

தெனன தெனதென தெத்தென் எனப்பல
     சிறிய அறுபதம் மொய்த்து உதிரப் புனல்,
          திரளும் உறுசதை, பித்தம் நிணக்குடல் ......செறிமூளை

செரும உதரம் நிரப்பு செருக் குடல்
     நிரைய அரவம் நிறைத்த களத்து இடை
          திமித திமிதிமி மத்தள் இடக்கைகள், ...... செகசேசே


எனவெ, துகுதுகு துத்து என ஒத்துகள்
     துடிகள் இடிமிக ஒத்து முழக்கிட
          டிமுட டிமுடிமு டிட்டிம் எனத்தவில் ......எழும்ஓசை

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
     இரண பயிரவி சுற்றும் நடித்திட
          எதிரும் நிசிசரரைப் பெலி இட்டுஅருள் ......பெருமாளே.


பதவுரை

         தெனன தெனதென தெத்தென என --– தெனன தெனதென தெத்தென என்ற ஒலியுடன்,

     பல சிறிய அறுபதம் மொய்த்த --- பல சிறிய ஈக்கள் மொய்த்துள்ள,

     உதிரப் புனல் --- உதிர நீரும்,

     திரளும் உறு சதை --- திரண்டுள்ள சதைகளும்,

     பித்த நிணக் குடல் --- பித்தம் நிறைந்த மாமிசக்குடலும்,

     செறி மூளை --- நெருங்கிய மூளையும்,

     செரும உதரம் நிரப்பு செருக் குடல் --- நிரம்பிய அவ் வயிற்றில் நிறைந்துள்ள பெரியக் குடலும்,

      நிரைய அரவம் நிறைத்த களத்து இடை --- வரிசையாகிய ஓசைகளும் நிறைந்த போர்க்களத்தின் நடுவில்,

     திமித திமி திமி மத்தள --- திமித திமி திமி என்று ஒலிக்கும் மத்தளமும்,

     இடக்கைகள் --- இடக்கை என்ற வாத்தியங்களும்,

     செக சேசே எனவே --- செக சேசே என்று ஒலிக்கவும்,

     துகு துகு துத்து என ஒத்துக்கள் --- ஒத்து என்ற ஊதுகுழல் துகு துகு துத்து என்று ஊதவும்,

     இடி மிக ஒத்து துடிகள் முழக்கிட --- இடியை நிகர்த்து உடுக்கைகள் ஒலிக்கவும்,

     டிமுட டிமு டிமு டிட்டிம் என தவில் எழும் ஓசை --- தவில் என்ற வாத்தியம் டிமுட டிமு டிமு டிட்டி என்று ஒலிக்கவும்,

     இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட --- பேய்கள் ஒன்றோடொன்று மாறுபட்டு கையிலே உள்ள பறைகளைக் கொட்டி முழக்கவும்,

     இரண பயிரவி சுற்றும் நடித்திட --– இரண பயிரவி என்ற தேவதை போர்க்களத்தில் சுற்றி நடனம் புரியவும்,

     எதிரும் நிசிசரரைப் பெலி இட்டு அருள் --- எதிர்க்கின்ற அரக்கர்களைக் கொன்று அருளிய,

     பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!

         நினது திருவடி --- தேவரீருடையத் திருவடிகளையும்,

     சத்தி --- வேலாயுதத்தையும்,

     மயில் --- மயிலையும்,

     கொடி --- சேவலையும்,

     நினைவு கருதிடு புத்தி கொடுத்திட --- அடியேன் மறவாமல் நினைவில் வைத்துத் தியானிக்கின்ற அறிவைத் தரும் பொருட்டு,

     நிறைய செய் அமுது --- நிரம்பச் செய்த அமுது,

     முப்பழம் --- மூன்றுவகையான கனிகள்,

     அப்பம் --- அப்பம்,

     நிகழ் பால் --- புதிய பால்,

     தேன் --- தேன்,

     நெடிய வளைமுறி --- நீண்டு வளைந்த முறுக்கு,

     இக்கொடு --- கரும்பு,

     லட்டுகம் --- இலட்டு,

     நிறை வில் அரிசி --- ஒளி நிறைந்த அரிசி,

     பருப்பு --- பருப்பு,

     அவல் --- அவல்,

     எள் --- எள்,

     பொரி --- பொரி,

     நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் --- ஒப்பில்லாத இனிமையான வாழைப் பழவகைகள்,

     இளநீரும் --- இளநீர் முதலிய இவைகளை,

     மனது மகிழ்வொடு தொட்ட கரத்து --- திருவுள்ளம் மகிழ்ச்சியுடன் தொடுகின்ற திருக்கரத்தையும்,

     ஒரு மகர சலநிதி வைத்த துதிக்கர --- ஒப்பற்ற கடலில் வைத்த தும்பிக்கையையும் உடைய;

     வளரு கரிமுக ஒற்றை மருப்பனை --- பெருமை வளர்கின்ற யானை முகமும் ஒற்றைக்கொம்பும் உடைய கணபதியை,

     வலமாக --- வலம் வந்து,

     மருவு மலர் புனை --- விநாயகருக்கென்று பொருந்திய பூக்களைப் புனைந்து,

     தொத்திர சொல் கொடு --- துதிப்பதற்குரிய சொற்களைக் கொண்டு துதித்து,

     வளர் கை குழை பிடி தொப்பண குட்டொடு --- தூக்கிய கைகளால் குழையுடைய காதைப் பற்றிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டும் சிரசில் குட்டிக்கொண்டும்,

     வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே ---  தாமரை யனையதும் பரிபுரம் என்ற ஆபரணத்தை யணிந்ததும் ஆகிய பொற்பாதத்தின் அர்ச்சனையை ஒருபோதும் மறக்க மாட்டேன்.


                                             பொழிப்புரை


         தெனன தென தென தெத்தெனன” என்று ஒலிக்கின்ற சிறிய ஈக்கள் பல மொய்க்கின்ற உதிரம், திரண்டுள்ள சதை, பித்த நிறைந்த குடல், நெருங்கிய மூளை, நிரம்பிய வயிற்றில் நிறைந்த பெருங்குடல், பெரிய சத்தம் இவைகள் நிறைந்த போர்க்களத்தில், திமித திமிதிமி என்று மத்தளம் ஒலிக்கவும், இடக்கை என்ற வாத்தியம் செக சே சே என்று ஒலிக்கவும், ஒத்து என்ற ஊது குழல் துகு துகு துத்தென்று ஒலிக்கவும், இடியைப்போல் உடுக்கை ஒலிக்கவும், தவில் என்ற வாத்தியம் டிமுட டிமு டிமு டிட்டி என்று ஒலிக்கவும், மாறுபட்ட பேய்கள் கைப்பறை கொட்டியாடவும், இரணபயிரவிச் சுற்றி நடிக்கவும், எதிர்த்துப் போரிட்ட அவுணர்களைக் கொன்ற பெருமிதமுடைய முருகக் கடவுளே!

         தேவரீருடையத் திருவடியையும், வேலையும், மயிலையும், சேவலையும் நினைந்து ஒழியாது தியானிக்கின்ற அறிவை விநாயகரிடம் பெறும் பொருட்டு, நிறைய அமுது, மா, வாழை, பலா என்ற முப்பழங்கள், அப்பம், பால், தேன், நீண்டுவளைந்த முறுக்கு, கரும்பு, இலட்டு, ஒளிநிறைந்த அரிசி, பருப்பு, எள், பொரி, ஒப்பில்லாத இனிய பழ வகைகள், இளநீர் என்ற இவைகளை மன மகிழ்ச்சியுடன் தொட்டு உண்ணுகின்ற திருக்கரத்தையும், ஒப்பற்ற மகராலயமாகியக் கடலைத் தொட்டு உண்ட தும்பிகையையும் உடைய பெருமை வளர்கின்ற யானை முகமும் ஒற்றைக் கொம்பும் உடைய விநாயகமூர்த்தியை வலஞ் செய்து, அவருக்கென்று உரிய மலர்களைத் தூவி, உயர்ந்த சொற்களால் துதி செய்து, கரங்களைத் தூக்கி குழைக் காதுகளைப் பற்றித் தோப்புக் கரணம் போட்டு சிரசில் குட்டிக்கொண்டு, அவருடைய பரிபுரம் அணிந்த தாமரைமலர் போன்ற திருவடிகளின் அர்ச்சனையை மறக்கமாட்டேன்.


                                                          விரிவுரை

நினது திருவடி ---

     இப்பாடல் முருகவேளை முன்னிலைப்படுத்தி விநாயகரை வரம் குறித்துப் பாடப் பெற்றது.

     முருகவேளுடையத் திருவடியை ஒருபோதும் மறவாதிருக்க வரம் வேண்டுகின்றார்.

சக்தி ---

     சக்தி --- வேல். வேல் என்பது ஞானசத்தி.

சத்தியின் வடிவு ஏது என்னில் தடையில்லா ஞானமாகும்”
                                                                            --- சிவஞான சித்தியார்.

ஆகவே ஞானமே வேல்.


மயில் கொடி ---

     வாகனமாகிய மயிலையும், கொடியாகிய சேவலையும் எப்போதும் நினைக்க வேண்டும்.

     மயில் --- விந்து; சேவல் --- நாதம்.

நினைவு கருதிடு புத்தி கொடுத்திட ---

     சதா மறவாமல் முருக சிந்தனை செய்யும் அறிவை அருள் புரிகின்றவர் விநாயகர். அத்தகைய அறிவைக் கரிமுகனாரிடம் பெறும்பொருட்டு அவரை அடியேன் வழிபடுகின்றேன் என்று அடிகளார் கூறுகின்றார்.

நிறைய அமுது....இளநீர் ---

     மனிதனுக்குக் குணங்கள் மூன்று; முக்குணங்களும் உணவினாலேயே அமைகின்றன. அவல் பொரி அப்பம் பழம் பால் தேன் முதலிய உணவுகள் சத்துவ குணத்தை வளர்க்கின்றன.

     காரம், புளி, ஈருள்ளி, வெங்காயம்,முள்ளங்கி முதலிய உணவுகள் ராஜஸ குணத்தை வளர்க்கின்றன.

     பழையது, பிண்ணாக்கு, மாமிசம் முதலிய உணவுகள் தாமத குணத்தை வளர்க்கின்றன.

     தூக்கம், சோம்பல், மயக்கம், ஆலஸ்யம் முதலியன தாமத குணத்தால் வருவன.

     கோபம், டம்பம், வீண்பெருமை, அகங்காரம் முதலியன ராஜஸ குணத்தால் வருவன.

     சாந்தம், அன்பு, அடக்கம்,பொறுமை, கருணை முதலியன சத்துவ குணத்தால் வருவன.

     சத்துவ குணத்தால் தூய அறிவுதோன்றும். அறிவின் சொரூபம் விநாயகர். அவருக்கு சத்துவகுணப் பொருள்களை நிவேதிப்பதனால் சாந்தமும் நல்லறிவும் நமக்கு உண்டாகும்.

மக ரசலநிதி வைத்த துதிக்கர ---

     ஒரு காலத்தில் மஹாப்பிரளயம் ஏற்பட்டு உலகெங்கும் கடல் பொங்கி எழுந்த பொழுது விநாயகப் பெருமான் தமது தும்பிக்கையினால் கடல் நீரை வற்றக் குடித்து உலகத்தை உய்வித்தார். அதனால் அவருக்கு பிரளயங் காத்த பிள்ளையார் என்ற பேர் உண்டாயிற்று.

மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு ---

     இறைவனைப் பூமாலைகொண்டும் பாமலை கொண்டும் வழிபட வேண்டும்.

நாவழுத்தும் சொல்மலரோ நாள்உதிக்கும் பொன்மலரோ
 தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே”

என்கிறார் தாயுமானார்.

வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு ---

     இரு கரங்களையும் மாற்றிக் குழையணிந்த காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் பிள்ளையார் திருமுன் இடவேண்டும். சிரசில் குட்டிக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு தன்மையுங் கணபதிக்கே உரியன.

     கஜமுகாசுரன் மிக்க வலிமையுடையவன்; சிவபெருமானை வேண்டிப் பெருந்தவம் புரிந்து, அவரிடம் விலங்குகளாலும், பூதங்களாலும், தேவர்களாலும், மூவர்களாலும்,

     அத்திரங்களாலும், சத்திரங்களாலும்,கனலாலும், புனலாலும், பிறவற்றாலும் மரணமில்லாமல் இருக்கவேண்டும் என்று வரம் பெற்றான். வரம் பெற்ற அவன் பெருந்தருக்கு உற்றான். மாலயனாதி வானவர்கள் யாவரையும் அழைத்துத் தண்டித்து காலையும் மாலையும் தன் முன்னின்று இரு செவிகளையும் பிடித்துக் கொண்டு ஆயிரம் தோப்புக் கரணம் போடுவித்தான்.

     கஜமுகனால் துன்புற்ற அமரர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். உமாதேவியாரும் சிவபெருமானும் கைலை மலையில் உள்ள மந்திர சித்திர சாலைக்குச் சென்றனர். அங்கு எழுதியுள்ள ஏழு கோடி மந்திரங்களுக்குள் சமஷ்டி பிரணவம், வியஷ்டி பிரணவம் என்ற இரு பிரணவங்களையும் உமையம்மையாரும் சிவமூர்த்தியும் பார்த்தருளினார்கள். அந்த அருட் பார்வையால் இரண்டு பிரணவங்களும் ஒன்றுபட அவற்றின் இடையிலிருந்து பிரணவ வடிவுடன் விநாயகப் பெருமான் அவதரித்தனர்.

     சிவபெருமான் கஜமுகனைச் சங்கரிக்குமாறு கணபதிக்குக் கட்டளையிட்டருளினார். பரிவாரங்கள் சூழ விநாயகர் சென்று கஜமுகனுடைய சேனைகளை யெல்லாம் கொன்றனர். கஜமுகன் எல்லா ஆயுதங்களாலும் இறவாத தன்மையைக் கண்டு தம்முடைய ஒரு கொம்பை முறித்து ஏவினார். அது சென்று கஜமுகனைப் பிளந்தது. அவன் பெருச்சாளி வடிவு கொண்டு எதிர்த்தனன். விநாயகப் பெருமான், அவன் மீது கருணைமழைப் பொழிந்து அவனுடையத் தீமையை யகற்றி, வாகனமாகக் கொண்டருளினார்.

     மாலயனாதி வானவர்கள் துன்பந்தவிர்ந்து இன்பம் அடைந்து விநாயகமூர்த்தியை வணங்கி நின்றார்கள். “வானவர்களே! என்ன வரம் வேண்டும்?” என்று விநாயகர் கேட்டருளினார். தேவர்கள் “இடர் தீர்த்த இபமுகத்து எந்தையே! பன்னெடுங் காலமாக கஜமுகனுக்கு முன் நாங்கள் தோப்புக் கரணம் இட்டோம். அவனை அழித்து அருள் புரிந்தீர். இனி தங்கள் திருமுன் நாங்கள் தோப்புக்கரணம் போடுவோம். அதுபோல் தோப்புக்கரணம் போட்டவர்கள் யாவரேயாயினும் இடர் தீர்த்து ஆண்டருள் புரியும்” என்று வேண்டினார்கள். கணநாதர் “உங்கள் விருப்பம்போல் புரியுங்கள்; ஆயிரம் தோப்புக்கரணம் போட வேண்டாம். மூன்று முறையே போதும். அங்ஙனம் புரிந்தார்களது இடர் நீங்கும்” என்று வரமளித்தனர். அதனால் விநாயகப் பெருமான் திருமுன் தோப்புக்கரணம் போடவேண்டும்.

     அகத்தியர் காவிரி நதியைச் சிவபெருமானிடம் பெற்றுக் கமண்டலத்தில் அடக்கிக்கொண்டு தென்திசையை நோக்கிப் புறப்பட்டார். குடகு மலையில் இருந்து சிவபூஜை செய்துகொண்டிருந்தார். சீர்காழியில் திருநந்தனவனம் வைத்து சிவபூஜை செய்து கொண்டிருந்தான் இந்திரன். மழையின்றிப் பூங்கா வாடியது. நாரதமுனிவர் இந்திரனை அணுகிக் காவிரியைத் தருவிக்குமாறு கூறினார். இந்திரன் சுந்தர விநாயகரை வழிபட்டு வேண்டினான். விநாயகர் காக உருவுடன் சென்று கமண்டலத்தில் அமர்ந்து கவிழ்த்தனர். அது கண்ட அகத்தியர் சீறிப் பாய்ந்தார். விநாயகர் ஓர் அந்தணச் சிறுவனாக ஓடினார். அகத்தியர் இரு கரங்களாலும் குட்டுவதற்காக ஓடி நெருங்கினார். விநாயகர் ஐங்கரக் கடவுளாகக் காட்சியளித்தார்.. அகத்தியர் அஞ்சி அவரைக் குட்ட ஓங்கிய கரங்களால் தனது சென்னியில் ஓங்கிப் பலமுறைக் குட்டிக்கொண்டனர். விநாயகர் அவர் கரத்தைப் பற்றி அருள்புரிந்து, “அகத்தியனே, என்ன வரம் வேண்டும்? கேள்” என்றனர். அகத்தியர் “ஐங்கரக் கடவுளே! தேவரீருடைய சந்நிதியில் சிரத்தில் குட்டிக் கொண்டு வழிபட்டோர்க்கு அறிவு நலம் பெருக வேண்டும்” என்று வரம் கேட்டனர். அவ்வண்ணமே அருள் புரிந்தார். ஆகவே விநாயகப் பெருமானுடைய சந்நிதியில் தோப்புக்கரணமிட்டுக் குட்டிக் கொண்டவர் இஷ்ட சித்திகள் பெறுவர்.

     அன்றியும் அறிவின் இருப்பிடம் புருவநடு ஆதலால், சிரசில் குட்டிக் கொள்வதனால் அறிவு விளக்கமுறும். அறிவு வடிவம் கணபதியாதலால் அவர் திருமுன் புரிதல் இன்றியமையாதது.

     பின்னே உள்ள நான்கு அடிகள் முருகப் பெருமான் சூராதி அவுணர்வுகளுடன் போர் செய்த போர்க்களத்து வர்ணனையாகும்.

                                                       கருத்துரை

சூராதி அவுணர்களைக் கொன்ற முருகக் கடவுளே! உம்மை எப்போதும் தியானிக்கும் அறிவைப் பெறும் பொருட்டு விநாயகரை வணங்குகின்றேன்.

                 

2 comments:

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...