0002. உம்பர் தரு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

உம்பர் தரு (விநாயகர் துதி)

விநாயகப் பெருமானே! 
அடியேன் உயிர்க்கு ஆதரவு அருள்வீர்


தந்ததனத் தானதனத் ...... தனதான
     தந்ததனத் தானதனத் ...... தனதான


உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
     ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே

தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

உம்பர்தரு, தேநு, மணிக் ...... கசிவு ஆகி,
     ஒண்கடலில் தேன் அமுதத்து ...... உணர்வு ஊறி,

இன்ப ரசத் தே பருகிப் ...... பலகாலும்,
     என்தன் உயிர்க்கு ஆதரவு உற்று ...... அருள்வாயே.

தம்பி தனக்காக வனத்து ...... அணைவோனே!
     தந்தை வலத்தால் அருள், கைக் ...... கனியோனே!

அன்பர் தமக்கு ஆன நிலைப் ...... பொருளோனே!
     ஐந்துகரத்து ஆனைமுகப் ...... பெருமாளே.



பதவுரை


         தம்பி தனக்காக --- தம்பியாகிய முருகவேள் பொருட்டாக

         வனத்து அணைவோனே --- கானகத்தில் யானை வடிவம் கொண்டு சென்றவரே!

         தந்தை வலத்தால் --- தந்தையாராகிய சிவபெருமானை வலம் செய்ததனால்

         அருள் கைக் கனியோனே --- வழங்கிய கரத்தில் ஏந்திய கனியை உடையவரே!

         அன்பர் தமக்கு ஆன --- அன்புடையோர்களுக்கு உரிமையான

         நிலைப் பொருளோனே --- நிலைத்த பரம்பொருளாக விளங்குபவரே!

         ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே --- ஐந்து திருக்கரங்களையும் யானை முகத்தையும் கொண்ட பெருமையின் மிகுந்தவரே! 

         உம்பர் தரு --- விண்ணுலகிலுள்ள கற்பக மரம் போலவும்,

         தேனு --- காமதேனுவைப் போலவும்,

       மணி --- சிந்தாமணியைப் போலவும்,

         கசிவாகி --- என் மனமானது கசிந்து அன்பு உடையதாகியும்,

         ஒண்கடலில் தேன்அமுது உணர்வு ஊறி --- ஒளிபெற்ற பாற்கடலில் பிறந்த இனிய அமுதம்போன்ற ஞான உணர்ச்சி என் உள்ளத்தில் ஊற்றெடுத்தும்,

         இன்ப ரசத் தே பருகிப் பலகாலும் --- சிவபோகமாகிய பேரின்ப வெள்ளத்தை அடியேன் பலகாலும் பருகியும் மகிழுமாறு

         எந்தன் உயிர்க்கு ஆதரவு உற்று அருள்வாயே --- அடியேனுடைய உயிருக்கு ஆதரவு வைத்து திருவருள் புரிவீராக.


பொழிப்புரை


         தம்பியாகிய முருகவேள் பொருட்டாகக் கானகத்தில் யானை வடிவம் கொண்டு சென்றவரே!

         தந்தையாராகிய சிவபெருமானை வலம் செய்ததனால்
வழங்கிய கரத்தில் ஏந்திய கனியை உடையவரே!

         அன்புடையோர்களுக்கு உரிமையான நிலைத்த  பரம் பொருளாக விளங்குபவரே!

         ஐந்து திருக்கரங்களையும் யானை முகத்தையும் கொண்ட பெருமையின் மிகுந்தவரே! 

         விண்ணுலகிலுள்ள கற்பக மரம் போலவும், காமதேனுவைப் போலவும், சிந்தாமணியைப் போலவும், என் மனமானது கசிந்து அன்பு உடையதாகியும், ஒளிபெற்ற பாற்கடலில் பிறந்த இனிய அமுதம்போன்ற ஞான உணர்ச்சி என் உள்ளத்தில் ஊற்றெடுத்தும், சிவபோகமாகிய பேரின்ப வெள்ளத்தை அடியேன் பலகாலும் பருகியும் மகிழுமாறு அடியேனுடைய உயிருக்கு ஆதரவு வைத்து திருவருள் புரிவீராக.


விரிவுரை

உம்பர் தரு ---

     தேவலோகத்தில் ஐந்து மரங்கள் இருக்கின்றன. அவை, கற்பகம், அரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம், சந்தானம் என்பவையாம்.  இவைகளில் நினைத்ததைத் தரும் ஆற்றல் உடையது கற்பகம்.  கற்பகம் போல் நினைத்த மாத்திரத்தில் குறிப்பறிந்து கொடுக்கும் இயல்பு நம்மிடம் வேண்டும்.

தேனு ---

     காமதேனு. இது அமிர்தத்துடன் பிறந்தது. கேட்டதைத் தரும் இயல்பு உடையது. வசிட்டாதி மகரிஷிகட்கு உதவுவது.  இதுபோல், வறியவர்க்கு வழங்கும் இயல்பும் நம்பால் அமையவேண்டும்.

மணி ---

     சிந்தாமணி. இது சிந்தித்ததைத் தரும் சிறப்பு உடையது.  இதுபோல் நாமும் மற்றவர்கள் சிந்தித்ததை அறிவின் நுட்பத்தால் அறிந்து கூடுமானவரை கரவாமல் கொடுக்கவேண்டும்.

ஒண் கடலில் தேன் அமுதத்து உணர்வு ஊறி ---

     பாற்கடல் வெண்மையான ஒளி வீசிக்கொண்டு விளங்கும்.  அக் கடலில் தோன்றிய அமுதம் போன்ற இனிய மெய்ஞ்ஞான உணர்ச்சி ஊற்றெடுக்க வேண்டும்.

இன்ப ரசத் தே பருகி பலகாலும் ---

     ஞான உணர்ச்சியால் பேரின்ப நலம் விளையும். அத் தேன் போன்ற இன்ப ரசத்தைப் பலகாலும் பருகி சிவமயமாக விளங்க வேண்டும்.

என்தன் உயிர்க்கு ஆதரவு உற்று அருள்வாயே ---

     அடியேனுடைய உயிருக்கு உறுதுணையாக உதவி செய்து அருள் புரிவீராக.

தம்பி தனக்காக வனத்து அணைவோனே ---

     முருகப் பெருமான் வள்ளநாயகிக்கு அருள் புரியும் பொருட்டு வள்ளிமலைக்குச் சென்றார். அந்த ஆன்மாவுக்குப் பக்குவம் விளைவிக்கும் பொருட்டு, வேடனாகவும், வேங்கை மரமாகவும், வேந்தன் மகனாகவும், கிழவேதியனாகவும் பல அற்புதத் திருவிளையாடல்கள் புரிந்தார்.

     வள்ளநாயகியின் பால் இருந்த பந்தபாசம் விலகும் பொருட்டு விநாயகரை யானை வடிவாக வருமாறு நினைந்தார். தம்பியின் வேண்டுகோளுக்கு இணங்கி விநாயகர் ஓங்கார யானையாக வடிவெடுத்து அவ் வனத்தில் சென்றார்.

     யானையக் கண்டவுடன் வள்ளி பிராட்டியார், உயிருக்கு இறுதி வரும்போது உறுதியளிப்பார் யாரும் இல்லை.  தாய் தந்தை உடன் பிறந்தார் என்ற அனைவரும் உதவி செய்கிலர் என்று எண்ணி, பற்றற்று, பற்றற்ற பரமனைப் பணிந்தாள்.

தந்தை வலத்தால் அருள் கைக் கனியோனே ---

     நாரதர் தவத்தால் பெற்ற மாதுளங்கனியை சிவமூர்த்தியின் திருமுன் வைத்து வணங்கினார்.

     அக் கனியை ஆனைமுகக் கடவுளும், ஆறுமுகக் கடவுளும் கேட்டனர்.  அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வருபவனுக்கு இக் கனி என்றார் சிவபெருமான்.

     எல்லா உலகங்களும் சிவத்துக்குள் அடக்கம் என்று கருதி, தந்தையை வலம் வந்து கனி பெற்றார் விநாயகர். இவ் வரலாற்றின் நுட்பம்,  இறைவனுக்குள் எல்லாம் அடங்கி இருக்கின்றன. இறைவன் எல்லாப் பொருளிலும் இருக்கின்றான்.  ஆதலால், விநாயகமூர்த்தி சிவத்துக்குள்ளே எல்லாவற்றையும் பாரத்தருளினார்.  எல்லாவற்றுக்குள்ளும் சிவத்தை முருகவேள் பார்த்து அருளினார்.

ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே ---

     கணபதி, ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐம்பெரும் தொழில்களை ஐந்து திருக்கரங்களால் புரிகின்றார். ஆனைமுகம் ஒங்கார வடிவை உணர்த்துகின்றது.

பண்ணியம் ஏந்தும் கரம் தனக்கு ஆக்கி,
     பனிநிலா மருப்பு அமர் திருக்கை
விண்ணவர்க்கு ஆக்கி, அரதனக் கலச
     வியன்கரம் தந்தையர்க்கு ஆக்கி,
கண்ணில் ஆணவ வெங்கரி பிடித்து அடக்கிக்
     கரிசினேற்கு இருகையும் ஆக்கும்
அண்ணலை தணிகை வரைவளர் ஆபச்
     சகாயனை அகம்தழீஇக் களிப்பாம்.   --- தணிகைப் புராணம்.

எழுத்தாணி ஏந்தியகை --- படைத்தல்
மோதகம் - அமுதகலசம் --- காத்தல்
அங்குசம் --- அழித்தல்
பாசம் --- மறைத்தல்
தும்பிக்கை - அருளல்

மோதகம் --- தனக்காக
கும்பம் ஏந்திய கை --- மாதா பிதா வழிபாடு
யானைக் கொம்பு --- தேவர்களுக்கு
பாசம் அங்குசம் --- அடியார்களுக்கு.

     மோதகத்தைத் தாங்கிய திருக்கரத்தைத் தம் பொருட்டு ஆக்கியும், பிறைச்சந்திரன் போலும் கொம்பு பொருந்திய திருக்கரத்தைத் தேவர்கள் பொருட்டாக்கியும், இரத்தின கும்பம் வைத்திருக்கும் பெரிய திருக்கரத்தை அம்மையப்பரை வழிபடுதற்கு ஆக்கியும், சிறிதுங் கண்ணோட்டமில்லாத ஆணவமலமாகிய கொடிய யானையைப் பிடித்தடக்கும் பொருட்டு அம்மலக் குற்றத்தையுடைய அடியேனுக்கு இரண்டு திருக்கரங்களையும் ஆக்குந் தலைவராகிய, தணிகாசலத்தின்கண் நித்திய வாசஞ்செய்யும் ஆபச்சகாயன் என்னுந் திருப்பெயரையுடைய விநாயகப் பெருமானை மனத்தால் தழுவிக் களிப்படைவாம்.


கருத்துரை

விநாயகப் பெருமானே, அடியேனுடைய ஆன்மாவுக்கு ஆதரவு காட்டி அருள் புரிக.

        



No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...