0003. பக்கரை விசித்ரமணி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பக்கரைவி சித்ரமணி (விநாயகர் துதி)

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான


பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
     பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
     பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
     சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
     செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
     எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
     ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
     விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
     வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


பக்கரை, விசித்ர மணி, பொற்கலணை இட்டநடை,
     பட்சி எனும்  உக்ரதுர ...... கமும், நீபப்

பக்குவ மலர்த்தொடையும், அக்குவடு பட்டு ஒழிய,
     பட்டு உருவ விட்டு அருள் கை ...... வடிவேலும்,

திக்கு அது மதிக்கவரு குக்குடமும், ரட்சைதரு
     சிற்றடியும், முற்றிய பன் ...... இருதோளும்,

செய்ப்பதியும் வைத்து, உயர் திருப்புகழ் விருப்பமொடு
     செப்பு என எனக்கு  அருள்கை ...... மறவேனே.

இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்புடன், நெய்,
     எள்,பொரி, அவல், துவரை ...... இளநீர், வண்டு

எச்சில், பயறு, அப்ப வகை, பச்சரிசி, பிட்டு, வெள்ள-
     ரிப்பழம், இடிப் பல்வகை, ...... தனிமூலம்,

மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக்கொள், ஒரு
     விக்கின சமர்த்தன் எனும் ...... அருள் ஆழி,

வெற்ப, குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள்
     வித்தக மருப்பு உடைய ...... பெருமாளே.


தோற்றுவாய் 

நினைத்தாலே முத்தி அளிக்குந் திருவருணையில் நம் அருணகிரிநாதப் பெருமான் முன் குமாரக்கடவுள் தோன்றி “முத்தைத் தரு” என்று அடியெடுத்துத் தந்து மறைய, அத் திருப்புகழொன்று மட்டும் பாடிச் சிவயோகத்தது இருக்க, முருகவேள் அசரீரியாக “நம் வயலூருக்கு வா” என்றருள் புரிய, அருணகிரியார் வயலூர் போய் ஆண்டவனைப் பணிந்து, திருப்புகழைப் பாடும் முறைமையை வினவ, கந்தவேள் இன்ன இன்னவைகளை வைத்துப் பாடடு என்று பணிக்க, உடனே அருணகிரியார் வயலூரில் எழுந்தருளியுள்ள பொய்யா கணபதி சந்நிதியில் நின்று, “கைத்தல நிறைகனி” என்ற திருப்புகழைப் பாடிய பின் தனக்கு முருகவேள் கூறிய அனுக்கிரகத்தை மறவேன் என்று இத்திருப்புகழைப் பாடினார்.

பதவுரை

         இக்கு --- கரும்பையும்,

     அவரை --- அவரையையும்,

     நல் கனிகள் --- நல்ல பழ வருக்கங்களையும்,

     சர்க்கரை --- சர்க்கரையையும்,

     பருப்புடன் நெய் --- பருப்போடு நெய்யினையும்,

     எள் --- எள்ளையும்,

     பொரி --- பொரியையும்,

     அவல் --- அவலையும்,

     துவரை --- துவரையையும்,

     இளநீர் --- இளநீரையும்,

     வண்டு எச்சில் --- தேனையும்,

     பயறு --- பயறையும்,

     அப்ப வகை --- பலவகையான அப்பங்களையும்,

     பச்சரிசி --- பச்சரிசியையும்,

     பிட்டு --- பிட்டையும்,

     வெள்ளரிப் பழம் --- வெள்ளரிப் பழத்தையும்,

     இடி பல்வகை --- இடித்துச் செய்கின்ற பலவகையான சிற்றுண்டிகளையும்,

     தனி மூலம் --- (மதுரத்தினால்) ஒப்பற்ற கிழங்குகளையும்,

     மிக்க அடிசில் --- மிகுந்த அன்னத்தையும்,

     கடலை --- கடலையையும்,

     பட்சணம் எனக் கொள் --- (அடியார்களால்) அன்புடன் நிவேதிக்கப்படும் இவை முதலான சத்துவகுண ஆகாரங்களை உணவாகக் கொள்ளும்,

     ஒரு விக்கின சமர்த்தன் எனும் --- ஒப்பற்றவரும் விக்கினத்தை உண்டு பண்ணவும் நீக்கவும் வல்லவருமாகிய,

     அருள் ஆழி --- அருட்கடலே!

     வெற்ப --- மலையில் வசிப்பவரும்,

     குடிலச் சடில --- வளைந்த சடாபாரத்தையுடையவரும்,

     வில் பரமர் அப்பர் அருள் --- (ஒருவராலும் எடுக்க முடியாத மகாமேருகிரியாகிய வில்லையுடையவரும், பெரிய பொருளும்) உலகங்களுக்குத் தந்தையுமாகிய சிவபெருமான் அருளிய,

     வித்தக --- ஞானசொரூபரே!

     மருப்பு உடைய --- தந்தத்தையுடைய,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

     பக்கரை --- அங்கவடியை உடையதும்,

     விசித்திர மணி --- விசித்திரமாக இரத்தின மணிகளைப் பதிய வைத்துள்ள,

     பொன்கலணை இட்ட --- பொன்னாற் செய்யப்பெற்ற சேணத்தை உடையதும்,

     நடை --- வேகமான நடை உடையதுமான,

     பட்சி என்னும் உக்ர துரகமும் --- பட்சி என்று சொல்லப்படும் உக்கிரமுடைய குதிரையாகிய (மயில்வாகனத்தையும்,

     நீப பக்குவ மலர்த் தொடையும் --- மலர்கின்ற பக்குவத்தில் தொடுத்த கடப்பமலர் மாலையையும்,

     அக் குவடு --- அந்த (கிரவுஞ்ச) மலையானது,

     பட்டு ஒழிய --- அடியோடு அழிந்து போகவும்,

     பட்டு உருவ --- வேலாயுதமானது பட்டு உருவிப் பாயவும்,

     விட்டு அருள் கை --- விட்டருளிய திருக்கரத்திலே விளங்கும்,

     வடிவேலும் --- கூர்மையான (வடித்த) வேலாயுதத்தையும்,

     திக்கு அது மதிக்க வரும் --- எட்டுத் திக்குகளும் மதிக்குமாறு (கெம்பீரமாகப்) பறந்து வருகின்ற,

     குக்குடமும் --- கோழிக் கொடியையும்,

     ரட்சை தரும் சிற்றடியும் --- ஆன்மகோடிகளை இரட்சித்து அரணாக விளங்கும் சிறியத் திருவடியையும்,

     முற்றிய பன்னிரு தோளும் --- முதிர்ந்த பன்னிரண்டு புயாசலங்களையும்,

     செய் பதியும் --- வயலூரையும்,

     வைத்து --- (உலகம் உய்யுமாறு) அமைத்து,

     உயர் திருப்புகழ் --- எல்லாவிதத்திலும் உயர்ந்த திருப்புகழை,

     விருப்பமொடு செப்பு என --- விரும்பிச் சொல்லக்கடவாய் என்று,

     எனக்கு அருள்கை --- அடியேனுக்குத் திருவருள் பாலித்த அனுக்கிரகத்தை,

     மறவேன் --- ஒருபோதும் மறக்கமாட்டேன்.


பொழிப்புரை

     கரும்பு, அவரை, நல்ல பழ வகைகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு,(கொழுக்கட்டை) அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், இடித்துச் செய்யும்படியான பலவகைச் சிற்றுண்டிகள், (மதுரத்தினால்) நிகரற்ற கிழங்குகள், மிகுந்த அன்னம், கடலை, இவை முதலான (சத்துவகுண) ஆகாரங்களை உணவாகக் கொள்ளுகின்றவரும், ஒப்பற்றவரும், விக்கினங்களை ஆக்கவும், நீக்கவும் வல்லவருமான கருணையங்கடலே!

     கயிலாயமலையில் வசிப்பவரும், வளவான சடாமகுடத்தை உடையவரும், (ஒருவராலும் எடுக்க முடியாத மகாமேரு கிரியாகிய) வில்லையுடையவரும், பெரிய பொருளும், உலகங்களுக்கெல்லாம் தந்தையுமாகிய சிவபெருமானருளிய ஞானவடிவினரே!

     ஒற்றைக் கொம்பையுடைய பெருமையில் சிறந்தவரே!

         அங்கவடியை யுடையதும், விசித்திரமானதும் ரத்தினங்களைப் பதிய வைத்துள்ளதுமான பொன்னாலாகிய சேணத்தையிட்டு அலங்கரிக்கப்பட்டதும், வேகமான நடையுடையதும், உக்கிரம் பொருந்தியதுமாகிய பட்சியென்று சொல்லும்படியான (குதிரையையும்) மயில் வாகனத்தையும், (இலக்கத்தொன்பன் வீரர்களையும் மாயையால் மயக்கிய) கிரவுஞ்ச மலையை அடியோடு (அதன் மாயையும்) பிளந்தழியுமாறு விட்டருளிய (ஞான சக்தியாகிய) வடிவேலாயுதத்தையும், அட்டதிக்குகளும் மதிக்குமாறு கெம்பீரமாகப் பறந்து வருகின்ற குக்குடதுவசத்தையும், எல்லா உலகங்களுக்கும் உயிர்களுக்கும் காவலாக இருந்து திருவருள்பாலிக்கும் சிறியத் திருவடியையும் வல்லபத்தில் முதிர்ந்த பன்னிரு புயாசலங்களையும் வயலூர் என்னும் புனித திருத்தலத்தையும், அமைத்து (அருள்நாத வொலியால்) உயர்ந்த திருப்புகழை (உலகம் உய்யுமாறு) சொல்லக் கடவாயென அடியேனுக்குத் திருவருள் புரிந்த அருள்நெறித் தொண்டை ஒரு காலத்தும் மறக்க மாட்டேன்.


விரிவுரை


பட்சியெனும் உக்ர துரகம் ---

மயிலைக் குதிரையாக உருவகம் புரிந்தனர்.

சம்ப்ரம மயூரதுரகக்கார” (சந்தனசவாது)     --- திருப்புகழ்.

ஓகார பரியின்மிசை” (இரவியென)             

நடநவில் மரகததுரகம்” (தவநெறி)              

வெங்கலாப ஒருபராக்ரம துரகம்” (பொதுவாய்)   

ஆடும்பரி”                      --- கந்தர் அநுபூதி

என்ற அழகியத் திருவாக்குகளையுஞ் சிந்தித்துச் சித்தம் மகிழ்க.

பக்குவ மலர்த் தொடை ---

         மலர்ந்து விடில் வண்டுகள் எச்சில் புரிந்து விடுமாதலால் வண்டுகள் நுகராமுன் மலரும் பக்குவத்தில் “சிறையளி புகுதா முன்னம் சிறுகாலை எழுந்திருந்து” என்றபடி அன்பர்களால் விதிப்படி எடுத்துத் தொடுத்தணியப்பட்ட மாலை.

அக் குவடு பட்டு ஒழிய ---

              கிரவுஞ்ச மலையின் மீது வேல்விட்ட வரலாறு

     அகத்தியர் அரனார் அருள் பெற்றுத் தென் திசைநோக்கி வரும் வழியிலே மாயமாபுரம் வந்தபோது, சூரபன்மன் துணைவனாகியத் தாரகாசுரனுக்கு உறுதுணையாயிருந்து பற்பல மாயங்களைப் புரிந்து தேவர்களையும், முனிவர்களையும் கொல்லுகின்ற கிரவுஞ்சனென்னும் அசுரன் கண்டான். அன்றில் வடிவத்தை யுடையானாகிய அவனுடைய மாயைகளையும் வல்லமைகளையும் அளவிட்டு உரைத்தல் அரிது. மண்ணுலகை விண்ணுலகாக்குவான்; விண்ணுலகை மண்ணுலகாக்குவான்; தினகரனைச் சந்திரனாக்குவான்; சந்திரனை தினகரனாக்குவான்; மேருவை அணுவாகவும், அணுவை மேருவாகவும், வடவா முகாக்கினியை நீராகவும், நீரை வடவாமுகாக்கினியாகவும் இவ்வாறே ஒன்றையொன்றாக மாற்றுவான்.  இத்தகைய மாயவல்லனாகிய அவ்வசுரத் தலைவன் விந்தமலை போல் சிகரங்களை ஆகாயத்தில் போக்கி, பெரியதோர் மலைவடிவங்கொண்டு தன்னுள் வழியும் ஒன்று செய்து நின்றான். அம்மலைக்குள் ஒரு குரோச தூரஞ் சென்ற அகத்திய முனிவர் வழிகாணாது நிற்ப, பின்னர் ஒரு வழிகாணப்பட்டது. அவ்வழிச் செல்லப் பின்னரும் வழியிலதாயிற்று. தவமுனிவர் மயங்கி ஒரு பக்கம் சிறுவழித் தோன்ற அதன்கண் நடந்த காலை அக்கினி சுவாலித்துச் சூழ, மழை சோனையாகப் பொழிய, இடி இடிக்க, இருட்படலஞ் சூழுமாறு மாயத்தை செய்தான்.

     முனிவனார் இது அறிவிலிகளாம் அவுணரது மாயமென்று உண்மையை உணர்ந்து கைக்கொட்டி நகைத்துச் சீறி “நன்று நன்று இவன் வல்லமையை ஒழிப்பேன் என்று தமது கரதத்தில் இருந்த தண்டாயுதத்தால் புடைத்துத் துவாரமுண்டாக்கிச் சாபங் கூறுவாராயினார். “வெய்யோய்! நீ அசுர வுருமாறி இம்மலைவடிவாய் இராக்கதருக்கு இருப்பிடமாகி இருடியருக்கும் இமையவருக்கும் இடர்மிகப் புரிந்து பல நாட்கள் இருப்பாயாக. எமது தண்டாயுதத்தாற் புழைப் படுத்தப்பட்ட இவைகளெல்லாம் மாயைகளுக்கு இருப்பாய் விளங்கிக் குமரக்கடவுளின் நெடுஞ்சுடர் வேலால் பொடியாக அழியக் கடவாய்” என்று கூறிச் சென்றனர்.

"மாற்படு நமதுபாணி வலிகெழு தண்டால் உன்தன்
பாற்படு புழைகள் யாவும் பற்பல மாயைக்கு எல்லாம்
ஏற்புடை இருக்கையாக எம்பிரான் உதவுஞ் செவ்வேள்
வேற்படை தன்னில் பின்னாள் விளிகுதி விரைவில் என்றான்". ---கந்தபுராணம்

     அவ்வாறே அவ்வசுரன் மலைவடிவாய் இருந்து பலருக்கும் மாயஞ் செய்து வந்தனன். பின் அறுமுகத்து அண்ணலார் ஆணைப்படி அமர் புரிய வந்த வீரபாகு தேவர், தாரகனுடைய மாயந் தெரியாது, அம்மலைக்குள் அவனைப் பின் தொடர்ந்துச் சென்று மயங்கினார். முதல்வர் சென்று திரும்பிலரே? யாது நிகழ்ந்தனவோ என்று வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேச்சுரர், வீரபுரந்தரர், வீரராக்கதர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் என்னும் எண்மரும், இலக்கம் வீரரும், பூத வெள்ளங்களும் அவ்வாறே சென்று கிரவுஞ்சமலையில் மயங்கிக் கிடந்தனர்.

     இதனை நாரதர் ஓடிச்சென்று நம் கதிர் வேலண்ணலிடம் விண்ணப்பம் புரிய, அவர் நெடுஞ்சுடர் வேலை ஏவி, அக்கிரவுஞ்ச மலையைப் பொடிப்பொடியாக அழித்தருளி, தாரகனையும் மாய்த்து, மயங்கிய இலக்கத்தொன்பான் வீரர்களுக்கும் இன்பமளித்தனர்.

திக்கது மதிக்கவரு குக்குடம் ---

         குமாரமூர்த்தியினது கொடியாக விளங்கும் சேவல் அட்ட திக்குகளும் அதன் வலியைக் கண்டு மதிக்குமாறு மகா வீரத்தோடு உலவுகிறது என்பது இதனால் நன்கு விளங்குகின்றது. வெற்றித் துவசமாகிய அச்சேவலானது சிறகையசைத்தவுடன் அண்டகடாகம் உடைபட்டது; உடுக்குலங்கள் உதிர்ந்தன. கிரிகளும் மகாமேரு பருவதமும் இடிந்து விட்டன என்கின்றார்.

படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகை என்னும்
தடைபட்ட சேவல் சிறகுஅடிக் கொள்ள, சலதிகிழிந்து
உடைபட்டது ண்ட கடாகம், உதிர்ந்தது உடுபடலம்,
இடைபட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடி பட்டவே. --- கந்தர் அலங்காரம்.

வானகிரி யைத்தனது தாளில்இடியப் பொருது,
 வாகைபுனை குக்குட பதாகைக் காரனும்” --- வேளைக்காரன் வகுப்பு.

ரட்சை தரு சிற்றடி ---

         அருள்நெறியில் உதவி புரிவதும், பிறைச் சந்திரனையொத்த பற்களுடன் பாசக் கயிற்றைக் கையில் கொண்டு வடவாக்கினி போன்ற விழிகள் சுழல வரும் இமயத்தூதுவரைப் பிறகிடச் செய்வதும், நினைந்தவை அனைத்தும் தருவதும், அடியாருடையப் பகைகளை அழிப்பதும் குமாரமூர்த்தியின் திருவடிகளே. ஆதலின் உயிர்களுக்குக் காவலாயிருந்து உதவுகின்ற சரணம்.

முதல்வினை முடிவில்இரு பிறைஎயிறு கயிறுகொடு
 முதுவடவை விழிசுழல வருகால தூதர்கெட
 முடுகுவதும், அருள்நெறியில் உதவுவதும், நினையும்அவை
 முடிய வருவதும், அடியர் பகைகோடி சாடுவதும்”   --- சீர்பாத வகுப்பு

உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்தாள்”        --- திருமுருகாற்றுப்படை.

முற்றிய பன்னிரு தோள் ---

         அளவுபடுத்த இயலாத அவுணர் குழாங்கள், வரத்தாலும், வாள் முதலியப் படைகள் பற்றிய கரத்தாலும், மலைபோன்ற உரத்தாலும், விரைவாகச் செல்லுகின்ற சரத்தாலும் மிகச் சிறந்து தம்மை வெல்வார் ஒருவருமில்லை யெனத் தருக்கி ஆயிரத் தெட்டண்டங்களிலும் நிறைந்து வந்த காலத்து அவ் அவுணர் சேனை முழுவதையும், அரியரி பிரமாதியரை ஏவல் கொண்ட சூரபன்மாவையும் வென்ற தோளானபடியால் வல்லபத்தில் முதிர்ந்ததென வியந்தனர்.

அலகில் அவுணரைக் கொன்ற தோள் என”       --- திருப்புகழ்

எதிர்படு நெடிய தருவடு பெரிய கடாமுமிழ்
நாகமேக மிடிபட மற்பொரு
திண்சிலம் படங்க       மோதிப்பிடுங்கின
-----------------------------------    ---------------------------------
இபரத துரக நிசிசரர் கெடவொரு சூரனை
மார்பு பீறியவனுதி ரப்புனல்
செங்களந் துளங்கி       யாடிச்சிவந்தன”      --- திருப்புய வகுப்பு

செய்ப்பதி ---

         (செய் - வயல், பதி - ஊர்)

     ஆறுமுக வள்ளல் அருணகிரியார்க்குத் திருப்புகழைப் பாட அருணையில் அடியெடுத்துத் தந்து மீண்டும் அசரீரியாக நம் வயலூருக்கு (திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 5 கல் தூரத்தில் உள்ளது.) வா என அருளி, வயலூரில் அருணகிரியாருக்கு இன்ன இன்ன பொருளை வைத்து திருப்புகழை விருப்பமொடு செப்பென அருளினார். ஆதலால் அருணகிரியார் திருப்புகழ் பாடும் விசேட அருள் பெற்றதும், முருகன் கனவிலும் நனவிலும் பலகாலும் தரிசனம் தந்து அருள் புரிந்ததும், தெய்வீகம் பொருந்தியதுமான திருத்தலம். ஆனபடியால் வயலூரையும் திருப்புகழில் இடையிடையே வைத்துப் பாடுவாராயினர். இத்தலத்தில் அளவுகடந்த அன்பு சுவாமிகளுக்கிருந்ததெனத் தெரிகிறது.

உயர் திருப்புகழ் ---

         திசைகள் நான்கிலும் அன்பர்கள் அற்புதம் அற்புதம் என்று இறும்பூதெய்தும் சித்திர கவித்துவ சத்த மிகுத்து, அருளாலும் பொருளாலும் சந்தத்தாலும் ஓசையாலும் உயர்ந்தது திருப்புகழ்.

பூர்வ, பச்சிம தெட்சிணை உத்தர திக்குள
    பக்தார்கள் அற்புதம்        எனவோதும்
சித்ர கவித்துவ சத்தமிகுத்த திருப்புகழ்”    --- (பத்தர்கணப்ரிய) திருப்புகழ்.

அரியபெரிய திருப்புகழ்”        ---  (இதமுறு) திருப்புகழ்.

திருப்புகழை ஓதுவோருக்கு ஞானமும் சகல நன்மைகளும் வானம் அரசாள வரமும் மனோலயத்தால் கிடைக்கும். முத்திவீடும் உண்டாகும்.

ஞானம் பெறலாம், நலம்பெறலாம், எந்நாளும்
வானம் அரசாள் வரம்பெறலாம், --- மோனவீடு
ஏறலாம், யானைக்கு இளையான் திருப்புகழைக்
கூறினார்க்கு ஆமே இக் கூறு.

விருப்பமொடு ---

         திருப்புகழை அன்போடு பாடவேண்டும்.

உவப்பொடு உன்புகழ் துதிசெய விழைகிலன்” ---  (உனைத்தினந்) திருப்புகழ்.

இவ்வுயர் திருப்புகழை மறவாமல் விருப்பமொடு பலகாலும் பாடிப் பரவுதல் செய்யும் அடியார்களுக்கு ஆண்டவன் தண்ணருள் புரிகிறான்.

பலகாலும் உனைத் தொழுவோர்கள்
 மறவாமல் திருப்புகழ் கூறி
 படிமீது துதித்து உடன் வாழ    அருள்வேளே”  ---  (நிலையாத) திருப்புகழ்.

இக்கு....கடலை ---

         இத்தகைய ஆதாரங்களால் சத்துவ குணம் உண்டாகும். ஆதலால் விநாயகர் சத்துவகுண ஆகாரங்களையே விரும்புகின்றார்.


விக்கின சமர்த்தன் ---

         தன்னை நினைந்தார்க்கு நிர்விக்கினமும் நினையாதவர்களுக்கு விக்கினமும் புரிவதில் மிகவும் சாமர்த்தியமுடையவர். தன்னை நினையாது கடல் கடைய ஆரம்பித்ததனால் விடத்தை உண்டாக்கினார். பின்னர் நினைத்ததனால் அமிர்தத்தை உண்டாகச் செய்தார்.

அருளாழி ---

         வழிபடும் அன்பர்களது இடர் கடியும் பெருமானான படியால் பெருங்கருணைத் தடங்கட லென்றனர்.

கருநோய்அறுத்து எனது மிடிதூள் படுத்திவிடு
    கரிமாமுகக் கடவுள்         அடியார்கள்
கருதாவகைக்கு வரம் அருள் ஞானதொப்பை”--- (இருநோய் மலத்தை) திருப்புகழ்.

வழிபடும் அவர் இடர் கடி கணபதி”        --- தேவாரம்

 குடிலச் சடிலம் ---

     வளைந்த சடாபாரம்.

குடிலசடை பவுரிகொடு தொங்க”    --- (அமுதுததி) திருப்புகழ்.

விற்பரமர் அப்பர் ---

         வில் --- ஒளி மயமானவர். சிவம் என்கிற ஒன்றே எல்லாவற்றிற்கும் பெரிய பொருள். அவர் ஒருவரே உலகங்களுக்குத் தந்தை.

வித்தக மருப்பு ---

         வித்தகம் --- ஞானம், மருப்பு --- தந்தம், வித்தகம் என்ற பதத்தை மருப்பு என்ற பதத்திற்கு அடைமொழியாகக் கொண்டு மேன்மை பொருந்திய தந்தத்தை யுடையவரென்றும் பொருள் கூறலாம்.


கருத்துரை


வித்தகமருப்புடைய விநாயக மூர்த்தியே!  திருப்புகழை ஓதுவாய் என முருகப் பெருமான் அருள் புரிந்த திருவருட்பணியை ஒருபோதும் மறவேன்.

                 

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...