திருக் கச்சிநெறிக் காரைக்காடு


திருக் கச்சிநெறிக் காரைக்காடு

தொண்டை நாட்டுத் திருத்தலம்

 
         காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் ஐந்தனுள் ஒன்று. காஞ்சிபுரம் நகரின் வடகிழக்குப் பகுதியில் திருக்காலிமேடு என்ற இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சீபுரம் இரயில் சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தின் எதிரே உள்ள சாலையில் சென்றால் திருக்கோயிலை  அடையலாம்.

     இவ்வாலயம் இருக்கும் பகுதி முழுவதும் காரைச்செடி அடர்ந்து இருந்த காரணத்தால் "காரைக்காடு" என்று பெயர் பெற்றது. இக்காலத்தில் இப்பகுதி "திருக்காலிமேடு" என்ற பெயருடனும்,  திருக்கோயில், "திருக்காலீஸ்வரர் கோயில்" என்றும் வழங்குகின்றது. இந்திரன் வழிபட்ட காரணத்தால் இத்தலம் இந்திரபுரி என்றும் வழங்கப்பெறுகிறது. திருஞானசம்பந்தப் பெருமான், கச்சி நெறிக் காரைக் காட்டாரே என்றே பாடி உள்ளார்.

     இறைவர் சத்தியவிரதேசுவரர் என்னும் திருப்பெயரை ஒட்டியே, இத் திருத்தலத்திற்கு சத்திய விரதபுரி என்றும் வழங்கப்படுகின்றது.


இறைவன்    --    சத்தியநாதசுவாமி, சத்தியவிரதேசுவரர்,
                                    காரை திருநாதேசுவரர்

இறைவி      --    இத்தலத்திற்குரிய உற்சவ அம்பாளாக பிரம்மராம்பிகை

     திருஞானசம்பந்தர் பாடி அருளிய "வாரணவு முலைமங்கை" என்று தொடங்கும் ஒரு திருப்பதிகம் உள்ளது.

         காலை 7 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

         திருக் கோயில் அமைப்பு: ஆலயம் மேற்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும், அதையடுத்து 3 நிலை கோபுரத்துடனும் அமைந்திருக்கிறது. முகப்பு வாயில் வழியே கோபுரத்தை நோக்கிச் செல்லும் போது இடையில் நந்தி மண்டபம், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். கோபுர வாயிலைக் கடந்து உள்சென்று வெளிப் பிராகாரத்தை வலம் வரலாம். வெளிப் பிராகாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி சந்நிதிகள் ஏதுமில்லை. உள் வாயிலைக் கடந்து சென்றால் கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச் சுற்றில் நால்வர், இந்திரன், புதன், பைரவர், விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள். அதையடுத்து கஜலட்சுமி ஆகிய மூலத் திருமேனிகள் உள்ளன.

         துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தரிசித்து உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். காரை திருநாதேஸ்வரர் என்றும், சத்தியநாதசுவாமி என்றும் வழங்கப்படும் மூலவர் சுயம்புலிங்கத் திருமேனியாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். மூலவர் செம்மண் நிறத்தில், கரகரப்பாக, சற்று உயர்ந்தும், பருத்தும் காணப்படுகிறார். அருகில் அம்பாள் உற்சவத் திருமேனி வைக்கப்பட்டுள்ளது. சூரியனின் மூலத் திருமேனியும் உள்ளேயே உள்ளது. நடராஜர் சபையும் இங்குள்ளது

         இந்திரன் இங்குள்ள இறைவனை வழிபட உண்டாக்கிய தீர்த்தம் இந்திர தீர்த்தம். இது தற்போது வேப்பங்குளம் என வழங்கப் பெறுகிறது. இந்த தீர்த்தம் தற்போது நன்கு பராமரிக்கப்படாத நிலையிலுள்ளது. இத்தலத்திலுள்ள இறைவனை புதன் வழிபட்டு கிரகநிலை பெற்றதால்,புதன்கிழமை இந்திர தீர்த்தம் என்கிற வேப்பங்குளத்தில் நீராடி காரைக்காட்டு ஈஸ்வரரை வணங்குதல் சிறப்புடையது. புதன் இத்தலத்தில் பிரகாரத்தில் சுவாமிக்கு வலதுபுறத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரி புராணப் பாடல் எண் : 999
திருஏகம் பத்துஅமர்ந்த
         செழுஞ்சுடரை, சேவடியில்
ஒருபோதும் தப்பாதே
         உள்உருகிப் பணிகின்றார்,
மருவுதிரு இயமகமும்
         வளர்இருக்குக் குறள்மற்றும்
பெருகும்இசைத் திருப்பதிகத்
         தொடைபுனைந்தார் பிள்ளையார்.

         பொழிப்புரை : திருஏகம்பத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் செழுமை பொருந்திய ஞானச் சுடரான இறைவரின் திருவடிகளை வழிபட வேண்டிய காலங்களில், ஒரு பொழுதும் தவறாது உள்ளம் உருகிப் பணிகின்றவராய், ஞானசம்பந்தர், அணிபொருந்திய `திரு இயமகமும்\', பொருளால் வளர்கின்ற `திருவிருக்குக்குறளும்\', மேலும் பெருகுகின்ற இசை பொருந்திய திருப்பதிக மாலையையும் இறை வருக்கு அணிவித்தார்.

         குறிப்புரை : திருஏகம்பத்தில் பாடிய பதிகங்கள்:

1. திருஇயமகம்: பாயும் மால்விடை (தி.3 ப.114) - பழம்பஞ்சுரம்.
2. திருவிருக்குக்குறள்: கருவார் கச்சி (தி.3 ப.41)) - கொல்லி.
3. மேலும் பாடிய பதிகமாலை: வெந்த வெண்பொடி (தி.1 ப.133) - மேகராகக் குறிஞ்சி.


பாடல் எண் : 1000
நீடுதிருப் பொழில்காஞ்சி
         நெறிக்காரைக் காடுஇறைஞ்சி,
சூடுமதிக் கண்ணியார்
         துணைமலர்ச்சே வடிபாடி,
ஆடும்அவர் இனிதுஅமரும்
         அனேகதங்கா வதம்பரவி,
மாடுதிருத் தானங்கள்
         பணிந்துஏத்தி வைகுநாள்.

         பொழிப்புரை : பெருகிய சோலைகள் சூழ்ந்த `திருக்கச்சி நெறிக்காரைக்காடு\' என்னும் திருக்கோயிலைச் சென்று வணங்கி, அணியும் பிறையான கண்ணியையுடைய இறைவரின் துணையான மலர் அனைய திருவடிகளைப் பாடி, கூத்தியற்றும் இறைவர் இனிதாய் வீற்றிருக்கும் `திருக்கச்சிஅனேகதங்காவதம்\' என்னும் திருப்பதியைப் போற்றி, அருகில் உள்ள பல கோயில்களையும் பணிந்து போற்றி அங்குத் தங்கியிருக்கும் நாள்களில்,

         குறிப்புரை : திருக்கச்சிநெறிக்காரைக்காட்டில் அருளிய பதிகம் `வாரணவு\' (தி.3 ப.65) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

திருக்கச்சிஅனேகதங்காவதத்தில் அருளிய பதிகம் கிடைத்திலது.

`மாடு திருத்தானங்கள்\' என்பன காஞ்சியிலும் அதற்கு அண்மையிலும் உள்ள பல கோயில்களுமாம்.

     3.065    திருக்கச்சிநெறிக் காரைக்காடு      பண் - பஞ்சமம்
                                                                               திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வார்அணவு முலைமங்கை பங்கினராய், அங்கையினில்
போர்அணவு மழுஒன்றுஅங்கு ஏந்தி,வெண் பொடிஅணிவர்,
கார்அணவு மணிமாடம் கடைநவின்ற கலிக்கச்சி
நீர்அணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.

         பொழிப்புரை : சிவபெருமான் கச்சு அணிந்த மெல்லிய முலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . அழகிய கையில் போருக்குரிய மழுவை ஏந்தியவன் . திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியவன் . மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாளிகைகளையும் , பிரளயகாலத்து ஒலியோ என்று சொல்லும் பேரோசையையுமுடைய காஞ்சியில் , நீர் நிரம்பிய மலர்கள் பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றான் .

பாடல் எண் : 2
கார்ஊரும் மணிமிடற்றார், கரிகாடர், உடைதலைகொண்டு
ஊர்உரன் பலிக்குஉழல்வார், உழைமானின் உரிஅதளர்,
தேர்ஊரும் நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
நீர்ஊரும் மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.

         பொழிப்புரை : சிவபெருமான் கார்மேகம் போன்ற நீலநிறமுடைய கண்டத்தார் . கொள்ளிகள் கரிந்த சுடுகாட்டிலிருப்பவர் , பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஊர்தோறும் சென்று பிச்சை எடுத்துத் திரிவார் . மான்தோலை ஆடையாக உடுத்தவர் . அப்பெருமான் தேரோடும் நீண்ட வீதிகளையுடைய செழிப்புடைய திருக்கச்சிமாநகரில் நீர் நிறைந்த, மலர்கள் பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக் காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

பாடல் எண் : 3
கூறுஅணிந்தார் கொடியிடையை, குளிர்சடைமேல் இளமதியோடு
ஆறுஅணிந்தார், ஆடுஅரவம் பூண்டுஉகந்தார், ஆன்வெள்ளை
ஏறுஅணிந்தார் கொடியதன்மேல், என்புஅணிந்தார் வரைமார்பில்
நீறுஅணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

         பொழிப்புரை : ஒலிநிறைந்த திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் கொடிபோன்ற இடையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவர் . குளிர்ந்த சடைமீது இளம்பிறைச் சந்திரனோடு , கங்கை , பாம்பு இவற்றை அணிந்து மகிழ்ந்தவர் . வெற்றிக் கொடியில் வெண்ணிற இடபத்தைக் கொண்டுள்ளார் . மலைபோன்ற மார்பில் எலும்பு மாலையை அணிந்துள்ளார் . திருநீற்றையும் அணிந்துள்ளார் .

பாடல் எண் : 4
பிறைநவின்ற செஞ்சடைகள் பின்தாழப் பூதங்கள்
மறைநவின்ற பாடலோடு ஆடலராய் மழுஏந்திச்
சிறைநவின்ற வண்டுஇனங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும்
நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

         பொழிப்புரை : பிறைச்சந்திரனைச் சூடிய சிவந்த சடைகள் பின் பக்கம் தொங்க , பூதகணங்கள் நால்வேதங்களை ஓதப் பாடலும் , ஆடலும் கொண்டு மழுப்படை ஏந்திச் சிவபெருமான் விளங்குகின்றார் . அப்பெருமான் சிறகுகளையுடைய வண்டுகள் இனிய கனிகளில் சொட்டும் தேனை உறிஞ்சி உண்ட மகிழ்ச்சியில் இன்னொலி செய்யும் திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

 
பாடல் எண் : 5
அன்றுஆலின் கீழ்இருந்துஅங்கு அறம்புரிந்த அருளாளர்,
குன்றாத வெஞ்சிலையில் கோள்அரவம் நாண்கொளுவி
ஒன்றாதார் புரமூன்றும் ஓங்குஎரியில் வெந்தவிய
நின்றாரும், கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

         பொழிப்புரை : சிவபெருமான் அன்று ஆலமரநிழலின் கீழிருந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அருளாளர் , குன்றாத வலிமையுடைய மேருமலையை வில்லாகக் கொண்டு , கொல்லும் தன்மையுடைய பாம்பை நாணாகப்பூட்டி , பகையசுரர்களின் முப்புரங்களை மிக்க நெருப்பில் வெந்தழியும்படி செய்தவர் . அப்பெருமான் ஒலிமிகுந்த திருக்கச்சி நெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .



பாடல் எண் : 6
பன்மலர்கள் கொண்டுஅடிக்கீழ்
         வானோர்கள் பணிந்துஇறைஞ்ச
நன்மையிலா வல்அவுணர்
         நகர்மூன்றும் ஒருநொடியில்
வில்மலையில் நாண்கொளுவி
         வெங்கணையால் எய்துஅழித்த
நின்மலனார் கலிக்கச்சி
         நெறிக்காரைக் காட்டாரே.

         பொழிப்புரை : தேவர்கள் பலவகையான மலர்களைத் தூவி இறைவனின் திருவடிக்கீழ்ப் பணிந்து வணங்க , நன்மைபுரியாது தீமை செய்த வலிய அசுரர்களின் மூன்று நகரங்களையும் , ஒரு நொடியில் , மேருமலையை வில்லாகக் கொண்டு , வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு அக்கினியாகிய அம்பை எய்து அழித்த , இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சிவபெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 7
புற்றிடை வாள்அரவினொடு புனைகொன்றை மதமத்தம்
எற்றுஒழியா அலைபுனலோடு இளமதியம் ஏந்துசடைப்
பெற்றுஉடையார், ஒருபாகம் பெண்உடையார், கண்அமரும்
நெற்றியினார், கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

         பொழிப்புரை : சிவபெருமான் புற்றில் வாழும் ஒளிமிக்க பாம்பையும் , கொன்றை மலரையும் , ஊமத்தை மலரையும் அணிந்து , ஓய்தல் இல்லாது அலைவீசும் கங்கையோடு , பிறைச்சந்திரனையும் தாங்கிய சடையையுடையவர் . தம் திருமேனியில் ஒருபாகமாக உமாதேவியைக் கொண்டவர் . நெற்றிக்கண்ணையுடையவர் . அப்பெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 8
ஏழ்கடல்சூழ் தென்இலங்கைக் கோமானை எழில்வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியதுஓர் தன்மையினார், நன்மையினார்,
ஆழ்கிடங்கும் சூழ்வயலும் மதில்புல்கி அழகுஅமரும்
நீள்மறுகில் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

         பொழிப்புரை : ஏழுகடல் சூழ்ந்த இலங்கை மன்னனான இராவணனை அழகிய கயிலையின் கீழ் நொறுங்கும்படி தம் காற்பெரு விரலை ஊன்றி வலியழித்த தன்மையுடையவர் சிவபெருமான் . அவர் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்வார் . அப்பெருமான் ஆழ்ந்த அகழியும் , சுற்றிய வயல்களும் , மதில்களும் நிறைந்த அழகுடன் திகழும் , நீண்ட வீதிகளையுடைய ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 9
ஊண்தானும் ஒலிகடல்நஞ்சு, உடைதலையில் பலிகொள்வர்,
மாண்டார்தம் எலும்புஅணிவர், வரிஅரவோடு எழில்ஆமை
பூண்டாரும், ஓர்இருவர் அறியாமைப் பொங்குஎரியாய்
நீண்டாரும், கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

         பொழிப்புரை : சிவபெருமானின் உணவு ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சு. உடைந்த தலையாகிய பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவார் . இறந்த தேவர்களின் எலும்புகளை மாலையாக அணிந்தவர் . வரிகளையுடைய பாம்போடு , அழகிய ஆமையோட்டையும் அணிந்தவர் . திருமால் , பிரமன் இருவரும் அறியா வண்ணம் ஓங்கிய நெருப்புப் பிழம்பாய் நின்றவர் . அப் பெருமான் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .



பாடல் எண் : 10
குண்டுஆடிச் சமண்படுவார், கூறைதனை மெய்போர்த்து
மிண்டுஆடித் திரிதருவார் உரைப்பனகள் மெய்அல்ல,
வண்டுஆரும் குழலாளை வரைஆகத்து ஒருபாகம்
கண்டாரும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

         பொழிப்புரை : விதண்டாவாதம் பேசி நல்லூழ் இல்லாமையால் சமண சமயம் சார்ந்தோரும் , மஞ்சள் காவியாடையை உடம்பில் போர்த்திய வலிய உரைகளைப் பேசித் திரியும் புத்தர்களும் இறை யுண்மையை உணராதவர்கள் . ஆதலால் அவர்கள் பேசுவதை விடுத்து , வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியைத் தன் மலை போன்ற திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு கண்டவர்கள் மகிழும்படி ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வணங்குங்கள் .


பாடல் எண் : 11
கண்ஆரும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுஉறையும்
பெண்ஆரும் திருமேனிப் பெருமானது அடிவாழ்த்தித்
தண்ஆரும் பொழில்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
பண்ஆரும் தமிழ்வல்லார் பரலோகத்து இருப்பாரே.

         பொழிப்புரை : கண்ணுக்கு இனிமை தரும் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் , தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியை வைத்த சிவபெருமான் திருவடிகளை வாழ்த்தி , குளிர்ச்சி பொருந்திய அழகிய சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் இறைவனுலகில் இருப்பதாகிய சாலோக பதவியை அடைவர் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...