திருக்கச்சி அநேகதங்காவதம்


திருக் கச்சி அநேகதங்காபதம்

தொண்டை நாட்டுத் திருத்தலம்

இறைவன்                 --        அநேகதங்காபதேசுவரர்

இறைவி                   --        காமாட்சி அம்மன்

பதிகம்   சுந்தரர்         --        1. தேனெய் புரிந்துழல்


         காஞ்சிபுலத்தில் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் ஐந்தனுள் ஒன்று. காஞ்சிபுரம் நகரில் இருந்து வடமேற்கே 3 கி.மீ. தொலைவில் கைலாசநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இத் திருத்தலம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்துகள் இருக்கின்றன.

     அனேகதம் என்றால் யானை. யானை முகத்தையுடைய விநாயகர் சிவலிங்கத் திருமேனியை நிறுவி வழிபட்ட தலம் ஆதலால் இது அநேகதங்காபதம் என்று பெயர் பெற்றது.

         அநேகதங்காபதம் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற திருத்தலங்கள் இருக்கின்றன. ஒன்று வடநாட்டில் ஹரித்வார் - கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள கெளரிகுண்டம் சென்று அங்கிருந்து பயணிக்க வேண்டும். மற்றொன்று காஞ்சீபுரத்திலுள்ள இத்தலம். வடநாட்டில் உள்ள அநேகதங்காபதம் திருத்தலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்ட இத்தலம் கச்சி அநேகதங்காபதம் என்ற பெயரால் வழங்குகிறது.

         இவ்வாலயம் வடக்கில் ஒரு சிறிய கோபுரத்துடன் கூடிய முகப்பு வாயிலுடனும், கிழக்கில் மற்றொரு முகப்பு வாயிலுடனும் காணப்படுகிறது. . இந்த வாயிலகள் வழியே நுழைந்தால் ஒரு விசாலமான வெளிச் சுற்று உள்ளது. கிழக்கு வாயிலின் உள்ளே சென்றவுடன் நாம் நேரே காண்பது பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். தெற்கு வெளிப் பிரகாரத்தில் தேவார மூவர் சந்நிதியைக் காணலாம். மேற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், வடமேற்குப் பகுதியில் வள்ளி தெய்வானையுடன் உள்ள சுப்பிரமணியர் சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். மூலவர் வட்டவடிவ ஆவுடையார் மீது பெரிய இலிங்கத் திருமேனியுடன் நமக்கு அருட்காட்சி தருகிறார். கோஷட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர்.

         குபேரன் வழிபட்ட பெருமையுடையது இத்தலம். அநேகதங்காபதேஸ்வரர் இரணியபுர அசுரரான கேசியை அழித்து கேசியின் மகளான சிவபக்தை வல்லபையை விநாயகருக்கு மணம் முடிக்க வரம் தநத சிறந்த தலமாகும்.

         விநாயகப் பெருமானால் வழிபடப்பட்ட அநேகதங்காபதேசுவரரை வழிபடுவர்கள் கொடிய துன்பமாகிய பிறவித்துயர் தீர்ந்து இறைவன் உறையும் திருக்கயிலாயத்தை அடைந்து அங்கு தங்கும் பேற்றினைப் பெறுவர் என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.

வள்ளல் பெருமான் தாம் பாடியருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "சேர்ந்தவர்க்கே இங்கு ஆபதம் சற்றும் இல்லாத, அனேகதங்காபதம் சேர் தயாநிதியே" என்று போற்றி உள்ளார்.
   
சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுவாமிகள், காஞ்சியில் தங்கியிருந்த நாள்களில் திருஒணகாந்தன் தளியை வணங்கிக் கச்சி அனேகதங்காவதம் சென்று தரிசித்துப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 ஏயர் கோன். புரா. 192)

பெரிய புராணப் பாடல் எண் : 192
அங்கண் அமர்வார் அனேகதங்கா
         வதத்தை எய்தி உள்அணைந்து
செங்கண் விடையார் தமைப்பணிந்து
         "தேனெய் புரிந்து" என் றெடுத்ததமிழ்
தங்கும் இடமாம் எனப்பாடித்
         தாழ்ந்து, பிறவும் தானங்கள்
பொங்கு காத லுடன்போற்றிப்
         புரிந்துஅப் பதியில் பொருந்துநாள்.

         பொழிப்புரை : அப்பதியில் விரும்பித் தங்கியிருந்தவராய நம்பிகள், திருக்கச்சி அனேகதங்காவதத்தினைச் சேர்ந்து, திருக்கோயிலின் உள்ளே அணைந்து, சிவந்த கண்களையுடைய ஆனேற்றை உடையாராகிய இறைவரை வணங்கித் `தேன்நெய் புரிந்து\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடியருளி, வணங்கி, இறைவன் எழுந்தருளியிருக்கும் பிற பதிகளையும் மேன்மேலும் மிகும் பெருவிருப்புடன் சென்று போற்றி, இடைவிடாத நினைவுடனே அக்கச்சித் திருப்பதியில் பொருந்தவிருக்கும் நாள்களில்,

         குறிப்புரை : `தேன்நெய்' (தி.7 ப.5) எனத் தொடங்கும் பதிகம், இந்தளப் பண்ணில் அமைந்ததாகும். பிற தானங்கள் என்பன, காஞ்சியில் உள்ளனவும், அதனைச் சூழ்ந்து உள்ளனவுமாய திருக்கோயில்களாம். திருக்குறிப்புத்தொண்டர் புராணத்து (தி.12 பு.19), இக் கோயில்கள் பலவும் குறித்துக் காட்டப் பெற்றுள்ளன. ஆண்டுக் காண்க.


7. 010  திருக்கச்சி அனேகதங்காவதம்          பண் - இந்தளம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தேன்நெய் புரிந்துஉழல் செஞ்சடை எம்பெரு
         மானது இடம்,திகழ் ஐங்கணையக்
கோனை எரித்துஎரி ஆடி இடம்,குல
         வானது இடம், குறை யாமறையா
மானை இடத்ததொர் கையன் இடம், மத
         மாறு படப்பொழி யும்மலைபோல்
ஆனை உரித்த பிரானது இடம், கலிக்
         கச்சி அனேகதங் காவதமே.

         பொழிப்புரை : தேனாகிய நெய்யை விரும்பி உழல்கின்ற சிவந்த சடையையுடைய எம்பெருமானும் , அழகு விளங்கும் , ஐங்கணையை உடைய அத்தலைவனாகிய மன்மதனை எரித்தவனும் , தீயில் நின்று ஆடுபவனும் , மேலானவனும் , மிக்க புள்ளிகள் பொருந்திய மானை இடப்பக்கத்திலுள்ள ஒரு கையில் தாங்கினவனும் , மும்மதங்களும் ஒன்றினொன்று முற்பட்டுப் பாய்கின்ற மலைபோலும் யானையை உரித்த பெரியோனும் ஆகிய இறைவன் விரும்பி உறையும் இடம், ஆரவாரத்தை உடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .
   
பாடல் எண் : 2
கூறு நடைக்குழி கட்பகு வாயன
         பேய்உகந் தாட,நின்று ஓரியிட,
வேறு படக்குட கத்திலை அம்பல
         வாணன்நின்று ஆடல் விரும்பும்இடம்,
ஏறு விடைக்கொடி எம்பெரு மான,இமை
         யோர்பெரு மான், உமை யாள் கணவன்,
ஆறு சடைக்குஉடை அப்பன் இடம், கலிக்
         கச்சி அனேகதங் காவதமே.

         பொழிப்புரை : மேலைத்தில்லை அம்பலவாணன் , குறுநடையையும் , குழிந்த கண்களையும் , பிளந்த வாயினையுமுடையனவாகிய பேய்கள் உடன் விரும்பி யாடவும் நரிகள் நின்று ஊளையிடவும் , சிறப்புண்டாக நின்று ஆடுதலை விரும்புவதும் , உயர்ந்த இடபக்கொடியை யுடைய எம்பெருமானும் , தேவர் பெருமானும் , உமாதேவிக்குக் கணவனும் , சடையின்கண் கங்கையை யுடைய தந்தையும் ஆகிய அவ்விறைவனுக்கு உரித்தாயதுமாகிய இடம் , ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .


பாடல் எண் : 3
கொடிகள் இடைக்குயில் கூவும் இடம்,மயில்
         ஆலும் இடம், மழு வாள்உடைய
கடிகொள் புனற்சடை கொண்ட நுதல்கறைக்
         கண்டன் இடம், பிறைத் துண்டமுடிச்
செடிகொள் வினைப்பகை தீரும் இடம், திரு
         ஆகும் இடம், திரு மார்புஅகலத்து
அடிக ளிடம், அழல் வண்ணன் இடம், கலிக்
         கச்சி அனேகதங் காவதமே.

         பொழிப்புரை : துன்பத்தைக் கொண்ட வினையாகிய பகை நீங்குவதும் , நன்மை வளர்வதும் , மழுப்படையை யுடைய , விளக்கத்தைக் கொண்ட நீரைச் சடையில் ஏற்ற , பிறைத் துண்டமாகிய கண்ணியை யணிந்த நெற்றியை யுடைய நீலகண்டனும் , அழகிய மார்பிடத்தனவாகிய பல அணிகலங்களையுடைய தலைவனும் , நெருப்புப் போலும் நிறத்தை யுடையவனும் ஆகிய இறைவனுக்கு உரியதும் ஆகிய இடம் , கொடி போலும் மகளிர் பாடல்களுக்கு இடையே குயில்கள் கூவுவதும் , அவர் ஆடல்களுக்கு இடையே மயில்கள் ஆடுவதும் ஆகிய ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .


பாடல் எண் : 4
கொங்கு நுழைத்தன வண்டுஅறை கொன்றையும்
         கங்கையும் திங்களும் சூடுசடை,
மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்
         பங்கினில் தங்க உவந்துஅருள்செய்,
சங்கு குழைச்செவி கொண்டுஅரு வித்திரள்
         பாயவி யாத்தழல் போல்உடைத்தம்
அங்கை மழுத்திகழ் கையன் இடம், கலிக்
         கச்சி அனேகதங் காவதமே.

         பொழிப்புரை : தேனால் நுழைவிக்கப்பட்டனவாகிய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மாலையையும் , கங்கையையும் , பிறையையும் அணிந்த சடையினையுடைய , மேகங்கள் தவழும் மலையில் வளர்ந்த மங்கையும் சிறந்த தேவியுமாகிய உமையை ஒரு பாகத்தில் பொருந்தி யிருக்குமாறு மகிழ்ந்து வைத்து உயிர்கட்கு அருள் புரிகின்ற , சங்கக் குழையை அணிந்த காதினின்றும் வெள்ளொளிக் கற்றையாகிய அருவித்திரள் பாய , அவற்றாலும் அவியாத நெருப்புப் போலத் தோன்று தலையுடைய அங்கையின் மழுவானது இடையறாது ஒளி வீசுகின்ற தன்மையையுடைய இறைவனது இடம் , ஆரவாரத்தையுடைய கச்சி மாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக் கோயிலே .


பாடல் எண் : 5
பைத்த படத்தலை ஆடுஅர வம்பயில்
         கின்ற இடம், பயி லப்புகுவார்
சித்தம் ஒருநெறி வைத்த இடம், திகழ்
         கின்ற இடம், திரு வான்அடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள
         வைத்த இடம், மழு வாள்உடைய
அத்தன் இடம், அழல் வண்ணன் இடம், கலிக்
         கச்சி அனேகதங் காவதமே.

         பொழிப்புரை : ஆடும் பாம்பாகிய ஆதிசேடனது பையின் தன்மையைப் பெற்ற படத்தினையுடைய தலையின்கண் நீங்காதிருக்கின்ற இடமாகிய நிலவுலகத்தில் வாழப்புகுவோர் , தமதுள்ளத்தை ஒரு நெறிக்கண்ணே வைத்தபொழுது , அவர்க்கு உயர்ந்து விளங்குவதும் , திருவாளனாகிய சிவபிரானது திருவடிக் கண்ணே பிறழாது வைத்த மனத்தையுடையவராகிய அடியார் . தம் மனம் , விரும்பிக் கொள்ளுமாறு அதனுள் இருத்தப்பட்டதும் , மழுப்படையையுடைய தலைவனும் , நெருப்புப்போலும் நிறத்தையுடையவனும் ஆகிய அப் பெருமானுக்கு உரித்தாயதும் ஆகிய இடம் , ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .


பாடல் எண் : 6
தண்டம் உடைத்தரு மன்தமர் என்தம
         ரைச்செயும் வன்துயர் தீர்க்கும்இடம்,
பிண்டம் உடைப்பிற வித்தலை நின்று
         நினைப்பவர் ஆக்கையை நீக்கும்இடம்,
கண்டம் உடைக்கரு நஞ்சை நுகர்ந்த
         பிரானது இடம், கடல் ஏழுகடந்து
அண்டம் உடைப்பெரு மானது இடம், கலிக்
         கச்சி அனேகதங் காவதமே.

         பொழிப்புரை : தண்டாயுதத்தை யுடைய இயமனது ஏவலாளர் , என் சுற்றத்தாராகிய சிவனடியாரை நலியக் கருதும் வலிய துன்பத்தைத் தீர்ப்பதும் , உடம்பை யுடைய இப்பிறவியின்கண் மனம் பொருந்தி நின்று நினைப்பவரது பிறவியை அறுப்பதும் , தனது கண்டம் உடைத்தாயுள்ள கரிய நஞ்சினை , உண்ணும் பொருளாக உண்ட தலைவனும் , ஏழு கடல்களின் உள்ளே உள்ள நிலமேயன்றி அண்டம் முழுவதையும் உடைய பெரியோனும் ஆகிய இறைவனுக்கு உரித்தாயதும் ஆகிய இடம் , ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .


பாடல் எண் : 7
கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது
         ஏத்தும் இடம்,கதி ரோன்ஒளியால்
விட்ட இடம்,விடை யூர்தி இடம், குயில்
         பேடைதன் சேவலொடு ஆடும்இடம்,
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர்ஒரு
         மாதவி யோடு மணம்புணரும்
அட்ட புயங்கப் பிரானது இடம், கலிக்
         கச்சி அனேகதங் காவதமே.

         பொழிப்புரை : பாசப் பிணிப்பால் உண்டாகும் திரிபுணர்வை நீக்கியவர் , கைகுவித்துக் கும்பிட்டுத் துதிப்பதும், இடப வாகனத்தையுடையவனும் , அட்டமா நாகங்களையும் அணிந்தவனுமாகிய இறைவனுக்கு உரித்தாயதுமான இடம் , பகலவனது ஒளியினின்று நீங்கியதும் , குயிற் பேடை தனது சேவலோடு கூடி விளையாடுவதும் ஆகிய சோலைக் கண் ஒப்பற்ற மாதவியில் தேன் ததும்பி மலர்ந்த மலர், மணத்தைப் பொருந்துகின்ற, ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க்கண்ணுள்ள, ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .


பாடல் எண் : 8
புல்லி இடந்தொழுது உய்தும் எனாதவர்
         தம்புர மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம், விர வாதுஉயிர் உண்ணும்வெங்
         காலனைக் கால்கொடு வீந்துஅவியக்
கொல்லி இடம், குளிர் மாதவி மவ்வல்
         குராவகு ளங்குருக் கத்திபுன்னை
அல்லி இடைப்பெடை வண்டுஉறங் கும்கலிக்
         கச்சி அனேகதங் காவதமே.

         பொழிப்புரை : ` முன்பே அடையப் பட்டவனைக் கடைபோகத் தொழுது உய்வோம் ` என்று நினையாது , புத்தனது பொய்யுரையால் மயங்கிய அசுரரது அரண்கள் மூன்றினையும் சாம்பலாக்கிய வில்லை யுடைவனும் , யாவரிடத்தும் கண்ணோடாது உயிரை வௌவும் கொடிய காலனை அழிந்தொழியும்படி காலால் கொன்றவனும் ஆகிய இறைவனுக்கு உரித்தாய இடம் , குளிர்ந்த வனமல்லிகை , முல்லை , குரா , மகிழ் , குருக்கத்தி , புன்னை இவற்றின் மலர்களது அகவிதழில் பெண் வண்டுகள் உறங்குகின்ற , ஆரவாரத்தை யுடைய கச்சிமாநகரில் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .


பாடல் எண் : 9
சங்கை யவர்புணர் தற்குஅரி யான்,தளவு
         ஏல்நகை யாள்வி ராமிகுசீர்
மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை
         நட்டநின்று ஆடிய சங்கரன்எம்
மங்கைய வன், அனல் ஏந்து பவன்,கனல்
         சேர்ஒளி அன்னதொர் பேர்அகலத்து
அங்கை யவன்உறை கின்ற இடம், கலிக்
         கச்சி அனேகதங் காவதமே.

         பொழிப்புரை : ஐயப்பாடுடையவர் அடைதற்கரியவனும் , முல்லை யரும்புபோலும் நகையினை யுடையாளாகிய , என்றும் பிரிவில்லாத , மிக்க புகழை யுடைய உமாதேவி மகிழும்படி சுடு காட்டில் நின்று நடன மாடுகின்ற சங்கரனும் , எம் அங்கைப் பொருளாய் உள்ளவனும் , நெருப்பை ஏந்துபவனும் , நெருப்பிற் பொருந்தியுள்ள ஒளிபோலும் ஒளியை யுடைய பெரிய மழுப் படையை ஏந்திய அங்கையை யுடையவனும் ஆகிய இறைவன் நீங்காது உறைகின்ற இடம் , ஆரவாரத்தையுடைய கச்சிமா நகர்க் கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலே .


பாடல் எண் : 10
வீடு பெறப்பல ஊழிகள் நின்று
         நினைக்கும் இடம்,வினை தீரும்இடம்,
பீடு பெறப்பெரி யோரது இடங்கொண்டு
         மேவினர் தங்களைக் காக்கும்இடம்,
பாடும் இடத்துஅடி யான்புகழ் ஊரன்
         உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடும் இடம், சிவ லோகன் இடம்,கலிக்
         கச்சி அனேகதங் காவதமே.

         பொழிப்புரை : முத்தி பெறுதற் பொருட்டுப் பல்லூழி கால மாயினும் இவ்வுடம்போடே நின்று இறைவனை நினைத்தற்குரிய இடமும் , அதனால் வினை நீங்கப்பெறும் இடமும் , பெருமையை அடைதற்குரிய வழியைப் பெரியோரது அடிக்கீழ் நின்று பெற்று , அவ்வழியாலே விரும்பி வந்தவர்களைப்பிறவிக் கடலில் வீழாதவாறு காக்கும் இடமும் ஆகிய , ஆரவாரத்தையுடைய கச்சிமாநகர்க்கண் உள்ள , ` திருவனேகதங்காவதம் ` என்னும் திருக்கோயிலைப் பாடப் புகும் பொழுது , சிவபிரானுக்கு அடியவனாகிய , புகழையுடைய நம்பியாரூரன் பாடிய இச் சொல்மாலைகள் பத்தினையும் நன்கு பாடவல்லார் அடையும் இடம், சிவபிரானது இடமே யாகும்.

                                             திருச்சிற்றம்பலம்

குறிப்பு --- இத் திருப்பதிகம் அழகான ஓசை நயத்தோடு கூடியது. பாடி அனுபவித்தால், சுவை விளங்கும்.




No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...