திரு ஓணகாந்தன்தளி
(காஞ்சிபுரம்)
தொண்டை நாட்டுத் திருத்தலம்.
இறைவர்
: ஓணேசுவரர், காந்தேசுவரர்.
இறைவியார்
: காமாட்சி அம்மன்
தேவாரப்
பாடல்கள் : சுந்தரர் - நெய்யும்
பாலும் தயிரும்.
காஞ்சிபுரத்தில் உள்ளபாடல் பெற்ற திருக்கோயில்கள்
ஐந்தனுள் ஒன்று. காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும்
பேருந்துப் பாதையில் சென்று, ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள
சர்வதீர்த்தக் குளத்திற்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற
பகுதியில் உள்ள துணைமின் நிலையத்திற்கு எதிரில் உள்ள கோயிலை அடையலாம். சாலை
ஓரத்திலேயே கோயிலும் மின் நிலையமும் உள்ளன.
வாணாசுரன் என்ற அரசனுடைய சேனாதிபதிகளான
ஓணன், காந்தன் என்னும்
அசுரர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற காரணத்தால் இத்தலம் ஓணகாந்தன்தளி என்று பெயர்
பெற்றது. 3 நிலை இராஜ
கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன்
பலிபீடமும், நந்தி மண்டபமும்
உள்ளன. ஓணன், காந்தன் இவ்விருவரும்
வழிபட்ட ஓணேசுவரர், காந்தேசுவரர் ஆகிய
இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன.
சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனி தனியே
உள்ளது. இது பிற்காலப் பிரதிஷ்டையாகும். சிறிய கோயில். இத்தலத்திலுள்ள வயிறுதாரிப்
பிள்ளையார் சந்நிதியைத் தவிர மற்றொரு விநாகயரான ஓங்கார கணபதியும் இங்குள்ளார்.
இவரின் சிலையில் பக்தியுடன் காது வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில்
கேட்பதாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்கள் உடன்
இருக்க வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார்.
முருகர் தனது மயில் வாகனத்தில்
அமர்ந்தபடி தனது இரு தேவியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். அர்த்த
மண்டபத்தில் சுந்தரர் மற்றும் இறைவனின் திருப்பாத தரிசனம் காணலாம்.
கோயிலுக்கு வெளியே தான்தோன்றி தீர்த்தம்
உள்ளது. வன்னி மரமும், புளிய மரமும்
இத்தலத்தின் தல மரங்களாகும்.
சுந்தரர் பாடிய இத்தலத்திற்கான
இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம்
பெற்றுள்ளது. இங்கு வந்த சுந்தரர்,
இறைவனிடம்
அடிமைத் திறம் பேசி, நெய்யும் பாலும்
தயிரும் கொண்டு என்று தொடங்கும் பதிகம் பாடிப் பொன் பெற்றார் என்பது வரலாறு.
இப்பதிகத்தில் ஐந்தாவது பாடலைத் தொடங்கிப்
பாடும் போது, இறைவன் பக்கத்தில்
உள்ள புளிய மரத்தில் சென்று ஒளிந்து கொண்டதாகவும், அதையறிந்த சுந்தரர் அங்குச் சென்று
பதிகத்தை தொடரவே, இறைவன் அப்புளிய
மரத்துக் காய்களையே பொன் காய்களாக விழுமாறு உதிர்க்க, சுந்தரர் அவற்றைப் பெற்றார் என்பதாக ஒரு
செய்தி இப்பகுதியில் செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகின்றது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நாற்ற மலர்ப் பூந் தண்டு அளி விரித்துப் புக்கு இசைக்கும்சீர் ஓணகாந்தன் தளி அருட்பிரகாசமே" என்று பாடி உள்ளார்.
சுந்தரர் திருப்பதிக
வரலாறு:
சுவாமிகள், காஞ்சியில் தங்கியிருந்த நாள்களில்
திருஒணகாந்தன் தளியை வணங்கி, பின் கச்சி அனேகதங்காவதம்
சென்று தரிசித்துப் பாடியருளியது இத்திருப்பதிகம்.
ஏயர்கோன்
கலிக்காம நாயனார் புராணப் பாடல் எண் : 190
சீர்ஆர்
காஞ்சி மன்னுதிருக்
காமக் கோட்டம்
சென்றுஇறைஞ்சி,
நீர்ஆர்
சடையார் அமர்ந்துஅருளும்
நீடு திருமேல்
தளிமேவி,
ஆரா
அன்பில் பணிந்துஏத்தும்
அளவில்"நொந்தா
ஒண்சுடர்"ம்
பார்ஆர்
பெருமைத் திருப்பதிகம்
பாடி, மகிழ்ந்து பரவினார்.
பொழிப்புரை : சிறப்பு மிக்க
காஞ்சிப் பதியில் விளங்கும் திருக்காமக் கோட்டத்திற்குச் சென்று வணங்கி, கங்கையைச் சடையில் உடைய பெருமான்
நிலைபெற்று வாழும் திருக்கச்சிமேற்றளி என்னும் கோயிலை அடைந்து ஆராத அன்பினால், பெருமானைப் பணிந்து போற் றும் வகையில்
இந்நிலவுலகில் அளவற்ற பெருமையுடைய `நுந்தா வொண் சுடரே' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி
மகிழ்ந்து போற்றினார்.
பெ.
பு. பாடல் எண் : 191
ஓண
காந்தன் தளிமேவும்
ஒருவர் தம்மை, உரிமையுடன்
பேணி
அமைந்த தோழமையால்
பெருகும் அடிமைத்
திறம்பேசி,
காண
மோடு பொன்வேண்டி
"நெய்யும்
பாலும்" கலைவிளங்கும்
யாணர்ப்
பதிகம் எடுத்துஏத்தி,
எண்இல் நிதிபெற்று
இனிதுஇருந்தார்.
பொழிப்புரை : திருவோணகாந்தன்தளியில்
எழுந்தருளி இருக்கும் இறைவரை, உரிமையோடு விரும்பி
ஏற்ற தோழமைத் திறம் பற்றிப் பெருகிவரும் அடிமைத் திறத்தினைக் கூறி, காசுடன் பொன்னை விரும்பி, `நெய்யும் பாலும்\' எனத் தொடங்கும் இசைக் கலைகளின் தன்மை
விளங்குகின்ற அழகிய திருப்பதிகத்தினை எடுத்துப் போற்றி அளவற்ற செல்வங்களைப் பெற்று
இனிதாக இருந்தார்.
குறிப்புரை : ஓணன், காந்தன் என்ற இரு அசுரர்களாலும் வழிபடப்
பெற்றதால் ஓணகாந்தன்தளி எனப் பெயர் பெற்றது. `நெய்யும் பாலும்' எனத் தொடங்கும் பதிகம், (தி.7 ப.5) இந்தளப் பண்ணில் அமைந்த தாகும். `கையில் ஒன்றும் காணம் இல்லை'என வரும் குறிப்பால், இது பொன் வேண்டியருளிய பதிகமாதல்
தெரியலாம். `உங்களுக்கு ஆட் செய்ய
மாட்டோம்; இல்லை என்னீர்
உண்டும் என்னீர்; ஓடிப் போகீர் பற்றுந்
தாரீர்; வாரமாகித்
திருவடிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே' என வரும் முறைப்பாடுகள் இவர்தம் தோழமைத்
திறத்தை விளக்கலின், `உரிமையுடன்
பேணியமைந்த தோழமையால்\' பாடி அருளியது எனச்
சேக்கிழார் குறித்தருளுவாராயினர்.
சுந்தரர்
திருப்பதிகம்
7. 005 திருவோணகாந்தன்தளி பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
நெய்யும்
பாலும் தயிரும் கொண்டு
நித்தல் பூசனை
செய்யல் உற்றார்,
கையில்
ஒன்றும் காணம் இல்லைக்
கழல் அடிதொழுது
உய்யின் அல்லால்,
ஐவர்
கொண்டுஇங்கு ஆட்ட ஆடி,
ஆழ்கு ழிப்பட்டு
அழுந்து வேனுக்கு,
உய்யு
மாறுஒன்று அருளிச் செய்யீர்,
ஓண காந்தன் தளி
உளீரே.
பொழிப்புரை : ` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும்
பெருமானிரே! ` நெய், பால், தயிர் முதலியவற்றால் உம்மை நாள்தோறும்
வழிபடுவாரது கையில் காசு ஒன்றும் காணப்படுகின்றதில்லை. அவ்வாறே, உமது கழலணிந்த பாதத்தைக் கும்பிட்டு
ஏதேனும் பெற்றாலன்றி, இவ்வுலகத்தில், புலன்களாகிய ஐவர் தண்டலாளர் ஐந்து
பக்கம் பற்றி ஈர்த்துச் சுழற்றச் சுழன்று, அச்சுழற்சி யாலாகிய துன்பம் என்னும்
ஆழ்ந்த குழியில் அகப்பட்டு ஏறமாட்டாது அழுந்திப் போவேனாகிய அடியேனுக்கு, அதனினின்றும் கரையேறும் வழியொன்றனைச்
சொல்லியருளீர் .
பாடல்
எண் : 2
திங்கள்
தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரள
வீசும்
கங்கை
யாளேல் வாய்தி றவாள்,
கணப தியேல் வயிறு
தாரி,
அங்கை
வேலோன் குமரன் பிள்ளை,
தேவி யார்கோல் தட்டி
ஆளார்,
உங்க
ளுக்குஆட் செய்ய மாட்டோம்
ஓண காந்தன் தளியு
ளீரே.
பொழிப்புரை : ` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும்
பெருமானிரே , பிறை தங்குமாறு
சேர்த்துக் கட்டியுள்ள உமது சடையின் மேலும் , ஒப்பற்ற அலைகள் தோன்றிப் புரளுமாறு
வீசுகின்ற , ` கங்கை ` என்னும் தேவியோவெனில் , உமது பக்கத்தில் எஞ் ஞான்றும் உள்ள
உமாதேவியார்க்கு அஞ்சி ஒருஞான்றும் வாய் திறத்தலே இல்லை ; உம் மூத்த மகனாகிய விநாயகனோவெனில் , வயிறு ஒன்றையே முதன்மையாக உடையவன்; ( பிறிதொன்றையும் அறியான்). இளைய மகனாகிய, அகங்கையில் வேற்படையை யுடைய
முருகனோவெனில், விளையாட்டுப் பிள்ளை; (யாதொன்றையும்
பேணான்). தேவியாராகிய உமையம்மையாரோவெனில், உம்மை ஒழிந்து அடியவரை ஆளுவாரல்லர்; ( நீரோ அடியவர் குறை நோக்கி யாதும்
செய்யீர்) ஆதலின், உம் குடிக்கு யாங்கள்
அடிமை செய்ய மாட்டேமாகின்றேம்.
பாடல்
எண் : 3
பெற்ற
போழ்தும் பெறாத போழ்தும்
பேணி உம்கழல் ஏத்து
வார்கள்
மற்றுஓர்
பற்றுஇலர் என்று இரங்கி,
மதியு டையவர் செய்கை
செய்யீர்,
அற்ற
போழ்தும் அலந்த போழ்தும்
ஆவற் காலத்து அடிகேள்
உம்மை
ஒற்றி
வைத்துஇங்கு உண்ண லாமோ
ஓண காந்தன் தளி உளீரே.
பொழிப்புரை : தலைவரே, `திருவோணகாந்தன்தளி` என்னும் திருக்கோயிலில் வாழும்
பெருமானிரே, உம்மால் யாதானும்
ஒன்றை அடையினும், அடையாதொழியினும்
அவ்வாற்றான் வேறுபடுதல் இன்றி எஞ்ஞான்றும் ஒருபெற்றியே உம் திருவடியைப்
பற்றிநின்று துதிக்கும் அடியவர்,
`நம்மையன்றி
வேறொரு துணையும் இல்லாதவர்` என்று நினைத்து, அறிவுடையவர்க்கு உரிய செய்கை ஒன்றும்
நீர் செய்கின்றிலீர்; அதனால், உம் அடியவர் தங்கள் கையிற் பொருள்
இல்லாதொழிந்த காலத்தும், அது காரணமாக
வழியொன்றும் காணாது அலைந்த காலத்தும், உம்மைப்
பிறருக்கு ஒற்றியாகவைத்துப் பிழைத்தல்தான் செயற்பாலதோ? ( சொல்லீர்)
பாடல்
எண் : 4
வல்லது
எல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தி னாலும், வாய்தி றந்து, ஒன்று
இல்லை
என்னீர், உண்டும் என்னீர்,
எம்மை ஆள்வான்
இருப்பது என்நீர்,
பல்லை
உக்க படுத லையில்
பகல்எ லாம்போய்ப்
பலிதி ரிந்துஇங்கு
ஒல்லை
வாழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓண காந்தன் தளி
உளீரே.
பொழிப்புரை : ` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும்
பெருமானிரே , யாம் வல்ல
கருத்துக்கள் பலவும் சொல்லி உம்மை வாழ்த்தியபோதும் , நீர் வாய்திறந்து , எமக்கு ஈய யாதேனும் ஒருபொருளை , ` இல்லை ` என்றும் சொல்கின்றிலீர் ; ` உண்டு ` என்றும் சொல்கின்றிலீர் ; நீர் எம்மைப் பணிகொள்ள இருத்தல் எவ்வாறு
? நாள் தோறும் சென்று , பல் நீங்கிய , இறந்தாரது தலையில் இவ்வுலகில் பிச்சை
ஏற்கத் திரிந்தும் , இல்வாழ்க்கையை
விரைவில் விட்டொழிய மாட்டீர் .
பாடல்
எண் : 5
கூடிக்
கூடித் தொண்டர் தங்கள்
கொண்ட பாணி குறைப
டாமே
ஆடிப்
பாடி அழுது நெக்குஅங்கு,
அன்பு உடையவர்க்கு
இன்பம் ஓரீர்,
தேடித்
தேடித் திரிந்துஎய்த் தாலும்
சித்தம் என்பால்
வைக்க மாட்டீர்,
ஓடிப்
போகீர் பற்றும் தாரீர்,
ஓண காந்தன் தளி
உளீரே.
பொழிப்புரை : ` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும்
பெருமானிரே , நீர் , தம்மிற் பலகாலும் கூடி, அடியவர்க்கு உரிய, பொருந்திய தாளத்தொடுபட்ட பாட்டுக்களைக்
குற்றம் உண்டாகாமலே பாடியும், ஆடியும், மனம் நெகிழ்ந்து அழுதும், மற்றும் அவ்வாற்றால் அன்புடையராய்
இருப்பவர்க்கு நன்மை செய்யு மாற்றினை நினைக்கின்றிலீர் ; உம்மைக் காண வந்து பலவிடத்திலும் தேடித்
தேடித் திரிந்தாலும், என்னிடத்தில் இரக்கம்
வைத்துக் காட்சி யளிக்கமாட்டீர்;
கோயிலைவிட்டுப்
போகவும் மாட்டீர்; கோயிலில் வந்து
பாடுகின்ற எனக்குப் பற்றுக்கோடும் தரமாட்டீர்; ( என் செய்வேன் !)
பாடல்
எண் : 6
வார்இ
ருங்குழல் வாள்நெ டுங்கண்
மலைம கள்மது விம்மு
கொன்றைத்
தார்இ
ருந்தட மார்பு நீங்காத்
தைய லாள்,உலகு உய்ய வைத்த
கார்இ
ரும்பொழில் கச்சி மூதூர்க்
காமக் கோட்டம்உண் டாக, நீர்போய்
ஊர்இ
டும்பிச்சை கொள்வது என்னே,
ஓண காந்தன் தளி உளீரே.
பொழிப்புரை : ` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும்
பெருமானிரே. தேன் ததும்புங் கொன்றை மாலையை உடைய உமது பெரிய அகன்ற மார்பினின்றும்
நீங்காத, நீண்ட கரிய
கூந்தலையும், வாள்போலும் நெடிய
கண்களையும் உடைய மலைமகளாகிய தேவி. உலக மெல்லாம் துன்பமின்றி வாழ்தற் பொருட்டு
வைத்துள்ள சிறந்த அறச்சாலையாகிய,
மேகம்
தவழும் பெரிய சோலையையுடைய,
`கச்சி` என்னும் பழைய ஊரின்கண் உள்ள திருக்காமக்
கோட்டம் இருக்க, நீர் சென்று, ஊரவர் இடும் பிச்சையை ஏற்பது ஏன் ?
பாடல்
எண் : 7
பொய்ம்மை
யாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை, அகத்தும் இல்லை,
மெய்ம்மை
சொல்லி ஆள மாட்டீர்,
மேலை நாள்ஒன்று
இடவும் கில்லீர்,
எம்மைப்
பெற்றால் ஏதும் வேண்டீர்,
ஏதுந் தாரீர் ஏதும்
ஓதீர்,
உம்மை
அன்றே எம்பெரு மான்
ஓண காந்தன் தளி
உளீரே.
பொழிப்புரை :` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானிரே
. நீர் பொய்ச் சொல்லினாலே காலங் கழித்து, திருக்கோயிலின்
புறத்தும் காணப்படீர் ; அகத்தும் காணப்படீர்
. ஆகவே நீர் நும் அடியவரை மெய்சொல்லி ஆளமாட்டீர்போலும்! இனி, பின்வரும் நாள்களிலும் ஒன்றும்
தரமாட்டீரேயாம்; ஏனெனில், எம்மை ஆளாகப் பெறுமளவும் விடாது வழக்காடுதல்
அல்லது , பெற்றுவிட்டால்
பின்பு எம்பால் ஒரு பணியையும் விரும்புகின்றிலீர் . எவ்வாற்றான் நோக்கினும், நீர் எமக்கு யாதும் ஈகின்றவராயோ , யாதும் சொல்கின்றவராயோ தோன்றவில்லை.
இந்நிலையில் நீர் எமக்குத் தலைவராய் இருத்தல், இப்பிறப்பு வந்தபின்னன்று ; முற் பிறப்புத் தொட்டேயாம் .
பாடல்
எண் : 8
வலையம்
வைத்த கூற்றம் மீவான்
வந்து நின்ற வார்த்தை
கேட்டு,
சிலைஅ
மைத்த சிந்தை யாலே
திருவ டீதொழுது
உய்யின் அல்லால்,
கலைஅ
மைத்த காமச் செற்றக்
குரோத லோப மதவ ரூடை
உலைஅ
மைத்து,இங்கு ஒன்ற மாட்டேன்
ஓண காந்தன் தளி
உளீரே.
பொழிப்புரை : ` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும்
பெருமானிரே , எத்தகையோரையும்
கொண்டு செல்ல, பாசத்தைக் கையிலே
கொண்டுள்ள கூற்றுவன் வந்து வானத்தின்மேல் நின்ற செய்தியைக்கேட்டு , அடியேன் , நீர் கற்போல அமைத்துத் தந்த அம்
மனத்தைக் கொண்டே உமது திருவடியைத் தொழுது அக்கூற்றுவனுக்குத் தப்ப
நினைக்கின்றேனேயன்றி , விதி அமைத்துத் தந்த
ஐம் பொறிகளாகிய ஐந்து உலைக்களக் கூட்டத்தைப் பொருளாக உள்ளத் தமைத்து , ` காமம் , மாற்சரியம் , குரோதம் , உலோபம் , மதம் ` என்ப வரிடைப் பொருந்தி வாழ
நினைக்கின்றிலேன் .
பாடல்
எண் : 9
வார
மாகித் திருவ டிக்குப்
பணிசெய் தொண்டர்
பெறுவது என்னே,
ஆரம்
பாம்பு, வாழ்வது ஆர்ஊர்,
ஒற்றி யூரேல் உம்மது
அன்று,
தார
மாகக் கங்கை யாளைச்
சடையில் வைத்த
அடிகேள், உந்தம்
ஊரும்
காடு, உடையும் தோலே,
ஓண காந்தன் தளி
உளீரே.
பொழிப்புரை : ` திருவோணகாந்தன்தளி ` என்னும் திருக்கோயிலில் வாழும்
பெருமானிரே , ` கங்கை ` என்பவளைத்தாரமாகக் கொண்டு , இடமின்றிச் சடையில் வைத்துள்ள அடிகளே , நீர் மார்பில் அணியும் ஆரமாவது பாம்பு ; வாழும் ஊர் உமக்கு உரிமையில்லாதது ; `ஒற்றியூர் உளதே` எனில் `ஒற்றி` யெனவே, அஃது உம்முடையது அன்றாயிற்று . உமக்கு
இல்லமாவது சுடுகாடு ; உமது உடையாவது தோல் .
இங்ஙனம் ஆதலின் , உம்மிடத்து
அன்புடையவராய் உம் திருவடிக்குத் தொண்டு செய்யும் அடியவர் உம்மிடத்தினின்றும்
பெறுவது எதனை ?
பாடல்
எண் : 10
ஓவ
ணம்மேல் எருதுஒன்று ஏறும்
ஓண காந்தன் தளி
உளார்தாம்
ஆவ
ணஞ்செய்து ஆளும் கொண்ட,
அரைது கில்லொடு பட்டு
வீக்கிக்
கோவ
ணம்மேற் கொண்ட வேடம்,
கோவை யாகஆ ரூரன்
சொன்ன
பாவ
ணத்தமிழ் பத்தும்வல் லார்க்கு,
பறையுந் தாம்செய்த
பாவம் தானே.
பொழிப்புரை : நீக்கப்படும் தன்மையை
ஏற்றுள்ள ஒற்றை எருதை ஊர்தியாகக் கொள்ளும் , திருவோணகாந்தன்தளியில் வாழ்கின்ற இறைவர், நம்பியாரூரனை, தாமே பத்திரம் எழுதிக் கொண்டுவந்து
ஆட்கொண்ட எல்லைக்கண், துகிலும் பட்டும்
உடுத்திருந்து , பின்பு அவர் ஆணைவழியே
அவரை அவன் அணுகிப் பாடுதலாகிய தொண்டினைச் செய்யும் எல்லைக் கண் கோவண மட்டிலே
உடையவராய் நின்ற கோலத்தின் தன்மைகள் பலவும் நிரல்படத் தோன்றுமாறு அமைத்து
அவன்பாடிய , பா வடிவாகிய இத்
தமிழ்ச் செய்யுள்கள் பத்தினையும் பொருளுணர்ந்து அன்பு மீதூரப் பண்ணொடு நன்கு
பாடவல்லவர்க்கு அவர் செய்த பாவம் விரைந்து நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
அருமையான பதிவு ஆழ்ந்த விளக்கம்
ReplyDeleteதங்கள் பணி மிகவும் அயராத உழைப்பு