திருக்கச்சி மேற்றளி,
காஞ்சீபுரம்
தொண்டை நாட்டுத் திருத்தலம்
இறைவன்
-- திருமேற்றளிநாதர்
இறைவி
-- காமாட்சி அம்மன்
பதிகம் 1. திருநாவுக்கரசர் - மறையது பாடி
2.
சுந்தரர்
- நொந்தா ஒண்சுடரே
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின்
அருகில் பிள்ளையார்பாளையம் என்னும் இடத்தில் திருமேற்றளித் தெருவில் இத்திருத்தலம்
அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
தல வரலாறு: ஒருமுறை
மகாவிஷ்ணுவிற்கு சிவனின் இலிங்க வடிவம் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எனவே
சிவசொரூபம் கிடைக்க அருளும்படி சிவனிடம் வேண்டினார். சிவனோ, இது சாத்தியப்படாது என சொல்லி ஒதுங்கிக்
கொண்டார். விஷ்ணுவும் விடுவதாக இல்லை. சிவனை வேண்டி தவம் செய்ய தொடங்கினார்.
விஷ்ணுவின் மன திடத்தை கண்டு வியந்த சிவன் அவருக்கு அருள்புரிய எண்ணம் கொண்டார்.
அவரிடம் இத்தலத்தில் மேற்கு நோக்கி சுயம்புவாக வீற்றிருக்கும் தன்னை வேண்டி தவம்
செய்து வழிபட்டு வர, இலிங்க வடிவம்
கிடைக்கப் பெறும் என்றார். அதன்படி இத்தலம் வந்த மகாவிஷ்ணு தீர்த்தத்தில் நீராடி
வேகவதி நதிக்கரையில் சிவனை நோக்கி கிழக்கு பார்த்து நின்ற கோலத்திலேயே தவம்
செய்தார். சிவத்தல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர் இத்தலம் வந்த போது
தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன்தான் என்று எண்ணி, சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில்
நின்றவாறே பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு அப்படியே
உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணு லிங்க வடிவம் பெற்றபோது சம்பந்தர் தனது
பதகத்தைப் பாடி முடித்தார். எனவே,
இறுதியில்
அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும், அதற்கு முன்பு பாதமும் இருப்பதை
காணலாம். சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர் ஓதஉருகீஸ்வரர் என்ற
பெயருடன் இவ்வாலயத்தில் கிழக்கு நோக்கி சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். ஆனால்
திருஞானசம்பந்தர் பாடலால் மகாவிஷ்ணுவிற்கு சிவசாரூபம் கிடைத்ததாகப் புராணங்கள்
கூறும் பாடல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.
கோயில் அமைப்பு: ஆலயத்தின்
இராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. கோபுர வாயிலின்
வெளியே ஒருபுறம் துவார கணபதியும்,
மற்றொரு
புறம் முருகப்பெருமானும் உள்ளனர். உள்ளே நுழைந்தால் விசாலமான இடம் உள்ளது. முன்னே
சென்றால் நந்தி, பலிபீடம் ஆகியவை
உள்ளன. வலதுபுறம் நவக்கிரக சந்நிதி உள்ளது. அடுத்துத் தனிக்கோயிலாக விளங்குவது
மேற்கு நோக்கிய மேற்றளிநாதர் சந்நிதியாகும். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, திருமால், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர்
சந்நிதி உள்ளது. இடதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற கோலம். காஞ்சி மண்டலம்
முழுமைக்கும் அம்பாள் காமாட்சியேயாதலின் இம்மூர்த்தம் பிற்காலப் பிரதிஷ்டையாகும்.
அடுத்து இடதுபுறம் நால்வர் சந்நிதி. இதுவம் ஒரு பிறகால பிரதிஷ்டை என்று
சொல்லப்படுகிறது. கோபுர வாயிலைக்கடந்து உள்நுழைந்து பிராகார வலமாக வரும் போது
செல்வ விநாயகர் சந்நிதி, சுப்பிரமணியர்
சந்நிதி, காசிவிசுவநாதர், பைரவர் சந்நிதிகள் முதலியன உள்ளன.
திருமேற்றளீசுவரரே இவ்வாலயத்தில் பிரதான
மூர்த்தியாவர். ஆயினும், கோவிலின்
இராஜகோபுரமும், பிரதான வாசலும் ஓத
உருகீசுவரருக்கே உள்ளது. இவருக்கு நேரே உள்ள நந்திக்குத்தான் பிரதோஷ வழிபாடுகளும்
நடக்கிறது.
திருமேற்றளித் தெருவின் ஒரு கோடியில்
மேற்றளீசுவரர் ஆலயம் அமைந்திருக்க. இத்தெருவின் மற்றொரு கோடியில்
திருஞானசம்பந்தரின் ஆலயம் உள்ளது. மிகச்சிறிய கோயில். ஞானசம்பந்தர் சந்நிதி
மட்டுமே உள்ளது. மூலத்திருமேனி திருமேற்றளிக் கோபுரத்தை நோக்கியவாறு கைகளைக்
குவித்து வணங்கும் நிலையில் நின்ற கோலத்தில் உள்ளது. இவரின் உற்சவத் திருமேனி
வலக்கை சுட்டிய விரலுடன் இடக்கையில் பொற்கிண்ணம் ஏந்திய நிலையில் பக்கத்தில்
உள்ளது. இத்தெருவின் நடுவில் "உற்றுக்கேட்ட முத்தீசர்" ஆலயம் உள்ளது.
ஞானசம்பந்தர் இத்தலம் வந்து பதிகம் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து
கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாக வரலாறு.
காலை
7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வள்ளல்
பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஆகும்தென் காற்று அளி வண் பூ மணத்தைக் காட்டும் பொழில்
கச்சி மேற்றளி வாழ் ஆனந்த வீட்டு உறவே" என்று பாடி உள்ளார்.
இத்
திருத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் எழுந்தருளியதாக வரலாறு உள்ளது. திருப்பதிகம் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. அப்பர்
பெருமான் பாடி அருளிய ஒரு திருப்பதிகமும், சுந்தரர் பாடி அருளிய ஒரு
திருப்பதிகமும் உள்ளது.
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரி
புராணப் பாடல் எண் : 326
சீர்வளரும்
மதில்கச்சி நகர்த்திருமேல் தளிமுதலா,
நீர்வளரும்
சடைமுடியார் நிலவிஉறை ஆலயங்கள்
ஆர்வம்உறப்
பணிந்துஏத்தி, ஆய்ந்ததமிழ்ச்
சொல்மலரால்
சார்வுறுமா
லைகள்சாத்தி, தகும்தொண்டு
செய்துஇருந்தார்.
பொழிப்புரை :சீர்மை மிக்க
மதில்களையுடைய திருக்கச்சி மேற்றளி முதலாகக் கங்கை தங்கிய சடைமுடியார் நிலைபெற
வீற்றிருக்கும் கோயில்கள் பலவற்றையும் ஆர்வத்துடன் வணங்கி, ஆய்ந்த தமிழ்ச் சொல் மாலைகளால் ஆய
திருப்பதிகங்களைச் சாத்தித் தக்க தொண்டுகளைச் செய்த வண்ணம் அங்கே தங்கியிருந்தார்.
குறிப்புரை : திருக்கச்சித்
திருமேற்றளியில் அருளிய பதிகம் `மறையது பாடி` (தி.4 ப.43) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகம்
ஆகும். ஆலயங்கள் - எவ்வெக் கோயில்கள் எனத் தெரியவில்லை.
4. 043 திருக்கச்சிமேற்றளி திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மறைஅது
பாடிப் பிச்சைக்கு
என்று,அகம் திரிந்து
வாழ்வார்,
பிறைஅது
சடைமு டிமேல்,
பெய்வளை யாள்த னோடும்
கறைஅது
கண்டம்கொண்டார்
காஞ்சிமா நகர்தன்
உள்ளால்
இறையவர்
பாடல்ஆடல்
இலங்குமேல் தளிய
னாரே.
பொழிப்புரை : காஞ்சிமா நகரிலே
தலைவராய்ப் பாடல் ஆடல் விளங்கும் மேற்புறக் கோயிலில் உறையும் பெருமான் வேதங்களைப்
பாடிக்கொண்டு பிச்சை எடுப்பதற்காக வீடுதோறும் திரிந்து வாழ்பவராய் , பிறையை அணிந்த சடையிலே கங்கையைச்
சூடியவராய்க் கழுத்தில் விடத்தின் கருஞ்சுவடு கொண்டவராய் உள்ளார் .
பாடல்
எண் : 2
மால்அன
மாயன்தன்னை
மகிழ்ந்தனர், விருத்தர் ஆகும்
பாலனார், பசுப தியார்,
பால்வெள்ளை நீறு
பூசிக்
காலனைக்
காலால் செற்றார்
காஞ்சிமா நகர்தன்
உள்ளால்
ஏலநல்
கடம்பன் தந்தை
இலங்குமேல் தளிய
னாரே.
பொழிப்புரை : முருகனுடைய
தந்தையாராய்க் காஞ்சி நகரத்து விளங்கும் மேற்புறக் கோயிலிலுள்ள பெருமான் மேகம்
போன்ற நிறத்தை உடைய திருமாலைத் தம் திருமேனியில் மகிழ்ந்து ஏற்றவராய் , எவர்க்கும் மூத்தவராகவும் இளைய
சிறுவராகவும் வடிவு கொள்பவராய் ,
ஆன்மாக்களுக்குத்
தலைவராய் , பால் போன்ற வெள்ளிய
திருநீற்றைப் பூசுபவராய்க் கூற்றுவனைத் தம் திருவடியால் ஒறுத்தவராய் உள்ளார் .
பாடல்
எண் : 3
விண்இடை
விண்ண வர்கள்
விரும்பிவந்து
இறைஞ்சி வாழ்த்தப்
பண்இடைச்
சுவையின் மிக்க
கின்னரம் பாடல்
கேட்பார்,
கண்இடை
மணியின் ஒப்பார்,
காஞ்சிமா நகர்தன்
உள்ளால்
எண்இடை
எழுத்தும் ஆனார்,
இலங்குமேல் தளிய
னாரே.
பொழிப்புரை :எண்ணும் எழுத்துமாய்
விளங்கும் காஞ்சி மேற்றளியனார் வானத்திலுள்ள தேவர்கள் விருப்பத்துடன் வந்து வணங்கி
வாழ்த்தப் பண் இன்பம் மிக்க இன்னிசைப் பாடல்களைக் கேட்பவராய்க் கண்மணிபோல
அடியவர்களுக்கு ஞானஒளி வழங்குபவராய் உள்ளார் .
பாடல்
எண் : 4
சோமனை
அரவி னோடு
சூழ்தரக் கங்கை
சூடும்
வாமனை, வான வர்கள்
வலங்கொடு வந்து
போற்றக்
காமனைக்
காய்ந்த கண்ணார்,
காஞ்சிமா நகர்தன்
உள்ளால்
ஏமநின்
றாடும் எந்தை
இலங்குமேல் தளிய
னாரே.
பொழிப்புரை : மன்மதனை வெகுண்ட
நெற்றிக் கண்ணராய் , இரவில் யாமத்தில்
கூத்து நிகழ்த்தும் எந்தையாராய் ,
பிறையைப்
பாம்பினோடும் கங்கையோடும் சூடும் அழகராய்த் தேவர்கள் வலப்புறமாகச் சுற்றி வந்து
துதிக்குமாறு காஞ்சி மேற்றளியனார் அமர்ந்துள்ளார் .
பாடல்
எண் : 5
ஊன்அவர், உயிரி னோடும்
உலகங்கள் ஊழி ஆகித்
தானவர், தனமும் ஆகித்
தனஞ்சய னோடு எதிர்ந்த
கானவர், காள கண்டர்,
காஞ்சிமா நகர்தன்
உள்ளால்
ஏனம்அக்கு
ஓடு பூண்டார்ஸ
இலங்குமேல் தளிய
னாரே.
பொழிப்புரை : நீலகண்டராய் , எலும்போடு பன்றிக் கொம்பினை அணிந்தவராய்
, அருச்சுனனோடு
எதிர்த்துப் போரிட்ட வேடராய் , உலகங்களிலும் , ஊழிகளிலும் , உடம்பினுள்ளும் , உயிரினுள்ளும் உடனாய்க் கலந்து
இருப்பவராய்த் தானம் செய்பவராய்ச் செல்வ வடிவினராய்க் காஞ்சிமேற்றளியனார்
அமைந்துள்ளார் .
பாடல்
எண் : 6
மாயனாய், மாலன் ஆகி,
மலரவன் ஆகி, மண்ணாய்த்
தேயமாய்த்
திசைஎட்டு ஆகித்
தீர்த்தமாய்த்
திரிதர் கின்ற
காயமாய்க்
காயத்து உள்ளார்,
காஞ்சிமா நகர்தன்
உள்ளால்
ஏயமென்
தோளி பாகர்,
இலங்குமேல் தளிய
னாரே.
பொழிப்புரை : தமக்குப் பொருந்திய
மென்மையான தோள்களை உடைய பார்வதியின் பாகராய் , திருமாலாகவும் , இந்திரனாகவும் , பிரமனாகவும் , நிலமாகவும் , நாடாகவும் எண் திசைகளாகவும் புனித
நீர்களாகவும் இயங்குதிணைகளுக்கு உரிய உடல்களாகவும் , அவ்வுடல்களின் உள் இருப்பவராகவும்
காஞ்சிமேற்றளியனார் கரந்து எங்கும் பரந்து உள்ளார் .
பாடல்
எண் : 7
மண்ணினை
உண்ட மாயன்
தன்னைஓர் பாகம்
கொண்டார்,
பண்ணினைப்
பாடி ஆடும்
பத்தர்கள் சித்தம்
கொண்டார்,
கண்ணினை
மூன்றும் கொண்டார்,
காஞ்சிமா நகர்தன்
உள்ளால்
எண்ணினை
எண்ண வைத்தார்,
இலங்குமேல் தளிய
னாரே.
பொழிப்புரை :உலகை விழுங்கிய
திருமாலை ஒரு பாகமாகக் கொண்டவராய் ,
இன்னிசைகளைப்
பாடிக் கூத்தாடும் அடியார்கள் உடைய உள்ளங்களைத் தமக்கு இருப்பிடமாகக் கொண்டவராய் , முக் கண்ணராய் , அடியார்களுடைய எண்ணத்திலே தம்மையே
தியானிக்குமாறு வைத்தவராய்க் காஞ்சிமேற்றளியனார் அமைந்துள்ளார் .
பாடல்
எண் : 8
செல்வியைப்
பாகம் கொண்டார்,
சேந்தனை மகனாக்
கொண்டார்,
மல்லிகைக்
கண்ணி யோடு
மாமலர்க் கொன்றை
சூடிக்
கல்வியைக்
கரைஇலாத
காஞ்சிமா நகர்தன்
உள்ளால்
எல்லியை
விளங்க நின்றார்,
இலங்குமேல் தளிய
னாரே.
பொழிப்புரை : பார்வதிபாகராய் , முருகனை மகனாகக் கொண் டவராய் மல்லிகை
கொன்றை இவற்றாலாய முடி மாலையைச் சூடிக் கல்வியைக் கரை கண்ட சான்றோர் வாழும்
காஞ்சிநகரிலே , சூரியன் விளக்கமுற
அவனொளிக்கு உள்ளொளியாய் மேற்றளியனார் விளங்குகின்றார் .
பாடல்
எண் : 9
வேறுஇணை
இன்றி என்றும்
விளங்குஒளி மருங்கி
னாளைக்
கூறுஇயல்
பாகம் வைத்தார்,
கோள்அரா மதியும்
வைத்தார்,
ஆறினைச்
சடையுள் வைத்தார்,
அணிபொழில் கச்சி
தன்னுள்
ஏறினை
எறும் எந்தை
இலங்குமேல் தளிய
னாரே.
பொழிப்புரை : தனக்கு இணையில்லாதபடி
ஒளிவீசும் குறுகிய இடையை உடைய பார்வதியின் பாகராய்க் கொடிய பாம்பு பிறை கங்கை என்ற
இவற்றைச் சடையுள் வைத்துக் காளையை ஏறி ஊரும் எம் தந்தையாராய்க் கச்சிமேற்றளியனார்
விளங்குகிறார் .
பாடல்
எண் : 10
தென்னவன்
மலை எடுக்கச்
சேயிழை நடுங்கக்
கண்டு
மன்னவன்
விரலால் ஊன்ற
மணிமுடி நெரிய வாயால்
கன்னலின்
கீதம் பாடக்
கேட்டவர், காஞ்சி தன்னுள்
இன்அவற்கு
அருளிச் செய்தார்,
இலங்குமேல் தளிய
னாரே.
பொழிப்புரை : காஞ்சியில் இலங்கும்
மேற்றளியனார் தென் திசையை ஆண்ட இராவணன் கயிலையைப் பெயர்க்கப் பார்வதி நடுங்கக்
கண்டு , என்றும்
நிலையாயிருக்கும் அவர் தம் விரலால் அழுத்த , அதனால் இராவணனுடைய அழகிய தலைகள் நெரியப்
பின் அவன் வாயினால் கரும்பைப் போன்ற இனிய பாடல்கள் பாட , அவற்றைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு
இன்னருள் செய்தவராவர் .
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
சுந்தரர் திருப்பதிக
வரலாறு:
வன்தொண்டர் காஞ்சிபுரத்தில்
தங்கியிருக்கும் நாள்களில் திருக்காமக்கோட்டம் சென்று இறைஞ்சி, திருக்கச்சி மேல்தளி தொழுது
பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12
ஏயர்கோன். புரா. 190.)
பெரிய
புராணப் பாடல் எண் : 190
சீர்ஆர்
காஞ்சி மன்னுதிருக்
காமக் கோட்டம்
சென்றுஇறைஞ்சி
நீர்ஆர்
சடையார் அமர்ந்தருளும்
நீடு திருமேல்
தளிமேவி
ஆரா
அன்பில் பணிந்துஏத்தும்
அளவில் "நொந்தா
வொண்சுட"ராம்
பார்ஆர்
பெருமைத் திருப்பதிகம்
பாடி மகிழ்ந்து
பரவினார்.
பொழிப்புரை : சிறப்பு மிக்க
காஞ்சிப் பதியில் விளங்கும் திருக்காமக் கோட்டத்திற்குச் சென்று வணங்கி, கங்கையைச் சடையில் உடைய பெருமான்
நிலைபெற்று வாழும் திருக்கச்சிமேற்றளி என்னும் கோயிலை அடைந்து ஆராத அன்பினால், பெருமானைப் பணிந்து போற் றும் வகையில்
இந்நிலவுலகில் அளவற்ற பெருமையுடைய `நுந்தா வொண் சுடரே\' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி
மகிழ்ந்து போற்றினார்.
குறிப்புரை : `நொந்தா வொண்சுடரே\' எனத் தொடங்கும் பதிகம் நட்ட ராகப்
பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.21).
7. 021 திருக்கச்சிமேற்றளி பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
நொந்தா
ஒண்சுடரே, நுனையே நினைந்து
இருந்தேன்,
வந்தாய், போய்அறியாய், மனமேபு குந்துநின்ற,
சிந்தாய், எந்தைபிரான், திரு மேல்த ளிஉறையும்
எந்தாய், உன்னை அல்லால், இனி ஏத்த மாட்டேனே.
பொழிப்புரை : அவியாத ஒளிபொருந்திய
விளக்குப் போல்பவனே , என் தந்தைக்கும்
பெருமானே , கச்சித்திருமேற்றளியில்
எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே , உன்னையே
நினைந்திருந்த என் உள்ளத்திலே புகுந்துநின்ற சிந்தனைப் பொருளே , என் உள்ளத்தில் புகுந்த நீ பின்
நீங்கியறியாய் ; ஆதலின் , இனி அடியேன் உன்னை யன்றிப் பிறரைப்
புகழவே மாட்டேன் .
பாடல்
எண் : 2
ஆள்தான்
பட்டமையால் அடியார்க்குத் தொண்டுபட்டுக்
கேட்டேன்
கேட்பதுஎல்லாம் பிறவாமை கேட்டுஒழிந்தேன்,
சேட்டுஆர்
மாளிகைசூழ் திரு மேல்த ளிஉறையும்
மாட்டே, உன்னை அல்லால், மகிழ்ந்து ஏத்த
மாட்டேனே.
பொழிப்புரை : பெருமையை யுடைய பல
மாளிகைகள் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் செல்வமாய்
உள்ளவனே , அடியேன் உனக்கு
அடிமையாயினமையால் , உன் அடியார்க்கு
அடியனாகின்ற பேற்றைப் பெற்றேன் . அதனால் , உன்பால் அடியேன் வேண்டற்பாலன
பலவற்றையும் வேண்டி , இறுதியாகப் பிறவாத
நிலையை வேண்டியொழிந்தேன் . இனி ,
என்
மகிழ்ச்சி மீதூர்வால் உன்னைப் புகழ்தலன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன் .
பாடல்
எண் : 3
மோறாந்து
ஓர்ஒருகால் நினையாது இருந்தாலும்,
வேறா
வந்து என்உள்ளம் புகவல்ல மெய்ப்பொருளே,
சேறுஆர்
தண்கழனித் திருமேல்த ளியுறையும்
ஏறே, உன்னை அல்லால், இனி ஏத்த மாட்டேனே.
பொழிப்புரை : அடியேன் ஓரொருகால்
மயக்கம் உற்று உன்னை நினையாதிருப்பினும் , நீதானே வந்து என் உள்ளத்தில் புகுந்து
நினைப்பிக்கவல்ல உண்மைப் பொருளானவனே . சேறு நிறைந்த குளிர்ந்த கழனிகளை யுடைய
கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற ஆண் சிங்கம் போல்பவனே . இனி , அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழவே
மாட்டேன் .
பாடல்
எண் : 4
உற்றார்
சுற்றம்எனும் அது விட்டு நுன்அடைந்தேன்,
எற்றால்
என்குறைவு, என் இடரைத் துறந்து
ஒழிந்தேன்,
செற்றாய்
மும்மதிலும், திருமேல்த ளிஉறையும்
பற்றே, நுன்ன அல்லால், பணிந்து ஏத்த
மாட்டேனே.
பொழிப்புரை : மூன்று மதில்களையும்
அழித்தவனே , கச்சித் திரு
மேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற துணையானவனே , அடியேன் , என்னோடு நெருங்கிய உறவினர் பலர் உளர்
என்றும் , மற்றும் சுற்றத்தார்
பலர் உளர் என்றும் நினைத்து , அவர்கள் தொடர்பிலே
பட்டு , உய்ந்து போகமாட்டாது
நிற்கின்ற அந்நிலையைத் துறந்து ,
உன்னையே
புகலிடமாக அடைந்தேன் . அதனால் ,
இப்பொழுது
, எத்தன்மையதான
பொருளால் , என்ன குறை
அடியேனுக்கு இருக்கின்றது ? ஒன்றும் இல்லை . என்
துன்பங்களையெல்லாம் அடியோடு நீக்கிவிட்டேன் . ஆதலின் இனி , உன்னையன்றிப் பிறரைப் பணிந்து
புகழ்தலைச் செய்யவே மாட்டேன் .
பாடல்
எண் : 5
எம்மான்
எம்அனையென்று அவர் இட்டு இறந்து ஒழிந்தார்,
மெய்ம்மால்
ஆயினதீர்த்து அருள்செய்யும் மெய்ப்பொருளே,
கைம்மா
ஈர்உரியாய், கனமேல்த ளிஉறையும்
பெம்மான், உன்னைஅல்லால், பெரிது ஏத்த
மாட்டேனே.
பொழிப்புரை : உடம்பு இடமாக
வருகின்ற மயக்கமாயினவற்றை எல்லாம் நீக்கி , மெய்யுணர்வைத் தந்தருளுகின்ற மெய்ப்பொருளாய்
உள்ளவனே , யானையை உரித்த தோலை
உடையவனே , பெருமை பொருந்திய
கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற பெரியோனே , என்னைத் தாங்குகின்ற . ` என் தந்தை ` என்றும் , ` என் தாய் ` என்றும் சொல்லப்பட்டவர்கள் என்னை
இங்குத் தனியே வைத்து விட்டு இறந்துவிட்டார்கள் ; ஆகவே , இனி , உன்னையன்றிப் பிறரை நான் பெரிய பொருளாக
நினைத்துப் புகழவேமாட்டேன் .
பாடல்
எண் : 6
நானேல்
உன்அடியே நினைந்தேன்நி னைதலுமே,
ஊன்ஏர்
இவ்வுடலம் புகுந்தாய்,என் ஒண்சுடரே,
தேனே, இன்அமுதே, திருமேல்த ளிஉறையும்
கோனே, உன்னைஅல்லால், குளிர்ந்து ஏத்த மாட்டேனே.
பொழிப்புரை : எனது ஒளி பொருந்திய
விளக்குப் போன்றவனே , தேன் போன்றவனே , இனிய அமுதம் போன்றவனே , கச்சித் திரு மேற்றளியில்
எழுந்தருளியிருக்கின்ற தலைவனே ,
நானோ
எனில் , உன் திருவடியை அடைய
நினைத்தேன் ; அங்ஙனம் நினைத்த
அளவிலே நீ ஊன் பொருந்திய இவ்வுடலுள்ளே வந்து புகுந்துவிட்டாய் ; ஆதலின் , இத்தகைய பேரருளாளனாகிய உன்னையல்லது
பிறரை அடியேன் உளங்குளிர்ந்து புகழவேமாட்டேன் .
பாடல்
எண் : 7
கைஆர்
வெம்சிலை நாண் அதன்மேல் சரம் கோத்தே
எய்தாய்
மும்மதிலும் எரியுண்ண எம்பெருமான்,
செய்ஆர்
பைங்கமலத் திருமேல்த ளிஉறையும்
ஐயா, உன்னை அல்லால், அறிந்து ஏத்த
மாட்டேனே.
பொழிப்புரை : எம் பெருமானே , வயலின்கண் பரவியுள்ள பசிய தாமரைகளையுடைய
கச்சித் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே , நீ உன் கையின்கண் பொருந்திய கொடிய
வில்லினது நாணின்மேல் அம்பைத் தொடுத்து , மூன்று
மதில்களையும் தீ உண்ணும்படி எரித்தாய் ; ஆதலின்
, உன்னையன்றிப் பிறரைத்
தேவராக எண்ணிப் புகழவேமாட்டேன் .
பாடல்
எண் : 8
விரைஆர்
கொன்றையினாய், விமலாஇனி
உன்னைஅல்லால்
உரையேன்
நா அதனால், உடலில் உயிர்
உள்ளளவும்,
திரைஆர்
தண்கழனித் திருமேல்த ளிஉறையும்
அரையா, உன்னை அல்லால், அறிந்துஏத்த
மாட்டேனே.
பொழிப்புரை : நறுமணம் பொருந்திய
கொன்றைமாலையை உடையவனே . தூயவனே ,
அலைகள்
நிறைந்த குளிர்ந்த கழனிகளை யுடைய கச்சித் திருமேற்றளியின்கண்
எழுந்தருளியிருக்கின்ற தலைவனே ,
அடியேன்
. என் உடலில் உயிர் உள்ளவரையிலும் இனி , உன்னையன்றிப்
பிறரை, `தேவர்` என்று என் நாவினாற் சொல்லவும் மாட்டேன் ; உன்னையன்றிப் பிறரை உயர்ந்தவராக
மதித்துப் புகழவும் மாட்டேன் ; இது திண்ணம் .
பாடல்
எண் : 9
நிலையா
நின்அடியே நினைந்தேன், நினைதலுமே,
தலைவா
நின்நினையப் பணித்தாய், சலம் ஒழிந்தேன்,
சிலைஆர்
மாமதில்சூழ் திருமேல்த ளிஉறையும்
மலையே, உன்னை அல்லால், மகிழ்ந்துஏத்த
மாட்டேனே.
பொழிப்புரை : சந்திர காந்தக்
கற்கள் நிறைந்த பெரிய மதில் சூழ்ந்த கச்சித் திருமேற்றளியின்கண்
எழுந்தருளியிருக்கின்ற மலைபோன்றவனே. தலைவனே, அடியேன், உனது திருவடியையே நிலைத்த பொருளாக
உணர்ந்தேன் ; அவ்வாறு உணர்ந்த அளவிலே
அவ்வாறே மாறாது என்றும் உன்னையே உணர்ந்து நிற்குமாறு எனக்கு உன் திருவருளைச்
செய்தாய் ; அதனால், அடியேன், என் துன்பமெல்லாம் ஒழிந்தவனாயினேன் ; ஆகவே , இனி அடியேன் , உன்னையன்றிப் பிறரை , மனம் மகிழ்ந்து புகழவேமாட்டேன் .
பாடல்
எண் : 10
பார்ஊர், பல்லவன் ஊர், மதில் காஞ்சி
மாநகர்வாய்,
சீர்
ஊரும் புறவில் திருமேல்த ளிச்சிவனை,
ஆரூரன்
அடியான், அடித்தொண்டன், ஆரூரன்சொன்ன
சீர்ஊர்
பாடல்வல்லார், சிவலோகம் சேர்வாரே.
பொழிப்புரை : நிலம் முழுதும் ஆணை
செல்கின்ற பல்லவனது அரசிருக்கை ஊராகிய , மதிலை
உடைய காஞ்சி மாநகரின்கண் சிறப்புப் பொருந்திய இடத்தில் விளங்கும் திரு
மேற்றளியின்கண் உள்ள சிவபெருமானை ,
திருவாரூர்ப்
பெருமானுக்கு அடியவனான அணுக்கத் தொண்டனாம் நம்பியாரூரன் பாடிய , தாள அறுதி பொருந்திய இப் பாடல்களைப்
பாடவல்லவர் , சிவலோகத்தை
அடைவார்கள் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment