திருக்கச்சி ஏகம்பம் - 4


                                        திருக்கச்சி ஏகம்பம்

திருக் காஞ்சியில் வழிபட்டு அமர்ந்து இருந்த நாளில், அருகில் உள்ள திருத்தலங்களையும் வழிபட்டு, திருக் கச்சிக்கு மீண்டும் எழுந்தருளி, அப்பர் பெருமான் பாடியருளிய திருப்பதிகங்களையும், தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டிய வழியே அனுபவிப்போம்.

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 326
சீர்வளரும் மதில்கச்சி நகர்த்திருமேல் தளிமுதலா
நீர்வளரும் சடைமுடியார் நிலவிஉறை ஆலயங்கள்
ஆர்வம்உறப் பணிந்துஏத்தி, ஆய்ந்ததமிழ்ச் சொல்மலரால்
சார்வுறுமா லைகள்சாத்தி, தகுந்தொண்டு செய்துஇருந்தார்.

         பொழிப்புரை :சீர்மை மிக்க மதில்களையுடைய திருக்கச்சி மேற்றளி முதலாகக் கங்கை தங்கிய சடைமுடியார் நிலைபெற வீற்றிருக்கும் கோயில்கள் பலவற்றையும் ஆர்வத்துடன் வணங்கி, ஆய்ந்த தமிழ்ச் சொல் மாலைகளால் ஆய திருப்பதிகங்களைச் சாத்தித் தக்க தொண்டுகளைச் செய்த வண்ணம் அங்கே தங்கியிருந்தார்.

         குறிப்புரை : திருக்கச்சித் திருமேற்றளியில் அருளிய பதிகம் `மறையது பாடி` (தி.4 ப.43) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகம் ஆகும். ஆலயங்கள் - எவ்வெக் கோயில்கள் எனத் தெரியவில்லை.

பெ. பு.பாடல் எண் : 327
அந்நகரில் அவ்வண்ணம் அமர்ந்துஉறையும் நாளின்கண்
மன்னுதிரு மாற்பேறு வந்துஅணைந்து, தமிழ்பாடிச்
சென்னிமிசை மதிபுனைவார் பதிபலவும் சென்றுஇறைஞ்சி,
துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்தபெருங் காதலினால்.

         பொழிப்புரை : இவ்வாறு காஞ்சி நகரத்தில் நாவரசர் இருந்தருளிய பொழுது, நிலை பெற்ற திருமாற்பேற்றுக்குச் சென்று திருப்பதிகம் பாடி, தலையில் பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமானின் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று வணங்கி, முன் தொடர்ந்த பெருங்காதல் காரணமாக மீளவும் காஞ்சி நகரத்தை வந்து சேர்ந்தார்.

         குறிப்புரை : திருமாற்பேற்றில் அருளிய பதிகங்கள்: 1. `மாணிக் குயிர்` (தி.4 ப.108) - திருவிருத்தம். 2. `பொருமாற்றின்` (தி.5 ப.59) - திருக்குறுந்தொகை. 3. `எதும் ஒன்றும்` (தி.5 ப.60) - திருக்குறுந் தொகை. 4. `பாரானை` (தி.6 ப.80) - திருத்தாண்டகம். பதிபலவும் எனக் குறிப்பன திருவூறல், திருவிற்கோலம், இலம்பையங்கோட்டூர் முதலாயனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை). பதிகங்கள் எவையும் கிடைத்தில.


பெ. பு. பாடல் எண் : 328
"ஏகம்பன் காண்அவனென் எண்ணத்தான்" எனப்போற்றிப்
பாகம்பெண் உருவானை, பைங்கண்விடை உயர்த்தானை,
நாகம்பூண் உகந்தானை, நலம்பெருகுந் திருநீற்றின்
ஆகந்தோய் அணியானை, அணைந்துபணிந்து இன்புற்றார்.

         பொழிப்புரை : `கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத் தானே` என்று போற்றி இடமருங்கில் உமையம்மையாரையுடைய இறைவரைப், பசிய கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாக வுடையவரை, பாம்புகளை அணிந்தவரை, நன்மை பெருகும் திருநீற்றை நிறையப் பூசிய திருமேனியின் அழகு உடையவரைச் சேர்ந்து வணங்கி, நாவுக்கரசர் இன்பம் அடைந்தார்.

         குறிப்புரை : `ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே` என நிறைவுறும் குறிப்புடைய திருத்தாண்டகங்கள் இரண்டாம். அவை:

1. `கூற்றுவன் காண்` (தி.6 ப.64) - திருத்தாண்டகம்.
2. `உரித்தவன் காண்` (தி.6 ப.65) - திருத்தாண்டகம்.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

                                    6. 064    திருக்கச்சி ஏகம்பம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கூற்றுவன்காண், கூற்றுவனைக்குமைத்த கோன்காண்,
         குவலயன்காண், குவலயத்தின் நீர்ஆ னான்காண்,
காற்றுஅவன்காண், கனல்அவன்காண், கலிக்கும் மின்காண்,
         கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றுஅவன்காண், நிலாவூருஞ் சென்னி யான்காண்,
         நிறைஆர்ந்த புனல்கங்கை நிமிர்ச டைமேல்
ஏற்றவன்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :உலகை அழிப்பவனாய், கூற்றுவனை அழித்த தலைவனாய், உலக காரணனாய், உலகில் நீரும் காற்றும் கனலும் ஒலிக்கின்ற மேகமும் அதன் மின்னலுமாகி, பவளச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்து, பிறைதவழும் சென்னியனாய், கங்கை வெள்ளத்தை நிமிர்ந்த சடைமேல் ஏற்றவனாய், அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கச்சி ஏகம்பத்திலுள்ள பெருமான் என் எண்ணத்தின்கண் ஆயினான்.


பாடல் எண் : 2
பரந்தவன்காண் பல்உயிர்கள் ஆகி எங்கும்,
         பணிந்துஎழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன்காண், தூமலர்அம் கண்ணி யான்காண்,
         தோற்ற நிலைஇறுதிப் பொருளாய் வந்த
மருந்தவன்காண், வையகங்கள் பொறைதீர்ப் பான்காண்,
         மலர்தூவி நினைந்துஎழுவார் உள்ளம் நீங்காது
இருந்தவன்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :பல உயிர்களாகி எங்கும் பரந்தவனாய், தன்னை வழிபட்டு எழுபவருடைய பாவங்களையும் வினைகளையும் போக்கியவனாய், தூய பூக்களாலாகிய முடிமாலையை உடையவனாய், உலகைப்படைத்துக் காத்து அழிக்கும் பொருளாய் அமைந்த அமுதமாய், உலகங்களின் பாரத்தைப் போக்குபவனாய், மலர்களைத் திருவடிகளில் சேர்த்து, விருப்புற்று நினைத்து வழிபடுபவர்களுடைய உள்ளத்தை விடுத்து நீங்காது இருப்பவனாய், உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான்.


பாடல் எண் : 3
நீற்றுஅவன்காண், நீர்ஆகித் தீஆ னான்காண்,
         நிறைமழுவுந் தமருகமும் எரியும் கையில்
தோற்றவன்காண், தோற்றக் கேடுஇல்லா தான்காண்,
         துணைஇலிகாண், துணைஎன்று தொழுவார் உள்ளம்
போற்றவன்காண், புகழ்கள்தமைப் படைத்தான் தான்காண்,
         பொறிஅரவும் விரிசடைமேல் புனலும் கங்கை
ஏற்றவன்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :திருநீறு அணிந்தவனாய் , நீரும் தீயும் ஆனவனாய் , கனமான மழுப்படை உடுக்கை அக்கினி இவற்றைக் கைகளில் ஏந்தியவனாய்த் தனக்குப் பிறப்பும் இறப்பும் இல்லாதவனாய் , ஒப்பற்றவனாய் , தன்னைத் துணையாகக் கொண்டு தொழும் அடியவர்களுடைய உள்ளத்தைப் பாதுகாப்பவனாய் , புகழ்கள் படைத்தவனாய் , விரிந்த சடைமீது புள்ளிகளை உடைய பாம்பினையும் கங்கையையும் ஏற்றவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான் .


பாடல் எண் : 4
தாய்அவன்காண் உலகிற்கு, தன்ஒப்பு இல்லாத்
         தத்துவன்காண், மலைமங்கை பங்கா என்பார்
வாயவன்காண், வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்,
         வானவர்க்குந் தானவர்க்கும் மண்உ ளோர்க்கும்
சேயவன்காண், நினைவார்க்குச் சித்தம் ஆரத்
         திருவடியே உள்கிநினைந்து எழுவார் உள்ளம்
ஏயவன்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண்,அவன்என் எண்ணத்தானே.

         பொழிப்புரை :உலகிற்குத் தாயாய் , தன்னொப்பார் இல்லாத தத்துவனாய் ; பார்வதி பாகனாய் , அடியவர்கள் வாக்கில் இருப்பவனாய் , இனி வரக்கூடிய பிறவி நோயைத் தீர்ப்பானாய் , உலகியலிலேயே ஈடுபடும் தன்னை நினையாத தேவர் தானவர் மக்கள் ஆகியோருக்குத் தூரத்திலுள்ளவனாய் , மனமாரத் திருவடியை விரும்பித் தியானித்து எழுபவர் உள்ளத்தில் பொருந்தியவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான் .


பாடல் எண் : 5
அடுத்தானை யுரித்தான்காண் * *
* * * * * * *

         பொழிப்புரை :தன்னைக் கொல்ல நெருங்கி வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவன் .


பாடல் எண் : 6
அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வாய் அம்பால்,
         ஐயாறும் இடைமருதும் ஆள்வான் தான்காண்,
பழித்தவன்காண் அடையாரை, அடைவார் தங்கள்
         பற்றுஅவன்காண், புற்றுஅரவ நாணி னான்காண்,
சுழித்தவன்காண் முடிக்கங்கை, அடியே போற்றுந்
         தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :கூரிய வாயை உடைய அம்பினாலே மும்மதிலையும் அழித்தவனாய் , ஐயாறும் , இடைமருதும் ஆள்பவனாய் , பகைவரைப் பழித்தவனாய் , அடியார்களுக்குத் துணையாய் இருப்பவனாய் , பாம்பினை வில் நாணாகக் கொண்டவனாய் , தலையில் கங்கையைச் சுழன்று தங்கச் செய்தவனாய் , தன் திருவடிகளை வழிபட்ட பகீரதனுக்காக உலகில் ஒடுமாறு கங்கை நீரைச் சிறிது இறக்கியவனாய் , உள்ள எழில்ஆரும் பொழில் ஆரும் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான் .


பாடல் எண் : 7
அசைந்தவன்காண் நடம்ஆடிப் பாடல் பேணி,
         அழல்வண்ணத் தில்அடியும் முடியும் தேடப்
பசைந்தவன்காண், பேய்க்கணங்கள் பரவி ஏத்தும்
         பான்மையன் காண், பரவிநினைந்து எழுவார் தம்பால்
கசிந்தவன்காண், கரியின்உரி போர்த்தான் தான்காண்,
         கடலில்விடம் உண்டுஅமரர்க்கு அமுத ஈய
இசைந்தவன்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :பாடலை விரும்பி , உடல் அசைந்து கூத்து நிகழ்த்தியவனாய் , தன் தீப்பிழம்பாகிய வடிவில் அடியும் , முடியும், மாலும் அயனும் தேட, அவர்களுக்கு இரங்கியவனாய் , பேய்க்கூட்டங்கள் முன் நின்று துதித்துப் புகழும் இயல்பினனாய், தன்னை முன் நின்று துதித்துத் தியானிப்பவர்பால் மனம் இளகியவனாய், யானைத் தோலைப் போர்த்தவனாய் , கடலின் விடத்தை உண்டு தேவர்களுக்கு அமுதம் ஈய மனம் பொருந்தியவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .


பாடல் எண் : 8
முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால்,
         வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன்காண், பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்,
         பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி
முடித்தவன்காண், மூஇலைநல் வேலி னான்காண்,
         முழங்கிஉரும் எனத்தோன்றும் மழையாய் மின்னி
இடித்தவன்காண், எழில்ரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண்,அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :கொடிய கூற்றுவனை அழித்தவனாய் , தன் கோபத்தீயினால் , வலிய பகைவர்களின் மும்மதில்களும் தீயில் வெந்து அழியுமாறு , வில்லை ஏந்தியவனாய் , தலைக்கோலம் அணிந்த வேடத்தானாய் , நறுமணம் கமழும் கொன்றை மாலையையும் , பாம்பையும் தலையில் அணிந்தவனாய் , முத்தலைச் சூலத்தை உடையவனாய் , மழையாய் மின்னி இடித்தவனாய் , உள்ள எழிலாகும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .


பாடல் எண் : 9
வருந்தவன்காண், மனம்உருகி நினையா தார்க்கு
         வஞ்சன்காண், அஞ்சுஎழுத்து நினைவார்க்கு என்றும்
மருந்துஅவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்,
         வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகிப்
பரந்தவன்காண், படர்சடை எட்டு உடையான் தான்காண்,
         பங்கயத்தோன் தன்சிரத்தை ஏந்தி ஊர்ஊர்
இரந்தவன்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :தன்னை மனம் உருகி நினையாதாருக்கு வஞ்சனாய், அஞ்செழுத்தை விருப்புற்று நினைப்பவர்களுக்கு என்றும் அவர்களுடைய பெரிய பிணிகளைத் தீர்க்கும் மருந்தானவனாய், தேவருலகும் மண்ணுலகும் மற்ற உலகங்களுமாகப் பரவியவனாய் , நடுச்சடையை விடுத்துத் திசைக்கு ஒன்றாக ஆடும் எட்டுச்சடைகளை உடையவனாய் , பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் ஏந்தி , ஊர் ஊராகப் பிச்சை எடுத்தவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .


பாடல் எண் : 10
வெம்மான உழுவைஅதள் உரிபோர்த் தான்காண்,
         வேதத்தின் பொருளான்காண் என்று இயம்பி
விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான் தான்காண்,
         விடையேறித் திரிவான்காண், நடஞ்செய் பூதத்து அம்மான்காண், அகல்இடங்கள் தாங்கி னான்காண்,
         அற்புதன்காண், சொற்பதமும் கடந்து நின்ற
எம்மான்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே

         பொழிப்புரை :`கொடிய பெருமை மிக்க புலித்தோலைப் போர்த்தி , வேதத்தின் பொருளாய் , எம் இறைவன் உள்ளான் ` என்று சொல்லி , மிடறு தழுதழுத்து , அழும் அடியவர்களுக்கு அருள் வழங்குபவனாய் , காளையை இவர்ந்து திரிபவனாய் , கூத்தாடும் பூதங்களின் தலைவனாய் , உலகங்களைத் தாங்கும் அற்புதனாய் , சொல்லின் அளவைக் கடந்து நின்ற புகழை உடைய எம் தலைவனாய் , எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .


பாடல் எண் : 11
அறுத்தான்காண் அயன்சிரத்தை, அமரர் வேண்ட
         ஆழ்கடலின் நஞ்சுஉண்டுஅங்கு அணிநீர்க் கங்கை
செறுத்தான்காண், தேவர்க்கும் தேவன் தான்காண்,
         திசைஅனைத்துந் தொழுதுஏத்தக் கலைமான் கையில்
பொறுத்தான்காண், புகலிடத்தை நலிய வந்து
         பொருகயிலை எடுத்தவன்தன் முடிதோள் நால்அஞ்சு
இறுத்தான்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண்,அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :பிரமன் தலை ஒன்றை அறுத்தவனாய் , தேவர் வேண்ட ஆழ்ந்த கடலின் விடத்தை உண்டு , கங்கையைச் சடையில் அடக்கியவனாய் , தேவர்களுக்கும் தேவனாய் , எண்திசையும் தொழுது வணங்குமாறு கலைமானைக் கையில் தாங்கியவனாய் , தன் இருப்பிடமாகிய கயிலை மலையை அசைக்கவந்து , அதனைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் நசுக்கியவனான , எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .

                                             திருச்சிற்றம்பலம்


                                    6. 065    திருக்கச்சி ஏகம்பம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க,
         ஓங்காரத்து ஒருவன்காண், உணர் மெய்ஞ் ஞானம்
விரித்தவன்காண், விரித்தநால் வேதத் தான்காண்,
         வியன்உலகிற் பல்உயிரை விதியி னாலே
தெரித்தவன்காண், சில்உருவாய்த் தோன்றி எங்கும்
         திரண்டவன்காண், திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.
        
         பொழிப்புரை :பார்வதி கண்டு அச்சத்தால் தளருமாறு, வலிய யானையின் தோலை உரித்தவனாய், ஓங்காரத்தால் உணர்த்தப்படுகின்ற பரம் பொருளாய் மெய்ஞ்ஞானத்தை விரித்தவனாய், நான்கு வேதங்களையும் ஓதுபவனாய், உலகில் பல உயிர்களையும் ஊழ் வினைப்படி படைத்தவனாய், எங்கும் சிறுதெய்வங்களாகவும் தோன்றிப் பரந்திருப்பவனாய், முப்புரங்களும் சாம்பலாகுமாறு வில்லால் எரித்தவனாய், அழகு நிறைந்த சோலைகள் நிரம்பிய கச்சி ஏகம்பன் என் எண்ணத்தில் உள்ளான் .


பாடல் எண் : 2
நேசன்காண் நேசர்க்கு, நேசம் தன்பால்
         இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன்காண், கூசாதார் நெஞ்சு தஞ்சே
         குடிகொண்ட குழகன்காண், அழகார் கொன்றை
வாசன்காண், மலைமங்கை பங்கன் தான்காண்,
         வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும்
ஈசன்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :அடியார்க்கு அன்பனாய் , தன்னிடம் அன்பு இல்லாத கீழ்மக்களை நினைத்துக் கூசி அகல்பவனாய் , தன்னை வணங்குதற்கு நாணாதவர் மனத்தின் கண் எளிமையாய்த் தங்கும் இளையவனாய் , அழகிய மணம் கமழும் கொன்றையை அணிந்தவனாய் , பார்வதி பாகனாய் , தேவர்கள் எப்பொழுதும் வணங்கித் துதிக்கும் எழிலாரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .


பாடல் எண் : 3
பொறையவன்காண், பூமிஏழ் தாங்கி ஓங்கும்
         புண்ணியன்காண், நண்ணியபுண் டரிகப்போதின்
மறையவன்காண், மறையவனைப் பயந்தோன் தான்காண்,
         வார்சடைமா சுணம்அணிந்து வளரும் பிள்ளைப்
பிறையவன்காண், பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப்
         பேயோடுஅங்கு இடுகாட்டில் எல்லி ஆடும்
இறையவன்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :பூமி முதலிய எழு உலகங்களையும் தாங்கி , மேம்படும் பாரத்தைச் சுமப்பவனாய் , புண்ணியனாய் , தாமரையில் உறையும் வேதா எனப்படும் பிரமனாய் , அவனைப்படைத்த திருமாலாய் , நீண்ட சடையில் பாம்போடு பிறையைச் சூடியவனாய் , பிறையைப் போன்ற பற்களையும் பிளந்த வாயையும் உடைய பேய்களோடு சுடுகாட்டில் இரவில் கூத்து நிகழ்த்தும் தலைவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .


பாடல் எண் : 4
பார்அவன்காண், விசும்புஅவன்காண், பவ்வம் தான்காண்,
         பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற
சீரவன்காண், திசையவன்காண், திசைகள் எட்டும்
         செறிந்தவன்காண், சிறந்துஅடியார் சிந்தை செய்யும்
பேர்அவன்காண், பேர்ஆ யிரங்கள் ஏத்தும்
         பெரியவன்காண், அரியவன்காண், பெற்றம் ஊர்ந்த
ஏர்அவன்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :பூமியாய் , வானமாய் , வெள்ளத்தை உடைய கடலாய் , பனி உறையும் மலைகளாய் , இரவாய்ப் பகலாய் உள்ள சிறப்பை உடையவனாய் , திசைகளாய் , திசைகள் எட்டின் கண்ணும் செறிந்தவனாய் , அடியவர்கள் சிறப்பாகத் தியானிக்கும் பெயர்களை உடையவனாய், ஆயிரம் பெயர்களால் போற்றப்படும் பெரியவனாய் , அடியார் அல்லார்க்குக் கிட்டுதற்கு அரியவனாய், காளையை இவரும் அழகினை உடையவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.


பாடல் எண் : 5
பெருந்தவத்துஎம் பிஞ்ஞகன்காண், பிறைசூ டிகாண்,
         பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன்காண், மந்திரங்கள் ஆயி னான்காண்,
         வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்,
அருந்தவத்தான், ஆயிழையாள் உமையாள் பாகம்
         அமர்ந்தவன்காண், அமரர்கள்தாம் அர்ச்சித்து ஏத்த
இருந்தவன்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :பெரிய தவக்கோலத்தையும் , தலைக்கோலத்தையும் உடையவனாய்ப் பிறையைச் சூடியவனாய் , அடியேனுடைய துன்புறுத்தும் நோயைத் தீர்க்கும் மருந்தாய் , மந்திரங்களாய் , தேவர்கள் வணங்கும் பெருந்தேவனாய் , மிக்க தவத்தை உடைய பார்வதி பாகனாய் , தேவர்கள் அர்ச்சனை செய்து துதிக்குமாறு இருப்பவனாய் , உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .


பாடல் எண் : 6
ஆய்ந்தவன்காண் அருமறையோடு அங்கம் ஆறும்,
         அணிந்தவன்காண் ஆடுஅரவோடு என்பும் ஆமை,
காய்ந்தவன்காண் கண்அழலாற் காமன் ஆகம்,
         கனன்றுஎழுந்த காலன்உடல் பொடியாய் வீழப்
பாய்ந்தவன்காண், பண்டுபல சருகால் பந்தர்
         பயின்றநூல் சிலந்திக்குப் பார்ஆள் செல்வம்
ஈந்தவன்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :அரிய வேதங்களையும் , ஆறு அங்கங்களையும் ஆராய்பவனாய் , படம் எடுத்து ஆடும் பாம்பு , எலும்பு , ஆமை இவற்றை அணிந்தவனாய் , கண்ணிலிருந்து புறப்பட்ட தீயினால் மன்மதனுடைய உடம்பை எரித்தவனாய் , வெகுண்டெழுந்த கூற்றுவனுடைய உடம்பு அழியுமாறு காலால் பாய்ந்தவனாய் , ஒரு காலத்தில் பல சருகுகளைத் தன் வாயிலிருந்து வெளிப்படும் நூலால் இணைத்துத் தனக்கு நிழல் தரும் பந்தலை அமைத்த சிலந்திக்கு நாட்டை ஆளும் செல்வத்தை ஈந்தவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .


பாடல் எண் : 7
உமையவளை ஒருபாகம் சேர்த்தி னான்காண்,
         உகந்துஒலிநீர்க் கங்கைசடை ஒழுக்கி னான்காண்,
இமய வடகயிலைச் செல்வன் தான்காண்,
         இல்பலிக்குச் சென்றுஉழலும் நல்கூர்ந் தான்காண்,
சமயம்அவை ஆறினுக்கும் தலைவன் தான்காண்,
         தத்துவன்காண், உத்தமன்காண், தானே ஆய
இமையவன்காண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :பார்வதி பாகனாய் , மகிழ்ந்து கங்கையைச் சடையில் ஒடுக்கியவனாய் , இமயமலையில் உள்ள வடகயிலை மலையில் உறையும் செல்வனாய் , வீடுகள் தோறும் பிச்சைக்கு அலையும் வறியவனாய் , ஆறுவகை வைதிகச் சமயங்களுக்கும் தலைவனாய் , மெய்ப்பொருளாய் , உயர்வற உயர்நலம் உடையவனாய்த் தனக்குத்தானே நிகராகும் தேவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .


பாடல் எண் : 8
தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் தான்காண்,
         தூமலர்ச்சே வடிஇணைஎம் சோதி யான்காண்,
உண்டுபடு விடம்கண்டத்து ஒடுக்கி னான்காண்,
         ஒலிகடலில் அமுதுஅமரர்க்கு உதவி னான்காண்,
வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்,
         வாண்மதியாய் நாண்மீனும் ஆயி னான்காண்,
எண்திசையும் எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :அடிமை செய்யும் அடியார் துயரங்களைத் தீர்ப்பவனாய் , தூய மலர்போன்ற திருவடிகளை உடைய , எம் சோதி வடிவினனாய் , உண்டவிடத்தைக் கழுத்தில் ஒடுக்கியவனாய் , கடலிலிருந்து வெளிப்பட்ட அமுதத்தைத் தேவர்களுக்கு உதவியவனாய் , வண்டுகள் பொருந்தும் கொன்றை மலர் மாலையனாய் , ஒளி பொருந்திய சந்திரனும் விண்மீன்களும் ஆயினவனாய் , எட்டுத் திசைகளிலும் அழகு நிறைந்த பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத் தானே .


பாடல் எண் : 9
முந்தைகாண், மூவரினும் முதல்ஆ னான்காண்,
         மூவிலைவேல் மூர்த்திகாண், முருக வேட்குத்
தந்தைகாண், தண்கடமா முகத்தி னாற்குத்
         தாதைகாண், தாழ்ந்துஅடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண், சிந்தாத சித்தத் தார்க்குச்
         சிவன்அவன்காண், செங்கண்மால் விடைஒன்று ஏறும்
எந்தைகாண், எழில்ஆரும் பொழில்ஆர் கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :யாவரினும் முற்பட்டவனாய் , மும்மூர்த்திகளிலும் வேறுபட்டு , அவர்கள் தோற்றத்துக்குக் காரணனாய் , முத்தலைச் சூலம் ஏந்தியவனாய் , முருகனுக்கும் யானைமுகத்தானாகிய விநாயகனுக்கும் தந்தையாய் , பணிந்து தன் திருவடிகளை வணங்கும் அடியவர்களுக்கு அவர்கள் சிந்தையில் அகப்படுபவனாய் , புறப்பொருள்கள் மாட்டுச் செல்லாத உள்ளத்தாருக்கு இன்பவடிவினனாய் , செங்கண்ணனாகிய திருமாலைக் காளையாகக் கொண்டு இவரும் எம் தலைவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே .


பாடல் எண் : 10
பொன்இசையும் புரிசடைஎம் புனிதன் தான்காண்,
         பூதகண நாதன்காண், புலித்தோல் ஆடை
தன்இசைய வைத்தஎழில் அரவி னான்காண்,
         சங்கவெண் குழைக்காதிற் சதுரன் தான்காண்,
மின்இசையும் வெள்எயிற்றோன் வெகுண்டு வெற்பை
         எடுக்கஅடி அடர்ப்பமீண்டு அவன்தன் வாயில்
இன்னஇசைகேட்டு இலங்குஒளிவாள் ஈந்தோன், கச்சி
         ஏகம்பன் காண், அவன்என் எண்ணத் தானே.

         பொழிப்புரை :பொன்போன்ற ஒளிவீசும் முறுக்கேறிய சடையை உடைய எம் தூயோனாய் , பூதகணத் தலைவனாய் , புலித்தோலாகிய ஆடையின் மேல் இறுக்கிச் சுற்றிய அழகிய பாம்பினை உடையவனாய் , காதில் சங்கினாலாகிய குழையை அணிந்த திறமை உடையவனாய் , மின்னலைப் போல ஒளி வீசும் வெள்ளிய பற்களை உடைய இராவணன் , கோபம் கொண்டு கயிலை மலையை அசைக்கத் தன் திருவடி அவனை நசுக்க , பின்னர் அவன் வாயிலிருந்து வெளிப்பட்ட இனிய இசையைக் கேட்டு , அவனுக்குச் சந்திரகாசம் என்ற வாளினை வழங்கிய கச்சி ஏகம்பன் என் எண்ணத்திலுள்ளான் .

                                                    திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
   
சுந்தரர் திருப்பதிக வரலாறு

பெரியபுராணம் -- ஏயகோன்கலிக்காம நாயனார் புராணம்

திருவொற்றியூர் செல்லும் முன்  -------

         நம்பியாரூரர் பெருமான் காஞ்சிபுரம் வந்தபோது அடியவர்கள் அவரை வரவேற்று மகிழ்ந்தனர். ஏகம்பரை வணங்கியதோடு மட்டுமல்லாமல், காமக்கோட்டமும் சென்று வழிபட்டார். கச்சிப் பலதளிகளையும் வழிபட்டார். இது போது பாடியருளிய திருப்பதிகங்கள் எவையும் நமக்குக் கிடைக்கவில்லை. நமது தவக் குறைவு. சுவாமிகள் காஞ்சிநகரில் எழுந்தருளியதைப் பெரிய புராணத்தின் வாயிலாக வழிபடுவோம்.


பெரிய புராணப் பாடல் எண் : 183
வந்தித்து இறைவர் அருளால்போய்,
         மங்கை பாகர் மகிழ்ந்தஇடம்
முந்தித் தொண்டர் எதிர்கொள்ளப்
         புக்கு, முக்கண்பெருமானைச்
சிந்தித் திடவந்து அருள்செய்கழல்
         பணிந்து, செஞ்சொல் தொடைபுனைந்தே,
அந்திச் செக்கர்ப் பெருகுஒளியார்
         அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார்.

         பொழிப்புரை : இவ்வாறு திருக்கச்சூர் இறைவனாரைப் போற்றி, அவர் அருள்பெற்று, உமையம்மையாரை ஒரு கூற்றில் உடைய பெருமான் மகிழ்ந்தருளும் திருப்பதிகள் பலவற்றிற்கும் ஆங்காங்குள்ள அடியவர்கள் எதிர்கொளச் சென்று அத்திருப்பதிகளில் கோயில் கொண்டிருக்கும் முக்கட்செல்வரை நினைந்த வண்ணம் திருவடிகளை வணங்கிச் செஞ்சொற்களாலாய தமிழ்ப் பதிக மாலைகளைச் சூட்டி, மாலைப்பொழுதில் தோன்றும் செக்கர் வானம் போலும் சிவப்பு மிக்க ஒளியையுடைய பெருமான் வீற்றிருக்கும் காஞ்சிபுரத்தின் அருகாக வந்து சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 184
"அன்று வெண்ணெய் நல்லூரில்,
         அரியும் அயனும் தொடர்வுஅரிய
வென்றி மழவெள் விடைஉயர்த்தார்
         வேத முதல்வ ராய்வந்து
நின்று, சபைமுன் வழக்குஉரைத்து,
         நேரே தொடர்ந்துஆட் கொண்டவர்தாம்
இன்றுஇங்கு எய்தப் பெற்றோம்"என்று
         எயில்சூழ் காஞ்சிநகர் வாழ்வார்.

         பொழிப்புரை : அதுபொழுது மதில் சூழ்ந்த காஞ்சிநகரில், வாழும் அடியவர்கள் பலரும், "அன்றொரு நாள் திருவெண்ணெய்நல்லூரில், மாலும் அயனும் தொடர்வரியாராகும், வெற்றி தரும் இளைய ஆனேற்றுக் கொடியைக் கொண்டிருக்கும் பெருமானார், தாம் ஒரு வேதமுதல்வராய அந்தணராய் வடிவுகொண்டு வந்து, அவையிடத்து நேர் நின்று தொடர்ந்து வழக்குரைத்துத் தடுத்தாட் கொள்ளப்பட்டவரான சுந்தரர், இன்று இங்கு வந்திடப் பேறு பெற்றோம்" என்று கூறி,


பெ. பு. பாடல் எண் : 185
மல்கு மகிழ்ச்சி மிகப்பெருக,
         மறுகு மணித்தோ ரணம்நாட்டி,
அல்கு தீபம், நிறைகுடங்கள்,
         அகிலின் தூபம், கொடி எடுத்து,
செல்வ மனைகள் அலங்கரித்து,
         தெற்றி ஆடல் முழவுஅதிரப்
பல்கு தொண்ட ருடன்கூடி,
         பதியின் புறம்போய் எதிர்கொண்டார்.

         பொழிப்புரை : உள்ளத்துப் பொருந்திய மகிழ்ச்சி மிகப் பெருகிட, வீதிகள் தோறும் அழகிய முத்துத் தோரணங்களை நாட்டி, ஒளிவளர் விளக்குக்கள், நிறை குடங்கள், அகிலின் நறும்புகை, கொடிகள் ஆகியவற்றை எடுத்து, செல்வம் மிகும் தம் மனைகள் தோறும் அணி செய்து, தத்தம் முன்றில்தோறும் நடனமாடுதற்கேற்ற முழவுகள் முழங்கிடத் திரளும் அடியவர்களுடன் கூடி, தம் பதியின் புறம்போந்து அவரை எதிர் கொண்டார்கள்.


பெ. பு. பாடல் எண் : 186
ஆண்ட நம்பி எதிர்கொண்ட
         அடியார் வணங்க, எதிர்வணங்கி,
நீண்ட மதில் கோபுரம் கடந்து
         நிறைமாளிகை வீதியில் போந்து
பூண்ட காதல் வாழ்த்தினுடன்
         புனைமங் கலதூ ரியம்ஒலிப்ப,
ஈண்டு தொண்டர் பெருகுதிரு
         ஏகாம்பரம் சென்று எய்தினார்.

         பொழிப்புரை : இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரர், தம்மை எதிர்கொண்ட அடியவர்கள் வணங்கத் தாமும் வணங்கி, நீண்ட மதில்களையுடைய கோபுரத்தைக் கடந்து, நிரல்பட அமைந்த மாளிகைகளின் வீதிவழியே சென்று, தம்பால் பூண்ட அன்பினால் பெருகிய வாழ்த்தொலிகளுடன் சிறந்த மங்கல இயங்களும் ஒலித்திட, நெருங்கிய தொண்டர்கள் சூழத் திருவேகாம்பரம் என்னும் கோயிலைச் சென்றடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 187
ஆழிநெடுமால் அயன்முதலாம்
         அமரர் நெருங்கு கோபுரமுன்
பூமி உற,மண் மிசைமேனி
         பொருந்த வணங்கி, புகுந்துஅருளி,
சூழு மணிமா ளிகைபலவும்
         தொழுது, வணங்கி, வலங்கொண்டு,
வாழி மணிபபொன் கோயிலினுள்
         வந்தார் அணுக்க வன்தொண்டர்.

         பொழிப்புரை : இறைவனின் அணுக்கத் தொண்டராய சுந்தரர், சக்கரப் படையை உடைய நெடிய திருமால், நான்முகன் முதலாய தேவர்களும் சூழ நிற்கும் கோபுரம் முன்பாக, நிலத்தில் உடல் படிந்திட வணங்கி, உட்சென்று, பெருமானின் இருப்பிடத்தைச் சூழ்ந்த அழகிய பல மாளிகைகளையும் தொழுது வணங்கி, வலங்கொண்டு அழகிய பொற்கோயில் உள்ளாக வந்தார்.


பெ. பு. பாடல் எண் : 188
கைகள் கூப்பி முன்அணைவார்,
         கம்பை ஆறு பெருகிவர
ஐயர் தமக்கு மிகஅஞ்சி
         ஆரத் தழுவிக் கொண்டிருந்த
மை உலாவும் கருநெடுங்கண்
         மலையாள் என்றும் வழிபடு பூஞ்
செய்ய கமலச் சேவடிக்கீழ்த்
         திருந்து காத லுடன் வீழ்ந்தார்.

         பொழிப்புரை : கைகளைக் கூப்பியவாறு பெருமானின் திருமுன்பு செல்பவராய ஆரூரர், கம்பையாறு பெருகிவரக் கண்டு, பெருமானின் திருமேனியின் பொருட்டு மிகப் பயந்து, நன்றாக அவரை இறுகத் தழுவிக்கொண்டிருந்த மைதீட்டி விளங்கும் நீண்ட கண்களை உடைய மலையரசன் மகளாரான ஏலவார் குழலார், என்றும் வழிபட்டு வருகின்ற செந்தாமரை மலர் போன்ற மென்மையும், நிறமும், மணமும் கொண்ட பெருமானின் திருவடிகளின் கீழாகத் திருந்திய காதலுடன் வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 189
வீழ்ந்து போற்றிப் பரவசமாய்,
         விம்மி, எழுந்து, மெய்யன்பால்
வாழ்ந்த சிந்தை யுடன்பாடி,
         மாறா விருப்பில் புறம்போந்து,
சூழ்ந்த தொண்ட ருடன்மருவும்
         நாளில், தொல்லைக் கச்சிநகர்த்
தாழ்ந்த சடையார் ஆலயங்கள்
         பலவும் சார்ந்து வணங்குவார்.

         பொழிப்புரை : கால்உற வணங்கிப் போற்றி செய்து, தன்வயம் இழந்து, விம்மி அழுது எழுந்து மெய்யன்பினால் வாழ்வு பெற்ற சிந்தையால், பெருமானைப் பாடி, மாறாத விருப்பத்துடன் வெளியே வந்து, தம்மைச் சூழ்ந்த அடியவர்களுடன் ஆரூரர் அங்குத் தங்கியிருக் கும் நாள்களில், பழமையான காஞ்சி நகரைச் சூழ்ந்து விளங்கிடும் சடையையுடைய பெருமான் திருக்கோயில்கள் பலவற்றையும் சென்று வணங்குவாராய்,

         குறிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது.


பெ. பு. பாடல் எண் : 190
சீர்ஆர் காஞ்சி மன்னுதிருக்
         காமக் கோட்டம் சென்றுஇறைஞ்சி,
நீர்ஆர் சடையார் அமர்ந்துஅருளும்
         நீடு திருமேற் றளிமேவி,
ஆரா அன்பில் பணிந்து,ஏத்தும்
         அளவில்நுந்தா ஒண்சுடராம்
பார்ஆர் பெருமைத் திருப்பதிகம்
         பாடி மகிழ்ந்து பரவினார்.

         பொழிப்புரை : சிறப்பு மிக்க காஞ்சிப் பதியில் விளங்கும் திருக்காமக் கோட்டத்திற்குச் சென்று வணங்கி, கங்கையைச் சடையில் உடைய பெருமான் நிலைபெற்று வாழும் திருக்கச்சிமேற்றளி என்னும் கோயிலை அடைந்து ஆராத அன்பினால், பெருமானைப் பணிந்து போற்றும் வகையில் இந்நிலவுலகில் அளவற்ற பெருமையுடைய `நுந்தா வொண் சுடரே\' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி மகிழ்ந்து போற்றினார்.


பெ. பு. பாடல் எண் : 191
ஓண காந்தன் தளிமேவும்
         ஒருவர் தம்மை உரிமையுடன்
பேணி அமைந்த தோழமையால்
         பெருகும் அடிமைத் திறம்பேசிக்
காண மோடு பொன்வேண்டி
         "நெய்யும் பாலும்" கலைவிளங்கும்
யாணர்ப் பதிகம் எடுத்துஏத்தி
         எண்ணில் நிதிபெற்று இனிதுஇருந்தார்.

         பொழிப்புரை : திருவோணகாந்தன்தளியில் எழுந்தருளி இருக்கும் இறைவரை, உரிமையோடு விரும்பி ஏற்ற தோழமைத் திறம் பற்றிப் பெருகிவரும் அடிமைத் திறத்தினைக் கூறி, காசுடன் பொன்னை விரும்பி, `நெய்யும் பாலும்\' எனத் தொடங்கும் இசைக் கலைகளின் தன்மை விளங்குகின்ற அழகிய திருப்பதிகத்தினை எடுத்துப் போற்றி அளவற்ற செல்வங்களைப் பெற்று இனிதாக இருந்தார்.

         குறிப்புரை : ஓணன், காந்தன் என்ற இரு அசுரர்களாலும் வழிபடப் பெற்றதால் ஓணகாந்தன்தளி எனப் பெயர் பெற்றது. `நெய்யும் பாலும்\' எனத் தொடங்கும் பதிகம், (தி.7 ப.5) இந்தளப் பண்ணில் அமைந்த தாகும். `கையில் ஒன்றும் காணம் இல்லை\'என வரும் குறிப்பால், இது பொன் வேண்டியருளிய பதிகமாதல் தெரியலாம். `உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம்; இல்லை என்னீர் உண்டும் என்னீர்; ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்; வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே\' என வரும் முறைப்பாடுகள் இவர்தம் தோழமைத் திறத்தை விளக்கலின், `உரிமையுடன் பேணியமைந்த தோழமையால்\' பாடி அருளியது எனச் சேக்கிழார் குறித்தருளுவாராயினர்.


பெ. பு. பாடல் எண் : 192
அங்கண் அமர்வார் அனேகதங்கா
         வதத்தை எய்தி உள் ஆணைந்து
செங்கண் விடையார் தமைப்பணிந்து,
         "தேனெய் புரிந்து" என்று எடுத்ததமிழ்
தங்கும் இடமாம் எனப்பாடித்
         தாழ்ந்து, பிறவும் தானங்கள்
பொங்கு காத லுடன்போற்றிப்
         புரிந்துஅப் பதியில் பொருந்துநாள்.

         பொழிப்புரை : அப்பதியில் விரும்பித் தங்கியிருந்தவராய நம்பிகள், திருக்கச்சி அனேகதங்காவதத்தினைச் சேர்ந்து, திருக்கோயிலின் உள்ளே அணைந்து, சிவந்த கண்களையுடைய ஆனேற்றை உடையாராகிய இறைவரை வணங்கித் `தேன்நெய் புரிந்து\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடியருளி, வணங்கி, இறைவன் எழுந்தருளியிருக்கும் பிற பதிகளையும் மேன்மேலும் மிகும் பெருவிருப்புடன் சென்று போற்றி, இடைவிடாத நினைவுடனே அக்கச்சித் திருப்பதியில் பொருந்தவிருக்கும் நாள்களில்,

         குறிப்புரை : `தேன்நெய்\' (தி.7 ப.5) எனத் தொடங்கும் பதிகம், இந்தளப் பண்ணில் அமைந்ததாகும். பிற தானங்கள் என்பன, காஞ்சியில் உள்ளனவும், அதனைச் சூழ்ந்து உள்ளனவுமாய திருக்கோயில்களாம். திருக்குறிப்புத்தொண்டர் புராணத்து (தி.12 பு.19), இக் கோயில்கள் பலவும் குறித்துக் காட்டப் பெற்றுள்ளன. ஆண்டுக் காண்க.


பெ. பு. பாடல் எண் : 193
பாட இசையும் பணியினால்
         பாவை தழுவக் குழைகம்பர்
ஆடல் மருவும் சேவடிகள்
         பரவிப் பிரியாது அமர்கின்றார்,
நீட மூதூர்ப் புறத்துஇறைவர்
         நிலவும் பதிகள் தொழவிருப்பால்
மாட நெருங்கு வன்பார்த்தான்
         பனங்காட்டூரில் வந்து அடைந்தார்.

         பொழிப்புரை : பாடுதற்கு இசைகின்ற பணிசெய்யப் பெற்றதனால், அம்மையார் தழுவக் குழைந்து காட்டிய திருவேகம்பரது அருட் கூத்தாடும் திருவடிகளைப் போற்றிப் பிரியாது விரும்பி எழுந்தருளி இருக்கின்ற நம்பியாரூரர், மிகப் பழமையான அக்கச்சிமூதூரின் புறத் திலே நிலவுகின்ற பதிகள் பலவற்றையும் தொழுது விருப்பத்தினால் சென்று, மாடங்கள் நெருங்கி விளங்கும் வன்பார்த்தான்பனங்காட்டூரை வந்து அடைந்தார்.

----------------------------------------------------------------------------------------------------------


திருவொற்றியூரிலிருந்து வந்தபின் ---

பெ. பு. பாடல் எண் : 283
முன்னின்று தொழுதுஏத்தி முத்தாஎன் றெடுத்தருளிப்
பன்னும்இசைத் திருப்பதிகம் பாடிமகிழ்ந்து ஏத்துவார்,
அந்நின்று வணங்கிப்போய்த் திருவூறல் அமர்ந்துஇறைஞ்சிக்
கன்னிமதில் மணிமாடக் காஞ்சிமா நகர் அணைந்தார்.

         பொழிப்புரை : திருவாலங்காட்டு இறைவர் முன்பாக நின்று தொழுது போற்றி, `முத்தா முத்தி, என்று தொடங்கும் இசையமைந்த திருப்பதிகத்தைப் பாடி மகிழ்ந்து, அவ்விடத்தினின்றும் நீங்கிச் சென்று, திருவூறல் என்னும் பதியில் தங்கி, வணங்கி, அப்பால் சென்று, அழியாத மதில் சூழ்ந்த அழகிய மாடங்களையுடைய திருக்காஞ்சி மாநகரினை அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 284
தேன்நிலவு பொழிற்கச்சித் திருக்காமக் கோட்டத்தில்
ஊனில்வளர் உயிர்க்குஎல்லாம் ஒழியாத கருணையினால்
ஆனதிரு அறம்புரக்கும் அம்மைதிருக் கோயிலின்முன்
வானில்வளர் திருவாயில் வணங்கினார் வன்தொண்டர்.

         பொழிப்புரை : தேன் உண்ணும் வண்டுகள் உலவிடும் சோலை களை உடைய காஞ்சி மாநகரில், திருக்காமக்கோட்டத்தில், உடம்பு டைய உயிர்க்கெல்லாம் ஒழியாத கருணையினால் ஆன அறத்தினை விரும்பிப் புரிந்தருளும் பெருமாட்டியின் திருக்கோயிலின் முன்பாக, வான் நோக்கி உயரும் திருவாயிலினை வணங்கினார் நம்பிகள்.


பெ. பு. பாடல் எண் : 285
தொழுதுவிழுந்து எழுந்துஅருளால் துதித்துப்போய், தொல்லுலகம்
முழுதும்அளித்து அழித்து ஆக்கும் முதல்வர்திரு ஏகம்பம்,
பழுதுஇல்அடி யார்முன்பு புக, புக்குப் பணிகின்றார்,
"இழுதையேன் திருமுன்பே என்மொழிவேன்" என்றுஇறைஞ்சி.

         பொழிப்புரை : தொழுது விழுந்து, எழுந்து, அருளால் போற்றி, அப்பால் சென்று, முன்னான இவ்வுலகம் முழுதும் காத்தும் படைத்தும் அழித்தும் விளையாடும் முதல்வருடைய திருவேகம்பம் என்னும் திருப்பதியில், பழுதிலாத அடியவர்கள் முன் செல்லத் தாம் பின்னாகப் புகுந்து, பெருமானைப் பணிகின்றவராகிப் பேயனாகிய யான், பெருமானின் திருமுன் நின்று யாதென்று மொழிவேன் என மொழிந்து, வணங்கியருளி,


பெ. பு. பாடல் எண் : 286
"விண்ஆள்வார் அமுதுண்ண, மிக்கபெரு விடம்உண்ட
கண்ணாளா, கச்சி ஏகம்பனே, கடையானேன்
எண்ணாத பிழைபொறுத்துஇங்கு யான்காண, எழில்பவள
வண்ணா,கண் அளித்துஅருளாய்" எனவீழ்ந்து வணங்கினார்.

         பொழிப்புரை : விண்ணுலகத்தை ஆளுகின்ற தேவர்கள் அமுது உண்டு இறவாதிருப்ப, மிக்க பெரு நஞ்சுண்ட கருணையாளனே! கச்சி ஏகம்பம் உறைவானே! கடைப்பட்ட நாயேன் நினைந்து செய்யாத பிழையைப் பொறுத்து இங்கு யான் காண, எழில் திகழும் பவள வண்ணா! கண் தந்தருள்வாய்! என வேண்டி நிலத்தில் வீழ்ந்து வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 287
பங்கயச்செங் கைத்தளிரால் பனிமலர்கொண்டு அருச்சித்துச்
செங்கயற்கண் மலைவல்லி பணிந்தசே வடிநினைந்து
பொங்கியஅன் பொடுபரவிப் போற்றியஆ ரூரருக்கு
மங்கைதழுவக் குழைந்தார் மறைந்தஇடக் கண்கொடுத்தார்.

         பொழிப்புரை : தாமரைமலர்போலும் செங்கைத் தளிரால் எடுத்து குளிர்ந்த மலர்கொண்டு போற்றி செய்து, சிவந்த கயல் மீனை ஒத்த கண்ணுடைய மலைக்கொடியாம் உமையம்மையார் பணிந்த சேவடி களை மிகவும் நினைந்து, பொங்கிடும் அன்புடன் வணங்கிப் போற்றி டும் நம்பிகளுக்கு, எம்பிராட்டி தழுவிடக் குழைந்து காட்டிய இறைவர் மறைந்த கண்களில், இடக்கண் பார்வையைக் கொடுத்தருளினார்.

         குறிப்புரை : இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது. பிராட்டி தழுவக் குழைந்த இடத்துப் பெற்ற கண்ணாதலின், இடக்கண் கொடுத் தார் என அருளினார் போலும். கண் மறைந்த இடம் திருவொற்றியூரும், இடக் கண் பெற்ற இடம் காஞ்சிபுரமும், வலக் கண் பெற்ற இடம் ஆரூருமாகும். இம்மூன்றும் நிலத் திருப்பதிகளாதலின், (பிருதிவித் தலங்கள்) யாது யாண்டு ஒடுங்கியது, அஃது ஆண்டு நின்றே மீள உளதாம் என்னும் நியதியை அறிவிப்பதாக அமைந்துளது என நயம் காண்பர் சிவக்கவிமணியார்.


பெ. பு. பாடல் எண் : 288
ஞாலந்தான் இடந்தவனும் நளிர்விசும்பு கடந்தவனும்
மூலந்தான் அறிவரியார் கண்அளித்து, முலைச்சுவட்டுக்
கோலந்தான் காட்டுதலும், குறுகிவிழுந்து எழுந்துகளித்து
"ஆலந்தான் உகந்தவன்" என்று எடுத்துஆடிப் பாடினார்.

         பொழிப்புரை : இந்நிலவுலகைக் கீண்டு தேடிய மாலும், அழகிய வானத்தைக் கடந்து சென்ற அயனும் முறையே திருவடியையும், முடியையும் காண இயலாத சிவபெருமான், இடக் கண் கொடுத்து, எம்பிராட்டியின் முலைச் சுவடு அணிந்த கோலத்தைக் காட்டலும், பெருமானை அணுக விழுந்து எழுந்து மனம் மகிழ்ந்து, `ஆலந்தான் உகந்தவன்\' என்று தொடங்கிப் பதிகம் பாடி, ஆடிப் பரவினார்.

         குறிப்புரை : `ஆலந்தான் உகந்தவன்\' என்று தொடங்கும் பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.61). இப்பதிகப் பாடல் தொறும் அம்மையார் வழிபடப் பெற்ற அரிய புண்ணியச் செயலையும், `காணக் கண் அடியேன் பெற்றவாறே\' என்ற அருளிப்பாட்டையும் நம்பிகள் அருளுகின்றார். இக்குறிப்புகள் வரலாற்றிற்கு அரணாவதுடன், இடக் கண் பெற்றமையை உய்த்துணர்தற்கும் ஏதுவாகின்றன.


பெ. பு. பாடல் எண் : 289
பாடிமிகப் பரவசமாய்ப் பணிவார்க்கு, பாவையுடன்
நீடியகோலம் காட்ட, நிறைந்தவிருப் புடன்இறைஞ்சி,
சூடியஅஞ் சலியினராய்த் தொழுதுபுறம் போந்து,அன்பு
கூடியமெய்த் தொண்டருடன் கும்பிட்டுஅங்கு இனிதுஅமர்வார்.

         பொழிப்புரை : திருப்பதிகம் பாடித் தம்வயம் இழந்து பணிகின்ற நம்பிகட்கு, உமையம்மையாருடன் பெரிதும் பொருந்தியிருக்கும் திருக்கோலம் காண்பித்திடத் தாம் கண்டு, நிறைகின்ற விருப்பத்துடன் பணிந்து உச்சியில் கூப்பிய கையினராய்த் தொழுது வெளியே வந்து, அன்பு பொருந்திய மெய்யடியாருடன் கும்பிட்டுக் காஞ்சிப் பதியில் இனிதே தங்கியிருப்பவர்,


7. 061    திருக்கச்சி ஏகம்பம்          பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
ஆலம் தான் உகந்து அமுதுசெய் தானை,
         ஆதி யை,அம ரர்தொழுது ஏத்தும்
சீலம் தான்பெரி தும் உடை யானை,
         சிந்திப் பார்அவர் சிந்தை உளானை,
ஏல வார்குழ லாள்உமை நங்கை
         என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனை, கம்பன்எம் மானைக்
         காண, கண்அடி யேன்பெற்ற வாறே

         பொழிப்புரை : நஞ்சினைத் தான் விரும்பி உண்டு , அமுதத்தைத் தேவர்களுக்கு உரியதாக்கியவனும் , யாவர்க்கும் , முதல்வனும் , தேவர்கள் வணங்கித் துதிக்கின்ற பெருமையை மிக உடையவனும் , தன்னை நினைப்பவரது நினைவில் விளங்குபவனும் , மயிர்ச்சாந்து அணிந்த நீண்ட கூந்தலை யுடையவளாகிய, `உமை` என்னும் நங்கை, தான் எந்நாளும் துதித்து வழிபடுதலைப் பெற்றமைக்கு முதல்வனும், காலகாலனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு!


பாடல் எண் : 2
உற்ற வர்க்குஉத வும்பெரு மானை,
         ஊர்வது ஒன்றுஉடை யான்உம்பர் கோனை,
பற்றி னார்க்கு என்றும் பற்று அவன் தன்னை,
         பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை,
அற்றம் இல்புக ழாள் உமை நங்கை
         ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பன்எம் மானைக்
         காண, கண்அடி யேன்பெற்ற வாறே

         பொழிப்புரை : தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கு நலம் செய்கின்ற பெருமானும், ஊர்தி எருதாகிய ஒன்றை உடையவனும், தேவர் கட்குத் தலைவனும், தன்னை விடாது பற்றினவர்க்கு, பெரிய பற்றுக் கோடாய் நிற்பவனும் , தன்னை நினைப்பவரது மனத்தில் பரவி நின்று, அதனைத் தன் இடமாகக் கொண்டவனும் ஆகிய, அழிவில்லாத புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப் பெற்ற , கற்றையான நீண்ட சடையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு , வியப்பு .


பாடல் எண் : 3
திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச்
         செங்கண் மால்விடை மேல்திகழ் வானை,
கரியின் ஈர்உரி போர்த்து உகந் தானை,
         காம னைக்கன லாவிழித் தானை,
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை
         மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை, எங்கள்பி ரானைக்
         காண, கண்அடி யேன்பெற்ற வாறே

         பொழிப்புரை : வானத்தில் திரிகின்ற முப்புரங்கள் தீப்பிழம்பாய் எரிந்தொழியுமாறு செய்து , அக்காலை , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய விடையின்மேல் விளங்கியவனும் , யானையின் உரித்த தோலை விரும்பிப் போர்த்தவனும் , மன்மதனைத் தீயாய் எரியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்தவனும் , வரிகளைக் கொண்ட வெள்ளிய வளைகளை அணிந்தவளாகிய , ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று , துதித்து வழிபடப் பெற்ற பெரியோனும் ஆகிய , திருவேகம் பத்தில் உள்ள பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு .


பாடல் எண் : 4
குண்ட லம்திகழ் காது உடை யானை,
         கூற்று உதைத்த கொடும்தொழி லானை,
வண்டு அலம்பும் மலர்க் கொன்றையி னானை,
         வாள்அரா மதி சேர்சடை யானை,
கெண்டை அம்தடங் கண்உமை நங்கை
         கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுஉடைக் கம்பன்எம் மானைக்
         காண, கண்அடி யேன்பெற்ற வாறே

         பொழிப்புரை : குண்டலம் விளங்குகின்ற காதினையுடையவனும் , கூற்றுவனை உதைத்துக் கொன்ற கொடுமையான தொழிலை உடையவனும் , வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் , கொலைத் தொழிலையுடைய பாம்பு பிறையைச் சேர்ந்து வாழும் சடையை உடையவனும் ஆகிய , கெண்டைமீன் போலும் பெரிய கண்களையுடைய , ` உமை ` என்னும் நங்கை அணுகி நின்று , துதித்து வழிபடப் பெற்ற , கண்டத்தில் நஞ்சினையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு .


பாடல் எண் : 5
வெல்லும் வெண்மழு ஒன்று உடை யானை,
         வேலைநஞ்சு உண்ட வித்தகன் தன்னை,
அல்லல் தீர்த்து அருள் செய்யவல் லானை,
         அரும றைஅவை அங்கம்வல் லானை,
எல்லை இல்புக ழாள்உமை நங்கை
         என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை, எங்கள்பி ரானைக்
         காண, கண்அடி யேன்பெற்ற வாறே

         பொழிப்புரை : யாவரையும் வெல்லும் தன்மையுடைய , வெள்ளிய மழு ஒன்றை உடையவனும் , கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சதுரப்பாடுடையவனும் , அடியார்களுக்குத் துன்பங்களைப் போக்கி அருள்செய்ய வல்லவனும , அரிய வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் செய்ய வல்லவனும் ஆகிய, அளவற்ற புகழை யுடையவளாகிய, `உமை` என்னும் நங்கை, எந்நாளும், துதித்து வழி படப்பெற்ற, நன்மையையுடைய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு !


பாடல் எண் : 6
திங்கள் தங்கிய சடைஉடை யானை,
         தேவ தேவனை, செழும்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காது உடை யானை,
         சாம வேதம் பெரிது உகப் பானை,
மங்கை நங்கை மலைமகள் கண்டு
         மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனை, கம்பன்எம் மானைக்
         காண, கண்அடி யேன்பெற்ற வாறே

         பொழிப்புரை : பிறை தங்கியுள்ள சடையையுடையவனும் , தேவர்க்குத் தேவனும் , வளவிய கடலில் வளர்கின்ற சங்கினால் இயன்ற, ` வெள்ளிய குழையை யணிந்த காதினையுடையவனும், சாம வேதத்தை மிக விரும்புபவனும் ஆகிய , என்றும் மங்கைப் பருவம் உடைய நங்கையாகிய மலைமகள் தவத்தாற் கண்டு அணுகி , துதித்து வழிபடப்பெற்ற , கங்கையை யணிந்த , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு .


பாடல் எண் : 7
விண்ண வர்தொழுது ஏத்தநின் றானை,
         வேதந் தான்விரித்து ஓதவல் லானை,
நண்ணி னார்க்கு என்றும் நல்லவன்தன்னை,
         நாளும் நாம் உகக் கின்றபி ரானை,
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை
         என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுஉடைக் கம்பன்எம் மானைக்
         காண, கண்அடி யேன்பெற்ற வாறே

         பொழிப்புரை : தேவர்கள் தொழுது துதிக்க இருப்பவனும் , வேதங்களை விரித்துச் செய்ய வல்லவனும் , தன்னை அடைந்தவர் கட்கு எந்நாளும் நலத்தையே செய்பவனும் , நாள்தோறும் நாம் விரும்புகின்ற தலைவனும் ஆகிய , எண்ணில்லாத பழையவான புகழை யுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை , எந்நாளும் துதித்து வழிபடப் பெற்ற , கண்களும் மூன்று உடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு .


பாடல் எண் : 8
சிந்தித்து என்றும் நினைந்து எழு வார்கள்
         சிந்தை யில்திக ழும்சிவன் தன்னை,
பந்தித் தவினைப் பற்று அறுப் பானை,
         பாலொடு ஆன்அஞ்சும் ஆட்டுஉகந் தானை,
அந்தம் இல்புக ழாள்உமை நங்கை
         ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன்எம் மானைக்
         காண, கண்அடி யேன்பெற்ற வாறே

         பொழிப்புரை : நாள்தோறும் தன்னையே சிந்தித்து , துயிலெழுங் காலத்துத் தன்னையே நினைத்து எழுவார்களது உள்ளத்தில் விளங்கு கின்ற மங்கலப் பொருளானவனும் , உயிர்களைப் பிணித்துள்ள வினைத் தொடக்கை அறுப்பவனும் , பால் முதலிய ஆனஞ்சும் ஆடுதலை விரும்பியவனும் ஆகிய , முடிவில்லாத புகழையுடையவளாகிய , ` உமை ` என்னும் நங்கை விரும்பி வழிபடப்பெற்ற , கொன்றை முதலிய பூக்களின் மணத்தையுடைய , நீண்ட சடையையுடைய , திருவேகம் பத்தில் உள்ள எம் பெருமானைக்காணுதற்கு , அடியேன் , கண் பெற்ற வாறு , வியப்பு !


பாடல் எண் : 9
வரங்கள் பெற்றுஉழல் வாள்அரக் கர்தம்
         வாலி யபுரம் மூன்று எரித் தானை,
நிரம்பி யதக்கன் தன்பெரு வேள்வி
         நிரந்த ரம்செய்த நிர்க்கண் டகனை,
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை
         பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுஉடைக் கம்பன்எம் மானைக்
         காண, கண்அடி யேன்பெற்ற வாறே

         பொழிப்புரை : தவத்தின் பயனாகிய வரங்களைப் பெற்றமையால் , வானத்தில் உலாவும் ஆற்றலைப் பெற்ற கொடிய அசுரர்களது வலிய அரண்கள் மூன்றினை எரித்தவனும் , தேவர் எல்லாரும் நிரம்பிய தக்கனது பெருவேள்வியை அழித்த வன்கண்மையுடையவனும் ஆகிய, பரவிய, பழைய புகழையுடையவளாகிய , `உமை` என்னும் நங்கை, முன்னிலை யாகவும், படர்க்கையாகவும் துதித்து வழிபடப் பெற்ற, எட்டுக் கைகளையுடைய , திருவேகம்பத்தில் உள்ள எம் பெரு மானைக் காணுதற்கு , அடியேன் , கண் பெற்றவாறு , வியப்பு !


பாடல் எண் : 10
எள்கல் இன்றி இமையவர் கோனை
         ஈசனைவழி பாடுசெய் வாள்போல்,
உள்ளத் துஉள்கி உகந்துஉமை நங்கை
         வழிபடச் சென்று நின்றவா கண்டு,
வெள்ளம் காட்டி வெருட்டிட வஞ்சி
         வெருவிஓ டித்தழு வவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை, எங்கள்பி ரானைக்
         காண, கண்அடி யேன்பெற்ற வாறே

         பொழிப்புரை : தேவர் பெருமானாகிய சிவபெருமானை , அவனது ஒரு கூறாகிய உமாதேவிதானே, தான் வழிபட வேண்டுவது இல்லை என்று இகழ்தல் செய்யாது வழிபட விரும்பி, ஏனைவழிபாடு செய்வாருள் ஒருத்திபோலவே நின்று , முன்னர் உள்ளத்துள்ளே நினைந்து செய்யும் வழிபாட்டினை முடித்து, பின்பு, புறத்தே வழிபடச் சென்று, அவ்வழிபாட்டில் தலைப்பட்டு நின்ற முறைமையைக் கண்டு, தான் அவ்விடத்துக் கம்பையாற்றின்கண் பெருவெள்ளத்தைத் தோற்று வித்து வெருட்ட, வஞ்சிக்கொடி போல்பவளாகிய அவள் அஞ்சி ஓடித் தன்னைத் தழுவிக்கொள்ள, அதன்பின் அவள்முன் வெளிப்பட்டு நின்ற கள்வனாகிய, திருவேகம்பத்தில் உள்ள எங்கள் பெருமானைக் காணுதற்கு, அடியேன், கண் பெற்றவாறு, வியப்பு !


பாடல் எண் : 11
பெற்றம் ஏறுஉகந்து ஏறவல் லானை,
         பெரிய எம்பெரு மான்என்று எப்போதும்
கற்ற வர்பர வப்படு வானைக்
         காண, கண்அடி யேன்பெற்றது என்று
கொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானை,
         குளிர்பொ ழில்திரு நாவல்ஆ ரூரன்
நல்தமிழ் இவை ஈர்ஐந்தும் வல்லார்
         நல்நெறி உலகு எய்துவர் தாமே

         பொழிப்புரை : குளிர்ந்த சோலைகளையுடைய திருநாவலூ ரனாகிய நம்பியாரூரன், ஆனேற்றை விரும்பி ஏற வல்லவனும், மெய்ந் நூல்களைக் கற்றவர்கள், ` இவன் எம் பெரிய பெருமான்` என்று எப்போதும் மறவாது துதிக்கப்படுபவனும், யாவர்க்கும் தலைவனும், கூத்தாடுதலை உடையவனும் ஆகிய, திருவேகம்பத்தில் உள்ள எம்பெருமானைக் காணுதற்கு அடியேன், கண்பெற்றவாறு வியப்பு என்று சொல்லிப் பாடிய நல்ல தமிழ்ப் பாடலாகிய இவை பத்தினையும் பாட வல்லவர். நன்னெறியாற்பெறும் உலகத்தைத் திண்ணமாக அடைவர்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...