திருக்கச்சி ஏகம்பம்
அடுத்ததாக, அப்பர் பெருமான்
இத் திருத்தலத்திற்கு எழுந்தருளிய நிலையையும் , இத் திருத்தலத்து இறைவர்
மீது அவரால் பாடப் பெற்ற திருப்பதிகங்களையும் சிந்திப்போம்.
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 317
செய்ய
ஐயர் திருவோத்தூர்
ஏத்திப் போந்து
செழும்புவனம்
உய்ய
நஞ்சுஉண்டு அருளும்அவர்
உறையும் பதிகள்
பலவணங்கித்
தையல்
தழுவக் குழைந்தபிரான்
தங்குந் தெய்வப்
பதியென்று
வையம்
முழுதும் தொழுதுஏத்தும்
மதில்சூழ் காஞ்சி
மருங்குஅணைந்தார்.
பொழிப்புரை : (நாவரசர்) சிவந்த
சடையையுடைய இறைவரின் திருவோத்தூரினை வணங்கி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, செழுமையான உலகங்கள் எல்லாம் உய்யுமாறு
நஞ்சை உண்டருளிய அப்பெருமான் இனிதாய் அமர்ந்தருளியிருக்கும் பல திருப்பதிகளை யும்
போற்றிச் சென்று, உமையம்மையார் தழுவத்
திருமேனியைக் குழைந்து காட்டிய சிவபெருமான் வீற்றிருக்கும் தெய்வத் திருப்பதி என
உலகங்கள் எல்லாம் வணங்கிப் போற்றுகின்ற மதில் சூழ்ந்த காஞ்சி நகரத்தினை அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 318
ஞாலம்
உய்யத் திருவதிகை
நம்பர் தம்பேர்
அருளினால்
சூலை
மடுத்து முன்ஆண்ட
தொண்டர் வரப்பெற்
றோம்என்று
காலை
மலருங் கமலம்போல்
காஞ்சி வாணர்
முகம்எல்லாம்
சால
மலர்ந்து களிசிறப்பத்
தழைத்த மனங்கள்
தாங்குவார்.
பொழிப்புரை : உலகம் உய்யும்
பொருட்டுத் திருவதிகைப் பெருமானார் தம் பேரருளினால் சூலை நோயைத் தந்து நேரே ஆட்
கொள்ளப்பட்ட அடியவரான நாவரசர்,
`இங்கு
எழுந்தருளி வரும் பேறு பெற்றோம்`
என்று
எண்ணிய காஞ்சி நகரத்தில் உள்ள அடியவர்கள், தம் முகங்கள் எல்லாம் காலை மலரும் தாமரை
என மிக மலர்ந்து மகிழ்ச்சி மீதூரத் தழைத்த மனத்துடன்.
பெ.
பு. பாடல் எண் : 319
மாட
வீதி மருங்குஎல்லாம்
மணிவா யில்களில்
தோரணங்கள்
நீடு
கதலி யுடன்கமுகு
நிரைத்து நிறைபொற்
குடந்தீபம்
தோடு
குலவு மலர்மாலை
சூழ்ந்த வாசப்
பந்தர்களும்
ஆடு
கொடியும் உடன்எடுத்துஅங்கு
அணிநீள் காஞ்சி
அலங்கரித்தார்.
பொழிப்புரை : மாட வீதிகள்
பக்கங்களில் உள்ள அழகிய வாயில்களில் எங்கும், தோரணங்களையும் பொருந்தும் வாழை
மரங்களுடனே பாக்கு மரங்களையும் நிரல்படக் கட்டி, நிறைகுடங் களையும், விளக்குகளையும், இதழ்கள் பொருந்திய மலர் மாலைகளை யுடைய நறுமணப்பந்தர்களையும்
ஆடும் கொடிகளையும் எடுப்பித்து,
அங்கு
அழகிய நீண்ட காஞ்சிமாநகரத்தை மேலும் அழகுபடுத்தினர்.
பெ.
பு. பாடல் எண் : 320
தொண்டர்
ஈண்டி எதிர்கொள்ள
எழுந்து சொல்லுக்கு
அரசர்பால்
கொண்ட
வேட்கைப் பொலிவினொடும்
குலவும் வீதிப்
பணிசெய்யும்
அண்டர்
அறிதற்கு அரியதிரு
அலகு முதலாம்
அவைஏந்தி
இண்டை
புனைந்த சடைமுடியார்க்கு
அன்பர் தம்மை
எதிர்கொண்டார்.
பொழிப்புரை : தாம் விரும்பி
மேற்கொண்ட திருவேடப் பொலிவழகுடன் வரவேற்பதற்காக, நாவுக்கரசர் வரும் வழியில் தொண்டர்கள்
பலரும் திரண்டு சென்று, விளங்கும் திருவீதிப்
பணி செய்யும் தேவரும் அறிவதற்கு அரிய திருவலகு முதலியவற்றை எடுத்துக் கொண்டு, இண்டை மாலை சூடிய சடையையுடைய
பெருமானுக்கு அன்பரான அவரை எதிர்கொண்டனர்.
பெ.
பு. பாடல் எண் : 321
எதிர்கொண்டு
இறைஞ்சும் சீர்அடியார்
தம்மை இறைஞ்சி, எழுந்துஅருளி
மதில்கொண்டு
அணிந்த காஞ்சிநகர்
மறுகுஉள் போந்து
வானநதி
குதிகொண்டு
இழிந்த சடைக்கம்பர்
செம்பொன் கோயில்
குறுகினார்
அதிர்கொண்டு
அலைநேர் மணிமிடற்றார்
ஆண்ட திருநா
வுக்கரசர்.
பொழிப்புரை : ஒலிக்கும் மேகம்
போன்ற அழகிய கழுத்தினையுடைய இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட நாவரசர், எதிர் கொண்டு வரவேற்று வணங்கும் சிறந்த
அடியவரைத் தாமும் எதிரே வணங்கி,
மதில்
சூழ்ந்த அழகிய காஞ்சி நகரத்தின் திருவீதியுள் புகுந்து வானத்திருக்கும் கங்கை மேல்
எழும் சடையை உடைய ஏகம்பருடைய செம்பொன் கோயிலை அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 322
திருவா
யிலினைப் பணிந்துஎழுந்து
செல்வத் திருமுன்
றிலைஅணைந்து
கருவார்
கச்சி ஏகம்பர்
கனக மணிமா
ளிகைசூழ்ந்து
வருவார்
செம்பொன் மலைவல்லி
தழுவக் குழைந்த
மணிமேனிப்
பெருவாழ்
வினைமுன் கண்டுஇறைஞ்சிப்
பேரா அன்பு
பெருகினார்.
பொழிப்புரை : கோபுரத்தின் கண்ணுள்ள
திருவாயிலில், கீழே விழுந்து வணங்கி
எழுந்து, உள்ளே சென்று, செல்வம் நிறைந்த முற்றத்தை அடைந்து, அருட்கருவையுடைய கச்சி மாநகரத்தின்
ஏகம்பநாதரின் அழகிய பொன் மாளிகையினை வலம் வருபவரான நாவுக்கரசர், செம்பொன் மலையரசனின் மகளாரான
காமாட்சியம்மையார் தழுவக் குழைந்து காட்டிய அழகிய திருமேனியையுடைய பெருவாழ்வான
ஏகம்பரை முன்பு கண்டு வணங்கிப் பேராத அன்பு மிக்கவரானார்.
பெ.
பு. பாடல் எண் : 323
வார்ந்து
சொரிந்த கண்அருவி
மயிர்க்கால் தோறும்
வரும்புளகம்
ஆர்ந்த
மேனிப் புறம்புஅலைப்ப
அன்பு கரைந்துஎன்பு
உள்அலைப்பச்
சேர்ந்த
நயனம் பயன்பெற்றுத்
திளைப்பத் திருவே
கம்பர்தமை
நேர்ந்த
மனத்தில் உறவைத்து
நீடும் பதிகம்
பாடுவார்.
பொழிப்புரை : பெருகி வழியும்
கண்ணீர் மழையானது மயிர்க்கால் எங்கும் நிறைந்து திருமேனியின் புறத்தை அலைக்கவும், அன்பு மேலீட்டினால் உள்ளமானது கரைந்து
எலும்பினுள்ளும் அலைக்கவும், பொருந்திய கண்கள்
தமக்குரிய தக்க பயனைப் பெற்றுத் திளைக்கவும், ஏகம்பநாதரைப் பொருந்திய மனத்தினுள்
வைத்துக் கொண்டு, நீடும் திருப்பதிகம்
அருளுவாராகி.
குறிப்புரை : `கரவாடும் வன்னெஞ்சர்க்கு` (தி.4 ப.7) எனத் தொடங்கும் பதிகம் காந்தாரப்
பண்ணில் அமைந்ததாகும்.
பெ.
பு. பாடல் எண் : 324
"கரவாடும் வன்னெஞ்சர்க்கு
அரியானை" என்றுஎடுத்துப்
பரவுஆய
சொல்மாலைத் திருப்பதிகம் பாடியபின்
விரவார்தம்
புரம்எரித்த விடையவனார் வெள்எயிற்றின்
அரவுஆரம்
புனைந்தவர்தம் திருமுன்றில் புறத்துஅணைந்தார்.
பொழிப்புரை : `கரவாடும் வன்நெஞ்சர்க் கரியானை` என்று எடுத்துத் தொடங்கிப் போற்றுதலான
சொன்மாலைத் திருப்பதிகத்தைப் பாடிய பின்னர், பகைவரின் முப்புரங்களை எரித்தவரும்
வெண்மையான பற்களையுடைய பாம்பு மாலையை அணிந்தவருமான இறைவர் கோயிலின் முன் பக்கத்தை
நாவரசர் அடைந்தார்.
3. 007 திருக்கச்சியேகம்பம் பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கரவுஆடும்
வன்நெஞ்சர்க்கு அரியானை,
கரவார்பால்
விரவுஆடும்
பெருமானை, விடைஏறும் வித்தகனை,
அரவுஆடச்
சடைதாழ அங்கையினில் அனல்ஏந்தி
இரவுஆடும்
பெருமானை, என்மனத்தே வைத்தேனே.
பொழிப்புரை :பெருமானை மறைத்தலும்
மறத்தலும் செய்து உலகப் பொருள்களில் திளைக்கும் வலிய நெஞ்சினை உடையவர்கள்
உணர்தற்கு அரியவனாய், வஞ்சனையில்லாத
அடியவர் உள்ளத்தில் கலந்து கூத்து நிகழ்த்தும் பெருமானாய், காளையை இவரும் திறனுடையவனாய், பாம்புகள் படமெடுத்து ஆடவும் சடை
தொங்கவும், உள்ளங்கையில் தீயினை
ஏந்தி இரவினில் கூத்தாடும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .
பாடல்
எண் : 2
தேன்நோக்கும்
கிளிமழலை உமைகேள்வன், செழும்பவளம்
தான்நோக்கும்
திருமேனி, தழல்உருவாம் சங்கரனை,
வான்நோக்கும்
வளர்மதிசேர் சடையானை, வானோர்க்கும்
ஏனோர்க்கும்
பெருமானை, என்மனத்தே வைத்தேனே.
பொழிப்புரை :தேனை ஒத்து
இனிமையதாய்க் கிளி மழலை போன்ற மழலையை உடைய உமாதேவியின் கணவனாய் , செழும் பவளம் போன்ற செந்நிறமேனியனாய்த்
தழல் உருவனாய், எல்லோருக்கும் நன்மை
செய்பவனாய் , சிவந்த வானத்தை ஒத்த
செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய்த் தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தலைவனாகிய
பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக்கொண்டேன் .
பாடல்
எண் : 3
கைப்போது
மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
முப்போதும்
முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை,
அப்போது
மலர்தூவி ஐம்புலனும் அகத்துஅடக்கி
எப்போதும்
இனியானை, என்மனத்தே வைத்தேனே.
பொழிப்புரை :கைகளால், அலரும் பருவத்து மொட்டுக்களையும்
பூக்களையும் அர்ப்பணித்து விருப்போடு தேவர்கள் காலை நண்பகல் மாலை என்ற மூன்று
வேளைகளிலும் தலையால் வணங்கித் தொழுமாறு நிலைபெற்ற முழுமுதற் கடவுளாய் எனக்கு
எப்பொழுதும் இனியனாக உள்ள பெருமானை ஐம்புலன்களையும் உள்ளத்தால் அடக்கி, அபிடேக நீரையும் மலர்களையும்
அர்ப்பணித்து என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்.
பாடல்
எண் : 4
அண்டமாய், ஆதியாய், அருமறையொடு ஐம்பூதப்
பிண்டமாய், உலகுக்குஓர்
பெய்பொருளாம் பிஞ்ஞகனை,
தொண்டர்தாம்
மலர்தூவிச் சொல்மாலை புனைகின்ற
இண்டைசேர்
சடையானை, என்மனத்தே வைத்தேனே.
பொழிப்புரை :உலகங்களாய் , உலகங்களுக்குக் காரணனாய் அரிய
வேதங்களாய் , ஐம்பெரும் பூதங்களின்
பிண்டமாகவும் உலகத்தார்க்குக் கருத்துப் பொருளாகவும் உள்ளவனும் , தலைக் கோலத்தை உடையவனாய் , அடியவர்கள் மலர்களை அர்ப்பணித்துச்
சொல்லால் ஆகிய பாமாலை புனைந்து அணிவிக்கின்ற , தலைமாலை அணிந்த சடையை உடைய
பெருமானுமாயவனை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .
பாடல்
எண் : 5
ஆறுஏறு
சடையானை, ஆயிரம்பேர் அம்மானை,
பாறுஏறு
படுதலையில் பலிகொள்ளும் பரம்பரனை,
நீறுஏறு
திருமேனி நின்மலனை, நெடுந்தூவி
ஏறுஏறும்
பெருமானை, என்மனத்தே வைத்தேனே.
பொழிப்புரை :கங்கை தங்கிய
சடையினனாய் , ஆயிரம் திருநாமங்களை
உடைய தலைவனாய் , பருந்துகள் படிகின்ற
இறந்து பட்ட மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் மேம்பட்ட இறைவனாய் , திருநீறு அணிந்த திருமேனியை உடைய
தூயோனாய் நீண்ட வாலினை உடைய காளையை இவரும் பெருமானை என்மனத்தில் நிலையாக வைத்துக்
கொண்டேன் .
பாடல்
எண் : 6
தேசனை, தேசங்கள் தொழநின்ற
திருமாலால்
பூசனைப்
பூசனைகள் உகப்பானை, பூவின்கண்
வாசனை, மலைநிலம்நீர் தீவளிஆ
காசமாம்
ஈசனை, எம்மானை, என்மனத்தே வைத்தேனே.
பொழிப்புரை :ஒளிவடிவினனாய் , உலகங்கள் வழிபடுமாறு உள்ள திருமாலால்
வழிபடப்படுபவனாய் , அடியார்கள் செய்யும்
வழிபாட்டை உகப்பவனாய் , பூவின்கண் நறுமணம்
போல எங்கும் பரந்திருப்பவனாய் ,
மலைகளாகவும்
ஐம்பூதங்களாகவும் விளங்குகின்றவனாய் , எல்லோரையும்
அடக்கி ஆள்பவனாய் , எங்கள் தலைவனாய் உள்ள
பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .
பாடல்
எண் : 7
நல்லானை, நல்லான நான்மறையோடு
ஆறுஅங்கம்
வல்லானை, வல்லார்கள்
மனத்துஉறையும் மைந்தனை,
சொல்லானை, சொல்ஆர்ந்த பொருளானை, துகள்ஏதும்
இல்லானை, எம்மானை, என்மனத்தே வைத்தேனே.
பொழிப்புரை :பெரியவனாய் , மேம்பட்ட நான்மறைகளும் ஆறு அங்கங்களும்
வல்லவனாய் , தன்னை உள்ளவாறு
உணரவல்லார்களுடைய உள்ளத்தில் தங்கும் வலியவனாய் , வேத வடிவினனாய் , வேதத்தில் நிறைந்திருக்கும்
பரம்பொருளாய் , இயல்பாகவே களங்கம்
ஏதும் இல்லாதவனாய் , எங்கள் தலைவனாய் உள்ள
பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன் .
பாடல்
எண் : 8
விரித்தானை
நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்,
புரித்தானைப்
பதம்சந்திப் பொருள்உருவாம் புண்ணியனை,
தரித்தானைக்
கங்கைநீர் தாழ்சடைமேல், மதின்மூன்றும்
எரித்தானை, எம்மானை, என்மனத்தே வைத்தேனே.
பொழிப்புரை :சனகர் முதலிய நால்வருக்கு
வேதப் பொருள்களை வெவ்வேறு விதங்களில் விரித்து உரைத்தவனாய், வேதங்களால் பரம் பொருளாக
விரும்பப்பட்டவனாய் , சொற்களும் , சந்தியால் ஆகிய தொடர்களும் அவற்றின்
பொருளுமாக உள்ள நல்வினை வடிவினனாய் , தாழ்ந்த
சடைமுடி மீது கங்கை நீரை ஏற்றவனாய் , மும்மதில்களையும்
எரித்தவனாய் உள்ள எம் பெருமானை என் மனத்தே வைத்தேனே .
பாடல்
எண் : 9
ஆகம்பத்
து,அரவுஅணையான், அயன்அறிதற்கு அரியானை,
பாகம்பெண்
ஆண்பாக மாய்நின்ற பசுபதியை,
மாகம்ப
மறையோதும் இறையானை, மதில்கச்சி
ஏகம்பம்
மேயானை, என்மனத்தே வைத்தேனே.
பொழிப்புரை :பத்து அவதாரங்கள்
எடுத்த, பாம்புப் படுக்கை
உடைய திருமாலால் அறிய இயலாதவனாய்,
ஒருபாகம்
பெண்பாகமாகவும் மறுபாகம் ஆண்பாகமாகவும், நிலைபெற்ற
ஆன்மாக்கள் தலைவனாய், பெரிய தூண்போல
அசைக்கமுடியாத, ( என்றும் நிலைபெற்ற )
வேதங்களை ஓதும் தலைவனாய், மதில்களை உடைய காஞ்சி
நகரில் ஒற்றை மாமர நிழலில் உறையும் பெருமானை என் மனத்து வைத்தேனே.
பாடல்
எண் : 10
அடுத்த
ஆனை உரித்தானை, அருச்சுனற்குப்
பாசுபதம்
கொடுத்தானை, குலவரையே சிலையாகக்
கூர்அம்பு
தொடுத்தானை
புரம்எரிய, சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானைத்
தடுத்தானை, என்மனத்தே வைத்தேனே.
பொழிப்புரை :தன்னை எதிர்க்க
நெருங்கி வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவனும், அருச்சுனனுக்குப் பாசுபதப் படை
நல்கியவனும், மேருமலையையே
வில்லாகக் கொண்டு கூரிய அம்பினை மும்மதில்களும் எரியுமாறு செலுத்தியவனாய், சுனைகள் நிறைந்த கயிலாய மலையைப்
பெயர்க்க முற்பட்ட இராவணனை நசுக்கி செயற்பட முடியாதவாறு தடுத்தவனுமான பெருமானை என்
மனத்தே வைத்தேனே.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 325
கைஆர்ந்த
திருத்தொண்டு கழியமிகும் காதலொடும்
செய்யாநின்றே, எல்லாச் செந்தமிழ்மா
லையும்பாடி,
மைஆர்ந்த
மிடற்றர்திரு மயானத்தை வலங்கொண்டு
மெய்ஆர்வம்
உறத்தொழுது விருப்பினொடு மேவுநாள்.
பொழிப்புரை : கையால் நிரம்பச்
செய்துவரும் உழவாரத் திருத் தொண்டை மிகப்பெரும் பத்திமையுடன் செய்து கொண்டே, பற்பல யாப்பு வகையானும் பண் வகையானும்
ஆய எல்லா வகையான தமிழ்ப் பதிகங்களையும் பாடி, திருநீலகண்டரின் கச்சித்
திருமயானத்தையும் வலமாக வந்து, மெய்மை நிரம்பிய
ஆர்வம் பெருகத்தொழுது, விருப்புடன் அங்குத்
தங்கியிருந்த நாள்களில்.
குறிப்புரை : இது பொழுது அருளிய
பதிகங்கள்:
1. `நம்பனை` (தி.4 ப.44) - திருநேரிசை.
2. `ஓதுவித்தாய்` (தி.4 ப.99) - திருவிருத்தம்.
3. `பண்டு செய்த` (தி.5 ப.47) - திருக்குறுந்தொகை.
4. `பூமேலானும்` (தி.5 ப.48) - திருக்குறுந்தொகை.
சென்ற
பாடலில் காந்தாரப் பண்ணுடைய பதிகம் பாடினமையும், 328ஆவது பாடலில் தாண்டகம் பாடினமையும்
குறிக்கப்படுகின்றன. இப்பாடலில் எஞ்சிய மூவகை யாப்பு அமைவும் பாடியமை
குறிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடியுள்ளமை அறிய
இயலுகின்றது. இவையன்றித் திருமுறைகள் ஏழனுள்ளும் போற்றப்பட்டுள்ள சிறப்பு
இப்பதிக்குரிய தாகும். இவ்வாறான சிறப்புத் திருவாரூருக்கும் உண்டு.
திருநாவுக்கரசர்
திருப்பதிகங்கள்
4. 044 திருக்கச்சியேகம்பம் திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
நம்பனை, நகரம் மூன்றும்
எரிஉண வெருவ நோக்கும்
அம்பனை, அமுதை, ஆற்றை,
அணிபொழிற் கச்சி உள்
ஏகம்பனை, கதிர்வெண் திங்கள்
செஞ்சடைக்
கடவுள்தன்னை,
செம்பொனை, பவளத் தூணை,
சிந்தியா எழுகின்
றேனே.
பொழிப்புரை : நம்மால்
விரும்பப்படுபவனாய் , மும்மதில்களும்
தீக்கு இரையாகி வெறுவும் தன்னால் நோக்கும் நோக்காகிய அம்பினை உடையவனாய் , அமுதனாய் பேரின்ப பெருக்காறாய் , அழகிய சோலையை உடைய காஞ்சிமாநகரில் ஒற்றை
மாமரத்தடியில் உறைபவனாய், ஒளி வீசும் கிரணங்களை
உடைய பிறையைச் சிவந்த சடையில் அணிந்த கடவுளாய்ச் செம்பொன்னும் பவளத்தூணும்
போன்றுள்ள சிவபெருமானைத் தியானிப்பதனால் யான் உள்ளக் கிளர்ச்சி உடையேன் ஆகின்றேன்.
(ஆறு - நெறி எனலுமாம்.)
பாடல்
எண் : 2
ஒருமுழம்
உள்ள குட்டம்,
ஒன்பது துளை
உடைத்தாய்,
அரைமுழம்
அதன் அகலம்,
அதனில்வாழ் முதலை
ஐந்து,
பெருமுழை
வாய்தல் பற்றிக்
கிடந்து,நான் பிதற்று
கின்றேன்,
கருமுகில்
தவழும் மாடக்
கச்சிஏ கம்ப னீரே.
பொழிப்புரை : கார்மேகங்கள் தவழும்
கச்சிமாநகரின் ஏகம்பம் என்ற திருக்கோயிலில் உறையும் பெருமானே ! ஒரு முழ நீளமும்
அரை முழ அகலமும் ஒன்பது துளைகளும் தன்கண் வாழும் முதலைகள் ஐந்தும் உடைய
சிறுகுளத்தின் பெரிய குகை போலும் நீர் வரும் வாய்த் தலைப்பை பிடித்துக் கொண்டு கிடந்து
அடியேன் அடைவு கேடாகப் பலகாலும் பேசுகின்றேன் .
பாடல் எண் : 3
மலையினார்
மகள்ஓர் பாகம்
மைந்தனார், மழுஒன்று ஏந்திச்
சிலையினால்
மதில்கண் மூன்றும்
தீஎழச் செற்ற செல்வர்,
இலையினார்
சூலம் ஏந்தி
ஏகம்பம் மேவி னாரை,
தலையினால்
வணங்க வல்லார்
தலைவர்க்கும் தலைவர்
தாமே.
பொழிப்புரை : பார்வதி பாகரான
இளையராய் , ஒற்றை மழுப் படையை
ஏந்தியவராய் , வில்லினால்
மும்மதில்களும் தீப்பற்றி எரியுமாறு அவற்றை அழித்த செல்வராய் , இலைவடிவமான சூலத்தைக் கையில் ஏந்தி
ஏகம்பத்தை விரும்பி உறையும் பெருமானைத் தம் தலையால் வணங்க வல்ல அடியவர்கள் பெரிய
தலைவர்களுக்கும் தலைவராகும் உயர் நிலையினராவர் .
பாடல்
எண் : 4
பூத்தபொன்
கொன்றை மாலை
புரிசடைக்கு அணிந்த
செல்வர்,
தீர்த்தமாம்
கங்கை யாளைத்
திருமுடி திகழ வைத்து,
ஏத்துவார்
ஏத்த நின்ற
ஏகம்பம் மேவி னாரை,
வாழ்த்துமாறு
அறிய மாட்டேன்,
மால்கொடு மயங்கி
னேனே.
பொழிப்புரை : பொன்போன்று பூத்த
கொன்றைமாலையை முறுக்குண்ட சடைக்கண் அணிந்த செல்வராய் , பரிசுத்தமான கங்கையைத் தம் அழகிய
முடியிலே விளங்குமாறு வைத்து , தம்மை வழிபடும்
அடியார்கள் ஏத்துதற்குப் பொருளாய் நின்ற ஏகம்பத்தை விரும்பி நிலையாக உறையும்
பெருமானை வழிபடும் முறையை அறிய இயலாதேனாய் , இப்பொழுது அவனிடம் பற்றுக்கொண்ட யான்
வீணாகக் கழிந்த காலத்தை நினைத்து மயங்கினேன் .
பாடல்
எண் : 5
மையின்ஆர்
மலர்நெ டுங்கண்
மங்கைஓர் பங்கர் ஆகி,
கையில்ஓர்
கபாலம் ஏந்திக்
கடைதொறும்
பலிகொள்வார்தாம்,
எய்வது
ஓர்எனம் ஓட்டி,
ஏகம்பம் மேவி னாரைக்
கையினால்
தொழவல் லார்க்குக்
கடுவினை களையல் ஆமே.
பொழிப்புரை : மை பூசிய குவளைமலர்
போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதிபாகராய் , கையில் மண்டை ஓட்டைப் பிச்சை பெறும்
பாத்திரமாக ஏந்தி வீட்டு முகப்புத்தோறும் பிச்சை பெறுவாராய் , தம்மால் அம்பு எய்யப்படும் பன்றியை
விரட்டி , ஏகம்பம் மேவிய
பெருமானைக் கைகளால் தொழவல்ல அடியவர்களுக்குக் கொடிய தீவினைகளைப் போக்கிக்கொள்ளுதல்
இயலும் .
பாடல்
எண் : 6
தருவினை
மருவும் கங்கை
தங்கிய சடையன், எங்கள்
அருவினை
அகல நல்கும்
அண்ணலை, அமரர் போற்றும்
திருவினை, திருஏ கம்பம்
செப்பிட உறைய வல்ல
உருவினை, உருகி ஆங்கே
உள்ளத்தால் உகக்கின்
றேனே.
பொழிப்புரை : சிவபுண்ணியப் பேற்றை
அளிக்கவல்ல கங்கை தங்கிய சடையனாய் ,
எங்கள்
அரிய வினைப்பயன்கள் எம்மை விடுத்து நீங்குமாறு அருள் வழங்கும் தலைவனாய் , தேவர்கள் போற்றும் செல்வமாய் , திருவேகம்பத்தில் அடியவர் தன் புகழைப்
பாடத் தங்கியிருத்தலில் வல்லனாய் ,
உள்ள
சிவபெருமான் உருவினை நினைத்து உருகி உளமார மகிழ்கின்றேன் .
பாடல்
எண் : 7
கொண்டதுஓர்
கோலம் ஆகிக்
கோலக்கா உடைய கூத்தன்,
உண்டதுஓர்
நஞ்சம் ஆகி
உலகுஎலாம் உய்ய
உண்டான்,
எண்திசை
யோரும் ஏத்த
நின்ற ஏகம்பன் தன்னை,
கண்டுநான்
அடிமை செய்வான்
கருதியே திரிகின்
றேனே.
பொழிப்புரை : தான் விரும்பிக்
கொண்ட வடிவுடையவனாய்த் திருக்கோலக்கா என்ற திருத்தலத்தை உடைய கூத்தனாய் , உலகங்கள் எல்லாம் உயிர் பிழைக்குமாறு
விடத்தை உண்டவனாய் எட்டுத் திசையிலுள்ளாரும் போற்றுமாறு நிலைபெற்ற ஏகம்பனைத்
தரிசித்து அவனுக்கு அடிமைத் தொண்டு செய்வதற்கு அடியேன் தலந்தொறும் அலைகின்றேன் .
பாடல்
எண் : 8
படம்உடை
அரவி னோடு
பனிமதி அதனைச் சூடி,
கடம்உடை
உரிவை மூடி,
கண்டவர் அஞ்ச அம்ம,
இடம்உடைக்
கச்சி தன்னுள்
ஏகம்பம் மேவி னான்தன்
நடம்உடை
ஆடல் காண,
ஞாலந்தான் உய்ந்த
வாறே.
பொழிப்புரை : படத்தை உடைய
பாம்பினோடு குளிர்ந்த பிறையைச் சூடி , மதம்
பெருக்கும் யானைத் தோலைப் போர்த்துப் பார்ப்பவர்கள் அஞ்சுமாறு , செல்வத்தை உடைய காஞ்சிநகரில் ஏகம்பத்தை
உறைவிடமாக விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபெருமானுடைய சிறப்பான ஆடலைக் காண்பதனால்
உலகம் தீவினை யிலிருந்து பிழைத்தது . இது வியக்கத்தக்கது .
பாடல்
எண் : 9
பொன்திகழ்
கொன்றை மாலை
பொருந்திய நெடுந்தண்
மார்பர்,
நன்றியில்
புகுந்து என்உள்ளம்
மெள்ளவே நவில நின்று
குன்றியில்
அடுத்த மேனிக்
குவளைஅம் கண்டர், எம்மை
இன்துயில்
போது கண்டார்,
இனியர் ஏகம்ப னாரே.
பொழிப்புரை : குன்றிமணி போலச்
சிவந்த திருமேனியில் கருங்குவளை போல அமைந்த நீலகண்டராய்ப் பொன் நிறக் கொன்றை மாலை
பொருந்திய நெடிய குளிர்ந்த மார்பினராய் என் உள்ளத்தில் நன்மை தரும் வகையில்
புகுந்து என்மனம் மெதுவாக வணக்கம் சொல்லுமாறு நின்று யான் இனிமையாகத் துயின்றபோது
காணப் பெற்றார் . அதனால் ஏகம்பனார் எனக்கு இனியராகின்றார் .
பாடல்
எண் : 10
துருத்தியார், பழனத்து உள்ளார்,
தொண்டர்கள் பலரும்
ஏத்த
அருத்தியால்
அன்பு செய்வார்,
அவரவர்க்கு அருள்கள்
செய்தே,
எருத்தினை
இசைய ஏறி
ஏகம்பம் மேவி
னார்க்கு,
வருத்திநின்று
அடிமை செய்வார்
வல்வினை மாயும்
அன்றே.
பொழிப்புரை : அடியவர் பலரும்
போற்றிப் புகழுமாறு திருத் துருத்தி , திருப்பழனம்
என்ற தலங்களில் உறைபவராய் , விருப்பத்தோடு
தம்மிடம் அன்பு காட்டுபவர்களுக்கு அருள்கள் செய்து காளையைப் பொருந்துமாறு இவர்ந்து
ஏகம்பத்தை விரும்பி உறையும் எம்பெருமானுக்கு , உடம்பை முயற்சியில் ஈடுபடுத்தி அடிமை
செய்யும் அடியவர்களுடைய கொடிய தீவினைகள் அழிந்து ஒழியும் .
திருச்சிற்றம்பலம்
4. 099 திருக்கச்சியேகம்பம் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
ஓதுவித்
தாய்முன் அறவுரை
காட்டி, அமணரொடே
காதுவித்
தாய்,கட்ட நோய்பிணி
தீர்த்தாய், கலந்துஅருளிப்
போதுவித்
தாய்,நின் பணிபிழைக்
கில்புளி யம்வளாரால்
மோதுவிப்
பாய், உகப் பாய்,முனி
வாய்,கச்சி ஏகம்பனே.
பொழிப்புரை : காஞ்சிபுரத்தில்
ஒற்றை மாமர நிழலில் இருக்கும் பெருமானே! அடியேனுடைய வாழ்க்கையின் முற்பகுதியில்
சமணருடைய அறவுரைகளைப் பின்பற்றத்தக்கனவாக உள்ளத்தில் தெரிவித்துச் சமண சமய நூல்களை
ஓதுமாறு செய்தாய். பிறகு அவர்களே என்னை அழிப்பதற்கு முயலுமாறு செய்தாய். கொடிய
நோயினால் அடியேன் பிணிக்கப்பட்டிருந்த நிலையை நீக்கினாய். அடியேனுடைய உள்ளத்தில்
கலந்து சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்குப் புகச் செய்தாய். உன்னுடைய
திருத்தொண்டில் தவறு செய்வேனாயின் அடியேனைப் புளிய மரக்குச்சியால் அடித்துத்
தண்டிப்பாயாக . நீ சர்வ சுதந்திரன் ஆதலின் நீ விரும்பியதை உகப்பதும் விரும்பாததை
வெறுப்பதும் செய்வாய் . அடியேனை ,
உன்
திருவுள்ளம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நடத்துவாயாக .
பாடல்
எண் : 2
எத்தைக்கொண்டு
எத்தகை ஏழை
அமணொடு இசைவித்து எனைக்
கொத்தைக்கு
மூங்கர் வழிகாட்டு
வித்து என்னக்
கோகுசெய்தாய்,
முத்தில்
திரளும் பளிங்கினில்
சோதியும் மொய்பவளத்
தொத்தினை
ஏய்க்கும் படியாய்,
பொழில்கச்சி ஏகம்பனே.
பொழிப்புரை : முத்தின் குவியலும்
பளிங்கின் ஒளியும் செறிந்த பவளக் கொத்தினை ஒத்துச் செம்மேனியில் வெண்ணீறு
அணிந்திருக்கும் கச்சி ஏகம்பனே ! யாது காரணம் பற்றி அடியேனை எப்பேர்ப்பட்ட
அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்ற
இழிவினைச் செய்துவிட்டாய் ?
பாடல்
எண் : 3
மெய்அம்பு
கோத்த விசயனொடு
அன்று ஒரு
வேடுவனாய்ப்
பொய்அம்பு
எய்து ஆவம் அருளிச்
செய்தாய், புரம் மூன்று எரியக்
கைஅம்பு
எய்தாய், நுன் கழல்அடி
போற்றாக்
கயவர்நெஞ்சில்
குய்யம்
பெய்தாய், கொடி மாமதில்
சூழ்கச்சி ஏகம்பனே.
பொழிப்புரை : கச்சி ஏகம்பனே !
உண்மையாக அம்புகளை வில்லில் சேர்த்துப் போரிட்ட அருச்சுனனோடு அக் காலத்தில் ஒரு
வேடன் வடிவினனாய்ப் பொய்யாக அம்பை வில்லில் சேர்த்து அவனோடு போரிட்டு அவனுக்கு
அம்புறத் தூணியை அருளிச் செய்தவனே ! முப்புரமும் தீக்கு இரையாகுமாறு கைகளால் அம்பு
எய்தவனே ! உன்னுடைய வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளைப் போற்றாத கயவர்களுடைய
உள்ளத்தில் மாயையால் உண்மையை மறைத்தல் செய்தவனே ! குய்யம் - வஞ்சனை . ( சிந்தாமணி
-253)
பாடல்
எண் : 4
குறிக்கொண்டு
இருந்துசெந் தாமரை
ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட
இண்டை புனைகின்ற
மாலை, நிறை அழிப்பான்
கறைக்கண்ட
நீஒரு பூக் குறைவித்துக்
கண் சூல்விப்பதே,
பிறைத்துண்ட
வார்சடை யாய், பெருங்
காஞ்சி எம்பிஞ்ஞகனே.
பொழிப்புரை : மதியின் கூறாகிய
பிறையை அணிந்த நீண்ட சடையனே ! பெரிய காஞ்சி மாநகரில் உள்ளாயாய்த் தலைக்கோலம் என்ற
அணியை அணிந்தவனே ! நாளும் ஆயிரம் பூக்களால் இண்டை மாலை தொடுத்துச் சிவபெருமானுக்கு
அணிவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து நாள்தோறும் ஆயிரம் செந்தாமரை
மலர்களால் வரிசை அமைய இண்டை மாலையைத் தொடுக்கின்ற திரு மாலுடைய மனநிறைவை அழிப்பவன்
போல நீலகண்டனாகிய நீ ஒரு பூவைக் குறையச் செய்து அப்பூவின் தானத்தில் செந்தாமரை
போன்ற தன் கண்ணை இடந்து அவன் பூவாகத் தொடுப்பதற்காக அவன் கண் ஒன்றனைத் தோண்டி
எடுக்குமாறு செய்தாயே .
பாடல்
எண் : 5
உரைக்கும்
கழிந்துஇங்கு உணர்வுஅரியான்,
உள்குவார் வினையைக்
கரைக்கும், எனக்கை தொழுவது
அல்லால், கதிரோர்கள் எல்லாம்
விரைக்கொள்
மலரவன் மால்எண்
வசுக்கள் ஏகாதசர்கள்
இரைக்கும்
அமிர்தர்க்கு அறியஒண்
ணான், எங்கள் ஏகம்பனே.
பொழிப்புரை : சொற்களால் தன்
பெருமையைச் சொல்ல இயலாதவனாய் , மனத்தாலும்
உணர்வதற்கு அரியவனாய்த் தன்னை வணங்குபவர்களுடைய வினைகளைச் செயலற்றன ஆக்குவான் என்ற
கருத்தொடு கையால் தொழுவதே அல்லாமல்,
எங்கள்
ஏகம்பப் பெருமான் பிரமன் , திருமால் , ஆதித்தர் பன்னிருவர் , வசுக்கள் எண்மர் , உருத்திரர் பதினொருவர் முதலாகத் தன்னை
உரத்த குரலில் துதிக்கும் தேவர்களுக்கும் உள்ளவாறு அறிய இயலாதவன் ஆவான் .
பாடல்
எண் : 6
கருஉற்ற
நாள்முத லாக உன் பாதமே காண்பதற்கு
உருகிற்று
என்உள்ளமும், நானும் கிடந்து
அலந்து எய்த்து ஒழிந்தேன்,
திருஒற்றி
யூரா, திருஆல வாயா, திருஆரூரா,
ஒருபற்று
இலாமையும் கண்டுஇரங் காய்,கச்சி ஏகம்பனே.
பொழிப்புரை : திருவொற்றியூரா !
திருவாலவாயா ! திருவாரூரா ! கச்சிஏகம்பனே ! அடியேன் தாயாரினுடைய கருவிலே பொருந்திய
நாள்முதலாக உன் திருவடியைக் காண்பதற்கு அடியேனுடைய உள்ளம் உருகுகிறது . அடியேனும்
கிடந்து வருந்தி இளைத்துச் செயலற்று விட்டேன் . அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு
அடைக்கலம் இல்லை என்பதனையும் கண்டு அடியேன்மாட்டு இரக்கம் கொள்வாயாக .
பாடல்
எண் : 7
அரிஅயன்
இந்திரன் சந்திர ஆதித்தர் அமரர் எல்லாம்
உரியநின்
கொற்றக் கடைத்தலையார், உணங் காக்கிடந்தார்,
புரிதரு
புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார்,
எரிதரு
செஞ்சடை ஏகம்ப, என்னோ
திருக்குறிப்பே.
பொழிப்புரை : தீப் போன்ற ஒளியை
உடைய சிவந்த சடைமுடியனாகிய ஏகம்பனே ! திருமால் , பிரமன் , இந்திரன் , சந்திரன் , சூரியன் முதலிய தேவர்கள் எல்லோரும் உரிய
உன்னுடைய வெற்றி பொருந்திய கோயிலின் முதல்வாசலில் உன் காட்சியை விரும்பி வாடிக்
கிடக்கின்றார்கள் . முறுக்கேறிய சிவந்த சடைகளை உடைய , சிவானந்த போகத்தைத் துய்க்க விரும்பும்
முனிவர்களும் உன் காட்சி கிட்டாமையால் தனிமைத் துன்பம் உறுகின்றார்கள் .
அவர்களுக்குக் காட்சி வழங்குவது பற்றி உன் திருவுள்ளம் யாதோ ? அருளுவாயாக .
பாடல்
எண் : 8
பாம்புஅரைச்
சேர்த்திப் படரும் சடைமுடிப் பால்வண்ணனே,
கூம்பலைச்
செய்த கரதலத்து அன்பர்கள் கூடிப் பல்நாள்
சாம்பரைப்
பூசி, தரையில் புரண்டு,நின் தாள் சரண்என்று
ஏம்பலிப்
பார்கட்கு இரங்கு கண்டாய்,
கச்சி
ஏகம்பனே.
பொழிப்புரை : பாம்பினை இடுப்பில்
இறுகக் கட்டிப் பரவிய சடை முடியை உடைய பால் நிறத்தனே ! கச்சி ஏகம்பனே ! அடியார்கள்
இரு கைகளையும் குவித்துக் கொண்டு திருநீற்றைப் பூசிக்கொண்டு அடியார் குழாத்துடன்
கூடிப் பலநாள்களாகத் தரையில் புரண்டு உன் திருவடிகளே தங்களுக்கு அடைக்கலம் என்று கூறிவந்து
அடைந்துள்ளனர் . அவர்களுக்கு நீ இரங்கி அருளுவாயாக .
பாடல்
எண் : 9
ஏன்றுகொண்
டாய் என்னை எம்பெருமான்,
இனி அல்லம்என்னில்,
சான்றுகண்
டாய்இவ் வுலகம் எல்லாந்தனியேன் என்றுஎனை
ஊன்றிநின்
றார் ஐவர்க்கு ஒற்றிவைத் தாய், பின்னை ஒற்றி எல்லாம்
சோன்றுகொண்
டாய்,கச்சி ஏகம்பம் மேய
சுடர்வண்ணனே.
பொழிப்புரை :கச்சி ஏகம்பத்தில்
விரும்பி உறைகின்ற ஒளி வடிவினனே! எம்பெருமானே! அடியேனை உன் அடியவன் என்று ஏற்றுக்
கொண்ட நீ இப்பொழுது அடியேனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினால், நீ அடியேனை ஏற்றுக் கொண்டதற்கு
இவ்வுலகம் முழுதும் சாட்சி என்பதனை நினைத்துப்பார். தன் உணர்வு இல்லாதவன் என்று
அடியேனைப் பற்றி நின்ற ஐம்பொறிகளுக்கும் போக்கியப் பொருளாக வழங்கிப் பின் அந்தப்
போக்கியப் பொருளாயிருந்த தன்மையிலிருந்து அடியேனை மீட்டுக்கொண்டாய் என்பதனை உளம்
கொள்வாயாக .
பாடல்
எண் : 10
உந்திநின்
றார்உன்தன் ஓலக்கச் சூளைகள் வாய்தல் பற்றி,
துன்றிநின்
றார்தொல்லை வானவர் ஈட்டம்,
பணி
அறிவான்
வந்துநின்
றார் அயனும் திருமாலும்,
மதில்கச்சியாய்
இந்தநின்
றோம், இனி எங்ஙனமோ வந்து
இறைஞ்சுவதே.
பொழிப்புரை :மதில்களை உடைய காஞ்சி
நகரில் உறைபவனே ! உன்னுடைய திருவோலக்க மண்டபத்தின் வாயிலைப் பொருந்தித் தேவலோக
அரம்பையர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு நிற்கிறார்கள் . பழைய வானவர்
கூட்டத்தினர் தமக்கு இடப்படும் திருத் தொண்டு யாது என்று அறிவதற்கு ஓலக்கத்தில்
நெருக்கமாக நின்று கொண்டு இருக்கிறார்கள் . பிரமனும் திருமாலும் அம்மண்டபத்தில்
வந்து நிற்கிறார்கள் . இவ்விடத்தில் நிற்கின்ற அடியோங்கள் அவ்வளவு கூட்டம்
நிரம்பிய உன் திருவோலக்க மண்டபத்தில் எங்ஙனம் வந்து உன்னைக் கண்டு வழிபடல் இயலும் ?
திருச்சிற்றம்பலம்
5. 047 திருஏகம்பம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பண்டு
செய்த பழவினை யின்பயன்
கண்டும்
கண்டும் களித்திகாண் நெஞ்சமே
வண்டு
உலாமலர்ச் செஞ்சடை ஏகம்பன்
தொண்ட
னாய்த்திரி யாய்துயர் தீரவே.
பொழிப்புரை :நெஞ்சமே ! நீ
முற்பிறவிகளிற் செய்த பழவினைகளின் பயனைக் கண்டும் கண்டும் பின்னும் களிப்புற்றுக்
கெடுகின்றனையே , வண்டு உலாவுகின்ற
மலரையணிந்த செஞ்சடை உடையவனாகிய திருவேகம்பத்துப் பெருமானுக்குத் தொண்டனாகி உன்
துயர்கள் தீரும்பொருட்டுத் திரிவாயாக .
பாடல்
எண் : 2
நச்சி
நாளும் நயந்துஅடி யார்தொழ
இச்சை
யால்உமை நங்கை வழிபடக்
கொச்சை
யார்குறு கார்செறி தீம்பொழில்
கச்சி
ஏகம்ப மேகை தொழுமினே.
பொழிப்புரை : அடியார்கள்
நாள்தோறும் நசை உடையவராய் நயந்து தொழவும் , உமைநங்கையார் இச்சையால் வழிபடவும் கண்டு
, செறிந்த இனிய
பொழில்களை உடைய கச்சியேகம்பத்தினை நீங்களும் கைகளாற் றொழுவீர்களாக .
பாடல்
எண் : 3
ஊனில்
ஆவி இயங்கி உலகுஎலாம்
தான்
உலாவிய தன்மையர் ஆகிலும்
வான்
உலாவிய பாணி பிறங்க,வெங்
கானில்
ஆடுவர் கச்சிஏ கம்பரே.
பொழிப்புரை : கச்சி ஏகம்பர் , உடல்கள்தோறும் உயிராய் இயங்கி
உலகமெல்லாம் பொருந்திய இயல்பினை உடையவராயினும் , வான மெங்கும் உலாவிய இசை விளங்கும்
படியாக வெவ்விய சுடுகாட்டில் நட்டமும் ஆடுவர் .
பாடல்
எண் : 4
இமையா
முக்கணர், என்நெஞ்சத்து உள்ளவர்,
தமையா
ரும்அறி ஒண்ணாத் தகைமையர்,
இமையோர்
ஏத்த இருந்தவன், ஏகம்பன்,
நமைஆளும்
அவனைத் தொழு மின்களே.
பொழிப்புரை : இமையாத முக்கண்ணை
உடையவரும் , என் நெஞ்சத்தின்கண்
உள்ளவரும் , தம்மை யாரும்
அறியவொண்ணாத பெருந்தகைமை உள்ளவரும் . தேவர்கள் ஏத்துமாறு வீற்றிருந்தவரும் , நம்மையாள்பவருமாகிய திருவேகம்பரைத்
தொழுவீர்களாக .
பாடல்
எண் : 5
மருந்தி
னோடுநல் சுற்றமும் மக்களும்
பொருந்தி
நின்றுஎனக்கு ஆயஎம் புண்ணியன்,
கருந்த
டங்கண்ணி னாள்உமை கைதொழ
இருந்த
வன்,கச்சி ஏகம்பத்து
எந்தையே.
பொழிப்புரை : கச்சியேகம்பத்தின்கண்
எழுந்தருளியுள்ள எந்தை , எனக்கு மருந்தும் , சுற்றமும் , மக்களும் ஆகப் பொருந்திநின்று விளங்கும்
புண்ணிய வடிவினன் ; கரிய பெரிய கண்ணை
உடைய உமாதேவி கைதொழ இருந்தவன் ஆவன் .
பாடல்
எண் : 6
பொருளி
னோடுநல் சுற்றமும் பற்றுஇலர்க்கு
அருளும்
நன்மைதந்து ஆய அரும்பொருள்
சுருள்கொள்
செஞ்சடை யான்,கச்சி ஏகம்பம்
இருள்கெ
டச்சென்று கைதொழுது ஏத்துமே.
பொழிப்புரை : பற்று அற்றவர்களுக்குப்
பொருளும் , நற்சுற்றமும் , அருளும் , நன்மைதந்து ஆதலுற்ற அரும்பொருளும்
ஆகியவனும் , சுருளுதலைக்கொண்ட
செஞ்சடை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கச்சிஏகம்பத்தை , உம்மைச்சார்ந்த இருள் மலங்கெடச் சென்று
கரங்குவித்து வழிபடுவீர்களாக .
பாடல்
எண் : 7
மூக்கு
வாய்செவி கண்உடல் ஆகிவந்து
ஆக்கும்
ஐவர்தம் ஆப்பை அவிழ்த்து,அருள்
நோக்கு
வான், நமை நோய்வினை வாராமே
காக்கும்
நாயகன், கச்சி ஏகம்பனே.
பொழிப்புரை : கச்சியேகம்பத்து
இறைவன் , மெய் , வாய் , கண் , மூக்குச் செவியாகி வந்து ஆக்கிய
ஐம்புலன்களினாலாய கட்டினை அவிழ்த்தருளித் தன் திருக்கண்களால் நம்மை நோக்குவான் ; நோய்களை உண்டாக்கும் வினைகள்
நம்மிடத்துவாராமற் காக்கும் நாயகன் ஆவன் .
பாடல்
எண் : 8
பண்ணில்
ஓசை, பழத்தினில் இன்சுவை,
பெண்ணொடு
ஆண்என்று பேசற்கு அரியவன்,
வண்ணம்
இல்லி, வடிவுவேறு ஆயவன்,
கண்ணில்
உள்மணி கச்சி ஏகம்பனே.
பொழிப்புரை : கச்சியேகம்பத்து
இறைவன் பண்ணின் இசையாகவும் பழத்தில் இனிய சுவையாகவும் , பெண் ஆண் என்று ஒருபாற்படுத்திப்
பேசுதற்கு அரியவனாகவும் , வண்ணம்
இல்லாதவனாகவும் , வடிவம் வேறாயவனாகவும்
, கண்ணினுட்
கருமணியாகவும் உள்ளான் .
பாடல்
எண் : 9
திருவின்
நாயகன் செம்மலர் மேல்அயன்
வெருவ
நீண்ட விளங்குஒளிச் சோதியான்,
ஒருவ
னாய் உணர்வாய் உணர்வு அல்லதுஓர்
கருவுள்
நாயகன், கச்சி ஏகம்பனே.
பொழிப்புரை : கச்சியேகம்பத்து
இறைவன் , திருமகளின் நாயகனாகிய
திருமாலும் , சிவந்த தாமரை
மலர்மேல் உள்ள பிரமனும் அஞ்சி வெருவும்படியாக விளங்குகின்ற நிமிர்ந்த சோதி
ஒளியாகவும் , ஒப்பற்றவனாகவும் , உணர்வு ஆகவும் , உணர்வல்லாத கருவினுள் நாயகனாகவும்
உள்ளான் .
பாடல்
எண் : 10
இடுகு
நுண்இடை ஏந்துஇள மென்முலை
வடிவின்
மாதர் திறம்மனம் வையன்மின்,
பொடிகொள்
மேனியன் பூம்பொழிற் கச்சியுள்
அடிகள்
எம்மை அருந்துயர் தீர்ப்பரே.
பொழிப்புரை : மிகச் சிறிய ( இடுகிய
) நுண்ணிடையையும் , இளமை உடைய சற்றே
ஏந்தினாற்போன்ற மென்முலையையும் ,
உடைய
வடிவினையுடைய பெண்கள்பால் உள்ளம் வையாதீர்கள்; திருநீற்றுப்பொடியணிந்த மேனியனாகிய , பொழில் சூழ்ந்த கச்சியேகம்பத்து
எழுந்தருளியுள்ள இறைவன் எம்மையெல்லாம் அரிய துயரங்கள் தீர்த்துக் காப்பர் .
பாடல்
எண் : 11
இலங்கை
வேந்தன் இராவணன் சென்றுதன்
விலங்க
லைஎடுக் கவ்விரல் ஊன்றலும்
கலங்கிக்
கச்சி ஏகம்பவோ என்றலும்
நலம்கொள்
செலவுஅளித் தான்எங்கள் நாதனே.
பொழிப்புரை : எங்கள் நாதனாகிய
கச்சியேகம்பத்து இறைவன் , இலங்கை வேந்தனாகிய
இராவணன் சென்று தம் திருக்கயிலாயத்தை எடுக்க முற்படுதலும் , தன் திருவிரலை ஊன்றக் கலங்குதலுற்று ` கச்சி ஏகம்பத்து இறைவா !` என்று அவன் அலறினன் ; அதுகேட்டு நலம் பெற மீளும் செலவை
அவனுக்கு அருளிய பெருங்கருணைத்திறம் உடையவன் .
திருச்சிற்றம்பலம்
5. 048 திருவேகம்பம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பூமே
லானும் பூமகள் கேள்வனும்
நாமே
தேவர் எனாமை நடுக்குஉறத்
தீமே
வும்உரு வாதிரு ஏகம்பா,
ஆமோ
அல்லல் படஅடி யோங்களே.
பொழிப்புரை : தாமரைப்பூமேல்
உள்ளவனாகிய பிரமதேவனும் , பூமகளாகிய
இலக்குமிநாயகனாகிய திருமாலும் `
யாங்களே
பிரமம் ` என்று கூறாது
நடுக்குறும்படியாகத் தீ வடிவாகிய பெருமானே ! திருவேகம்பத்தை உடையவனே ! நின்
அடியோமாகிய யாங்கள் அல்லற்படுதலும் ஆமோ ?
பாடல்
எண் : 2
அருந்தி
றல்அம ரர்அயன் மாலொடு
திருந்த
நின்று வழிபடத் தேவியோடு
இருந்த
வன்,எழில் ஆர்கச்சி
ஏகம்பம்
பொருந்தச்
சென்று புடைபட்டு எழுதுமே.
பொழிப்புரை : அரிய திறலை உடைய
தேவர்களும் , திருமாலும் , பிரமனும் திருத்தமுறநின்று வழிபடும்
வண்ணம் உமைநங்கையோடு இருந்த பெருமானது அருள் எழில் சேர்ந்த கச்சி ஏகம்பத்தைப்
பொருந்த சென்று தங்கி வழிபடற்கு எழுவோமாக .
பாடல்
எண் : 3
கறைகொள்
கண்டத்துஎண் தோள்இறை, முக்கணன்,
மறைகொள்
நாவினன், வானவர்க்கு ஆதியான்,
உறையும்
பூம்பொழில் சூழ்கச்சி ஏகம்பம்
முறைமை
யால்சென்று முந்தித் தொழுதுமே.
பொழிப்புரை : திருநீலகண்டனும் , எட்டுத்தோள்களை உடைய இறைவனும் , முக்கண்ணினனும் , வேதம் ஓதும் நாவினனும் , தேவர்களுக்கெல்லாம் ஆதியானவனும் ஆகிய
பெருமான் உறைகின்ற பூம் பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்தை நெறியினாற் சென்று
முந்துறத் தொழுவோமாக .
பாடல்
எண் : 4
பொறிப்பு
லன்களைப் போக்கறுத்து உள்ளத்தை
நெறிப்ப
டுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு
றும் அமுது ஆயவன், ஏகம்பம்
குறிப்பி
னால்சென்று கூடித் தொழுதுமே.
பொழிப்புரை : பொறிகளைப் , புலன்களின்வழிப் போதல் தவிர்த்து , உள்ளத்தை ஒரு நெறியின்கண்படச் செய்து
நினைந்த மெய்யடியார்களின் சிந்தனையுள் அறிதலுறும் அமுதாகிய பெருமான் எழுந்
தருளியுள்ள திருஏகம்பத்தைத் திருவருட் குறிப்பினாற் சென்று கூடித் தொழுவோமாக .
பாடல்
எண் : 5
சிந்தை
யுள்சிவ மாய்நின்ற செம்மையோடு,
அந்தி
யாய், அன லாய்ப்,புனல், வானமாய்,
புந்தி
யாய்ப்புகுந்து உள்ளம் நிறைந்தஎம்
எந்தை
ஏகம்பம் ஏத்தித் தொழுமினே.
பொழிப்புரை : சிந்தையுள்
சிவமாகிநின்ற செம்மையினோடு , அந்தியாகவும் , அனலாகவும் , புனலாகவும் , வானமாகவும் நினைவார் புத்தியாகிய
அந்தக்கரணமாகவும் எல்லாவற்றுள்ளும் புகுந்து , உள்ளத்தில் நிறைந்த எந்தையாரின் கச்சிஏகம்பத்தை
ஏத்தித் தொழுவீர்களாக .
பாடல்
எண் : 6
சாக்கி
யத்தோடு மற்றும் சமண்படும்
பாக்கி
யம்இலார், பாடுசெ லாதுஉற,
பூக்கொள்
சேவடி யான்கச்சி ஏகம்பம்
நாக்கொடு
ஏத்தி நயந்து தொழுதுமே.
பொழிப்புரை : புத்தமும் , சமணமுமாகிய நெறிகளிற் பட்டுத்
திருவருட்செல்வம் இல்லாதவர் மருங்குசெல்லாமல் , மிகுந்த பூக்களைக்கொண்ட சேவடியானது
கச்சியேகம்பத்தை நாவினைக் கொண்டு ஏத்தி விரும்பித் தொழுவோமாக .
பாடல்
எண் : 7
மூப்பி
னோடு முனிவுறுத்து எம்தமை
ஆர்ப்ப
தன்முன் அணிஅம ரர்க்குஇறை
காப்ப
துஆய கடிபொழில் ஏகம்பம்
சேர்ப்ப
தாகநாம் சென்றுஅடைந்து உய்துமே.
பொழிப்புரை : வெறுப்பு மிகுந்து
மூப்பினோடு எம்மையெல்லாம் கட்டுவதற்கு முன்பே , அணி உடைய அமரர்க்கு இறை உறைவதும் , காவலுடைய மணமிக்க பொழில் சூழ்ந்ததுமாகிய
ஏகம்பத்தைச் சேர்வதாக நாம் சென்று தரிசித்து உய்வோமாக .
பாடல்
எண் : 8
ஆலும்
மாமயில் சாயல்நல் லாரொடும்
சால
நீஉறு மால்தவிர் நெஞ்சமே,
நீல
மாமிடற்று அண்ணல் ஏகம்பனார்
கோல
மாமலர்ப் பாதமே கும்பிடே.
பொழிப்புரை : நெஞ்சமே ! ஒலிக்கின்ற
பெரிய மயில்போலும் சாயலை உடைய பெண்களோடும் நீ மிகுந்து கொண்ட மயக்கத்தைத்
தவிர்வாயாக ; நீலமாகிய பெருமைமிக்க
கழுத்தினை உடைய அண்ணலாகிய ஏகம்பனாருடைய கோலமிக்க மலர்ச் சேவடிகளைக் கும்பிட்டு
உய்வாயாக .
பாடல்
எண் : 9
பொய்
அனைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்ய
னை, சுடர் வெண்மழு ஏந்திய
கைய
னை, கச்சி ஏகம்பம் மேவிய
ஐய
னைத்தொழு வார்க்குஇல்லை அல்லலே.
பொழிப்புரை : அனைத்துப் பொய்யையும்
விட்ட உயர்ந்தவர் புந்தியுள் மெய்யாகவிளங்குபவனும் , சுடர்விடுகின்ற வெண்மழு ஏந்திய கையை
உடையவனும் ஆகிய கச்சியேகம்பத்தை விரும்பிப் பொருந்திய தலைவனைத் தொழுவார்க்கு
அல்லல்கள் இல்லையாம் .
பாடல்
எண் : 10
அரக்கன்
தன்வலி உன்னிக் கயிலையை
நெருக்கிச்
சென்றுஎடுத் தான்முடி தோள்நெரித்து
இரக்க
இன்னிசை கேட்டவன், ஏகம்பம்
தருக்கு
அதாகநாம் சார்ந்து தொழுதுமே.
பொழிப்புரை : தன் ஆற்றலைக்
கருதியவனாய்த் திருக்கயிலையைச் சென்று எடுத்தவனாகிய அரக்கனின் முடிகளையும்
தோள்களையும் நெரித்தவனும் , அவனது இரக்கத்திற்குரிய
இன்னிசையைக் கேட்டருள்புரிந்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திரு வேகம்பத்தை நாம்
அருள் இறுமாப்புடன் சார்ந்து தொழுவோமாக .
திருச்சிற்றம்பலம்
----- தொடரும்-----
No comments:
Post a Comment