திருக் கச்சி ஏகம்பம் - 2


                                    திருக்கச்சி ஏகம்பம்

     திருஞானசம்பந்தப் பெருமான் இத் திருத்தலத்து இறைவர் மீது நான்கு திருப்பதிகங்களைப் பாடி உள்ளார்.  மறையானை என்று தொடங்குவது முதல் திருப்பதிகம்.  திருஞானசம்பந்தப் பெருமான் இத் திருத்தலத்திற்கு எழுந்தருளிய நிலையையும், அவருக்கு காஞ்சியில் வாழ்ந்தோர் அளித்த சிறப்பான வரவேற்பையும் விளக்கி, தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடியருளிய அருமையை ஓதி மகிழ்ந்தே, திருப்பதிகத்தை ஓதி வழிபடுவோம்.

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு
  
பெரிய புராணப் பாடல் எண் : 985
ஆதி முதல்வர் குரங்கணில்முட்டத்தில்
         நீதி வழுவாத் திருத்தொண்டர்
போற்ற நிகரில் சண்பையினில்
         வேத மோடு சைவநெறி
விளங்க வந்த கவுணியனார்
         மாதொர் பாகர் தாம்மன்னும்
மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.

         பொழிப்புரை : ஆதிமுதல்வரான சிவபெருமானின் திருக்குரங் கணில்முட்டத்தைச் சேர்ந்து வணங்கிப் போற்றிச் சைவநெறியில் வழுவாத ஒழுக்கமுடைய திருத்தொண்டர் போற்றச் சென்று, ஒப் பில்லாத சீகாழிப் பதியில் மறைநெறியுடனே சைவநெறியும் விளங்குமாறு தோன்றியருளிய கவுணியரான ஞானசம்பந்தர், உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட ஏகம்பவாணர் நிலையாக எழுந்தருளியுள்ள மதில் சூழ்ந்த காஞ்சிப் பதியின் அருகில் அடைந்தார்.

பெ. பு. பாடல் எண் : 986
நீடுகாஞ்சி வாழ்நரும் நிலாவுமெய்ம்மை அன்பரும்
மாடுசண்பை வள்ளலார் வந்துஅணைந்த ஓகையால்,
கூடுகின்ற இன்பநேர் குலவுவீதி கோலினார்,
காடுகொண்ட பூகம்வாழை காமர்தோ ரணங்களால்.

         பொழிப்புரை : பெருமைமிக்க காஞ்சிமாநகரத்தில் வாழும் மக்களும், மெய்ம்மை நெறி நிலைபெற்ற திருத்தொண்டர்களும், நகரத்தின் அருகே திருஞானசம்பந்தர் வந்து சேர்ந்த மகிழ்ச்சியினால் உண்டான இன்பம் காரணமாக, காடு எனச் செறிந்த பாக்கு மரங்களையும், வாழைகளையும், அழகிய தோரணங்களையும் நிரல்பட அமைத்து வீதிகளை அணிசெய்தனர்.

பெ. பு. பாடல் எண் : 987
கொடிநிரைத்த வீதியில் கோலவே திகைப்புறம்
கடி கொள்மாலை, மொய்த்தபந்தர், கந்தநீர்த் தசும்புடன்,
மடிவுஇல்பொன் விளக்குஎடுத்து மாதர்மைந்தர் மல்குவார்,
படிவிளக்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார்.

         பொழிப்புரை : கொடிகளை நிரல்படக் கட்டிய வீதியில், அழகிய திண்ணையின் பக்கத்தில் மணமுடைய பந்தலில், மணநீர் நிறைந்த நிறைகுடங்களுடன், கெடுதல் இல்லாத பொன் விளக்குகளை ஏந்திப் பெண்களும் ஆண்களுமாய் நிறைந்து கூடுவார்களும், உலகில் அன்பு நெறியை விளக்கம் செய்யும் அன்பர்களும் பரவிப் போற்றும் இயல்புடன் வந்து நெருங்குபவர்களாகி,
  
பெ. பு. பாடல் எண் : 988
கோதைமாதர் ஆடலும், குலாவுதொண்டர் பாடலும்,
வேதகீத நாதமும், மிக்கு எழுந்து விம்மவே
காதல்நீடு காஞ்சிவாழ்நர் கம்பலைத்து எழுந்துபோய்
மூதுஎயில் புறம்புசென்று அணைந்துமுன் வணங்கினார்.

         பொழிப்புரை : மாலை சூடிய பெண்களின் ஆடல் ஓசையும், மறை ஒலியும் கூடி மிக்கு எழுந்து பெருகப் பெருவிருப்பினால் காஞ்சி வாழும் மக்கள் மகிழ்வொலி செய்து, எழுந்து சென்று, பழைமை உடைய மதிலின் வெளியில் சென்று கூடி முன்னம் வணங்கினர்.

பெ. பு. பாடல் எண் : 989
சண்பைஆளும் மன்னர்முன்பு தொண்டர்வந்து சார்தலும்,
பண்புநீடு யானமுன்பு இழிந்துஇறைஞ்சு பான்மைகண்டு,
எண்பெருக்கு மிக்கதொண்டர் அஞ்சலித்து எடுத்தசொல்
மண்பரக்க வீழ்ந்துஎழுந்து வானம்முட்ட ஆர்த்தனர்.

         பொழிப்புரை : சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தர் முன்பு, அந்தத் தொண்டர்கள் வந்து சேர்ந்தபோது அவர் அடிமைப் பண்பில் தலைநின்று, முத்துச் சிவிகையினின்றும் இறங்கி, வணங்கும் இயல்பைப் பார்த்து, எண்ணம் பெருக்கிய தொண்டர்கள் `அரகர' என்று எழுப்பிய ஒலி உலகத்தில் பரவ, நிலத்தில் விழுந்து எழுந்து, வானம் அளாவ மகிழ்வொலி செய்தனர்.

பெ. பு. பாடல் எண் : 990
சேண்உயர்ந்த வாயில்நீடு சீர்கொள்சண்பை மன்னனார்
வாண்நிலாவு நீற்றுஅணி விளங்கிட மனத்தினில்
பூணும்அன்பர் தம்முடன் புகுந்திடப் புறத்துளோர்
காணும்ஆசை யில்குவித்த கைந்நிரை எடுத்தனர்.

         பொழிப்புரை : பெருகும் சிறப்புக் கொண்ட சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர், ஒளி பொருந்திய திருநீற்றுக் கோலம் திருமேனியினில் விளங்கிட, உள்ளத்தில் சிவபெருமான் மீது கொண்ட அன்பையே அணிகலனாகவுடைய அடியவருடன், வான் அளாவ உயர்ந்த நகரத்து மதில் புறவாயிலுள் புகுந்தபோது, நகர்ப் புறத்தினின்றும் வந்து கூடிய மக்கள், பிள்ளையாரைக் காண்கின்ற ஆசையினால் வரிசையாய்க் கைகளைத் தலைமீது குவித்தவாறு வணங்கினர்.

பெ. பு. பாடல் எண் : 991
வியல்நெடும் தெருவின்ஊடு மிக்கதொண்டர் ஆர்ப்புஎழக்
கயல்நெடுங்கண் மாதரும் காதல்நீடு மாந்தரும்
புயல்பொழிந்த தாம்எனப் பூவினொடு பொற்சுணம்
இயலுமாறு வாழ்த்துஎடுத்து இருமருங்கும் வீசினார்.

         பொழிப்புரை : அகன்ற நீண்ட தெருவினிடையே கூடிய தொண் டர்களின் முழக்கம் எழ, கயல்மீன் போன்ற நீண்ட கண்களை உடைய பெண்களும் காதலால் மிக்க மக்களும், மேகம் மழைபெய்தது போல் பூக்களுடன் பொன் சுண்ணப் பொடியைத் திருமேனியில் ஒவ்வுமாறு தூவி வாழ்த்துக் கூறி இருமருங்கிலும் நின்று கவரி வீசினர்.

பெ. பு. பாடல் எண் : 992
இன்னவண்ணம் யாவரும் இன்பம்எய்த எய்துவார்,
பின்னுவார் சடைமுடிப் பிரான்மகிழ்ந்த கோயில்கள்
முன்னுறப் பணிந்துபோய் மொய்வரைத் திருமகள்
மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர்கோயில் முன்னினார்.

         பொழிப்புரை : இங்ஙனம் எல்லோரும் இன்பம் அடையுமாறு சேர்பவரான ஞானசம்பந்தர், சுருண்ட நீண்ட சடையையுடைய சிவ பெருமான் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் பலகோயில்களுள் இடைப்பட்ட கோயில்களை வணங்கிச் சென்று, மலையரசன் மகளான உமையம்மையாரின் நிலைபெற்ற பூசனையை என்றும் மகிழ்ந்து ஏற்றருளும் ஏகம்பரான இறைவரின் திருக்கோயில் முன்பு சேர்ந்தனர்.

         குறிப்புரை : காஞ்சி நகரில் கோயில்கள் பல உளவாதலை முன்னரும் (பா.1153) ஆசிரியர் குறித்துள்ளார். அக்கோயில்களுள் தம் வழியிடைப்பட்ட கோயில்களை வணங்கிச் சென்றனர் பிள்ளையார்.

பெ. பு. பாடல் எண் : 993
கம்பவாணர் கோயில்வாயில் கண்டு,கை குவித்துஎடுத்து,
உம்பர்ஓங்கு கோபுரத்தின் முன்இறைஞ்சி, உள்அணைந்து,
அம்பொன்மா ளிகைப்புறத்தில் அன்பரோடு சூழவந்து,
இம்பர்ஞாலம் உய்யவந்த பிள்ளையார் இறைஞ்சுவார்.

         பொழிப்புரை : ஏகம்பவாணரான இறைவரின் திருக்கோயில் வாயிலை நோக்கி, கைகளைக் குவித்துத் தலைமேற் கொண்டு வணங்கி, வானளாவ ஓங்கி நிற்கும் கோபுரத்தின் முன் வணங்கி, கோயிலுள் சென்று சேர்ந்து, அழகிய பொன் மாளிகையின் புறச் சுற்றில் அன்பர்களுடன் வலமாக வந்து, உலகம் உய்யுமாறு தோன்றியருளிய ஞானசம்பந்தர் வணங்குவாராய்,

 
பெ. பு. பாடல் எண் : 994
செம்பொன்மலைக் கொடிதழுவக்
         குழைந்துஅருளும் திருமேனிக்
கம்பரைவந்து எதிர்வணங்கும்
         கவுணியர்தம் காவலனார்
பம்புதுளிக் கண்அருவி
         பாய்ந்துமயிர்ப் புளகம்வரத்
தம்பெருகு மனக்காதல்
         தள்ளநில மிசைத்தாழ்ந்தார்.

         பொழிப்புரை : சிவந்த பொன்மயமான மலையரசனின் மகளா ரான கொடிபோன்ற காமாட்சியம்மையார் தழுவக்குழைந்த மேனியை யுடைய ஏகம்பரநாதரை, திருமுன்பு சென்று வணங்கும் கவுணியர் தலைவரான ஞானசம்பந்தர், துளிக்கும் துளிகளாகி அருவி எனக் கண்ணீர் பெருகத் திருமேனியில் மயிர்க்கூச்செறிந்து, தம் உள்ளத்தில் நிறைந்து பெருகும் பெருவிருப்பம் உந்த, நிலத்தின்மீது விழுந்து வணங்கியவராய்,

பெ. பு. பாடல் எண் : 995
பலமுறையும் பணிந்துஎழுந்து
         பங்கயச்செங் கைமுகிழ்ப்ப
மலருமுகம் அளித்ததிரு
         மணிவாயால் "மறையான்"என்று
உலகுஉய்ய எடுத்துஅருளி
         உருகியஅன்பு என்புஉருக்க
நிலவும்இசை முதல்தாளம்
         நிரம்பியநீர் மையில்நிகழ.

         பொழிப்புரை : பலமுறையும் வணங்கி எழுந்து, தாமரையனைய சிவந்த கைகள் குவிய, மலர்கின்ற திருமுகத்தில் தோன்றிய அழகிய ஒளி விளங்கும் வாக்கினால் `மறையானை\' என உலகம் உய்யுமாறு தொடங்கி, உள்ளம் உருகிய அன்பு எலும்பையும் உருக்குவதால் பொருந்திய பண்ணும் தாளமும் கூட நிரம்பிய தன்மையில்,

         குறிப்புரை : இவ்வாறாய மெய்ப்பாடுகள் நிகழ அருளிய பதிகம் `மறையானை' (தி.2 ப.12) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த திருப்பதிகமாகும். திருப்பதிகத்தைக் காண்போம்.


2.012 திருக்கச்சியேகம்பம்                 பண் - இந்தளம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மறையானை, மாசுஇலாப் புன்சடை மல்குவெண்
பிறையானை, பெண்ணொடுஆண் ஆகிய பெம்மானை,
இறையானை, ஏர்கொள்கச் சித்திரு ஏகம்பத்து
உறைவானை, அல்லதுஉள் காதுஎன துஉள்ளமே.

         பொழிப்புரை :வேதவடிவினன், குற்றமற்ற சிவந்த சடையிற் பொருந்திய வெண்பிறையினன். பெண்ணும் ஆணுமாகிய பெருமான் எல்லாப் பொருள்களிலும் உறைபவன். அழகிய கச்சிப்பதியில் திருஏகம்பம் என்னும் கோயிலில் உறைபவன். அத்தகையோனை அல்லது என் உள்ளம் பிறவற்றை நினையாது.


பாடல் எண் : 2
நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
உச்சியே புனைதல்வே டம்,விடை ஊர்தியான்,
கச்சிஏ கம்பம் மேயகறைக் கண்டனை
நச்சியே தொழுமின்,நும் மேல்வினை நையுமே.

         பொழிப்புரை :நொச்சியிலை, வன்னிஇலை, கொன்றை மலர் பிறைமதி, வில்வம் ஆகியவற்றை முடியிற்புனைந்துள்ளமை அவன் அடையாளமாகும். விடைஊர்தியை உடையவன் அவன். கச்சியில் திருவேகம்பத்தில் எழுந்தருளிய அக்கறைக்கண்டனை விரும்பித் தொழுவீர்களாக. உம்மேல் வரும் வினைகள் மெலியும்.


பாடல் எண் : 3
பார்ஆரும் முழவமொந் தைகுழல் யாழொலி
சீராலே பாடல்ஆ டல்சிதைவு இல்லதுஓர்
ஏரார்பூங் கச்சிஏ கம்பனை, எம்மானைச்
சேராதார் இன்பம்ஆய அந்நெறி சேராரே.

         பொழிப்புரை :உலகிற் பொருந்திய முழவம், மொந்தை, குழல், யாழ் ஆகியவற்றின் ஒலியோடு முறையான பாடலும் ஆடலும் குறையாத அழகிய கச்சி ஏகம்பத்து எம்மானைச் சேராதவர் இன்பமான நெறிகளைச் சேராதவர் ஆவர். நும் வினை - உங்கள் கர்மம், மேல்வினை - ஆகாமியம்.


பாடல் எண் : 4
குன்றுஏய்க்கும் நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
மின்தேய்க்கும் முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
மன்றுஏய்க்கு மல்குசீ ரான்மலி ஏகம்பம்
சென்றுஏய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே.

         பொழிப்புரை :குன்றுகள் போன்று உயர்ந்த சுதைமாடங்களில் கட்டிய கொடிகள் கூடிச் சென்று மின்னல்கள் உராயும் முகில்களைத் தோயும் விரிந்த கச்சிப்பதியில் பலவாறு மன்றுகளில் புகழப்படும் சீர்மையை உடையவன் எழுந்தருளிய திருஏகம்பத்தை அடைந்து மனம் பொருந்த வழிபாடு செய்யும் அடியவர்கள்மேல் வினைகள் சேரா.


பாடல் எண் : 5
சடையானை, தலைகைஏந் திப்பலி தருவார்தம்
கடையேபோய் மூன்றும்கொண் டான்,கலிக் கச்சியுள்
புடையேபொன் மலரும்கம் பைக்கரை ஏகம்பம்
உடையானை, அல்லதுஉள் காதுஎன துஉள்ளமே.

         பொழிப்புரை :சடைமுடியை உடையவனும், தலையோட்டைக் கையில் ஏந்திப் பலியிடுவார் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் உடல் பொருள் ஆவி ஆகியவற்றைக் கொண்டவனும் ஆகிய ஆரவாரம் நிறைந்த கச்சிப் பதியில் பொன்னிறமலர்கள் மலரும் கம்பை நதிக்கரையில் விளங்கும் திருஏகம்பம் உடையானை அல்லது பிறரை எனது உள்ளம் விரும்பாது.


பாடல் எண் : 6
மழுவாளோடு எழில்கொள்சூ லப்படை வல்லார்தம்
கெழுவாளோர் இமையார்உச் சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வளர் ஏகம்பம்
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே.

         பொழிப்புரை :மழுவாள் அழகிய சூலம் ஆகிய படைகளை ஏந்தியவர். தம்மிடம் பொருந்திய ஒளியுடையவர். இமயமலையின் உச்சியில் உறைபவர். உமையம்மை கங்கை ஆகியோருடன் கூடி அவர் எழுந்தருளிய பெருகும் புகழ் பொருந்திய ஏகம்பத்தைத் தொழுபவரே விழுமியோர் ஆவர். அவரை வினைகள் அணுகா.


பாடல் எண் : 7
விண்உளார், மறைகள்வே தம்விரித்து ஓதுவார்,
கண்உளார், கழலின்வெல் வார்கரி காலனை
நண்ணுவார், எழில்கொள்கச் சிநகர் ஏகம்பத்து
அண்ணலார், ஆடுகின் றஅலங் காரம்மே.

         பொழிப்புரை :வானகத்தில் உறைபவர். மறைகளாகிய வேதங்களை விரித்து ஓதுபவர்களின் கண்களின் ஒளிர்பவர். கருநிறம் உடைய காலனை வீரக்கழல் அணிந்த திருவடியால் உதைத்து வென்றவர். தம்மைச் சரணாக அடைபவர்களின் எழிலைக் கொள்ளும், கச்சி நகரில் விளங்கும் திருஏகம்பத்துத் தலைவர் ஆடுகின்ற ஆடல் மிக்க அழகுடையது.


பாடல் எண் : 8
தூயானை, தூயவாய் அம்மறை ஓதிய
வாயானை, வாள்அரக் கன்வலி வாட்டிய
தீயானை, தீதுஇல்கச் சித்திரு ஏகம்பம்
மேயானை, மேவுவார் எனதலை மேலாரே.

         பொழிப்புரை :தூயவன். தூயனவாகிய மறைகளை ஒதிய வாயினன். ஒளி பொருந்திய வாளினை உடைய இராவணனின் வலிமையை அடர்த்த, தீயேந்தியவன். குற்றமற்ற திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியிருப்பவன். அவனை அடைந்து துதிப்பவர் என் தலைமேல் கொள்ளத்தக்கவர்.


பாடல் எண் : 9
நாகம்பூண் ஏறுஅது ஏறல்நறுங் கொன்றைதார்
பாகம்பெண் பலியும்ஏற் பர்மறை பாடுவர்,
ஏகம்ப மேவிஆ டும்இறை இருவர்க்கும்
மாகம்பம் அறியும்வண் ணத்தவன் அல்லனே.

         பொழிப்புரை :நாகம் அவனது அணிகலன். அவனது ஊர்தி விடை. மணம் கமழும் கொன்றை அவனது மாலை. ஒருபாகத்தில் பெண்ணைக் கொண்டவன். பிச்சையும் ஏற்பவன். மறைகளைப் பாடுபவன். கச்சித்திருஏகம்பத்தில் எழுந்தருளி மகிழ்வோடு ஆடும் இறைவன். திருமால் பிரமர்க்குப் பெரிய நடுக்கத்தைத் தருவதோடு அவர்களால் அறியத்தக்க வண்ணத்தவன் அல்லன்.


பாடல் எண் : 10
போதியார் பிண்டியார் என்றுஇவர் பொய்ந்நூலை
வாதியா வம்மின், அம் மாஎனுங் கச்சியுள்
ஆதியார் மேவிஆ டும்திரு ஏகம்பம்
நீதியால் தொழுமின்,நும் மேல்வினை நில்லாவே.

         பொழிப்புரை :போதிமரநிழலில் அமர்ந்த புத்தனை வணங்கு வோரும், அசோகமர நிழலில் அமர்ந்த அருகனை வணங்குவோரும் ஆகிய புத்தசமண மதத்தினரின் பொய்ந்நூல்களை ஆராய்வதை விடுத்து, வாருங்கள். அழகிய மாமர நீழலில் விளங்கும் தலைவனாகிய சிவபிரான் ஆடும் கச்சியுள் விளங்கும் திருஏகம்பத்தை விதிப்படி வழிபடுங்கள். நும் மேல் வரும் வினைகள் நில்லா.


பாடல் எண் : 11
அந்தண்பூங் கச்சிஏ கம்பனை, அம்மானை,
கந்தண்பூங் காழிஊ ரன்கலிக் கோவையால்
சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
பந்தன்சொல் பாடிஆ டக்கெடும் பாவமே.

         பொழிப்புரை :அழகும் தண்மையும் பொலிவும் உடைய கச்சி ஏகம்பத்தில் விளங்கும் தலைவனைப்பற்றி, நீர் வளமும் தண்மையும் அழகும் உடைய சீகாழிப்பதியுள் தோன்றியவனாய் ஒலிமாலை எனப்படும் திருப்பதிகங்களால் இசைத்தமிழில் பாடவல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்களைப் பாடி ஆடிப் போற்றப் பாவம் கெடும்.
                                             திருச்சிற்றம்பலம்


அடுத்த மூன்று திருப்பதிகங்களையும் திருஞானசம்பந்தப் பெருமான் பாடியருளிய நிலையையும், அத் திருப்பதிகங்களையும் தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளிய வழியே சிந்திப்போம்.
  
                                திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 996
பாடினார் பணிவுற்றார்
         பரிவுறுஆ னந்தக்கூத்து
ஆடினார் அகங்குழைந்தார்
         அஞ்சலிதம் சென்னியின்மேல்
சூடினார் மெய்ம்முகிழ்த்தார்
         சூகரமும் அன்னமுமாய்த்
தேடினார் இருவர்க்கும்
         தெரிவரியார் திருமகனார்.

         பொழிப்புரை : பன்றியும் அன்னமுமாய் உருவெடுத்து முறையே அடியும் முடியும் தேடியவர்களான இருபெருந் தேவர்களும் அறிதற்கு அரியராய் நிமிர்ந்த இறைவரின் திருமகனாரான பிள்ளையார், பாடினார், பணிந்தார், அன்பினால் நிறைந்த ஆனந்தக் கூத்து ஆடினார் மனம் குழைந்து உருகினார், கைகளைக் குவித்த அஞ்சலியைத் தலை மேல் கொண்டார், உடல் எங்கும் மயிர்கூச் செறியப் பெற்றார்.


பெ. பு. பாடல் எண் : 997
மருவியஏ ழிசைபொழிய
         மனம்பொழியும் பேரன்பால்
பெருகியகண் மழைபொழியப்
         பெரும்புகலிப் பெருந்தகையார்
உருகியஅன்பு உள்அலைப்ப
         உமைதழுவக் குழைந்தவரைப்
பருகியமெய் உணர்வினொடும்
         பரவியே புறத்துஅணைந்தார்.

         பொழிப்புரை : பொருந்திய ஏழிசைகளையும் வாக்கானது பொழிய, மனத்தினின்றும் மேலிட்டு எழும் அன்பினால் கண்களில் நீர் ஊற்றெடுத்துப் பெருகப் பெருமையுடைய சீகாழியில் தோன்றியருளிய பெருந்தகையாரான பிள்ளையார், உள்ளம் உருகுவதற்குக் காரணமான அன்பு மனத்தை அலையச் செய்ய, காமாட்சியம்மையார் தழுவக் குழைந்த ஏகாம்பரநாதரை அநுபவித்த மெய் உணர்ச்சியோடும் போற்றிசெய்து, கோயில் வெளிப்பக்கத்தை அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 998
புறத்துஅணைந்த தொண்டருடன்
         போந்துஅமைந்த திருமடத்தில்
பெறற்குஅரும்பேறு உலகுஉய்யப்
         பெற்றருளும் பிள்ளையார்
மறப்புஅரிய காதலுடன்
         வந்துஎய்தி மகிழ்ந்து உறைவார்
அறப்பெருஞ்செல் வக்காமக்
         கோட்டம்அணைந்து இறைஞ்சினார்.

         பொழிப்புரை : தம்முடன் வந்தருளிய திருத்தொண்டர்களுடன் சென்று, தாம் எழுந்தருளும் பேறுபெற்ற திருமடத்தில், பெறற்கரிய பேறான சிஞானத்தை உலகம் உய்யும் பொருட்டாய்ப் பெற்று, அவ்வாறே உலகுக்கு அருளும் ஞானசம்பந்தர், இறைவரை மறவாத பெருவிருப்புடன் வந்து மகிழ்ச்சியுடன் தங்கியருள்வார், அறங்கள் எல்லாவற்றையும் வளர்த்து வரும் உமையம்மையார் எழுந்தருளியுள்ள பெரிய செல்வம் பொருந்திய காமக்கோட்டத்தை அடைந்து வணங்கினார்.

         குறிப்புரை : இறைவனையன்றித் தனித்து அம்மையாரையும் வணங்கியதாகக் குறிக்கும் இடம் இஃது. சுந்தரரும் இவ்வாறு வணங்கியமையைப் பின் (தி.12 பு.29 பா.84) காண்க.


பெ. பு. பாடல் எண் : 999
திருஏகம் பத்துஅமர்ந்த செழுஞ்சுடரைச் சேவடியில்
ஒருபோதும் தப்பாதே உள்உருகிப் பணிகின்றார்
மருவுதிரு இயமகமும் வளர்இருக்குக் குறள்மற்றும்
பெருகும்இசைத் திருப்பதிகத் தொடைபுனைந்தார் பிள்ளையார்.

         பொழிப்புரை : திருஏகம்பத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் செழுமை பொருந்திய ஞானச் சுடரான இறைவரின் திருவடிகளை வழிபட வேண்டிய காலங்களில், ஒரு பொழுதும் தவறாது உள்ளம் உருகிப் பணிகின்றவராய், ஞானசம்பந்தர், அணிபொருந்திய `திரு இயமகமும்', பொருளால் வளர்கின்ற `திருவிருக்குக்குறளும்', மேலும் பெருகுகின்ற இசை பொருந்திய திருப்பதிக மாலையையும் இறை வருக்கு அணிவித்தார்.

         குறிப்புரை : திருஏகம்பத்தில் பாடிய பதிகங்கள்:

1. திருஇயமகம்: பாயும் மால்விடை (தி.3 ப.114) - பழம்பஞ்சுரம்.
2. திருவிருக்குக்குறள்: கருவார் கச்சி (தி.3 ப.41)) - கொல்லி.
3. மேலும் பாடிய பதிகமாலை: வெந்த வெண்பொடி (தி.1 ப.133) - மேகராகக் குறிஞ்சி.


திருஞானசம்பந்தர்  திருப்பதிகங்கள்


3. 114   திருவேகம்பம்             பண் -- பழம்பஞ்சுரம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பாயுமால்விடை மேல்ஒரு பாகனே,
         பாவைதன்உரு மேல்ஒரு பாகனே,
தூயவானவர் வேதத் துவனியே,
         சோதிமால்எரி வேதத்து வனியே,
ஆயுநன்பொருள் நுண்பொருள் ஆதியே,
         ஆலநீழல் அரும்பொருள் ஆதியே,
காயவில் மதன் பட்டது கம்பமே,
         கண்ணுதல் பரமற்கு இடம் கம்பமே.

         பொழிப்புரை : இறைவர் பாய்ந்து செல்லும் பெருமையுடைய இடபத்தைச் செலுத்துபவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். தேவர்கள் போற்றுகின்ற வேதத்தின் தொனியானவர். சுடர்விட்டு எரியும் வெம்மையுடைய வேள்வித்தீ ஆனவர். ஆராயத்தக்க நல்ல கருத்துக்கள் எல்லாவற்றிலும் நுட்பமான கருத்தாக விளங்குபவர். ஆலநிழலின் கீழ்த் தட்சிணாமூர்த்தியாய் விளங்கிச் சனகாதி முனிவர்கட்கு அரும்பொருள் உரைத்த முதல்வர். போர் புரிய வந்த வில்லையுடைய மன்மதன் முதற்கண் அடைந்தது நடுக்கமேயாம். நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளும் இடம் திருக்சச்சியேகம்பமே .


பாடல் எண் : 2
சடைஅணிந்ததும் வெண்தலை மாலையே ,
         தம் உடம்பிலும் வெண்தலை மாலையே,
படையில்அம்கையில் சூல்அம் அது என்பதே,
         பரந்துஇலங்கு ஐயில் சூலம் அதுஎன்பதே,
புடைபரப்பன பூதக ணங்களே,
         போற்றிசைப்பன பூதக ணங்களே,
கடைகள் தோறும் இரப்பது மிச்சையே,
         கம்பமேவி இருப்பதும் இச்சையே.

         பொழிப்புரை : சிவபெருமான் சடையில் அணிந்திருப்பது வெண்டலை மாலை ஆகும் . உடம்பிலும் தலைமாலை அணிந்துள்ளார் . அழகிய கையில் சூலப்படை ஏந்தி உள்ளவர் . பரந்து விளங்கும் கையைப் படை போன்று கொண்டு தோண்டிய அழகு செய்வதாகிய அணிகலன் திருமாலின் கண் ஆகும் . பக்கத்தில் சூழ்ந்து விளங்குவனவும் , போற்றிசைப்பனவும் பூதகணங்களே . அப் பெருமான் வாயில்கள் தோறும் சென்று இரப்பது உணவே . அவர் திருக்கச்சியேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 3
வெள்எருக்கொடு தும்பை மிலைச்சியே,
         வேறுமுன்செலத் தும்பை மிலைச்சியே,
அள்ளிநீறுஅது பூசுவது ஆகமே,
         ஆன மாசுணம் மூசுவது ஆகமே,
புள்ளிஆடை உடுப்பது கத்துமே,
         போனஊழி உடுப்பது உகத்துமே,
கள்உலாம் மலர்க் கம்பம் இருப்பதே,
         காஞ்சி மாநகர்க் கம்பம் இருப்பதே.

         பொழிப்புரை : சிவபெருமான் வெள்ளெருக்கமும் , தும்பையும் சூடியுள்ளவர் . தும்புக் கயிற்றைக் கொண்டு இடபத்தைக் கட்டியுள்ளவர் . திருநீற்றினை உடம்பிலே பூசியுள்ளவர் . உடம்பைப் பாம்புகளால் மூடியுள்ளவர் . புள்ளிகளையுடைய புலித்தோல் , மான்தோல் ஆடைகளை விரும்பி அணிபவர் . ஊழிக்காலத்தில் உயிர்கள் இளைப்பாறும் பொருட்டுத் தம்முள் ஒடுக்கிக் கொள்வார் , ஒவ்வொரு யுகத்திலும் , தேன் பொருந்திய மலர்களை அணிந்துள்ள , உலகைத் தாங்கும் தூண் போன்ற சிவபெருமான் காஞ்சி மாநகரிலுள்ள திருவேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்து அருளு கின்றார் .


பாடல் எண் : 4
முற்றல்ஆமை அணிந்த முதல்வரே,
         மூரிஆமை அணிந்த முதல்வரே,
பற்றிவாள்அரவு ஆட்டும் பரிசரே,
         பாலுநெய்உகந்து ஆட்டும் பரிசரே,
வற்றல்ஓடு கலம்பலி தேர்வதே,
         வானினோடு கலம்பலி தேர்வதே,
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே,
         காஞ்சி மாநகர்க் கம்பம் இருப்பதே.

         பொழிப்புரை : சிவபெருமான் ஆமையோட்டை அணிந்த முதல்வர். வலிய ஆனேற்றை அழகு செய்து ஏறிய முதல்வர். ஒளி பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் தன்மையர். பாலாலும், நெய்யாலும் திருமுழுக்காட்டப்படும் பெருமையுடையவர். வற்றிய மண்டையோட்டைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சையேற்றுத் திரிபவர். தேவர்களாலும், ஏனைய உலகிலுள்ள அடியவர்களாலும் போற்றிப் பூசை செய்யப்படுபவர். அவரைப் போற்றாதவர்கள் மனம் இரும்புத்தூண் போன்றது. அப்பெருமான் திருவேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 5
வேடனாகி விசையற்கு அருளியே,
         வேலைநஞ்ச மிசையல் கருளியே,
ஆடுபாம்புஅரை ஆர்த்தது உடைஅதே,
         அஞ்சுபூதமும் ஆர்த்தது உடையதே,
கோடுவான்மதிக் கண்ணி அழகிதே,
         குற்றம்இல்மதிக் கண்ணி அழகிதே,
காடுவாழ்பதி ஆவதும் உம்மதே,
         கம்ப மாபதி ஆவதும் உம்மதே.

         பொழிப்புரை : சிவபெருமான் வேட்டுவ வடிவம் தாங்கி அர்ச்சுனனுக்கு அருள்புரிந்தவர் . கடலில் தோன்றிய நஞ்சை உண்டு கண்டம் கறுத்தவர் . ஆடும் பாம்பை அரையில் கச்சாகக் கட்டி அதன்மேல் ஆடை அணிந்தவர் , பிரளயகாலத்தில் ஐம்பூதங்களால் ஆகிய உலகம் அவரால் அழிக்கப்பட்டது . வளைந்த ஆகாயத்தில் விளங்கும் பிறையைத் தலைமாலையாக அழகுற அணிந்தவர் . களங்கமில்லாத மெய்யடியார்களின் பக்தியாகிய வலை உணர்தற்கு இனிமையானது . சுடுகாடே அவர் வாழும் இருப்பிடம் , திருக்கச்சியேகம்பத்தையும் தாம் விரும்பும் திருத்தலமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 6
இரும்பு கைக்கொடி தங்குஅழல் கையதே,
         இமய மாமகள் தம்கழல் கையதே,
அரும்பு மொய்த்த மலர்ப்பொறை தாங்கியே,
         ஆழியான்தன் மலர்ப்பொறை தாங்கியே,
பெரும்பகல் நடம் ஆடுதல் செய்துமே,
         பேதை மார்மனம் வாடுதல் செய்துமே,
கரும்பு மொய்த்துஎழு கம்பம் இருப்பதே,
         காஞ்சிமாநகர்க் கம்பம் இருப்பதே.

         பொழிப்புரை : இறைவர் கொடிபோன்று பெரிய புகையுடன் எழும் நெருப்பைக் கையிலேந்தியவர் . இமயமலையரசனின் மகளான உமாதேவியின் கைகளால் அவருடைய திருவடிகள் வருடப்படுவன . அடியவர்களால் பூசிக்கப்படும் அரும்புகளையும் , மலர்களையும் பாரமாகத் தாங்குபவர் . சக்கரப் படையுடைய திருமாலின் பெரிய உடலெலும்பாகிய கங்காளத்தைச் சுமப்பவர் . பகலில் திருநடனம் செய்பவர் . தாருகாவனத்து முனிபத்தினிகளின் மனம் வாடச் செய்பவர் . கருப்பங்கழிகள் நிறைந்து கம்பம் போலப் பருத்துக் காணப்படும் திருக் கச்சியேகம்பம் என்ற திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர் .


பாடல் எண் : 7
முதிரம் மங்கை தவம்செய்த காலமே,
         முன்பும் அங்கை தவம்செய்த காலமே,
வெதிர்களோடுஅகில் சந்தம் உருட்டியே,
         வேழம்ஓடுஅகில் சந்தம் முருட்டியே,
அதிரஆறு வரத்துஅழு வத்தொடே,
         ஆன்ஐ ஆடுவர் அத்தழுவத் தொடே,
கதிர்கொள் பூண்முலைக் கம்பம் இருப்பதே,
         காஞ்சி மாநகர்க் கம்பம் இருப்பதே.

         பொழிப்புரை : மேகம் போலும் நிறத்தையுடைய அம்பிகை முற்காலத்தில் இமயமலையில் சிவபெருமானைக் கணவராக அடையத் தவம் செய்தாள் . பின் அம்பிகை கம்பையாற்றில் தவம் செய்யும் இக்காலத்திலும் மூங்கில், அகில், சந்தனம், மற்றும் ஏனைய முருட்டு மரங்களையும், யானை முதலிய மிருகங்களையும் ஓட முடியாதவாறு ஆரவாரத்தோடு கம்பையாறு அடித்துக் கொண்டு வர, பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படும் சிவபெருமானைத் தழுவுவதால் முலைத்தழும்பு தம்பம்போல் உறுதியான அவர் மார்பில் விளங்குகின்றது . அப்பெருமான் காஞ்சிமாநகரிலுள்ள திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .


பாடல் எண் : 8
பண்டுஅரக்க எடுத்த பலத்தையே,
         பாய்ந்துஅரக்கன் நெடுத்த பலத்தையே,
கொண்டுஅரக்கிய தும்கால் விரலையே,
         கோள்அரக்கிய துஉம்கால்வு இரலையே,
உண்டுஉழன்றதும் முண்டத் தலையிலே,
         உடுபதிக்குஇடம் உண்டுஅத் தலையிலே,
கண்டநஞ்டம் அடக்கினை கம்பமே,
         கடவுள்நீ இடங் கொண்டது கம்பமே.

         பொழிப்புரை : சிவபெருமான் , இராவணன் கைலைமலையை எடுத்த வலிமையை, மேற்சென்று சிதறுவித்தலால், அவன் வலிமையற்றவன் என்பதை உணர்த்தும் வகையில் தம் திருப்பாத விரலை ஊன்றியவர். தாருகவனத்து முனிவரேவலால் கொலை செய்ய வந்த மானை ஏந்தியுள்ளவர். அவர் பிச்சையெடுத்துத் திரிந்தது தலை மண்டையோட்டிலே . சந்திரனுக்கு இடம் கொடுத்தது அவர் தலையிலே. நஞ்சைக் கண்டத்தில் அடக்கிய, உலகைத் தாங்கும் தூண் போன்றவன் சிவபெருமானே. கடவுளாகிய அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே.


பாடல் எண் : 9
தூணிஆன சுடர்விடு சோதியே,
         சுத்தம்ஆன சுடர்விடு சோதியே,
பேணிஓடும் பிரமப் பறவையே,
         பித்தன்ஆன பிரமப் பறவையே,
சேணினோடு கீழ்ஊழி திரிந்துமே,
         சித்தமோடு கீழ்ஊழி திரிந்துமே,
காணநின்றனர் உற்றது கம்பமே,
         கடவுள்நீ இடம் உற்றது கம்பமே.

         பொழிப்புரை : அம்பறாத் தூணியாகிய நெற்றிக் கண்ணிலிருந்து சுடர்விடும் நெருப்புப் பொறிகளை உடையவரே . அவற்றிலிருந்து தோன்றியவரே இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சுடர்விடு ஞானமயமான முருகக் கடவுளாவார் . தம் வலிமையைப் பாராட்டி முடி காண்பான் சென்ற பிரமன் அன்னப்பறவை வடிவு தாங்கி ஆகாயத்திலும், திருமால் பன்றி உருவில் பாதாளத்திலும் செருக்கோடும், கீழ்மைத்தன்மையோடும் இறைவனைக் காண முயன்று ஊழிக்காலம் வரை திரிந்தும் அவர்கள் கண்டது அக்கினித் தம்பமாகிய உமது வடிவத்தையே. பரம்பொருளாகிய நீ விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே ஆகும்.


பாடல் எண் : 10
ஓர்உடம்பினை ஈர்உரு ஆகவே,
         உன்பொருள் திறம் ஈர்உரு ஆகவே,
ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே,
         ஆற்றஎய்தற்கு அரிது பெரிதுமே,
தேரரும் அறியாது திகைப்பரே,
         சித்தமும்அறியா துதி கைப்பரே,
கார்நிறத்துஅம ணர்க்குஒரு கம்பமே,
         கடவுள்நீ இடம் கொண்டது கம்பமே.

         பொழிப்புரை : இறைவரே ! யானையின் உடம்பினை உரித்ததாகிய தோலை உடம்பில் போர்வையாக அணிந்துள்ளீர் . உம்முடைய உண்மைத்தன்மை சக்தி, சிவம் என இரண்டு திறத்தது. உமது பாகத்திலுள்ள அம்பிகையின் கரிய நிறம் ஒளிவாய்ந்தது. உயிர்கள் ஆன்ம முயற்சியினால் உம் திருவடிகளை அடைதல் அரிது. புத்தர்களும் உம்மை அறியாது திகைப்பர். அவர்கள் அறிவும் தம் நிலைமை மாறமாட்டாதாதலால் உம்மைத் துதிப்பதை வெறுப்பர். கருநிறமுடைய சமணர்கள் உம்மைக் கண்டு நடுங்குவர். பரம்பொருளாகிய நீர் விரும்பி வீற்றிருந்தருளுவது திருக்கச்சியேகம்பமே .


பாடல் எண் : 11
கந்தம்ஆர்பொழில் சூழ்தரு கம்பமே,
         காதல்செய்பவர் தீர்த்திடு உகுஅம்பமே,
புந்திசெய்வது விரும்பிப் புகலியே,
         பூசுரன்தன் விரும்பிப் புகலியே,
அந்தமில்பொருள் ஆயின கொண்டுமே,
         அண்ணலின்பொருள் ஆயின கொண்டுமே,
பந்தன் இன்னியல் பாடிய பத்துமே,
         பாடவல்லவர் ஆயின பத்துமே.

         பொழிப்புரை : நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்து விளங்குவது திருவேகம்பம் என்னும் திருத்தலம் . அதனை விரும்பி வழிபடுபவர்கள் பழவினையால் வரும் துன்பங்கட்கு வருந்திச் சொரியும் துன்பக் கண்ணீரைத் தீர்த்திடும். எல்லாம் சிவன் செயல் என்பதை நிச்சயித்து, புகலியில் அவதரித்த பூசுரனான திருஞானசம்பந்தன், அந்தமில் பொருளாந்தன்மையை உட்கொண்டு, சிவபெருமானின் புகழையே பொருளாகக் கொண்டு அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் பக்தியில் மேம்பட்டு எல்லாம் கைகூடப்பெறுவர்.

                                             திருச்சிற்றம்பலம்

3. 041 திருக்கச்சியேகம்பம்  திருஇருக்குக்குறள்  பண் - கொல்லி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கருஆர் கச்சித் , திரு ஏகம்பத்து
ஒருவா என்ன , மருவா வினையே.

         பொழிப்புரை :யாவற்றுக்கும் கருப்பொருளாக விளங்கும் திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற சிவபெருமானைப் போற்றி வணங்க வினைவந்து சாராது .


பாடல் எண் : 2
மதியார் கச்சி , நதி ஏகம்பம்
விதியால் ஏத்தப் , பதி ஆவாரே.

         பொழிப்புரை :மதி தவழும் மாடங்களையுடைய கச்சியில் கம்பை நதியின் கரையில் விளங்குகின்ற திருவேகம்பத்தைச் சிவாகம விதிப்படி அன்பர்கள் போற்றி வணங்கச் சிவகணங்களுக்குத் தலைமையாய் விளங்குவார்கள் .

பாடல் எண் : 3
கலிஆர் கச்சி , மலி ஏகம்பம்
பலியால் போற்ற , நலியா வினையே.

         பொழிப்புரை :விழாக்கள் மலிந்து ஆரவாரத்துடன் எப்பொழுதும் விளங்கும் கச்சியில் வீற்றிருந்தருளுகின்ற திருவேகம்பநாதரைப் பூசைக்குரிய பொருள்களைக் கொண்டு பூசை செய்து போற்றி வழிபடத் தீவினையால் வரும் துன்பம் இல்லை .

பாடல் எண் : 4
வரம்ஆர் கச்சிப் , புரம் ஏகம்பம்
பரவா ஏத்த , விரவா வினையே.

         பொழிப்புரை :தன்னை வழிபடும் அன்பர்களுக்கு வேண்டிய வரங்களை நல்கும் தெய்வத்தன்மையுடைய நகர் காஞ்சிபுரம் ஆகும் . இத்திருத்தலத்தில் திருவேகம்பப் பெருமானை வணங்கிப் போற்ற வினை தொடராது நீங்கும் .


பாடல் எண் : 5
படம்ஆர் கச்சி , இடம் ஏகம்பத்து
உடையாய் என்ன , அடையா வினையே.

         பொழிப்புரை :சித்திர வேலைப்பாடுகளையுடைய அழகிய கச்சியை இடமாகக் கொண்டு திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளும் இறைவன் எங்கள் தலைவனே என்று போற்ற வினை வந்து சாராது .


பாடல் எண் : 6
நலம்ஆர் கச்சி , நிலவு ஏகம்பம்
குலவா ஏத்தக் , கலவா வினையே.

         பொழிப்புரை : நலம் தரும் கச்சிநகரில் விளங்குகின்ற திருவேகம்பத்தை அன்பால் அகமகிழ்ந்து போற்றி வணங்க வினை நீங்கும்.


பாடல் எண் : 7
கரியின் உரியன் , திரு ஏகம்பன்
பெரிய புரமூன்று , எரிசெய் தானே.

         பொழிப்புரை :யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட இறைவனான திருவேகம்பப் பெருமான், தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்கள் வாழ்ந்த மூன்றுபுரங்களையும் எரியுண்ணும்படி செய்தார்.


பாடல் எண் : 8
இலங்கை அரசைத் , துலங்க ஊன்றும்
நலங்கொள் கம்பன் , இலங்கு சரணே.

         பொழிப்புரை :இலங்கை மன்னனான இராவணனைக் கயிலை மலையின் கீழ் நெரியுமாறு காற்பெருவிரலை ஊன்றி, அவன் நலத்தை அழித்த திருவேகம்பன் திருவடியைச் சரணடைதலே ஒளிமிக்க வாழ்விற்குரிய வழியாகும்.


பாடல் எண் : 9
மறையோன் அரியும் , அறியா அனலன்
நெறி ஏகம்பம் , குறியால் தொழுமே.

         பொழிப்புரை : பிரமனும் , திருமாலும் அறியமுடியாத வண்ணம் நெருப்பு மலையாய் நின்ற சிவபெருமான் கச்சியில் திருவேகம்ப நாதராக நெறியாகவும், போற்றித்தொழப் பெறும் குறியாகவும் உள்ளார்.




பாடல் எண் : 10
பறியாத் தேரர் , நெறிஇல் கச்சிச்
செறிகொள் கம்பம் , குறுகுவோமே.

         பொழிப்புரை :தலைமயிர் பறியாத புத்தர்களும் , அது பறிக்கப் பட்ட சமணர்களும் கூறும் நெறியில் அமையாது, கச்சியில் ஞானம் பெருகும் திருவேகம்பநாதனின் திருக்கோயிலை அடைந்து வழி படுவோமாக.


பாடல் எண் : 11
கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்
மெச்சும் சொல்லை, நச்சும் புகழே.

         பொழிப்புரை : கொச்சைவயம் என்னும் திருப்பெயருடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் திருக்கச்சியேகம்பத்தைப் போற்றிப்பாடிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் நிலைத்த புகழுடன் விளங்குவார்கள் .

                                             திருச்சிற்றம்பலம்


1.133 திருக்கச்சியேகம்பம்            பண் - மேகராகக்குறிஞ்சி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வெந்தவெண் பொடிப்பூசு மார்பில்விரி
         நூல்ஒருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடும் கடிபொழில்
         கச்சி தன்னுள்
அந்தம்இல் குணத்தார் அவர்போற்ற
         அணங்கினொடு ஆடல்புரி
எந்தை மேவிய ஏகம்பம் 
         தொழுது ஏத்த இடர்கெடுமே.

         பொழிப்புரை :அனலிடை நன்றாக வெந்த வெண்மையான திருநீற்றைப் பூசியுள்ள மார்பின்கண் விரிந்த பூணூல் ஒருபால் விளங்கித் தோன்ற, மணங்கமழும் கூந்தலினையுடைய உமையம்மையோடும், விளங்கும் பொழில்களால் சூழப்பட்ட கச்சி என்னும் தலத்துள் எல்லையற்ற குணங்களையுடைய அடியவர்கள் போற்ற நடனம் செய்யும் எந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஏகம்பம் என்னும் திருக்கோயிலைத் தொழுது போற்ற நம் இடர் கெடும்.


பாடல் எண் : 2
வரந்திகழும் அவுணர் மாநகர்மூன்று உடன்மாய்ந்து அவியச்
சரம் துரந்து எரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயஇடம்
குருந்த மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவம்
திருந்துபைம் பொழில்கச்சி ஏகம்பம் சேர இடர்கெடுமே.

         பொழிப்புரை :வரம்பெற்ற அவுணர்களின் பெருநகராக விளங்கிய முப்புரங்களும் ஒருசேர மாய்ந்து கெடுமாறு கணை எய்து எரித்தழித்த, தாழ்ந்து தொங்கும் சடைகளையுடைய சங்கரன் எழுந்தருளிய இடமாகிய, குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, கடம்ப மரம் ஆகியனவற்றால் சிறந்து விளங்கும் பசுமையான பொழில் சூழ்ந்த கச்சிமாநகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ, நம் இடர் கெடும்.


பாடல் எண் : 3
வண்ணவெண் பொடிப்பூசு மார்பில் வரிஅரவம் புனைந்து
பெண்அமர்ந்து எரிஆடல் பேணிய பிஞ்ஞகன் மேயஇடம்
விண்அமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பம் சேர இடர்கெடுமே.

         பொழிப்புரை :வெண்மைநிறம் அமைந்த திருநீறு பூசிய மார்பின்கண் உடலில் வரிகளையுடைய பாம்பை அணிந்து, உமையம்மையை விரும்பியேற்று, சுடுகாட்டில் எரியாடல் புரியும் தலைக் கோலம் உடையவனாகிய சிவபிரான் மேவிய இடமாகிய விண்ணளாவிய நீண்ட மாட வீடுகள் ஓங்கி விளங்குவதும், என்றும் நிலை பெற்ற பொழில்களால் சூழப்பட்டதுமாகிய கச்சிமாநகரில் உள்ளதுமாகிய திருஏகம்பத்தைச் சென்று வணங்க நம் இடர் கெடும்.
        

பாடல் எண் : 4
தோலும் நூலும் துதைந்த வரைமார்பில் சுடலைவெண்                                                             நீறு அணிந்து
காலன் மாள்வுறக் காலால் காய்ந்த கடவுள் கருதும்இடம்
மாலைவெண் மதிதோயும் மாமதில் கச்சி மாநகர்உள்
ஏலம் நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த இடர்கெடுமே.

         பொழிப்புரை :மான்தோலும் பூணூலும் பொருந்திய மலை போன்ற மார்பின்கண் சுடலையில் எடுத்த வெண்மையான திருநீற்றை அணிந்து மார்க்கண்டேயர்க்காகக் காலன் மாயும்படி காலால் அவனை உதைத்தருளிய கடவுளாகிய சிவபிரான் விரும்புமிடமாகிய, மாலைக் காலத்தில் தோன்றும் வெண்மையான மதி தோயுமாறு உயர்ந்த பெரிய மதில்களை உடைய பெரிய காஞ்சிபுர நகரில் மணம் வீசும் சோலைகளால் சூழப்பட்ட ஏகம்பம் என்னும் திருக்கோயிலை ஏத்த, நம் இடர் கெடும்.


பாடல் எண் : 5
தோடுஅணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதியம் புனைந்து
பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்கள் அவைசூழ
வாடல் வெண்தலையோடு அனல்ஏந்தி மகிழ்ந்துஉடன் ஆடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பம் சேர இடர்கெடுமே.

         பொழிப்புரை :அழகிய இதழ்களோடு கூடிய கொன்றை மலர் மாலை சூடிய சடையின்மேல் தூய பிறை மதியை அணிந்து நான் மறைகளைப் பாடல்களாகக் கொண்டு பேய்க் கணங்கள் பலசூழப், புலால்வற்றிய வெண்தலையோட்டையும், அனலையும் கையிலேந்தி மகிழ்வோடு உமையம்மையுடன் ஆடல் புரிகின்ற பெரியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய ஆரவாரமுடைய கச்சியில் விளங்கும் திருஏகம்பத்தை நினைக்க, நம் இடர் கெடும்.


பாடல் எண் : 6
சாகம்பொன் வரைஆகத் தானவர் மும்மதில் சாயஎய்து
ஆகம்பெண் ஒருபாகம் ஆக அரவொடு நூல்அணிந்து
மாகம்தோய் மணிமாட மாமதில் கச்சி மாநகர்உள்
ஏகம்பத்து உறைஈசன் சேவடி ஏத்த இடர்கெடுமே.

         பொழிப்புரை :மேருமலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் முப்புரங்களை அழியுமாறு கணைதொடுத்துத் தன் திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மார்பில் பாம்பையும், முப்புரிநூலையும் அணிந்து விண்ணளாவிய அழகிய மாடங்களையும், பெரிய மதிலையும் உடைய கச்சிமாநகரில் விளங்கும் திருஏகம்பத்தில் உறையும் ஈசன் திருவடிகளை ஏத்த நம் இடர் கெடும்.


பாடல் எண் : 7
* * * * * * * * *
பாடல் எண் : 8
வாள்நிலா மதிபுல்கு செஞ்சடை வாள்அரவம் அணிந்து
நாண்இடத் தின்இல்வாழ்க்கை பேணி நகுதலையில் பலிதேர்ந்து
ஏண்இலா அரக்கன்தன் நீள்முடி பத்தும் இறுத்தவன் ஊர்
சேண்உலாம் பொழில்கச்சி ஏகம்பம் சேர இடர்கெடுமே.

         பொழிப்புரை :ஒளி விளங்கும் பிறைமதி பொருந்திய செஞ்சடையில் ஒளி பொருந்திய பாம்பினை அணிந்து இடப்பாகத்தே நாணோடு கூடியவளாகிய இல்வாழ்க்கைக்குரிய உமையம்மையை விரும்பியேற்றுச் சிரிக்கும் தலையோட்டில் பலியேற்று, மன உறுதி படைத்தவனாகிய இராவணனின் நீண்ட முடிகள் பத்தையும் நெரித்தவனாகிய சிவபிரானது, வானளாவிய பொழில்களையுடைய கச்சிமா நகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ நம் இடர் கெடும்.


பாடல் எண் : 9
பிரமனும் திருமாலும் கைதொழப் பேர்அழல் ஆயபெம்மான்
அரவம் சேர்சடை அந்தணன் அணங்கினொடு அமரும்இடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்
மரவஞ்சூழ் பொழில்ஏகம்பம் தொழ வல்வினை மாய்ந்து                                                அறுமே.

         பொழிப்புரை :பிரமனும், திருமாலும் தம் கைகளால் தொழுது வணங்கப் பெரிய அனலுருவாகி நின்ற பெருமானும், பாம்பணிந்த சடையையுடைய அந்தணனும் ஆகிய சிவபிரான் தன் தேவியோடு அமரும் இடமாகிய, வஞ்சகம் இல்லாத வள்ளன்மை பொருந்திய கையினை உடையவர்கள் வாழ்கின்ற ஆரவாரமுடைய கச்சி மாநகரில் குங்கும மரங்கள் பொருந்திய சோலைகளால் சூழப்பட்டு விளங்கும் திருஏகம்பத்தைத் தொழ நம் வல்வினைகள் மாய்ந்து கெடும்.


பாடல் எண் : 10
குண்டுபட்டு அமண் ஆயவரொடும் கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை அவைகொண்டு விரும்பேன்மின்,
விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றினால் அவியக்
கண்டவன், கலிக்கச்சி ஏகம்பம் காண இடர்கெடுமே.

         பொழிப்புரை :பருமையான உடலோடு ஆடையின்றித் திரியும் சமணர்களோடு ஆடையைத் தம் உடலில் போர்த்து வலியவராய்த் திரியும் புத்தர்களும் புனைந்து கூறும் உரைகளைப் பொருளுரையாகக் கருதி விரும்பாதீர்கள். பகைவர்களாகிய அவுணர்களின் மூன்று புரங்களையும் கொடிய கணை ஒன்றை எய்து எரித்தழித்தவனாகிய சிவபிரான் எழுந்தருளிய கச்சியின்கண் உள்ள திரு ஏகம்பத்தைச் சென்று காண, நம் இடர் கெடும்.


பாடல் எண் : 11
ஏரின்ஆர் பொழில்சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனைக்
காரின்ஆர் மணிமாடம் ஓங்கு கழுமல நல்நகருள்
பாரின்ஆர் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்
சீரின்ஆர் புகழ்ஓங்கி விண்ணவ ரோடும் சேர்பவரே.

         பொழிப்புரை :அழகு நிறைந்த பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்துள் விளங்கும் இறைவனை மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் ஓங்கும் கழுமல நன்னகருள் தோன்றிய தமிழ்வல்ல ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர் இவ்வுலகின்கண் சிறந்த புகழால் ஓங்கி விளங்கிப் பின் விண்ணவர்களோடும் சேர்ந்து வாழும் நிலையைப் பெறுவர்.

                                             திருச்சிற்றம்பலம்

                                                                           ----- தொடரும்........

No comments:

Post a Comment

பொது --- 1087. குடமென ஒத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடம் என ஒத்த (பொது) முருகா!  முத்திப் பேற்றை அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த தந...