திருக் கச்சி ஏகம்பம் - 1


திருக்கச்சி ஏகம்பம்
(பெரிய காஞ்சிபுரம்)

ஏகாம்பர நாதர் திருக்கோயில்

தொண்டை நாட்டில் உள்ள முதல் திருத்தலம்.

     காஞ்சிபுரம் சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவு. சென்னையில் இருந்து இரயில் மற்றும் பேருந்து வசதிகள் அதிகம்.

     பிற நகரங்களில் இருந்தும் வருவதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

     வரலாற்றுக்கு முற்பட்ட நகரம். "நகரேஷு காஞ்சி" என்று வடமொழியில் மகாகவி காளிதாசரால் சிறப்பித்துக் கூறப் பெற்வது.  தொண்டை நல் நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்தது.

         கோயில்கள் நிறைந்த நகரம் என்ற சிறப்புடைய காஞ்சீபுரம் முக்தி தரும் தலங்களாக கருதப்படும் 7 நகரங்களில் ஒன்றாகும்.

வள்ளல் பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில்,

                           ----  கண் ஆர்ந்த
நாகம் பராம் தொண்ட நாட்டில், உயர் காஞ்சி
ஏகம்பம் மேவும் பேரின்பமே,

என்று போற்றி உள்ளார்.

         பஞ்சபூத தலங்களில் பூமித்தலமாக விளங்குவது காஞ்சீபுரம். இங்கு பிருத்வி லிங்கமாக சிவபெருமான் ஏகாம்பரேசுவரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். மூல இலிங்கம் மணலால் ஆனதால் இதற்கு அபிஷேகங்கள் செய்வது கிடையது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும். இந்த ஆலயம் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஐந்து பிரகாரங்களை உடைய இந்த ஆலயத்தின் இராஜகோபுரம் சுமார் 190 அடி உயரமும் 9 நிலைகளை உடையதாகவும் அமைந்துள்ளது. நான்காம் பிரகாரத்திலுள்ள ஆயிரங்கால் மண்டபம் பல சிற்ப கலை நுணுக்கங்களைக் கொண்டது. ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் ஈசான மூலையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்திருக்கிறது.

         ஐயடிகள் காடவர்கோன் அவதரித்து, ஆட்சி செய்து தொண்டாற்றிய திருத்தலம்.

         அவதாரத் தலம்   : திருக்கச்சியேகம்பம் (காஞ்சிபுரம்)
         வழிபாடு          : இலிங்க வழிபாடு.
         முத்தித் தலம்     : காஞ்சிபுரம்.
         குருபூசை நாள்    : ஐப்பசி - மூலம்.

         காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூஉ ஆகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.

         ஐயடிகள் உலகில் புகழ் நிலவ அரசு புரிந்த பல்லவர் குலத்தில் தோன்றினார். நாட்டில் வறுமையும் பகையும் குடிகளை வருத்தாவண்ணம் நீதிநெறியோடு ஆட்சி புரிந்தார். சிவநெறியைப் போற்றி வளர்த்தார்.

திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் 
பெருமையுடன் இனிதுஅமரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேல் சைவமுடன்
அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்

என இம்மன்னரது பெருவீரத்தையும் சிவநெறிப் பற்றையும் சேக்கிழார் விளக்கியுள்ளார்.

         மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் திருத்தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துத் திருத்ததலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம்.

         இவ்வாறு ஐயடிகள் செந்தமிழால் சிவநெறி போற்றியும் தமக்கு இயைந்த ஆலயத் திருப்பணிகள் ஆற்றியும் வாழ்ந்து முடிவில் சிவலோகம் எய்திச் சிவபிரான் திருவடிகளை அடைந்தார் என்பது பெரிய புராணம் உணர்த்தும் இந்நாயனார் வரலாறாகும்.

         கழற்சிங்க நாயனார் அவதரித்து ஆட்சி செய்த திருப்பதி.

         அவதாரத் தலம்   : திருக்கச்சியேகம்பம் (காஞ்சிபுரம்).
         வழிபாடு             : இலிங்க வழிபாடு.
         முத்தித் தலம்      : காஞ்சிபுரம்.
         குருபூசை நாள்    : வைகாசி - பரணி.

         கழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர்; சிவனடி அன்றி வேறொன்றை அறிவில் குறியாதவர்; வடபுல வேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார். அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலர் ஒன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்குவந்த செருத்துணை நாயனார், இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். உள்ளே பூங்கோயில் இறைவரைப் பணிந்து வெளியே வந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு "அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?" என வினவினார். அருகே நின்ற செருத்துணையார், "இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்" என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, "பூவை எடுத்த கையையன்றோ முதலில் வெட்டுதல் வேண்டும்?" என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையைத் தடிந்தார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்.

         திருக்குறிப்புத் தொண்ட நாயனார் அவதரித்து சிவனடியார்களுக்கு கந்தை வெளுத்துக் கொடுத்து தொண்டாற்றிய பெரும்பதி.

         அவதாரத் தலம்   : காஞ்சிபுரம்.
         வழிபாடு             : சங்கம வழிபாடு.
         முத்தித் தலம்      : காஞ்சிபுரம் (காந்தி சாலைகாஞ்சிபுரம்                                    மார்க்கெட் அருகில் உள்ள முத்தீசுவரர் திருக்கோயில்                                     வளாகத்தில் இவருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.)
         குருபூசை நாள்    : சித்திரை - சுவாதி.

         திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தொண்டை நன்னாட்டில் காஞ்சி மாநகரத்தில் ஏகாலியர் மரபில் தோன்றியவர். இவர் நாயன்மார்களில் ஒருவர்.

         சிவனடியார்களின் உள்ளத்தின் திருக்குறிப்பை Gணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் தன்மையில் நிலைத்த மேன்மையால் இவருக்கு 'திருக்குறிப்புத் தொண்டர்' என்று வழங்கப்படும் சிறப்புப்பெயரை உடையவரானார்.

         இவர் செவ்விய அன்புடையவர்; நல் ஒழுக்க நெறி நிற்பவர்; சிவனடித்தொண்டு புரிபவர்; மன, மொழி, மெய்யடியாகிய முக்கரணங்களும் அண்ணலார் சேவடியின் சார்பாக அணைவிப்பவர்; இத்திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்களது ஆடையினைத் துவைத்து வெளுத்துக் கொடுத்தலை தமது முதற் பணியாகக் கொண்டிருந்தார். இப்பணியால் துணி அழுக்குப் போவது போல் மும்மலப் பிறப்பு அழுக்கும் போக்குவார் ஆயினர்.

         இவ்வடியவரது அன்பின் பெருமையை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங்கொண்டார் திருவேகம்பப் பெருமான். குளிர் மிகுந்த ஒருநாள், திருமாலும் காணமுடியாத திருவடிகளை மண்மீது பதித்து ஓர் ஏழை போன்று மெலிந்த மேனியும், வெண்ணீற்று மேனியில் அழுக்கடைந்த கரிய கந்தைத் துணியுமாய்க் குறுகிய நடையுடன் வந்தார். தளர்ந்த திருமேனியுடைய சிவனடியாராகிய அவரைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர், அன்பினால் எதிர்கொண்டு உரோமம் சிலிர்ப்ப நிலமுற விழுந்து வணங்கினார். எழுந்து நின்று இன்மொழிகள் பல கூறினார். “திருமேனி இளைத்திருக்கின்றதே, ஏன்?” என இரக்கத்துடன் கேட்டார். பின்னர் கூப்பிய கையுடன் ‘தாங்கள் உடுத்துள்ள இக் கந்தையைத் துவைப்பதற்குத் தாருங்கள்’ என்று கேட்டார். வந்த சிவனடியார் "நான் உடுத்துள்ள இக்கந்தை அழுக்கேறி எடுப்பதற்குத் தகுதியில்லாத நிலையிலிருப்பினும் உடம்பினை வருத்தும் குளிருக்குப் பயந்து கைவிடாது உடுத்துள்ளேன். மாலைப் பொழுதாவதற்குள் தருவீராயின் விரைந்து கொண்டுபோய் துவைத்துத் தருவீராக" என்று கூறினார். அதுகேட்ட திருக்குறிப்புத் தொண்டர், "அடியேன் காலந்தாழ்த்தாமல் மாலைப்பொழுதிற்குள் விரைவில் வெளுத்துத் தருகின்றேன், தந்தருள்வீராக" என்று வேண்டினார். வந்த அடியவர், “கந்தையாகிய இதனை விரைவிற் துவைத்து உலர்த்தித் தாராது ஒழிவீராயின், இந்த உடம்பிற்கு இடர் செய்தீராவீர்” என்று சொல்லி தாம் உடுத்திருந்த கந்தையை அவர் கையிற் கொடுத்தார்.

         அதனைப் பெற்றுக்கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், குளத்திற் சென்று முன் சிறிது அழுக்கைப் போக்கி வெள்ளாவியில் வைத்து புளுக்கி துவைக்கத் தொடங்கினார். அப்பொழுது பெருமழை விடாது பெய்வதாயிற்று. அதுகண்ட திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்க்கு தாம் சொன்ன உறுதிமொழியை எண்ணி "இனி நான் யாது செய்வேன்" என்று கவலையுற்று மழைவிடுவதை எதிர்பார்த்து அங்கேயே நின்றார். மழையோ நிற்கவில்லை. இரவுப் பொழுதும் நெருங்குவதாயிற்று. திருக்குறிப்புத் தொண்டர் “ஐயோ குளிரால் திருமேனி நடுங்குகின்ற சிவனடியார்க்கு நான் செய்ய விரும்பிய அடிமைப்பணி தவறிப்போயிற்றே’"என்று சோர்ந்து வீழ்ந்தார்; மழையோ விடவில்லை; அடியார் சொல்லிய கால எல்லையும் முடிந்து விட்டது. "முன்னமே அவரது உடையினை வீட்டிலேயே துவைத்துக் காற்றில் உலர்த்திக் கொடுப்பதற்கு அறியாது போயினேனே; அடியார் திருமேனி குளிரால் வருந்தத் தீங்கு புரிந்த கொடியேனுக்கு இனி இதுவே செயல்" என்று எழுந்து "துணி துவைக்கும் கல்லிலேயே எனது தலை சிந்தும்படி மோதுவேன்" என்று தமது தலையை மோதினார்.

         அப்போது அப்பாறையின் அருகே திரு ஏகம்பரது திருக்கை தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது. வானத்தில் விடாது பெய்த நீர்மழை நீங்க, மலர்மழை பொழிந்தது. உமையொருபாகராய் இறைவன் விடைமேல் எழுந்தருளி, காட்சி கொடுத்தருளினார். அத்தெய்வக் காட்சியினைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர் அன்புருகக் கைதொழுது நின்றார். சிவபெருமான் அவரை நோக்கி, "உனது அன்பின் திறத்தை மூவுலகத்தாருக்கும் அறியச் செய்தோம். இனி நீ நம்முடைய உலகத்தை அடைந்து நம்மைப் பிரியாது உறைவாயாக" என்று திருவருள் புரிந்து மறைந்தருளினார்.

         ஐயடிகள் நாயனார், சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் ஆகியோரது திருவுருவச் சிலை திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.

         தல வரலாறு: ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடிவிட்டார். இதன் காரணமாக எல்லா உலகங்களும் இருளில் மூழ்கின. உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து இருள் அகற்றினார். அம்பிகை விளையாட்டாக கண்களை மூடினாலும் அதனால் எல்லா ஜீவராசிகளுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்காக பூவுலகிற்குச் சென்று பிராயச்சித்தமாக தன்னை நோக்கி தவம் இயற்றுமாறு அம்பிகையைப் பணித்தார். அம்பிகையும் இந்த பூவலகிற்கு வந்து புனித தலமான இந்த காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கிப் பூஜித்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி அம்பிகை லிங்கத்தை தழுவி கட்டிக்கொண்டார். அவ்வாறு உமையம்மை தழுவிய போது இறைவன் தன் திருமேனியில் அம்பிகையின் வளைத் தழும்பும் முலைச் சுவடும் ஏற்றுத் தழுவக் குழைந்தார். இவ்வாறு இறைவி இறைவனை வழிபட்ட இந்த வரலாறு திருக் குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்திலும், காஞ்சிப் புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இறைவனுக்குத் தழுவக் குழைந்த நாதர் என்றும் பெயர்.

          சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள் புரிந்தார். அம்பிகையை அங்கேயே திருமணம் புரிந்து கொண்ட சிவபெருமான் அம்பிகைக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தார். இரண்டு நாழி நெல் கொடுத்து அதைக் கொண்டு 32 அறங்களைச் செய்யப் பணித்தார். அவ்வாறே அம்பிகை பார்வதியும் காமாட்சி என்ற திருநாமத்தோடு காமக் கோட்டத்தில் அமர்ந்து அறங்களைச் செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தின் தலவிருட்சமான மாமரம் மிகச் சிறந்த பிரார்த்தனைக்குரிய இடமாகும். வேதமே மாமரம். வேதத்தின் நான்கு வகைகளே இம்மரத்தின் நான்கு கிளைகள். இதன் வயது புவியியல் வல்லுநர்களால் 3600 ஆண்டுகளுக்கு மேல் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவம் செய்த அம்பாளுக்கு, இறைவன் இம் மாவடியின் கீழ்தான் காட்சி தந்தருளினார். இம்மாமரத்தை வலம் வரலாம். மாவடியைத் தொழுது பின் திரும்பி வந்து, பிரகாரத்தில் வலம் வரும்போது சஹஸ்ரலிங்க சந்நிதி பெரிய ஆவுடையாருடன் காட்சி தருகின்றது. அடுத்து வலதுபுறம் படிகளேறிச் சென்றால் ஏலவார் குழலி என்றழைக்கப்படும் அம்பாளின் உற்சவச் சந்நிதி உள்ளது. இதனருகில் "மாவடி வைகும் செவ்வேள்" சந்நிதி உள்ளது. குமரகோட்டம் என்னும் பெயரில் முருகப் பெருமானுக்கு இத்தலத்தில் தனிக்கோயில் உள்ளது. இருந்தாலும் கந்தபுராணத்தில் வரும் "மூவிரு முகங்கள் போற்றி" எனும் பாடலில் வரும் "காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி" என்று புகழப்படும் தொடருக்குரிய பெருமான் இவரேயாவார். இச்சந்தியில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய உற்சவத் திருமேனி முன்னால் இருக்க, பின்புறம் இதே திருமேனிகள் சிலாரூபத்தில் உள்ளன.

         திருக்கச்சியில் அம்மை தவம் செய்த வரலாறு, மேற்குறித்தது என்று கொள்ளப்பட்டாலும், தெய்வச் சேக்கிழார் பெருமான் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தில் அம்மை தவம் செய்த வரலாற்றினை அருளிச் செய்தது இன்புறுதற்குரியது.

         காலை 6 மணி முதல் பகல் 12-30 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இறைவர்               : ஏகாம்பரநாதர், திரு ஏகம்பர்தழுவக்குழைந்த நாதர்

இறைவியார்           : ஏலவார்குழலி, காமாட்சியம்மை

தல மரம்               : மா மரம் (வேதம் மாமரமாக உள்ளது.)

தீர்த்தம்                : கம்பா நதி, சிவகங்கை, சர்வ தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - 1. வெந்த வெண்பொடிப் பூசு,
                                                            2. மறையானை மாசிலா,
                                                             3. கருவார் கச்சி,
                                                             4. பாயுமால்விடை.

                                     2. அப்பர் -        1. கரவாடும் வன்னெஞ்சர்க்கு,
                                                             2. நம்பனை நகரமூன்றும்,
                                                             3. ஓதுவித் தாய்முன் அற,
                                                             4. பண்டு செய்த பழவினை,
                                                            5. பூமேலானும் பூமகள்,
                                                             6. கூற்றுவன் காண் கூற்றுவனை,
                                                             7. உரித்தவன்காண் உரக்களிற்றை.

                                      3. சுந்தரர்  -  1. ஆலந் தானுகந்து

     தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளிய வரலாற்றினைப் பெரியபுராணத்தின் வாயிலாகவே காண்பது சிறப்பான வழிபாடாகவே அமையும் என்பது திண்ணம்.....


பெரியபுராணம்
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்.

பெரிய புராணப் பாடல் எண் : 49
ஆன தொல்நகர் அம்பிகை தம்பெரு மானை
மான அர்ச்சனை யால்ஒரு காலத்து வழிபட்டு
ஊனம் இல்அறம் அனேகமும் உலகுய்ய வைத்த
மேன்மை பூண்டஅப் பெருமையை அறிந்தவா விளம்பில்.

         பொழிப்புரை : இவ்வாறாய பழமை வாய்ந்த காஞ்சி மாநகரத் திடத்து எம் தாயாகிய உமையம்மையார், தம் தலைவராகிய பெருமானை மேலான வழிபாடு செய்ததன் வாயிலாக, ஒரு காலத்து உலகம் உய்யக் குறைவில்லாத அறங்கள் பலவற்றையும் செய்து வளர்த்த அப்பெருமையை, நாம் அறிந்தவாறு சொல்லில்.
  
பெ. பு. பாடல் எண் : 50
வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந்து அருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகமத் திறன்எலாம் தெளிய
உள்ள வாறுகேட்டு அருளினாள் உலகை ஆள் உடையாள்.

         பொழிப்புரை : வெள்ளிமயமாகிய திருக்கயிலாய மலையில் வீற்றிருந்தருளி, பொங்கிடும் பெருந்திரைகளையுடைய கங்கையைச் சூடிய சிவபெருமான் அருளிச் செய்ய, உலகுயிர்களையெல்லாம் அடிமையாகவுடைய அம்மையார் வணங்கி, தெளிந்த உண்மைப் பொருளினைக் கூறும் சிவாகமங்களின் தன்மைகளை எல்லாம் முற்றிலும் தெளிய, அவ்வியல்புகளை உள்ளவாறு கேட்டருளினார்.

பெ. பு. பாடல் எண் : 51
எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை எனஉரைத்து அருள
அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ தரித்தாள்
பெண்ணில் நல்லவள் ஆயின பெருந்தவக் கொழுந்து.

         பொழிப்புரை : அது பொழுது, எண்ணற்ற ஆகமங்களை மொழிந்தருளிய சிவபெருமான், தாம் விரும்பும் உண்மையாவது தம்மை முறைப்படி வழிபடுவதேயாகும் என்று அம்மையாருக்கு உரைத்தருள, பெண்களுக்கெல்லாம் நல்லவராய அப்பெருமாட்டியாரும், உயிர்கட்கெல்லாம் தலைவராய அப்பெருமானாரை வழிபாடாற்றத் தம் உள்ளத்து விருப்பம் கொண்டார்.

         குறிப்புரை : `ஆகமங்கள் இருபத்தெட்டு எனக் கூறப்பட்டிருக்க, ஈண்டு எண்ணில் ஆகமம் என்றது என்னை` என ஐயம் எழலாம். இதற்கு இருவகையாக அமைதி கண்டுள்ளனர் சிவக்கவிமணியார் (பெ-ரை).

(1) எண் - நில் ஆகமம் எனப் பிரித்து அளவுபடுத்தி நிறுத்தப் பட்ட ஆகமங்கள் எனப் பொருள் உரைத்து, மூல ஆகமங்கள் இருபத் தெட்டும் உபஆகமங்கள் 207உம் ஆகிய இவையாம். (2) மூல ஆகமங்கள் ஒவ்வொன்றும் எண்ணற்ற கிரந்தங்களை உடைய வாதலின் `எண்ணில் ஆகமம்` என்றார் என்றலும் ஒன்று.

பெ. பு. பாடல் எண் : 52
நங்கை உள்நிறை காதலை நோக்கி
         நாய கன்திரு வுள்ளத்து  மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற
         அடுத்தது என்கொல் நின்பால் என வினவ
இங்கு நாத,நீ மொழிந்தஆ கமத்தின்
         இயல்பி னால்உனை அர்ச்சனை புரியப்
பொங்கு கின்றது என் ஆசை என்று இறைஞ்சிப்
         போகம் ஆர்த்தபூண் முலையினாள் போற்ற.

         பொழிப்புரை : பெருமாட்டியின் திருஉள்ளத்துத் தம்மை வழிபட இருக்கும் காதலின் நிறைவை நோக்கிப், பெருமானாரும் தம் திருவுளத்து மகிழ்ச்சி கொண்டு, அம்மீதூர்வால் வந்திட்ட புன்முறுவல் பூத்திட, `அம்மையே! நீ செயக் கருதும் செயற்பாடு யாது` எனக் கேட்டருள, அம்மையாரும் அவரை நோக்கி, `என் தலைவனே! இங்குத் தாங்கள் அருளிய ஆகமத்தின் இயல்பினால் உம்மை வழிபாடு புரிந்திட என் ஆசை மீதூர்கின்றது` எனக் கூறி வணங்கி, போகங்கள் யாவும் நிறைந்தவும், அணிகலன்கள் பலவற்றையுடையதுமான மார்பகங்களையுடைய பிராட்டியும் போற்றுதல் புரிந்துநிற்றலும்.

பெ. பு. பாடல் எண் : 53
தேவ தேவனும் அதுதிரு வுள்ளஞ்
         செய்து தென்திசை மிக்கசெய் தவத்தால்
யாவ ரும்தனை அடைவது மண்மேல்
         என்றும் உள்ளது காஞ்சிமற்று அதனுள்
மாஅ மர்ந்தநம் இருக்கையில் அணைந்து
         மன்னு பூசனை மகிழ்ந்துசெய் வாய்என்று
ஏவ எம்பெரு மாட்டியும் பிரியா
         இசைவு கொண்டுஎழுந்தருளுதற்கு இசைந்தாள்.

         பொழிப்புரை : தேவர்களுக்கெல்லாம் தலைவரான பெருமானாரும் அதுகேட்டுத் திருவுள்ளம் பற்றி, `தென் திசையான தமிழ்நாடு செய்த மிக்க தவத்தால், யாவரும் தம்மிடத்து அடைவதற்கு இடனாயிருப்பதும், இந்நிலவுலகில் என்றும் நிலையாக இருப்பதுமான நகரம் காஞ்சியாகும், மற்று அந்நகரத்தில் மாமர நீழலின் கீழ் அமர்ந்த நம் இருப்பிடத்தினை நீ சேர்ந்து, விளங்கிடும் வழிபாட்டை மகிழ்ந்து செய்திடுவாய்` என்று அங்குச் செல்லுமாறு பணித்தருளினர். எம் பிராட்டியும் எம்பெருமானைப் பிரிய இயலாத நிலையில் விடை கொண்டு காஞ்சிமாநகருக்கு எழுந்தருள இசைந்தனர்.

பெ. பு. பாடல் எண் : 54
ஏதம் இல்பல யோனிஎண் பத்து
         நான்கு நூறாயி ரந்தனுள் வைத்த
பேத மும்புரந்து அருளும்அக் கருணைப்
         பிரான்மொ ழிந்தஆ கமவழி பேணிப்
போது நீர்மையில் தொழுதனள் போதப்
         பொருப்பில் வேந்தனும் விருப்பில்வந்து எய்தி
மாத வம்புரிந்து அருளுதற்கு அமைந்த
         வளத்தொ டும்பரி சனங்களை விடுத்தான்.

         பொழிப்புரை : உயிர்களின்பால் உள்ள மலக் குற்றம் நீங்குதற்கென அவ்வவ்வுயிர்கட்கும் வெவ்வேறாகக் கொடுக்கப் பெற்ற எண்பத்து நான்கு நூறு ஆயிரம் உயிர்வகைகளையும், பாதுகாத்தருளும் பெருங் கருணையுடைய சிவபெருமான் மொழிந்தருளிய ஆகம வழியே அப்பெருமானை வழிபடச் செல்வாராய், அம்மையார் தொழுது போதர, மலையரசனும், விருப்புடன் வந்தடைந்து, அப்பெருமாட்டியார் பெருந்தவம் புரிந்தருளுதற்கு உரிய பொருள்களோடு, வேண்டிய ஏவல் மகளிரையும் உடன் செல விடுத்தான்.

பெ. பு. பாடல் எண் : 55
 துன்னு பல்உயிர் வானவர் முதலாச்
         சூழ்ந்து உடன்செலக் காஞ்சியில் அணையத்
தன்னை நேர்வுஅரும் பதுமமா நாகம்
         தம்பி ராட்டிதாள் தலைமிசை வைத்தே
அன்னை யாய் உலகு அனைத்தையும் ஈன்றாய்
         அடிய னேன்உறை பிலம்அதன் இடையே
மன்னு கோயில்கொண்டு அருளுவாய் என்ன
         மலைம டந்தைமற்று அதற்குஅருள் புரிந்து.

         பொழிப்புரை : நெருங்கிய பல உயிர்களுள் வானவர் முதலாகப் பலரும் தம்மைச் சூழ்ந்து வர, அப்பெருமாட்டியார் காஞ்சியில் வந்து சேர, ஒப்பற்ற பெருமையுடைய பதுமன் என்னும் பெரிய நாக அரசன் எம்பிராட்டியாரின் திருவடிகளைத் தன் தலைமீது வைத்து வணங்கி, உலகு அனைத்தையும் ஈன்றவளே! அடியேன் உறைகின்ற இப்புற்றினிடமாகக் கோயில் கொண்டருளுவாய் எனவேண்டலும், மலைஅரசன் மகளாரும் இசைந்தருளி.

பெ. பு. பாடல் எண் : 56
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப
         அளவில் இன்பத்தின் அருட்கரு விருத்தித்
திங்கள் தங்கிய புரிசடை யார்க்குத்
         திருந்து பூசனை விரும்பினள் செய்ய
எங்கும் நாடவும் திருவிளை யாட்டால்
         ஏக மாமுதல் எதிர்ப்படாது ஒழியப்
பொங்கு மாதவஞ் செய்துகாண் பதற்கே
         புரிவு செய்தனள் பொன்மலை வல்லி.

         பொழிப்புரை : அவ்விடத்தில் மண்ணுலகத்துள்ள உயிர்கள் யாவும் தழைத்துச் சிறந்திட, அளவற்ற இன்பத்தினாலாய அருளையே தன் உள்ளத்திற் கொண்டு, அங்கிருந்தே இளம்பிறை தங்கிய சடையையுடைய பெருமானுக்குத் திருந்திடும் பூசனையை விருப்பமுடன் செய்தருள, அப்பெருமான் கயிலைமலையில் அருளியவாறு அவர் திருவுருவம் இருந்தருளும் இடத்தை, எங்கும் நாடிப் பார்க்கவும், தமது திருவிளையாட்டால், ஒப்பற்றவராக விளங்கும் பெருமானும் எதிர்ப்படாது மறைந்திருப்ப, அருள் பொங்கும் பெருந்தவம் செய்து காண்பதற்கே மனத்தில் விருப்புக் கொண்டனள் பொன்வடிவினதாய இமயமலை தந்த அப்பூங்கொடியாள்.

பெ. பு. பாடல் எண் : 57
நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி
         நிரந்த ரம்திரு வாக்கினில் நிகழ்வது
அஞ்செ ழுத்துமே ஆகஆ ளுடைய
         அம்மை செம்மலர்க் கைகுவித்து இறைஞ்சித்
தஞ்சம் ஆகிய அருந்தவம் புரியத்
         தரிப்ப ரேஅவள் தனிப்பெருங் கணவர்
வஞ்சம் நீக்கிய மாவின்மூ லத்தில்
         வந்து தோன்றினார் மலைமகள் காண.

         பொழிப்புரை : அப்பெருமாட்டியின் நெஞ்சம் ஈசனைக் காண்பதையே விரும்ப, திருவாக்கினில் நிகழ்வதும் ஐந்தெழுத்தேயாக, எம்மை ஆளுடைய அம்மையார் செம்மை மிக்க தம்மலர்க் கைகளைக் குவித்து வணங்கி, அவரையன்றி வேறொருவரையும் நாடாத அரிய தவத்தைச் செய்திட, அதுகண்டும் தரித்திருக்க முடியுமோ? அப் பெருமாட்டியின் தனிப்பெருங் கணவரும், உடனே வஞ்சம் நீங்கிய அம் மாமரத்தினடியில் மலைமகளாய உமையம்மை காணத் தோன்றினார்.

பெ. பு. பாடல் எண் : 58
கண்ட போதில்அப் பெருந்தவப் பயனாம்
         கம்பம் மேவிய தம்பெரு மானை
வண்டு உலாங்குழற் கற்றைமுன் தாழ
         வணங்கி வந்துஎழும் ஆசைமுன் பொங்கக்
கொண்ட காதலின் விருப்புஅள வின்றிக்
         குறித்த பூசனை கொள்கைமேற் கொண்டு
தொண்டை அம்கனி வாய்உமை நங்கை
         தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்.

         பொழிப்புரை : எம்பிராட்டியார் கண்ட அமையத்துத் தாம் செய்த பெரும் தவப்பயனாக விளங்கும் மாமரத்தின் அடியில் மேவிய தம் பெருமானை, வண்டுகள் உலவும் தம் கூந்தலின் கற்றை முன் தாழத் தாம் வணங்கி, தமது உள்ளத்துப் பெருகி வந்து எழுகின்ற ஆசை பெருக, கண்ட காதலினால் விருப்பம் அளவின்றி மேலாக, தாம் எண்ணிய வழிபாட்டைப் புரிந்திடும் கொள்கையை மேற்கொண்டு கொவ்வைக் கனி அனைய சிவந்த வாயையுடைய அவர் எம்பிரானை, தூயஅருச்சனை புரிந்திடத் தொடங்குதல் செய்வாராய்.

பெ. பு. பாடல் எண் : 59
உம்பர் நாயகர் பூசனைக்கு அவர்தாம்
         உரைத்த ஆகமத்து உண்மையே  தலைநின்று
எம்பி ராட்டிஅர்ச் சனைபுரி வதனுக்கு
         இயல்பில் வாழ்திருச் சேடியர் ஆன
கொம்ப னார்கள் பூம்பிடகை கொண்டு அணையக்
         குலவு மென்தளிர் அடியிணை ஒதுங்கி
அம்பி காவனமாம் திரு வனத்தில்
         ஆன தூநறும் புதுமலர் கொய்தாள்.

         பொழிப்புரை : தேவர்களின் தலைவனான சிவபெருமானின் பூசனைக்கு, அவர் தாம் சொன்ன ஆகமத்தின் உண்மையான நெறிப்படி அருச்சனை புரிதலையே தலையாய செயலாகக் கொண்டு, அதனைச் செய்தற்கு, இயல்பாக அப்பெருமாட்டியாருக்குப் பணி செய்து வாழும் திருவுடைய தோழியராய பூங்கொடி போலும் பெண்கள், பூங் கூடையை ஏந்தி உடன் வந்து சேர, எம்பிராட்டியார் விளங்கிடும் மென்மையான தளிர்போன்ற தம் திருவடிகள் ஒதுங்கிட நடந்து சென்று, அம்பிகாவனம் எனும் திருவுடைய நந்தனவனத்தில் சென்றருளி, அங்கு முகையவிழ்ந்து சிறந்திருக்கும் தூய நறுமணமுடைய புதுமலர்களைக் கொய்தாள்.

பெ. பு. பாடல் எண் : 60
கொய்த பன்மலர் கம்பைமா நதியில்
         குலவு மஞ்சனம் நிலவுமெய்ப் பூச்சு
நெய்த ரும் கொழுந் தூபதீ பங்கள்
         நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
மெய்த ரும்படி வேண்டின எல்லாம்
         வேண்டும் போதினில் உதவமெய்ப் பூசை
எய்த ஆகம விதி எலாம் செய்தாள்
         உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி.

         பொழிப்புரை : உயிர்கள் யாவையும் ஈன்றவரான உமையம்மையார், தாம் கொய்த பல மலர்களும், கம்பையாற்றில் எடுத்த நீராட்டு நீரும், ஒளிநிலவும் திருமேனிப் பூச்சாகும் சந்தனமும், நெய்விட்டேற்றிய செழுமைமிக்க சுடருடைய விளக்குகளும், நறுமணப் புகைகளும் ஆகிய இவையாவும் நிறைவுடைய சிந்தையில்,நீளப் பெருகிய அன்பினால், அங்கு உண்மையான வழிபாட்டிற்கு வேண்டிய பொருள் எல்லாவற்றையும் எம்பெருமாட்டியார் வேண்டியபோது அவரிடம் எடுத்துத் தோழியர் கொடுத்திட, அது மெய்ம்மையான வழி பாடாக விளங்கிட, ஆகமத்தில் சொல்லியவாறு எம்பிராற்குப் பூசனை செய்துவந்தார்.

பெ. பு. பாடல் எண் : 61
கரந்த ரும்பயன் இதுஎன உணர்ந்து
         கம்பம் மேவிய உம்பர்நா யகர்பால்
நிரந்த காதல்செய் உள்ளத்தள் ஆகி
         நீடு நன்மைகள் யாவையும் பெருக
வரந்த ரும்பொரு ளாம்மலை வல்லி
         மாறுஇ லாவகை மலர்ந்தபேர் அன்பால்
சிரம்ப ணிந்து எழு பூசைநாள்தோறும்
         திருவு ளங்கொளப் பெருகியது அன்றே.

         பொழிப்புரை : எம் கைகள் தரும் பயன் இதுவாம் என உணர்ந்து, ஏகம்பம் மேவிய தேவர் தலைவராம் சிவபெருமானிடத்து நிறைந்த காதல் செயும் உள்ளத்தினராகி, அவ்வழிபாட்டின் பயனால் நன்மைகள் யாவும் உலகில் பெருகிட, வரம் தரும் பொருளாய மலையரசன் மகளாம் எம்பிராட்டியார், மாறில்லாதவகை இவ்வாறு தமது உள்ளத்து மலரும் பேரன்பினால் எம்பெருமானைத் தலையால் வணங்கிப் புரிந்திடும் பூசை நாடொறும் எம் ஐயர் திருவுளங் கொள்ளும்படி பெருகியது.
குறிப்புரை :

பெ. பு. பாடல் எண் : 62
நாத ரும்பெரு விருப்பொடு நயந்து
         நங்கை அர்ச்சனை செய்யும்அப் பொழுதில்
காதல் மிக்கதுஓர் திருவிளை யாட்டில்
         கனங்கு ழைக்குஅருள் புரிந்திட வேண்டி
ஓத மார்கடல் ஏழும்ஒன் றாகி
         ஓங்கி வானமும் உட்படப் பரந்து
மீது செல்வது போல்வரக் கம்பை
         வெள்ளம் ஆம்திரு உள்ளமும் செய்தார்.

         பொழிப்புரை : பெருமாட்டியாரின் தலைவரான சிவபெருமானும், அப்பெருமாட்டியாரின் பூசையினைப் பெருவிருப்பத்துடன் மகிழ்வுற ஏற்று வரும்பொழுது, காதல் மிகுந்ததொரு திருவிளையாட்டால், அழகிய குண்டலங்களை அணிந்த அம்மையாருக்கு அருள் புரிந்திட வேண்டி, ஒலி பொருந்திய கடல் ஏழும் ஒன்றாகத் திரண்டு பெருகி ஓங்கி, வான் உலகுகளும் தன்னுள் அடங்கிடுமாறு பரந்து, மேல் செல்வது போன்று பெருகி வரும்படி, கம்பையாற்றை வெள்ளமாகப் பெருகும்படி தமது திருவுள்ளத்து நினைந்தருளினார்.
  
பெ. பு. பாடல் எண் : 63
அண்ண லார்அருள் வெள்ளத்தை நோக்கி
         அங்க யல்கண்ணி தம்பெரு மான்மேல்
விண்எ லாம்கொள வரும்பெரு வெள்ளம்
         மீது வந்து உறும் எனவெருக் கொண்டே
உள்நி லாவிய பதைப்பு உறு காதல்
         உடன் திருக்கையால் தடுக்க நில் லாமை
தண் நிலாமலர் வேணி யினாரைத்
         தழுவிக் கொண்டனள் தன்னையே ஒப்பாள்.

         பொழிப்புரை : தலைவரான சிவபெருமான், அருளிய அக் கம்பையாற்றின் பெருவெள்ளத்தினை, அழகிய கயல் மீன் போலும் கண்களையுடைய பெருமாட்டியார் நோக்கித், தாம் பூசனை புரிந்தருளும் தம் பெருமான்மேல், வானும் அடங்குமாறு பெருகி வரும் பெருவெள்ளம் வந்து அலைக்கும் என அச்சம் கொண்டு, தம் திருவுள்ளத்து நிலவுகின்ற பதைப்புடைய காதலுடன், தம் திருக்கையால் அவ்வெள்ளத்தைத் தடுத்திடவும், அவ்வெள்ளம் நில்லாமையைக் கண்டு, பின்னர்ச் செயல் வேறின்றி, குளிர்ந்த பிறையினைச் சடையில் உடையாரைத் தம்மையே தமக்கு ஒப்பான பிராட்டியார், இறுகத் தழுவிக் கொண்டார்.
  
பெ. பு. பாடல் எண் : 64
மலைக்கு லக்கொடி பரிவுறு பயத்தால்
         மாவின் மேவிய தேவநா யகரை
முலைக்கு வட்டொடு வளைக்கையால் நெருக்கி
         முறுகு காதலால் இறுகிடத் தழுவச்
சிலைத்த னித்திரு நுதல்திரு முலைக்கும்
         செந்தளிர்க் கரங்க ளுக்கும்மெத்து எனவே
கொலைக்க ளிற்றுஉரி புனைந்ததம் மேனி
         குழைந்து காட்டினார் விழைந்தகொள் கையினார்.

         பொழிப்புரை : மலையரசன் மகளாராகிய பூங்கொடி போன்ற பெருமாட்டியார், தம் திருவுள்ளத்துப் பெருமானார் மீது கொண்ட அன்பு கெழுமிய அச்சத்தால், மாமரத்தின் அடியின் மேவி இருந்தருளும் தேவர் தவைரைத் தம் மார்பகமாகிய மலையோடு வளையணிந்த கைகளால் இறுகத் தழுவிக் கொள்ளலும், அப்பெருமாட்டி யாரின் அன்பினை விரும்பும் சிவபெருமான் அதுபொழுது வில்லின் வனப்புடைய திருநெற்றியை யுடையவரான பெருமாட்டியாரின் திருமுலைக்கும், சிவந்த தளிர்போலும் அப்பெருமாட்டியாரின் திருக்கரங்களுக்கும், மெத்தென்று இருக்குமாறு, கொலை செயும் யானைத் தோல் போர்த்த தமது திருமேனியைக் குழைந்து காட்டினார்.
  
பெ. பு. பாடல் எண் : 65
கம்பர் காதலி தழுவமெய் குழையக்
         கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன
உம்ப ரேமுதல் யோனிகள் எல்லாம்
         உயிரும் யாக்கையும் உருகிஒன்று ஆகி
எம்பி ராட்டிக்கு மெல்லியர் ஆனார்
         என்றும் ஏகம்பர் என்றுஎடுத்து ஏத்த
வம்பு உலாமலர் நிறையவிண் பொழியக்
         கம்பை ஆறுமுன் வணங்கியது அன்றே.

         பொழிப்புரை : தம் காதலியார் தம்மைத் தழுவிட, ஏகம்பர் தமது திருமேனி குழைந்திடக் கண்டபோது, நிற்பனவும் இயங்குவனவும் ஆகிய தேவர்கள் முதலாக உள்ள எழுவகைத் தோற்றத்து எண்பத்து நான்கு நூறாயிரம் வகைப்பட்ட உயிர்கள் எல்லாம், தம் உயிரும் உடலும் உருகி ஒன்றாகி எம்பெருமாட்டியாருக்கு என்றும் மெல்லியரானார் எம்பெருமான் என்று எடுத்து மொழிந்து போற்றிட, நறுமணம் பொருந்திய மலர்களை வானம் பொழிந்திட, அது பொழுது கம்பை யாறும் வணங்கித் தன் வெள்ளம் தணிந்தது.

பெ. பு. பாடல் எண் : 66
பூதி ஆகிய புனிதநீறு ஆடிப்
         பொங்கு கங்கைதோய் முடிச்சடை புனைந்து
காதில் வெண்குழை கண்டிகை தாழக்
         கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனார் ஆயும் மா தவஞ்செய்
         அவ்வ ரம்கொலோ அகிலம்ஈன்று அளித்த
மாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு
         வளைத்த ழும்புடன் முலைச்சுவடு அணிந்தார்.

         பொழிப்புரை : சிறந்த செல்வமாகிய தூய நீற்றினை அணிந்து, பொங்கிடும் கங்கை ததும்பும் முடியையுடைய சடையை அணிந்து, திருக்காதில் வெண்தோடும் திருமார்பில் உருத்திராக்கமாகிய கண்டி கையும் தாழ அணிந்து, தாம் அருளுடன் கலந்த யோகத்தில் பொருந்திய திருவுள்ளம் உடையராக, அவர் தோற்றமில் காலத்தவராக நின்றாலும், பெருமாட்டியாரின் பெருந்தவத்தால் ஆய வரம் தானோ பிறிதோ அறியோம்; உலகம் யாவற்றையும் உளவாக்கிய அம்மையார் தம் உடலின் பயனைக் கொடுப்பவே அதனைக் கொண்டு, அப் பெருமாட்டியாரின் அடையாளங்களாகிய வளைத் தழும்புடன் முலைச்சுவடும் அணிந்து கொண்டார் பெருமான்.
  
பெ. பு. பாடல் எண் : 67
கோதி லாஅமுது அனையவள் முலைக்குக்
         குழைந்த தம் மணவாளநல் கோலம்
மாது வாழவே காட்டிமுன் நின்று
         வரங்கள் வேண்டுவ கொள்கஎன்று அருள
வேத காரணர் ஆய ஏகம்பர்
         விரை மலர்ச் செய்ய தாமரைக் கழல்கீழ்
ஏதம் நீங்கிய பூசனை முடிந்தது
         இன்மை தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி.

         பொழிப்புரை : குற்றத்தை நீக்கும் அமுது அனைய அம்மையாரின் முலைக்குக் குழைந்திட்ட தமது மணவாளக் கோலத்தினை, எம் பெருமாட்டியார் வாழ்ந்திட முன்னின்று காட்டி, அம்மையே! `உனக்கு வேண்டிய வரங்களைக் கொள்க` என்று அருள் செய்திடலும், அதுபொழுது எம் பெருமாட்டியாரும், குற்றம் நீங்கிய பூசனை இன்னமும் நிறைவு பெறாமையால், விண்ணப்பிப்பதற்காக, நான் மறைகளுக்கும் மூலகாரணராய பெருமானாரின், நறுமணம் கமழும் செவ்விய திருவடிக் கீழ், வணங்கி.

பெ. பு. பாடல் எண் : 68
அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும்
         அளவி னால்அஞ்சி அஞ்சலி கூப்பிக்
கொண்ட இற்றைஎன் பூசனை இன்னும்
         குறைநி ரம்பிடக் கொள்கஎன்று அருள
வண்டு வார்குழல் மலைமகள் கமல
         வதனம் நோக்கிஅம் மலர்க்கண்நெற் றியின்மேல்
முண்ட நீற்றர்நின் பூசனை என்றும்
         முடிவது இல்லை நம்பால் என மொழிய.

         பொழிப்புரை : தேவர்கட்கெல்லாம் தேவனான பெருமானாரின் எதிர் நின்று கூறுகின்ற அத்தன்மைக்கு அஞ்சி, இருகைகளையும் கூப்பி, எம்பிரானே! இன்று கொண்ட என்னுடைய இப்பூசனையில், இன்னும் எஞ்சிய பகுதியையும் நிறைவாகச் செய்தற்கு அருள்செய வேண்டும் என வேண்டியருளலும், வண்டுகள் சூழ்ந்த கூந்தலை யுடைய மலையரசன் மகளாரின் தாமரை போலும் வனப்புடைய திருமுகத்தைப் பார்த்து, அழகிய மலரனைய கண்களையுடைய நெற்றி யின்மேல் மூன்று குறியாக நீறணிந்த எம்பெருமான், `நம்பால் உனது பூசனை என்றும் முடிவதில்லை` என்று அருள் செய்திடலும்,
  
பெ. பு. பாடல் எண் : 69
மாறுஇ லாதஇப் பூசனை என்றும்
         மன்ன எம்பிரான் மகிழ்ந்துகொண்டு அருளி
ஈறு இலாதஇப் பதியினுள் எல்லா
         அறமும் யான்செய அருள்செய வேண்டும்
வேறு செய்வினை திருவடிப் பிழைத்தல்
         ஒழிய இங்குஉளார் வேண்டின செயினும்
பேறு மாதவப் பயன்கொடுத்து அருளப்
         பெறவும் வேண்டும்என் றனள்பிறப்பு ஒழிப்பாள்.

         பொழிப்புரை : அதுகேட்ட அன்னையாரும், ஐயனை நோக்கி, `மாறு ஏதும் இல்லாத இப்பூசனை என்றும் இங்கு விளங்கிட எம்பிரான் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டருளி, முடிவிலாத இப்பதியினுள் இருந்து எல்லா அறங்களையும் யான் செய்திட, திருவருள் செய்திடல் வேண்டும்; இத்திருப்பதியிலுள்ளார் திருவடிக்குப் பிழைசெயும் ஒன்றினை ஒழிய, வேறு பிற தீங்குகள் செய்யினும், அச் செயல்கட்குரிய பேறாக மாபெருந் தவத்தின் பயனைக் கொடுத்தருளவும் வேண்டும்` எனப் பிறப்பறுக்கும் பெருஞ் செல்வியராகிய பெருமாட்டியார் கேட்டருளினார்.

பெ. பு. பாடல் எண் : 70
விடையின் மேலவர் மலைமகள் வேண்ட
         விரும்பு பூசனை மேவிவீற் றிருந்தே
இடைய றாஅறம் வளர்க்கும் வித்து ஆக
         இகபரத்து இரு நாழிநெல் அளித்துக்
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆயும்
         காஞ்சி வாழ்பவர் தாம்செய்தீ வினையும்
தடைப டாதுமெய்ந் நெற அடைவதற்கு ஆம்
         தவங்கள் ஆகவும் உவந்துஅருள் செய்தார்.

         பொழிப்புரை : ஆனேற்றின் மீது எழுந்தருளி வரும் மேலாய பெருமானை மலைமகளார் இவ்வாறு வேண்டுதலும், அப்பெருமாட்டியார் விரும்பியவாறு பூசனையை ஏற்றிடப் பொருந்தி அவ்விடத்தில் வீற்றிருந்தருளி, அம்மையாருக்கு இடையறாது அறத்தை வளர்த்திடும் வித்தாக, இம்மை மறுமை ஆகிய இரண்டிற்கும் ஏதுவாக இருநாழி நெல்லைக் கொடுத்தருளி, கடையவராயினும் உயர்ந்தவராயினும் காஞ்சியில் வாழ்பவர்கள் தாங்கள் செய்கின்ற தீயவினைகளும், தடையின்றி மெய்ந்நெறியை அடைதற்காய தவங்களாகப் பயன் கொள்ளுமாறும் உவந்து அருள் புரிந்தார்.
   
பெ. பு. பாடல் எண் : 71
எண் அரும்பெரு வரங்கள்முன் பெற்றுஅங்கு
         எம்பி ராட்டிதம் பிரான் மகிழ்ந்து அருள
மண்ணின் மேல்வழி பாடுசெய்து அருளி
         மனைஅறம் பெருக்கும் கருணையினால்
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க
         நாடு காதலில் நீடிய வாழ்க்கைப்
புண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப்
         பொலிய முப்பதோடு இரண்டுஅறம் புரக்கும்.

         பொழிப்புரை : இவ்வாறு எண்ணற்ற பெரு வரங்களைப் பெற்று, அங்கு எம்பெருமாட்டியார் தம் பெருமான் மகிழ்ந்து அருளிட, இம்மண்ணின் மேல் அவரை அங்கு வழிபாடு செய்தருளி, இல்லறம் இனிது பெருக, கருணையினால் உலகில் தோற்றும் உயிர்கள் யாவும் பெருக உற்ற காதலினால், நீடி நிலைத்திருக்கும் தம் வாழ்க்கையைப் புண்ணியம் நிறைந்த திருக்காமக்கோட்டம் என்னும் கோயிலில் மேற்கொண்டருளிப் பொலிந்திட, அங்கிருந்து தம் முப்பத்திரண்டு அறங்களையும் நிகழ்த்தி ஆண்டருளுவாளாயினள்.

         குறிப்புரை : திருக்காமக் கோட்டம் - காமாட்சியம்மையார் வீற்றிருந்தருளும் திருக்கோவில். அம்மையார் இறைவரைத் தாம் விரும்பி வழிபட்ட இடமாதலின் இப் பெயர் பெற்றது. இனி அம்மையார் உயிர்கள் மீது வைத்த கருணையால் அங்கு எழுந்தருளி முப்பத்திரண்டு அறங்களையும் பேணி வளர்த்தமையால் அப்பெயர் பெற்றது என்றலும் ஒன்று. இக்கோயில் நீங்கலாகக் காஞ்சியிலுள்ள சிவபெருமான், திருக்கோயில்கள் எவற்றிலும் அம்மையாருக்கெனத் தனிக்கோயில் இல்லை என்பதும் குறிக்கத்தக்கதாகும் .

காஞ்சி காமாட்சி அம்மையார் இறைவர் வழங்கிய இருநாழி நெல் கொண்டு வளர்த்த முப்பத்திரண்டு அறங்கள்:

1. துன்புற்றோர்க்கு உணவும் உறையுளும் வழங்கும் சாலை.
2. கற்பவர்க்குணவு
3. அறுசமயத்தார்க்கு உண்டி
4. பசுவிற்கு வாயுறை
5. சிறைச் சோறு
6. ஐயம்
7. தின் பண்டம் நல்கல்
8. பற்றுக்கோடற்றவருக்குச் சோறு
9. மகப்பேறு அற்றோர் சிவபுண்ணியப் பேற்றிற்கு ஆளாதல்
10. மகவு வளர்த்தல்
11. மகவுக்குப் பால் வார்த்தல்
12. பற்றுக்கோடற்றார்க்கு இறுதிக் கடன் செய்தல்
13. பற்றுக்கோடற்றார்க்கு ஆடை வழங்குதல்
14. சுண்ணம் வழங்குதல்
15. நோய்க்கு மருந்து.
16. வண்ணார்க்கு உதவல்
17. நாவிதர் உதவி
18. கண்ணாடி வழங்கல்
19. காதோலை நல்கல்
20. கண்மருந்து கொடுத்தல்
21. தலைக்கெண்ணெய் வழங்கல்
22. பெண் போகம் நுகர்தற்காம் சூழலை வழங்கல்
23. பிறர்துயர் காத்தல்
24. தண்ணீர்ப்பந்தல் அமைத்தல்
25. மடம் அமைத்தல்
26. குளம் தோண்டல்
27. சோலைகளை உண்டாக்கல்
28. ஆவுராய்ஞ்சு தறி அமைத்தல்
29. விலங்கிற் குணவு தருதல்
30. ஏறு விடுத்தல்.
31. விலை கொடுத்து உயிர் காத்தல்
32.         மகட் கொடை.

பெ. பு. பாடல் எண் : 72
அலகுஇல் நீள்தவத்து அறப்பெருஞ் செல்வி
         அண்ட மாம் திருமனைக்கு இடும் தீபம்
உலகில் வந்துஉறு பயன்அறி விக்க
         ஓங்கும் நாண்மலர் மூன்றுடன் ஒன்று
நிலவ ஆண்டினுக்கு ஒருமுறை செய்யும்
         நீடு தொன்மையால் நிறைந்தபேர் உலகம்
மலர்பெ ருந்திருக் காமக்கோட் டத்து
         வைத்த நல்அறம் மன்னவே மன்னும்.

         பொழிப்புரை : அளவிலாது நீடிய தவத்தினைச் செய்யும் அறப்பெருஞ்செல்வியாராகிய அம்மையார், அண்டமாகிய தமது திருமனைக்கு ஏற்றுகின்ற விளக்குகளான முச்சுடர்களுமே, அம்மையார் உலகில் வந்த பயனை அறிவித்தற்கு வந்தாற் போல, பண்டு தொட்டே சிறந்த புதிய ஒருதண்டினில் மலரும் நீலமலர்கள் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை மலர நிகழ்ந்துவரும் இச்செயலினால், இப்பேருலகெலாம் ஒளிதரும் திருக்காமக்கோட்டத்தில் நிலவும் நல்லறங்கள் பலவும் விளங்க வீற்றிருந்தருளுவர்.

         இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பன், கள்ளக் கம்பன், நல்ல கம்பன் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.

         108 வைணவ திவ்யதேசங்களில் காஞ்சீபரத்தில் மட்டுமே 15 திவ்யதேசங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றான நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி இந்த ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலில் உள்ளது. கச்சி மயானம் என்கிற ஒரு தேவார வைப்புத் தலமும் இக்கோவிலின் உள்ளே சுவாமி சந்நிதி கொடி மரத்தின் முன்னுள்ளது. மேலும் பல சந்நிதிகளும், சிற்பங்களும், மண்டபங்களும் உள்ள இந்த ஆலயத்தை விவரிக்க வார்த்தைகளில்லை. நேரில் சென்று ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் கண்டு தொழவேண்டும்.

         சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தடியில் "உன்னைப் பிரியேன்" என்று சத்தியம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். சிவபெருமானை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டு பின் திருவாரூர் செல்வதற்காக சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து திருவொற்றியூரில் இருந்து சத்தியத்தை மீறி புறப்பட்டதால் சுந்தரர் தனது இரு கண் பார்வையும் இழந்தார். அப்படி பார்வை இழந்த கண்களில் இடக்கண் பார்வையை சுந்தரர் காஞ்சீபுரம் தலத்தில் பதிகம் பாடி பெற்றார். பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "காணக் கண்அடி யேன்பெற்ற வாறே" என்று உள்ளம் உருகிப் பாடியுள்ளார்.

          மூவர் பெருமக்களாலும் பாடப் பெற்றத் திருத்தலம்.

          ஐயடிகள் நாயனார், சாக்கிய நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் ஆகியோரது திருவுருவச் சிலை திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.

          பரிமேலழகர், கச்சியப்ப சிவாச்சாரியார் வாழ்ந்த தலம்.

                                                                                ------  தொடரும்.......

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...