திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம்


திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம்

  
நூற் சிறப்பு


எல்லாரும் ஞானத் தெளிஞரே? கேளீர், சொல்
கல் எல்லாம் மாணிக்கக் கல்லாமோ? - பொல்லாக்
கருப்புகழைக் கேட்குமோ? கானமயில் வீரன்
திருப்புகழைக் கேட்குஞ் செவி.

மக்களாகப் பிறந்தவர்கள் எல்லருமே தெளிந்த ஞானம் உடையவர்கள் ஆவர் எனக் கருத முடியுமா?  கல் எனப்படுபவை எல்லாமே மாணிக்கக் கல் ஆகுமா? ஆகாது. அதுபோல, காட்டிலே வாழும் மயிலைத் தனது வாகனமாகக் கொண்ட முருகப் பெருமானுடைய பொருள்சேர் புகழாகிய திருப்புகழைக் கேட்ட செவியானது, கருவிலே மீள மீளப் பிறந்து உழல்வதற்குத் துணை புரியும் உலகப் புகழ் நூல்களைக் கேட்குமா? கேட்கவே கேட்காது.

மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ?
ஆணிப்பொன் கையுறுவார்க்கு ஐயுறவு ஏன்? - பேணிப்பின்
செவ்வேல் விநோதன் திருப்புகழ் சிந்தித்து இருப்பார்க்கு
எவ்வேலை வேண்டும் இனி?

மாணிக்கக் கல்லைப் பூண்டு இருப்பவனுக்கு வேறு ஒரு கல் வேண்டுவதில்லையே.  உயர்ந்த ஆணிப் பொன்னைக் கைக் கொண்டு இருப்பவனுக்கு, அதைப் பற்றிய ஐயுறவு எதற்கு? செவ் வேலை ஏந்தி விநோதனாகிய முருகப் பெருமானுடைய திருப்புகழையே சிந்தித்து இருப்பவருக்கு வேறு எந்த வேலை வேண்டி இருக்கும்.

சீர்ஆம் திருப்புகழைச் செவ்வேள்மேல் அன்பாக
ஆராய்ந் துரைத்தான் அருணகிரி; - நேராக
அந்தப் புகழை அநுதினமும் ஓதாமல்
எந்தப் புகழோது வீர்?

சிறப்புக்கு உரிய திருப்புகழ் என்னும் அற்புதப் பாமாலையைத் தெளிந்து முருகப் பெருமான் மீது அருணகிரிநாதப் பெருமான் பாடி அருளி உள்ளார். வினைகள் நேர்பட வேண்டுமானால், அந்தத் திருப்புகழை நாளும் ஓதாமல், வேறு எந்தப் புகழை ஓதுவீர்கள்?


அருணகிரி நாதன் அகிலதலத்து உன்னைக்
கருணையினால் பாடும் கவிபோல் - பிரியம் உற
வேறும் ஓர் புன்கவிகள், வேலோனே! நின் செவியில்
ஏறுமோ? என்னே இனி?

வேலாயுதப் பெருமானே! அருணகிரிநாதப் பெருமான், அகில உயிர்களும் உய்யும்படிக்கு, அன்போடு உன்னைப்பாடி அருளிய திருப்புகழ்ப் பாடல்கள் நினது திருச்செவியில் ஏறுவது போல், வேறு கவிகள் ஏறிடுமோ? ஏறாது.

ஆனை முகவற்கு இளைய ஐயா! அருணகிரி
தேன் அனைய சொல்லான் திருப்புகழை - யான்நினைந்து
போற்றிடவும், நின்னைப் புகழ்ந்திடவும், பொற்கமலம்
சாத்திடவும், ஓதிடவும் தா.

ஆனைமுகனாகிய மூத்த பிள்ளையாருக்கு இளைய பிள்ளையாரே!  அருணகிரிநாதப் பெருமான் தேவரீர் மீது பாடி அருளிய தேனினும் இனிய திருப்புகழ்ப் பாடல்களை, அடியேன் மனதார நினைந்து உம்மைப் போற்றிடவும், அவு அருட்பாடல்களைக் கொண்டு உம்மைப் புகழ்ந்திடவும், திருப்புகழ்ப் பாடல்களையே ஓதி, அவற்றையே மாத்ருகா புஷ்ப மாலையாக தேவரீரது பான்னார் திருவடிகளில் சாத்திடவும் திருவருள் புரிவீராக.


திருப்புகழ்ப் பாடல்களைக் கேட்பதன் மூலம் வேதத்தையும், வித்தைகள் முதலானவற்றை அறியலாம். வேறு சாதனம் வேண்டாம் என்றது.


வேதம் வேண்டாம், சகல வித்தை வேண்டாம், கீத
நாதம் வேண்டாம், ஞானநூல் வேண்டாம், - ஆதி
குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றும்
திருப்புகழைக் கேளீர் தினம்.

திருவருள் ஞானம் பெறுவதற்கு, வேதங்களை ஓதத் தேவையில்லை. கலைஞானம் கற்க வேண்டாம். கீதமும் நாதமும் வேண்டியதில்லை. வேறு ஞானநூல்களும் வேண்டாம்.  ஆதிமுதற் பரம்பொருளாகிய சிவபெருமானுக்கே குருநாதனாக விளங்கியவன் என்னும் புகழ் படைத்த முருகவேளின் திருவடிகளைப் போற்றுகின்ற திருப்புகழ்ப் பாடல்களை நாளும் கேளுங்கள்.

  
திருப்புகழை ஓதுவதால் பெறப்படும் பயன்

ஞானம் பெறலாம், நலம் பெறலாம், எந் நாளும்
வானம் அரசாள் வரம் பெறலாம்,  - மோனா வீடு
ஏறலாம், யானைக்கு இளையான் திருப்புகழைக்
கூறினார்க்கு ஆமே இக் கூறு.

கணபதிக்கு இளைவரான முருகப் பெருமானின் பொருள் சேர் புகழைக் கூறுகின்ற திருப்புகழை ஓதுபவர்கள் ஞானத்தைப் பெறுதல் கூடும். எல்லா நலங்களையும் பெறுதல் கூடும். எக் காலத்தும் வான நாட்டினை ஆளுகின்ற வரத்தையும் பெறுதல் கூடும்.  எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டின்பத்தையும் பெறுதல் கூடும். 


ஆறுமுகம் தோன்றும், அழகியவேல் தோன்றும், வன்
ஏறுமயில் தோன்றும், எழில்தோன்றும், - சீறிவரு
சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப்
பாரில் வழுத்தினோர் பால்.

சீற்றத்துடன் போருக்கு வந்த சூரபதுமனுடைய தலையைத் துணித்து அருள் புரிந்தவனாகிய முருகப் பெருமானுடைய திருப்புகழைப் போற்றி வழிபட்டவர்கள் இடத்திலே அழகிய ஆறுதிருமுகங்களும் அருட்காட்சி தரும். வேல் காட்சி தரும். அவன் ஏறுகின்ற மயில் திருக்காட்சி தரும்.

     
அன்பர் வினவ, ஆண்டவன் விடை அருளியது

பொருப்பு அது பொடிப்பட விடுத்திடு கை வேலா!
இருப்பிடம் உனக்கு எது எனக்கு அருள் இயம்பாய்;
உருக்க நல் விழுக்குலம் ஒழுக்கம் இலரேனும்
திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பாம்.

அடியவர் வினா --- கிரவுஞ்ச மலையானது பொடிபடும் படியாக திருக்கையில் ஏந்திய வேலாயுதத்தை விடுத்து அருளிய பெருமானே! உமது இருப்பிடம் எது என்பதை எனக்கு உணர்த்தி அருள்வீராக. 

ஆண்டவன் விடை --- மேலான குலத்தில் பிறக்கவில்லை என்றாலும், ஒழுக்க நெறி நிற்கவில்லை என்றாலும், திருப்புகழைப் படிப்பவருடைய மனத்தில் நாம் இருப்போம்.


அங்ஙனம் அருளக் கேட்ட அன்பர், ஆண்டவனை நோக்கிக் கூறியதாகத் திருப்புகழ் படிப்போர் தீரம் கூறியது

திருப்புகழ் படிக்கும் அவர் சிந்தை வலுவாலே
ஒருத்தரை மதிப்பது இலை, உன்தன் அருளாலே,
பொருப்பு உக மிகப்பொருது வென்று, மயில் மீதே
தரித்து ஒரு திருத்தணியில் நின்ற பெருமாளே.

கிரவுஞ்ச மலையானது பொடிபட்டுப் போகும் படியாகப் போர் புரிந்து வென்று, மயிலை வாகனமாகக் கொண்டு, திருத்தணிகை என்னும் திருத்தலத்தில் உள்ள மலை மீது திருக்கோயில் கண்டுள்ள பெருமானே, தேவரீது திருவருளைப் பெற்று அடியவர்கள், திருப்புகழைப் படிப்பதால் தமது உள்ளத்தில் ஏற்பட்டுள்ள உறைப்பு காரணமா, வேறு மனிதர்களை மதிப்பது இல்லை.

"திருவும் மெய்ப் பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடைக் கழல்கள் என்று எண்ணி, ஒருத்தரை மதியாது, உறாமைகள் செய்து, ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்" என்பது சுந்தரர் தேவாரம். 


ஓர் ஆறு மாமுகனாம் உச்சித மெய்ஞ்ஞான குகன்
பேரால், அருணகிரி பேர் உலகில் - சீர் ஆரும்
தோத்திரம் அதாகத் துதிக்கும் திருப்புகழை
ஏத்தினவர் ஈடேறு வார்.

ஒப்பற்ற ஆறுதிருமுகங்களைக் கொண்டவரும், மேன்மை பொருந்திய மெய்ஞ்ஞான வள்ளலும் ஆகிய முருகப் பெருமான் மீது, அருணகிரிநாதப் பெருமான் பாடி அருளிய திருப்புகழ்ப் பாடல்களையே துதிப்பவர்கள் ஈடேறுவார்கள்.


வள்ளி மணவாளன், மயில் ஏறும் வள்ளல்தனை,
தெள்ளு தமிழால் புனைந்து, சீர்பெறவே, - உள்ளபடி
வைப்பாம் அருணகிரி வாழ்த்தும் திருப்புகழைக்
கற்பார் கரை ஏறுவார்.

வள்ளி மணவாளனும், மயில் ஏறும் வள்ளலும் ஆகிய முருகப் பெருமானை, அவனருள் பெற்று, அழகிய தமிழ் மொழியில், அருணகிரி நாதப் பெருமான் போற்றிப் பாடிய திர்ப்புகழ்ப் பாடல்களை கற்பவர்கள் பிறவிக் கடலில் இருந்து, முத்தி ஆகிய கரையைச் சேர்வார்கள்.


அருணகிரி நாதர் பதினாயிறாயிரம் என்று
உரைசெய் திருப்புகழை ஓதீர், - பரகதிக்கு அஃது
ஏணி; அருட்கடலுக்கு ஏற்றம்; மனத்தளர்ச்சிக்கு
ஆணி; பிறவிக்கு அரம்.

அருணகிரி நாதப் பெருமான் பாடிய பதினாறாயிரம் என்னும் திருப்புகழை ஓதுங்கள்.  பரகதிக்குச் செல்ல ஏணியாக அது அமையும்.  அருள் கடலுக்கு ஏற்றம் ஆகவும் அது அமையும். மனத்தளர்ச்சிக்கு அது ஆணியாக நின்று விளங்கும். பிறவியைத் தேய்க்கின்ற அரம் ஆகும்.


திருப்புகழ் வழிபாட்டால் கூற்றையும் வெல்லலாம் எனக் கெடி பெற உரைத்தது

திருப்புகழைக் கற்க, திருப்புகழைக் கேட்க,
திருப்புகழை நித்தம் செபிக்க, - திருப்புகழை
அர்ச்சிக்க, முத்தி எளிது ஆகுமே, கூற்றை வென்று
கெர்ச்சிக்கல் ஆமே கெடீ.

திருப்புகழைக் கற்றால், திருப்புகழைக் கேட்டால், திருப்புகழையே நித்தமும் செபித்தால், திருப்புகழ்ப் பாக்களாலேயே முருகப் பெருமானை அருச்சித்தால், முத்தி எளிதாக வாய்க்கும். எமனையும் வெல்லலாம்.


திருப்புகழின் பிரபாவம்

மடங்கல் நடுங்கும் தனைச்சுடும் ஈதென்று; மாதிரத்தோர்
அடங்கி நடுங்குவர் சூலாயுதம் என்று, அசுரர் கடல்
ஒடுங்கி நடுங்குவர் வேலாயுதம் என்று, உரகனுக் கீழ்க்
கிடங்கில் நடுங்கும், மயிலோன் திருப்புகழ் கேட்டளவே.

மயில் வாகனப் பெருமாளின் திருப்புகழைக் கேட்ட மாத்திரத்திலேயே, எல்லாவற்றையும் எரிக்க வல்ல ஆற்றல் வாய்ந்த வடவைத் தீயும், திருப்புகழ் தன்னைச் சுடுமோ என்று அச்சத்தால் நடுங்கும். திசைகளில் உள்ளோர் யாவரும் இது சூலாயுதம் தானோ என்று நடுக்கம் அடைவர். அசுரர்கள் இது வேலாயுதமே என்று பயந்து கடலில் சென்று ஒடுங்குவர். பாம்பரசனும் பயந்து பாதாள லோகத்தில் சென்று ஒளிவான்.


திருப்புகழ் அடியார் பெருமை

தருப்புகழ் வல்ல சூரர் மகள் நாயகன், சங்கரற்குக்
குருப்புகழ் வல்ல குமரேசன், சண்முகன்குன்று எறிந்தோன்,
மருப்புகழ் வல்ல அருண கிரிப்பெயர் வள்ளல் சொன்ன
திருப்புகழ் வல்லவர் சீர்பாதத் தூளிஎன் சென்னியதே.

கற்பகம் முதலிய மரங்கள் நிறைந்துள்ள புகழ் பெற்ற தேவர்களுக்கு மகளாக வளர்ந்த தேவயானைக்கு நாயகன். எல்லாம் வல்ல முதற்பொருளாகிய சிவபெருமானுக்கே குருவாக அமைந்த குமாரக் கடவுள். ஆறு திருமுகங்களை உடையவன். கிரவுஞ்ச மலையைப் பொடியாக்கியவன். அவனுடைய புகழை, அருணகிரிநாதப் பெருமான் பாடி அமைத்த திருப்புகழ்ப் பாடல்களில் வல்லவர்களாகிய அடியவர்களின் பெருமைக்குரிய பாதங்களிலே படிந்து உள்ள பொடியானது எனது தலையில் பொருந்தட்டும்.

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...