விநாயகர் துதி - 0001. கைத்தல நிறைகனி



அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கைத்தலம் நிறைகனி (விநாயகர் துதி)

வினையை நீக்கும் விநாயகரை வணங்குகின்றேன்

தந்தன தனதன தந்தன தனதன
     தந்தன தனதன ...... தனதான


கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


கைத்தலம் நிறைகனி, அப்பமொடு அவல்,பொரி
     கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!
     கற்பகம்! என வினை ...... கடிது ஏகும்,

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்,
     மல்பொரு திரள்புய ...... மதயானை,

மத்தள வயிறனை, உத்தமி புதல்வனை,
     மட்டுஅவிழ் மலர்கொடு ...... பணிவேனே,

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே,

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்
     அச்சு அது பொடிசெய்த ...... அதிதீரா,

அத்துயர் அதுகொடு சுப்பிரமணி படும்
     அப்புனம் அதன் இடை ...... இபம் ஆகி,

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
     அக்கணம் மணம்அருள் ...... பெருமாளே.

பதவுரை

      கைத்தலம் --- திருக்கரத்திலே,

     நிறை கனி --- நிறைந்த கனியையும்,

     அப்பமொடு அவல் பொரி --- அப்பத்தோடு அவல் பொரி ஆகியவைகளையும்,

     கப்பிய --- உண்ணுகின்ற,

     கரிமுகன் --- யானை முகத்தையுடைய விநாயகப் பெருமானது,

     அடி பேணி --- திருவடிகளை விரும்பி,

      கற்றிடும் அடியவர் --- (அறிவு நூல்களை) ஓதுகின்ற அடியாரது,

     புத்தியில் உறைபவ --- அறிவினிடத்தில் கலந்து வாழ்கின்றவரே!

      கற்பகம் --- கற்பகத்தருவைப் போல் அடியவர் நினைத்தவை அனைத்தும் அருளவல்லவரே!

      முத்தமிழ் அடைவினை --- மூன்று தமிழின் முறையினை,

     முற்படு கிரிதனில் --- மலைகளுக்கு எல்லாம் முதன்மையானதாகிய மகாமேரு மலையில் இருந்து,

     முற்பட எழுதிய --- எல்லா மொழிகளுக்கும் முதன்மையுற எழுதிய,

     முதல்வோனே --- எல்லாத் தேவர்களுக்கும் முதன்மையானவரே!

      முப்புரம் எரி செய்த --- மூன்று புரங்களையும் தழலெழ நகைத்து எரித்தருளிய,

     அச் சிவன் உறை ரதம் --- அளப்பரிய புகழை உடைய சிவபெருமான் ஊர்ந்த இரதத்தினுடைய,

     அச்சு அது பொடி செய்த --- (தன்னை நினையாத காரணத்தினால்) அச்சை முறித்துப் பொடியாக்கிய,

     அதி தீரா --- மிகுந்த தீரத்தன்மையினை உடையவரே!

      அத் துயர் அது கொடு --- இன்பரச சக்தியாகிய வள்ளி நாயகியாரை மணந்து ஆன்மாக்களுக்கு பேரின்பத்தை அருள வேண்டும் என்னும் அந்த இரக்கத்தைக் கொண்டு,

     சுப்பிரமணி படும் --- சுப்பிரமணியக் கடவுள் சென்ற,

     அப்புனம் அதன் இடை --- வள்ளியம்மையார் இருந்த அந்தத் தினைப்புனத்தில்,

     இபம் ஆகி --- யானை வடிவங்கொண்டு சென்று,

     அக் குறமகளுடன் --- அந்தக் குற மாதாகிய வள்ளிநாயகியாரோடு,

     அச் சிறு முருகனை --- அந்த இளம்பூரணனாகிய முருகப் பெருமானை,

     அக்கணம் மணம் அருள் --- அத் தருணத்திலேயே திருமணம் புணரும்படித் திருவருள் புரிந்த,

     பெருமானே --- பெருமையிற் சிறந்தவரே!

      என --- என்று துதிசெய்ய,

     வினை கடிது ஏகும் ---  தீவினைகள் விரைவில் நீங்கும்,

(ஆதலால்)

      மத்தமும் --- ஊமத்த மலரையும்,

     மதியமும் --- சந்திரனையும்,

     வைத்திடும் அரன் மகன் --- சடாமுடியின்கண் (கருணை கொண்டு) தரித்துள்ள சிவபெருமானது திருக்குமாரராகிய,

     மல் பொரு திரள்புய --- மல்யுத்தம் செய்கின்ற திரண்ட தோள்களையுடைய,

     மத யானை --- மதங்களைப் பொழிகின்ற யானை முகத்தை உடையவரை,

     மத்தள வயிறனை --- மத்தளம் போன்ற அழகிய வயிற்றை உடையவரை,

     உத்தமி புதல்வனை --- உத்தம குணங்களின் வடிவமாகிய உமாதேவியாரது புத்திரராகத் தோன்றிய மூத்தபிள்ளையாரை,

     மட்டு அவிழ் மலர் கொடு --- தேன் துளிக்கின்ற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து,

     பணிவேன் --- வணங்குவேன்.


பொழிப்புரை


         திருக்கரத்திலே நிறைந்துள்ள பழம், அவல், பொரி, அப்பம் முதலியவைகளை அருந்துகின்ற யானை முகத்தையுடைய கணேச மூர்த்தியின் திருவடிக் கமலங்களை விரும்பி, (பதியின் இலக்கணங்களை ஓதும் அறிவு நூல்களைக்) கற்கின்ற அடியாரது சித்தத்தில் எப்போதும் நீங்காது வாழ்கின்றவரே!

         நினைத்ததைத் தரவல்ல கற்பக விருட்சம்போல் (தனது சரண அரவிந்தங்களை இடைவிடாது துதிக்கும்) தொண்டர்கள் நினைந்தவை எல்லாம் எளிதில் தரவல்ல வள்ளலே!

         எல்லா மொழிகளுக்கும் முற்படுமாறு இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை மலைகளுக்குள் முதன்மையுடைய மகாமேருமலையில் எழுதி அருளிய முதன்மையானவரே!

         (தேவர்கள் வேண்ட) திரிபுரங்களைச் சிரித்து எரித்த சிவபெருமான் எழுந்தருளிய பெரியத் தேரினுடைய அச்சை (தன்னை நினையாத காரணத்தால்) ஒடித்துத் துகள் செய்த மிகுந்த தைரியமுடையவரே!

         இன்பரச சக்தியாகிய வள்ளி பிராட்டியாரைத் திருமணம் புரிந்து உயிர்களுக்கு இன்பத்தை அருளவேண்டுமென்று கருணைகொண்டு, தினைவனத்திற்குச் சென்ற குமாரக் கடவுள் வள்ளி பிராட்டியார் இசையாமையால் (இவ்வேளை துணைசெய்ய வேண்டுமென நினைக்க) யானை வடிவங்கொண்டு சென்று,  குறவர் குடியில் தோன்றிய வள்ளி நாயகியாருடன் இளம்பூரணர் ஆகிய இளையபிள்ளையாருடன் திருமணம் புணர்த்தி திருவருள் பாலித்த பெருமையில் சிறந்தவரே! என்று துதி செய்தால் (துன்பத்தை விளைவிப்பதாகிய) வினைகள் அனைத்தும் விரைவில் விலகும். (ஆதலால்) ஊமத்த மலரையும், பிறைச் சந்திரனையும் சடாமகுடத்தில் கருணைகொண்டு தரித்துள்ள, பாவங்களை அழிப்பவராகிய சிவபெருமானது திருக்குமாரரும், மல்யுத்தம் புரிகின்ற திரண்ட தோள்களை யஉடையவரும், மதங்களைப் பொழிகின்ற யானை முகத்தை உடையவருமாகிய விநாயக மூர்த்தியை, மத்தளம் போன்ற அழகிய திருவுதரத்தை உடையவரை, உத்தமியாகிய உமாதேவியாரது அருட்புதல்வரை தேன் துளிக்கும் புதுமலர்களால் அர்ச்சித்து (வினைகள் விலகும் பொருட்டு அன்புடன்) வணங்குவேன்.


விரிவுரை


         இத்திருப்புகழிலுள்ள உயிர் எழுத்துக்களை மட்டும் கூட்டினால் 200 எழுத்துக்களாகும்.100 என்பதைப் பிள்ளையார் என்று சொல்வது (சில ஊர்களில்) மரபு. அதனால் இத்திருப்புகழை இரட்டைப் பிள்ளையார் என்பார்கள்.

கைத்தலம் ---

கையாகிய இடம் என விரித்துப் பொருள் கொள்க.

நிறைகனி ---

ஞானரசம் பொருந்திய மாதுளங்கனி.

உவகாரி அன்பர்பணி கலியாணி எந்தையிடம்
    உறைநாயகம் கவுரி          சிவகாமி
 ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளங்கனியை
    ஒருநாள் பகிர்ந்த உமை      யருள்பாலா” ---  (சிவஞான புண்டரிக) திருப்புகழ்.

இக்கனி விநாயகருக்குச் சிவபெருமானால் தரப்பட்டது. (கை நிறையப் பழம் என்றும் பொருள் கொள்ளலாம்).

                       விநாயகமூர்த்தி கனிப் பெற்ற வரலாறு

         முன்னொரு காலத்து, ஆயிரம் நரம்புகளுடைய மகதி யாழில் வல்லவராகிய நாரதமுனிவர், தமக்கு அரிதில் கிடைத்த தேவ மாதுளங்கனியைச் சிவபெருமானது திருவடியில் வைத்து வணங்கினர். தீராத இன்பமருளும் பரம காருண்யமூர்த்தியாகிய பரமேசுவரன், அக்கனியை ஏற்று நாரதருக்கு நல்லருள் புரிந்தனர்.

         விநாயகக் கடவுளும், குமாரக் கடவுளும் தந்தையை வணங்கி அக்கனியை தமக்குத் தருமாறு வேண்டினர். சிவமூர்த்தி அப்பழத்தை இரண்டாகப் பகிர்ந்து அளிக்கவில்லை.

         ஒரு காலத்தில் பிருதிவி முதல் நாதம் ஈறான அளவிலா உலகங்களை எல்லாம் ஒரு நாளில் சுற்றி வருகின்றவன் எவனோ அவனே தேவர் யாரினும் பெரியவன். அவனே பரப்பிரமன் என்று தேவர் முதல் பதினெண் கணத்தவர்களும் கூடிய சபையிலே பேசித் தீர்மானித்தார்கள். அவ்வாறு சுற்றி வருவதற்கு அரியர பிரமாதியரும் தம்மால் ஆகாது எ வாளா இருந்தனர்.

         கண்ணுதற் கடவுள் தேவர்களுக்கு நேர்ந்த இந்த ஐயத்தை நீக்கத் திருவுளங்கொண்டு, சர்வலோகங்களையும் ஒரு நொடிப் பொழுதினுள் வலம் வரவும், எல்லாவற்றையும் அறியவும், படைக்கவும், காக்கவும், அழிக்கவும், மறைக்கவும், அருளவும், வல்லவர் முழுமுதற் கடவுளாம் முருகக்கடவுள் ஒருவரே என்று தேவரும் யாவரும் தெளிந்து உய்யக் கருதி ஓர் உபாயம் செய்வாராயினர்.

         நீவிர் இருவரும் ஒரு கனியைக் கேட்டால், எவ்வாறு உதவுவது. உம்மில் எவர் ஒரு கணத்துள் அகில உலகையும் வலம் வருகின்றனரோ அவருக்கே இப் பழம் உரியதாகும்” என்று திருவாய் மலர்ந்தனர். சிவபெருமான் இவ்வாறு சொல்லி முடியும் முன்னரே, சர்வலோக நாயகராகிய முருகப் பெருமான், பச்சை மயில் மீது ஊர்ந்து விரைந்து சென்றார். வாயுவேகம், மனோவேகம் என்று சொல்லப்பெற்ற வேகங்கள் அவர் போன வேகத்திற்கு அணுத் துணையேனும் ஒவ்வா.  பிரபஞ்சங்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வலம் வந்து திருக்கயிலையை நோக்கினார்.


செகமுழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தைமுன்பு
   திகிரிவலம் வந்த செம்பொன்     மயில்வீரா”   --- (அனைவரு) திருப்புகழ்

இலகுகனி கடலைபயறு ஒடியல்பொரி அமுதுசெயும்
   இலகுவெகு கடவிகட தடபாரமேருவுடன்
இகலி,முது திகிரிகிரி நெரிய,வளை கடல்கதற,
   எழுபுவியை ஒருநொடியில் வலமாக வோடுவதும்” ---  சீர்பாத வகுப்பு.

ஆர மதுரித்த கனி காரண முதல் தமைய
   னாருடன் உணக்கைபுரி      தீமைக்காரனும்
ஆகமம் விளைத்து அகில லோகமு நொடிப்புஅளவில்
   ஆசையொடு சுற்றும்அதி     வேகக்கரனும்”  --- வேளைக்காரன் வகுப்பு.

வாரணமுகன் தனது தாதையை வலஞ்சுழல,
வாகைமயில் கொண்டுஉலகு சூழ்நொடி வருங்குமரன்” --- பூதவேதாள வகுப்பு.

     இங்ஙனம் ஆறுமுகப் பரம்பொருள் அகில உலகையும் வலம் வந்து திருக்கயிலை வந்து சேரும் முன், மூத்தபிள்ளையார், சிவத்திற்கு அந்நியமாய் உலகம் இல்லை என்று கொண்டு, சிவபரம்பொருளை வலம் வந்து “உலகம் எங்கினும் நிறைந்து நிற்கும் நின்மலப்பொருள் தேவரீர் தானே. தங்களை வலம் வந்தது உலகத்தைச் சுற்றி வந்ததாகும். ஆதலால் கனியைத் தந்தருள்க” என்றனர். சிவபெருமான் மனம் மகிழ்ந்து உடனே கனியை மூத்த பிள்ளையார் கையில் தந்தார். பன்னிருகைப் பரமன், பரமசிவத்தால் “பழம் நீ” எனப் பெற்றார்.

இவ்வரலாற்றின் நுண் பொருள்

     ஒரு கனியை இருவரும் விரும்பினால் கனியைப் பகிர்ந்து தரலாகாதோ? அகில உலகங்களையும் ஒரு கணத்தில் ஆக்கியும் அளித்தும், நீக்கியும் ஆடல் புரிகின்ற எல்லாம் வல்ல இறைவர் மற்றொரு கனியை உண்டாக்கித் தரலாகாதோ? காரைக்காலம்மையாருக்கு ஒரு கனிக்கு இரு கனிகளையே வழங்கிய வள்ளல் அன்றோ அவர்! "தம்பியே கனி பெறுக" என்று தமையனாரும், "தமையனே கனி பெறு"க என்று தம்பியாரும் ஒற்றுமையாக இருந்து இருக்கலாம்.  ஒரு கனி காரணமாக அகில உலகங்களையும் ஒரு நொடியில் வலம் வருவது முயற்சிக்குத் தக்க ஊதியமாகுமா? சகல வல்லபமும் உடைய வல்லபை கணபதிக்கு உலகை வலம் வரும் வண்மை இல்லையா? சிவத்தை வலம் வருவதே உலகை வலம் வருவதாகும் என்பது அறிவின் வடிவாய ஆறுமுகவேள் அறியாததா?

     சிவம் என்ற ஒன்றினுள் எல்லாவற்றையுங் காணும் தன்மை ஒன்று. எல்லாவற்றினுள் சிவத்தைக் காணும் தன்மை மற்றொன்று.

     இதனைத் தான் ஆனைமுகன் ஆறுமுகன் என்ற இருவடிவங்களாக நின்று ஒருபரம் பொருள் நமக்கு உணர்த்தியது.

     அரும்பு --- சரியை; மலர் --- கிரியை; காய் --- யோகம், கனி --- ஞானம். எனவே, சிவத்தின் கண் இருந்தது ஞானம் என அறிக. ஞானத்தில் விருப்பம் ஏற்பட வேண்டும் என்பதைத் தெரிவிக்க விநாயகரும் வேலவரும் அக்கனியை விரும்பினார்கள். ஞானத்தைச் சிதைக்க முடியாதென்பதைத் தெளிவாக்குகின்றது அக்கனியை அரனார் சிதைத்துத் தராமை;

சிவத்திற்கு அந்நியமாக வேறு இன்மையைத் தெரிவிக்க விநாயகர் விமலனை வலம் வந்து ஞானமாகியக் கனியைப் பெற்றனர்.

எல்லாம் அவனே” என்பதைத் தெரிவிக்க வடிவேற் பரமன் உலகை வலம் வந்து தாமே ஞானக் கனியாக நின்றனர்.

ஞானமே அவர்; ஞான பண்டிதன்; ஞானந்தானுருவாகிய நாயகன். ஞானமாகிய கனியைத் தாங்கும் விநாயகர் ஞானாகரர்.

விநாயகர் வேறு, முருகர் வேறு என்று எண்ணவேண்டாம். ஐங்கரனும் அறுமுகனும் ஒன்றே.. பாலும் சுவையும் போல் என்று அறிக. பால் விநாயகர்; பாலின் சுவை கந்தவேள். சுவையைப் பால் தாங்கி நிற்கின்றது. அதுபோல் ஞானக் கனியை விநாயகர் தாங்கி நிற்கின்றனர்.

அப்பமொடு அவல் பொரி ---

     அப்பம், அவல், பொரி முதலிய சத்துவகுண ஆகாரங்களை அறிவு வடிவமாகிய விநாயக மூர்த்தி விரும்பி உண்கிறார்.

கரிமுகன் ---

     யானைமுகன்.

விநாயகருக்கு யானைமுகம் வந்த வரலாறு

         திருக்கயிலை மலையின் ஒருபால் உள்ள சித்திரமண்டபத்து அடியார்க்கருள் புரியுமாறு வேதங்கள் “ஐயா என, ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியராம்” சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளினார். அச் சித்திர மண்டபச் சுவர்களில் எழுதியுள்ள அழகிய ஓவியங்களைக் கண்டு உலவுங்கால், ஒருபால் ஏழுகோடி மகாமந்திர சொரூபங்களும், அவைகளுக்கெல்லாம் முதலிய சமட்டி வியட்டிப் பிரணவ வடிவ மந்திர சொரூபங்களும், அதில் ஆண் யானை பெண் யானை வடிவங்களும் வரைந்திருக்க, அவற்றுள் சமட்டிப் பிரணவ வடிவமாகிய பெண்யானைச் சித்திரத்தின் மீது அகிலாண்ட நாயகியாகிய அம்பிகையும், வியட்டி வடிவமாகிய ஆண்யானைச் சித்திரத்தின் மீது ஆலமுண்ட அண்ணலும் விழிமலர் பரப்பினர்.

         அங்ஙனம் பார்த்தவுடன் கோடி சூரியப் பிரகாசத்துடனும், யானை முகத்துடனும், நான்கு புயாசலங்களுடனும், விநாயகமூர்த்தி அவதரித்தனர்.

பிடி அதன் உருஉமை கொள, மிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடி கணபதி வர அருளினன், மிகுகொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.       --- தேவாரம்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ ---

கல்வியானது இறைவன் திருவடியை விரும்பி ஐயந்திரிபு மயக்கமற பதிஞானம் தலைப்படுமாறு கற்க வேண்டியது. அங்ஙனமன்றி, கேவலம் பொருள் மாத்திரம் விரும்பிக் கற்றல் கூடாது என்பதும் இறைவன் திருவடிகளில் அன்பு வைக்காமல் படித்தல் பயனற்றது என்பதும் தெளியும்.

அரகரா எனாமூடர் திருவெணீறு இடாமூடர்
அறிவுநூல் கலாமூடர்”               --- (இரதமான) திருப்புகழ்.

கற்றதனால் ஆய பயன்என்கொல்? வால்அறிவன்
நல்தாள்ள் தொழாஅர் எனின்.                  --- திருக்குறள்


பதி நூல் கல்லாதவர் உள்ளத்தில் பரமன் வாசஞ் செய்யான்.

கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ
 கண்ணாடியில் தடம்           கண்டவேலா” --- (என்னால்) திருப்புகழ்.

கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி,
கற்றார் இடும்பை களைவாய் போற்றி.        ---  அப்பர்.

கல்லாதார் மனத்துஅணுகாக் கடவுள் தன்னைக்
         கற்றார்கள் உற்றுஓருங் காத லானைப்
பொல்லாத நெறிஉகந்தார் புரங்கள் மூன்றும்
         பொன்றிவிழ அன்றுபொரு சரம்தொட் டானை
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க
         நிறைதவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்
         செங்காட்டங் குடிஅதனிற் கண்டேன் நானே.  --- அப்பர்.

கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்,
சொல்லாதாரோடு அல்லோம் நாமே. ---  திருஞானசம்பந்தர்.


ஆதலால் பதிநூல் கற்றவர் உள்ளத்தில் இறைவன் வசிப்பவன் என்பது புலனாகும்.

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி.   ---  அப்பர்.

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை”     --- திருவிசைப்பா

கற்பகம் என வினை கடிது ஏகும் ---

விநாயகப் பெருமானை மனமொழி மெய்களால் சிந்தித்து வாழ்த்தி வந்திப்பார்களது தீவினைகள் விரைவில் நீங்கும்.

விநாயகனே வெவ்வினையை வேர்அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே
விண்ணுக்கும் மண்ணுக்கு நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து,                 --- பதினோராந் திருமுறை.


மதியமும் வைத்திடும் அரன் ---

சிவபெருமான் சந்திரனைத் தரித்த வரலாறு

         மலர்மிசை வாழும் பிரமனது மானத புத்திரருள் ஒருவனாகியத் தட்சப் பிரசாபதி வான்பெற்ற அசுவினி முதல் ரேவதி ஈறாயுள்ள இருபத்தியேழு பெண்களையும், அநுசூயாதேவியின் அருந்தவப் புதல்வனாகிய சந்திரன் அழகில் சிறந்தோனாக இருத்தல் கருதி அவனுக்கு மணம்புணர்த்தி, அவனை நோக்கி, “நீ இப்பெண்கள் யாவரிடத்தும் பாரபட்சமின்றி சமநோக்காக அன்பு பூண்டு ஒழுகுவாயாக” என்று கூறிப் புதல்வியாரைச் சந்திரனோடு அனுப்பினன். சந்திரன் சிறிது நாள் அவ்வாறே வாழ்ந்து, பின்னர் கார்த்திகை உரோகணி என்ற மாதரிர் இவரும் பேரழகு உடையராய் இருத்தலால், அவ்விரு மனைவியரிடத்திலே கழிபேருவகையுடன் கலந்து, ஏனையோரைக் கண்ணெடுத்தும் பாரான் ஆயினன். மற்றைய மாதர்கள் மனம் கொதித்து தமது தந்தையாகிய தக்கனிடம் வந்து தம் குறைகளைக் கூறி வருந்தி நின்றனர். அது கண்ட தக்கன் மிகவும் வெகுண்டு, சந்திரனை விளித்து “உனது அழகின் செருக்கால் என் கட்டளையை மீறி நடந்ததனால் இன்று முதல் தினம் ஒருகலையாகத் தேய்ந்து ஒளி குன்றிப் பல்லோராலும் இகழப்படுவாய்” என்று சபித்தனன்.

     அவ்வாறே சந்திரன் நாளுக்குநாள் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து பதினைந்து நாட்கள் கழிந்தபின் ஒருகலையோடு மனம் வருந்தி, இந்திரனிடம் சென்று தனக்கு உற்ற இன்னல்களை எடுத்தோதி “இடர் களைந்து என்னைக் காத்தருள்வாய்” என்று வேண்டினன். இந்திரன், “நீ பிரமதேவர்பால் இதனைக் கூறுதியேல், அவர் தன் மகனாகிய தக்கனிடம் சொல்லி சாபவிமோசனஞ் செய்தல் கூடும்” என, அவ்வண்ணமே சந்திரன் சதுர்முகனைச் சரண்புக, மலரவன் “சந்திரா! தக்கன் தந்தை என்று என்னை மதித்து, எனது சொல்லைக் கேளான்.  நீ திருக்கயிலையை அடைந்து கருணாமூர்த்தியாகியக் கண்ணுதற்கடவுளைச் சரண்புகுவாயானால், அப்பரம்பொருள் உனது அல்லலை அகற்றுவார்” என்று சொன்னார். சந்திரன் திருக்கயிலைமலைச் சென்று, நந்தியெம்பெருமானிடம் விடைபெற்று மகா சந்நிதியை அடைந்து, அருட்பெருங்கடலாகியச் சிவபெருமானை முறையே வணங்கி, தனக்கு நேர்ந்த சாபத்தை விண்ணப்பித்து, “பரம தயாளுவே! இவ்விடரை நீக்கி இன்பமருள்வீர்” என்ற குறையிரந்து நின்றனன். மலைமகள் மகிணன் மனமிரங்கி, அஞ்சேலென அருள் உரை கூறி அவ்வொரு கலையினைத் தம் முடியில் தரித்து, “உனது கலைகளில் ஒன்று நமது திருமுடியில் இருத்தலால் நாளுக்கொரு கலையாகக் குறைந்தும் இருக்கக் கடவாய், எப்போது ஒரு கலை உன்னை விட்டு நீங்காது” என்று கருணைப் பாலித்தனர்.

எந்தை அவ்வழி மதியினை நோக்கி, நீ யாதும்
சிந்தை செய்திடேல், எம்முடிச் சேர்த்திய சிறப்பால்
அந்தம் இல்லை இக் கலை இவண் இருந்திடும் அதனால்
வந்து தோன்றும் நின் கலையெலாம் நாள்தொறும் மரபால். ---  கந்தபுராணம்.

மதயானை ---

         யானைக்குக் கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என மும்மதங்கள் உண்டு. கணபதிக்கு யானை உறுப்புக் கழுத்துக்கு மேல் மட்டுமே உள்ளது. எனவே, விநாயகப் பெருமானுக்கு மும்மதம் என்பது பொருந்தாது. 

மும்மதம் என்பன இச்சா ஞானக் கிரியைகளின் உருவகம் ஆகும் என்பதை அறிதல் வேண்டும். அவை, நமது ஆணவ அழுக்கினால் உண்டான துர்நாற்றத்தைப் போக்கி அருள் புரியும்.

இது குறித்தொரு வரலாறு

வாழ வைத்தவர் வீழ்ந்து ஒழிய வேண்டும். அப்பொழுதான் என் பெருமை தலை எடுக்கும் என்று எண்ணும் ஏழை அறிவினர் சிலர் அன்னாளிலும் இருந்தனர். அவர்களுள் ஒருவன்தான் சலந்தரன். சலந்தராசுரன் தன் மனைவியாகிய பிருந்தை தடுத்தும் கேளாது, சிவபெருமானோடு போர் புரிய வேண்டிக் கயிலை நோக்கி வரும் வழியில், சிவபெருமான் ஓர் அந்தண வடிவம் கொண்டு நின்று, "எங்குச் செல்கின்றாய்" என்று வினவ, அவன் "சிவனோடு போர் புரிந்து வெல்லச் செல்கிறேன்" என்ன,  பெருமான், "அது உனக்குக் கூடுமோ? கூடுமாயின், தரையில் நான் கீறும் சக்கரத்தை எடுப்பாய்" என்று ஒரு சக்கரம் கீற, அதை அவன் தோளின்மீது எடுக்க, அப்போது அது அவன் உடம்பைப்  பிளக்கவே அவன் இறந்தொழிந்தான்.

சலந்தரன் உடல் குருதி, பொறுக்க முடியாத துர்நாற்றமாய் உலகைப் போர்த்தது. அதனால் தாங்க முடியாமல் தடுமாறிய அகில உலகமும், ஐங்கரக் கணபதியை ஆராதித்தது. உடனே ஆனைமுகப் பெருமானின் ஊற்றெடுத்த அருள்மதம், எங்கும் வியாபித்து, அப் பொல்லாத நாற்றத்தைப் போக்கியது. அதன் மூலம் உலகமும் உய்ந்தது என்கின்றது காஞ்சிப் புராணம்.

விழிமலர்ப்பூ சனைஉஞற்றித் திருநெடுமால் 
பெறும் ஆழி மீளவாங்கி,
வழிஒழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி 
முடைநாற்றம் மாறும் ஆற்றால், 
பொழிமதநீர் விரை ஏற்றி விகடநடப் 
பூசைகொண்டு புதிதா நல்கிப், 
பழிதபு தன் தாதையினும் புகழ்படைத்த 
மதமாவைப் பணிதல் செய்வாம்.  --- காஞ்சிப் புராணம்.                                           
 உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் எனும்
தறிநிறுவி, உறுதியாகத்
தள்ளரிய அன்பு என்னும் தொடர் பூட்டி,
இடைப்படுத்தித் தறுகண் பாசக்
கள்ளவினை பசுபோதக் கவளம் இடக்
களித்து உண்டு, கருணை என்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை  நினைந்து
வரு வினைகள் தீர்ப்பாம். --- திருவிளையாடல் புராணம்.

எனவே, இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்று அருட்சத்திகளே மும்மதம் என்பதை அறிவுறுத்தவே, "கருணை மதம் பொழிகின்ற சித்தி வேழம்" என்றது திருவிளையாடல் புராணம்.

மத்தள வயிறு ---

 உலகமெல்லாம் தன்னகத்தில் அடங்கியுள்ள மணிவயிறு.

உத்தமி புதல்வன் ---

     உத்தம குணங்களுக்குப் பிறப்பிடமானவரும், முப்பத்திரண்டு அறம் வளர்க்கும் அன்னையும், “வாக்கே நோக்கிய” மங்கையுமானபடியால் உமாதேவியாரை “உத்தமி” என்றனர். அவ்வம்மையின் புதல்வன் என்றமையால் தாய்க்குரிய குணம் மகனுக்கு முண்டு என்று குறிப்பிடுகிறார்.

இமவான் மடந்தை உத்தமிபாலா”   ---  (சந்ததம் பந்த) திருப்புகழ்.

முத்தமிழ் அடைவு ---

தமிழ் இலக்கணங்களை அகத்தியர் கூற விநாயகர் எழுதினார் என்பது செவி வழிச் செய்தி. முத்தமிழடைவு என்பதை மகாபாரதம் என்றும் வலிந்து பொருள் கொள்ளலாம்.

முதல்வோனே ---

     சகல தேவர்களுக்கும் முதற்கடவுளாகத் திகழ்வதாலும், சிவபுத்திரரில் முதல்வராக விளங்குவதாலும், யாவர் எக்காரியத்தைத் தொடங்கினாலும் முதலில் நினைத்துப் பூசிக்கும் முன்னைப் பழம் பொருளா யிலகுவதாலும் முதல்வன் என்றனர்.

உனது தாய்உலக சராசரம் எவையும் ஒருங்குடன் பூத்தவள்,ந்தை
கனபரிபுரண சுகத்தன்,நின் தமையன் காரியமுதல்வன்நின்மாமன்
வனசனாதியர்கள் பணிபதன், இவர்கள் வளம் எலாம் உனக்கு உரித்தாமால்
வினவுசெல் வத்துள் செல்வன்நீ,போரூர் வீறிவாழ் ஆறுமாமுகனே.
                                                                      --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை.

முப்புரம் எரிசெய்த அச்சிவன் ---

     தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற அசுரர்களால் தேவர்களுக்கு நேர்ந்த இன்னலைக்களைவான் கருதி கண்ணுதல் கருணைகொண்டு முப்புரத்தையுமெரித்தனர். அதன் தத்துவமாவது, ஆணவம், மாயை, கன்மம் என்ற மும்மத காரியமாம்.

அப்புஅணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரம் ஆவது மும்மல காரியம், அப்புரம்
எய்தமை யார்அறி வாரே.                ---  திருமந்திரம்

அச்சது பொடிசெய்த அதி தீரா ---

     தன்னை நினையாத காரணத்தால் சிவபெருமானேறியத் தேரின் அச்சை இற்றுப்போமாறு செய்த மகா தீரர். இங்ஙனம் அச்சு இற்ற இடம் இப்போதும் அச்சிறு பாக்கம் என வழங்கும். இத்தலம் தேவாரம் பெற்றது.


இபமாகி.....அக்கண மணம் அருள் பெருமாளே ---

     குமாரக் கடவுள் திருமணம் கொள்ள வடிவம் மாறித் தினைவனம் சென்று பல விளையாடல்கள் புரிந்து, முடிவில் கிழவடிவம் கொண்டு குறவர் குலத்து உதித்த கொம்பு அன்னாளை வேண்ட, அவ்வம்மையார் இணங்காது பிணங்கி அகல அக்காலத்து விநாயகப் பெருமானை வருமாறு குமரகுரு நினைக்க, உடனே கணேசமூர்த்தி பெரிய யானை வடிவங்கொண்டு வந்து வள்ளிப் பிராட்டியாருக்கும் குன்றெறிந்த குழகனாருக்கும் திருமணம் முடித்து வைத்தனர்.

கருத்துரை

         விநாயகப் பெருமானைத் துதிப்பவர்கள் வினைகள் விரைவில் நீங்கும். அப்பெருமானை நினையாதார்க்குக் காரியங்கள் இனிது முடியாது. அப்படி நினையாத சிவபெருமானது தேரின் அச்சை ஒடித்தனர். தன்னை நினைந்த முருகவேளுக்குத் திருமணம் முடித்து வைத்தனர். ஆதலால் எடுத்துக் கொண்ட இந்நூல் இனிது முடிவதன் பொருட்டு அம் மகா கணபதியை வணங்குகிறேன்.


சித்தி விநாயகக் கடவுள்

உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் எனும்
     தறி நிறுவி, உறுதி யாகத்
தள்ள அரிய அன்பு என்னும் தொடர்பூட்டி,
     இடைப்படுத்தி, தறுகண் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளம் இடக்
     களித்து உண்டு, கருணை என்னும்
வெள்ளமதம் பொழி சித்தி வேழத்தை
     நினைந்து, வரு வினைகள் தீர்ப்பாம்.
 
இதன் பொருள் ---

     உள்ளம் எனும் கூடத்தில் - உள்ளமாகிய கூடத்தில், ஊக்கம் எனும் - மன உறுதியாகிய, தறி நிறுவி - கட்டுத் தறியை நிறுத்தி, தள்ளரிய - பேதித்தல் இல்லாத, அன்பு என்னும் தொடர் - அன்பாகிய சங்கிலியை, உறுதியாகப் பூட்டி - வலிமை பெறப் பூட்டி, இடைப் படுத்தி - அதில் அகப்டுத்தி, தறுகண் - வன்கண்மையை உடைய, பாசம் - ஆணவ சம்பந்தமுள்ள, கள்ளவினை - வஞ்சவினையை உடைய. பசுபோதம் - சீவபோதம் ஆகிய, கவளம் இட - கவளத்தைக் கொடுக்க, களித்து - மகிழ்ந்து, உண்டு - அருந்தி, கருணை என்னும் - அருளாகிய, மதவெள்ளம் பொழி - மதப்பெருக்கைச் சொரிகின்ற, சித்தி வேழத்தை - சித்திவிநாயகக் கடவுளாகிய யானையை, நினைந்து - தியானித்து, வரு வினைகள் தீர்ப்பாம் - பிறவி தோறும் தொடர்ந்து வருகின்ற வினைகளை நீக்குவாம்.

     விநாயகக் கடவுளை வேழம் என்றதற்கேற்ப உள்ளம் முதலியவற்றைக் கூடம் முதலியவாக உருவகப் படுத்தினார். கூடம் - யானை கட்டுமிடம். கவளம் - யானை யுணவு. தொடராற் பூட்டி என விரிப்பினும் அமையும். ஆணவத்தாற் பசுபோதமும், அதனால் வினையும் நிகழுமென்க. பசுபோதக் கவள மிடுதலாவது யான் எனது என்னுஞ் செருக்கற்று வணங்குதல். சித்தி விநாயகர் : பெயர்.







                 

1 comment:

திரு ஏகம்ப மாலை - 21

"சொல்லால் வரும்குற்றம், சிந்தனையால் வரும் தோடம், செய்த பொல்லாத தீவினை, பார்வையில் பாவங்கள், புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீ...