திருச்சிற்றம்பலம்
திரு வல்லம்
(திருவலம்)
தொண்டை நாட்டில் உள்ள திருத்தலங்களில் பத்தாவது
திருத்தலம்.
சென்னையில் இருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை -
காட்பாடி இரயில் பாதையில் உள்ள திருவல்லம் இரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அருகில்
உள்ள ஊர் இராணிப்பேட்டை சுமார் 10 கி.மீ. தொலைவில்
உள்ளது. வாலாஜாப்பேட்டை, இராணிப்பேட்டை
மற்றும் ஆற்காடு ஆகிய ஊர்களில் இருந்து திருவல்லம் செல்ல பேருந்து வசதிகள் உண்டு.
திருவல்லம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் ஆலயம் இருக்கிறது.
"தீய
என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நல் நாடு" என்று தெய்வச் சேக்கிழார்
பெருமானால் போற்றப்பெற்ற தொண்டை நன்னாட்டிலே விளங்கும் அற்புதத் திருத்தலமாகிய திருவல்லத்தை, அவர் இவ்வாறு சிறப்பித்து உள்ளார்.
தீது
நீங்கிடத் தீக்கலியாம் அவுணற்கு
நாதர்
தாம்அருள் புரிந்தது நல்வினைப் பயன்செய்
மாதர்
தோன்றிய மரபு உடை மறையவர் வல்லம்
பூதி
சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்.
பொழிப்புரை : தீது நீங்கும்படியாகத்
தீக்காலி எனும் பெயருடைய ஓர் அசுரனுக்கு, இறைவன்
அருள் புரிந்ததும், நல்வினைப் பயனைச்
செய்தற்கேற்ற பெண்கள் இருவரைப் பெற்ற மாதவமுடைய மறையவர்கள் வாழ்ந்து வருவதுமான திருவல்லம்
என்னும் திருப்பதியானது, திருநீறும்
உருத்திராக்கமும் ஆகிய சிவச்சின்னங்களைப் போற்றிவரும் சிறப்பினால் விளக்கம்
பெற்றிருக்கும்.
திருமாலின் சக்கரத்தால் தான் இறக்க நேரிடும் தீங்கு
நீங்கும்படி தீக்காலி என்ற அவுணன் வரங்கிடக்க, அவனுக்கு அத்தீமை அணுகாது காத்து
அருளினர் என்பது தல வரலாறு. தீக்காலி பூசித்துப் பேறு பெற்றதனால் இத்தலம்
தீக்காலிவல்லம் என்றும் வழங்கும்.
நல்வினைப் பயன்செய் மாதர் தோன்றிய மரபு --- தனக்குப்
பெண்மக்களை அன்றி, ஆண் மகவு இல்லை என்று அறிந்த ஒரு
மறையவன் புத்திரப் பேறு வேண்டிச் சிவபெருமானை நோக்கித் தவம் கிடந்தான். இறைவர் வெளிப்பட்டு
"உனக்குப் புத்திரியே அன்றிப் புத்திரப்பேறு கிடைக்குமாறு இல்லை" என்று
அருளிச் செய்ய, அவன் அவரை நோக்கி, "ஆயின் அப் புத்திரிகள்
தேவரீருக்குத் திருத்தொண்டு செய்வோராகப் பிறக்க அருள் செய்யவேண்டும்" என்று
வேண்டி அவ்வாறே பெற்று மேன்மை அடைந்தான்
என்பது வரலாறு.
மரபுடை மறையவர் வல்லம் --- அந்த மரபினில் வந்த
மறையோர் விளங்கும் திருவல்லம்.
வள்ளல்
பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில் பின் வருமாறு சிறப்பித்து உள்ளார்.
---- பார்த்து
உலகில்
இல்லம்
எனச் சென்று இரவாதவர் வாழும்
வல்லம்
மகிழ் அன்பர் வசித்துவமே.
இதன் பொருள் --- உலகில்
உள்ளவர்களைப் பார்த்து, இல்லை என்று சொல்லி, இரவாத தன்மையை உடைய
மெய்யன்பர்கள் வாழுகின்ற திருவல்லம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி
அன்பர்களை எல்லாம் அருளால் வசீகரிக்கின்ற பெருமானே.
இல்லை என்று சொல்லி, இறைவனிடத்திலே கையை
ஏந்த வேண்டுமே அன்றி, பிறர்பால் செல்லாதவர்களே மெய்யடியார்கள்.
இத்
தலத்து இறைவிக்கு தனுமத்யாம்பாள் என்னும் திருப்பெயர். தனு
- வில். மத்யம் - இடைப்பகுதி. வில்லின் மத்தியப் பகுதி எவ்வாறு மெலிந்து உள்ளதோ, அது போன்ற மெல்லிய
உடையை உடையவள் என்று பொருள். வில்லிடை நாயகி. இதை அறியாதோர் பலர்.
இறைவர்
: வில்வநாதீசுவரர், வல்லநாதர்.
இறைவியார்
: தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை.
தல
மரம் : வில்வம்.
தீர்த்தம் : கௌரி தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - எரித்தவன்
முப்புரம்.
ஆலய
முகவரி
அருள்மிகு
வில்வநாதேசுவரர் திருக்கோயில்
திருவலம்
அஞ்சல்
வழி
இராணிப்பேட்டை
வேலூர்
மாவட்டம்
PIN - 632515
திருக் கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
நிவா நதியின் கரையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரளவில் ஒரு முகப்பு
வாயில் மற்றும் முன் மண்டபம், அதையடுத்து தெற்கு
நோக்கிய 4 நிலை இராஜ கோபுரத்துடன்
இவ்வாலயம் அமைந்துள்ளது. இறைவன்,
தீர்த்தத்தின்
பொருட்டு "நீ, வா" என்றழைக்க, இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால்
இப்பெயர் பெற்றது. "நீ, வா" நதி
நாளடைவில் நிவா நதியாயிற்று என்கின்றனர். இன்று பொன்னை ஆறு என்ற பெயரும்
கொண்டுள்ளது. இந் நதியிலிருந்து தான் பண்டை நாளில் சுவாமிக்குத் தீர்த்தம் கொண்டு
வரப்பட்டது. இராஜகோபுரம் வாயில் வழியே உள்ள நுழைந்தால் வலமுபுறம் நீராழி
மண்டபத்துடன் உள்ள கெளரி தீர்த்தம் இருக்கிறது. உள் கோபுரம் மூன்று
நிலைகளையுடையது. இக்கோபுரம் கல் மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும். உள் நுழைந்து
வலமாக வரும்போது உற்சவர் மண்டபம் உள்ளது. பக்கத்தில் காசிவிசுவநாதர் சந்நிதியும், அடுத்து சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியும்
உள்ளன. இவ்விரு சந்நிதிகளும், சந்நிதிகளிலும் உள்ள
சிவலிங்கத் திருமேனிகள் மிகச் சிறியன. அடுத்துள்ள அருணாசலேசுவரர் சந்நிதியிலுள்ள
சிவலிங்க திருமேனி சற்றுப் பெரியது. இதற்குப் பக்கத்தில் சதாசிவர், அனந்தர், ஸ்ரீகண்டர், அம்பிகேசுவரர் என்னும் பெயர்களில்
சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதனை அடுத்து சஹஸ்ரலிங்கம் உள்ளது.
ஆறுமுகர்
சந்நிதியில் இருபுறமும் வள்ளி தெய்வயானையும், நாகப் பிரதிஷ்டையும், மூலையில் அருணகிரிநாதர் உருவமும் உள்ளன.
இதன் பக்கத்தில் குருஈசுவரர், விஷ்ணுஈசுவரர், விதாதா ஈசுவரர் என்னும் பெயர்களைக்
கொண்ட சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன.
இதற்கு
எதிர்புறம் கிழக்கு நோக்கி ஆதி வில்வநாதேசுவரர் சந்நிதி தனிக் கோயிலாக உள்ளது.
இச்சந்நிதிக்கு எதிரே நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்றுள்ளது.
வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது
கிழக்குச் சுற்றில் கொடிமரம், பலிபீடம் மற்றும்
நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தி மேற்கு நோக்கி
சுவாமியைப் பார்க்காமல் கிழக்கு நோக்கி உள்ளது. இதற்குப் பின்னால் நின்ற நிலையில்
அதிகார நந்தி சுவாமியைப் பார்த்தபடியுள்ளது. சுவாமி சந்நிதி அர்த்த மண்டபத்தில்
உள்ள நந்தியும் கிழக்கு நோக்கியே திரும்பி உள்ளது. இவைகளுக்கு இடையில் திருவலம்
மௌன சுவாமிகள் கட்டுவித்த சுதையாலான பெரிய நந்தியும் கிழக்கு நோக்கியே உள்ளது.
நேரே நின்று மூலவரைத் தரிசிக்க முடியாதவாறு இது மறைக்கின்றது.
மூலவர் சந்நிதி வாயிலில் நுழைந்தவுடன்
நேரே கிழக்கு நோக்கி சதுர பீட ஆவுடையார் மீது மூலவர் வில்வநாதேஸ்வரர் சுயம்பு
சிவலிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார். உள்சுற்று வலம் வரும்போது மூலையில்
"பிராமி" உருவச்சிலையுள்ளது. மூலவர் சந்ந்ததிக்குள் நுழைய தெற்கு
நோக்கிய பக்கவாயிலும் உள்ளது. கருவறை அகழி அமைப்புடையது. கருவறைச்சுவரில்
கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர். எதிரில்
சண்டேசுவரர் சந்நிதி, 63 மூவரின் உற்சவ, மூலத்திருமேனிகள் மேலும் கீழுமாக
இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன. கருவறை மண்டபத்தில் சங்கரநாராயணர் திருவுருவம்
உள்ளது.
சுவாமி
சந்நிதிக்கு அருகே தொட்டி போன்ற அமைப்பிலான பள்ளத்தில் பாதாளேசுவரர் சந்நிதி
உள்ளது. இதில் சிவலிங்கம் நந்தி,
விநாயகர்
மூலத்திருமேனிகள் உள்ளன. பஞ்சம் நேரின் இப்பெருமானுக்கு ஒரு மண்டல காலம் அபிஷேகம்
செய்யின் மழை பெய்யும் என்று சொல்லப்படுகின்றது.
மூலவர்
வாயிலில் உள்ள இரு துவாரபாலகர்கள் திருமேனிகள் சிற்பக் கலையழகு வாய்ந்தவை.
இவற்றுள் ஒன்று ஒரு கையை மேலுயர்த்தி, நடனபாவ
முத்திரையுடன் விளங்குகின்றது. இங்குள்ள மூலவருக்கு நேர் எதிரில்
நந்தீசுவரருக்கும், சுவாமிக்கும் இடையில்
சனகர் என்னும் ஒரு முனிவரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இந்த இடத்தில் அமர்ந்து
தியானம் செய்தால் பூர்வ ஜன்ம சாபங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
மூலஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே
திருவுருவங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாது என்பது
ஒரு சிறப்பு.
தெய்வீகத் தன்மை வாய்ந்த நெல்லிக்கனியை
இத்தலத்தில் தான் ஒளவையார் பெற்றார் என்றும், விநாயகர் சிவபெருமானைச் சுற்றி வந்து
அற்புத மாங்கனியை இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது இத்தலம் என்றும் சொல்லப்படுகிறது
.
தலத்திலுள்ள சனிபகவான் சந்நிதிக்குப்
பக்கத்திலுள்ள விநாயகர் சந்நிதியில் சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது
அமர்ந்த நிலையில், இறைவனிடம் கனி பெற்ற
வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் விநாயகர் காட்சி
தருகிறார். விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால்
இவ்வூருக்கு திருவலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது.
அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகப்
பெருமான் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.
மேற்குத்
திருச்சுற்றில் சகஸ்ரலிங்கம் அருகில் வள்ளி தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சந்நிதி
உள்ளது. அம்பிகை சந்நிதியில் அம்பிகைக்கு இருபுறமும் மகாவிஷ்ணு நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவது
இத்தலத்தில் சிறப்பு. அம்பிகை சந்நிதி முன் பலிபீடம், சிம்மம் உள்ளது.
நந்தியெம்பெருமான் இத்தலத்தில் சுவாமியை
நோக்கி இராமல் வெளி நோக்கி இருப்பதற்குரிய காரணத்தை தலபுராணம் விவரிக்கிறது.
அடியவர் ஒருவர் இத்தலத்திலிருந்து சுமார் 5 கி.மி. தொலைவிலுள்ள கஞ்சனகிரி
மலையிலுள்ள திருக்குளத்திலிருந்து இறைவன் அபிஷேகத்திற்கு தினமும் நீர் எடுத்து
வருவது வழக்கம். கஞ்சன் எனும் அசுரன் அடியவரை நீர் எடுக்கவிடாமல் துன்புறுத்தவே
மனம் வருந்திய அவர் இறைவனிடம் முறையிட்டார். சிவபிரான் நந்திதேவரை அனுப்பினார்.
நந்தியெம்பெருமான் அசுரனை தன் கொம்புகளால் குத்தி எட்டு பாகங்களாக கிழித்து
போட்டார். சிவனிடம் சாகா வரம் பெற்றிருந்த அந்த முரடன், நந்தியின் தாக்குதலில் இருந்து தப்பி
விட்டான். கஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் இறைவனருளால்
அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள் உண்டாயின. இன்றும் இம் மலையில்
குளக்கரையில் எண்ணற்ற சிவலிங்கங்கள் இருப்பதையும் தோண்டினால் கிடைப்பதையும் நேரில்
பார்க்கலாம். கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க வில்வநாதேசுவரர், தைப் பொங்கல் கழித்த 3ம் நாள், கஞ்சனின் உடலுறுப்புகள் விழுந்த எட்டு
இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு எழுந்தருளி, கஞ்சனுக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி
நடைபெறுகிறது. கஞ்சனால் மீண்டும் இன்னல் வராமல் தடுக்கவே நந்தி சிவனை நோக்கி
இராமல், கோயில் வாசலை நோக்கி
திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது.
தவப்பெருந்திரு சித்தர் சிவானந்த
மவுனகுரு சுவாமிகள் பல காலம் தங்கியிருந்து, திருநீறும் வில்வமும் அளித்தே, வரும் அன்பர்களின் அரிய நோய்களைத்
தீர்த்து, திருக்கோயில்
பலவற்றிற்குத் திருப்பணி செய்த பெருமையினை உடைய தலம். சுவாமிகளின் சமாதிக் கோயில், திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர் பதிகத்திலும், பெரிய புராணத்திலும், "திருவல்லம்" என்றும், அருணகிரிநாதரின் திருப்புகழில்
"திருவலம்" என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண். 1003
திருமாற்பேறு
உடையவர்தம்
திருவருள்பெற்று
எழுந்துஅருளிக்
கருமாலும்
கருமாவாய்க்
காண்புஅரிய
கழல்தாங்கி
வரும்ஆற்றல்
மழவிடையார்
திருவல்லம் வணங்கி, தம்
பெருமாற்குத்
திருப்பதிகப்
பெரும்பிணையல்
அணிவித்தார்.
பொழிப்புரை : திருமாற்பேற்றில்
வீற்றிருக்கும் இறைவரின் திருவருளைப் பெற்று, அங்கிருந்து எழுந்தருளிச் சென்று, கரிய நிறம் கொண்ட திருமால் பன்றி வடிவு
எடுத்தும் காண இயலாத திரு அடிகளைச் சுமந்து வரும் வலிமை பெற்றுள்ள இளைய விடையை
உடைய இறைவரின், திருவல்லம் என்னும்
பதியினை வணங்கித் தம் இறைவர்க்குத் திருப்பதிகமான மாலையைச் சார்த்தியருளினார்.
1.113 திருவல்லம் பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
எரித்தவன்
முப்புரம் எரியின்மூழ்க,
தரித்தவன்
கங்கையைத் தாழ்சடைமேல்,
விரித்தவன்
வேதங்கள், வேறுவேறு
தெரித்தவன்
உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை :அவுணர்களின்
முப்புரங்களையும் எரியில் மூழ்குமாறு செய்து அழித்தவனும், தாழ்ந்து தொங்கும் சடைமுடிமீது
கங்கையைத் தரித்தவனும், வேதங்களை அருளிச்
செய்தவனும், அவற்றின் பொருள்களை
ஆறு அங்கங்களுடன் தெளியச் செய்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் திருவல்லமாகும்.
பாடல்
எண் : 2
தாய்அவன்
உலகுக்கு, தன்ஒப்புஇலாத்
தூயவன், தூமதி சூடி, எல்லாம்
ஆயவன்
அமரர்க்கும் முனிவர்கட்கும்
சேயவன்
உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை :உலக உயிர்கட்குத்
தாய் போன்றவனும், தனக்கு யாரையும் உவமை
சொல்ல முடியாத தூயவனும், தூய மதியை முடியில்
சூடியவனும், எல்லாப் பொருள்களுமாக
ஆனவனும், போகிகள் ஆன அமரர், மானசீலரான முனிவர் முதலானோர்க்குச்
சேயவனும் ஆன சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.
பாடல்
எண் : 3
பார்த்தவன்
காமனைப் பண்புஅழிய,
போர்த்தவன்
போதகத் தின்உரிவை,
ஆர்த்தவன்
நான்முகன் தலையைஅன்று
சேர்த்தவந்
உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை :மன்மதனின் அழகு
கெடுமாறு நெற்றி விழியால் பார்த்து அவனை எரித்தவனும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், தன்முனைப்போடு ஆரவாரித்த பிரமனின் ஐந்து
தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையினது ஓட்டைக் கையில் உண்கலன் ஆகச்
சேர்த்துள்ளவனும் ஆகிய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.
பாடல்
எண் : 4
கொய்தஅம்
மலர்அடி கூடுவார்தம்
மை,தவழ் திருமகள்
வணங்கவைத்துப்
பெய்தவன்
பெருமழை உலகம்உய்யச்
செய்தவன்
உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை :அன்பர்களால் கொய்து
அணியப்பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களைப் பலரிடத்தும்
மாறிமாறிச் செல்லும் இயல்பினளாகிய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும், பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு
செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.
பாடல்
எண் : 5
சார்ந்தவர்க்கு
இன்பங்கள் தழைக்கும்வண்ணம்
நேர்ந்தவன்
நேரிழை யோடுங்கூடித்
தேர்ந்தவர்
தேடுவார் தேடச்செய்தே
சேர்ந்தவன்
உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை :தன்னைச்
சார்ந்தவர்கட்கு இன்பங்கள் தழைக்குமாறு நேரிய அணிகலன்களைப் பூண்டுள்ள
உமையம்மையாரோடு அருள் வழங்க இசைந்துள்ளவனும் தன்னைச் சேர்ந்த சிவஞானியர்க்கும்
பிறவாறு தேடுபவர்க்கும் அவர்களைத் தேடுமாறு செய்து அவர்கட்கு உள்ளிருந்து அருள்
செய்பவனுமாகிய சிவபெருமானது உறைவிடம் திருவல்லமாகும்.
பாடல்
எண் : 6
பதைத்துஎழு
காலனைப் பாதம்ஒன்றால்
உதைத்து,எழு மாமுனிக்கு
உண்மைநின்று,
விதிர்த்துஎழு
தக்கன்தன் வேள்விஅன்று
சிதைத்தவன்
உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை :சினந்து வந்த எமனை
இடக்காலால் உதைத்துத் தன்னை வணங்கி எழுந்த மார்க்கண்டேயனுக்கு உண்மைப் பொருளாய்
எதிர்நின்று அருள் செய்தவனும், விதிர்த்தெழு
கோபத்தால் படபடத்துத் திட்டமிட்டுச் செயற்பட்ட தக்கனது வேள்வியை முற்காலத்தில்
சிதைத்தவனும் ஆகிய சிவபிரானது இடம் திருவல்லமாகும்.
பாடல்
எண் : 7
* * * * * * * * * *
பாடல்
எண் : 8
இகழ்ந்துஅரு
வரையினை எடுக்கல்உற்றுஆங்கு
அகழ்ந்தவல்
அரக்கனை யடர்த்தபாதம்
நிகழ்ந்தவர்
நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவன்
உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை :இகழ்ந்து அரிய கயிலை
மலையை எடுத்து அப்புறப்படுத்தற் பொருட்டு அகழ்ந்த வலிய இராவணனை அடர்த்த திருவடியை
உடையவனும், அத்திருவடியையே நிகழ்
பொருளாகக் கொண்ட அன்பர்கள் தேடி வருந்திய அளவில் அவர்கள் உள்ளத்திலேயே திகழ்ந்து
விளங்குபவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் திருவல்லமாகும்.
பாடல்
எண் : 9
பெரியவன்
சிறியவர் சிந்தைசெய்ய
அரியவன்
அருமறை அங்கமானான்
கரியவன்
நான்முகன் காணஒண்ணாத்
தெரியவன்
வளநகர் திருவல்லமே.
பொழிப்புரை :எல்லோரினும்
பெரியவனும், அறிவிற் சிறியவர்கள்
சிந்தித்து உணர்தற்கு அரியவனும்,
அரிய
வேதங்களும் அவற்றின் அங்கங்களும் ஆனவனும், திருமால் பிரமர்கள் காண ஒண்ணாதவனாய்
அன்பிற் சிறந்தார்க்குத் தெரிய நிற்பவனும் ஆன சிவபிரானது வளநகர் திருவல்லமாகும்.
பாடல்
எண் : 10
அன்றிய
அமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய
அறவுரை கூறாவண்ணம்
வென்றவன்
புலன்ஐந்தும் விளங்கஎங்கும்
சென்றவன்
உறைவிடம் திருவல்லமே.
பொழிப்புரை :கொள்கைகளால் மாறுபட்ட
சமணர்களும் புத்தர்களும் அறம் குன்றிய உரைகளைக் கூறாவாறு, ஐம்புலன்களையும் வென்றவனும், எங்கும் விளங்கித் தோன்றுபவனும் ஆகிய
சிவபிரான் உறைவிடம் திருவல்லமாகும்.
பாடல்
எண் : 11
கற்றவர்
திருவல்லம் கண்டுசென்று
நல்தமிழ்
ஞானசம் பந்தன்சொன்ன
குற்றம்இல்
செந்தமிழ் கூறவல்லார்
பற்றுவர்
ஈசன்பொன் பாதங்களே.
பொழிப்புரை :கற்றவர்கள் வாழும்
திருவல்லத்தைத் தரிசித்துச் சென்று நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் பாடிய குற்றமற்ற
இச்செந்தமிழ்ப் பதிகத்தைக் கூற வல்லவர்கள் சிவபிரானுடைய அழகிய திருவடிகளை அடைவர்.
திருச்சிற்றம்பலம்
நம்பியாரூரர் பெருமான் திருவல்லத்திற்கு
எழுந்தருளியதாகப் பெரிய புராணத்தின் வாயிலாக அறிகின்றோம். திருப்பதிகம் கிடைக்கப்
பெறாதது நமது தவக்குறைவே.
பெரியபுராணம் -
ஏயர்கோன் கலிக்காம நாயனார்
பெரிய
புராணப் பாடல் எண். 195
மன்னு
திருமாற்பேறு அணைந்து
வணங்கிப் பரவி, திருவல்லம்
தன்னுள்
எய்தி இறைஞ்சிப்போய்,
சாரும் மேல்பால்
சடைக்கற்றைப்
பின்னல்
முடியார் இடம்பலவும்
பேணி வணங்கி, பெருந்தொண்டர்
சென்னி
முகில்தோய் தடங்குவட்டுத்
திருக்கா ளத்தி
மலைசேர்ந்தார்.
பொழிப்புரை : அதன்பின், நிலைபெற்ற திருமாற்பேறு என்னும்
திருப்பதியை அடைந்து வணங்கிப் போற்றி, திருவல்லம்
அடைந்து வணங்கிப் போய், மேற்குப் புறமாக உள்ள
கற்றையாய சடைமுடியையுடைய பெருமான் வீற்றிருக்கும் இடங்கள் பலவற்றையும் விருப்புடன்
வணங்கிச் சென்ற பெரிய தொண்டரான நம்பிகள், முடியின்
மீது முகில் படியும் அகன்ற சிகரங்களுடைய திருக்காளத்தி மலையினைச் சேர்ந்தார்.
No comments:
Post a Comment