அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சருவும்படி
(திருப்பரங்குன்றம்)
முருகா!
திருவடி பெற அருள்வாய்
தனதந்தன
தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன ...... தனதான
சருவும்படி
வந்தனன் இங்கித
மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
தழல்கொண்டிட மங்கையர் கண்களின் ......
வசமாகிச்
சயிலங்கொளு
மன்றல்பொ ருந்திய
பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய
தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட ...... திறமாவே
இரவும்பகல்
அந்தியு நின்றிடு
குயில்வந்திசை தெந்தன என்றிட
இருகண்கள்து யின்றிட லின்றியும் ......
அயர்வாகி
இவணெஞ்சுப
தன்பதன் என்றிட
மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் ......
அடைவேனோ
திருவொன்றிவி
ளங்கிய அண்டர்கள்
மனையின்தயிர் உண்டவன் எண்டிசை
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் ....பயில்வோர்பின்
திரிகின்றவன்
மஞ்சுநி றம்புனை
பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்
செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் ......
மருகோனே
மருவுங்கடல்
துந்திமி யுங்குட
முழவங்கள்கு மின்குமி னென்றிட
வளமொன்றிய செந்திலில் வந்தருள் ......
முருகோனே
மதியுங்கதி
ரும்புய லுந்தின
மறுகும்படி அண்டம்இ லங்கிட
வளர்கின்றப ரங்கிரி வந்தருள் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
சருவும்படி
வந்தனன், இங்கித
மதன் நின்றிட அம்புலியும் சுடு
தழல்கொண்டிட, மங்கையர் கண்களின்
......வசமாகி,
சயிலம்
கொளும் மன்றல் பொருந்திய,
பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய,
தட அம் சுனை துன்றி எழுந்திட ...... திறமாவே,
இரவும்பகல்
அந்தியும் நின்றிடு,
குயில் வந்த்து இதசை தெந்தன என்றிட,
இருகண்கள் துயின்றிடல் இன்றியும், ......
அயர்வாகி,
இவண்
நெஞ்சு பதன் பதன் என்றிட,
மயல் கொண்டு வருந்திய வஞ்சகன்,
இனி உன்தன் மலர்ந்து இலகும் பதம் .....அடைவேனோ?
திரு
ஒன்றி விளங்கிய அண்டர்கள்,
மனையின் தயிர் உண்டவன், எண் திசை
திகழும் புகழ் கொண்டவன், வண்தமிழ் .....பயில்வோர்பின்
திரிகின்றவன், மஞ்சு நிறம் புனை-
பவன், மிஞ்சு திறங்கொள வென்று அடல்
செய துங்க முகுந்தன் மகிழ்ந்து அருள்
....மருகோனே!
மருவும்
கடல் துந்திமியும் குட-
முழவங்கள் குமின் குமின் என்றிட,
வளம் ஒன்றிய செந்திலில் வந்துஅருள்
...முருகோனே!
மதியும்
கதிரும் புயலும் தினம்
மறுகும் படி அண்டம் இலங்கிட
வளர்கின்ற பரங்கிரி வந்துஅருள் ......
பெருமாளே.
பதவுரை
திரு ஒன்றி விளங்கிய --- செல்வம்
பொருந்தி நன்கு விளக்கமுற்றிருந்த,
அண்டர்கள் --- இடையர்களது,
மனையின் தயிர் உண்டவன் --- வீட்டிலே
தயிரை உண்டவரும்;
எண் திசை --- எட்டுத் திசைகளிலும்,
திகழும் புகழ் கொண்டவன் --- விளங்கும்
புகழ் கொண்டவரும்,
வண் தமிழ் --- தெளிந்த தமிழ் மொழியை,
பயில்வோர் பின் --- மேன்மேலும்
பயிலு(கற்)கின்றவர்களின் பின்னே,
திரிகின்றவன் --- (அத் தமிழ்மொழியைக்
கேட்கும் விருப்பத்தால்) திரிகின்றவரும்,
மஞ்சு நிறம் புனைபவன் --- மேகத்தின்
(நீல) நிறத்தைப் பெற்றவரும்,
மிஞ்சு திறம் கொள --- மிகுந்த
வெற்றியின் திறத்தை யடையுமாறு,
வென்று --- போரில் பகைவரை வென்று,
அடல் --- வல்லபமும்,
செய --- வெற்றியும்,
துங்க --- தூய்மை உடையவருமாகிய,
முகுந்தன் மகிழ்ந்து அருள் ---
நாராயணர் மகிழ்ச்சி அடைந்தருளும்,
மருகோனே --- மருமகனாக எழுந்தருளியவரே!
மருவும் கடல் --- அணைந்திருக்கும்
படியான கடல்போன்ற (பெரிய ஓசையையுடைய)
துந்துமியும் --- பேரிப் பறையும்,
குட முழவங்கள் --- குடமுழாக்களும்,
குமின் குமின் என்றிட --- குமின்
குமின் என்று ஒலித்துக்கொண்டிருக்கும்,
வளம் ஒன்றிய --- வளமை பொருந்திய,
செந்திலில் வந்து அருள் ---
திருச்செந்தூரின் கண் எழுந்தருளியுள்ள,
முருகோனே --- முருகப் பெருமானே!
மதியும் கதிரும் புயலும் --- சந்திரனும், சூரியனும், மேகமும்,
தினமும் மறுகும்படி --- சதாகாலமும்
மயங்கும்படி,
வளர்கின்ற --- ஓங்கி உயர்ந்துள்ள,
பரங்கிரி --- திருப்பரங்குன்றமென்கிற
திருத்தலத்திலே,
வந்து அருள் --- அடியார் பொருட்டு
வந்து எழுந்தருளிய,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
சருவும்படி வந்தனன் --- வழுவுவதற்கு வந்தவனாகி,
இங்கித மதன் நின்றிட --- மனத்தின்
நினைவைப் புலப்படுத்தும் மன்மதன் இடையில் நிற்க,
அம்புலியும் சுடுதழல் கொண்டிட --- சந்திரனும்
சுடுகின்ற நெருப்பைப் போல் வெம்மையைக் கொள்ள,
மங்கையர் --- மங்கைப் பருவத்தையுடைய
பெண்களது,
கண்களின் வசமாகி --- பார்வையின்
வசப்பட்டு,
சயிலம் கொளும் --- பொதிய மலையிலுள்ள,
மன்றல் பொருந்திய --- வாசனையோடு கூடிய,
பொழிலின் பயில் --- சோலைகளிலே
சஞ்சரிப்பதாகிய,
தென்றலும் ஒன்றிய --- தென்றல்
காற்றும், குளிர்ச்சிப் பொருந்திய,
தட அம் சுனை --- விசாலமும் அழகும்
உடையதாகிய சுனையிலே,
துன்றி எழுந்திட --- நெருங்கி எழுந்து
வர,
திரமாவே --- உறுதியாக,
இரவும் பகல் அந்தியும் --- இரவிலும்
பகலிலும் மாலைக்காலத்திலும்,
நின்றிடு குயில் வந்து ---
(காமவேட்கையை உண்டு பண்ணவே) நிற்கும் குயிலினம் வந்து,
இசை தெந்தன என்றிட --- தந்தன என்று
இனிய இசை செய்ய,
இருகண்கள் துயின்றிடல் இன்றியும் ---
இருவிழிகளும் உறக்கம் கொள்வதில்லாமலும்,
அயர்வு ஆகி --- தளர்ச்சி உடைந்து,
இவண் நெஞ்சு பதன் பதன் என்றிட --- இவ்விடத்தில்
நெஞ்சமானது பதைபதைப்ப அடைய,
உடல் கொண்டு வருந்திய --- இத் தேகத்தை
அவமே கொண்டு துன்புற்ற,
வஞ்சகன் --- கபடத்தை உடையவனாகிய
அடியேன்,
இனி உன்றன் --- இனியாவது தேவரீரது,
மலர்ந்து இலகும் --- தாமரை மலரைப்போல்
மலர்ந்து விளங்குகின்ற,
பதம் அடைவேனோ --- திருப்பாதங்களைப்
பெற்றிடுவேனோ?
பொழிப்புரை
செல்வம் பொருந்தி மிகவும் விளங்குகின்ற
ஆயர்களது வீட்டில் மிக அருமையாக வைத்துள்ள தயிரை உண்டவரும், எட்டுத் திசைகளிலும் விளங்கும்படியான
புகழ் படைத்தவரும், தெளிவுடையத் தமிழ்
மொழியைப் பழகுவோரது பிறகே அத்தமிழின் மீதுள்ள ஆர்வத்தினால் திரிகின்றவரும், நீலமேகம் போன்ற நிறத்தை உடையவரும், மிகவும் வெற்றித் திறமுடைய போரில்
பகைவரை வென்று, வலியும் வெற்றியும்
தூய்மையும் உடையவரும், முத்தியைத்
தருபவருமாகிய நாராயணமூர்த்தி மகிழ்ந்தருளும் மருகரே!
அண்மையில் அணைந்திருக்கும் கடல் போல்
ஒலிக்கும்படியான துந்துமியும் குடமுழாக்களும் குமின் குமின் என்று முழங்கிக்
கொண்டிருக்கும் வளம் பொருந்திய செந்திமா நகரத்தில் வந்தருளும் முருகப் பெருமானே!
சந்திரனும் சூரியனும் மேகமும்
நாள்தோறும் மனம் மயங்குமாறு ஆகாயம் வரை விளங்கும்படியாக வளர்ந்தோங்கியுள்ள
திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளிய பெருமையிற் சிறந்தவரே!
தழுவுவதற்கு வந்தவனாகி மனக் குறிப்பை
யுணர்த்தும் மன்மதன் மத்தியில் நிற்க, சந்திரனும்
சுடுகின்ற வெப்பமான தன்மையை அடைய,
மங்கையர்களது
கண் வலையில் அகப்பட்டு அதன் வசமாகி,
பொதிகை
மலையில் உள்ள வாசனை பொருந்திய இளஞ் சோலையில் உலவுகின்ற தென்றல் காற்றும்
குளிர்ச்சிப் பொருந்தியதும் விசாலமானதும் அழகியதும் ஆகிய சுனைகளில் படிந்து
குளிர்ச்சியுடன் நெருங்கி எழுந்து வர, இரவிலும்
பகலிலும் அந்தியிலும் காம வேட்கையை உண்டு பண்ணுவதற்காகவே திரமாக நிற்கின்ற
குயிலினம் வந்து தந்தனம் என்று இசையைச் செய்ய, இரு விழிகளிலும் நித்திரையில்லாமலும்
தளர்ச்சியை அடைந்து, இவ்விடத்தில்
நெஞ்சமானது பதைபதைப்பை அடைந்து, அவமே இவ்வுடல்
கொண்டு வருந்திய வஞ்சகனாகிய நாயேன், இனியாவது தேவரீரது
செந்தாமரைப் போல் மலர்ந்து விளங்குகின்ற அருண சரங்களை அடைவேனோ?
விரிவுரை
சருவும்படி........குயில்
வந்திசை தெந்தனவென்றிட ---
காம மிகுதியால் விரகதாபம் கொண்டவர்க்கு
குளிர்ந்த திங்களின் கிரணமும், தென்றலின் குளிர்ந்த
வாடையும், குயில் கூவுதலும்
துன்பஞ் செய்யும். மன்மதனது மலர்க்கணையால் வருந்தி மனம் அழிந்து இங்ஙனம்
துன்பமடைவர்.
“துள்ளுமத வேள்கைக்
கணையாலே
தொல்லைநெடு நீலக் கடலாலே
மெள்ளவரு
சோலைக் குயிலாலே
மெய்யுருகு மானைத் தழுவாயே” --- திருப்புகழ்.
பெண்ணியலார்
இடைப் பிறங்கு காமமும்
உள்நிகழ்
விரகமும் உனக்கும் உண்டு,அதை
எண்ணலை
அழல் சொரிந்து என்னைக் காய்தியால்
தண்ணளி
மதிக்கு இது தகுவதோ என்றான். --- கந்தபுராணம்.
இருகண்கள்
துயின்றிட லின்றியும் ---
காம விகாரத்தால் இரவும் பகலும் உறக்கம் அற்று
உழல்கின்றமையைப் பிறிதோரிடத்திலும் `கங்குல்
பகலென்று நின்று விதியாலே’ என்றனர்.
நெஞ்சு
பதன் பதன் என்றிட ---
ஆசைப் பெருக்கத்தால் நெஞ்சத்தில் அமைதியின்றி
படபட என்று துடிப்பு ஏற்படும். “விரகலீலை ஓர் மிடற்றி லெழும்புள்குகூகுகூ வென”
என்பதையுங் காண்க.
மயல்
கொண்டு வருந்திய வஞ்சகன் ---
மாதராசையால் மதிமயங்கி, வெறி பிடித்தவன் போல் திரிந்து அதனால்
பற்பல இடுக்கண்களுக்கு ஆளாகி, மிகவும் துன்புற்று
வஞ்சகத்தையே நாடியிருப்பவன் என்றனர்.
மலர்ந்து
இலகும் பதம் அடைவேனோ ---
மேற்கூறிய பெருந்துன்பமாகிய மகாமாயையினின்றுந்
தப்புவித்து என்றும் அழியா இன்பத்தை நல்குவது முருகவேளது திருவடியே. ஆதலின் அதனை
இனி அடைவேனோ? என்று கூறினர். அவனது
திருவடி அடைந்தார்க்கே துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் உண்டாகும். ஆபத்து வருங்
காலத்தில் அப்பெருமானுடையத் திருவடியே நமக்குக் காவல் புரியும். “வேதாகமச் சித்ர வேலாயுதன்
வெட்சி பூத்த தண்டை பாதாரவிந்தம் அரண்” என்ற கந்தரலங்காரத் திருவாக்கையும்
நோக்குக.
திருவொன்றி
விளங்கிய அண்டர்கள் ---
கண்ணபிரானுடைய தெரிசனமும் தூய்மையும்
தெய்வபக்தியும் நிறைந்திருந்ததால் ஆயர்பாடியிலுள்ள ஆயர்கள் செல்வத்தால் சிறந்து
விளங்கி யிருந்தார்கள்.
மனையின்
தயிர் உண்டவன் ---
அந்த ஆயர்கள் மிகவும் பக்தியுடையவர்களாக
இருந்து அற வழியில் செல்வம் தேடினார். ஆனபடியால் அவர்கள் வீட்டிலுள்ள அவர்கள்
தயிர் நெய் பாலை அன்புடன் உண்டார்.
“பேசா தேபோய் நின்றுஉரியில்
தயிர்
வாயா வாவா என்று குடித்தருள்
...............................................................
பேயா னாள்போர் வென்றெதி ரிட்டவன் மருகோனே” ---(நேசாசாரா)
திருப்புகழ்.
எண்டிசை
திகழும் புகழ்கொண்டவன் ---
அவதாரந்தோறும் அறமார்க்கத்தினின்றும்
மாறுபட்ட அவுணர்களை அழித்து தருமத்தை நிலை நாட்டுபவரானபடியால் எட்டுத் திசைகளிலும்
திருமால் புகழ் கொண்டுள்ளார்.
வண்தமிழ்
பயில்வோர் பின் திரிகின்றவன் ---
நாராயணமூர்த்தி தமிழ் மொழியின் இனிமையில்
மிகவும் அன்புடையவரான படியால் தெளிவுடைய செந்தமிழைப் பயில்வாரது பிறகே அவர் பாடும்
தமிழ்ப் பாடலைக் கேட்கும் பொருட்டுத் திரிகின்றனர்.
இப்பொழுதும் விஷ்ணு ஆலயங்களில் வடமொழி
வேதபாராயணம் அவருக்குப் பின்னே தொடர்ந்து வர அவருக்கு முன் தமிழ் மொழியிலுள்ள
நாலாயிரப் பிரபந்த பாராயணம் போக,
அதனைத்
தொடர்ந்து நாராயணர் செல்லுகிறார்.
தமிழின் பெருமைதான் என்னே! இத்தனிச் சிறப்பு
எம்மொழிக்குத்தான் உண்டு? அன்பர்கள் நன்கு
கவனிக்க. இத்தகைய சிறப்பு வாய்ந்த நம் தாய்மொழியை அவமதித்து இடர்ப்படுகின்றனர்.
என்னே இவர் மதி?
உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலைசிறந்தது
தமிழ் மொழியே ஆம். இறைவன் அருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே ஆம்.
இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும், பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி
சிவத்தினிடம் சீட்டு எழுதி அனுப்பியது தமிழிலே ஆதலானும், சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும்
அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும், இதன் பெருமை நன்கு விளங்குகின்றது.
முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ். கற்புணையை
நற்புணையாக்கியது தமிழ். எலும்பைப்
பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது
போகச் செய்தது தமிழ். குதிரைச் சேவகனாக
வரச்செய்தது தமிழ். கல் தூணில் காட்சிதரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச்
செய்ய வைத்தது தமிழ். இயற்கையான மொழி தமிழ்.
பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது
தமிழ்.
தமிழ் பாடுவோர் பின்
தாமோதரரர் சென்ற வரலாறு
திருமழிசையாழ்வார் காஞ்சீபுரத்தில்
வரதராஜப் பெருமாளைச் சேவித்துக் கொண்டு தங்கியிருந்த நாளில், ஓர் அன்பர் அவருக்குப் பால் கொண்டு
வந்து கொடுக்க, அதனை ஆழ்வார்
பருகினார். அப்பாத்திரத்தில் எஞ்சி நின்ற பாலை அந்த அன்பர் பிரசாதமாக நினைத்து, தம் மனைவிக்குத் தர, அதனை அவ்வம்மையர் உண்டனர். அதன் காரணமாக
அவர்களுக்கு ஓர் அழகிய புத்திரன் தோன்றினான். அப்புத்திரனுக்கு கணிக்கண்ணன் என்று
பெயர் சூட்டினர். அக்குமாரன் இளம் பருவம் முதல் திருமழிசை ஆழ்வாருக்குத்
தொண்டாற்றி வந்தனன். ஒருநாள் கணிக்கண்ணர் கச்சி வரதருடைய திருவாலயம் சென்று
வரதராஜரைச் சேவித்து, கண்ணுங் கருத்தும்
மகிழ்ந்து ஆலயத்தை வலம் வந்து திரும்புங்கால், அத் திருவாலயத்தில் கைங்கரியம் புரிந்து
கொண்டிருந்த ஒரு கிழவியைக் கண்டனர். அக்கிழவி மிகவும் வயது சென்று, உடல் தள்ளாடி நடுக்குற்றிருந்தும்
சுவாமி கைங்கரியத்திலுள்ள பக்தியால் தன் சிரமம் நோக்காது திருப்பணி செய்து
கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடன் கணிக்கண்ணருக்கு கருணை மேலிட்டது. அந்தோ!
இக்கிழவி உடல் தளர்ந்து துன்புறுகின்றனளே? இளமைப் பருவத்தை அடைந்தாளேயாமாயின்
இன்னும் பகவத் கைங்கரியத்தில் நன்கு ஈடுபடுவாள். “காஞ்சீபுரத்தில் எழுந்தருளியுள்ள
கமலக்கண்ணா! இவ்விருத்தைக்கு நின் திருவருள் உண்டாக வேண்டும்” என்று கூறித் தன்
அருமைத் திருக்கரத்தால் கிழவியின் முதுகைத் தடவினார். உடனே அவள் கிழத் தன்மை மாறி
இளமைப் பருவமடைந்து, கட்டிளங்
குமரியானாள். கரத்திலிருந்த ஊன்றுகோலை எறிந்தனள். கணிக்கண்ணரை வாயார வாழ்த்தினள்.
ஆங்கிருந்தோர் அனைவரும் இவ் வதிசயத்தைக் கண்டு இரும்பூதுற்று கணிக் கண்ணரைப்
புகழ்ந்தனர். கணிக்கண்ணர் குருமகாசந்நிதியை அடைந்தனர். கணிக்கண்ணர் கிழவியைக்
குமரியாக்கின செய்தி காட்டுத் தீப்போல் ஊரெங்கும் விரைவிற் பரவியது.
அக்காலத்து காஞ்சி மாநகரத்தை அரசாண்டு
கொண்டிருந்த பல்லவராயனுக்கு இச்செய்தி தெரிந்தது. வியப்புற்றவனாகிக் கணிக்கண்ணரை அழைத்து
“எனக்குக் கிழத் தன்மை அடைந்திருக்கிறது. அதனை நீக்கி குமரனாகச் செய்யும்”
என்றனர். கணிக்கண்ணர் நகைத்து,
“மன்னா!
கிழத்தன்மையை அகற்றி இளமைப்பருவத்தை அளிக்க என்னாலாகாது” என்றனர். மன்னன் “ஐயா!
ஆலயத்தில் ஒரு கிழவியை நீ முதுகைத் தடவிக் குமரியாகச் செய்தாய் என நகரெங்கும்
கூறுகின்றனர். இப்போது முடியாது என்கிறாய்.
என் முதுகையும் தடவி எனக்குள்ள மூப்புத் தன்மையை நீக்கி இளமைப் பருவத்தை அளிப்பாய்”
என்றனன். கணிக்கண்ணர் “அரசே! என்னே நின் மதி? இக்கிழவியை நானா குமரியாக்கினேன்? என்னால் அணுக் கூட அசையாது. எல்லாம்
ஈசன் செயல். வரதனுடைய கருணையினால் அச்செயல் நிகழ்ந்தது. ஆதலால் நீயும் வரதனை
வேண்டுதல் புரிந்து நின் விருப்பத்தைப் பெறுவாயாக” என்றனர். அதனைக் கேட்ட
பல்லவராயன் முனிவுற்று, “என்னே நின் செருக்கு? பிச்சை எடுத்துத் திரியும் நினக்கு
இத்தனை அகங்காரமா? இக்கணமே இந்த நகரத்தை
விட்டுச் செல்லுதி” என்றனன். கணிக்கண்ணன் முறுவல் புரிந்து, “அறிவிலியே! உன்னை நம்பியோ என்னை
இவ்வுலகில் கடவுள் படைத்தார்? இந்த நகரம் ஒன்று இல்லையேல்
யான் உயிர் வாழ முடியாதோ? ஏனைய நகரங்களை எல்லாம்
கடல் தன்னகத்தே கொண்டு மறைத்ததா?
இக்கணமே
இந்நகரத்தை விட்டு நீங்குகிறேன்” என்று கூறி, அரசவையை விட்டகன்று தனது குருநாதராகிய
திருமழிசையாழ்வார்பால் வந்தனர். குருமூர்த்தியின் திருவடிமேல் வீழ்ந்தனர்.
நிகழ்ந்தது கூறி “அடியேன் இந்நகரத்தை விட்டு நீங்குகிறேன். அனுமதிக்க வேண்டும்” என்று அவர்பால்
விடைபெற்றுப் புறப்பட்டார்.
தம் சீடராகிய கணிக்கண்ணர் சென்றவுடனே அவர்
பிரிவை ஆற்றாத திருமழிசை ஆழ்வார் எழுந்து சீடர் பிறகே செல்வாராயினார். அக்கால்
கச்சி வரதரைக் கண்டு,
“கணிகண்ணன் போகின்றான், காமருபூங் கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா - துணிவொன்றிச்
செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன், நீயும் உன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்”
என்ற
திருப்பாசுரத்தை அருளிச்செய்தனர். இதனைக் கேட்டவுடனே வரதராஜப் பெருமாள், ஆழ்வார் கூறிய வண்ணமே ஆதிசேடனாகிய
பாயலைச் சுருட்டிக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்து சென்றார். பெருமாள் செல்ல அவர்
பின் மகாலட்சுமியும் சென்றனள். காஞ்சிபுரத்தில் சீதேவி அகல மூதேவி வந்து
சேர்ந்தனள். நகரம் பொலிவிழந்தது. நகரமாந்தர்கள் ஓ என்றலறி அரசன்பால் வந்து, “கொற்றவா! என்ன செய்தாய்? அடியாரிடத்தில் அபசாரப்பட்டனையே. நமது
நகரத்திற்கு அழிவு நேர்ந்தது. கணிக்கண்ணரை நகரத்தை விட்டு நீங்குதி என்றனை. அவர்
நீங்க அவருடைய குருமூர்த்தியாகிய திருமழிசையாழ்வாரும் அவர் பிறகே சென்றனர்.
ஆழ்வார் போக, அவர் பிறகே கச்சி
வரதரும் சென்றனர். வரதர் பிறகே வரலட்சுமியும் சென்றனள். காஞ்சிமா நகரத்திற்கே
அழிவு தேடினாய்” என்று ஓலமிட்டனர். அது கேட்ட மன்னன் நடுநடுங்கி “என் செய்தோம்; பெரியோரிடத்தில் பிழை இழைத்தோமே” என்று
மனம் வருந்தி மந்திரிமார்களுடன் சென்று வரதரையும் சீதேவியையும் தொழுது திரும்பி
வருமாறு வேண்டினன். அவர்கள் ஆழ்வார் திரும்பினாலொழிய நாம் திரும்போம் என்றனர்.
அரசர் ஆழ்வாரிடம் சென்று அவர் பாதமலரில் வீழ்ந்து “எந்தையே! நீர்
திரும்புவீரேயாமாகில் வரதரும் சீதேவியும் திரும்பி வருவார்கள். ஆதலால் கருணை
கூர்ந்து வரவேண்டும்” என்றனன். ஆழ்வார் நகைத்து “மன்னா! நமது சீடன் வந்தால் அன்றி
நாம் திரும்போம்” என்றனர். மன்னன் கணிக்கண்ணர் கால்மேல் வீழ்ந்து “ஐயனே! நின்
பெருமையை உணர்ந்தேன். அடியேன் புரிந்த பிழையை மன்னித்தருளல் வேண்டும். நீர் திரும்பினால்தான்
அவர்கள் திரும்புவார்கள். கருணை செய்து நகரத்திற்கு எழுந்தருள வேண்டும்” என்று
குறையிரந்தனன். கணிக்கண்ணர் கருணை கூர்ந்து குருநாதர்பால் வந்து மன்னனை மன்னிக்க
வேண்டுமென்று கூறி நகரத்திற்கு திரும்பினர். சீடன் திரும்பவே ஆழ்வாரும்
திரும்பினார். உடனே ஆழ்வார் வரதரை நோக்கித் தான் கூறிய வெண்பாவைத் திருப்பிப்
பாடினார்.
“கணிகண்ணன்
போக்கொழிந்தான் காமருபூங் கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும்-துணிவொன்றிச்
செந்நாப் புலவோன்யான் செலவொழிந்தேன், நீயும் உன்றன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்”
என்று
பாடியவுடனே பெருமாள் சீதேவியுடனே சென்று ஆலயத்தில் பன்னகப் பாயலை
விரித்தமர்ந்தனர்.
இதனால் பெருமாளுக்குச் “சொன்னவண்ணஞ் செய்த
பெருமாள்” என்று ஒரு திருநாமம் வழங்குகிறது. வடமொழியில் “யதோத்தகாரி” என்பர்.
இவ்வாலயத்தை காஞ்சீபுரத்தில் இன்றும்
காணலாம். பெருமாளும் ஆழ்வாரும் கணிகண்ணரும் போய் ஓரிரவு தங்கியிருந்த ஊருக்கு "ஓரிரவிருக்கை"
என்று பெயர். இவ்வூர் காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கிறது. இதனைக் குமரகுருபர
சுவாமிகளும், தாம் பாடி அருளிய
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில், எடுத்து
வியந்துள்ளார்.
“பணிகொண்ட துத்திப் படப்பாய்ச்
சுருட்டுப்
பணைத்தோள் எருத்து அலைப்பப்
பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே”
“இனிய பாவல
னுரையினிலொழுகிய கடவுள்” ---(முருகுலாவிய) திருப்புகழ்.
செய்துங்கன் ---
“நீடிய
அவுணர் சேனை நீறுபட்டழிய, வாகை சூடிய சிலை”யைத்
தாங்கியுள்ளதால் நாராயணரைத் தூய்மையான வெற்றியை உடையவர் என்றனர்.
மருவுங்கடல்...............செந்தில் ---
செந்திமா நகரத்தில் எக்காலத்தும் மங்கல
வாத்தியங்களின் ஒலிகள் கடல்போல் முழங்கிக் கொண்டிருக்கின்றன.
“மங்கல மங்கலநூல்
எங்கு மொழிந்தனர்காண்
வானோ ரேனோர் போய்
வந்து
வணங்கினர் மே லந்தர துந்துபிகேள்” ---பகழிக்கூத்தர்
மடியுங்கதிர்............பரங்கிரி ---
திருப்பரங்குன்றம், சந்திரசூரியரும் மேகங்களும் நாள்தோறும்
செல்வதற்கு வழித் தடைப்பட்டு மனம் சுழற்சியை அடையும்படி வானளாவி ஓங்கியுள்ளது
என்கிறார்.
கருத்துரை
திருமாலின் திருமகரே! கடல்போல் மங்கல
வாத்தியங்களின் ஒலிமிகுந்துள்ள செந்திலம்பதியில் எழுந்தருளிய முருகக்கடவுளே!
வானளாவிய திருப்பரங்குன்றத்தில் வாசஞ் செய்கின்ற பெருமாளே! மன்மதனாலும், சந்திரனாலும், தென்றலாலும், குயிலினத்தாலும் ஆசைப் பெருக்கத்தை
யடைந்து அயர்வுற்று வருந்திய அடியேன் இனித் தேவரீரது திருவடியை அடைவேனோ?
No comments:
Post a Comment