திருப்பரங்குன்றம் - 0013. சந்ததம் பந்த




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சந்ததம் பந்த (திருப்பரங்குன்றம்)

முருகா!
ஞானக் காண்ணால் தேவரீரைக் கண்டு மகிழ அருள்வாய்

தந்தனந் தத்தத் ...... தனதான
     தந்தனந் தத்தத் ...... தனதான


சந்ததம் பந்தத் ...... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே

கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா

செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சந்ததம் பந்தத் ...... தொடராலே,
     சஞ்சலம் துஞ்சித் ...... திரியாதே,

கந்தன் என்று என்று உற்று ...... உனைநாளும்
     கண்டுகொண்டு அன்பு உற் ...... றிடுவேனோ?

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே!
     சங்கரன் பங்கில் ...... சிவைபாலா!

செந்தில் அம் கண்டிக் ...... கதிர்வேலா!
     தென்பரங் குன்றில் ...... பெருமாளே.


பதவுரை


      தந்தியின் கொம்பை புணர்வோனே --- ஐராவதம் என்ற யானையினால் வளர்க்கப்பெற்ற பூங்கொம்பு போன்ற தேவயானை அம்மையைத்  தழுவுகின்றவரே!

      சங்கரன் பங்கில் சிவை பாலா --- சிவபெருமானுடைய பக்கத்தில் விளங்குகின்ற உமாதேவியாருடைய திருக்குமாரரே!

       செந்தில் அம் கண்டி கதிர்வேலா --- திருச்செந்தூரிலும், அழகிய கண்டி என்ற திருத்தலத்திலும் எழுந்தருளியுள்ள ஒளிபெற்ற வேலாயுதரே!

      தென் பரங்குன்றில் பெருமாளே --- தென்னாட்டிலே விளங்கும் திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளிய பெருமையின் மிக்கவரே,

      சந்ததம் பந்த தொடராலே --- நாள்தோறும் ஆசையாகிய கட்டுப்பாட்டின் தொடர்ச்சியினால்,

     சஞ்சலம் துஞ்சித் திரியாதே --- துன்பத்தை அடைந்து சோர்ந்து அடியேன் உழலாத வண்ணம்,

     கந்தன் என்று என்று உற்று --- கந்தக் கடவுளே பரம்பொருள் என்று உணர்ந்து உமது திருவடியடைந்து,

     உனை நாளும் --- தேவரீரையே சதாகாலமும்,

     கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ --- அறிவுக் கண்ணால் தெரிசித்து அன்பு செய்யவேண்டும்.


பொழிப்புரை


         ஐராவத யானை வளர்த்த தெய்வயானையம்மையின் கணவரே!

         சிவபிரானுடைய ஒரு பாகத்தில் அமர்ந்த உமையம்மையின் திருக்குமாரரே!

         திருச்செந்தூரிலும் அழகிய கண்டியிலும் வாழும் கதிர்வேலவரே!

         தென்னாட்டில் உள்ள திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே!

         நாள்தோறும் ஆசைக் கட்டுப்பாட்டினால் துன்புற்று வாடித் திரியாதபடி, கந்தவேளே பரம்பொருள் என்று தெளிந்து உம்மைச் சரணாகதியடைந்து, சதாகாலமும் ஞானவிழியால் உம்மைக் கண்டு அன்பு செய்ய வேண்டும்.

      
விரிவுரை


சந்ததம் பந்தம் தொடராலே ---

பந்தம் --- கட்டு, உயிர்களாகிய நாம் கட்டுண்டு கிடக்கின்றோம். அதனால் பசு எனப்பட்டோம்,

பச் --- கட்டு. கட்டப்பட்டதனால் பசு. நமக்குத் தலைவன் பசுபதிநாதர்.

பசுவை ஒரு கயிற்றால் கட்டுவார்கள்.

யானையை இரு சங்கிலிகளால் கட்டுவார்கள்.

குதிரையை மூன்று கயிறுகளால் கட்டுவார்கள்.

ஊஞ்சலை நான்கு சங்கிலிகளால் கட்டுவார்கள்.

ஆன்மாக்களாகிய நாம் ஐந்து சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கின்றோம்.

கயிறு அதிகம் இருப்பதனால் நம்முடைய முரட்டுத்தனம் அதிகம் என்று விளங்குகின்றதல்லவா?

நான்கு சங்கிலிகளால் கட்டப்பட்ட ஊஞ்சல். ஊஞ்சல் அப்படியும் இப்படியும் ஆடிக்கொண்டே இருக்கின்றது.

அதுபோல் உயிர்களாகிய நாம் சுவர்க்கம், பூதலம், நரகம் என்ற மூன்று இடங்கட்கும் மாறிமாறிச் செல்வதும் வருவதுமாகவே பல்லூழி காலமாக ஆடிக் கொண்டிருக்கின்றோம்.

கல்யாணம் ஆனவுடனே ஊஞ்சலில் அமர்த்துகின்றார்களே? அதன் உட்பொருள் யாது? இப்படி நீங்கள் ஆடிக்கொண்டே இருக்கின்றீர்கள் என்பது தான்.

மட்டுஊர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு ஊசல் படும் பரிசு என்று ஒழிவேன்?”

என்று கந்தர் அநுபூதியில் அருணகிரிநாத சுவாமிகள் இறைவனிடம் கூறி முறையிடுகின்றார்.

ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஓய்வு தர எண்ணிய ஒரு அருளாளன் ஒரு பெரிய கத்திரிக்கோல் கொணர்ந்து நான்கு சங்கிலிகளையும் கத்தரித்து விட்டான். உடனே ஊஞ்சல் தன் ஆட்டத்தை விடுத்து நேரே நிலத்தை அடைந்து அமைதி பெறுகின்றது.

அதுபோல் ஞானாசிரியர் ஞானவாளால் நமது பஞ்ச மலங்களையும் சேதித்தவுடனே, நாம் இறைவன் திருவடியில் வீழ்ந்து ஓய்வு பெறுகின்றோம். இந்த இனிய கருத்தை அப்பர் பெருமான் விளக்கமாகக் கூறுகின்றார்.

உறுகயிறு ஊசல் போல, ஒன்றுவிட்டு ஒன்று பற்றி
மறுகயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம்,
பெறுகயிறு ஊசல் போலப் பிறைபுல்கு சடையாய்! பாதத்து
அறுகயிறு ஊசல் ஆனேன் அதிகைவீ ரட்ட னீரே.

பஞ்சமலங்கள் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதம் என்பன.

இவற்றையெல்லாம் ஒன்றுகூட்டி ஆசையாகிய சங்கிலி என்று கூறுகின்றார் அடிகளார் அநுபூதியில்.

ஆசாநிகளம் துகளாயின பின்பேசா அநுபூதி பிறந்ததுவே”

சஞ்சலம் துஞ்சித் திரியாதே ---

ஆகையால் ஆன்மாக்கள் சதா துன்புற்று, உள்ளம் ஒடிந்து, உணர்வு மடிந்து உழல்கின்றன.

கந்தன் என்று என்று உற்று உனை ---

கந்து --- யானை கட்டுந் தறி; அன் - ஆண்பால் ஒருமை விகுதி.

கந்தன் --- பற்றுக்கோடாகத் திகழ்பவன். ஆன்மாக்களுக்குப் பற்றுக்கோடாகத் திகழ்பவர் முருகவேள்.

உயிர்களுக்கு உறுதுணையாக விளங்குபவன் கந்தன். கலியாண வீட்டின் முன் பந்தல் இடுவார்கள். அப்பந்தலின் கால்களைப் பிள்ளைகள் பிடித்துச் சுழன்று சுழன்று விளையாடுவர். ஆளுக்கு ஒரு தூணைப் பற்றிக்கொள்ள, ஒரு குழந்தைக்கு தூண் இல்லை. தூணைப் பற்றாததனால் அது சும்மாவே சுற்றியது. மயக்கமுற்றுக் கீழே விழுந்து மண்டை உடைந்தது. தூணைப் பற்றிக்கொண்டு சுற்றுகின்ற குழந்தைகள் மயக்கம் வந்தாலும் தூணைப்பற்றி இருப்பதனால் கீழே விழாமல் உய்வு பெறுகின்றன. அது போல் இறைவன் திருவடியைப் பற்றிக்கொண்ட ஆன்மாக்களுக்கு, உலக வாழ்வில் மாயையால் மயக்கம் ஏற்படினும் உய்வு கிடைக்கும். இறைவனுடைய திருவடியைப் பற்றாமல் திரியும் ஆன்மாக்கட்கு உய்வு இல்லை. திருநீலகண்டம் என்ற திருநாமத்தைப் பற்றிய நாயனார் சிறிது உலக இன்பத்தில் மயங்கிய போதும் அதே நாமத்தினால் தெளிவு பெற்று மயங்காது ஆரும் பெறாத அருள் பெற்று உய்ந்தார்.

இருளிடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவதினியே” என்கிறார் மணிவாசகப் பெருமானார்.

தந்தி ---

தந்தி --- யானை. தந்தத்தை உடையதால் சினையாகு பெயராக யானை தந்தியெனப்பட்டது. இது ஆண் யானையைக் குறிக்கும்.

திருமாலின் கண்ணில் பிறந்த அமுதவல்லி, தானே ஒரு குழந்தையாக வடிவெடுத்து, இந்திரன் பால் செல்ல சூரபன்மனுக்கு ஆற்றாது ஒளிந்திருந்த இந்திரன், அக்குழவியைத் தன் ஊர்தியாகிய ஐராவதயானை பால் கொடுத்து வளர்க்கச் செய்தான்.

அந்த ஐராவத யானை நம்பிக்கையோடு தும்பிக்கையில் எடுத்துக் கொண்டு போய் சத்தியவுலகில் மனோவதி நகரின் சார்பில் உள்ள கற்பகவனத்தில் வளர்த்தது. அதனால் அம்மட மங்கை தெய்வயானை என்ற திருப்பேர் பெற்றாள்.

சூரசங்காரத்துக்குப் பின், திருப்பரங்குன்றத்தில் தேவரும் மூவரும் வணங்கித் துதி செய்ய திருவேலிறைவன் தெய்வயானையம்மையைத் திருமணஞ் செய்து கொண்டருளினார்.

கருத்துரை

         திருப்பரங்குன்றத்தில் மேவும் திருமுருகா! உன்னை ஞானக் கண்களால் காண அருள் புரிவாய்.


                 

No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...