பாடல் 17 - கருதிய நூல்




கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்,
     கணக்கு அறிந்து பேசாதான் கசடன் ஆகும்,
ஒரு தொழிலும் இல்லாதான் முகடி ஆகும்,
          ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்,
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்
          பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும்,
பரிவு சொலித் தழுவினவன் பசப்பன் ஆகும்
          பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவி ஆமே. 17.

     பெரியோர்களால் உயர்வாகக் கருதப்பட்ட அறநெறி நூல்களைக் கல்லாதவன் அறிவு இல்லாதவன் ஆவான். (உலகியல் நூல்கள் உள்ளத் தடுமாற்றத்தைப் போக்க மாட்டா. எனவே, ஒருவன் அறிவு நூல்களைக் கற்கவேண்டும்)

     பேச வேண்டிய முறைமை அறிந்து, பேச அறியாதவன் இழிந்தவன் ஆவான்.

     ஒரு தொழிலையும் மேற்கொள்ளாதவன் மூதேவி ஆவான்.

     எந்த ஒரு செயலுக்கும் உதவாதவன் சோம்பேறி ஆவான்.

     சகல கலைகளையும் அறிந்த பெரியோர்கள் எதிரே நின்று, ஆடாமல் அசையாமல் மலத்தைப் போல இருப்பவன் பேய் பிடிப்புண்டவன் ஆவான். (கவையாகி, கொம்பு ஆகி, காட்டு அகத்தே நிற்கும் அவை அல்ல, நல்ல மரங்கள். சபை நடுவே நீட்டு ஒலை வாசியா நின்றான், குறிப்பு அறிய மாட்டாதவன் நல் மரம் என்றார் ஔவையார்.)

     உள்ளன்பு இல்லாமல், வாய் அளவில் மாத்திரம் அன்பான சொற்களைக் கூறி, மிக்க அன்பு உடையவனைப் போலத் தழுவியவன் ஏமாற்றுக்காரன் ஆவான்.

     பசித்து வந்தோருக்குத் தன்னிடம் உள்ளதை இட்டு, உண்ணாதவன் பாவம் செய்தவன் ஆவான்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 21

"சொல்லால் வரும்குற்றம், சிந்தனையால் வரும் தோடம், செய்த பொல்லாத தீவினை, பார்வையில் பாவங்கள், புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீ...