தாங்க
ஒணா வறுமை வந்தால்
சபைதனில் செல்ல நாணும்,
வேங்கை
போல் வீரம் குன்றும்,
விருந்தினர் காண நாணும்,
பூங்கொடி
மனையாட்கு அஞ்சும்,
புல்லருக்கு இணங்கச் செய்யும்,
ஓங்கிய
அறிவு குன்றும்,
உலகெலாம் பழிக்கும் தானே. 18.
ஒருவனுக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத வறுமை
வந்து சேர்ந்தால், அவன், (தகுந்த ஆடை அணிகலன்கள் இல்லாததால்,) உயர்ந்தோர்
கூடியுள்ள சபைக்குப் போவதற்கு நாணப்படுவான்.
அவன் முன்னே கொண்டு இருந்த வேங்கைப் புலி
போன்ற வீரத் தன்மையானது குன்றிப் போகும்.
விருந்தினரைத் தக்கவாறு உபசரிக்கும் நிலை
இல்லாததால், விருந்தினரைக் கண்டாலே நாணப்படுவான்.
மலர்க் கொடி போன்ற மனையாளுக்கும் அவன் அஞ்ச
வேண்டி வரும்.
அந்த வறுமையானது அவனை, கீழ்மக்களோடு இணக்கம்
கொள்ளச் செய்யும்.
அவனிடத்தே முன்பு மிகுந்து இருந்த அறிவானது,
இப்போது குன்றிப் போகும்.
உலகில் உள்ளவர்கள் அவனை நிந்தித்துப்
பேசுவார்கள்.
திருவள்ளுவ
நாயனார், இந்த வறுமை குறித்து, நல்குரவு என்று ஒரு அதிகாரத்தையே வைத்து உள்ளார். வறுமை என்று சொல்லப்படுகின்ற ஒற்றைத்
துன்பத்துள், பல வகையாகச் சொல்லப்படுகின்ற துன்பங்கள் அனைத்தும் ஒருங்கு சேர்ந்து
உண்டாகும் என்கின்றார்.
நல்குரவு
என்னும் இடும்பையுள், பல்குரைத்
துன்பங்கள்
சென்று படும்.
என்பது
திருக்குறள்.
வறுமை காரணமாக உணவு கிடைக்காமல், பசி நோய்
வந்துவிட்டால், தன்மானமும், குடிப்பெருமையும், கல்வியும், கொடையும், அறிவு
உடைமையும், தானமும், தவமும், பெருமையும், தொழிலில் ஈடுபடும் முயற்சியும், தேன்
கசிவது போன்ற இனிமையான சொற்களை உடைய மங்கையர் மீது விருப்பம் கொள்ளுதலும், ஆகிய
இவை பத்தும் இல்லாமல் போய்விடும் என்கின்றார் ஔவையார்.
மானம்
குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம்
தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த
சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி
வந்திடப் பறந்து போம். --- ஔவையார்.
குசேல உபாக்கியானம் சொல்வதைக் காண்போம்.....
தரித்திரம்
மிக்க வனப்பினை ஒடுக்கிச்
சரீரத்தை உலர்தர வாட்டும்,
தரித்திரம்
அளவாச் சோம்பலை எழுப்பும்,
சாற்றஅரும் உலோபத்தை மிகுக்கும்,
தரித்திரம்
தலைவன் தலைவியர்க்கு இடையே
தடுப்ப அரும் கலாம்பல விளைக்கும்,
தரித்திரம்
அவமானம் பொய் பேராசை
தரும் இதில் கொடியது ஒன்று இலையே.
வறுமையானது மிகுந்த அழகைக் கெடுத்து உடம்பினை மெலியும்படி
வருத்தும்,
வறுமையானது அளவிடப்படாத சோம்பலை உண்டாக்கும், சொல்லுதற்கரிய உலோபத் தன்மையை மிகச் செய்யும்.
வறுமையானது கணவன் மனைவியர்க்குள் தடுத்தற்தகு
அரிய பல கலகங்களை உண்டாக்கும்.
வறுமையானது மானம் இழத்தல், பொய் பேசுதல், பேராசை
கொள்ளுதல்
முதலியவற்றை உண்டாக்கும்.
(ஆதலால்) இவ்வறுமையில் கொடியது வேறு ஒன்று இல்லை.
தரித்திரம்
களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை,
சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம்,
தரித்திரம்
பற்பல் துக்கமும் தோன்றத்
தக்க பேர் ஆகரம் என்ப,
தரித்திரம்
நன்மை சால் ஒழுங்கு என்னும்
தழைவனம் தனக்கு அழல் தழலாம்,
தரித்திரங்
கொடிய எவற்றினும் கொடிது, அத்
தகையதை ஒழித்தல் நன்று ஆமே.
வறுமையானது மகிழ்ச்சியாகிய கடலினுக்கு வடவைத்
தீயாகும்;
சொல்லப்பட்ட பல எண்ணங்களுக்கு உறைவிடம் ஆகும்;
வறுமையானது பலப்பல துன்பங்களும் பிறத்தற்கு இடமாகும்
என்பர்;
வறுமையானது நன்மை மிகுந்த ஒழுக்கம் என்ற செழித்த
சோலையை எரிக்கும் தீ ஆகும்;
தரித்திரம் கொடிய வெற்றினும் கொடியது.
அத்தன்மை உள்ள வறுமையை நீக்குவதே நன்மையாகும்.
அருணகிரிநாதப் பெருமான் கந்தர் அநுபூதியில் பாடியுள்ளதைக்
காண்க.
வடிவும்
தனமும் மனமும் குணமும்
குடியும்
குலமும் குடிபோ கியவா
அடி
அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி
என்று ஒரு பாவி வெளிப்படினே.
பிறப்பும்
இறப்பும் இல்லாத வேலாயுதப் பெருமானே, வறுமை
என்கிற பாவி பிடித்துவிட்டால், ஒருவனுடைய அழகும் சமூகத்தில்
அவன் கொண்டிருக்கும் உயர் நிலையும் நல்லொழுக்கமும், பரம்பரை கெளரவமும், நீங்கி விடுகின்றனவே. இது என்ன ஆச்சரியம்.
வறுமை
ஆகிய தீயின்மேல் கிடந்து
நெளியும் நீள்புழு ஆயினேற்கு இரங்கி
...... அருள்வாயே.
--- (அறிவிலாதவர்) திருப்புகழ்.
"கொடிது கொடிது வறுமை கொடிது" என்றார் ஔவையார்.
No comments:
Post a Comment