பாடல் 19 - அரும்பு கோணிடில்




அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ?
கரும்பு கோணிடில் கட்டியும் பாகும் ஆம்,
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்,
நரம்பு கோணிடில் நாம் அதற்கு என் செய்வோம்?  19.

     மலர் அரும்பானது கோணினால், அந்த அரும்பானது தனது மணத்தில் குறையுமோ? குறையாது.

     கரும்பு கோணினால், அது சுவை உள்ள வெல்லக் கட்டி ஆகவும், வெல்லப் பாகு ஆகவும் பயன்படும்.

     இரும்பானது வளைந்து அங்குசம் ஆனால், அதைக் கொண்டு அடங்காத யானையையும் அடக்கலாம்.

     ஆனால், உடலில் உள்ள நரம்பானது கோணி, ஒருவனுக்கு மரணம் சம்பவிக்குமானால், அந்த உடல் ஒன்றுக்கும் உதவாது. உடம்பு அவ்வாறு ஆனதை எந்த உபாயத்தால் சீர் செய்வோம்.  எதுவும் செய்ய இயலாது.

     உடம்பு உள்ளபோதே, நல்லறம் செய்து பயன் பெற வேண்டும் என்று சொல்லப்பட்டது.  "ஈதல், இசைபட வாழ்தல் அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" என்றார் திருவள்ளுவ நாயனார். பூமி பாரங்களாக வாழ்தல் கூடாது.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 21

"சொல்லால் வரும்குற்றம், சிந்தனையால் வரும் தோடம், செய்த பொல்லாத தீவினை, பார்வையில் பாவங்கள், புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீ...