4. உடன் பிறப்பு
கூடப்
பிறந்தவர்க்கு எய்து துயர் தமது துயர்,
கொள் சுகம் தம் சுகம்எனக்
கொண்டு, தாம் தேடு பொருள்
அவர் தேடு பொருள்,
அவர்கொள் கோதில் புகழ் தம் புகழ் எனத்,
தேடுற்ற
அவர் நிந்தை தம் நிந்தை,
தம்
தவம்
தீதில் அவர் தவமாம் எனச்
சீவன் ஒன்று உடல் வேறு இவர்க்கு என்ன, ஐந்தலைச்
சீறுஅரவம் மணிவாய் தொறும்
கூடு
உற்ற இரை எடுத்து ஓர்உடல் நிறைத்திடும்
கொள்கை போல், பிரிவு இன்றியே
கூடி வாழ்பவர் தம்மையே சகோதரர் எனக்
கூறுவதுவே தருமமாம்;
ஆடிச்
சிவந்த செந்தாமரைப் பாதனே!
அண்ணல் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
இதன் பொருள் ---
ஆடிச் சிவந்த செந்தாமரைப் பாதனே --- திருச்சிற்றம்பலத்திலே
அனவரத ஆனந்தத் தாண்டவம் புரிந்து சிவந்த செந்தாமரை மலர்ப் பாதங்களை உடையவனே!
அண்ணல் எமது அருமை மதவேள் அனுதினமும் மனதில்
நினைதரு --- தலைவனாகிய எம் அரிய மதவேள் நாள்தோறும் உள்ளத்தில் வழிபடுகின்ற,
சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர
கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
கூடப் பிறந்தவர்க்கு எய்துதுயர் தமது துயர்
கொள் சுகம் தம் சுகம் என --- தன் உடன் பிறந்தவர்களுக்கு நேர்ந்த வருத்தம் தமது
வருத்தம் என்றும், அவர்கள் அனுபவிக்கும் இன்பம் தமது இன்பம் என்றும்,
தாம் கொண்டு தேடு பொருள் அவர் தேடு பொருள், அவர்கொள் கோதுஇல் புகழ் தம்புகழ் என ---
தாம் முயன்று சேர்க்கும் பொருள் அவர்கள் சேர்க்கும் பொருள் என்றும்,
அவர்கள்
கொண்ட குற்றமற்ற புகழ் தம்முடைய புகழ் என்றும்,
அவர் தேடு உற்ற நிந்தை தம் நிந்தை, தம் தவம் தீதுஇல் அவர் தவமாம் என ---
அவர்கள் மீது வந்த பழிதயானது தமக்கு வந்த பழி என்றும், தம்முடைய தவம் குற்றமற்ற
அவருடைய
தவமாகும் என்றும்,
இவர்க்குச் சீவன் ஒன்று உடல்வேறு என்ன ---
இவர்களுக்கு உயிர் ஒன்று, உடம்பு மட்டும் வேறு
என்று எண்ணும்படியும்,
சீறு அரவம் மணி ஐந்தலை வாய் தொறும் கூடு உற்ற
இரை எடுத்து ஓர் உடல் நிறைத்திடும் கொள்கைபோல் --- சீறுகின்ற பாம்பின்,
மாணிக்கங்களையுடைய ஐந்து தலைகளிலும் உள்ள வாய்தோறும் கிடைத்த உணவை எடுத்து உண்கிறது, எந்த வாயில்
உணவை எடுத்தாலும், உள்ளே சென்று ஓர் உடலையே நிறைக்கின்ற இயற்கை போலவும்,
பிரிவே இன்றி - பிரிவு என்பதே இல்லாமல்,
கூடி வாழ்பவர் தம்மையே சகோதரர் எனக்
கூறுவதுவே தருமம் ஆம் --- (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும், தாழ்விலும்) ஒன்று
கூடி வாழ்கின்றவர்களையே உடன் பிறந்தோர் என்று கூறுவது அறமாகும்.
சக + உதரர் = சகோதரர். உதரம் - வயிறு. ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களை உடன் பிறந்தோர்
என்று சொல்லுவர். ஒரு தாயின் வயிற்றில் பிறந்து விட்டாலே சகோதரர் என்று கொள்ள முடியாது.
மேற்குறித்த பண்புகள் அமைந்து இருக்க வேண்டும். இல்லாமல் போனால், அவரைப் "பங்காளி"
என்றே சொல்லலாம். "சகோதரர்" என்று கொள்ள வேண்டாம்.
No comments:
Post a Comment