திருச் செம்பொன்பள்ளி
(செம்பனார்கோயில்)
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
மக்கள் வழக்கில் "செம்பனார் கோயில்"
என்று வழங்கப்படுகின்றது.
மயிலாடுதுறையில் இருந்து பொறையாறு
செல்லும் பேருந்துப் பாதையில் 10 கி.மீ. தொலைவில்
இத்திருத்தலம் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.
இறைவர்
: சொர்ணபுரீசுவரர், தேவப்பிரியர், சுவர்ணலட்சுமீசுவரர்,
செம்பொன்பள்ளியார்.
இறைவியார் : மருவார்குழலி, புஷ்பாளகி, தாட்சாயணி, சுகுந்தகுந்தளாம்பிகை, சுகந்தவனநாயகி.
தல
மரம் : வன்னி, வில்வம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், காவிரி.
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - மருவார் குழலி
2.
அப்பர் -1. ஊனினுள்
ளுயிரை
2.
கானறாத
கடிபொழில்.
பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன் தன்
மகள் தாட்சாயினியை இறைவன் சுவர்ணபுரீசுவரருக்கு மணமுடித்து தருகிறான். பின் ஒரு
சமயம் தட்சன் தனது அகந்தை காரணமாக தான நடத்தும் ஒரு யாகத்திற்கு சிவனை
அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயினி
இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது தட்சன் ஆணவத்தினால் சிவனையும்
சக்தியையும் நிந்தித்து விடுகிறான். தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம்
அழிந்து போகட்டும் என்று சாபம் இடுகிறார். அத்துடன் சிவனிடம் தட்சனை தண்டிக்கும்படி
வேண்டுகிறார். சிவனும் வீரபத்திரர்,
பத்திரகாளி
ஆகியோரை தோற்றுவித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்ஹாரம் செய்து விடுகிறார்.
தாட்சாயிணியும் சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில்
பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். சிவபெருமான் தாட்சாயிணியை மன்னித்து
மருவார் குழலியம்மை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் 'என்னருகில் இருந்து அருளாட்சி செய்' என்று அருள்பாலிக்கிறார். இத்தலம்
தாட்சாயணிக்கு அருள்புரிந்ததும்,
வீரபத்திரர்
தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.
இலட்சுமி இத்தல இறைவனை வழிபட்டு
திருமாலைத் தன் கணவனாக அடைந்ததாள். எனவே இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்ற பெயர்
வந்தது. இந்திரன் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து
விருத்திராசூரனை வெல்ல வச்சிராயுதம் பெற்றான். இதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற
பெயரும் உண்டு. முருகப்பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால்
இத்தலத்திற்கு கந்தபுரி என்றும் பெயர் உண்டு. வட்டவடிவமான ஆவுடையார் மேல் இலிங்க
உருவில் எழுந்தருளியுள்ள இத்தல மூர்த்தியான சுவர்ணபுரீசுவரர் திருமாலால்
பூஜிக்கப்பட்டவர்.
கோச்செங்கட்சோழ நாயனாரால் திருப்பணி
செய்யப்பட்ட இவ்வாலயம் கிழக்கு நோக்கிய திருவாயிலுடன் காணப்படுகிறது. கீழே
பதினாறும் மேலே பதினாறும் இதழ்களையுடைய தாமரை போன்ற ஆவுடையில் மூலவர் சுயம்பு இலிங்கத்
திருமேனியராக காட்சி தருகிறார்.
கோஷ்ட மூர்த்தங்களாக இந்திர கணபதி, தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், துர்க்கை ஆகியோரைக் காணலாம், மகாமண்டபத்தில் விநாயகர், சூரிய சந்திர லிங்கங்கள், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.
இங்குள்ள பிட்சாடனத் திருக்கோலம் மிகப்பழைமையானது.
அம்பாள் தெற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி
தருகிறாள். அம்பிகைக்கு ஆலயத்தின் தென்மேற்கில் சப்தகன்னிகையர் கோயில் உள்ளது.
மேற்கில் தலவிநாயகர் பிரகாசப் பிள்ளையார்
உள்ளார். மற்றும் வனதுர்க்கை, விசுவநாதர், சீனிவாசப் பெருமாள், சிபிகாட்சிநாதர் எனப்படும்
மான்மழுவேந்திய சிவபெருமான், உருத்திராக்கமாலையும்
சக்தி ஆயுதம் தரித்த நான்கு கைகளையுடைய பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, வீரபத்திரர், சூரியர், பைரவர் முதலிய மூர்த்தங்களும் ஆலயத்தில்
உள்ளன. நவக்கிரக தோஷத்திற்கு இத்தல வழிபாடு சிறந்த பரிகாரமாக இன்றும்
சொல்லப்படுகிறது. இத்தலத்தில் துர்க்கை வழிபாடு விசேஷமானது.
கோயிலுக்கு அருகில் ஆலயத்தின் தீர்த்தம்
சூரிய தீர்த்தம் உள்ளது. சித்திரை மாத அமாவாசையிலும், வைகாசியிலும் இங்குள்ள தீர்த்தத்தில்
நீராடினால் சகல பாவங்களும் விலகும் என்று நம்பப்படுகின்றது. சுவாமி அம்பாள்
சந்நிதிகளிடையே உள்ள வன்னி மரமும்,
வடக்குச்
சுற்றில் உள்ள வில்வ மரமும் இவ்வாலயத்தின் தலவிருட்சங்கள்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், நெறி கொண்டே அன்பு அள்ளி ஓங்கும் அறிவு உடையோர் வாழ்த்தும் செம்பொன்பள்ளிவாழ்
ஞான போதமே" என்று போற்றி உள்ளார்.
காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 438
மல்கு
தண்டலை மயிலாடு துறையினில் மருவும்
செல்வ
வேதியர் தொண்டரோடு எதிர்கொளச் சென்று,
கொல்லை
மான்மறிக் கையரைக் கோயில்புக்கு இறைஞ்சி,
எல்லை
இல்லது ஓர் இன்பம்முன் பெருகிட எழுந்தார்.
பொழிப்புரை : நிறைந்த பூஞ்சோலைகள்
சூழ்ந்த மயிலாடுதுறையில் திருவுடை அந்தணர்கள் தொண்டர்களுடன் சூழ எதிர் கொண்டு
நிற்பப் புகுந்து, கொல்லையில் வாழும்
மான்கன்றைக் கையில் உடையவரைக் கோயிலுள் புகுந்து வணங்கி, அளவில்லாத ஒப்பற்ற மகிழ்ச்சி பெருக
எழுந்தார்
பெ.
பு. பாடல் எண் : 439
உள்ளம்
இன்புஉற, உணர்வுஉறும்
பரிவுகொண்டு உருகி,
வெள்ளம்
தாங்கிய சடையரை விளங்குசொல் பதிகத்
தெள்ளும்
இன்னிசைத் திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி,
வள்ள
லார்மற்ற வளம்பதி மருவுதல் மகிழ்ந்தார்.
பொழிப்புரை : உள்ளத்தில் வைத்து, இன்பம் அடைய, அவ்வுணர்ச்சியுடன் கூடிய அன்பு
மிகுதியால் உருகி, கங்கை வெள்ளத்தையுடைய
சடையினரான இறைவரையே விளங்கும் சொல் பதிகத்தில் வைத்துப் பாடி, அத்தெளிந்த இனிய இசையுடன் கூடிய
மகிழ்வுடன் வெளியே வந்து அவ்வளமுடைய பதியில் மகிழ்ந்து இருந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 440
அத்தி
ருப்பதி அகன்றுபோய் அணிகிளர் சூலக்
கைத்த
லப்படை வீரர்செம் பொன்பள்ளி கருதி,
மெய்த்த
காதலில் விளநகர் விடையவர் பாதம்
பத்தர்
தம்முடன் பணிந்து, இசைப் பதிகம் முன்
பகர்ந்தார்.
பொழிப்புரை : அத்திருப்பதியினின்றும்
நீங்கிச் சென்று, அழகு விளங்கும்
சூலப்படையைக் கையில் கொண்ட வீரரான இறைவரின் 'திருச்செம்பொன்பள்ளி'யைக் கருதிச்
சென்று பணிந்து, மெய்ம்மையான
பெருவிருப்பால் `திருவிளநகரில்' எழுந்தருளிய விடையை உடைய இறைவரின்
திருவடிகளை அடியார்களுடனே கூடிப் பணிந்து இசையுடைய திருப்பதிகத்தினைத் திருமுன்பு
பாடினார்.
திருச்செம்பொன்பள்ளியில்
அருளிய பதிகம் `மருவார் குழலி' (தி.1 ப.25) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த
பதிகம் ஆகும்.
திருவிளநகரில் அருளிய பதிகம் `ஒளிரிளம் பிறை' (தி.2 ப.78) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த
பதிகமாகும்.
1.025 திருச்செம்பொன்பள்ளி பண் – தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மருஆர்
குழலி மாதுஓர் பாகமாய்த்
திருஆர்
செம்பொன் பள்ளி மேவிய
கருஆர்
கண்டத்து ஈசன் கழல்களை
மருவா
தவர்மேல் மன்னும் பாவமே.
பொழிப்புரை :மணம் பொருந்திய
கூந்தலை உடையவளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக உடையவராய்த் திருமகள் வாழும்
செம்பொன்பள்ளி என வழங்கும் திருத்தலக்கோயிலில் எழுந்தருளிய, கருநீலம் பொருந்திய கண்டத்தை உடைய ஈசன்
திருவடிகளை வணங்கி அவற்றைத் தம் மனத்தே பொருந்தவையாதவர்களைப் பாவங்கள் பற்றும்.
பாடல்
எண் : 2
வார்ஆர்
கொங்கை மாதுஓர் பாகமாய்ச்
சீர்ஆர்
செம்பொன் பள்ளி மேவிய
ஏர்ஆர்
புரிபுன் சடைஎம் ஈசனைச்
சேரா
தவர்மேல் சேரும் வினைகளே.
பொழிப்புரை :கச்சணிந்த தனங்களை
உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவராய், சிறப்புப்
பொருந்திய செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய அழகிய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய
எம் ஈசனாகிய சிவபிரானைச் சென்று வணங்கி இடைவிடாது மனத்தில் நினையாதவர்களிடம்
வினைகள் சேரும்.
பாடல்
எண் : 3
வரைஆர்
சந்தோடு அகிலும் வருபொன்னித்
திரைஆர்
செம்பொன் பள்ளி மேவிய
நரைஆர்
விடைஒன்று ஊரும் நம்பனை
உரையா
தவர்மேல் ஒழியா ஊனமே.
பொழிப்புரை :மலைகளில் செழித்து
வளர்ந்த சந்தனமரங்களோடு, அகில் மரங்களையும்
அடித்துக் கொண்டு வருகின்ற பொன்னி நதிக்கரையில் விளங்கும் செம்பொன்பள்ளியில்
எழுந்தருளிய வெண்ணிறம் பொருந்திய விடை ஒன்றை ஊர்ந்து வருபவனாகிய சிவபெருமான் புகழை
உரையாதவர்களைப் பற்றியுள்ள குற்றங்கள் ஒழியா.
பாடல்
எண் : 4
மழுவாள்
ஏந்தி மாதுோர் பாகமாய்ச்
செழுஆர்
செம்பொன் பள்ளி மேவிய
எழில்ஆர்
புரிபுன் சடைஎம் இறைவனைத்
தொழுவார்
தம்மேல் துயரம் இல்லையே.
பொழிப்புரை :மழுவாகிய வாளை ஏந்தி
உமையொருபாகனாய் வளம் பொருந்திய செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய அழகு பொருந்திய
முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் இறைவனைத் தொழுபவர்கட்குத் துயரம் இல்லை.
பாடல்
எண் : 5
மலையான்
மகளோடு உடனாய் மதில்எய்த
சிலைஆர்
செம்பொன் பள்ளி யானையே
இலைஆர்
மலர்கொண்டு எல்லி நண்பகல்
நிலையா
வணங்க நில்லா வினைகளே.
பொழிப்புரை :மலையரையன் மகளாகிய
பார்வதிதேவியோடு உடனாய் விளங்குபவனும், அசுரர்களின்
மும்மதில்களை எய்தழித்த மலை வில்லை உடையவனுமாகிய செம்பொன்பள்ளியில் விளங்கும்
சிவபிரானையே, இலைகளையும்
மலர்களையும் கொண்டு இரவிலும் நண்பகலிலும் மனம் நிலைத்து நிற்குமாறு வணங்குவார்
மேல் வினைநில்லா.
பாடல்
எண் : 6
அறைஆர்
புனலோடு அகிலும் வருபொன்னிச்
சிறைஆர்
செம்பொன் பள்ளி மேவிய
கறைஆர்
கண்டத்து ஈசன் கழல்களை
நிறையால்
வணங்க நில்லா வினைகளே.
பொழிப்புரை :பாறைகளிற்
பொருந்திவரும் நீரில் அகில் மரங்களையும் அடித்துவரும் பொன்னியாற்றின் கரையில்
அமைந்த செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய விடக்கறை பொருந்திய கண்டத்தை உடைய ஈசன்
திருவடிகளை மன ஒருமைப்பாட்டோடு வணங்க வினைகள் நில்லா.
பாடல்
எண் : 7
பைஆர்
அரவுஏர் அல்கு லாளொடும்
செய்ஆர்
செம்பொன் பள்ளி மேவிய
கைஆர்
சூலம் ஏந்து கடவுளை
மெய்யால்
வணங்க மேவா வினைகளே.
பொழிப்புரை :அரவின் படம் போன்ற
அழகிய அல்குலை உடைய உமையம்மையோடு வயல்கள் சூழ்ந்த செம்பொன்பள்ளியில்
வீற்றிருக்கின்ற கையில் பொருந்திய சூலத்தை ஏந்தி விளங்கும் கடவுளை உடம்பால் வணங்க
வினைகள் மேவா.
பாடல்
எண் : 8
வான்ஆர்
திங்கள் வளர்புன் சடைவைத்துத்
தேன்ஆர்
செம்பொன் பள்ளி மேவிய
ஊன்ஆர்
தலையில் பலிகொண்டு உழல்வாழ்க்கை
ஆனான்
கழலே அடைந்து வாழ்மினே.
பொழிப்புரை :வானத்தில் விளங்கும்
பிறை மதியை, வளர்ந்துள்ள சிவந்த
தன் சடைமீது வைத்து, இனிமை பொருந்திய செம்பொன்பள்ளியில்
எழுந்தருளியவனும், புலால் பொருந்திய
பிரமனது தலையோட்டில் பலியேற்று உழல்வதையே தன் வாழ்வின் தொழிலாகக் கொண்டவனும் ஆகிய
சிவபிரான் திருவடிகளையே அடைந்து வாழ்மின்.
பாடல்
எண் : 9
கார்ஆர்
வண்ணன் கனகம் அனையானும்
தேர்ஆர்
செம்பொன் பள்ளி மேவிய
நீர்ஆர்
நிமிர்புன் சடைஎம் நிமலனை
ஓரா
தவர்மேல் ஒழியா ஊனமே.
பொழிப்புரை :நீலமேகம் போன்ற
நிறமுடையோனாகிய திருமாலும், பொன்னிறமேனியனாகிய
பிரமனும், தேடிக்காணொணாதவனும்
செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய கங்கை அணிந்த நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை
உடையவனுமாகிய குற்றமற்ற எம் இறைவனை மனம் உருகித் தியானியாதவர் மேல் உளதாகும்
குற்றங்கள் நீங்கா.
பாடல்
எண் : 10
மாசுஆர்
உடம்பர் மண்டைத் தேரரும்
பேசா
வண்ணம் பேசித் திரியவே,
தேசுஆர்
செம்பொன் பள்ளி மேவிய
ஈசா
என்ன நில்லா இடர்களே.
பொழிப்புரை :அழுக்கேறிய
உடலினராகிய சமணரும், மண்டை என்னும்
உண்கலத்தை ஏந்தித் திரிபவர்களாகிய புத்தரும் பேசக்கூடாதவைகளைப் பேசித்திரிய
அன்பர்கள் `ஒளி பொருந்திய
செம்பொன்பள்ளியில் மேவிய ஈசா!` என்று கூற அவர்களுடைய
இடர்கள் பலவும் நில்லா.
பாடல்
எண் : 11
நறவுஆர்
புகலி ஞான சம்பந்தன்
செறுஆர்
செம்பொன் பள்ளி மேயானைப்
பெறுமாறு
இசையால் பாடல் இவைபத்தும்
உறுமா
சொல்ல ஓங்கி வாழ்வரே.
பொழிப்புரை :தேன் நிறைந்த
பொழில்களால் சூழப்பட்ட புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் வயல்கள் சூழ்ந்த
செம்பொன்பள்ளி இறைவன் அருளைப் பெறுமாறு பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் இசையோடு
தமக்கு வந்த அளவில் ஓதவல்லவர் ஓங்கி வாழ்வர்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 190
மேவுபுனல்
பொன்னிஇரு கரையும் சார்ந்து
விடைஉயர்த்தார்
திருச்செம்பொன் பள்ளி பாடி,
காஉயரும்
மயிலாடு துறை,நீள் பொன்னிக்
கரைத்துருத்தி, வேள்விக்குடி, எதிர்கொள் பாடி
பாவுறு
செந்தமிழ்மாலை பாடிப் போற்றி,
பரமர்திருப்
பதிபலவும் பணிந்து போந்தே,
ஆவுறும்அஞ்சு
ஆடுவார் கோடி காவில்
அணைந்துபணிந்து, ஆவடுதண் துறையைச்
சார்ந்தார்.
பொழிப்புரை : நீர் இடையறாது
பொருந்திய காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் சேர்ந்து, ஆனேற்றுக் கொடியை உயர்த்திய
சிவபெருமானின் திருச்செம்பொன்பள்ளியினைப் பாடிச் சோலைகள் உயர்ந்து சூழ்ந்த
திருமயிலாடுதுறையையும், காவிரியின் இரு
கரைகளிலும் உள்ள திருத்துருத்தி - திருவேள்விக்குடியையும், திருஎதிர்கொள்பாடியையும் தொழுது
செந்தமிழ்ப் பதிகங்களான பாமாலைகளால் போற்றி, இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும்
பணிந்து சென்று, ஆன் ஐந்தையும் ஆடும்
சிவபெருமானின் திருக்கோடிக்காவை அடைந்து, வணங்கிச்
சென்று, திருவாவடுதுறையைச்
சேர்ந்தார்.
இங்கு முதற்கண்
குறிக்கப்பட்ட திருப்பதிகள் ஐந்தாம். இவ்விடங்களில் பாடப்பெற்ற திருப்பதிகங்கள்:
1. திருச்செம்பொன்
பள்ளி:
இது இக்காலத்துச் செம்பொனார்கோயில் என வழங்கப் பெறுகிறது.
(அ). `ஊனினுள் உயிரை` (தி.4 ப.29) - திருநேரிசை.
(ஆ) `கானறாத` (தி.5 ப.36) - திருக்குறுந்தொகை.
2. திருமயிலாடுதுறை: `கொள்ளும் காதல்` (தி.5 ப.39) - திருக்குறுந்தொகை.
3. 3+4. திருத்துருத்தியும்
திருவேள்விக்குடியும்: இறைவன் பகலில் திருத்துருத்தியிலும்
இரவில் வேள்விக்குடியிலும் எழுந்தருளியிருப்பர். இதனால் இவ்விரு திருப்பதிகளையும்
இணைத்தே ஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடியுள்ளனர். நாவரசர் திருத்துருத்தி ஒன்றற்கே
பதிகம் பாடியுள்ளார். `பொருத்திய` (தி.4 ப.42) - திருநேரிசை.
4. திருஎதிர்கொள்பாடிக்கு
உரிய பதிகம் கிடைத்திலது.
5. இனி, இப்பதிகளோடு `பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே` என ஆசிரியர் அருளுவதால், இதுபொழுது பாடிய பதிகள் வேறு பிறவும்
உளவாம் எனத் தெரிகிறது. அவையாவன:
1. திருஅன்னியூர் : `பாறலைத்த` (தி.5 ப.8) - திருக்குறுந்தொகை.
2. திருமணஞ்சேரி: `பட்டநெற்றியர்` (தி.5 ப.87) - திருக்குறுந்தொகை.
இப்பாடலில்
ஆசிரியர் நிறைவாக இருபதிகளைக் குறிக்கின்றார். அவை:
1. திருக்கோடிக்கா:
(அ). `நெற்றிமேல்` (தி.4 ப.51) - திருநேரிசை.
(ஆ). `சங்குலாம்` (தி.5 ப.78) - திருக்குறுந்தொகை.
(இ). கண்டலஞ்சேர் (தி.6 ப.81) - திருத்தாண்டகம்.
2. திருவாவடுதுறை:
இப்பதியில் அருளிய பதிகங்கள் வரும் பாடலில் குறிக்கப் பெறுகின்றன.
4. 029 திருச்செம்பொன்பள்ளி திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
ஊனின்உள்
உயிரை வாட்டி, உணர்வினார்க்கு
எளியர் ஆகி
வானின்உள்
வான வர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்,
நான்எனில்
தானே என்னும்,ஞானத்தார் பத்தர்
நெஞ்சுள்
தேனும்இன்
அமுதும் ஆனார் திருச்செம்பொன் பள்ளி
யாரே.
பொழிப்புரை : திருச்செம்பொன்பள்ளி
எம்பெருமான் இவ்வுடம்பினுள் உள்ள உயிரைத் தவம் விரதம் முதலியவற்றால் வாட்டித்
தூய்மையுடையதாக்கி மெய்யுணர்வு பெற்ற பெரியவர்களுக்கு எளியராய் , உயர்ந்த உலகிலுள்ள தேவர்களும்
அறியமுடியாத கள்ளத்தை உடையவராய் ,
சிவபோதத்தினராய்
இருக்கும் சிவஞானிகளுக்கு அமுதமும் , சிவனடியார்களின்
நெஞ்சில் தேனும்போல இனிப்பவராய் உள்ளார் .
பாடல்
எண் : 2
நொய்யவர், விழுமி யாரும், நூலின்நுண் நெறியைக்
காட்டும்
மெய்யவர், பொய்யும் இல்லார், உடல்எனும் இடிஞ்சில்
தன்னில்
நெய்அமர்
திரியும் ஆகி, நெஞ்சத்துள்
விளக்கும் ஆகிச்
செய்யவர், கரிய கண்டர், திருச்செம்பொன் பள்ளி
யாரே.
பொழிப்புரை :நீலகண்டராய
திருச்செம்பொன்பள்ளியார் ஞானவடிவினர் ஆதலின் நொய்யராய் , சீர்மை உடையவராய் , வேதநெறியைக் காட்டும் உண்மை வடிவினராய் , பொய்யிலியாய் , உடல் என்னும் ஓட்டாஞ் சில்லியிலே
நெய்யில் தோய்த்த திரியாகவும் நெஞ்சில் ஒளி தருகின்ற விளக்காகவும் உள்ள
செந்நிறத்தவராவர் .
பாடல்
எண் : 3
வெள்ளியர், கரியர், செய்யர், விண்ணவர் அவர்கள்
நெஞ்சுள்
ஒள்ளியர், ஊழி ஊழி உலகம் அதுஏத்த நின்ற
பள்ளியர்
நெஞ்சத்து உள்ளார், பஞ்சமம் பாடி ஆடும்
தெள்ளியார்
கள்ளம் தீர்ப்பார், திருச்செம்பொன் பள்ளி
யாரே.
பொழிப்புரை : திருச்செம்பொன்
பள்ளியார் வெண்மை , செம்மை , கருமை என்ற நிறத்தவராய் , தேவர்கள் உள்ளத்திலே ஒளி தருபவராய் , ஊழிதோறும் உலகங்கள் துதிக்கும் படியான
பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலுடைய நெஞ்சத்தில் உள்ளவராய் , பஞ்சமம் என்ற பண்ணினைப் பாடி ஆடும்
ஞானிகளுடைய உள்ளிருளைப் போக்குபவராய் உள்ளார் .
பாடல்
எண் : 4
தந்தையும்
தாயும் ஆகித் தானவன் ஞான மூர்த்தி
முந்திய
தேவர் கூடி முறைமுறை இருக்குச்
சொல்லி
எந்தைநீ
சரணம் என்றுஅங்கு இமையவர் பரவி ஏத்தச்
சிந்தையுள்
சிவம் அதுஆனார் திருச்செம்பொன் பள்ளி
யாரே.
பொழிப்புரை : திருச்செம்பொன்பள்ளியார்
தந்தையாராய்த் தாயாராய் , எல்லோருக்கும்
கொடைவழங்குபவராய் , ஞானவடிவினராய் , முற்பட்ட தேவர்கள் எல்லோரும்
ஒன்றுசேர்ந்து முறைப்படி வேதங்களை ஓதி `எங்கள்
தந்தையே ! நீயே அடியேங்களுக்கு அடைக்கலம் நல்குவை` என்று முன்நின்று வழிபட்டுத் துதிக்க, அவர்கள் உள்ளத்துள்ளே மங்கலமூர்த்தியாக
இருப்பவராவர் .
பாடல்
எண் : 5
ஆறுஉடைச்
சடையர் போலும், அன்பருக்கு அன்பர்
போலும்,
கூறுஉடை
மெய்யர் போலும், கோள்அரவு அரையர்
போலும்,
நீறுஉடை
அழகர் போலும், நெய்தலே கமழு
நீர்மைச்
சேறுஉடைக்
கமல வேலித் திருச்செம்பொன் பள்ளி
யாரே.
பொழிப்புரை : நெய்தல் பூக்கள் மணம்
கமழும் நீர்வளம் உடையதாய்ச் சேற்றிலே தாமரை பூக்கும் வயல்களை நாற்புறமும் எல்லையாக
உடைய திருச்செம்பொன்பள்ளியார் கங்கை சூடிய சடையராய்த் தம் அன்பர்களிடத்துத் தாமும்
அன்பு செய்பவராய், பார்வதி பாகராய், கொடிய பாம்பினை இறுகக் கட்டிய
இடையினராய்த் திரு நீறணிந்த அழகருமாவார் .
பாடல்
எண் : 6
ஞாலமும்
அறிய வேண்டில் நன்றுஎன வாழல்
உற்றீர்,
காலமும்
கழியல் ஆன, கள்ளத்தை ஒழிய
கில்லீர்,
கோலமும்
வேண்டா, ஆர்வச் செற்றங்கள் குரோதம்
நீக்கில்,
சீலமும்
நோன்பும் ஆவார் திருச்செம்பொன் பள்ளி
யாரே.
பொழிப்புரை : மேம்பட்டது என்று
சொல்லி உலகியலில் திளைத்து வாழும் உலகத்தவராகிய நீங்கள் வீணாகக் கழிகின்ற உங்கள்
வஞ்சக வாழ்க்கையை விடாது மேற்கொண்டுள்ளீர் . நீங்கள் திருச்செம்பொன் பள்ளியாரை
அறிய விரும்புவீராயின் , உங்கள் போலி அடியவர்
வேடத்தையும் காமக் குரோத கோபாதிகளையும் நீங்கள் போக்கி விட்டால் அவர் உங்களுக்கு
ஒழுக்கமும் தவ விரதமுமாக இருந்து உதவுவார் .
பாடல்
எண் : 7
புரிகாலே
நேசம் செய்ய இருந்தபுண் டரீகத்
தாரும்
எரிகாலே
மூன்றும் ஆகி இமையவர் தொழநின்
றாரும்
தெரிகாலே
மூன்று சந்தி தியானித்து வணங்க
நின்று
திரிகாலம்
கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளி
யாரே.
பொழிப்புரை : திருச்செம்பொன்பள்ளியார்
விருப்பம் முற்பட்ட பொழுதே தம்மிடத்தே அன்பு செய்யும் அடியவர் இதயத் தாமரையில்
இடம் கொண்டிருப்பவராய் , தீ , காற்று , நிலம் , நீர் , ஆகாயம் என்ற ஐம்பூதங்களுமாகித் தேவர்கள்
தொழுமாறு இருப்பவராய் , காலை நண்பகல் அந்தி
என்ற மூன்று வேளைகளிலும் ஆராயப்படும் திருவடிகளை நினைந்து அடியவர் யாவரும் வணங்க , முக்காலங்களிலும் நிலையாக இருப்பவர்
ஆவர் .
பாடல்
எண் : 8
கார்உடைக்
கொன்றை மாலை கதிர்மதி அரவி னோடும்
நீர்உடைச்
சடையுள் வைத்த நீதியார், நீதி உள்ளார்,
பாரொடு
விண்ணும் மண்ணும் பதினெட்டுக் கணங்கள்
ஏத்தச்
சீரொடு
பாடல் ஆனார் திருச்செம்பொன் பள்ளி
யாரே.
பொழிப்புரை : திருச்செம்பொன்பள்ளியார்
கார்காலத்தைத் தனக்குப் பூக்கும் காலமாக உடைய கொன்றைப்பூ மாலையை ஒளிவீசும் பிறை , பாம்பு எனும் இவற்றோடு கங்கை தங்கும்
சடையில் வைத்தவராய் , நீதியே வடிவானவராய்த்
தாமும் அந்நீதியையே நடத்துபவராய்,
பாதலம், தேவருலகம், மண்ணுலகம் என்ற மூன்று உலகங்களும்
பதினெட்டுத் தேவகணங்களும் தம்மைத் துதிக்க , சீரோடு கூடிய பாடல் வடிவாய் உள்ளவர் .
பாடல்
எண் : 9
ஓவாத
மறைவல் லானும் ஓதநீர் வண்ணன் காணா
மூவாத
பிறப்பு இலாரும் முனிகள் ஆனார்கள்
ஏத்தும்
பூவான
மூன்று முந்நூற்று அறுபதும் ஆகும் எந்தை
தேவாதி
தேவர் என்றும் திருச்செம்பொன் பள்ளி
யாரே.
பொழிப்புரை : திருச்செம்பொன்பள்ளியார்
என்றும் அழிதல் இல்லாத வேதத்தை ஓதிக் கொண்டிருக்கும் பிரமனும் , கடல் நிறத்தவனாகிய திருமாலும்
காணமுடியாதவராய் , மூத்தலோ பிறத்தலோ
இல்லாதவராய் 1080 மலர்களைக் கொண்டு
முனிவர்கள் வழிபடும் எங்கள் தந்தையாராய் , என்றும் தேவர்களுக்கு எல்லாம் தேவருமாய்
உள்ளார் .
பாடல்
எண் : 10
அங்கங்கள்
ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச்
செய்து
சங்கங்கள்
பாட ஆடும் சங்கரன், மலை எடுத்தான்
அங்கங்கள்
உதிர்ந்து சோர அலறிட அடர்த்து
நின்றும்
செங்கண்வெள்
ஏறுஅது ஏறும் திருச்செம்பொன் பள்ளி
யாரே.
பொழிப்புரை : சிவந்த கண்களை உடைய
திருமாலாகிய வெண்ணிறக் காளையை இவரும் திருச்செம்பொன் பள்ளியார் , கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல்
உறுப்புகள் உதிர்ந்து தளர அவன் வாய்விட்டு அலறுமாறு வருத்தி நின்றும் (
நின்றவராயினும் ) நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் முனிவர்க்கு உபதேசித்துப்
பூதகணங்கள் பாடக் கூத்தாடும் ஆனந்த வடிவினராவர் .
திருச்சிற்றம்பலம்
5. 036 திருச்செம்பொன்பள்ளி திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கான்
அறாத கடிபொழில் வண்டுஇனம்
தேன்
அறாத திருச்செம்பொன் பள்ளியான்,
ஊன்
அறாததுஓர் வெண்தலை யில்பலி
தான்
அறாததுஓர் கொள்கையன் காண்மினே.
பொழிப்புரை : மணம் நீங்காத
விளக்கம் உடைய பொழில்களில் வண்டினங்களின் தேன் நீங்காத திருச்செம்பொன் பள்ளி
இறைவன் , தசைவிட்டு நீங்காத
ஒரு வெண்தலையில் பலியினைத் தான் ஏற்றலினின்றும் நீங்காத இயல்புடையவன் ; காண்பீர்களாக .
பாடல்
எண் : 2
என்பும்
ஆமையும் பூண்டுஅங்கு உழிதர்வர்க்கு
அன்பும்
ஆயிடும் ஆயிழை யீர்,இனிச்
செம்பொன்
பள்ளியு ளான்சிவ லோகனை
நம்பொன்
பள்ளி உள்க வினை நாசமே.
பொழிப்புரை : எலும்பும் , ஆமையும் அணிந்து திரிதருகின்ற
செம்பொன்பள்ளி இறைவனும் சிவலோகனுமாகிய பெருமானை அன்பு செய்யும் ஆராய்ந்த இழையை
அணிந்த பெண்களே ! அப் பெருமானை நம் அழகிய மனக்கோயிலின்கண்ணே நினைந்தால் நம்
வினைகள் நாசமாகும் .
பாடல்
எண் : 3
வேறு
கோலத்தர், ஆண்அலர், பெண்அலர்,
கீறு
கோவண ஐதுகில் ஆடையர்
தேறல்
ஆவதுஒன்று அன்றுசெம் பொன்பள்ளி
ஆறு
சூடிய அண்ணல் அவனையே.
பொழிப்புரை : வேறுகோலத்தோடு
கூடியவரும் , ஆண் , பெண் அல்லாதவரும் , கிழித்த கோவணத்துகிலாடை யுடையவரும் , செம்பொன் பள்ளியில் வீற்றிருந்து
கங்கையாளைச் சடையிற் சூடிய அண்ணலாகிய அப்பெருமானைத் தெளிந்துகொள்ளுதல் யார்க்கும்
எளிதாம் ஒன்றன்று .
பாடல்
எண் : 4
அருவ
ராததுஓர் வெண்தலை ஏந்திவந்து
இருவ
ராய்இடு வார்கடை தேடுவார்,
தெருஎலாம்
உழல்வார் செம்பொன் பள்ளியார்
ஒருவர்
தாம்,பல பேர்உளர்
காண்மினே.
பொழிப்புரை : அருவருப்புக்
கொள்ளாது ஒரு வெண்டலையை ஏந்திவந்து தெருவெல்லாம் உழல்வார் செம்பொன் பள்ளி இறைவர் ; திருமாலும் பிரமனுமாகிய இருவரால்
திருமுடி , திருவடிகளின் எல்லை
தேடப்பட்ட அவ்வொருவர் பலபெயர்களும் கொண்டு திகழ்வர் ; காண்பீர்களாக .
பாடல்
எண் : 5
பூ
உலாஞ்சடை மேல்புனல் சூடினான்,
ஏ
வலால்எயில் மூன்றும் எரித்தவன்,
தேவர்
சென்றுஇறைஞ்சும் செம்பொன் பள்ளியான்
மூவ
ராய்முத லாய்நின்ற மூர்த்தியே.
பொழிப்புரை : தேவர்கள் சென்று
இறைஞ்சுகின்ற செம்பொன் பள்ளி இறைவர் கொன்றைப்பூப் பொருந்திய சடையில் கங்கையைச்
சூடியவரும் , ஓரம்பினால் முப்புரம்
எரித்தவரும் , மூவர்க்கும் முதலாய்
நின்ற மூர்த்தியும் ஆவர் .
பாடல்
எண் : 6
சலவ
ராய்ஒரு பாம்பொடு தண்மதிக்
கலவர்
ஆவதின் காரணம் என்கொலோ
திலக
நீள்முடி யார்செம்பொன் பள்ளியார்
குலவில்
லால்எயில் மூன்றுஎய்த கூத்தரே.
பொழிப்புரை : பெருமைக்குரிய
வில்லால் மூன்றெயில்களை எய்த கூத்தரும் , பொட்டணிந்தவரும்
, நீண்ட சடாமுடி
உடையவருமாகிய செம்பொன்பள்ளி இறைவர் கங்கையைச் சூடியவராய் , பாம்பும் குளிர்பிறையும் கலந்தவராய்
ஆவதன் காரணம் என்னையோ ?.
பாடல்
எண் : 7
கைகொள்
சூலத்தர், கட்டுவாங் கத்தினர்,
மைகொள்
கண்டத்தர் ஆகி இருசுடர்,
செய்ய
மேனிவெண் நீற்றர்,செம் பொன்பள்ளி
ஐயர்
கையது ஓர்ஐந்தலை நாகமே.
பொழிப்புரை : கையிற்கொண்ட சூலம்
உடையவரும் , கட்டு வாங்கத்தை
உடையவரும் , திருநீலகண்டரும் ஆகி
இருசுடர்களைப் போன்று சிவந்த திருமேனியும் அதிற்பூசிய வெண்ணீற்றினருமாகிய
செம்பொன்பள்ளித் தலைவர் கையின்கண் உள்ளது ஓர் ஐந்தலை நாகமாகும் .
பாடல்
எண் : 8
வெங்கண்
நாகம் வெருவுற ஆர்த்தவர்,
பைங்கண்
ஆனையின் ஈர்உரி போர்த்தவர்,
செங்கண்
மால்விடை யார்,செம்பொன் பள்ளியார்,
அங்க
ணாய்அடைந் தார்வினை தீர்ப்பரே.
பொழிப்புரை : வெவ்விய கண்ணையுடைய
நாகத்தினை அஞ்சும்படி ஆர்த்துக்கட்டியவரும் , பசுமையான கண்ணையுடைய ஆனையின்
பச்சைத்தோலைப் போர்த்தவரும் , செங்கண்ணையுடைய
திருமாலைத் தமக்கு விடையாக உடையவரும் ஆகிய செம்பொன் பள்ளி இறைவர் தம்மை அடைக்கலமாக
அடைந்தவர்களின் வினைகளைத் தீர்ப்பர் .
பாடல்
எண் : 9
நன்றி
நாரணன் நான்முகன் என்றுஇவர்
நின்ற
நீண்முடி யோடுஅடி காண்புற்றுச்
சென்று
காண்புஅரி யான்,செம்பொன் பள்ளியான்,
நின்ற
சூழலில் நீள்எரி ஆகியே.
பொழிப்புரை : செம்பொன்பள்ளி இறைவர்
நன்மை மிக்க நாரணனும் , பிரமனும் ஆகிய
இருவரும் நிலைபெற்ற திருமுடியையும் திருவடியையும் காணத்தொடங்கிச் சென்றும்
காண்டலரியவராய் நின்ற அச்சூழ்நிலையில் நீண்டு அழலுருவாயினர் .
பாடல்
எண் : 10
திரியும்
மும்மதில் செங்கணை ஒன்றினால்
எரிய
எய்துஅனல் ஓட்டி, இலங்கைக்கோன்
நெரிய
ஊன்றிஇட் டார்,செம்பொன் பள்ளியார்
அரிய
வானம் அவர்அருள் செய்வரே.
பொழிப்புரை : செம்பொன்பள்ளி இறைவர்
. திரிகின்ற மும்மதில்களைச் செங்கணை ஒன்றினால் எரியுமாறு எய்து அனலினால் ஓட்டி , இராவணன் நெரியுமாறு தம் திருவிரல்
ஒன்றால் ஊன்றியவர் ; தம்மை யடைந்த
அன்பர்க்கு அரிதாகிய வீட்டுலக இன்பத்தை அப்பெருமான் அருள்வர் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment