திரு நனிபள்ளி
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
மக்கள் "புஞ்சை" என்று வழங்குகின்றனர்.
மயிலாடுதுறை - திருக்கடவூர் சாலை
மார்க்கத்தில் உள்ள திருசெம்பொன்பள்ளியில் இருந்து 4 கி.மி. தூரத்தில் இத்திருத்தலம்
உள்ளது.
இறைவர்
: நல்துணையப்பர்
இறைவியார்
: மலையான் மடந்தை, பர்வத புத்ரி
தீர்த்தம் : சொர்ண தீர்த்தம்
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - காரைகள் கூகைமுல்லை.
2. அப்பர் - முற்றுணை
யாயினானை.
3. சுந்தரர் - ஆதியன்
ஆதிரையன்.
திருஞானசம்பந்தரின் திருத்தாயார்
பகவதியம்மையார் திருவவதாரத் தலம் திருநனிபள்ளி. திருஞானசம்பந்தர் தனது மூன்றாம்
வயதில் சிவஞானம் பெற்றதையும், சிவபெருமான் அருளால்
பெற்றாளம் பெற்றதையும் கேள்விப்பட்ட அவ்வூர் அந்தணர்கள், திருஞானசம்பந்தர் தங்கள் ஊருக்கு
எழுந்தருள வேண்டும் என்று கோரினர். அதற்கு இசைந்த திருஞானசம்பந்தர் தன் திருவடி
நோக நனிபள்ளி நோக்கி நடந்தார். ஆளுடைய பிள்ளையார் கால்கள் நோக நடப்பதைக் கண்ட
அவரது தந்தை சிவபாத இருதயர் திருஞானசம்பந்தரை தனது தோளில் அமர்த்திக் கொண்டு
சென்றார். தந்தையால் இது தான் திருநனிபள்ளி தலம் என்று கூற "காரைகள்
கூகைமுல்லை களவாக ஈகை" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கொண்டே நனிபள்ளி
ஆலயத்தை அடைந்து இறைவனை வணங்கிப் போற்றினார். இப்பதிகமே பாலை நிலமாக இருந்த
திருநனிபள்ளயை அவ்வூர் வாழ் மக்கள் வேண்டுகோளின்படி நெய்தல் நிலமாக மாற்றியருளிய
பதிகம் என்று கூறப்படுகிறது. தனது தந்தை தோள் மீதமர்ந்து திருநனிபள்ளி அடைந்ததைத்
திருஞானசம்பந்தர் தனது திருப்பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.
மூவராலும் பாடப் பெற்ற தலங்களில் ஒன்று என்ற
சிறப்பை இத்தலம் பெற்றுள்ளது. இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு
வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே இடப வாகனத்தின் மீதமர்ந்த சிவன்
பார்வதி, மூஞ்சூறு வாகனத்தின்
மீதமர்ந்த விநாயகர், மயில் வாகனத்தின்
மீதமர்ந்த முருகப் பெருமான் ஆகியோர் சுதைச் சிற்பங்கள் வடிவில் காட்சி
அளிக்கின்றனர். உள்ளே கருவறையில் மூலவர் நற்றுணையப்பர் சுயம்பு லிங்க உருவில்
கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார். கோட்ட மூர்த்தங்களாக அகத்தியர், விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோட்ட
மூர்த்தங்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளன. கோவிலின் கருவறை நல்ல
வேலைப்பாடுடையதாக அமைந்துள்ளது. இறைவன் நற்றுணையப்பர் கிழக்கு நோக்கித் தரிசனம்
தருகின்றார். விநாயகர், அகத்தியர்
இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம் திருநனிபள்ளி.
அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலங் காட்டிய கல்யாண சுந்தரேசர் கோயில் உள்ளது.
இங்கு பர்வதராஜபுத்திரி, மலையான்மடந்தை என்ற திருநாமத்தில்
இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர். இங்கு சுவாமியின் வலது பக்கம் அம்மன்
வீற்றிருக்கிறார். இது தவிர தனி சன்னதியில் மூலத்தானத்திலேயே அம்மனுடன்
கல்யாணசுந்தரேசுவரர் அருளுகிறார். உட்பிரகாரத்தில் நால்வர், விநாயகர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன.
மகாமண்டபத்தில் நடராசர் சபை உள்ளது. அத்துடன் "நனிபள்ளி கோடி வட்டம்"
என்ற மண்டபம் மிகவும் அருமையாக கோயில் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும்
சித்திரை மாதத்தில் 7-ம் நாள் முதல் 13-ம் நாள் வரை சூரியனின் கதிர்கள்
சிவலிங்கத்தின் மீது படுகிறது. திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள
கல்யாணசுந்தரரை வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், நற்றுணையப்பரை வணங்கினால் செல்வ
செழிப்பு, குழந்தைகளின் படிப்பு
சிறக்கும் என்பதும் நம்பிக்கை.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், " இன்பு உள்ளித் தெள்ளியார் போற்றுத் திகழும் திருநன்னிப்பள்ளி
ஆர்ந்து ஓங்கும் பரசிவமே" என்று போற்றி உள்ளார்.
காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
திருஞானசம்பந்தப் பெருமான் இறையருளால்
ஞானப்பாலை உண்டு எண்ணில்லா ஞானம் பெற்றதை, அப்பெருமானைத் தன் மணிவயிற்றிலே தாங்கிய
பகவதியார் அவதரித்த திருத்தலமாகிய நனிபள்ளியிலே உள்ள அந்தணர்கள் கேட்டு சீர்காழியை
அடைந்து தமது திருத்தலத்திற்கு எழுந்தருளுமாறு பெருமானை வேண்டினர். பெருமானும்
உடன்பட்டு எழுந்திருளினார்.
பெரிய
புராணப் பாடல் எண் : 109
அந்நிலையில்
ஆள்உடைய பிள்ளையார்
தமைமுன்னம் அளித்த
தாயார்
முன்உதிக்க
முயன்ற தவத் திரு நன்னி
பள்ளிமுதன் மறையோர்
எல்லாம்,
மன்னுபெரு
மகிழ்ச்சியுடன் மங்கலதூ
ரியம் துவைப்ப மறைகள்
ஓதிக்
கன்னிமதில்
சண்பைநகர் வந்து அணைந்து,
கவுணியர்கோன் கழலில்
தாழ்ந்தார்.
பொழிப்புரை : அவ்வாறு இருக்கும்
நாளில் பிள்ளையாரை முன் ஈன்றெடுத்த தாயாரான பகவதியார், முதற்கண் தன்னிடத்தே தோன்றியருள முயன்ற
தவம் உடைய திருநனிபள்ளியில் உள்ள முதன்மையுடைய மறையவர் அனைவரும், நிலைபெற்ற மகிழ்ச்சியுடன் மங்கல
இயக்கமுடன் மறைகளையும் ஓதியவாறு,
அழியாத
மதில் சூழ்ந்த சீகாழி என்ற நகருக்கு வந்து சேர்ந்து, கவுணியர் பெருமானின் திருவடிகளில்
வீழ்ந்து வணங்கினர்.
பகவதியார் தன்னிடத்தே
தோன்றத் தவம் செய்த இடம் திருநனிபள்ளியாகும். இசை நிறைவு கருதி நன்னி பள்ளி
என்றாயிற்று.
பெ.
பு. பாடல் எண் : 110
மங்கலமாம்
மெய்ஞ்ஞானம் மண்களிப்பப்
பெற்றபெரு வார்த்தை
யாலே
எங்கணும்நீள்
பதிமருங்கில் இருபிறப்பா
ளரும்அல்லா ஏனை
யோரும்,
பொங்குதிருத்
தொண்டர்களும் அதிசயித்து,
குழாம்கொண்டு, புகலி யார்தம்
சிங்கஇள
ஏற்றின்பால் வந்து அணைந்து
கழல்பணியும்
சிறப்பின் மிக்கார்.
பொழிப்புரை : பேரின்பப் பெருவாழ்வை
வழங்கும் சிவ மெய்ஞ்ஞானத்தை, உலகம் மகிழப் பெற்ற
பெருவார்த்தை கேட்டலால், நீண்ட
அத்திருப்பதியின் அருகிலுள்ள இருபிறப்பாளர்கள் யாவரும், அவ்வினத்தவரல்லாத மற்றவரும், பெருகும் தொண்டர்களும் வியப்புற்றுத்
திரண்டு, சீகாழியில்
இளஞ்சிங்கமென விளங்கும் பிள்ளையாரிடத்து வந்து சேர்ந்து, அவருடைய திருவடிகளில் வணங்கும்
சிறப்பில் மிக்கவர் ஆனார்கள்.
பெ.
பு. பாடல் எண் : 111
வந்ததிருத்
தொண்டர்கட்கும், மல்குசெழு
மறையவர்க்கும், மற்று உளோர்க்கும்,
சிந்தைமகிழ்
உறமலர்ந்து, திருஅமுது
முதலான சிறப்பின்
செய்கை
தந்தம்அள
வினில்விரும்புந் தகைமையினால்
கடன்ஆற்றும் சண்பை
மூதூர்,
எந்தைபிரான்
சிவலோகம் எனவிளங்கி
எவ்வுலகும் ஏத்தும்
நாளில்.
பொழிப்புரை : அங்ஙனம் திரண்டுவந்த
திருத்தொண்டர்களுக்கும், அந்தணர்களுக்கும்
மற்றவர்கட்கும் மனமகிழ்ந்து முகமலர்ந்து உண்பித்தல் முதலான சிறப்புடைய செய்கைகளைத்
தத்தம் அளவிலும் நன்றாற்றிவரும் நன்மக்களையுடைய சீகாழிப் பதியானது எம் இறைவரின்
சிவலோகமே என விளக்கம் பெற்று எவ்வுலகமும் போற்ற நிற்கும் அந்நாளில்.
பெ.
பு. பாடல் எண் : 112
செழுந்தரளப்
பொன்னிசூழ் திருநன்னி
பள்ளிஉள்ளோர் தொழுது, "திங்கள்
கொழுந்து
அணியும் சடையாரை எங்கள்பதி
யினில் கும்பிட்டு
அருள அங்கே
எழுந்து
அருள வேண்டும்" என,
இசைந்து
அருளி,
தோணிவீற் றிருந்தார் பாதம்
தொழுந்தகைமை
யால்இறைஞ்சி, அருள்பெற்று,
பிறபதியும் தொழமுன்
செல்வார்.
பொழிப்புரை : செழுமையான
முத்துக்களைத் தரும் காவிரியாறு சூழ்ந்த நனிபள்ளியில் உள்ளவர்கள், பிள்ளையாரை வணங்கிப் `பிறைச் சந்திரனை அணியும் சடையையுடைய
சிவபெருமானை எங்கள் பதியில் வணங்கும் பொருட்டுத் தாங்கள் எழுந்தருள வேண்டும்' என வேண்டிக் கொள்ள, அவரும் அதற்கு இசைந்து, திருத்தோணியில் வீற்றிருக்கும்
சிவபெருமானின் திருவடிகளை முறைப்படி வணங்கி, விடைபெற்று, நனிபள்ளியே யன்றி மற்றத்
திருப்பதிகளுக்கும் தொழுவதற்கு எண்ணிச் செல்வார்,
பெ.
பு. பாடல் எண் : 113
தாதுஅவிழ்செந்
தாமரையின் அகவிதழ்போல்
சீறடிகள் தரையின்மீது
போதுவதும், பிறர்ஒருவர்
பொறுப்பதுவும்
பொறாஅன்பு புரிந்த
சிந்தை
மாதவம்செய்
தாதையார், வந்து எடுத்துத்
தோளின்மேல் வைத்துக்
கொள்ள,
நாதர்கழல்
தம்முடிமேல் கொண்ட கருத்து
உடன்போந்தார் ஞானம்
உண்டார்.
பொழிப்புரை : ஞானப் பாலமுது உண்ட
பிள்ளையாரின், இதழ்கள் விரியும்
செந்தாமரையின் அக இதழ்கள் போன்ற சிறிய திருவடிகள் தரையில் பொருந்த நடந்து
செல்வதையும், பிறர் எவரும்
தாங்குதலையும் பொறுக்காத அன்புகொண்ட மனமுடைய மாதவம் செய்த தந்தையாரான சிவபாத
இருதயர், வந்து எடுத்துத் தம்
தோளின் மீது சுமந்தவாறு கொண்டு செல்ல, தாம்
சிவபெருமானின் திருவடிகளைத் தம் முடிமீது கொண்ட உள்ளத்தவராய்ப் பிள்ளையார்
செல்லலானார்.
பெ.
பு. பாடல் எண் : 114
தேன்அலருங்
கொன்றையினார் திருநன்னி
பள்ளியினைச் சாரச்
செல்வார்,
"வான்அணையும்
மலர்ச்சோலை தோன்றுவதுஎப்
பதி"என்ன, மகிழ்ச்சி எய்திப்
"பானல்வயல் திருநன்னி
பள்ளி"எனத்
தாதையார் பணிப்பக்
கேட்டு,
ஞானபோ
னகர்தொழுது நல்தமிழ்ச்சொல்
தொடைமாலை நவிலல்
உற்றார்.
பொழிப்புரை : தேன் பொழியும் கொன்றை
மலரை அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் திருநனிபள்ளியைச் சேரச் செல்பவரான
பிள்ளையார், `வானளாவும் மலர்ச்
சோலைகளுடன் தோன்றும் இது எப்பதி?'
என்று
வினவ, தந்தையார் மகிழ்ச்சி
அடைந்து, `அது குவளை மலர்கள்
நிறைந்த வயல்களையுடைய திருநனிபள்ளியாகும்' எனக் கூற, அதைக் கேட்ட பிள்ளையார், நன்மை தரும் தமிழ்ப் பாமாலையான
திருப்பதிகத்தை அருளிச் செய்வார்,
பெ.
பு. பாடல் எண் : 115
"காரைகள் கூகை
முல்லை" எனநிகழ் கலைசேர்
வாய்மைச்
சீர்இயல்
பதிகம் பாடித் திருக்கடைக் காப்புத்
தன்னில்,
"நாரிஓர் பாகர் வைகும் நனிபள்ளி உள்கு
வார்தம்
பேர்இடர்
கெடுதற்கு ஆணை நமது" எனும்
பெருமை வைத்தார்.
பொழிப்புரை : `காரைகள் கூகை முல்லை' (தி.2 ப.84) எனத் தொடங்கிச் செல்லும் கலை ஞானமும்
சிவஞானமும் விளங்கும் சிறப்புக் கொண்ட இயற்பதிகத்தைப் பாடி, திருக்கடைக்காப்பில் `உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட
சிவபெருமான், நிலையாய்
எழுந்தருளியுள்ள திருநனிபள்ளியை நினைப்பவரின் பெரிய இடர்கள் யாவும் கெடுவதற்கு ஆணை
நமதாகும்' என்ற பெருமையினையும்
குறித்து அருளினார்.
`கலைசேர் பதிகம்', `வாய்மைச் சீர் இயற் பதிகம்' எனத் தனித்தனியே கூட்டுக. கலை -
நூலறிவு. வாய்மை - சிவஞானம். `காரைகள் கூகை' (தி.2 ப.84) எனத் தொடங்கும் இப்பதிகம்
பியந்தைக்காந்தாரத்தில் அமைந்ததாகும். இத்திருப்பதிகத்தின் திருக்கடைக்காப்பு, `இசையால் உரைத்த பனுவல் நடு இருள் ஆடும்
எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே.' என நிறைவுறுகிறது. இதனையே ஆசிரியர்
கொண்டெடுத்து மொழிவாராயினர்.
பெ.
பு. பாடல் எண் : 116
ஆதியார்
கோயில் வாயில் அணைந்து, புக்கு, அன்பு கூர
நீதியால்
பணிந்து போற்றி, நீடிய அருள்முன்
பெற்றுப்
போதுவார், தம்மைச் சூழ்ந்து பூசுரர் குழாங்கள்
போற்றும்
காதல் கண்டு, அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவ
னார்தாம்.
பொழிப்புரை : நனிபள்ளியில் வீற்றிருந்தருளும்
பழம்பொருளாய சிவபெருமானின் கோயில் வாயிலை அடைந்து, உட்சென்று, அன்புமிக நெறிப்பட வணங்கிப் போற்றி, அப்பெருமானின் பேரருளைப் பெற்று, வெளியே செல்பவரான கவுணியர் தலைவரான
பிள்ளையார், தம்மைச் சூழ இருந்து
அந்தணர் குழாம் போற்றுகின்ற அன்பைக் கண்டு, அங்கே விரும்பி எழுந்தருளியிருந்தார்.
இப்பதியின்
எல்லையிலிருந்தே பாடியருளிய பிள்ளையார், இறைவன்
திருமுன் நின்றும் பாடியிருப்பர். `நீதியாற் பணிந்து
போற்றி' என ஆசிரியர்
அருளுமாற்றானும் இவ்வுண்மை உணரலாம். எனினும் இத்திருப்பதிகம் கிடைத்திலது.
திருஞானசம்பந்தர்
திருப்பதிகம்
2.084 திருநனிபள்ளி பண் - பியந்தைக் காந்தாரம்
திருச்சிற்பறம்பலம்
பாடல்
எண் : 1
காரைகள்
கூகைமுல்லை களவாகை யீகை
படர்தொடரி கள்ளி
கவினிச்
சூரைகள்
பம்மிவிம்மு சுடுகாடு அமர்ந்த
சிவன்மேய சோலை
நகர்தான்,
தேரைகள்
ஆரைசாய மிதிகொள்ள வாளை
குதிகொள்ள வள்ளை துவள
நாரைகள்
ஆரல்வாரி வயல்மேதி வைகும்
நனிபள்ளி போலும்
நமர்காள்.
பொழிப்புரை :நமர்காள்! காரை, கூகை, முல்லை, களவாகை, ஈகை, படர்ந்த தொடரி, கள்ளி ஆகிய தாவரங்கள் அழகுச் செய்யச்
சூரை செறிந்த சுடுகாட்டை விரும்பும் சிவபிரான் எழுந்தருளிய சோலைகள் சூழ்ந்த நகர், தேரைகள் ஆரைக்கொடிகளை மிதித்துத்துள்ள, அதனைக் கண்ட வாளைமீன்கள் துள்ள, அதனால் வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல் மீன்களை வாரி உண்ணுமாறு
அமைந்த வயல்களில் எருமைகள் படிந்து மகிழும் நனிபள்ளியாகும்.
பாடல்
எண் : 2
சடையிடைப்
புக்குஒடுங்கி உளதங்கு வெள்ளம்
வளர்திங்கள் கண்ணி
அயலே,
இடையிடைவைத்ததுஒக்கு
மலர்தொத்து மாலை
இறைவன் இடங்கொள்
பதிதான்,
மடைஇடை
வாளைபாய முகிழ்வாய் நெரிந்து
மணநாறு நீலம் மலரும்
நடையுடை
அன்னம்வைகு புனலம் படப்பை
நனிபள்ளி போலும்
நமர்காள்.
பொழிப்புரை :சடையிடைப்புக்கு ஒடுங்கியுள்ளதாய்த்
தங்கிய கங்கையையும், வளரும் பிறையாகிய
கண்ணியையும், இடையிடையே விரவிய
கொத்தாகிய மாலையையும் உடைய இறைவன் இடங்கொண்டருளும் பதி, மடையிடையே வாளைமீன்கள் துள்ள, முகிழ்த்துள்ள வாய் விரிந்து மணம்
வீசும் குவளைமலர்களுடையன வாய் நடையில் சிறந்த அன்னங்கள் வாழும் நீர்நிலைகளை உடைய
தோட்டங்கள் சூழ்ந்த நனிபள்ளியாகும்.
பாடல்
எண் : 3
பெறுமலர்
கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல்
ஒழிபாடு இலாத
பெருமான்
கறுமலர்
கண்டமாக விடம்உண்ட காளை
இடம்ஆய காதல்
நகர்தான்,
வெறுமலர்
தொட்டுவிட்ட விசைபோன கொம்பின்
விடுபோது அலர்ந்த
விரைசூழ்
நறுமலர்
அல்லிபுல்லி ஒலிவண்டு உறங்கு
நனிபள்ளி போலும்
நமர்காள்.
பொழிப்புரை :அடியவர்கள்
தங்களுக்குக் கிடைத்த மலர்களைக் கொண்டு வழிபட அதனை ஒழியாது ஏற்றருளும் தலைவனும், கருங்குவளைமலர் போலத்தனது கண்டம் நிறம்
உறுமாறு விடத்தை உண்ட காளையும் ஆகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், வண்டுகள் தங்கித் தேன் உண்டு விட்ட
வெறுமலர்களோடு கூடி விசைத்து எழும் கொம்புகளில் விரியும் பருவத்துள்ள மணம்
பொருந்திய மலர்களின் தேன் உண்டு அகஇதழ்களில் வண்டுகள் உறங்கும் பொழில்களை உடைய
நனிபள்ளியாகும்.
பாடல்
எண் : 4
குளிர்தரு
கங்கைதங்கு சடைமாடு இலங்கு
தலைமாலை யோடு குலவி,
ஒளிர்தரு
திங்கள்சூடி, உமைபாகம் ஆக
உடையான் உகந்த
நகர்தான்,
குளிர்தரு
கொம்மலோடு குயில்பாடல் கேட்ட
பெடைவண்டு தானும்
முரல
நளிர்தரு
சோலைமாலை நரைகுருகு வைகு
நனிபள்ளி போலும்
நமர்காள்.
பொழிப்புரை :குளிர்ந்த கங்கை
தங்கிய சடையின்கண் விளங்கிய தலைமாலையோடு கூடி, ஒளிதரும் திங்களைச் சூடி, உமையம்மையை ஒருபாகமாக உடைய பெருமான்
உகந்து எழுந்தருளிய நகர், குளிர்ந்த, கொம்பு என்னும் இசைக்கருவியின்
பாடல்களோடு குயில் கூவும் இசையையும் கேட்ட பெடை வண்டு தானும் முரல நண்ணிய
சோலைகளில் வரிசையாக நாரைகளும் குருகுகளும் வைகும் நனிபள்ளியாகும்.
பாடல்
எண் : 5
தோடுஒரு
காதன்ஆகி, ஒருகாது இலங்கு
சுரிசங்கு நின்று
புரளக்
காடுஇடம்
ஆகநின்று கனல்ஆடும் எந்தை
இடம்ஆய காதல்
நகர்தான்,
வீடுஉடன்
எய்துவார்கள் விதிஎன்று சென்று
வெறிநீர் தெளிப்ப
விரலால்,
நாடுஉடன்
ஆடுசெம்மை ஒலிவெள்ளம் ஆரும்
நனிபள்ளி போலும்
நமர்காள்.
பொழிப்புரை :ஒருகாதில்
தோடணிந்தவனாய், ஒருகாதில் வளைந்த
சங்கைக் குழைதாழ நின்று புரளுமாறு அணிந்தவனாய்ச் சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக்
கொண்டு அனலிடை ஆடும் எந்தையாகிய சிவபிரானது பதி, வீடு அடைய விரும்பும் அடியவர்கள் விதி
முறையிது என்று தெரிந்து நீராடி மணம் பொருந்திய நீரை விரலால் தெளித்து
அர்க்கியம்தர, ஒலியோடு
பெருவெள்ளமாய்ப் பெருகி நாடு முழுதும் பரவி வரும் காவிரியின் கரையில் விளங்கும்
நனிபள்ளியாகும்.
பாடல்
எண் : 6
மேகமொடு
ஆடுதிங்கள் மலரா அணிந்து
மலையான் மடந்தை
மணிபொன்
ஆகமொர்
பாகம்ஆக அனல்ஆடும் எந்தை
பெருமான் அமர்ந்த
நகர்தான்,
ஊகமொடு
ஆடுமந்தி உகளும் சிலம்ப
அகில்உந்தி ஒண்பொன்
இடறி
நாகமொடு
ஆரம்வாரு புனல்வந்து அலைக்கும்
நனிபள்ளி போலும்
நமர்காள்.
பொழிப்புரை :மேகங்களோடு ஓடும்
திங்களைக் கண்ணியாகச் சூடி, மலைமகளை அழகிய
பொன்மயமான திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு அழலின்கண் நின்று ஆடும் எந்தையாகிய
பெருமான் எழுந்தருளியநகர். கருங்குரங்குகளும், மந்திகளும் விளையாடும் மலையின்கண் உள்ள
அகில் மரங்களையும் ஒளி பொருந்திய பொன்னையும் நாகமரம் சந்தன மரம் ஆகியவற்றையும்
புரட்டியும் எற்றியும் ஓடிவரும் காவிரிநீர் வந்து அலைக்கும் நனிபள்ளியாகும்.
பாடல்
எண் : 7
தகைமலி
தண்டுசூலம் அனல்உமிழும் நாகம்
கொடுகொட்டிவீணை
முரல,
வகைமலி
வன்னிகொன்றை மதமத்தம் வைத்த
பெருமான் உகந்த
நகர்தான்,
புகைமலி
கந்தமாலை புனைவார்கள் பூசல்
பணிவார்கள் பாடல்
பெருகி
நகைமலி
முத்துஇலங்கு மணல்சூழ் கிடக்கை
நனிபள்ளி போலும்
நமர்காள்
பொழிப்புரை :பெருமை பொருந்திய
தண்டு , சூலம் , அனல் உமிழும் நாகம் ஆகியவற்றை உடையவராய்
, வகையாக அமைந்த வன்னி
கொன்றை ஊமத்தை ஆகியவற்றை அணிந்து கொடுகொட்டி என்னும் திருக்கூத்தியற்றிய பெருமான்
உகந்த நகர் , புகையாக எழுந்த
மணத்துடன் மாலை புனைவார்கள் புகழும் ஓசையும் , பணிந்து போற்று வார் பாடும் பாடல்
ஓசையும் பெருகி ஒளிவீசும் முத்துக்கள் இலங்கும் மணல் சூழ்படப்பைகளை உடைய
நனிபள்ளியாகும் .
பாடல்
எண் : 8
வலமிகு
வாளன்வேலன் வளைவாள் எயிற்று
மதியா அரக்கன் வலியோடு
உலமிகு
தோள்கள்ஒல்க விரலால் அடர்த்த
பெருமான் உகந்த
நகர்தான்,
நிலமிகு
கீழுமேலும் நிகர்ஆதும் இல்லை
எனநின்ற நீதி அதனை
நலமிகு
தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
நனிபள்ளி போலும்
நமர்காள்
பொழிப்புரை :வலிமை மிக்க வாள்
வேல் ஆகியவற்றையும் வளைந்த ஒளி மிக்க பற்களையும் உடைய மதியா அரக்கனாகிய இராவணன்
உடல் வலிமையோடு கற்றூண் போன்ற தோள் வலியும் இழக்குமாறு கால் விரலால் அடர்த்த
பெருமான் உகந்த நகர் , கீழுல கிலும்
மேலுலகிலும் தனக்கு நிகர் யாருமில்லை என்கின்ற நீதி வடிவினனாகிய அவனை நன்மைமிக்க
தொண்டர்கள் நாளும் திருவடிகளைப் பரவும் நனிபள்ளியாகும் .
பாடல் எண் : 9
நிறவுரு
ஒன்றுதோன்றி எரிஒன்றி நின்றது
ஒருநீர்மை, சீர்மை நினையார்
அறஉறு
வேதநாவன், அயனோடுமாலும்
அறியாத அண்ணல்
நகர்தான்,
புறவிரி
முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை
புனைகொன்றை
துன்று பொதுளி
நறவிரி
போதுதாது புதுவாச நாறும்
நனிபள்ளி போலும்
நமர்காள்
பொழிப்புரை :நிறம் பொருந்தியதொரு
எரிவடிவம் தோன்றித் தங்களிடையே நிற்க அதன் நீர்மை சீர்மை ஆகியவற்றை நினையாத வராய்
அறம்பொருந்திய வேதங்களை ஓதும் நாவினனாகிய பிரமனும் திருமாலும் முடி அடிகளைத்
தேடமுயன்று அறியாதவராய் நின்ற தலைவனது நகர் , முல்லை நிலத்தில் விரிந்த முல்லை , மல்லிகை , அசோகு , புன்னை , கொன்றை ஆகியன செறிந்த சோலைகளில் பூத்த
மலர்களில் புதுமணம் கமழும் நனிபள்ளியாகும் .
பாடல்
எண் : 10
அனமிகு
செல்குசோறு கொணர்கென்று கையில்
இடவுண்டு பட்ட அமணும்,
மனமிகு
கஞ்சிமண்டை அதில்உண்டு தொண்டர்
குணம்இன்றி நின்ற
வடிவும்,
வினைமிகு
வேதநான்கும் விரிவித்த நாவின்
விடையான் உகந்த
நகர்தான்,
நனமிகு
தொண்டர்நாளும் அடிபரவல் செய்யு
நனிபள்ளி போலும்
நமர்காள்
பொழிப்புரை :அன்னமாக , வயிற்றுக்குட் செல்லும் சோறு கொணர்க
எனக் கேட்டுக் கையில் இட உண்டு திரியும் அமணரும் , மனம் விரும்பிக் கஞ்சியைப்
பனைமட்டையாலியன்ற மண்டையில் ஏற்றுண்டு தொண்டர்க்குரிய குணமின்றி நிற்கும்
புத்தரும் கூறுவன வற்றைக் கொள்ளாது கிரியைகள் மிகுந்த வேதங்கள் நான்கையும் ஓதிய
நாவினை உடைய விடையூர்தியான் விரும்பிய நகர் , தெளிந்த ஞானமுடைய தொண்டர்கள் நாள்தோறும்
திருவடிகளைப் பரவிப் போற்றும் நனிபள்ளியாகும் .
பாடல்
எண் : 11
கடல்வரை
யோதமல்கு கழிகானல் பானல்
கமழ்காழி என்று
கருதப்
படுபொருள்
ஆறுநாலும் உளதாக வைத்த
பதியான ஞான முனிவன்,
இடுபறை
ஒன்றஅத்தர் பியன்மேல் இருந்துஇன்
இசையால் உரைத்த
பனுவல்
நடுஇருள்
ஆடும்எந்தை நனிபள்ளி உள்க ,
வினைகெடுதல் ஆணை நமதே
பொழிப்புரை :கடல் எல்லையில் உள்ள
வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும் உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி
என்று கருதப்படும் பதியின்கண் நால்வேத , ஆறங்கங்
களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து
இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப் பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை
நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும் .
திருச்சிற்பறம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 189
ஆண்டஅரசு
எழுந்தருள, கோலக் காவை
அவரோடும் சென்று இறைஞ்சி, அன்பு கொண்டு
மீண்டு
அருளினார், அவரும் விடைகொண்டு
இப்பால்
வேதநாயகர் விரும்பும்
பதிகள் ஆன
நீண்ட
கருப்பறியலூர் புன்கூர் நீடூர்
நீடு திருக்குறுக்கை திருநின்றியூரும்
காண்தகைய
நனிபள்ளி முதலா நண்ணிக்
கண்ணுதலார்
கழல்தொழுது வணங்கிச் செல்வார்.
பொழிப்புரை : திருநாவுக்கரசர்
எழுந்தருளவே அவருடன் சென்று திருக்கோலக்காவைப் பணிந்து அன்பு விடைபெற்று
திருஞானசம்பந்தர் திரும்பினார். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக்
கொண்டு மேலும் மறைமுதல்வரான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் பதிகளாய
பெருமைமிக்க திருக்கருப்பறியலூர்,
திருப்புன்கூர், திருநீடுர், திருக்குறுக்கை வீரட்டம், திருநின்றியூர், காணும் தகைமையுடைய திருநனிபள்ளி என்ற
இவை முதலான பதிகளைச் சேர்ந்து நெற்றிக்கண் உடையவரின் திருவடிகளை வணங்கி
மேற்செல்பவராய்.
குறிப்புரை : திருக்கோலக்காவில்
அப்பர் அருளிய பதிகம் கிடைத்திலது. இனி இப்பாடலில் குறிக்கப்பட்ட திருப்பதிகள்
ஆறனுள் திருக்கருப்பறியலூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. அடுத்து இருக்கும்
திருப்புன்கூர், திருநீடுர் ஆகிய இரு
பதிகளுக்கும் ஒருங்கியைந்தவாறு ஒரு பதிகம் உள்ளது. அது `பிறவாதே தோன்றிய`(தி.6 ப.11) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும்.
திருக்குறுக்கை
வீரட்டத்திற்கு இரு பதிகங்கள் கிடைத்து உள்ளன.
1. `ஆதியிற் பிரமனார்` (தி.4 ப.49)- திருநேரிசை;
2. `நெடியமால்` (தி.4 ப.50) - திருநேரிசை.
இவற்றுள்
முன்னைய பதிகத்தில் பாடல் தோறும் வரலாறுகள் அமைந்துள்ளன. இரண்டாவது பதிகத்தில்
இரண்டே பாடல்கள் உள்ளன.
திருநின்றியூரில்
அருளிய திருக்குறுந்தொகைப் பதிகம் `கொடுங்கண் வெண்டலை` (தி.5 ப.23) என்பதாம்.
திருநனிபள்ளியில்
அருளிய பதிகம் `முற்றுணை ஆயினானை` (தி.4 ப.70) எனத் தொடங்கும் திருநேரிசையாம்.
இனி, இப்பாடற்கண் நனிபள்ளி முதலா நண்ணி என
வருதலின் வேறு பிற பதிகளும் தொழுது சென்றமை விளங்குகின்றது. அப்பதிகளும்
பாடியருளிய பதிகங்களும்:
1. திருக்குரக்குக்கா: `மரக்கொக்காம்` (தி.5 ப.75)
– திருக்குறுந்தொகை.
2. புள்ளிருக்கு வேளூர்:
(அ). `வெள்ளெருக்கு` (தி.5 ப.79) - திருக்குறுந்தொகை;
(ஆ). `ஆண்டானை` (தி.6 ப.54) - திருத்தாண்டகம்.
3. திருவெண்காடு:
(அ). `பண்காட்டி` (தி.5 ப.49) - திருக்குறுந்தொகை
(ஆ). `தூண்டுசுடர்` (தி.6 ப.35) - திருத்தாண்டகம்.
4. திருச்சாய்க்காடு:
(அ) `தோடுலாமலர்` (தி.4 ப.65) - திருநேரிசை.
(ஆ). `வானத்து இளமதியும்` (தி.6 ப.82) - திருத்தாண்டகம்.
5. திருவலம்புரம்:
(அ). `தெண்டிரை` (தி.4 ப.55) - திருநேரிசை
(ஆ). `மண்ணளந்த` (தி.6 ப.58) - திருத்தாண்டகம்.
திருநாவுக்கரசர்
திருப்பதிகம்
4. 070 திருநனிபள்ளி திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
முன்துணை
ஆயினானை, மூவர்க்கும் முதல்வன்
தன்னை,
சொல்துணை
ஆயினானை, சோதியை, ஆதரித்து
உற்றுஉணர்ந்து
உருகி ஊறி உள்கசிவு உடைய
வர்க்கு
நல்துணை
ஆவர் போலும் நனிபள்ளி அடிக ளாரே.
பொழிப்புரை : நனிபள்ளிப் பெருமான்
முதல் துணைவராய் , மூவர்க்கும் தலைவராய்
, வேதத்துக்கு
இணையானவராய்ச் சோதி வடிவமான தம்மை விரும்பி நன்கு உணர்ந்து உள்ளம் நெகிழ்ந்து
உள்ளத்தில் பக்தி ஊறுதலால் நீராய் உருகிக் கண்ணீர் பெருக்கும் அடியவர்களுக்குப்
பெரிய துணையாபவராய் உள்ளார்.
பாடல்
எண் : 2
புலர்ந்தகால்
பூவு நீரும் கொண்டுஅடி போற்ற
மாட்டா
வலஞ்செய்து
வாயின் நூலால் வட்டணைப் பந்தர்
செய்த
சிலந்தியை
அரையன் ஆக்கிச் சீர்மைகள் அருள
வல்லார்
நலந்திகழ்
சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிக ளாரே.
பொழிப்புரை : அழகு விளங்கும்
சோலைகளால் சூழப்பட்ட நனிபள்ளிப்பெருமான் , பொழுது விடிந்த அளவில் பூவும் அபிடேக
தீர்த்தமும் கொண்டு திருவடியை வணங்க இயலாத பிறப்பினதாகையாலே , பெருமானைச் சுற்றி வலமாக வந்து தன்
வாயிலிருந்து சுரக்கும் நூலினாலே வட்டமாகப் பந்தலை அமைத்து வழிபட்ட சிலந்தியை
அரசனாக்கி , எல்லா நலன்களையும்
அருளிய ஆற்றலுடையவராவர் .
பாடல்
எண் : 3
எண்பதும்
பத்தும் ஆறும் என்உளே இருந்து
மன்னிக்
கண்பழக்கு அது
ஒன்றும் இன்றிக் கலக்க நான் அலக்கழிந்தேன்,
செண்பகந்
திகழும் புன்னை செழுந்திரள் குரவம்
வேங்கை
நண்புசெய்
சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிக ளாரே.
பொழிப்புரை : செண்பகம் , விளங்கும் புன்னை , செழித்து ஓங்கி வளர்ந்த குரவம் வேங்கை
இவை கலந்து காணப்படும் சோலைகள் சூழ்ந்த நனிபள்ளிப் பெருமானே ! 96 தத்துவ தாத்துவிகங்களும் என்
உடம்பினுள்ளே நிலையாக இருந்து சிறிதும் கண்ணோட்டமின்றி என்னைக் கலக்கவே அடியேன்
துன்பத்தாற் சீர்குலைந்தேன் .
பாடல்
எண் : 4
பண்ணின்ஆர்
பாடல் ஆகி, பழத்தினில் இரதம் ஆகி,
கண்ணின்ஆர்
பார்வை ஆகிக் கருத்தொடு கற்பம் ஆகி,
எண்ணினார்
எண்ண ஆகி, ஏழுலகு அனைத்தும் ஆகி,
நண்ணினார்
வினைகள் தீர்ப்பார், நனிபள்ளி அடிக ளாரே.
பொழிப்புரை : நனிபள்ளிப்பெருமான்
பண் அமைந்த பாடலாகவும் , பழத்தின் சுவையாகவும்
, கண்ணிற் பொருந்திய
பார்வையாகவும் , கருத்தில் அமைந்த
காதல் நினைவாகவும் , எண்ணுகின்றவருடைய
எண்ணமாகவும் ஏழுலகங்களாகவும் தம்மைச் சரணமாக அடைந்த அடியவர்களுடைய வினைகளைப்
போக்குபவராகவும் உள்ளார் .
பாடல்
எண் : 5
துஞ்சுஇருள்
காலை மாலை தொடர்ச்சியை மறந்து
இராதே
அஞ்செழுத்து
ஓதின் நாளும் அரனடிக்கு அன்பு
அதுஆகும்,
வஞ்சனைப்
பால்சோறு ஆக்கி வழக்குஇலா அமணர் தந்த
நஞ்சுஅமுது
ஆக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே.
பொழிப்புரை : இருள் நீங்கும்
காலையிலும் மாலையிலும் பெருமானுக்கும் தமக்கும் உள்ள உறவை மறக்காமல்
திருவைந்தெழுத்தை ஓதினால், நாடோறும் சிவனடிக்கண்
அன்பு பெருகி வளரும். அத்தகைய அன்பு வளருவதன் பேறாக செய்யும் வஞ்சனையால்
பாற்சோற்றை நஞ்சுடன் கலந்து சமைத்து நல்ல வழக்கம் இல்லாத சமணர்கள் கொடுத்த அந்த நஞ்சை
அமுதமாக்கி அருளினார் திருநனிபள்ளியடிகள் .
பாடல்
எண் : 6
செம்மலர்க்
கமலத் தோனும் திருமுடி காண
மாட்டான்,
அம்மலர்ப்
பாதங் காண்பான் ஆழியான் அகழ்ந்தும்
காணான்,
நின்மலன்
என்றுஅங்கு ஏத்தும் நினைப்பினை அருளி
நாளும்
நம்மலம்
அறுப்பர் போலும் நனிபள்ளி அடிக ளாரே.
பொழிப்புரை : செந்தாமரைப் பூவிலுள்ள
பிரமன் திருமுடியைக் காணவும், சக்கரத்தை ஏந்திய
திருமால் அகழ்ந்தும், தாமரை போன்ற
பாதங்களைக் காணவும் இயலாதாராய்த் தம்மைக்
களங்கம் அற்றவர் என்று போற்றும் எண்ணத்தை அவர்களுக்கு வழங்கி நம்முடைய
களங்கங்களையும் போக்குபவர் நனிபள்ளி அடிகளார் .
பாடல்
எண் : 7
அரவத்தால்
வரையைச் சுற்றி அமரரோடு அசுரர் கூடி
அரவித்துக்
கடையத் தோன்றும் ஆலநஞ்சு அமுதா
உண்டார்,
விரவித்தம்
அடியர் ஆகி வீடுஇலாத் தொண்டர்
தம்மை
நரகத்தில்
வீழ ஒட்டார், நனிபள்ளி அடிக ளாரே.
பொழிப்புரை : மந்தரம் என்ற மத்திலே
வாசுகி என்ற பாம்பைக் கடை கயிறாகச் சுற்றித் தேவரும் அசுரரும் பேரொலி செய்து
கடைந்த போது தோன்றிய நஞ்சத்தை அமுதாக உண்டவராய், தம் அடியவருடன் கலந்து என்றும் தம் அடிமையில்
நீங்குதல் இல்லாத அவர்களை நரகத்தில் வீழாமல் காப்பவராய் உள்ளார் நனிபள்ளி அடிகளார்
.
பாடல்
எண் : 8
மண்ணுளே
திரியும் போது வருவன பலவும் குற்றம்
புண்ணுளே
புரைபு ரையன் புழுப்பொதி பொள்ள
லாக்கை
* * * * * * * * *
பொழிப்புரை : இவ்வுலகினில்
சுற்றித் திரியும் போது பல குற்றங்கள் ஏற்படுகின்றன. புண்ணினுள்ளே பல துவாரங்களை
உடையதாய்ப் புழுக்கள் உள்ளே மறைந்திருக்கும் பலதுளைகளை உடைய உடம்பு ...
பாடல்
எண் : 9
பத்தும் ஓர்
இரட்டி தோளான் பாரித்து மலை
எடுக்கப்
பத்தும் ஓர்
இரட்டி தோள்கள் படர்உடம்பு அடர
ஊன்றிப்
பத்துவாய்
கீதம் பாடப் பரிந்து அவற்கு அருள்
கொடுத்தார்
பத்தர் தாம்
பரவி ஏத்தும் நனிபள்ளிப் பரம னாரே.
பொழிப்புரை : பக்தர்கள் முன்
நின்று துதித்துப் புகழும் நனிபள்ளிப் பெருமான் இருபது தோள்களை உடைய இராவணன் தன்
பெருமையைப் பரக்கச் சொல்லிக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட , இருபது தோள்களை உடைய அவன் உடல்
வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றிப் பின் அவன் தன் பத்து வாய்களாலும் இசைப்
பாடல்களைப் பாட அவனுக்கு அருள் செய்தவர் ஆவர் .
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
சுந்தரர்
திருப்பதிக வரலாறு:
சுவாமிகள், திருவெண்காட்டீசரைப் பணிந்து, திருநனி பள்ளியடைந்து வணங்கிப்
பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12
ஏயர்கோன். புரா. 149)
பெரிய
புராணப் பாடல் எண் : 148
தேவர்பெரு
மான்தன்னைத் திருச்சாய்க்காட் டினில்பணிந்து,
பாஅலர்செந்
தமிழ்மாலைத் திருப்பதிகம் பாடிப்போய்,
மேவலர்தம்
புரம்எரித்தார் வெண்காடு பணிந்து ஏத்தி,
நாவலர்காவலர்
அடைந்தார் நனிபள்ளித் திருநகரில்.
பொழிப்புரை : திருச்சாய்க்காடு
என்னும் திருப்பதிக்குச் சென்று சேர்ந்து, தேவர் தலைவரான பெருமானைப் பணிந்து, பாடலாக அலரும் செந்தமிழ் மாலைத்
திருப்பதிகத்தைப் பாடி, அப்பால் சென்று, பகைவருடைய முப்புரங்களையும் எரித்த
பெருமானின் திருவெண்காடு என்னும் திருப்பதிக்குச் சென்று பணிந்து போற்றி, நாவன்மையுடைய புலவர்களுக்கு என்றும்
காவலராய நாவலூரர் திருநனிபள்ளித் திருநகரிடத்துச் சென்றார்.
பெ.
பு. பாடல் எண் : 149
நனிபள்ளி
அமர்ந்தபிரான் கழல்வணங்கி,
நல்தமிழின்
புனிதநறுந்
தொடைபுனைந்து, திருச்செம்பொன்
பள்ளிமுதல்
பனிமதிசேர்
சடையார்தம் பதிபலவும் பணிந்துபோய்,
தனிவிடைமேல்
வருவார்தம் திருநின்றி யூர்சார்ந்தார்.
பொழிப்புரை : திருநனிபள்ளியில்
அமர்ந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நல்ல தமிழினால் தூய்மையும், இனிமையும் விரவிய தமிழ்மாலை தொடுத்து
அணிவித்துத் திருச்செம்பொன்பள்ளி முதலாக உள்ள குளிர்ந்த இளம்பிறையை அணிந்த
சடையையுடைய பெருமானது திருப்பதிகள் பலவும் பணிந்து சென்று, ஒப்பற்ற ஆனேற்றின் மீது இவர்ந்தருளும்
பெருமானது திருநின்றியூர் என்னும் திருப்பதியைச் சேர்ந்தார்.
திருநனிபள்ளியில்
அருளிய பதிகம் `ஆதியன்'(தி.7 ப.97) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணில் அமைந்த
பதிகமாகும். திருச்செம்பொன்பள்ளி முதலான பதிபலவும் என்பன, திருப்பறியலூர், திருவிளநகர், திருமயிலாடுதுறை, திருக்கஞ்சாறு முதலாயினவாகலாம் என்பர்
சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.
சுந்தரர்
திருப்பதிகம்
7. 097 திருநனிபள்ளி பண் - பஞ்சமம்
திருச்சிற்பறம்பலம்
பாடல்
எண் : 1
ஆதியன், ஆதிரையன், அயன் மால்அறி
தற்குஅரிய
சோதியன், சொற்பொருளாய்ச் சுருங் காமறை
நான்கினையும்
ஓதியன், உம்பர்தம்கோன், உலகத்தினுள்
எவ்வுயிர்க்கும்
நாதியன், நம்பெருமான், நண்ணும் ஊர்நனி
பள்ளியதே
பொழிப்புரை : எப்பொருட்கும்
முதலானவனும் , ஆதிரை நாண் மீனைத்
தனக்கு உரியதாகக் கொண்டவனும் , பிரமனும் திருமாலும்
அறிதற்கரிய ஒளிவடிவானவனும் , சொல்லும்
சொற்பொருளுமாய் நின்று , சுருங்குதல் இல்லாத
வேதங்கள் நான்கினையும் ஓதியவனும் ,
தேவர்களுக்குத்
தலைவனும் , உலகில் உள்ள எல்லா
உயிர்கட்கும் தந்தையும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர் , திருநனி பள்ளியே .
பாடல்
எண் : 2
உறவுஇலி, ஊனம்இலி , உண ரார்புரம்
மூன்றுஎரியச்
செறுவிலி, தன் நினைவார் வினை ஆயின
தேய்ந்து அழிய
அறவில
கும்அருளான், மருள்ஆர்பொழில்
வண்டுஅறையும்
நறவிரி
கொன்றையினான், நண்ணும் ஊர்நனி
பள்ளியதே
பொழிப்புரை : உறவுத் தொடக்கு
இல்லாதவனும் , குறைவில்லாத வனும் , தன்னை மதியாதவரது மூன்று ஊர்களும் எரிந்தொழியும்படி
அழித்த வில்லை உடையவனும் , தன்னை நினைபவரது வினை
யெல்லாம் வலிமை குன்றி அழியும்படி ,
மிகவும்
விளங்குகின்ற திரு வருளை உடையவனும்,
தேனோடு
மலர்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்தவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர் , மயக்கத்தைத் தருகின்ற சோலைகளில் வண்டுகள்
ஒலிக்கின்ற திருநனிபள்ளியே .
பாடல்
எண் : 3
வான்உடை
யான்,பெரியான், மனத் தாலும்
நினைப்பரியான்,
ஆன்இடை
ஐந்துஅமர்ந்தான், அணு ஆகியொர் தீயுருக்கொண்டு
ஊன்உடை
இவ்வுடலம் ஒடுங் கிப்புகுந்
தான்,பரந்தான்,
நான்உடை
மாடுஎம்பிரான், நண்ணும் ஊர்நனி பள்ளியதே
பொழிப்புரை : விண்ணுலகத்தைத் தனதாக
உடையவனும் , யாவரினும் பெரியோனும்
, மனத்தாலும்
நினைத்தற்கரியவனும் , பசுவினிடத்துத்
தோன்றுகின்ற ஐந்து பொருள்களை விரும்புபவனும் , நுண்ணிய பொருளாகி , சுடர் வடிவத்தைக்கொண்டு , ஊனையுடைய தாகிய இவ்வுடம்பினுள் அடங்கிப்
புகுந்தவனும் , உலகம் எல்லாம்
தன்னுள் அடங்க விரிந்தவனும் , நான் உடைய செல்வமாய்
இருப் பவனும் ஆகிய எம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் திருநனி பள்ளியே .
பாடல்
எண் : 4
ஓடு உடையன் கலனா உடை கோவண வன்,உமைஓர்
பாடு உடையன்,பலிதேர்ந்து உணும் பண்புடை யன்,பயிலக்
காடுஉடை
யன்இடமா மலை ஏழும், கருங்கடல்சூழ்
நாடுஉடை
நம்பெருமான் நண்ணும் ஊர்நனி
பள்ளியதே.
பொழிப்புரை : ஓட்டினை உண்கலமாகவும்
, கோவணத்தை உடையாகவும்
உடையவனும், ஒரு பக்கத்தில் உமையை
உடையவனும், பிச்சை எடுத்து
உண்ணும் தன்மையை உடையவனும், வாழ்வதற்குரிய
இடமாகக் காட்டை உடையவனும், ஏழு மலைகளையும், கரிய கடல் சூழ்ந்த ஏழு நாடுகளையும்
உடையவனும் ஆகிய நம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் , திருநனிபள்ளியே .
பாடல்
எண் : 5
பண்ணற்கு
அரியதொரு படை ஆழி தனைப்
படைத்துக்
கண்ணற்கு
அருள்புரிந்தான் கரு தாதவர் வேள்விஅவி
உண்ணற்கு
இமையவரை உருண்டு ஓட
உதைத்துஉகந்து
நண்ணற்கு
அரியபிரான் நண்ணும் ஊர்நனி
பள்ளியதே
பொழிப்புரை : ஆக்குதற்கு அரிதாகிய
சக்கரப்படை ஒன்றை ஆக்கி , அதனைத் திருமாலுக்கு
அளித்தவனும் , தன்னை மதியாத வனாகிய
தக்கனது வேள்வியில் அவிசை உண்ணச் சென்ற தேவர் அனைவரையும் சிதறி ஓடும்படி
தாக்கிப்பின் அவர்கட்கு அருள் செய்து , ஒருவராலும்
அணுகுதற்கரிய தலைவனாகியவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர், திருநனிபள்ளியே .
பாடல்
எண் : 6
மல்கிய
செஞ்சடைமேல் மதி யும்அர வும்உடனே
புல்கிய
ஆரணன், எம் புனிதன், புரி நூல் விகிர்தன்,
மெல்கிய
வில்தொழிலான், விருப்பன் பெரும்
பார்த்தனுக்கு
நல்கிய
நம்பெருமான், நண்ணும் ஊர்நனி
பள்ளியதே
பொழிப்புரை : நிறைந்த , சிவந்த சடையின்மேல் , சந்திரனும் பாம்பும் ஒருங்கியைந்து
பொருந்திய திருமேனியனாகிய வேத முதல்வனும் , எங்கள் தூயோனும் , முப்புரி நூலையணிந்த , வேறுபட்ட தன்மையை உடையவனும் , தன்மேல் அன்புடையவனாகிய மிக்க
தவத்தையுடைய அருச்சுனனுக்கு , மெல்லிய
வில்தொழிலினால் அருள்பண்ணினவனும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கும் ஊர் , திருநனிபள்ளியே .
பாடல்
எண் : 7
அங்கம்ஒர்
ஆறுஅவையும், அரு மாமறை
வேள்விகளும்,
எங்கும்
இருந்துஅந்தணர் எரி மூன்றவை
ஓம்பும்இடம்,
பங்கய
மாமுகத்தாள் உமை பங்கன் உறைகோயில்,
செங்கயல்
பாயும் வயல் திரு வூர்நனி
பள்ளியதே
பொழிப்புரை : தாமரை மலர்போலும்
முகத்தையுடைய உமா தேவியைப் பாகத்தில் உடையவனாகிய இறைவன் எழுந்தருளி யிருக்கின்ற
இடம் , அந்தணர்கள் மூன்று
எரிகளோடே , ஆறு அங்கங்களையும் , அரிய வேதங்களையும் , வேள்விகளையும் எவ்விடத்தும் இருந்து
வளர்க்கின்ற இடமாகிய, செவ்விய கயல் மீன்கள்
துள்ளுகின்ற வயல்களையுடைய அழகிய ஊரான திருநனி பள்ளியே .
பாடல்
எண் : 8
திங்கள்
குறுந்தெரியல் திகழ் கண்ணியன், நுண்ணியனாய்
நங்கள்
பிணி களைவான், அரு மாமருந்து, ஏழ்பிறப்பும்
மங்க,
திருவிரலால் அடர்த் தான்வல்
அரக்கனையும்,
நங்கட்கு
அருளும்பிரான், நண்ணும் ஊர்நனி
பள்ளியதே
பொழிப்புரை : சிறிய பிறையாகிய , விளக்கம் அமைந்த கண்ணிமாலையைச்
சூடியவனும் , நுண்ணியனாய் நின்று , எழுவகைப் பிறப்புக்களும் கெடும்படி , நம்மிடத்து உள்ள வினையாகிய நோயை
நீக்குகின்ற , உயர்ந்த , அரிய பெரிய மருந்தாய் உள்ளவனும் , வலிய அரக்கனாகிய இராவணனையும், அழகிய ஒரு விரலால் நெரித்தவனும் ஆகிய , நமக்கு அருள்செய்யும் பெருமான்
பொருந்தியிருக்கின்ற ஊர் , திருநனிபள்ளியே .
பாடல்
எண் : 9
ஏன
மருப்பினொடும் எழில் ஆமையும்
பூண்டுஉகந்து
வான
மதிள்அரணம் மலை யேசிலை
யாவளைத்தான்
ஊனம்இல்
காழிதன்னுள் உயர் ஞானசம் பந்தர்க்குஅன்று
ஞானம்
அருள்புரிந்தான் நண்ணும் ஊர்நனி
பள்ளியதே
பொழிப்புரை : பன்றியின் கொம்பையும்
, அழகிய ஆமை யோட்டையும்
விரும்பியணிந்து , வானத்திற்செல்லும்
மதிலாகிய அரணின்முன் , மலையையே வில்லாக
வளைத்து நின்றவனும் , குறையில்லாத
சீகாழிப்பதியுள் உயர்ந்தோராகிய ஞானசம்பந்தர்க்கு ஞானத்தை அருள்செய்தவனும் ஆகிய
இறைவன் பொருந்தியிருக்கும் ஊர் ,
திருநனிபள்ளியே
.
பாடல்
எண் : 10
காலமும்
நாள்கழியும் நனி பள்ளி
மனத்தின்உள்கிக்
கோலம்
அதுஆயவனைக் குளிர் நாவல
ஊரன்சொன்ன
மாலை
மதித்துஉரைப்பார் மண் மறந்து,வா னோர்உலகில்
சாலநல்
இன்பம்எய்தித் தவ லோகத்து இருப்பவரே
பொழிப்புரை : காலமும் நாள்தோறும்
கழியாநிற்கும் , அதனால் , குளிர்ந்த திருநாவலூரனாகிய நம்பியாரூரன்
, கருணையால்
திருவுருக்கொண்ட இறைவனைத் திருநனிபள்ளியுள் வைத்து மனத்தில் நினைத்துப் பாடிய
இப்பாமாலையின் பெருமையை உணர்ந்து பாடுவோர் , தேவருலகில் மிக்க இன்பத்தைத் துய்த்து, பின்பு மண்ணுலகத்தில் வருதலை மறந்து, சிவலோகத்தில் இருப்பவரே யாவர் .
திருச்சிற்பறம்பலம்
No comments:
Post a Comment