திரு வலம்புரம்




திரு வலம்புரம்
(மேலப் பெரும்பள்ளம்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் "மேலப் பெரும்பள்ளம்" என்று வழங்குகின்றனர்.

     மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில் சென்று காவிரி கடைமுக அணையை அடைந்து; அங்கிருந்தும், சீர்காழி - காவிரிப்பூம்பட்டினம் பேருந்தில் மேலையூர் சென்று அங்கிருந்தும் இத்திருத்தலத்தை அடையலாம்.


இறைவர்               : வலம்புரநாதர்.

இறைவியார்           : வடுவகிர்க்கண்ணி.

தல மரம்               : பனை.

தீர்த்தம்               : பிரம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம்.


தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - கொடியுடை மும்மதி.

                                              2. அப்பர் -1. தெண்டிரை தேங்கி,
                                                                  2. மண்ணளந்த மணிவண்ணர்.

                                             3. சுந்தரர் - எனக்கினித் தினைத்தனை.


          பூம்புகாருக்கு அதைச்சுற்றிய அகழியாக இவ்வூர் முற்காலத் திருந்தமையின் இஃது பெரும்பள்ளம் என்று பெயர் பெற்றது. கீழ்ப்புறமுள்ளது கீழப் பெரும்பள்ளம் என்றும்; மேற்புறமுள்ளது மேலப் பெரும்பள்ளம் என்றும் பெயர் வரலாயிற்று. காவிரிக்கு வலப்புறம் இருப்பதால் வலம்புரம் என்றாயிற்று.

          இத்தலத்தில் திருமால் வழிபட்டு வலம்புரி சங்கினைப் பெற்ற தலம்.

         ஏரண்ட முனிவர் வலஞ்சுழியில் காவிரியில் இறங்கி, இவ்வூரில் கரையேறியதாகக் கூறப்படுகிறது. இங்கு அம்முனிவருக்கு கோயிலுள்ளது. இக்கோயில் மாடக் கோயிலாகும். இங்கு ஏரண்ட முனிவர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.

          கருவறை சிற்ப வேலைப்பாடுடையது. தலப்பதிகக் கல்வெட்டுள்ளது.

          மூலவர் - பிருதிவி (மணல்) லிங்கம்.

          இக்கோயிலில் "பட்டினத்தாரை மன்னன் வரவேற்கும் ஐதீக விழா " என்று ஒருவிழா நடைபெறுகிறது.

     அது தொடர்பாக சொல்லப்படும் செய்தி :- மன்னன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். விளையாட்டுக்காகத் தான் இறந்து விட்டதாகப் பொய்ச் செய்தி சொல்லியனுப்பினான். அச்செய்தி கேட்ட அரசி அதிர்ச்சியுற்று இறந்தாள். மன்னனைப் பழி சூழ்ந்தது. நாடொறும் ஆயிரம் பேருக்கு உணவளித்தால் (சஹஸ்ரபோஜனம்) அதில் எவரேனும் மகான் ஒருவர் வந்து உணவுண்டால் அரண்மனை வாயிலில் உள்ள மணி ஒலிக்கும்; அப்போது பழிதீரும் என்று மன்னனுக்குச் சொல்லினர். அது கேட்ட மன்னனும் அவ்வாறே செய்வித்தான். பட்டினத்தார் ஒரு நாள் அங்கு வந்தார். உணவிடுதலையறிந்து அவ்விடம் சென்றார். அங்கிருந்தோர் அவரைப் பின்புறமாக வருமாறு சொல்ல அவரும் அவ்வாறே சென்றார். சென்றவர் அங்குக் குழியில் கஞ்சி வடிந்திருக்கக் கண்டு பசிபொறாமல் அதைத் தம் கைகளால் வாரிப் பருகினார். அவ்வளவில் மணியொலித்தது. மன்னன் ஓடிவந்து செய்தியறிந்து பட்டினத்தாரை வணங்கி வரவேற்றான்.

          விக்கிரம சோழன் கல்வெட்டில் இத்தலம் "இராசராச வளநாட்டு ஆக்கூர் நாட்டு தலைச்சங்காட்டுத் திருவலம்புரம்" என்றும்; சுவாமி "வலம்புரி உடையார் " என்றும் அம்பாள் "தடங்கண் நாச்சியார் " என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

          இக்கல்வெட்டுச் செய்தி ஒன்று "பண்டைநாளில் கோயில்களுக்கு ஆண்களை விற்கும் பழக்கம் இருந்ததாக" தெரிவிக்கின்றது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "எள்ளுப் நோய் ஏய் அவலம் புரத்தை எண்ணாமல் எண்ணுகின்றோர் மேய வலம்புரத்து மேதகவே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 120
கறைஅணி கண்டர் கோயில்
         காதலால் பணிந்து பாடி,
மறையவர் போற்ற வந்து
         திருவலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது, பாடும்
         "கொடியுடை" ஏத்திப் போந்து,
நிறைபுனல் திருச்சாய்க் காடு
         தொழுதற்கு நினைந்து செல்வார்.

         பொழிப்புரை : திருத்தலைச்சங்காட்டிலே நஞ்சின் கருமை கொண்ட கழுத்தையுடைய சிவபெருமானது கோயிலைப் பெருவிருப்பால் பணிந்து திருப்பதிகம் பாடியபின், அந்தணர்கள் தம்மைச் சூழ நின்று போற்ற, வெளியே வந்து, `திருவலம்புரம்' என்ற திருப்பதியில் சிவபெருமானைத் தொழுது `கொடியுடை மும்மதில்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றி, வெளியே வந்து, நிறைந்த நீரையுடைய திருச்சாய்க்காட்டுப் பதியைத் தொழுதற்கு நினைந்து செல்பவராய்,

         திருவலம்புரத்தில் அருளிய பதிகம் `கொடியுடை மும்மதில்' (தி.3 ப.103) எனத் தொடங்கும் பழம்பஞ்சுரப் பதிகமாகும்.


திருஞானசம்பந்தர்  திருப்பதிகம்

3. 103    திருவலம்புரம்               பண் - பழம்பஞ்சுரம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கொடியுடை மும்மதில் ஊடுருவக்
         குனிவெம் சிலைதாங்கி
இடிபட எய்த அமரர்பிரான்,
         அடியார் இசைந்துஏத்தத்
துடிஇடை யாளையொர் பாகமாகத்
         துதைந்தார் இடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும்
         வலம்புர நல்நகரே.

         பொழிப்புரை : கொடிகளையுடைய மூன்று மதில்களையும் ஊடுருவிச் செல்லுமாறு மேருமலையை வில்லாக வளைத்துத் தாங்கி , பேரொலியுடன் அம்மதில்கள் அழியும்படி அம்பெய்த தேவர்களின் தலைவரான சிவபெருமான் , அடியார்களெல்லாம் மனமொன்றிக் கூடிப்போற்ற உடுக்கை போன்று குறுகிய இடையுடைய உமா தேவியைப் பிரிவில்லாமல் தம் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்ற இடமாவது அழகிய எருமைகள் வயலிலே படியும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும் .


பாடல் எண் : 2
கோத்தகல் ஆடையும் கோவணமும்
         கொடுகொட்டி கொண்டுஒருகைத்
தேய்த்துஅன்று அநங்கனைத் தேசுஅழித்துத்
         திசையார் தொழுதுஏத்தக்
காய்த்தகல் ஆல்அதன் கீழ்இருந்த
         கடவுள் இடம்போலும்
வாய்த்தமுத் தீத்தொழில் நான்மறையோர்
         வலம்புர நல்நகரே.

         பொழிப்புரை : சிவபெருமான் காவியுடையும் , கோவணமும் அணிந்தவர் . ஒரு கையில் கொடுகொட்டி என்னும் வாத்தியத்தை ஏந்தி வாசிப்பவர் . மன்மதனை அன்று உருவழியும்படி எரித்தவர் . எல்லாத் திசைகளிலும் உள்ளவர்கள் தொழுது வணங்கும்படி , காய்கள் நிறைந்த கல்லால மரத்தின் கீழ்த் தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் வீற்றிருந்தவர் . அக்கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , முத்தீ வளர்த்து , நான்கு வேதங்களையும் நன்கு பயின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும் .


பாடல் எண் : 3
நொய்யதொர் மான்மறி கைவிரலின்
         நுனைமேல் நிலைஆக்கி
மெய்எரி மேனிவெண் நீறுபூசி
         விரிபுன் சடைதாழ
மைஇரும் சோலை மணங்கமழ
         இருந்தார் இடம்போலும்
வைகலும் மாமுழ வம்அதிரும்
         வலம்புர நல்நகரே.

         பொழிப்புரை : இலேசான உடம்பையுடைய மான்கன்றைத் தன் கைவிரல் நுனிமேல் நிலையாக நிற்குமாறு செய்து , நெருப்புப் போன்ற சிவந்த மேனியில் திருவெண்ணீற்றினைப் பூசி , விரிந்த சிவந்தசடை தாழ விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நாள்தோறும் நித்திய பூசையே திருவிழாப்போல் முழவதிரச் சிறப்புடன் நடக்கும் , இருளடர்ந்த பெரிய சோலைகளின் நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகராகும் .


பாடல் எண் : 4
ஊன்அமர் ஆக்கை உடம்புதன்னை
         உணரில் பொருள்அன்று,
தேன்அமர் கொன்றையி னான்அடிக்கே
         சிறுகாலை ஏத்துமினோ,
ஆன்அமர் ஐந்துங்கொண்டு ஆட்டுஉகந்த
         அடிகள் இடம்போலும்
வானவர் நாள்தொறும் வந்துஇறைஞ்சும்
         வலம்புர நல்நகரே.

         பொழிப்புரை : தசை முதலியவற்றால் கட்டப்பட்ட இவ்வுடம்பு நிலையற்றது என்பதை உணர்ந்து , அதனைப் பேணுதலையே பொருளாகக் கொள்ளாது , தேன்மணம் கமழும் கொன்றைமாலை அணிந்த சிவபெருமான் திருவடிகளையே சிறுவயது முதல் போற்றி வழிபடுங்கள் . பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுவதால் மகிழும் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் தேவர்கள் நாள்தோறும் வந்து வழிபடுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகராகும் .


பாடல் எண் : 5
செற்றுஎறியும் திரைஆர் கலுழிச்
         செழுநீர்கிளர் செஞ்சடைமேல்
அற்றுஅறியாது அனல்ஆடு நட்டம்
         அணிஆர் தடங்கண்ணி
பெற்றுஅறிவார் ஏருதுஏற வல்ல
         பெருமான் இடம்போலும்
வற்றுஅறியாப் புனல்வாய்ப்பு உடைய
         வலம்புர நல்நகரே.

         பொழிப்புரை : கரைகளில் மோதி வீசுகின்ற அலைகளையுடைய கங்கை நதியினை , ஒளி பொருந்திய சிவந்த சடையின்மீது நீங்காது தங்கவைத்த சிவபெருமான் நெருப்பைக் கையிலேந்தி நடனம் செய்பவர் . அழகு பொருந்திய அகன்ற கண்களையுடைய உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் . இடபத்தை வாகனமாக ஏற்றவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , வற்றுதலை அறியாத நீர்பெருகும் வாய்ப்புடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .


பாடல் எண் : 6
உண்ணவண் ணத்துஒளி நஞ்சம்உண்டு
         உமையோடு உடன்ஆகிச்
சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச்
         சுடர்ச்சோதி நின்றுஇலங்கப்
பண்ணவண் ணத்தன பாணிசெய்யப்
         பயின்றார் இடம்போலும்
வண்ணவண் ணப்பறை பாணிஅறா
         வலம்புர நல்நகரே.

         பொழிப்புரை : தேவர்கள் அமுதுண்ணும் பொருட்டு , கருநிறமும் ஒளியுமுடைய நஞ்சைத் தாம் உண்டவர் சிவபெருமான் . உமா தேவியை உடனாகக் கொண்டவர் . மணம் பொருந்திய திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசியவர் . சுடர்விடும் சோதியாய் விளங்குபவர் . பல்வேறு பண்களில் சிவபூதங்கள் நடனம் செய்பவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , பலவகைப் பட்ட பறை முதலிய வாத்தியங்களின் முழக்கு நீங்காத திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .


பாடல் எண் : 7
புரிதரு புன்சடை பொன்தயங்கப்
         புரிநூல் புரண்டுஇலங்க,
விரைதரு வேழத்தின் ஈர்உரிதோல்
         மேன்மூடி, வேய்புரைதோள்
அரைதரு பூந்துகில் ஆர்அணங்கை
         அமர்ந்தார் இடம்போலும்
வரைதரு தொல்புகழ் வாழ்க்கைஅறா
         வலம்புர நல்நகரே.

         பொழிப்புரை : முறுக்குண்ட மென்மையான சடை பொன்போல் ஒளிர , முப்புரிநூல் மார்பில் புரண்டு விளங்க , மிக வேகமாகச் செல்லக்கூடிய யானையின் இழுத்து உரிக்கப்பட்ட தோலை உடலின் மேல் போர்த்தி , மூங்கிலையொத்த தோளையுடையவளாய் , இடையில் அழகிய ஆடையை அணிந்துள்ள உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , புலவர்களால் போற்றப்படும் பழம் புகழுடைய , குடிமக்களின் செல்வ வாழ்க்கை என்றும் குறையாத திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .


பாடல் எண் : 8
தண்டுஅணை தோள்இரு பத்தினொடும்
         தலைபத்து உடையானை
ஒண்டுஅணை மாதுஉமை தான்நடுங்க
         ஒருகால் விரல்ஊன்றி,
மிண்டுஅது தீர்த்துஅருள் செய்யவல்ல
         விகிர்தர்க்கு இடம்போலும்
வண்டுஅணை தன்னொடு வைகுபொழில்
         வலம்புர நல்நகரே.

         பொழிப்புரை : தண்டு முதலிய ஆயுதங்களையுடைய இருபது தோள்களும் , பத்துத் தலைகளுமுடைய இராவணன் கயிலையைப் பெயர்த்த போது , தம் உடம்போடு ஒன்றாக அணைந்துள்ள உமாதேவி நடுங்க , சிவபெருமான் தம்காற் பெருவிரலை ஊன்றி அவ்வரக்கனின் செருக்கை அடக்கி , பின் அவன் தன் தவறுணர்ந்து துதித்தபோது , அருளும் செய்த மாறுபட்ட தன்மையுடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் ஆண் வண்டுகள் தம் பெடை வண்டுகளைத் தழுவித் தங்கும் சோலைகளை உடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .


பாடல் எண் : 9
தார்உறு தாமரை மேல்அயனும்
         தரணி அளந்தானும்
தேர்வுஅறி யாவகை யால்இகலித்
         திகைத்துத் திரிந்துஏத்தப்
பேர்வுஅறி யாவகை யால்நிமிர்ந்த
         பெருமான் இடம்போலும்
வார்உறு சோலை மணங்கமழும்
         வலம்புர நல்நகரே.

         பொழிப்புரை : மாலையாக அமைதற்குரிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , உலகை இரண்டடிகளால் அளந்த திருமாலும் உண்மையை உணரமுடியாது , தம்முள் யார் பெரியவர் என்று மாறுபாடு கொண்டு , முழுமுதற் பொருளின் அடிமுடி காணமுடியாது திகைத்துத் திரிந்து , பின் தம் குற்றம் உணர்ந்து இறைவனைப் போற்றி வணங்க , அசைக்க முடியாத நெருப்புப் பிழம்பாய் நிமிர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், நீண்ட சோலைகளையுடைய நறுமணம் கமழும் திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .


பாடல் எண் : 10
காவிய நல்துவர் ஆடையினார்
         கடுநோன்பு மேல்கொள்ளும்
பாவிகள் சொல்லைப் பயின்றுஅறியாப்
         பழந்தொண்டர் உள்உருக,
ஆவியுள் நின்றுஅருள் செய்யவல்ல
         அழகர் இடம்போலும்
வாவியின் நீர்வயல் வாய்ப்புஉடைய
         வலம்புர நல்நகரே.

         பொழிப்புரை : காவி நிறத்தைத் தருவதாகிய துவர்நீரில் தோய்த்த ஆடையினையுடைய புத்தர்களும் , கடுமையான நோன்புகளை மேற்கொள்ளும் பாவிகளாகிய சமணர்களும் கூறும் சொற்களைச் சிறிதும் கேளாத , வழிவழியாகச் சிவனடிமை செய்யும் தொண்டர்கள் உள்ளம் உருகி ஏத்த , அவர்களின் உயிர்க்குள்ளுயிராயிருந்து அருள் செய்யவல்ல அழகர் சிவபெருமான் ஆவார் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , குளங்களிலிருந்து வயல்கட்குப் பாயும் நீர்வளமுடைய திருவலம்புரம் என்னும் நன்னகர் ஆகும் .


பாடல் எண் : 11
நல்இயல் நான்மறை யோர்புகலித்
         தமிழ்ஞான சம்பந்தன்
வல்லியம் தோல்உடை ஆடையினான்
         வலம்புர நல்நகரைச்
சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல
         வல்லவர் தொல்வினைபோய்ச்
செல்வன சேவடி சென்றுஅணுகிச்
         சிவலோகம் சேர்வாரே.

         பொழிப்புரை : நல்லொழுக்கமுடைய , நான்கு வேதங்களையும் நன்கு கற்று வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் திருத்தலத்தில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் , புலியின் தோலை ஆடையாக உடுத்திய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலம்புரம் என்னும் நன்னகரைப் போற்றிப் பாடிய இப்பாடல்கள் பத்தையும் சொல்ல வல்லவர்கள் , தொல்வினை நீங்கிச் சிவலோகம் சென்றணுகி முத்திச் செல்வத்தைத் தருகின்ற சிவபெருமானின் சேவடிகளைச் சேர்ந்திருப்பர் .
                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 189
ஆண்டஅரசு எழுந்தருளக் கோலக் காவை
         அவரோடும் சென்றுஇறைஞ்சி, அன்பு கொண்டு
மீண்டு அருளினார், அவரும் விடைகொண்டு இப்பால்
         வேத நாயகர் விரும்பும் பதிகள் ஆன
நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடூர்
         நீடு திருக் குறுக்கை திரு நின்றியூரும்
காண்தகைய நனிபள்ளி முதலா நண்ணிக்
         கண்ணுதலார் கழல்தொழுது வணங்கிச் செல்வார்.

         பொழிப்புரை : திருநாவுக்கரசர் எழுந்தருளவே அவருடன் சென்று திருக்கோலக்காவைப் பணிந்து அன்பு விடைபெற்று ஞானசம்பந்தர் திரும்பினார். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு மேலும் மறைமுதல்வரான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் பதிகளாய பெருமைமிக்க திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடுர், திருக்குறுக்கை வீரட்டம், திருநின்றியூர், காணும் தகைமையுடைய திருநனிபள்ளி என்ற இவை முதலான பதிகளைச் சேர்ந்து நெற்றிக்கண் உடையவரின் திருவடிகளை வணங்கி மேற்செல்பவராய்.

         திருக்கோலக்காவில் அப்பர் அருளிய பதிகம் கிடைத்திலது. இனி இப்பாடலில் குறிக்கப்பட்ட திருப்பதிகள் ஆறனுள் திருக்கருப்பறியலூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.

         அடுத்து இருக்கும் திருப்புன்கூர், திருநீடுர் ஆகிய இரு பதிகளுக்கும் ஒருங்கியைந்தவாறு ஒரு பதிகம் உள்ளது. அது `பிறவாதே தோன்றிய`(தி.6 ப.11) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும்.

         திருக்குறுக்கை வீரட்டத்திற்கு இரு பதிகங்கள் கிடைத்து உள்ளன.
         1. `ஆதியிற் பிரமனார்` (தி.4 ப.49)- திருநேரிசை;
         2. `நெடியமால்` (தி.4 ப.50) - திருநேரிசை.

         இவற்றுள் முன்னைய பதிகத்தில் பாடல் தோறும் வரலாறுகள் அமைந்துள்ளன. இரண்டாவது பதிகத்தில் இரண்டே பாடல்கள் உள்ளன.

         திருநின்றியூரில் அருளிய திருக்குறுந்தொகைப் பதிகம் `கொடுங்கண் வெண்டலை` (தி.5 ப.23) என்பதாம்.

         திருநனிபள்ளியில் அருளிய பதிகம் `முற்றுணை ஆயினானை` (தி.4 ப.70) எனத் தொடங்கும் திருநேரிசையாம்.

         இனி, இப்பாடற்கண் நனிபள்ளி முதலா நண்ணி என வருதலின் வேறு பிற பதிகளும் தொழுது சென்றமை விளங்குகின்றது. அப்பதிகளும் பாடியருளிய பதிகங்களும்:

1.    திருக்குரக்குக்கா: `மரக்கொக்காம்` (தி.5 ப.75) – திருக்குறுந்தொகை.

2.     புள்ளிருக்கு வேளூர்:
(அ). `வெள்ளெருக்கு` (தி.5 ப.79) - திருக்குறுந்தொகை;
(ஆ). `ஆண்டானை` (தி.6 ப.54) - திருத்தாண்டகம்.

3.    திருவெண்காடு:
(அ). `பண்காட்டி` (தி.5 ப.49) - திருக்குறுந்தொகை
(ஆ). `தூண்டுசுடர்` (தி.6 ப.35) - திருத்தாண்டகம்.

4.    திருச்சாய்க்காடு:
(அ) `தோடுலாமலர்` (தி.4 ப.65) - திருநேரிசை.
(ஆ). `வானத்து இளமதியும்` (தி.6 ப.82) - திருத்தாண்டகம்.

5.     திருவலம்புரம்:
(அ). `தெண்டிரை` (தி.4 ப.55) - திருநேரிசை
(ஆ). `மண்ணளந்த` (தி.6 ப.58) - திருத்தாண்டகம்.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

4. 055    திருவலம்புரம்                    திருநேரிசை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தெண்திரை தேங்கி ஓதம்
         சென்றுஅடி வீழும் காலைத்
தொண்டுஇரைத்து அண்டர் கோனைத்
         தொழுதுஅடி வணங்கி, எங்கும்
வண்டுகள் மதுக்கண் மாந்தும்
         வலம்புரத்து அடிகள் தம்மைக்
கொண்டுநல் கீதம் பாடக்
         குழகர்தாம் இருந்த வாறே.

         பொழிப்புரை : எங்கும் வண்டுகள் தேனை வயிறாரப் பருகும் வலம்புரத்திலுள்ள பெருமான் கடலிலுள்ள தெளிந்த அலைகள் செறிந்து தம் திருவடிகளில் விழுந்து அலசும்போது , தொண்டர்கள் தம்மை அழைத்தவண்ணம் தொழுது அடியின் கண் வணங்கித் தம்மை உள்ளத்திலும் , தம் சிறப்பை உரையிலும் கொண்டு பாடும் வண்ணம் இருந்தாவாறென்னே !


பாடல் எண் : 2
மடுக்களில் வாளை பாய
         வண்டுஇனம் இரிந்த பொய்கைப்
பிடிக்களிறு என்னத் தம்மில்
         பிணைபயின்று அணைவ ரால்கள்,
தொடுத்தநன் மாலை ஏந்தித்
         தொண்டர்கள் பரவி ஏத்த,
வடித்தடம் கண்ணி பாகர்
         வலம்புரத்து இருந்த வாறே.

         பொழிப்புரை : மாவடு போன்ற பெரிய கண்களை உடைய பார்வதிபாகர் , மடுக்களிலே வாளை மீன்கள் பாயவும் வண்டினங்கள் அஞ்சி ஓடிய பொய்கைகைளில் பிடியும் களிறும் போல வரால் மீன்கள் இரட்டையாகக் கலந்து கொண்டு அணையவும் வளம் சான்ற திருவலம் புரத்திலே , தொடுக்கப்பட்ட மாலைகளை ஏந்தியவர்களாய் அடியார்கள் முன்நின்று துதித்துப்போற்றும் வண்ணம் இருந்தவாறென்னே !


பாடல் எண் : 3
தேன்உடை மலர்கள் கொண்டு,
         திருந்தடி பொருந்தச் சேர்த்தி,
ஆன்இடை அஞ்சும் கொண்டே
         அன்பினால் அமர ஆட்டி,
வான்இடை மதியம் சூடும்
         வலம்புரத்து அடிகள் தம்மை,
நான்அடைந்து, ஏத்தப் பெற்று
         நல்வினைப் பயன்உற் றேனே.

         பொழிப்புரை : தேனுள்ள பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து தம் அழகிய திருவடிகளிலே பொருந்துமாறு அவற்றை அர்ப்பணித்துப் பஞ்சகவ்வியத்தால் அடியார்கள் அபிடேகம் செய்ய அந்த அபிடேகத்தை உவந்து ஏற்று வானில் உலவவேண்டிய பிறையைச் சடையில் சூடிய வலம்புரத்துப் பெருமானை அடியேன் சரணமாக அடைந்து துதித்து நல்வினைப் பயனைப் பெற்றவனானேன் .


பாடல் எண் : 4
முளைஎயிற்று இளநல் ஏனம்
         பூண்டுமொய் சடைகள் தாழ,
வளைஎயிற்று இளைய நாகம்
         வலித்துஅரை இசைய வீக்கி,
புளைகயப் போர்வை போர்த்து,
         புனலொடு மதியம் சூடி,
வளைபயில் இளையர் ஏத்தும்
         வலம்புரத்து அடிகள் தாமே.

         பொழிப்புரை : வலம்புரப்பெருமான் இளைய பெரிய பன்றியின் மூங்கில் முளைபோன்ற பற்களை அணிகலனாக மார்பில் பூண்டு , செறிந்த சடைகள் தாழ , வளைந்த பற்களை உடைய பாம்பினை இடைக்குப் பொருந்த இறுக்கிக்கட்டி , துதிக்கையை உடைய யானைத் தோலைப் போர்வையாக அணிந்து , கங்கையையும் பிறையையும் சடையிற் சூடி வளையல்களை அணிந்த மகளிர் தோத்திரிக்குமாறு அமைந்துள்ளார் .


பாடல் எண் : 5
சுருள்உறு வரையின் மேலால்
         துலங்குஇளம் பளிங்கு சிந்த,
இருள்உறு கதிர்நு ழைந்த
         இளங்கதிர்ப் பசலைத் திங்கள்
அருள்உறும் அடியர் எல்லாம்
         அங்கையின் மலர்கள் ஏந்த,
மருள்உறு கீதம் கேட்டார்,
         வலம்புரத்து அடிக ளாரே.

         பொழிப்புரை : இரா வேளையில் நெற்பயிர்க்குள் விரவி அதற்கு வளர்ச்சிதரும் சந்திரன் , மலைச்சிகரம் போல முடியப்பெற்ற தமது சுருண்ட சடையிலே நுழைந்து பளிங்கு போன்ற ஒளியை வெளிப்படுத்திக் கொண்டிருக்க , தம் அருளை அடைய விரும்பிய அடியார் எல்லோரும் அழகிய கைகளில் மலர்களை ஏந்தி நிற்க , அவர் பாடுகிற குறிஞ்சி யாழ்த்திறமான மருள் எனும் பண்ணிசை பொருந்திய பாடல்களைத் திருச்செவி சாத்தியவராய் உள்ளார் .


பாடல் எண் : 6
நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால்
         நீண்டபுன் சடையி னானே,
அனைத்துஉடன் கொண்டு வந்துஅங்கு
         அன்பினால் அமைய ஆட்டி,
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை,
         மெய்ம்மையைப் புணர மாட்டேன்,
எனக்குநான் செய்வது என்னே,
         இனிவலம் புரவ னீரே.

         பொழிப்புரை : நீண்ட சிவந்த சடையை உடைய வலம்புரத்துப் பெருமானே ! அபிடேகத்துக்குரிய எல்லாப் பொருள்களையும் கொண்டு வந்து உம்மை அன்போடு முறையாக அபிடேகித்து நற்கதியைச் சேர வல்லேன் அல்லேனாய்ப் பொய்மையைப் பெருக்கி வாழும் அடியேன் , அச்செயல்களை மனத்தினால் நினைத்துப் பார்க்கின்றேனன்றி மெய்ம்மையைப் பொருந்த வல்லேனல்லேன் . இனி , யான் எனக்குச் செய்து கொள்ளக் கூடியது யாதோ அறியேன் .


பாடல் எண் : 7
செங்கயல் சேல்கள் பாய்ந்து
         தேம்பழம் இனிய நாடி,
தங்கயம் துறந்து போந்து
         தடம்பொய்கை அடைந்து நின்று,
கொங்கையர் குடையும் காலைக்
         கொழுங்கனி அழுங்கி னாராம்
மங்கல மனையின் மிக்கார்
         வலம்புரத்து அடிக ளாரே.

         பொழிப்புரை : செங்கயல்களும் , சேல்களும் தீங்கனியைப் பெற நாடித் தமது நீர்நிலைகளிலிருந்து பாய்ந்து போய் , பெரும் பொய்கையை அடைந்து நின்று கொங்கையழகியரான மகளிர் முழுகும் போதில் அவர் கொங்கைகளைக் கனியென்று கருதிப் பற்றுதலால் வருந்தும் அம்மங்கையரின் மனைமாட்சி நிலவும் மனைகளால் மிக்க நிறையும் வலம்புரத்தார் ( எம் ) அடிகள் ! ( மிக்கு + ஆர் - மிக்கு நிறையும் .)


பாடல் எண் : 8
அருகுஎலாம் குவளை செந்நெல்
         அகல்இலை ஆம்பல் நெய்தல்
தெருஎலாம் தெங்கு மாவும்
         பழம்விழும் படப்பை எல்லாம்
குருகுஇனம் கூடி ஆங்கே
         கும்மலித்து இறகு உலர்த்தி
மருவலாம் இடங்கள் காட்டும்
         வலம்புரத்து அடிக ளாரே.

         பொழிப்புரை : ஊரின் அருகில் எல்லாம் செந்நெற்பயிர்களும் அப் பயிர்களின் இடையே பூத்த குவளை ஆம்பல் நெய்தல் என்ற பூக்களும் உள்ளன . தெருக்களிலெல்லாம் தென்னையும் மாமரங்களும் உள்ளன . மனைக்கொல்லைகளிலெல்லாம் பழங்கள் விழுகின்றன . அவ்வூரில் பறவை இனங்கள் கூடி ஒலித்து இறகுகளை உலர்த்தித் தங்கும் இடங்கள் பல உள்ளன . இத்தகைய வளங்கள் சான்ற வலம்புரத்திலே எம்பெருமான் உகந்தருளி உறைகின்றார் .


பாடல் எண் : 9
கருவரை அனைய மேனிக்
         கடல்வண்ணன் அவனும் காணான்,
திருவரை அனைய பூமேல்
         திசைமுகன் அவனும் காணான்,
ஒருவரை உச்சி ஏறி
         ஓங்கினார் ஓங்கி வந்து
அருமையில் எளிமை ஆனார்
         அவர்வலம் புரவ னாரே.

         பொழிப்புரை : கரிய மலை போன்ற திருமேனியை உடைய கடல் நிறத்தவனாகிய திருமாலும் , திருமகள் தங்குவதற்கு என்று வரையறுக்கப்பட்ட தாமரைப்பூ மேல் உறையும் பிரமனும் காண முடியாதவராய் , ஒப்பற்ற கயிலைமலையின் உச்சியில் மேம்பட்டு உறையும் பெருமான் தம் அருமையை எளிமையாக்கிக் கொண்டு வந்து திருவலம்புரத்திறைவனாக உள்ளார் .


பாடல் எண் : 10
வாள்எயிறு இலங்க நக்கு
         வளர்கயி லாயம் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற
         அரக்கனை, வரைக்கீழ் அன்று
தோளொடு பத்து வாயும்
         தொலைந்துஉடன் அழுந்த ஊன்றி,
ஆண்மையும் வலியும் தீர்ப்பார்
         அவர்வலம் புரவ னாரே.

         பொழிப்புரை : தன் ஆற்றலைப் பெரிதாக மதித்து கயிலாயத்தைப் பெயர்க்கச் சென்ற இராவணன் தன் தோள்களிருபதும் வாய்கள் ( தலைகள் ) பத்தும் அம்மலைக்கீழ் நசுங்கித் தொலையுமாறு , சிரித்துக் கொண்டே , தம் திருவடிகளால் அழுத்தமாக ஊன்றி அவ்வகையால் அவனது ஊக்கத்தையும் வலிமையையும் போக்கிய அத்தகையர் வலம்புரவனார் ஆவர் .
                                             திருச்சிற்றம்பலம்


6. 058    திருவலம்புரம்           திருத்தாடண்டகம்
                                       திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மண்அளந்த மணிவண்ணர் தாமும் மற்றை
         மறையவனும் வானவரும் சூழ நின்று
கண்மலிந்த திருநெற்றி உடையார், ஒற்றை
         கதநாகம் கையுடையார், காணீர் அன்றே,
பண்மலிந்த மொழியவரும் யானும் எல்லாம்
         பணிந்துஇறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல
மண்மலிந்த வயல்புடைசூழ் மாடவீதி
         வலம்புரமே புக்குஅங்கே மன்னி னாரே.

         பொழிப்புரை :உலகத்தை அளந்த நீலமணி நிறத்தவரான திருமாலும் பிரமனும் தேவர்களும் தம்மைச் சூழ , நெற்றிக்கண்ணராய் , ஒற்றைப் பாம்பினைக் கையில் உடையவராய் , இனியமொழிகளையுடைய மற்றப் பெண்களும் யானும் பணிந்து வணங்கித் தம்பின்னே செல்லவும் , மண்வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட மாட வீதிகளையுடைய வலம்புர நகரில் புகுந்து , பெருமான் அங்கேயே தங்கிவிட்டார் .


பாடல் எண் : 2
சிலைநவின்றது ஒருகணையால் புரமூன்று எய்த
         தீவண்ணர், சிறந்துஇமையோர் இறைஞ்சி யேத்தக்
கொலைநவின்ற களியானை உரிவை போர்த்து,
         கூத்தாடித் திரிதரும்அக் கூத்தர், நல்ல
கலைநவின்ற மறையவர்கள் காணக் காணக்
         கடுவிடைமேல் பாரிடங்கள் சூழ, காதல்
மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம்
         வலம்புரமே புக்குஅங்கே மன்னி னாரே.

         பொழிப்புரை :வில்லில் பழகிய அம்பு ஒன்றால் முப்புரமும் அழித்த , தீயைப் போன்ற செந்நிறமுடைய பெருமானாய் , இமையவர்கள் வழிபட்டுப்புகழக் கொலைத் தொழிலில் பழகிய மத யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கூத்தாடிக் கொண்டு எங்கும் செல்லும் அக்கூத்தர் , கலைகளில் பழகிய அந்தணர்கள் காணவும் , பூதகணங்கள் சூழவும் , விரைவாகச் செல்லும் காளை மீது பார்வதியும் கங்கையும் தாமுமாக இவர்ந்து , வலம்புரம் சென்று அங்கே தங்கி விட்டார் .


பாடல் எண் : 3
தீக்கூரும் திருமேனி ஒருபால், மற்றை
         ஒருபாலும் அரிஉருவம் திகழ்ந்த செல்வர்,
ஆக்கூரில் தான்தோன்றிப் புகுவார் போல,
         அருவினையேன் செல்வதுமே, அப்பால் எங்கும்
நோக்கார் ஒருஇடத்து நூலும் தோலும்
         துதைந்துஇலங்குந் திருமேனி வெண்ணீறு ஆடி,
வாக்கால் மறைவிரித்து, மாயம் பேசி,
         வலம்புரமே புக்குஅங்கே மன்னி னாரே.

         பொழிப்புரை :திருமேனியின் ஒரு பகுதி தீயின் நிறமாகவும் , மற்றைப்பகுதி திருமாலின் நிறமாகவும் விளங்கித்தோன்ற , ஆக்கூரிலுள்ள தான்தோன்றி மாடத்திற்குச் செல்பவரைப்போல யான் அப்பக்கம் சென்ற அளவில் ஓரிடத்தையும் நோக்காமல் , பூணூலும் மான் தோலும் பொருந்திய தம் மேனியில் வெள்ளிய நீறு பூசி , வேதக் கருத்துக்களை விரித்து , மாயமாகச் சில பேசிய வண்ணம் , வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே .


பாடல் எண் : 4
மூவாத மூக்கப்பாம்பு அரையில் சாத்தி
         மூவர் உருவாய முதல்வர், இந்நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேற் கோத்த
         குழகனார், குளிர்கொன்றை சூடி இங்கே
போவாரைக் கண்டுஅடியேன் பின்பின் செல்லப்
         புறக்கணித்துத் தம்முடைய பூதஞ் சூழ
வாவா எனஉரைத்து, மாயம் பேசி,
         வலம்புரமே புக்குஅங்கே மன்னி னாரே.

         பொழிப்புரை :மூப்படையாத கொடிய பாம்பை அரையில் கட்டி , மும்மூர்த்திகளின் உருவமாக உள்ள முதற்கடவுளாம் சிவபெருமான் , வேறுயாரும் இணைக்க முடியாத அக்கினியாகிய அம்பினை வில்லில் கோத்த இளையராய்க் , குளிர்ந்த கொன்றைப் பூவைச்சூடி , இன்று இங்கே போகின்றவரைக் கண்டு அடியேன் பின்னே செல்ல , என்னைப் புறக்கணித்து , என்னை வாவா என்று பொய்யாக அழைத்துவிட்டுத் தம்முடைய பூதகணம் தம்மைச் சூழ , வலம்புரமேபுக்கு அங்கே மன்னினாரே .


பாடல் எண் : 5
அனல்ஒருகை அதுஏந்தி, அதளி னோடே
         ஐந்தலைய மாநாகம் அரையில் சாத்தி,
புனல் பொதிந்த சடைக்கற்றைப் பொன்போல்மேனிப்
         புனிதனார் புரிந்துஅமரர் இறைஞ்சி ஏத்தச்
சினவிடையை மேல்கொண்டு திருவா ரூரும்
         சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல,
மனம்உருக, வளைகழல, மாயம் பேசி,
         வலம்புரமே புக்குஅங்கே மன்னி னாரே.

         பொழிப்புரை :ஒருகையில் தீயை ஏந்தி , இடையில் அணிந்த தோலாடை மீது ஐந்தலையை உடைய பெரிய பாம்பினை இறுகக் கட்டிக் கங்கை தங்கிய சடைமுடியும் பொன் போன்ற திருமேனியும் உடைய புனிதர் , விரும்பித் தேவர்கள் வழிபட்டுத்துதிக்கக் கோபம் உடைய காளையை இவர்ந்து , திருவாரூரும் சிரபுரமும் , இடைமருதும் அடைபவரைப்போல , என்மனம் உருகுமாறும் வளைகள் கழலுமாறும் என்னிடத்துப் பொய்யாகச் சிலவற்றைப் பேசி வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார் .


பாடல் எண் : 6
கறுத்ததுஒரு கண்டத்தர் காலன் வீழக்
         காலினால் காய்ந்துஉகந்த காபா லியார்,
முறித்ததுஒரு தோல்உடுத்து முண்டம் சாத்தி,
         முனிகணங்கள் புடைசூழ முற்றம் தோறும்
தெறித்ததுஒரு வீணையராய்ச் செல்வார், தம்வாய்ச்
         சிறுமுறுவல் வந்துஎனது சிந்தை வௌவ,
மறித்துஒருகால் நோக்காதே, மாயம் பேசி,
         வலம்புரமே புக்குஅங்கே மன்னி னாரே.

         பொழிப்புரை :நீலகண்டராய்க் கூற்றுவன் அழியுமாறு காலினால் உதைத்து மகிழ்ந்த காபாலக்கூத்தாடும் பெருமானார் தாம் உரித்த தோலை ஆடையாக உடுத்து , திருநீறு பூசி முனிவர்கள் தம் இருபுடையும் சூழ்ந்துவர , வீடுகளில் முன்னிடம் தோறும் வீணையை இசைத்துக் கொண்டு சென்றாராக , அவருடைய புன்சிரிப்பு என் சிந்தையைக் கவர , மீண்டும் ஒருமுறை என்னை நோக்காமல் பொய்யாக ஏதோ பேசி , வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார் .


பாடல் எண் : 7
பட்டுஉடுத்துப் பவளம்போல் மேனி எல்லாம்
         பசுஞ்சாந்தம் கொண்டுஅணிந்து, பாதம் நோவ,
இட்டுஎடுத்து நடம்ஆடி, இங்கே வந்தார்க்கு,
         எவ்வூரீர் எம்பெருமான் என்றேன், ஆவி
விட்டிடுமாறு அதுசெய்து, விரைந்து நோக்கி,
         வேறுஓர் பதிபுகப் போவார் போல,
வட்டணைகள் படநடந்து, மாயம் பேசி,
         வலம்புரமே புக்குஅங்கே மன்னி னாரே.

         பொழிப்புரை :பட்டினை உடுத்துப் பவளம் போன்ற தம் மேனியில் பசிய சந்தனம் பூசித் தம் திருவடிகளை ஊன்றியும் தூக்கியும் கூத்தாடிக் கொண்டு என்னிடம் வந்தாராக. யான் ` எம்பெருமான் நீர் எவ்வூரைச் சேர்ந்தவர் ` என்று வினவ என் உயிர்போகுமாறு என்னை விரைந்து பார்த்து, எனக்கு காம மீதூர்வினை வழங்கி, வேறோர் ஊருக்குச் செல்பவரைப்போலப் பொய் பேசிச் சுழன்று நடந்து , வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே .


பாடல் எண் : 8
பல்லார் பயில்பழனம் பாசூர் என்று
         பழனம் பதிபழமை சொல்லி நின்றார்,
நல்லார் நனிபள்ளி இன்று வைகி
         நாளைப்போய் நள்ளாறு சேர்தும் என்றார்,
சொல்லார் ஒருஇடமாத் தோள்கை வீசிச்
         சுந்தரராய் வெந்தநீறு ஆடி எங்கும்
மல்ஆர் வயல்புடை சூழ் மாட வீதி
         வலம்புரமே புக்குஅங்கே மன்னி னாரே.

         பொழிப்புரை :பலரும் தங்கியிருக்கும் திருப்பழனம் , பாசூர் என்று தம் ஊர்களைக் குறிப்பிட்டு , அவற்றுள் பழனப்பதியில் தமக்கு உள்ள பழந்தொடர்பைக்கூறி , நல்லவர்கள் மிக்க நனிபள்ளியில் இன்று தங்கி , மறுநாள் நள்ளாறு போய்ச் சேர எண்ணியுள்ளதாகக்கூறினார் . இன்ன இடத்துக்குப் போகப்போவதாக உறுதியாய்க் கூறாமல் , திருநீறு பூசிய அழகியராய்த் தம் கைகளை வீசிக் கொண்டு , வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட மாட வீதிகளை உடைய வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார் .


பாடல் எண் : 9
பொங்கு ஆடுஅரவுஒன்று கையில் கொண்டு
         போர்வெண் மழுஏந்திப் போகா நிற்பர்,
தங்கார் ஒருிடத்தும், தம்மேல் ஆர்வம்
         தவிர்த்துஅருளார், தத்துவத்தே நின்றேன் என்பர்,
எங்கே இவர்செய்கை ஒன்றுஒன்று ஒவ்வா,
         என்கண்ணின் நின்றுஅகலா வேடம் காட்டி
மங்குல் மதிதவழும் மாட வீதி
         வலம்புரமே புக்குஅங்கே மன்னி னாரே.

         பொழிப்புரை :படமெடுத்து ஆடும் பாம்பு ஒன்றனைக் கையில் கொண்டு , மறுகையில் போரிடும் மழுப்படையை ஏந்தி , ஓரிடத்தும் தங்காராய்ப் போய்க்கொண்டே , தம்மிடத்து மற்றவர் கொள்ளும் விருப்பத்தை நீக்காராய் மெய்ப்பொருளிடத்தே நிற்பவராகத் தம்மைக் கூறிக்கொண்டே ஒன்றோடொன்று பொருந்தாத செயல்களை உடையவராய் , என்கண்களை விட்டு நீங்காத தம் இனிய வேடத்தைக் காட்டி , வானத்திலுள்ள சந்திரன் தவழும்படியான உயர்ந்த மாட வீடுகளைக் கொண்ட வலம்புரமேபுக்கு அங்கே மன்னினார் .


பாடல் எண் : 10
செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடும்
         சேதுபந் தனம்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
         போர்அரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
அங்குஒருதன் திருவிரலால் இறையே ஊன்றி
         அடர்த்து,அவற்கே அருள்புரிந்த அடிகள் இந்நாள்
வங்கமலி கடல்புடைசூழ் மாட வீதி
         வலம்புரமே புக்குஅங்கே மன்னி னாரே.

         பொழிப்புரை :திருமால் வில்லை ஏந்திக் குரக்குச்சேனையோடு, கடலில் அணைகட்டி, இலங்கையைச் சென்று அடைந்து, மேம்பட்ட பலபோர்கள் செய்து , தன்னை அடைக்கலமாக வந்தடைந்த சுக்கிரீவன், வீடணன் முதலியோர் உதவியதால் அரிதில் வென்றழித்த இராவண னுடைய நீண்ட கிரீடங்கள் பொடியாய் விழுமாறு , தன் ஒற்றைக் கால் விரலைச் சிறிதளவு ஊன்றி , அவனை வருத்திப் பின் அவனுக்கே அருளையும் செய்தவர் சிவபெருமான். அப்பெருமானார் , இன்று கப்பல்கள் நிறைந்த கடலால் ஒருபுறம் சூழப்பட்டதாய் , மாடவீதிகளை உடைய வலம்புரம் என்ற ஊரை அடைந்து அங்கேயே நிலையாகத் தங்கிவிட்டார் .
                                             திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         தம்பிரான் தோழர், திருக்கடவூர் வீரட்டத்துப் பெருமானைப் பணிந்து திருவலம்புரம் சென்று தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 147)

பெரிய புராணப் பாடல் எண் : 146
திருவீரட் டானத்துத் தேவர்பிரான் சினக்கூற்றின்
பொருவீரம் தொலைத்தகழல் பணிந்து,பொடி யார்மேனி
மருஈரத் தமிழ்மாலை புனைந்து, ஏத்தி, மலைவளைத்த
பெருவீரர் வலம்புரத்துப் பெருகுஆர்வத் தொடும்சென்றார்.

         பொழிப்புரை : திருக்கடவூர் வீரட்டானத்து அமர்ந்தருளும் தேவாதி தேவனது சினம் மிக்க இயமனின் வீரத்தைத் தொலைத்த திருவடிகளைப் பணிந்து, `பொடியார் மேனியனே\' எனத் தொடங்கும் கசிந்துருகும் தமிழ் மாலையைப் பாடிப் போற்றி வணங்கி, அப்பால் மேருமலையை வளைத்த பெருவீரராய சிவபெருமான் அமர்ந்து அருளும் திருவலம்புரம் என்னும் திருப்பதிக்குப் பெருகிய ஆர்வத்தோடும் சென்றார்.


பெ. பு. பாடல் எண் : 147
வரையோடு நிகர்புரிசை வலம்புரத்தார் கழல்வணங்கி,
உரைஓசைப் பதிகம் "எனக்கு இனி" ஒதிப் போய், சங்க
நிரைஓடு துமித்தூபம் மணித்தீபம் நித்திலப்பூந்
திரைஓதம் கொண்டுஇறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார்.

         பொழிப்புரை : மலையை ஒத்த மதில் சூழ்ந்த திருவலம்புரம் என்னும் திருப்பதியில் அமர்ந்தருளும் பெருமானது திருவடிகளை வணங்கிச் சிறந்த ஓசையுடைய திருப்பதிகமான `எனக்கினி' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிப் போற்றி, அப்பால் சென்று, சங்குகளின் நிரையான இயங்களோடு, அலைத்துளிகளான நறுமணப் புகையையும், ஒன்பான் மணிகளான ஒளியையும், முத்துக்களாகிய வெண்மையான மலர்களையும் ஏற்று, அலைகளாகிய திருக்கைகளால் போற்றி வணங்கும் கடல் சூழ்ந்த திருச்சாய்க்காடு என்னும் திருப்பதிக்கு வந்து சேர்ந்தார்.

         `எனக்கினி' எனத் தொடங்கும் பதிகம் காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.72). துமித்தூபம் - அலைநீர்த் திவலைகள் தூபப் புகையாகவும்; மணித்தீபம் - நவ - மணிகள் தீபங்களாகவும், நித்திலப்பூ - முத்துக்கள் வெண் மலர்களாகவும், திரை இவற்றை ஏந்தும் கைகளாகவும், ஓதம் - வழிபடும் அன்பராகவும் உருவகப் படுத்தினார்;

சுந்தரர் திருப்பதிகம்

7. 072    திருவலம்புரம்                   பண் - காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
எனக்குஇனித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன்,
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்குஇனி யவன்,தமர்க்கு இனியவன், எழுமையும்
மனக்குஇனி யவன், தனது இடம்வலம் புரமே

         பொழிப்புரை : எனக்கு இனியவனும் , தனக்கு என்னைப்போலும் அன்பராய் உள்ளார்க்கு இனியவனும் , எழுபிறப்பிலும் எங்கள் மனத்துக்கு இனியனாகின்றவனும் ஆகிய இறைவனது இடம் , பனை மரத்தின்கண் பழுத்த பழங்கள் வீழ்கின்ற கடலினது கரைக்கண் உள்ள , ` திருவலம்புரம் ` என்னும் தலமே . இதனை அறிந்தேனாகலின் , எனக் கும் சிறிது புகலிடம் இங்கு உளதாதலை இப்பொழுது யான் அறிந் தேனாயினேன்.


பாடல் எண் : 2
புரம்அவை எரிதர வளைந்த வில்லினன்அவன்,
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்,
அரவுரி நிரந்துஅயல் இரந்துஉண விரும்பிநின்று
இரவுஎரி ஆடிதன் இடம்வலம் புரமே

         பொழிப்புரை : திரிபுரங்கள் எரியுமாறு வளைந்த வில்லை உடையவனும் , புதியவனும் , மரவுரியையும் புலித்தோலையும் அரை யிற் பொருந்தியவனும் , பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும் இரந்து உண்ண விரும்புபவனும் , இரவின்கண் தீயில் நின்று ஆடுப வனும் ஆகிய இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .


பாடல் எண் : 3
நீறுஅணி மேனியன், நெருப்புஉமிழ் அரவினன்,
கூறுஅணி கொடுமழு ஏந்தியொர் கையினன்,
ஆறுஅணி அவிர்சடை, அழல்வளர் மழலைவெள்
ஏறுஅணி அடிகள்தம் இடம்வலம் புரமே

         பொழிப்புரை : நீறணிந்த மேனியை யுடையவனும் , சினங் காரண மாகக் கண்களால் நெருப்பை உமிழ்கின்ற பாம்பை அணிந்தவனும் , பிளத்தலைப் பொருந்திய கொடிய மழுவை ஏந்திய ஒரு கையை உடையவனும் , நீரை அணிந்த , ஒளிவிடும் சடையாகிய நெருப்பு வளரப்பெற்றவனும் ஆகிய , இளமையான வெள்ளிய இடபக் கொடியை உயர்த்துள்ள இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .


பாடல் எண் : 4
கொங்குஅணை சுரும்புஉண நெருங்கிய குளிர்இளம்
தெங்கொடு பனைபழம் படும்இடந் தேவர்கள்
தங்கிடும் இடம்தடம் கடல்திரை புடைதர
எங்களது அடிகள்நல் இடம்வலம் புரமே

         பொழிப்புரை : மலர்களில் உள்ள தேனை ஆங்கு வந்த வண்டுகள் உண்ண , நெருங்கிய , குளிர்ந்த , இளைய தென்னை மரங்களும் , பனை மரங்களும் பழம் விளைகின்ற இடமும் , பெரியகடலினது அலைகள் கரையை மோத , தேவர்கள் தங்கியிருக்கும் இடமும் , எங்கள் இறை வனது நல்ல இடமும் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .


பாடல் எண் : 5
கொடுமழு விரகினன், கொலைமலி சிலையினன்,
நெடுமதிள் சிறுமையின் நிரவவல் லவன்இடம்,
படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந்து
இடுமணல் அடைகரை இடம்வலம் புரமே

         பொழிப்புரை : கொடிய மழுவை எடுக்க வல்லவனும் , கொலை பொருந்திய வில்லையுடையவனும் , மூன்று பெரிய மதில்களை ஓர் இமைப்பொழுதில் பொடியாக்க வல்லவனும் ஆகிய இறைவனது இடம் , கடலில் உண்டாகின்ற மாணிக்கங்களையும் , முத்துக்களையும் , பவளங்களையும் மிகுதியாகத் தாங்கி நிற்கின்ற மணல் பொருந்திய கடற்கரையாகிய இடமும் , திருவலம்புரம் எனப்படுவதும் ஆகிய தலமே .


பாடல் எண் : 6
கருங்கடக் களிற்றுஉரிக் கடவுளது இடம்,கயல்
நெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்து
இருங்கடல் அடைகரை இடம்வலம் புரமே

         பொழிப்புரை : கரிய மதநீரையுடைய யானைத் தோலையுடைய இறைவனது இடம், நெருங்கிய , நீண்ட பனைமரங்கள் , கயல் மீன் களோடும் , அடும்பங் கொடிகளோடும் கலந்து நிற்கின்ற இடத்தின்கண் , வலம்புரிச் சங்குகளும் , சலஞ்சலச் சங்குகளும் தம் தம் பெண் சங்குகளோடு மணஞ்செய்து கொள்ளுதலைப் பொருந்தி , பெரிய கடலினின்றும் வருகின்ற கடற்கரையாகிய இடமும் , ` திருவலம்புரம் ` எனப்படுவதும் ஆகிய தலமே .


பாடல் எண் : 7
நரிபுரி காடுஅரங் காநடம் ஆடுவர்,
வரிபுரி பாடநின்று ஆடும்எம் மான்இடம்
புரிசுரி வரிகுழல் அரிவைஒர் பான்மகிழ்ந்து
எரிஎரி ஆடிதன் இடம்வலம் புரமே

         பொழிப்புரை : நரிகள் விரும்புகின்ற காடே அரங்கமாக நடனம் ஆடுபவனும் , யாழ் இசையைப்பாட நின்று ஆடுகின்ற எம்பெரு மானும் , பின்னிய , சுரிந்த , கட்டிய கூந்தலையுடைய மங்கையை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்து , எரிகின்ற நெருப்பில் ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம் , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .


பாடல் எண் : 8
பாறுஅணி முடைதலை கலன்என மருவிய
நீறுஅணி நிமிர்சடை முடியினன், நிலவிய
மாறுஅணி வருதிரை வயல்அணி பொழில்அது
ஏறுஉடை அடிகள்தம் இடம்வலம் புரமே

         பொழிப்புரை : பருந்தைக்கொண்ட , முடைநாற்றம் பொருந்திய தலையை உண்கலமாகப் பொருந்தியவனும் , நீற்றை அணிந்தவனும் , நீண்ட சடைமுடியை உடையவனும் இடபத்தை உடைய தலைவனும் ஆகிய இறைவனது இடம் , விளங்குகின்ற , மாறிமாறியும் கூட்டமாயும் வருகின்ற அலைகளையுடைய கடலையும் , வயல்களையும் அழகிய சோலைகளையும் உடையதாகிய , ` திருவலம்புரம் ` என்னும் தலமே .


பாடல் எண் : 9
சடசட விடுபெணை பழம்படும் இடவகை
பட, வட கத்தொடு பலிகலந்து உலவிய
கடைகடை பலிதிரி கபாலிதன் இடம்அது
இடிகரை மணல்அடை இடம்வலம் புரமே

         பொழிப்புரை : தோல் ஆடையை உடுத்துக்கொண்டும் , சாம்பலைப் பூசிக்கொண்டும் உலாவுகின்றவனும் , இல்லங்களின் வாயில் தோறும் பிச்சைக்குத் திரிகின்ற தலை ஓட்டினை உடையவனும் ஆகிய இறைவனது இடம் , ` சடசட ` என்னும் ஓசையை வெளிப் படுத்துகின்ற பனைமரங்கள் பழம் பழுக்கின்ற இடங்களின் வகை பலவும்மிகுமாறு , இடிகின்ற கரையை மணல்கள் அடைக்கின்ற இடமும் , ` திருவலம்புரம் ` எனப்படுவதும் ஆகிய தலமே .


பாடல் எண் : 10
குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர்,
கண்டவர் கண்டுஅடி வீழ்ந்தவர், கனைகழல்
தண்டுஉடைத் தண்டிதன் இனம்உடை அரவுடன்
எண்திசைக்கு ஒருசுடர் இடம்வலம் புரமே

         பொழிப்புரை : கரகத்தையுடைய உறியை உடைய
சமணர்களது பொய்ம்மையை நன்குணர்ந்தவர்களும் , உணர்ந்து தனது திருவடியில் வீழ்ந்து வணங்கியவர்களும் , ஒலிக்கின்ற கழலை அணிந்த , தண்டேந்தி நிற்கும் தண்டி முதலிய சிவகணத்தவர்களும் செய்கின்ற , ` அரகர ` என்னும் ஓசையுடன் , எட்டுத் திசைகட்கும் ஒரு விளக்குப் போல்பவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம் , ` திருவலம் புரம் ` என்னும் தலமே .


பாடல் எண் : 11
வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்
இருங்குலப் பிறப்பர்தம் இடம்வலம் புரத்தினை
அருங்குலத்து அருந்தமிழ் ஊரன்வன் தொண்டன்சொல்
பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே

         பொழிப்புரை : கரிய கடலின்கண் வருகின்ற மரக்கலங்கள் பலவற்றையும் பேணுதலுடைய உயர் குடிப் பிறப்பினரது இடமும், `திருவலம்புரம்` எனப்படுவதும் ஆகிய தலத்தினை அரிய குலத்தில் தோன்றிய , அரிய தமிழ்ப் பாடலில் வல்ல , வன்றொண்டனாகிய நம்பியாரூரனது சொல்லால் , பெரிய குழாமாகிய அடியவரோடும் கூடிநின்று துதித்தல், பெருமையைத் தருவதாம் .
                                             திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 21

"சொல்லால் வரும்குற்றம், சிந்தனையால் வரும் தோடம், செய்த பொல்லாத தீவினை, பார்வையில் பாவங்கள், புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீ...