திருத் தலைச்சங்காடு




திருத் தலைச்சங்காடு

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 21 கி.மீ. தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது. அருகில் திருஆக்கூர் திருத்தலம் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருதலைச்சங்க நான்மதியம் என்ற கோயிலும், சிவன் கோயிலின் அருகாமையில் உள்ளது.

     திருக்கடவூரில் இருந்து சுமார் 8 கி.மீ. வடக்கே பயணம் செய்தும் இத்திருத்தலத்தை அடையலாம்.


இறைவர்              : சங்காரண்யேசுவரர், சங்கவனேசுவரர்

இறைவியார்           : சௌந்திரநாயகி

தல மரம்                : புரசமரம்

தீர்த்தம்                : சங்குதீர்த்தம் (பௌர்ணமியன்று நீராடுதல் சிறப்பு), காவிரி

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - நலச்சங்க வெண்குழையும்.

         கோச்செங்கட் சோழ நாயனாரால்  யானை நுழைய முடியாத அளவுக்கு வாசல் கொண்டு கட்டப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றாகும். கோயிலுக்கு இராஜகோபுரம் இல்லை. ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிரகாரத்தில் நேர் எதிரே நந்தி மண்டபம் மற்றும் பலிபீடத்தைக் காணலாம். பலிபீடத்தின் பின்னால் சற்று உயரமான மேடையில் இறைவன் சங்காரண்யேசுவரர் சந்நிதி அமைந்துள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியே படிகளேறி இறைவன் சந்நிதி உள்ள முன் மண்டபத்திற்குச் செல்ல வேண்டும். முன் மண்டபத்தைக் கடந்து சென்றால் கருவறையில் சங்காரண்யேசுவரர் லிங்க உருவில் காட்சி தருகிறார். மூலவர் சங்காரண்யேசுவரருக்கு நல்லெண்ணை ஊற்றி அபிஷேகம் செய்யும் போது விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும் சிறப்புடையது இத்தலம். கருவறை சுற்றில் ஸ்ரீசண்டிகேஸவரர், மஹாவிஷ்ணு, ஸ்ரீஜுரஹரர், ஸ்ரீராமர் சீதை மற்றும் தேவார நால்வர் உருவச் சிலைகளைக் காணலாம்.

         தெற்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியும், மேற்கு வெளிப் பிரகாரத்தில் முருகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரருக்கு தனி சந்நிதியும் உள்ளன. மேற்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் மஹாவிஷ்ணு சீதேவி, பூதேவி சமேதராய் காட்சி தருகிறார். மஹாவிஷ்ணு இத்தலத்தில் சங்காரண்யேசுவரரை வழிபட்டு தனது ஆயுதமாக பாஞ்சசன்னிய சங்கைப் பெற்ற சிறப்புடையது இத்தலம். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி சௌந்தரநாயகி சந்நிதி அமைந்துள்ளது. இறைவி கருவறை வாயிலின் வெளியே இடதுபுறம் புவனேஸ்வரியின் தனி சந்நிதி அமைந்துள்ளது.

         கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியும் உள்ளதைக் காணலாம். இத்தலத்தின் தல விருட்சம் புரச மரம். புரச மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம், மற்றும் விநாயகர் திரு உருவங்களைக் காணலாம். ஆலயத்தின் தீர்த்தம் சங்குதீர்த்தம். இது கோவிலுக்கு எதிரில் உள்ளது. இத்தீர்த்தத்தில் பௌர்ணமி நாளில் நீராடுவது விசேஷமாகும்.

         காலை 8 மணி முதல் பகல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய குருக்கள் வீடு அருகில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், " தூய கொடி அங்கு ஆடு கோபுரம் வான் ஆற்று ஆடுகின்ற தலைச்சங்காடு மேவும் சயம்புவே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 115
காரைகள் கூகை முல்லை
         எனநிகழ் கலைசேர் வாய்மைச்
சீர்இயல் பதிகம் பாடி,
         திருக்கடைக் காப்புத் தன்னில்
நாரிஓர் பாகர் வைகும்
         நனிபள்ளி உள்கு வார்தம்
பேர்இடர் கெடுதற்கு ஆணை
         நமதுஎனும் பெருமை வைத்தார்.

         பொழிப்புரை : `காரைகள் கூகை முல்லை' (தி.2 ப.84) எனத் தொடங்கிச் செல்லும் கலை ஞானமும் சிவஞானமும் விளங்கும் சிறப்புக் கொண்ட இயற்பதிகத்தைப் பாடி, திருக்கடைக்காப்பில் `உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான், நிலையாய் எழுந்தருளியுள்ள திருநனிபள்ளியை நினைப்பவரின் பெரிய இடர்கள் யாவும் கெடுவதற்கு ஆணை நமதாகும்' என்ற பெருமையினையும் குறித்து அருளினார்.


பெ. பு. பாடல் எண் : 116
ஆதியார் கோயில் வாயில்
         அணைந்துபுக்கு, அன்பு கூர,
நீதியால் பணிந்து, போற்றி ,
         நீடிய அருள்முன் பெற்று,
போதுவார் தம்மைச் சூழ்ந்து
         பூசுரர் குழாங்கள் போற்றும்
காதல்கண்டு, அங்கு அமர்ந்தார்
         கவுணியர் தலைவ னார்தாம்.

         பொழிப்புரை : நனிபள்ளியில் வீற்றிருந்தருளும் பழம்பொருளாய சிவபெருமானின் கோயில் வாயிலை அடைந்து, உட்சென்று, அன்புமிக நெறிப்பட வணங்கிப் போற்றி, அப்பெருமானின் பேரருளைப் பெற்று, வெளியே செல்பவரான கவுணியர் தலைவரான பிள்ளையார், தம்மைச் சூழ இருந்து அந்தணர் குழாம் போற்றுகின்ற அன்பைக் கண்டு, அங்கே விரும்பி எழுந்தருளியிருந்தார்.


பெ. பு. பாடல் எண் : 117
அம்பிகை அளித்த ஞானம்
         அகிலமும் உய்ய வுண்ட
நம்பெருந் தகையார் தம்மை
         எதிர்கொண்டு நண்ண வேண்டி,
உம்பரும் வணங்கு மெய்ம்மை
         உயர்தவத் தொண்ட ரோடு
தம்பெரு விருப்பால் வந்தார்
         தலைசை அந்தணர்கள் எல்லாம்.

         பொழிப்புரை : உமையம்மையார் அருளிய ஞான அமுதத்தை உலகுய்ய உண்ட நம் பெருந்தகையாரான பிள்ளையாரை எதிர் கொள்ள, தேவர்களும் வணங்கும் மெய்ம்மையுடைய தவத்தில் சிறந்த தொண்டர்களுடனே, திருத்தலைச்சங்காட்டில் வாழும் அந்தணர்கள் அனைவரும் தம் மிகுவிருப்பத்தால் வந்தார்கள்.


பெ. பு. பாடல் எண் : 118
காவணம் எங்கும் இட்டு,
         கமுகொடு கதலி நாட்டி,
பூவணத் தாமம் தூக்கி,
         பூரண கும்பம் ஏந்தி,
ஆவண வீதி எல்லாம்
         அலங்கரித்து, அண்ண லாரை
மாவண மலர்மென் சோலை
         வளம்பதி கொண்டு புக்கார்.

         பொழிப்புரை : அந்தணர் முதலியவர்கள், எங்கும் பந்தல் இட்டுக் கமுகு மரங்களையும் வாழை மரங்களையும் நிறுத்தியும், மலர் மாலைகளைத் தொங்கவிட்டும், நிறைகுடங்கள் வைத்தும், வாணிகம் மிக்க தெருக்களை எல்லாம் அணிசெய்தும், பெருமையுடைய பிள்ளையாரை, வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த மென்மையான சோலைகள் சூழ்ந்த வளமான தம் பதிக்குள் அழைத்துப் போயினர்.


பெ. பு. பாடல் எண் : 119
திருமறை யோர்கள் சூழ்ந்து,
         சிந்தையின் மகிழ்ச்சி பொங்க,
பெருமறை ஓசை மல்க,
         பெருந்திருக் கோயில் எய்தி,
அருமறைப் பொருள் ஆனாரை,
         பணிந்து,அணி நற்சங் கத்தில்
தருமுறை நெறிஅக் கோயில்
         சார்ந்தமை அருளிச் செய்தார்.

         பொழிப்புரை : அந்தணர்கள் சூழ இருந்து தத்தம் உள்ளத்தில் மகிழ்ச்சி மிக மறைகளை ஒலிக்க, பெரிய திருமாடக் கோயிலை அடைந்து, அரிய மறைகளின் பொருளாய் உள்ளவரை வணங்கி, அழகிய வலம்புரிச் சங்கின் வடிவில் அமைக்கப்பட்ட அக்கோயிலில், அவ்விறைவர் விரும்பி வீற்றிருக்கும் தன்மை பற்றித் திருப்பதிகத்தைப் பாடினார்.

         இம்மாடக் கோயில் கோச்செங்கட் சோழரால் கட்டப் பெற்றதாகும். முற்பிறவிச் சார்பால், யானை ஏறாதவாறு கட்டப் பெற்றுள்ள கோவிலாகும். வலமாகச் சுழிந்து வரும் திருச்சுற்றுக்களுடன், நடுவில் கருவறையும், அதன் நடுவில் உயர்ந்த நிலையில் இறைவர் விளங்குவதும் வலம்புரிச் சங்குகள் விளங்கும் தோற்றத்தைக் காட்டுவதாகும். இதுபொழுது பாடிய திருப்பதிகம் `நலச் சங்க' (தி.2 ப.55) எனும் காந்தாரப் பண்ணில் அமைந்த திருப்பதிகமாகும்.



2.055 திருத்தலைச்சங்காடு                பண் - காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நலச்சங்க வெண்குழையும்
         தோடும்பெய்து,ஓர் நால்வேதம்
சொலச்சங்கை இல்லாதீர்,
         சுடுகாடுஅல்லால் கருதாதீர்,
குலைச்செங்காய்ப் பைங்கமுகின்
         குளிர்கொள்சோலைக் குயில்ஆலும்
தலைச்சங்கைக் கோயிலே
         கோயிலாகத் தாழ்ந்தீரே.

         பொழிப்புரை :அழகிய சங்கவெண்குழையையும் தோட்டையும் அணிந்து ஒப்பற்ற நால்வேதங்களை ஐயம் இன்றி அருளியவரே! சுடுகாடல்லாமல் வேறோர் இடத்தைத் தாம் ஆடுதற்கு இடமாகக் கருதாதவரே! நீர்க்குலைகளாகக் காய்த்துள்ள சிவந்த காய்களை உடைய பசுமையான கமுக மரச்சோலைகளில் குயில்கள் ஆலும் சிறப்புடைய தலைச்சங்கைக் கோயிலை நீர் இருக்கும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

  
பாடல் எண் : 2
துணிமல்கு கோவணமும்
         தோலும்காட்டித் தொண்டுஆண்டீர்,
மணிமல்கு கண்டத்தீர்,
         அண்டர்க்குஎல்லா மாண்புஆனீர்,
பிணிமல்கு நூன்மார்பர்
         பெரியோர்வாழும் தலைச்சங்கை
அணிமல்கு கோயிலே
         கோயிலாக அமர்ந்தீரே.

         பொழிப்புரை :துணியால் இயன்ற கோவணத்தையும் தோல் ஆடையையும் உடுத்த கோலம் காட்டி ஆட்கொண்டவரே! நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே! தேவர்களுள் மாட்சிமை உடையவரே! நீர், முறுக்கிய பூணூல் மார்பினராகிய அந்தணர் வாழும் தலைச்சங்கையில் விளங்கும் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டு அமர்ந்துள்ளீர்.


பாடல் எண் : 3
சீர்கொண்ட பாடலீர்,
         செங்கண்வெள்ளேறு ஊர்தியீர்,
நீர்கொண்டும் பூக்கொண்டும்
         நீங்காத்தொண்டர் நின்றுஏத்தத்
தார்கொண்ட நூன்மார்பர்
         தக்கோர்வாழும் தலைச்சங்கை
ஏர்கொண்ட கோயிலே
         கோயிலாக இருந்தீரே.

         பொழிப்புரை :சிறப்புமிக்க பாடல்களைப் பாடுபவரே! சிவந்த கண்ணையுடைய திருமாலாகிய வெள்ளேற்றை ஊர்தியாகக் கொண்டவரே! நீரையும் பூவையும் கொண்டு உம்மை நீங்காத தொண்டர் நின்று வழிபட மாலையையும் பூணூலையும் அணிந்த மார்பினை உடையவரே! நீர், தக்கோர் வாழும் தலைச்சங்கையிலுள்ள அழகிய கோயிலை இடமாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 4
வேடஞ்சூழ் கொள்கையீர்,
         வேண்டிநீண்ட வெண்திங்கள்
ஓடஞ்சூழ் கங்கையும்,
         உச்சிவைத்தீர், தலைச்சங்கைக்
கூடஞ்சூழ் மண்டபமும்
         குலாயவாசல் கொடித்தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே
         கோயிலாக மகிழ்ந்தீரே.

         பொழிப்புரை :தாமே விரும்பிப் பற்பல வடிவங்களோடு வரும் இயல்பினரே! நீண்ட வெண்டிங்களாகிய ஓடம் செல்லும் கங்கையாற்றை உச்சியில் வைத்துள்ளவரே! நீர், தலைச்சங்கையில் கூடம், மண்டபம் வாயிலில் கொடிதோன்றும் மாடம் ஆகிய வீடுகள் சூழ்ந்த கோயிலை இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 5
சூலஞ்சேர் கையினீர், சுண்ணவெண்ணீறு ஆடலீர்,
நீலஞ்சேர் கண்டத்தீர், நீண்டசடைமேல் நீர்ஏற்றீர்,
ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னும் தலைச்சங்கைக்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.

         பொழிப்புரை :சூலம் ஏந்திய கையை உடையவரே! பொடியாகிய வெண்ணீற்றைப்பூசி ஆடுபவரே! நீலகண்டரே! நீண்ட சடைமேல் கங்கையை ஏற்றுள்ளவரே! நீர், வளம் சேர்ந்த குளிர்ந்த சோலைகளில் அன்னங்கள் பொருந்தி வாழும் தலைச்சங்கையில் உள்ள அழகிய கோயிலை உமது கோயிலாக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 6
நிலநீரொடு ஆகாசம்
         அனல்காலாகி நின்றுஐந்து
புலநீர்மை புறங்கண்டார்,
         பொக்கஞ்செய்யார், போற்றுஓவார்,
சலநீதர் அல்லாதார்
         தக்கோர்வாழுந் தலைச்சங்கை
நலநீர கோயிலே
         கோயிலாக நயந்தீரே.

         பொழிப்புரை :நிலம், நீர், ஆகாயம், அனல், காற்று ஆகிய ஐம்பூதவடிவாய் நின்று ஐம்புலன்களை வென்று நிற்பவரே! பொய்யிலாரது வழிபாட்டை ஏற்பவரே! நீர், வஞ்சகமும் இழிசெயல்களும் இல்லாததக்கோர் வாழும் தலைச்சங்கையில் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 7
அடிபுல்கு பைங்கழல்கள்
         ஆர்ப்பப்பேர்ந்துஓர் அனல்ஏந்திக்
கொடிபுல்கு மென்சாயல்
         உமைஓர் பாகம்கூடினீர்
பொடிபுல்கு நூன்மார்பர்
         புரிநூலாளர் தலைச்சங்கைக்
கடிபுல்கு கோயிலே
         கோயிலாகக் கலந்தீரே.

         பொழிப்புரை :திருவடியிற் பொருந்திய கழல் ஆர்க்க அனல் ஏந்தி நடனம் ஆடி, கொடிபோன்ற மென்மையான சாயலை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ளவரே! நீர், வெண்பொடிபூசிப் பூணநூல் அணிந்த மார்பினராய் முப்புரிநூலணிந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் விளங்கும் மணம் கமழும் கோயிலையே உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 8
திரைஆர்ந்த மாகடல்சூழ்
         தென்இலங்கைக் கோமானை
வரைஆர்ந்த தோள்அடர
         விரலால்ஊன்று மாண்பினீர்,
அரைஆர்ந்த மேகலையீர்,
         அந்தணாளர் தலைச்சங்கை
நிரைஆர்ந்த கோயிலே
         கோயிலாக நினைந்தீரே.

         பொழிப்புரை :திரைகளோடு கூடிய பெரிய கடல்சூழ்ந்த இலங்கை மன்னனை, அவனுடைய மலைபோன்ற தோள்கள் நெரியுமாறு கால் விரலால் ஊன்றும் பெருவீரம் உடையவரே! இடையில் மேகலையை உடுத்த அம்மையின் பாகத்தைக் கொண்டவரே! நீர் அந்தணாளர் பல்கிவாழும் தலைச்சங்கையில் முறையாக அமைந்த கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 9
பாய்ஓங்கு பாம்புஅணைமே
         லானும்பைந்தா மரையானும்
போய்ஓங்கிக் காண்கிலார்,
         புறநின்றுஓரார், போற்றுஓவார்,
தீஓங்கு மறையாளர்
         திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச்
சேய்ஓங்கு கோயிலே
         கோயிலாகச் சேர்ந்தீரே.

         பொழிப்புரை :பாயாக அமைந்த பாம்பணைமேல் பள்ளிகொள்ளும் திருமாலும் பசிய தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் சென்று காணஇயலாதவரே! புறச்சமயங்களில் நில்லாத அகச்சமயிகளால் அறிந்து போற்றப்படுபவரே! முத்தீவளர்க்கும் நான்மறையாளர் வாழும் செல்வச் செழிப்புள்ள தலைச்சங்கையில் உயர்ந்து திகழும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 10
அலைஆரும் புனல்துறந்த
         அமணர்குண்டர் சாக்கியர்
தொலையாதுஅங்கு அலர்தூற்றத்
         தோற்றங்காட்டி ஆட்கொண்டீர்,
தலையான நால்வேதம்
         தரித்தார்வாழும் தலைச்சங்கை
நிலைஆர்ந்த கோயிலே
         கோயிலாக நின்றீரே.

         பொழிப்புரை :அலைகளை உடைய நீரில் குளியாத அமணர், குண்டர், சாக்கியர் இடைவிடாது அலர்தூற்ற, தம்மை வழிபடுவார்க்குக் காட்சி தந்து ஆட்கொள்பவரே! நீர், நிலையான நால்வேதங்களை ஓதி உணர்ந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் நிலையாக உள்ள கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 11
நளிரும் புனல்காழி
         நல்லஞான சம்பந்தன்,
குளிரும் தலைச்சங்கை
         ஓங்குகோயில் மேயானை,
ஒளிரும் பிறையானை
         உரைத்தபாடல் இவைவல்லார்,
மிளிரும் திரைசூழ்ந்த
         வையத்தார்க்கு மேலாரே.

         பொழிப்புரை :குளிர்ந்த நீரால் வளம் பெறும் காழியில் தோன்றிய நன்மை கருதும் ஞானசம்பந்தன், தண்மையான தலைச்சங்கையில் ஓங்கிய கோயிலில் விளங்கும் இறைவனை, ஒளிரும் பிறையை அணிந்தவனை, போற்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் விளங்கும் கடலால் சூழப்பட்ட மண் உலகினர்க்கு மேலான விண் உலகத்தினராவர்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 21

"சொல்லால் வரும்குற்றம், சிந்தனையால் வரும் தோடம், செய்த பொல்லாத தீவினை, பார்வையில் பாவங்கள், புண்ணியநூல் அல்லாத கேள்வியைக் கேட்டிடும் தீ...