திருஆக்கூர் -
(தான்தோன்றி மாடம்)
சோழ நாட்டு, காவிரித் தென் கரைத் திருத்தலம்.
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில்
மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில்
இருக்கிறது. ஆக்கூர் பேருந்து நிலையத்தின் வடபாகத்தில் இத்திருக்கோயில்
அமையப்பெற்றுள்ளது.
திருத்தலைச்சங்காடு என்ற பாடல் பெற்ற
திருத்தலம் இங்கிருந்து 2 கி.மி. தூரத்தில்
இருக்கிறது.
இறைவர்
: தான் தோன்றி நாதர், சுயம்பு நாதர்
இறைவியார்
: வாணெடுங்கண்ணியம்மை, கட்கநேத்ரி
தீர்த்தம் : குமுத தீர்த்தம்
வழிபட்டோர் : சிறப்புலி நாயனார்
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - அக்கிருந்த ஆரமும் (2-42).
2.
அப்பர்
-முடித்தா மரையணிந்த (6-21).
கோச்செங்கட் சோழ நாயனார் தனது
முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரணமாக, யானை ஏற முடியாத மாடக் கோயில்கள் 70 கட்டினார் என்று வரலாறு கூறுகிறது.
ஆக்கூர் தான்தோன்றியப்பர் கோயிலும் ஒரு மாடக் கோயில்.
மாடம் என்னும் பெயர் கொண்ட
திருக்கோயில்கள் இரண்டு தேவாரத்தில் காணப்படுகின்றன. ஒன்று நடுநாட்டுத் தலமான
பெண்ணாகடத்தில் உள்ள தூங்கானை மாடம்; மற்றொன்று
காவிரி தெனகரைத் தலங்களில் ஒன்றான ஆக்கூர் தான்தோன்றி மாடமாகும். யானை ஏறமுடியாத
படிக்கட்டுகளை உடைய உயரமான தளத்தில் இறைவன கருவறை அமையப்பெற்ற கோயில்கள்
மாடக்கோயில் என்று பெயர் பெற்றன. ஊரின் பெயர் ஆக்கூர். ஆயினும், அங்குள்ள கோயிலுக்குத் தான்தோன்றிமாடம்
என்று பெயர். அதாவது தான்தோன்றியப்பர் (சுயம்புமூர்த்தியாகிய இறைவர்)
எழுந்தருளியிருக்கும் மாடக் கோயில் என்று பொருள்படும்.
கிழக்கில் 3 நிலை இராஜகோபுரமும் தெற்கில் ஒரு
நுழைவாயிலும் உள்ளன. கோபுர வாயிலில் விநாயகர் காட்சி தருகிறார். கோபுர வாயில்
வழியாக உள்ளே நுழைந்து நேரே சென்றால் நாம் இருப்பது கிழக்கு வெளிப் பிரகாரத்தில்.
நேரே கிழக்கு நோக்கி உயரமான மாடத்தில் இறைவன் கருவறை உள்ளது. படிகள் ஏறிச்
சென்றால் பலிபீடத்தையும், நந்தியையும் நாம்
தரிசிக்கலாம். இங்கு குடிகொண்டுள்ள தான்தோன்றியப்பர் ஒரு சுயம்பு லிங்கம் ஆவார்.
அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய
தலங்களில் இத்தலமும் ஒன்றானதால் இறைவி வாள்நெடுங்கண்ணியின் சந்நிதி மூலவர்
சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்திருக்கிறது.
உள் சுற்றில் விநாயகர், முருகர், விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.
சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் திருஉருவச் சிலைகள் தனி
சந்நிதியிலும், சுந்தரர் அவரது இரு
மனைவியர் சங்கிலி நாச்சியார் மற்றும் பரவை நாச்சியார் திருஉருவச் சிலைகள் தனி
சந்நிதியிலும் காணப்படுகின்றன. அடுத்து காலபைரவர், பைரவர், சூரியன் ஆகியோரின் திருஉருவச் சிலைகள்
உள்ளன. 63 நாயன்மார்களில்
ஒருவரான சிறப்புலி நாயனார் அவதரித்த தலம் ஆக்கூர். கருவறை அர்த்த மண்டபத்தில்
இடதுபுறம் சிறப்புலி நாயனார் சந்நிதியும் அவருக்கு நேர் எதிரே வலதுபுறம்
ஆயிரத்தில் ஒருவர் சந்நிதியும் அமைந்துள்ளன. இத்தலத்திறகுரிய சிறப்பு மூர்த்தி
இந்த ஆயிரத்தில் ஒருவர்.
மன்னன் ஒருவன் இறைவன் கட்டளைப்படி தினமும் 1000 ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய
முற்பட்டான். 48 நாட்கள் இந்த
அன்னதானம் செய்ய வேண்டியிருந்தது. தினந்தோறும் 1000 இலை போட்டு உணவு பரிமாறினாலும் 999 பேர் மட்டுமே உணவருந்தினர். 47 நாட்கள் இவ்வாறு தினமும் ஒருவர்
குறைவதைக் கண்ட மன்னன் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டான். 48-வது நாள் அந்தணர் உருவில் ஆயிரத்தில்
ஒருவராக தானும் வந்து உணவருந்தி அம்மன்னனுக்கு அருள் புரிந்தார். பந்தியில் தானும்
ஒருவராக அமர்ந்து இறைவன் உணவருந்திய பெருமையை உடையது இத்தலம்.
சிறப்புலி நாயனார்
வரலாறு
திருஆக்கூரிலே வேதியர் குலத்தில்
அவதரித்தவர். அடியவர்களுக்கு அமுது
ஊட்டுவதும், பொருள் உதவுவதும்
இவர்தம் திருத்தொண்டு. திருவைந்தெழுத்து
ஓதுவதும், வேள்வி செய்வதும்
இவருடைய வழக்கம். இவ்வாறு சிவப்பணி செய்து இறைவன் திருவடியை அடைந்தார்.
காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "பொங்கும் இருள் கூறு திரு ஆக்கு ஊர் கொடுப்பன போல் சூழ்ந்து மதில்
வீறு திரு ஆக்கூர் விளக்கமே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 535
பரவி
ஏத்திஅங்கு அரிதினில்
போந்து, பார் பரவுசீர் அரசோடு,
விரவு
நண்புஉடைக் குங்குலி
யப்பெரும் கலயர் தம்
மனைமேவி,
கரைஇல்
காதல்மற் றுஅவர்அமைத்து
அருளிய விருந்து
இனிது அமர்ந்து,அங்குச்
சிரபு
ரத்தவர் திருமயா
னமும்பணிந்து
இருந்தனர் சிறப்புஎய்தி.
பொழிப்புரை : வணங்கிப் போற்றி, அங்கிருந்து அரிதாக வெளியே வந்து, உலகம் போற்றும் சிறப்புடைய
திருநாவுக்கரசருடனே, பொருந்திய நட்புடைய
குங்குலியக்கலய நாயனாரின் இல்லத்தில் எழுந்தருளி, எல்லையில்லாத அன்பினால் அவர்
அமைத்தளித்த விருந்தை இனிதாய் உண்ட பிள்ளையார், அருகிலுள்ள திருக்கடவூர்த்
திருமயானத்தையும் பணிந்து சிறப்பெய்தித் தங்கியிருந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 536
சிறப்பு
உடைத்திருப் பதி அதன்
இடைச்சில நாள்
அமர்ந்து, அருளோடும்
விறல்பெ
ருங்கரி உரித்தவர்
கோயில்கள்
விருப்பொடும் தொழச் செல்வார்,
மறைப்பெ
ருந்திருக் கலயரும்
உடன்பட, வணங்கிய மகிழ்வோடும்
அறப்பெ
ரும்பயன் அனையஅத்
தொண்டரோடு அணைந்தனர்
திருஆக்கூர்.
பொழிப்புரை : சிறந்த
அத்திருப்பதியில் சில நாள்கள் விரும்பித் தங்கி, வலிய பெரிய யானையை உரித்த சிவபெருமான்
எழுந்தருளியிருக்கும் பிறகோயில்களையும் தொழுவதற்கு அருள் பெற்றுச் செல்பவராய், மறைகளைப் பயின்ற பெரிய சைவ மெய்வடிவுடைய
குங்குலியக்கலய நாயனாரும் உடன்பட,
வணங்கும்
பொருட்டுக் கொண்ட பெருமகிழ்வுடன்,
அறத்தின்
பெரும்பயன் போன்ற நாவரசருடன் திருவாக்கூரினைச் சென்றடைந்தார் பிள்ளையார்.
பெ.
பு. பாடல் எண் : 537
தக்க
அந்தணர் மேவும்அப்
பதியினில் தான்தோன்றி
மாடத்துச்
செக்கர்
வார்சடை அண்ணலைப்
பணிந்து,இசைச் செந்தமிழ்த்
தொடைபாடி,
மிக்க
கோயில்கள் பிறவுடன்
தொழுதுபோய், மீயச்சூர்
பணிந்துஏத்தி,
பக்கம்
பாரிடம் பரவநின்று
ஆடுவார் பாம்புர நகர்சேர்ந்தார்.
பொழிப்புரை : தகுந்த அந்தணர்கள்
வாழ்கின்ற அப்பதியில், தான் தோன்றிமாடக்
கோயிலில் சிவந்த நீண்ட சடையையுடைய இறைவரைப் பணிந்து, இசையையுடைய செந்தமிழ்ப் பதிக மாலையைப்
பாடி, பெருமை பொருந்திய பிற
கோயில்களையும் உடனே தொழுது சென்று,
`திருமீயச்சூரினையும்\' வணங்கி, பூத கணங்கள் அருகிலிருந்து போற்ற நின்று
ஆடும் இறைவரின் `திருப்பாம்புர' நகரத்தை அடைந்தார்.
தான் தோன்றிமாடம் -
இறைவன் தானே தோன்றி எழுந்தருளியிருக்கும் மாடக் கோயில். சுயம்பு என்பதற்குரிய
தமிழ்ச் சொல் "தான்தோன்றி" என்பதாகும். இவ்விடத்து அருளிய பதிகம் `அக்கிருந்த' (தி.2 ப.42) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணிலமைந்த
பதிகமாகும்.
பிறகோயில்கள் என்பன திருச்செம்பொன்பள்ளி, திருப்பறியலூர் முதலாயினவாகலாம் என்பர்
சிவக்கவிமணியார். திருமீயச்சூரில் அருளிய பதிகம் `காயச் செவ்வி' (தி.2 ப.62) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த
பதிகமாகும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிகம்
2.042 திருஆக்கூர்த் தான்றோன்றிமாடம் பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
அக்குஇருந்த
ஆரமும், ஆடுஅரவும், ஆமையும்,
தொக்குஇருந்த
மார்பினான், தோல்உடையான், வெண்ணீற்றான்,
புக்குஇருந்த
தொல்கோயில் பொய்இலா மெய்ந்நெறிக்கே
தக்குஇருந்தார்
ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பொழிப்புரை :என்புமாலை, ஆடும் பாம்பு, ஆமைஒடு, ஆகியனவற்றை ஒருசேரஅணிந்த மார்பினனும், திருவெண்ணீறு அணிந்தவனும், ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள
பழமையான கோயில், பொய்யில்லாத
மெய்ந்நெறியாகிய சைவசமயத்தைச் சார்ந்தொழுகுவார் பலர் வாழும் ஆக்கூரில் விளங்கும்
தான்தோன்றி மாடம் ஆகும்.
பாடல்
எண் : 2
நீர்ஆர
வார்சடையான், நீறுஉடையான், ஏறுஉடையான்,
கார்ஆர்பூங்
கொன்றையினான், காதலித்த தொல்கோயில்
கூர்ஆரல்
வாய்நிறையக் கொண்டு,அயலே கோட்டகத்தில்
தாராமல்கு
ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பொழிப்புரை :கங்கை தங்கிய நீண்ட
சடையினனும், திருநீறு அணிந்தவனும்
விடையேற்றை ஊர்தியாகக் கொண்டவனும்,
கார்காலத்தே
மலரும் கொன்றை மலரைச் சூடியவனும் ஆகிய சிவபெருமான் விரும்பிய பழமையான கோயில்
நாரைப் பறவைகள் மிகுதியான ஆரல்மீன்களை வாய் நிறைய எடுத்துக்கொண்டு நீர்க்கரைகளில்
மிகுதியாக வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடமாகும்.
பாடல்
எண் : 3
வாள்ஆர்கண்
செந்துவர்வாய் மாமலையான் தன்மடந்தை
தோள்ஆகம்
பாகமாப் புல்கினான் தொல்கோயில்,
வேளாளர்
என்றவர்கள் வள்ளன்மையான் மிக்குஇருக்கும்
தாளாளர்
ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பொழிப்புரை :ஒளி பொருந்திய
கண்களையும், சிவந்தபவளம் போன்ற
வாயினையும் உடையவனாய் இமவான் மகளாகிய பார்வதியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக்
கொண்டு அவள் தோளைத் தழுவிய சிவபெருமானது பழமையான கோயில், வள்ளன்மை உடைய, பிறர்க்கு உபகாரியாக விளங்கும்
ஊக்கமுடைய வேளாளர்கள் மிகுந்து வாழும் ஆக்கூரில் விளங்கும் தான்தோன்றி மாடம்
ஆகும்.
பாடல்
எண் : 4
கொங்குசேர்
தண்கொன்றை மாலையினான் கூற்றுஅடரப்
பொங்கினான்
பொங்குஒளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்
அங்கம்
ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி
தங்கினார்
ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பொழிப்புரை :தேன் பொருந்திய
குளிர்ந்த கொன்றை மாலையைச் சூடியவனும் இயமனை வருத்தச் சினந்தவனும் ஒளிமிக்க
திருவெண்ணீற்றை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானது அழகிய கோயில், அரிய நான்கு வேதங்களோடு ஆறு
அங்கங்களையும் கற்றுணர்ந்து ஐவகை வேள்விகளையும்புரியும் அந்தணர்கள் வாழும்
ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடமாகும்.
பாடல்
எண் : 5
வீக்கினான்
ஆடுஅரவம், வீழ்ந்துஅழிந்தார்
வெண்தலைஎன்பு
ஆக்கினான்
பலகலன்கள், ஆதரித்துப் பாகம்பெண்
ஆக்கினான்
தொல்கோயில், ஆம்பலம்பூம்
பொய்கைபுடை
தாக்கினார்
ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பொழிப்புரை :ஆடுகின்ற பாம்பைக்
கச்சாகக்கட்டியவரும், இறந்து அழிந்தவருடைய
வெண்டலைகளையும், என்புகளையும் பல
அணிகலன்களாக அணிந்தவரும், விரும்பி ஒருபாகமாகப்
பெண்ணைக் கொண்டவரும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில் ஆம்பல் பூக்கள் மலரும் அழகிய
பொய்கைக்கரையை உயர்த்திக் கட்டிய உழவர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள தான் தோன்றிமாடம்
ஆகும்.
பாடல்
எண் : 6
பண்ஒளிசேர்
நான்மறையான், பாடலினோடு ஆடலினான்,
கண்ஒளிசேர்
நெற்றியினான் காதலித்த தொல்கோயில்,
விண்ஒளிசேர்
மாமதியம் தீண்டியக்கால் வெண்மாடம்
தண்ஒளிசேர்
ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பொழிப்புரை :பண்ணமைதியும், அறிவொளியும் அமைந்த நான்கு வேதங்களையும்
அருளியவனும், பாடலிலும் ஆடலிலும்
வல்லவனும், ஒளிசெறிந்த
கண்பொருந்திய நெற்றியினனும் ஆகிய சிவபெருமான் காதலித்த பழமையான கோயில், வானவெளியில் உலாவும் பெரிய மதியொளி
சேர்தலால் வெண்மையான மாடவீடுகள் குளிர்ந்த ஒளியைப் பெறும் ஆக்கூரில் விளங்கும்
தான் தோன்றிமாடம் ஆகும்.
பாடல்
எண் : 7
வீங்கினார்
மும்மதிலும் வில்வரையால் வெந்துஅவிய
வாங்கினார், வானவர்கள்
வந்துஇறைஞ்சும் தொல்கோயில்,
பாங்கின்ஆர்
நான்மறையோடு ஆறுஅங்கம் பலகலைகள்
தாங்கினார்
ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பொழிப்புரை :பெருமை மிக்கவரும், மும்மதில்களையும் வெந்து அழியுமாறு
மலைவில்லை வளைத்தவரும், தேவர்களால் வந்து
வணங்கப்படுபவருமாகிய சிவபெருமான் எழுந்தருளிய பழமையான கோயில், பல பிரிவுகளுடன் கூடிய நான்மறைகளையும
ஆறு அங்கங்களையும் பலகலைகளையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழும் ஆக்கூரில் உள்ள
தான்தோன்றி மாடமாகும்.
பாடல்
எண் : 8
கல்நெடிய
குன்றுஎடுத்தான் தோள்அடரக் கால்ஊன்றி
இன்னருளால்
ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில்,
பொன்னடிக்கே
நாள்தோறும் பூவோடு நீர்சுமக்கும்
தன்அடியார்
ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பொழிப்புரை :கற்கள் நிரம்பிய
நீண்ட கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்கள் நெரியுமாறு கால் விரலை
ஊன்றிப் பின் அவன் வருந்தி வேண்ட அவனுக்கு இனிய கருணைகாட்டி ஆட்கொண்ட
எம்பெருமானின் பழமையான கோயில், சிவபிரானின்
பொன்போன்ற திருவடிகளுக்கு நாள்தோறும் பூவும் நீரும் சுமக்கும் சிவனடியார்கள் பலர்
வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.
பாடல்
எண் : 9
நன்மையான்
நாரணனும், நான்முகனும்
காண்புஅரிய
தொன்மையான், தோற்றம்கேடு
இல்லாதான் தொல்கோயில்,
இன்மையால்
சென்றுஇரந்தார்க்கு இல்லைஎன்னாது ஈந்துஉவக்கும்
தன்மையார்
ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பொழிப்புரை :நன்மைகள் செய்பவனாகிய
திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு இல்லாதவனும் ஆகிய
சிவபிரானது பழமையான கோயில், இன்மையால் வந்து
இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில்
விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.
பாடல்
எண் : 10
நாமருவு
புன்மை நவிற்றச் சமண்தேரர்
பூமருவு
கொன்றையினான் புக்குஅமரும் தொல்கோயில்
சேல்மருவு
பைங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை
தாம்மருவும்
ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.
பொழிப்புரை :சமணபௌத்தர்கள் நாவிற்
பொருந்திய புன்மை மொழிகளால் அறியாது பிதற்றித்திரிய, கொன்றைப் பூக்கள் பொருந்திய சடையினனாகிய
சிவபிரான் எழுந்தருளி அமரும் கோயில், சேல்மீன்கள்
பொருந்திய நீர்நிலைகளில் செங்கழுநீர் பசுமையான குவளை மலர்கள் ஆகியன வளரும்
வளமையைக் கொண்ட ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.
பாடல்
எண் : 11
ஆடல்
அமர்ந்தானை, ஆக்கூரில் தான்தோன்றி
மாடம்
அமர்ந்தானை, மாடஞ்சேர் தண்காழி
நாடற்கு
அரியசீர் ஞானசம் பந்தன்சொல்
பாடல்
இவைவல்லார்க்கு இல்லையாம் பாவமே.
பொழிப்புரை :திருக்கூத்து ஆடுவதை
விரும்புபவனாய், ஆக்கூரில்
தான்தோன்றிமாடத்து எழுந்தருளிய சிவபிரானை ஏத்தி மாடவீடுகள் நிரம்பிய
சீகாழிப்பதியில் தோன்றிய அறிதற்கரிய புகழினனாகிய ஞானசம்பந்தன் பாடிய
இப்பதிகப்பாடல்கள் வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 248
சீர்மன்னும்
திருக்கடவூர்த் திருமயா னமும்வணங்கி,
ஏர்மன்னும்
இன்னிசைப்பாப் பலபாடி, இனிதுஅமர்ந்து,
கார்மன்னும்
கறைக்கண்டர் கழல்இணைகள் தொழுதுஅகன்று
தேர்மன்னும்
மணிவீதித் திருஆக்கூர் சென்றுஅணைந்தார்.
பொழிப்புரை : அவ்விருவரும், சீர்மை பொருந்திய திருக்கடவூர்த்
திருமயானம் என்ற திருப்பதிக்கும் சென்று வணங்கி, அழகு உடைய இனிய இசை கொண்ட தேவாரப்
பாடல்கள் பலவற்றையும் பாடி வணங்கி,
இனிதாய்
அங்கு வீற்றிருந்தருளி, மேகத்தின் தன்மை
பொருந்திய நீலகண்டரின் திருவடிகளை வணங்கி, அங்கிருந்து புறப்பட்டுத் தேர்
பொருந்திய திருஆக்கூரைச் சென்று சேர்ந்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 249
சார்ந்தார் தம்
புகல்இடத்தை, தான்தோன்றி மாடத்துக்
கூர்ந்து ஆர்வம்
உறப்பணிந்து, கோதுஇல்தமிழ்த் தொடை புனைந்து,
வார்ந்து ஆடும்
சடையார்தம் பதிபலவும் வணங்கியுடன்
சேர்ந்தார்கள்
தம்பெருமான் திருவீழி மிழலையினை.
பொழிப்புரை : தம்மை வந்து
அடைந்தவர்க்கு அடைக்கலந் தந்து ஆட்கொள்ளும் சிவபெருமானை, அப்பதியில் உள்ள `தான் தோன்றி மாடம்` என்னும் கோயிலினுள் கண்டு, மிகுந்த அன்பு பொருந்த வணங்கி, குற்றம் இல்லாத தமிழ்த் தொடை மாலை பாடி, அங்கிருந்து புறப்பட்டு, அசைந்து ஆடும் சடையுடைய இறைவர்
வீற்றிருந்தருளும் பதிகள் பலவற்றையும் போய் வணங்கிப், பின்னர் அவ்விருவரும் தம் பெருமானின்
திருவீழிமிழலையைச் சேர்ந்தனர்.
திரு ஆக்கூர் என்னும்
இப்பதியில்
அருளிய பதிகம்: `முடித்தாமரை` - திருத்தாண்டகம்.
பதிபலவும் என ஆசிரியர் கூறுதற்கு இயைய
திருமீயச்சூர், திருவன்னியூர் ஆகிய
பதிகளைக் கொள்ளலாம்.
1. திருமீயச்சூர்
இளங்கோயில்: `தோற்றும் கோயிலும்` (தி.5 ப.11)- திருக்குறுந்தொகை.
2.திருவன்னியூர்: `காடு கொண்டரங்கா` (தி.5 ப.26) - திருக் குறுந்தொகை.
திருநாவுக்கரசர்
திருப்பதிகம்
6. 021 திருஆக்கூர் திருத்தாடண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
முடித்தா
மரைஅணிந்த மூர்த்தி போலும்,
மூவுலகும் தாம்ஆகி
நின்றார் போலும்,
கடித்தா
மரைஏய்ந்த கண்ணார் போலும்,
கல்அலகு பாணி
பயின்றார் போலும்,
கொடித்தா
மரைக்காடே நாடும் தொண்டர்
குற்றேவல்
தாம்மகிழ்ந்த குழகர் போலும்,
அடித்தா
மரைமலர்மேல் வைத்தார் போலும்,
ஆக்கூரில் தான்தோன்றி
அப்ப னாரே.
பொழிப்புரை :முடியில் தாமரை மலரை
அணிந்த மூர்த்தியாய் மூவுலகும் பரந்தவராய் , தாமரைக் கண்ணராய் , கல்லலகு என்ற வாச்சியத்தை ஒலிக்கப்
பழகியவராய் , தம்மை
அருச்சிப்பதற்குத் தாமரைக் கூட்டத்தை நாடும் அடியவர்கள் செய்யும் குற்றேவலை
மகிழ்ந்த இளையராய், தம் திருவடித்
தாமரைகளை அடியவர்களின் உள்ளத்தாமரையில் வைத்தவராய், ஆக்கூரிலே ( தாமாகவே இலிங்க வடிவில்
எழுந்தருளியவர் ) தான்தோன்றியப்பர் உள்ளார் .
பாடல்
எண் : 2
ஓதிற்று
ஒருநூலும் இல்லை போலும்,
உணரப் படாததுஒன்று
இல்லை போலும்,
காதில்
குழைஇலங்கப் பெய்தார் போலும்,
கவலைப்
பிறப்புஇடும்பை காப்பார் போலும்,
வேதத்தோடு
ஆறுஅங்கம் சொன்னார் போலும்,
விடம்சூழ்ந்து இருண்ட
மிடற்றார் போலும்,
ஆதிக்கு
அளவாகி நின்றார் போலும்,
ஆக்கூரில் தான்தோன்றி
அப்ப னாரே.
பொழிப்புரை :ஒரு நூலையும்
ஆசிரியர்பால் கல்லாது எல்லா நூல்களையும் அறிந்தவராய் எல்லாச் செய்திகளையும்
உணர்ந்தவராய்க் காதில் ஒளி வீசுமாறு குழையை அணிந்தவராய்க் கவலைக்கு இடமாகிய
பிறவித்துன்பம் அடியவருக்கு வாராமல் தடுப்பவராய் , வேதங்களும் ஆறு அங்கங்களும் ஓதியவராய் , விடத்தால் சூழப் பட்டுக் கறுத்த
கழுத்தினராய்த் தாமே எல்லாவற்றிற்கும் ஆதியாய்த் தமக்கு ஓர் ஆதியின்றி ஆக்கூரில்
தான் தோன்றியப்பர் உகந்தருளி யுள்ளார்.
பாடல்
எண் : 3
மைஆர்
மலர்க்கண்ணாள் பாகர் போலும்,
மணிநீல கண்டம்
உடையார் போலும்,
நெய்ஆர்
திரிசூலம் கையார் போலும்,
நீறுஏறு தோள்எட்டு
உடையார் போலும்,
வைஆர்
மழுவாள் படையார் போலும்,
வளர்ஞாயிறு அன்ன
ஒளியார் போலும்,
ஐவாய்
அரவம்ஒன்று ஆர்த்தார் போலும்,
ஆக்கூரில் தான்தோன்றி
அப்ப னாரே.
பொழிப்புரை :மைபூசிய மலர்போன்ற
கண்களை உடைய பார்வதி பாகராய் , நீலகண்டராய் , நெய்அணிந்த முத்தலைச்சூலக் கையராய் .
திருநீறுபூசிய எண் தோளராய் , கூரிய
மழுப்படையினராய் , காலைச் சூரியன் போன்ற
செந்நிற ஒளியினராய், ஐந்தலைப் பாம்பினை
இடையில் இறுகக் கட்டியவராய்த் தான் தோன்றியப்பர் அடியவர் அகக்கண்களுக்குக் காட்சி
வழங்குகின்றார் .
பாடல்
எண் : 4
வடிவிளங்கு
வெண்மழுவாள் வல்லார் போலும்,
வஞ்சக்
கருங்கடல்நஞ்சு உண்டார் போலும்,
பொடிவிளங்கு
முந்நூல்சேர் மார்பர் போலும்,
பூங்கங்கை தோய்ந்த
சடையார் போலும்,
கடிவிளங்கு
கொன்றைஅம் தாரார் போலும்,
கட்டங்கம் ஏந்திய
கையார் போலும்,
அடிவிளங்கு
செம்பொற் கழலார் போலும்,
ஆக்கூரில் தான்தோன்றி
அப்ப னாரே.
பொழிப்புரை :கூர்மை விளங்கும்
வெள்ளிய மழுப்படையைக் கையாளுதலில் வல்லவராய்க் கடலில் தோன்றிய வஞ்சனை உடைய கரிய
நஞ்சினை உண்டவராய்த் திருநீற்றோடு பூணூலை அணிந்த மார்பினராய் , அழகிய கங்கை தோய்ந்த சடையினராய் , மணம்நாறும் கொன்றை மாலையினராய்க்
கட்டங்கம் என்ற படையை ஏந்திய கையராய்த் திருவடியில் பொற்கழல் அணிந்தவராய்த்
தான்தோன்றி யப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .
பாடல்
எண் : 5
ஏகாச
மாம்புலித்தோல் பாம்பு தாழ,
இடுவெண் தலைகலனா
ஏந்தி நாளும்,
மேகஆசம்
கட்டுஅழித்த வெள்ளி மாலை,
புனல்ஆர் சடைமுடிமேல்
புனைந்தார் போலும்,
மாகஆசம்
ஆயவெண் நீரும், தீயும்,
மதியும், மதிபிறந்த விண்ணும், மண்ணும்,
ஆகாசம்
என்றுஇவையும் ஆனார் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி
அப்ப னாரே.
பொழிப்புரை :புலித்தோலை இடையில்
உடுத்துப் பாம்பு மேலாடையாக உடல் மேல் தொங்க மண்டையோட்டினையே பிச்சை வாங்கும்
பாத்திரமாக ஏந்தி மின்னலை வென்று ஒளிவீசும் கங்கை தங்கும் சடைமுடிமேல்
வெண்பூமாலைகளைச் சூடி மிக்க ஒளியை உடைய வெள்ளிய நீரும் தீயும் சந்திரனும் சந்திரன்
உலவும் விண்ணும் மண்ணுலகும் வானுலகும் ஆகிய எங்கும் பரந்திருப்பவராகிய தான்
தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .
பாடல்
எண் : 6
மாதுஊரும்
வாள்நெடுங்கண், செவ்வாய், மென்தோள்,
மலைமகளை மார்பத்து
அணைத்தார் போலும்,
மூதூர்
முதுதிரைகள் ஆனார் போலும்,
முதலும் இறுதியும்
இல்லார் போலும்,
தீதுஊர
நல்வினையாய் நின்றார் போலும்,
திசைஎட்டும் தாமேஆம்
செல்வர் போலும்,
ஆதிரை
நாளா ஆமர்ந்தார் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி
அப்ப னாரே.
பொழிப்புரை :காதல் மிகுகின்ற
ஒளியை உடைய நெடிய கண்கள், சிவந்த வாய், மெல்லிய தோள்கள் இவற்றை உடைய பார்வதியை
மார்பில் அணைத்துப்பின் பாகமாகக் கொண்டு நிலமும் கடலுமாய், ஆதியந்தம் அற்றவராய்த் தீங்குகளை
வெல்லும் நல் வினை வடிவினராய், எண்திசைகளும் தமக்கே
உடைமையாக உடைய செல்வராய், ஆதிரை நட்சத்திரத்தை
விரும்பிக் கொள்பவராய்த் தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகின்றார் .
பாடல்
எண் : 7
மால்யானை
மத்தகத்தைக் கீண்டார் போலும்,
மான்தோல் உடையா
மகிழ்ந்தார் போலும்,
கோலானைக்
கோஅழலால் காய்ந்தார் போலும்,
குழவிப் பிறைசடைமேல்
வைத்தார் போலும்,
காலனைக்
காலால் கடந்தார் போலும்,
கயிலாயம் தம்இடமாக்
கொண்டார் போலும்,
ஆல்ஆன்ஐந்து
ஆடல் உகப்பார் போலும்,
ஆக்கூரில் தான்தோன்றி
அப்ப னாரே.
பொழிப்புரை :பெரிய யானையின்
தலையைப் பிளந்தவராய் மான்தோலை உடையாக விரும்பி ஏற்று , அம்பினை உடைய மன்மதனைத் தம்
கண்நெருப்பினால் கோபித்துச் சாம்பலாக்கி இளம்பிறையைச் சடைமேல் சூடிக் காலனைக்
காலால் ஒறுத்துக் கயிலாயத்தைத் தம் இருப்பிடமாக ஏற்றுப் பஞ்சகவ்வியத்தால் அபிடேகம்
செய்யப் படுவதனை உகந்த தான்தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .
பாடல்
எண் : 8
கண்ஆர்ந்த
நெற்றி உடையார் போலும்,
காமனையும் கண்அழலால்
காய்ந்தார் போலும்,
உண்ணா
அருநஞ்சம் உண்டார் போலும்,
ஊழித்தீ அன்ன ஒளியார்
போலும்,
எண்ணா
யிரம்கோடி பேரார் போலும்,
ஏறுஏறிச் செல்லும்
இறைவர் போலும்,
அண்ணாவும்
ஆரூரும் மேயார் போலும்,
ஆக்கூரில் தான்தோன்றி
அப்ப னாரே.
பொழிப்புரை :நெற்றிக் கண்ணராய்க்
காமனை அக்கண்ணின் தீயினால் எரித்தவராய்ப் பிறர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவராய் , ஊழித் தீப்போன்ற ஒளியினை உடையவராய்ப் பல
கோடிப் பேர்களுக்கு உரியவராய் ,
காளையை
இவர்ந்து செல்லும் தலைவராய் , அண்ணாமலையையும் , ஆரூரையும் உகந்தருளியிருப்பவராய்த் தான்
தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார் .
பாடல்
எண் : 9
கடிஆர்
தளிர்கலந்த கொன்றை மாலை
கதிர்போது தாதுஅணிந்த
கண்ணி போலும்,
நெடியான்
சதுர்முகனும் நேட நின்ற
நீலநல் கண்டத்து
இறையார் போலும்,
படிஏல்
அழல்வண்ணம், செம்பொன் மேனி
மணிவண்ணம் தம்வண்ணம்
ஆவார் போலும்,
அடியார்
புகலிடம் அதுஆனார் போலும்
ஆக்கூரில் தான்தோன்றி
அப்ப னாரே.
பொழிப்புரை :புதுமை நிறைந்த
தளிர்கள் கலந்த கொன்றைப் பூ மாலை ,
விடு
பூக்கள் மகரந்தம் நிரம்பிய முடிமாலை இவற்றைச் சூடியவராய்த் திருமாலும் பிரமனும்
தேடுமாறு ஒளிப்பிழம்பாய் நின்ற நீலகண்ட இறைவராய்த் தீவண்ணமும் பொன் வண்ணமும் தம்
கூற்றிலும் நீல மணிவண்ணம் தேவியின் கூற்றிலும் அமைந்த திருமேனியராய்
அடியவர்களுக்கு அடைக்கலம் தரும் இடமாக உள்ள தான்தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி
வழங்குகிறார் .
பாடல்
எண் : 10
திரையானும், செந்தா மரைமே லானும்,
தேர்ந்தவர்கள்
தாம்தேடிக் காணார், நாணும்
புரையான்
எனப்படுவார் தாமே போலும்,
போர்ஏறு தாம்ஏறிச்
செல்வார் போலும்,
கரையா
வரைவில்லே நாகம் நாணாக்
காலத் தீஅன்ன கனலார்
போலும்,
வரைஆர்
மதில்எய்த வண்ணர் போலும்,
ஆக்கூரில் தான்தோன்றி
அப்ப னாரே.
பொழிப்புரை :பாற்கடற்பரமனும் , செந்தாமரைமேல் உறையும் பிரமனும்
ஆராய்ந்து தேடியும் காண முடியாது நாணுமாறு செய்த மேம்பட்டவராய் , போரிடும் காளையை இவர்ந்து செல்பவராய், நெகிழ்ச்சியில்லாத மலையையே வில்லாகவும்
பாம்பையே நாணாகவும் கொண்டு ஊழித்தீயை ஒத்த கோலத்தை உடையவராய்ப் பகைவர்களின்
மும்மதில்களையும் அழித்த செயலுடைய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி
வழங்குகிறார் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment