அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அங்கை நீட்டி
(திருசிராப்பள்ளி)
சிராப்பள்ளி முருகா!
மாதர் மயக்கை ஒழித்து,
உன் பாத தாமரையைப் போற்ற அருள்
தந்த
தாத்தன தத்தத் தானன
தந்த தாத்தன தத்தத் தானன
தந்த தாத்தன தத்தத் தானன ...... தனதான
அங்கை
நீட்டிய ழைத்துப் பாரிய
கொங்கை காட்டிம றைத்துச் சீரிய
அன்பு போற்பொய்ந டித்துக் காசள
...... வுறவாடி
அம்பு தோற்றக ணிட்டுத் தோதக
இன்ப சாஸ்த்ரமு ரைத்துக் கோகிலம்
அன்றில் போற்குர லிட்டுக் கூரிய
...... நகரேகை
பங்க
மாக்கிய லைத்துத் தாடனை
கொண்டு வேட்கையெ ழுப்பிக் காமுகர்
பண்பில் வாய்க்கம யக்கிக் கூடுத ......
லியல்பாகப்
பண்டி
ராப்பகல் சுற்றுச் சூளைகள்
தங்கள் மேற்ப்ரமை விட்டுப் பார்வதி
பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ
...... அருள்வாயே
எங்கு
மாய்க்குறை வற்றுச் சேதன
அங்க மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும்
இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின்
...... முடிவேறாய்
இந்த்ர கோட்டிம யக்கத் தான்மிக
மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத
மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல
...... வயலூரா
செங்கை
வேற்கொடு துட்டச் சூரனை
வென்று தோற்பறை கொட்டக் கூளிகள்
தின்று கூத்துந டிக்கத் தோகையில்
...... வரும்வீரா
செம்பொ
னாற்றிகழ் சித்ரக் கோபுர
மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு
தென்சி ராப்பள்ளி வெற்பிற் றேவர்கள்
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அம்கை
நீட்டி அழைத்து, பாரிய
கொங்கை காட்டி மறைத்து, சீரிய
அன்பு போல் பொய் நடித்து, காசுஅளவு ...... உறவாடி
அம்பு தோற்ற கண் இட்டு, தோதக
இன்ப சாஸ்த்ரம் உரைத்து, கோகிலம்
அன்றில் போல் குரல் இட்டு, கூரிய ...... நகரேகை
பங்கம்
ஆக்கி அலைத்து, தாடனை
கொண்டு வேட்கை எழுப்பி, காமுகர்
பண்பில் வாய்க்க மயக்கிக் கூடுதல்
...... இயல்பாகப்
பண்டு
இராப் பகல் சுற்றுச் சூளைகள்,
தங்கள் மேல் ப்ரமை விட்டு, பார்வதி
பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ
...... அருள்வாயே.
எங்குமாய்க்
குறைவு அற்று, சேதன
அங்கமாய்ப் பரிசுத்தத்தோர் பெறும்
இன்பமாய்ப் புகழ் முப்பத்தாறினின்
...... முடிவேறாய்,
இந்த்ர கோட்டி மயக்கத்தால், மிக
மந்த்ர மூர்த்தம் எடுத்து, தாமதம்
இன்றி வாழ்த்திய சொர்க்கக் காவல!
......வயலூரா!
செங்கை
வேல்கொடு துட்டச் சூரனை
வென்று, தோல்பறை கொட்ட, கூளிகள்
தின்று கூத்து நடிக்கத் தோகையில்
...... வரும்வீரா!
செம் பொனால் திகழ் சித்ரக் கோபுரம்
மஞ்சு இராப்பகல் மெத்தச் சூழ்தரு
தென் சிராப்பள்ளி வெற்பில் தேவர்கள்
...... பெருமாளே.
பதவுரை
எங்குமாய் --- எங்கும் நிறைந்தவராய்,
குறைவு அற்று --- குறைவிலாதவராய்,
சேதன அங்கமாய் --- அறிவே அங்கமானவராய்,
பரி சுத்தத்தோர் பெறும் இன்பமாய் --- தூய அன்பர்கள்
பெற்று மகிழும் இன்பப் பொருளாய்,
புகழ் முப்பதாறினின் முடிவு வேறாய் --- புகழ்
பெற்ற முப்பத்தாறு தத்துவங்களின் முடிவுக்கும் வேறானவராய்,
இந்த்ர கோட்டி மயக்கத்தால் --- இந்திராதி கூட்டத்துத்
தேவர்கள் கலந்து ஒன்று கூடி,
மிக மந்த்ர மூர்த்தம் எடுத்து --- சிறந்த மந்திர
ரூப பூசனை செய்து,
தாமதம் இன்றி வாழ்த்திய --- தாமதமில்லாமல் வாழ்த்திய,
சொர்க்க காவல --- தேவலோக காவலரே!
வயலூரா --- வயலூரில் வாழ்பவரே!
செம்கை வேல் கொடு --- சிவந்த கரத்தில் உள்ள வேலாயுதத்தைக்
கொண்டு,
துட்ட சூரனை வென்று --- கொடியவனான சூரபன்மாவை
வென்று,
தோல் பறை கொட்ட --- தோலினால் செய்த பறைகள் ஒலிக்க,
கூளிகள் தின்று கூத்து நடிக்க --- பேய்கள் நிணங்களை
உண்டு கூத்தாடி மகிழ,
தோகையில் வரும் வீரா --- மயிலின் மீது வந்த வீரமூர்த்தியே!
செம்பொன்னால் திகழ் --- செம்பொன்னால் விளங்கும்,
சித்ர கோபுர --- அழகிய கோபுரத்தின் மீது,
மஞ்சு இராபகல் மெத்த சூழ் தரு --- மேகங்கள் இரவும்
பகலும் மிகுதியாகச் சூழ்ந்துள்ள,
தென் சிராப்பள்ளி வெற்பில் --- அழகிய திரிசிராப்பள்ளி
மலையில் எழுந்தருளி இருக்கும்,
தேவர்கள் --- தேவர்கள் போற்றும்,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
அம் கை நீட்டி அழைத்து --- அழகிய கையை நீட்டி
அழைத்தும்,
பாரிய கொங்கை காட்டி மறைத்து --- பருத்த தனங்களைக்
காட்டி மறைத்தும்,
சீரிய அம்பு போல் பொய் நடித்து --- சிறந்த அன்புடையவர்களைப்
போல் பொய்யாக நடித்தும்,
காசு அளவு உறவு ஆடி --- கொடுக்கின்ற காசுக்கு
ஏற்ப உறவு செய்து,
அம்பு தோற்ற கண் இட்டு --- அம்பும் தோற்கும்படியான
அத்துணை கூர்மையுடைய கண்ணால் மயக்கியும்,
தோதக இன்ப சாஸ்த்ரம் உரைத்து --- வஞ்சகம் நிறந்த
காம இன்ப நூல்களை எடுத்துப் பேசியும்,
குயில் அன்றில் போல குரல் இட்டு --- குயில் அன்றில்
என்ற பறவைகளைப் போல் குரலைக் காட்டியும்,
கூரிய நக ரேகை --- கூர்மையான நகத்தால் குறியிட்டு,
பங்கம் ஆக்கி அலைந்து --- விகாரப்படுத்தி உழலச்
செய்து,
தாடனை கொண்டு --- காமநூல் முறையில் தட்டுதல் செய்து,
வேட்கை எழுப்பி --- காம ஆசையை எழுப்பி,
காமுகர் பண்பில் வாய்க்க மயக்கி --- காமங் கொண்டவர்
தமது வசப்படும்படி ஆக்கி மயக்கி,
கூடுதல் இயல்பு ஆக --- தம்முடன் கூடுதலையே ஒழுக்கமாகும்படிச்
செய்து,
பண்டு இரா பகல் கற்று --- முதலிலிருந்தே இரவும்
பகலும் சுற்றியலைக்கும்,
சூளைகள் தங்கள் மேல் ப்ரமை விட்டு --- வேசைகளின்
மேல் உள்ள மயக்கத்தை ஒழித்து,
பார்வதி பங்கர் போற்றிய --- பார்வதி பாகராம் சிவபெருமான்
போற்றித் துதித்த,
பத்ம தாள் தொழ --- உமது தாமரைத் தாளைத் தொழும்
பேற்றினை,
அருள்வாயே --- தந்தருளுவீராக.
பொழிப்புரை
எங்கும் நிறைந்தவராய், குறைவு இல்லாதவராய், அறிவே அங்கமானவராய், தூய அன்பர்கள் பெற்று மகிழும் இன்பப்
பொருளாய், புகழ் பெற்ற
முப்பத்தாறு தத்துவங்களின் முடிவுக்கும் அப்பாறப்ட்டவராய், இந்திராதி தேவர்கள் கலந்து ஒன்றுகூடிச்
சிறந்த மந்த்ர ரூப பூசனை செய்து,
தாமதிக்காமல்
வாழ்த்திய தேவலோகக் காவலரே!
வயலூர் அரசே!
திருக்கையில் உள்ள வேலாயுதத்தைக் கொண்டு, கொடிய சூரபன்மனை வென்று, தோலினால் செய்த பறையை ஒலித்து, பேய்கள் அசுரரின் தசைகளைத் தின்று
கூத்தாட, மயிலின் மீது வரும்
வீரரே!
செம்பொன்னால் விளங்குகின்ற அழகிய திரிசிராப்பள்ளி
மலையில் எழுந்தருளியுள்ள,தேவர்கள் போற்றும்
பெருமிதம் உடையவரே!
அழகிய கையை நீட்டி அழைத்தும், பருத்த தனங்களைக் காட்டி மறைத்தும், சிறந்த அன்பு உள்ளது போல் பொய்யாக
நடித்தும், தருகின்ற பணத்துக்கு
ஏற்ப உறவு செய்தும், கணை தோற்கும் கூரிய
கண்களால் மயக்கியும், வஞ்சகமுடைய இன்ப
சாஸ்திரங்களைப் பேசியும், குயில் அன்றில் போல
குரல்களைக் காட்டியும், கூர்மையான
நகங்களினால் அடையாளம் செய்தும்,
விகாரப்படுத்தி
அலைத்தும், காம நூலின்படி
தட்டுதல் செய்தும், ஆசையை எழுப்பியும், காமம் கொண்டவரை தமது வசமாகும்படி
மயக்கித் தம்முடன் கூடுதலையே இயல்பாகும்படி, முதலில் இருந்தே இரவும் பகலும் சுற்றி அலைக்கும்
வேசைகளின் மேல் உள்ள மயக்கத்தை ஒழித்துப் பார்வதியின் பாகராகிய சிவபிரான் போற்றித்
துதி செய்த உமது பாத தாமரையை தொழும்படியான பாக்கியத்தை அடியேனுக்குத்
தந்தருளுவீராக.
விரிவுரை
அங்கை
நீட்டி அழைத்து ---
பொது
மாதர்கள் நடுத் தெருவில் நின்று,
அவ்வழி
போகின்ற, தனம் படைத்த
இளைஞர்களைக் கண்காட்டி கை நீட்டி "என் வீட்டுக்கு வாருங்கள்" என்று
அழைப்பார்கள்.
காசு
அளவு உறவாடி ---
ஆடவர்கள்
தரும் பொருளின் அளவுக்கு ஏற்ப அவருடன் உறவு செய்வார்கள்.
இன்ப
சாஸ்த்ரம் ---
காம
நூலில் உள்ள இரகசியங்களை அம்மாதர்கள் வாய்விட்டுப் பேசுவார்கள்.
புல்லுதல்
சுவைத்திடல் புணர் நகக்குறி
பல்லுறல்
மத்தனம் பயிலும் தாடனம்
ஒல்லொலி
கரணமோடு உவகையாகிய
எல்லையில்
புணர்நிலைக்கு இயைந்த என்பவே” --- கந்தபுராணம்.
பத்மத்
தாள் தொழ அருள்வாயே ---
மாதர்கள்
மயக்கத்தை தொலைத்து முருகவேளின் திருவடிகளைத் தொழுதல் வேண்டும்.
எங்குமாய்
---
இறைவன்
யாண்டும் நீக்கமற நிறைந்தவன்.
“நிறைவுடன் யாண்டுமாகி
நின்றிடும் நிமலமூர்த்தி” ---கந்தபுராணம்.
ஒரு
மன்னவனைச் சூழ்ந்து பல புலவர்கள் இருந்தார்கள். ஒரு புதிய புலவன் ஒரு மாங்கனி தந்து
அரசனை வணங்கினான். கனியை ஏந்திய காவலன் “புலவீர்காள்! கடவுள் இருக்கும் இடத்தைக்
காட்டுபவர்க்கு இக்கனியைத் தருவேன்” என்றான்.
புலவர்கள்
கயிலையில் இருக்கின்றனர்; திருப்பாற்கடலில்
இருக்கின்றனர்; வேத முடிவில்
இருக்கின்றார் என்றெல்லாம் கூறினார்கள்.
ஒரு
சிறு பெண் எழுந்து, :மன்னவரே! இறைவன்
இருக்குமிடத்தைக் காட்டுபவர்க்கு ஒரு கனி தருவதாகக் கூறினீரே! நீர் இறைவன் இல்லாத
இடத்தைக் காட்டும்; உமக்குப் பன்னிரண்டு
பழங்கள் தருகின்றேன்” என்றாள். எல்லோரும் நாணினார்கள். சிறுமியின் செவ்விய மதி
நலத்தைக் கண்டு துதி செய்தார்கள்.
குறைவு
அற்று ---
இறைவன்
ஒருவனே குறைவிலா நிறைவு உள்ளவன் எத்துணைப் பெரும் சிறப்புடையவர்கள் பாலும் ஏதாவது
ஒரு குறையிருக்கும்.
சேதன
அங்கமாய் ---
சேதனம்-ஞானம்.
முருகவேள் அறிவையே வடிவாக உடையவர்.
“ஞானந்தான் உருவாகிய நாயகன் இயல்பை
நானும் நீயுமாய் இசைத்தும் என்றால் அஃது
எளிதோ? --- கந்தபுராணம்.
“அறிவும்அறி யாமையும் கடந்த
அறிவுதிரு மேனிஎன்று உணர்ந்து,உன்
அருணசர ணாரவிந்தம் என்று அடைவேனோ” --- (குகையில் நவ) திருப்புகழ்.
பரிசுத்தத்தோர்
பெறும் இன்பமாய ---
தூய
அன்பர்கள் பெறுகின்ற பேரின்பம் முருகன்.
“துரிய நிலையே கண்ட முத்தர் இதயா கமலம்
அதனில் விளையா நின்ற அற்புதசு போதசுக
சுய படிக மாஇன்ப பத்ம பதமே” --- (சுருதிமுடி) திருப்புகழ்.
முப்பத்தாறினின்
முடிவேறாய் ---
முப்பத்தாறு
தத்துவங்களுங் கடந்தவன் இறைவன்.
“ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே” --- (மாலாசை) திருப்புகழ்.
ஆறு
ஆறையும் நீத்து, அதன்மேல் நிலையைப்
பேறா
அடியேன் பெறுமாறு உளதோ?
சீறா
வரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா
உலகம் குளிர்வித்தவனே! --- கந்தர்
அநுபூதி.
இந்த்ரகோட்டி
மயக்கத்தான் மிக மந்த்ர ரூபமெடுத்துத் தாமதமின்றி வாழ்த்திய சொக்கக் காவல ---
கோட்டி-கூட்டம்.
வடமொழியில் கோஷ்டி என்பர். முருகனை,
இந்திரன்
முதலிய தேவ கூட்டங்கள் அன்பின் மிகுதியால் மயக்கத்துடன், மந்திர ரூபமான வடிவை அமைத்து, சிறிதும் கால விளம்பம் இன்றிப் போற்றிப்
புகழ்கின்றார்கள். முருகன் சொர்க்கத்துக்குப் பாதுகாவலர்.
செம்பொனால்
திகழ் சித்திர கோபுர ---
செம்பொன்
மயமான அழகிய கோபுரத்துடன் கூடிய திருத்தலம் திருச்சிராப்பள்ளி.
கருத்துரை
திரிசிராப்பள்ளி மேவிய திருமுருகா! உமது
பாத தாமரையைத் தந்தருள்வீர்.
No comments:
Post a Comment