அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அந்தோ மனமே
--- திருசிராப்பள்ளி
மனமே! பிறவா நெறி பெற்று
உய்ய
முருகன் திருவடியை மறவாதே
தந்தாதன
தானன தாத்தன
தந்தாதன தானன தாத்தன
தந்தாதன தானன தாத்தன ...... தனதான
அந்தோமன
மேநம தாக்கையை
நம்பாதெயி தாகித சூத்திர
மம்போருக னாடிய பூட்டிது ......
இனிமேல்நாம்
அஞ்சாதமை
யாகிரி யாக்கையை
பஞ்சாடிய வேலவ னார்க்கிய
லங்காகுவம் வாஇனி தாக்கையை ......
ஒழியாமல்
வந்தோமிது
வேகதி யாட்சியு
மிந்தாமயில் வாகனர் சீட்டிது
வந்தாளுவம் நாமென வீக்கிய ......
சிவநீறும்
வந்தேவெகு
வாநமை யாட்கொளு
வந்தார்மத மேதினி மேற்கொள
மைந்தாகும ராவெனு மார்ப்புய ......
மறவாதே
திந்தோதிமி
தீதத மாத்துடி
தந்தாதன னாதன தாத்தன
செம்பூரிகை பேரிகை யார்த்தெழ ......
மறையோதச்
செங்காடென
வேவரு மூர்க்கரை
சங்காரசி காமணி வேற்கொடு
செண்டாடிம காமயில் மேற்கொளு ......
முருகோனே
இந்தோடிதழ்
நாகம காக்கடல்
கங்காளமி னார்சடை சூட்டிய
என்தாதைச தாசிவ கோத்திர ......
னருள்பாலா
எண்கூடரு
ளால்நெளவி நோக்கியை
நன்பூமண மேவிசி ராப்பளி
யென்பார்மன மேதினி நோக்கிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
அந்தோ, மனமே! நமது ஆக்கையை
நம்பாதெ, இதஅகித சூத்திரம்,
அம்போருகன் ஆடிய பூட்டு இது, ...... இனிமேல் நாம்
அஞ்சாது
அமையா, கிரி யாக்கையை
பஞ்சு ஆடிய வேலவனார்க்கு இயல்
அங்கு ஆகுவம் வா, இனிது ஆக்கையை .....ஒழியாமல்,
வந்தோம்
இதுவே கதி ஆட்சியும்,
இந்தா மயில் வாகனர் சீட்டு இது,
வந்து ஆளுவம் நாம் என வீக்கிய ......
சிவநீறும்,
வந்தே
வெகுவா நமை ஆட்கொள்
உவந்தார் மதம் மேதினி மேற்கொள,
மைந்தா! குமரா! எனும் ஆர்ப்பு உய
...... மறவாதே,
திந்தோதிமி
தீதத மாத்துடி
தந்தாதன னாதன தாத்தன
செம்பூரிகை பேரிகை ஆர்த்து எழ, ...... மறைஓத,
செங்காடு
எனவே வரு மூர்க்கரை
சங்கார சிகாமணி வேல்கொடு
செண்டாடி மகா மயில் மேற்கொளும்
.....முருகோனே!
இந்து
ஓடு இதழ் நாக மகாக் கடல்
கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய
என் தாதை, சதாசிவ கோத்திரன் ...... அருள்பாலா!
எண்கூடு
அருளால் நெளவி நோக்கியை
நன் பூமண மேவி, சிராப்பளி
என்பார் மனமே தினி நோக்கிய ...... பெருமாளே.
பதவுரை
அந்தோ மனமே --- ஐயோ! மனமே!,
நமது ஆக்கையை நம்பாதே --- நாம் வாழ்கின்ற இவ்வுடம்பு
நெடுநாளைக்கு நிற்குமென்று நம்பி மோசம் போகாதே,
இத அகித சூத்திரம் --- இன்பமும் துன்பமும் நிறைந்த
ஒரு எந்திரமாகும்,
இது அம்போருகன் ஆடிய பூட்டி --- இவ்வுடம்பு பிரமதேவனால்
செய்யப்பட்டது,
இனிமேல் நாம் --- சென்றது சென்றாலும் இனிமேலாவது
நாம்,
அஞ்சாது அமையா --- உடல் விரைவில் அழியுமே என்று
பயப்படாமல் இருக்க முடியாது,
கிரி யாக்கையை பஞ்சு ஆடிய --- கிரௌஞ்ச மலையின்
வடிவத்தைத் தூள்படுத்திய,
வேலவனார்க்கு இயல் அங்கு ஆகுவம் வா --- வேலாயுதக்
கடவுளுக்கு நீங்காத அன்புடையோமாகுவம் அங்கு நீ என்னுடன் வருவாய்,
இனிது --- இதுதான் இன்ப நெறியாகும்,
ஆக்கையை ஒழியாமல் வந்தோம் --- உடம்பை ஒழியாமல்
எடுத்துக்கொண்டே வந்தோம்,
இதுவே கதி ஆட்சியும் இந்தா --- முருக வேளுக்கு
ஆட்பட்டு அன்பு செய்யும் இம் மெய்ந்நெறியே மோட்சம் ஆன்றோர் வழக்குமாம். ஆதலால் இதனைப்
பெற்றுக்கொள்,
இது மயில்வாகனர் நாம் வந்து ஆளுவம் என வீக்கிய
சீட்டு இந்தா --- இது மயிலேறும் பெருமான் “நாம் வந்தருளி உன்னை யாட்கொள்வோம்” என்று வேகமுறச் செலுத்தித்தந்த சிட்டு; இதனைப் பெற்றுக்கொள்,
சிவநீறும் இந்தா --- மங்கலத்தை நல்கும் திருநீற்றையும்
பெற்றுக் கொள்,
வந்தே வெகுவாக நமை ஆட்கொள்ள --- முருகன் அநேகமாக
வலிதில் வந்தே நம்மை ஆட்கொள்ளுவதற்கு,
உவந்தவர் --- மகிழ்ந்திருக்கின்றார்,
மதம் மேதினி மேற்கொள --- இந்த மெய்க் கொள்கையை
உலகம் மேற்கொள்ளும் பொருட்டும்,
உய --- நீ உய்யும் பொருட்டும்,
மைந்தா --- வலிமையுள்ளவரே!
குமரா --- குமாரக்கடவுளே!
மா துடி --- பெரிய உடுக்கையும்,
செம்பூரிகை --- செம்மை பொருந்திய பூரி என்னும்
வாத்தியமும்,
பேரிகை --- பேரிகையும்,
திந்தோதிமி தீதத தந்தாதனனா தன தாத்தன --- திந்தோதிமி
தீதத தந்தாதனனா தன தாத்தன என்ற தாளபேதங்களுடன்,
ஆர்த்து எழ --- ஆரவாரித்து எழவும்,
மறை ஓத --- வேதங்களை ஓதவும்,
செம் காடு எனவே வரும், மூர்க்கரை --- சிலந்த காட்டைப்போல் எதிர்த்து
வந்த இராக்கதர்களை,
சங்கார சிகாமணி வேல்கொடு --- சங்காரஞ் செய்வதில்
முதன்மை பெற்றதாகிய வேலாயுதத்தைக் கொண்டு,
செண்டு ஆடி --- அவர்களது தலைகளைச் செண்டுபோல்
ஆடி,
மகா மயில் மேல்கொளு --- பெரிய மயில் வாகனத்தின்மீது
எழுந்தருளிய,
முருகோனே --- முருகப் பெருமானே!
இந்து --- சந்திரனையும்,
ஓடு --- ஆமையின் ஓட்டையும்,
இதழ் --- பூவிதழ்களையும்,
நாகம் --- பாம்புகளையும்,
மகா கடல் --- பெரிய கடல் போலப் பெருகி வந்த கங்கையையும்,
கங்காளம் --- பிரம விட்டுணுக்களுடைய எலும்புக்
கூட்டையும்,
மின் ஆர் சடை சூட்டிய --- ஒளி நிறைந்த சடை முடியிலும்
(திருமேனியிலும்) அணிந்துகொண்டுள்ள,
என்தாதை --- அடியேனுடைய பிதாவும்,
சதாசிவ கோத்திரன் --- சதாசிவ கோத்திரத்திற்குத்
தலைவருமாகிய சிவபெருமான்,
அருள் பாலா --- பெற்று அருளிய புதல்வரே!
எண் கூடு அருளால் --- அளவிடற்கரிய திருவருளால்,
நௌவி நோக்கியை --- மான் போன்ற பார்வையையுடைய வள்ளி
நாயகியாரை,
நன் பூ மணம் மேவி --- நலம்பொருந்திய அழகுடன் திருமணம்
செய்துகொண்டு அப்பிராட்டியாருடன்,
சிராப்பளி என்பார் --- திரிசிராப்பள்ளி என்னுந்
திருத்தலத்தின் பேரை மாத்திரம் கூறும் பேறு பெற்றவர்களுடைய,
மன மேதினி நோக்கிய --- உள்ளமாகிய பூமியில் எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
என்னும் ஆர்ப்பு --- என்று பெரிய ஒலியுடன் துதிக்கும்படியான
தன்மையை,
மறவாதே --- மனமே! நீ ஒருபொழுதும் மறந்துவிடாதே.
பொழிப்புரை
ஐயோ!
மனமே!
நிலையில்லாத இவ்வுடலை நிலைத்திருக்குமென்று
நம்பி மோசம் போகாதே,
இன்பமும் துன்பமும் நிறைந்த எந்திரம்
இவ்வுடம்பு,
இது பிரமதேவனால் செய்யப் பெற்றது,
அறிவு தெளிந்து பிறகு நாம் இவ்வுடம்பு
அழியாது என்று எண்ணி அமைதியுடன் இருப்பது தகாது.
கிரௌஞ்ச மலையைப் பஞ்சு பஞ்சாகப்
பொடித்தெறிந்த வேலாயுதக் கடவுளுக்கு இடைவிடாத அன்பு செய்து அவர் திருவடியில்
அடிமைப் படுவோம்.
ஆதலால் அங்கு நீ என்னுடன் வருவாயாக.
அப்படி அன்பு செய்யாமையால் ஒழியாமல் மாறிமாறி
பலப்பல பிறப்புக்களை எடுத்துக் கொண்டே வந்தோம்.
இனியும் பிறவாதிருக்கும் பொருட்டு முருகக்
கடவுளிடத்தில் அன்பு செய்யும் இம் மெய் நெறியே மோக்ஷமும் ஆன்றோர் நெறியுமாகும்.
ஆதலால் இவ்வன்பு நெறியைப் பெற்றுக் கொள்வாயாக, “நாம் வந்து ஆட் கொள்வோம்” என்று அருட்
செலுத்தி மயில் வாகனர் எழுதிக் கொடுத்த கைச்சீட்டாகிய இதனை நீ பெற்றுக்கொள்.
மங்கலந் தரும் தீருநீற்றையும் பெற்றுக்கொள்.
அநேகமாக அப் பரமபதி வலிதில் வந்து நம்மை
ஆட்கொள்ளும் பொருட்டு உவந்திருக்கின்றனர்.
இவ்வன்பு நெறியை உலகம் மேற்கொள்ளும்
பொருட்டும் நீ உய்யும் பொருட்டும்,
“வலிமையுள்ளவரே! குமாரக் கடவுளே!
பெரிய உடுக்கையும், பூரிகையும், பேரிகையும், திந்தோ திமி தீதத தந்தாதன னாதன தாத் தன
என்ற தாள பேதங்களுடன் ஒலித்து எழவும், வேதங்களை
ஓதவும் சிவந்த காட்டைப்போல் பெருகிவந்த அவுணர்களைச் சர்வ சங்காரஞ் செய்வதில்
சிகாமணியாகிய வேலாயுதத்தைக் கொண்டு அவ்வவுணர்களது அலைகளைச் செண்டுபோல் ஆடி அழித்து
பெரிய மயில் வாகனத்தின்மீது எழுந்தருளிய முருகக் கடவுளே!
சந்திரனையும், ஆமை ஓட்டையும், சர்ப்பத்தையும்,
பெருங் கடல்போலப் பெருகி வந்த கங்கா நதியையும், பிரம விட்டுணுக்களின் முழு
எலும்புக் கூட்டையும் ஒளிபெற்ற சடையிலும் திருமேனியிலும் தரித்துக்
கொண்டிருப்பவரும், அடியேனுடைய
தந்தையாரும், சதாசிவ
கோத்திரத்திற்குத் தலைவருமாகிய சிவமூர்த்தியின் திருக்குமாரரே!
அளவிடற்கரிய திருவருளால் மான்போன்ற
திருப்பார்வையையுடைய வள்ளி நாயகியாரை நலமிகுந்த அழகுடன் திருமணம் செய்துகொண்டு
திரிசிராப்பள்ளி என்ற திருத்தலத்தின் பேரை மாத்திரம் சொல்லும் பேறு
பெற்றவர்களாயினும் அவர்கள் உள்ளமாகிய பூமியில் எழுந்தருளியுள்ள பெருமானே!
என்னும் பெரிய ஆர்ப்புடன் துதித்தலை
மனமே! நீ ஒருபோதும் மறந்துவிடாதே.
விரிவுரை
அந்தோ
மனமே ---
காடுங்கரையும்
கால்விட்டோடும் மனக்குரங்கை தான் செய்யும் நல்லுபதேசத்தைக் கேட்கச் செய்ய
ஒருமுகப்படுத்தும் பொருட்டு, “அந்தோ” என்றனர். பலர்
பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் ஒருவன் ‘ஐயோ’ என்று அலறினால்
எல்லோரும் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு ஐயோ என்று கதறினவனை நோக்குவர் அல்லவா? மனதை ஒருமுகப்
படுத்துதற்கு அருணகிரியார் இந்த உபாயத்தைக் கையாளுகின்றார்.
நமது
ஆக்கையை நம்பாதே ---
ஆக்கப்பட்டதனால்
உடலுக்கு ஆக்கை என்ற பேருண்டாயிற்று. யாக்கை நிலயற்றது.
நெருநல்
உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை
உடைத்து இவ் வுலகு. --- திருக்குறள்.
“இன்றைக்கு இருந்தாரை
நாளைக்கு இருப்பர் என்று
எண்ணவோ திடம் இல்லையே” --- தாயுமானார்.
“நீர்க்குமிழிக்கு நிகர் என்பர்
யாக்கை” --- கந்தர்அலங்காரம்.
இவை
போன்ற ஆன்றோர் அமுத வாக்குகளை உற்று நோக்குக. மணப்பறையே பிணப்பறையாவதும், மணமகனே பிணமகனாவதும் கண்கூடு.
இயல்
அங்கு ஆகுவம் வா ---
சுவாமிகள்
பல வழியிலும் சென்று சென்று அலைந்தலைந்து கறங்குபோல் பயனின்றித் திரியும் மனதை
முருகனிடம்
அழைக்கின்றனர்.
“நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு”
என்று அப்பமூர்த்திகள் நெஞ்சை யழைக்குந் திறனையும் இதனோடு ஒப்பிட்டுப் பார்த்து
மகிழ்க.
இந்தா
மயில்வாகனர் சீட்டு இது ---
புகைவண்டியில்
ஏறுபவனும், நாடகத்திற்குச்
செல்பவனும் நுழைவுச்சீட்டு எடுத்தாலன்றி அநுமதிக்கப்பட மாட்டார்கள். ஆதலினால்
கந்தவுலகிற்குச் செல்லும் “மயில்வாகனர் சீட்டு” ஒன்று உளது. அதனைப் “பெற்றுக்கொள்”
என்கின்ற உலகியல் உன்னுந்தோறும் உவமை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.
மைந்தா
குமரா எனும் ஆர்ப்பு உய மறவாதே ---
ஒருவன்
உய்ய வேண்டுமானால் முருகா! மூவர் முதல்வா! குமாரா!
குன்றெறி வேலா! மயிலா! சிவமைந்தா! என்று எக்காலமும் ஓங்கி உரைத்துக்கொண்டே
இருக்கவேண்டும்.
“விரை ஆர்ந்த
மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்து உருகேன்”. --- மணிவாசகம்.
சிராப்பள்ளி
என்பார் மனமேதினி நோக்கிய பெருமாளே ---
“திருச்சிராப்பள்ளி”, “திருச்சிராப்பள்ளி” என்று எப்போதும்
சொல்பவர்கள் உள்ளத்தைக் கோயிலாகக் கொண்ட, வடிவேற்
பெருமான் வள்ளியம்மையாருடன் எழுந்தருளுவர்.
அரிச்சி
இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு
சுரிச்சி
இராது நெஞ்சே, ஒன்று சொல்லக்கேள்
திரிச்சிராப்பள்ளி
என்றலும், தீவினை
நரிச்சு
இராது நடக்கும் நடக்குமே. --- அப்பர்.
கருத்துரை
ஓ மனமே! நமது உடல் நிலையற்றது. அநேக
பிறப்பெடுத்து நாம் இனி பிறவாநெறி பெறவேண்டும். முருகன் கைச்சீட்டும் திருநீறும்
இந்தா! “அசுரகுல காலா! சிவமைந்தா! சிராமலைச் செல்வா! குமரா” என்னும் ஆர்ப்புடன்
கூறி உய்வாய்.
No comments:
Post a Comment