அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அரிவையர் நெஞ்சு
(திருசிராப்பள்ளி)
மாதர் வசமாகி அடியேன்
அலையாமல் ஆண்டு அருள்
தனதன
தந்தன தாத்தன
தனதன தந்தன தாத்தன
தனதன தந்தன தாத்தன ...... தனதான
அரிவையர்
நெஞ்சுரு காப்புணர்
தருவிர கங்களி னாற்பெரி
தவசம்வி ளைந்துவி டாய்த்தடர் ......
முலைமேல்வீழ்ந்
தகிலொடு
சந்தன சேற்றினில்
முழுகியெ ழுந்தெதிர் கூப்புகை
யடியின கம்பிறை போற்பட ......
விளையாடிப்
பரிமளம்
விஞ்சிய பூக்குழல்
சரியம ருங்குடை போய்ச்சில
பறவைக ளின்குர லாய்க்கயல் ......
விழிசோரப்
பனிமுக
முங்குறு வேர்ப்பெழ
இதழமு துண்டிர வாய்ப்பகல்
பகடியி டும்படி தூர்த்தனை ......
விடலாமோ
சரியையு
டன்க்ரியை போற்றிய
பரமப தம்பெறு வார்க்கருள்
தருகணன் ரங்கபு ரோச்சிதன் ......
மருகோனே
சயிலமெ
றிந்தகை வேற்கொடு
மயிலினில் வந்தெனை யாட்கொளல்
சகமறி யும்படி காட்டிய ...... குருநாதா
திரிபுவ
னந்தொழு பார்த்திபன்
மருவிய மண்டப கோட்டிகள்
தெருவில்வி ளங்குசி ராப்பளி ......
மலைமீதே
தெரியஇ
ருந்தப ராக்ரம
உருவளர் குன்றுடை யார்க்கொரு
திலதமெ னும்படி தோற்றிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
அரிவையர்
நெஞ்சு உருகாப் புணர்
தரு விரகங்களினால், பெரிது
அவசம் விளைந்து, விடாய்த்து, அடர் ...... முலைமேல்
வீழ்ந்து
அகிலொடு
சந்தன சேற்றினில்
முழுகி எழுந்து, எதிர் கூப்புகை
அடியின் அகம் பிறை போல் பட ......
விளையாடி,
பரிமளம்
விஞ்சிய பூக்குழல்
சரிய, மருங்கு உடை போய், சில
பறவைகளின் குரலாய்க் கயல் ......
விழி சோர,
பனிமுகமும்
குறு வேர்ப்பு எழ,
இதழ் அமுது உண்டு, இரவாய்ப்பகல்
பகடி இடும் படி தூர்த்தனை ......
விடல் ஆமோ?
சரியை
உடன் க்ரியை போற்றிய
பரம பதம் பெறுவார்க்கு அருள்
தருகணன், ரங்க புர உச்சிதன் ...... மருகோனே!
சயிலம்
எறிந்த கை வேல்கொடு
மயிலினில் வந்து எனை ஆட்கொளல்
சகம் அறியும்படி காட்டிய ......
குருநாதா!
திரி
புவனம் தொழு பார்த்திபன்
மருவிய மண்டப கோட்டிகள்
தெருவில் விளங்கு சிராப்பளி ......
மலைமீதே,
தெரிய
இருந்த பராக்ரம
உருவளர் குன்று உடையார்க்கு ஒரு
திலதம் எனும்படி தோற்றிய ...... பெருமாளே.
பதவுரை
சரியை உடன் க்ரியை போற்றிய --- சரியை
மார்க்கத்தையும், கிரியை
மார்க்கத்தையும் மேற்கொண்டு,
பரம பதம் பெறுவார்க்கு அருள் தரு கணன் --- மேலான
பதத்தைப் பெற விரும்புவார்க்கு அருளைத் தருகின்ற கண்ணனும்,
ரங்க புர உசிதன் மருகோனே --- திருவரங்கத்தில்
பள்ளி கொண்டு உள்ள மேலானவரும் ஆகிய திருமாலின் திருமருகரே!
சயிலம் எறிந்த கை வேல் கொடு --- கிரவுஞ்ச
மலையைப் பொடிபடச் செலுத்திய கைவேலை ஏந்திக் கொண்டு,
மயிலினில் வந்து --- மயிலின் மீது எழுந்தருளி
வந்து,
எனை ஆட்கொளல் --- அடியேனை ஆட்கொண்ட திருவருளை
சகம் அறியும்படி காட்டிய குருநாதா --- உலகம் உணரும்படி காட்டியருளிய குருமூர்த்தியே!
திரி புவனம் தொழு பார்த்திபன் --- மூன்று
புவனங்களும் வணங்கி நின்ற மன்னவன்,
மருவிய மண்டப கோட்டிகள் --- புதுக்கிய
மண்டபக் கூட்டங்கள்
தெருவில் விளங்கு சிராப்பள்ளி மலை மீதே --- வீதியில்
விளங்குகின்ற திருச்சிராப்பள்ளி மலைமீது
தெரிய இருந்த பராக்ரம --- யாவருக்கும்
தெரியுமாறு வீற்றிருக்கும் வீரமூர்த்தியே!
உருவளர் குன்று உடையார்க்கு --- அழகிய
வுருவுடன் விளங்கும் குன்றுடையவராகிய தயாபரர்க்கு
ஒரு திலதம் எனும்படி தோற்றிய பெருமாளே ---
ஒரு நெற்றிப் பொட்டு போல் தோன்றிய பெருமையின் மிகுந்தவரே!
அரிவையர் நெஞ்சு உருகா --- மாதர்களின்
மீது உள்ளம் உருகி
புணர் தரு விரகங்களினால் --- சேரவேண்டும்
என்று விரக நோயினால்
பெரிது அவசம் விளைந்து --- மிகவும்
மூர்ச்சையாகி
விடாய்த்து --- ஆசை விடாய் கொண்டு
அடர் முலைமேல் வீழ்ந்து --- நெருங்கியுள்ள தனங்களின்
மீது வீழ்ந்து,
அகிலொடு சந்தன சேற்றில் முழுகி எழுந்து --- அகில்
சந்தனம் இவைகளின் சேற்றினில் மூழ்கி எழுந்தும்,
கூப்பு கை அடியில் நகம் பிறை போல் பட விளையாடி
--- குவிந்துள்ள கையடியில் உள்ள நகம் பிறைபோல் படும்படி விளையாடல் செய்து,
பரிமளம் விஞ்சிய பூ குழல் சரிய --- வாசனை
மிகுந்த மலர் நிறைந்த கூந்தல் சரிய,
மருங்கு உடை போய் --- இடையில் இருந்த ஆடை
விலக,
சில பறவைகளின் குரலாய் --- சில பட்சிகளின்
ஒலிகள் எழ,
கயல்விழி சோர --- மீன் போன்ற கண்கள்
சோர்வுடைய,
பனி முகமும் குறு வேர்ப்பு எழ --- குளிர்ந்த
முகத்தில குறு வெயர்வு உண்டாக
இதழ் அமுது உண்டு --- வாயிதழைப் பருகி,
இரவாய் பகல் பகடி இடும்படி தூர்த்தனை விடலாமோ
--- இரவும் பகலும் ஒன்று போலக் கழித்து, கலவிக்
கூத்தாடுகின்ற கொடியவனை, கைவிடலாமோ?
பொழிப்புரை
சரியை மார்க்கத்தையும் கிரியை
மார்க்கத்தையும் அநுட்டித்து மேலான பதத்தைப் பெற விரும்பும் அன்பர்கட்கு அருளைத்
தருகின்ற திருவரங்கத்தில் உறைகின்ற சிறந்த திருமாலின் திருமருகரே!
கிரவுஞ்ச மலை பொடியாகச் செலுத்திய வேலை
ஏந்திக்கொண்டு மயிலின் மீது வந்து அடியேனை ஆட்கொண்ட கருணைத் திறத்தை உலகம்
உணரும்படி காட்டிய குருநாதா!
மூன்று உலகங்களும் வணங்குகின்ற மன்னவன்
புதுக்கிய மண்டபக் கூட்டங்கள் தெருவிலே காட்சியளிக்கும் திருசிராப்பள்ளி மலைமீது
உலகமறிய எழுந்தருளியிருக்கும் வீரமூர்த்தியே!
அழகிய குன்றுடையவராம் சிவபெருமானுக்கு ஒரு
திலகம் போல் தோன்றிய பெருமிதம் உடையவரே!
மாதர்களின் மீது உள்ளம் உருகி, அவர்களைச் சேரவேண்டும் என் ஆசை நோயால்
மிகவும் உணர்வு அழிந்து, காம விடாய் கொண்டு, நெருங்கிய தனங்களின்மீது வீழ்ந்து, அதில் சந்தனமாகிய சேற்றில் முழுகி
எழுந்து, எதிரில் குவிந்த
கையில் உள்ள நகங்களினால் பிறைபோல் குறி வைத்து விளையாடி, நறுமணம் மிக்க பூ முடித்த குழல்
சரியவும், இடையில் இருந்த உடை
அவிழவும், சில பறவைகளின்
குரல்கள் எழவும் மீன் போன்ற கண் சோரவும், குளிர்ந்த
முகத்தில் சிறு வியர்வை எழவும்,
வாயிதழ்
அமுதை உண்டு, பகல் இரவு என்று
அறியாமல் கலவியில் கூத்தாடும்படி இந்தக் கொடியவனை விடலாமோ?
விரிவுரை
இத்திருப்புகழில் முதல் நான்கு அடிகளில்
மாதர் கலவிச் செயலைப்பற்றி அடிகளார் கூறுகின்றார்.
சரியை
---
நந்தவனம்
அமைத்தல், மலர் பறித்தல், தொடுத்தல், ஆலயத்தை விளக்குதல், கூட்டுதல் முதலியன.
தாதமார்க்கம்
சாற்றில், சங்கரன் தன் கோயில்
தலம் அலகு இட்டு, இலகு திரு மெழுக்கும் சாத்தி,
போதுகளும்
கொய்து, பூந் தார்மாலை கண்ணி
புனிதற்குப் பலசமைத்து, புகழ்ந்து பாடி,
தீதுஇல்
திரு விளக்குஇட்டு, திருநந்த வனமும்
செய்து, திருவேடம் கண்டால் "அடியேன்
செய்வது
யாது? பணியீர்!" என்று பணிந்து, அவர்தம் பணியும்
இயற்றுவது; இச்சரியை செய்வோர் ஈசன் உலகு இருப்பர். ---
சிவஞானசித்தியார்.
சிவபெருமானுடைய திருக்கோயிலைத் திருஅலகு
இட்டும், திருமெழுக்கு இட்டும், மொட்டறா மலர் பறித்து இறைவனுக்கு எனத்
தாரும் மாலையும் கண்ணியும் தொடுத்தும், இறைவன்
பெருமைகளைப் புகழ்ந்து பாடியும்,
இருள்
அகற்றும் திருவிளக்கு ஏற்றியும்,
திருநந்தவனங்களை
அமைத்துக் காத்தும், திருவேடம் கொண்ட
அடியார்களைக் கண்டால் "தங்களுக்கு நான் செய்யும் பணி யாது?" என்று
கேட்டு, அவர்கள் இடும் பணியை உவந்து இயற்றியும் வருவது தாதமார்க்கம் ஆகும், இதுவே சரியை நெறி, இந்நெறியில் ஒழுகுவோர் ஈசன் உலகத்தில்
இருப்பர்.
கிரியை
---
ஆலய
பழிபாடு செய்தல், துதித்தல், பூசித்தல் முதலியன.
புத்திர
மார்க்கம் புகலின், புதிய விரைப் போது
புகை ஒளி மஞ்சனம் அமுது முதல் கொண்டு,
ஐந்து
சுத்திசெய்து,
ஆசனம், மூர்த்தி, மூர்த்தி
மானாம்
சோதியையும் பாவித்து, ஆவாகித்து, சுத்த
பத்தியினால்
அருச்சித்து, பரவிப் போற்றி,
பரிவினொடும் எரியில் வரு காரியமும்
பண்ணி,
நித்தலும்
இக் கிரியையினை இயற்றுவோர்கள்
நின்மலன்தன் அருகு இருப்பர், நினையும் காலே. ---
சிவஞானசித்தியார்.
புதிய மணம் உள்ள மலர்கள், நறும்புகை, திருவிளக்கு, திருமஞ்சனப் பொருள்கள், திருஅமுது ஆகிய வழிபாட்டுக்கு உரிய
பொருள்களை எல்லாம் சேகரித்துக் கொண்டுண,
ஐந்து வகைத் தூய்மைகளையும் செய்து, இருக்கை இட்டு, திருமேனியை எழுந்தருளச் செய்து,
திருமேனியை உடையானாகிய பேரொளி வடிவாகிய இறைவனைப் பாவித்து அதில் எழுந்தருளச்
செய்து, தொழுது, தூமலர் தூவித் துதித்து நின்று, அழல் ஓம்பி நாள்தோறும் வழிபடுவது மகன்மை
நெறி எனப்படும். இதனை வழுவாது இயற்றி வருபவர்கள் சிவபெருமானின் அருகில் இருக்கும்
பேற்றினைப் பெறுவார்கள். இந்நெறி கிரியை நெறி எனப்படும்.
பரமபதம்
பெறுவார்க்கு அருள் தரு கணன் ---
திருமாலை
அன்புடன் வழிபட்டோர் பெறுவது பரமபதம். அது மேலான பதம். கண்ணன் என்ற சொல் கணன் என
வந்தது.
ரங்க
புரோச்சிதன் ---
ரங்கபுர
உச்சிதன்
திருவரங்கம்
என்ற திருத்தலம் இட்சுவாகு முதலியவர்கள் வழிபட்டது.
பூலோக
வைகுந்தம் எனப் புகழ்பெற்ற தலம். ஓங்கார வடிவாய விமானமுடையது.
சயிலம்
எறிந்தகை வேற்கொடு மயிலினில் வந்து எனை ஆட்கொளல் சகம் அறியும்படி காட்டிய
குருநாதா:-
இது
சுவாமிகள் வரலாற்றைக் குறிக்கின்றது.
திருவருணையில்
அருணகிரியோடு வாதிட்ட சம்பந்தாண்டான் தேவியை அரசவையில் வரவழைப்பேன் என்று உறுதி
கூறி, அவ்வாறு அழைக்க
முடியாது தோல்வியடைந்தார் அருணகிரியார். “அதல சேடனாராட” என்ற திருப்புகழைப் பாடி
வேண்டினார். முருகக் கடவுள் கம்பத்திலிருந்து வெளிப்பட்டுப் பிரபுடதேவராஜன் முதலிய
அனைவரும் கண்டுகளிக்கக் காட்சியளித்தார்.
இந்தத்
திருவருட் செயல் உலகமறிய நிகழ்ந்தது.
திரிபுனவம்
தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள் ---
குணதரன்
என்ற மகேந்திரவர்மன், ராஜ ராஜ கேசரிவர்மன்
முதலிய பல மன்னர்கள் திரிசிராப்பள்ளியில் பல மண்டபங்களைக் கட்டினார்கள்.
ஆயிரக்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், பதினாறு கால் மண்டபம், மணிமண்டபம், சித்திரமண்டபம் முதலிய இன்னும் காண
இருக்கின்றன.
சிராப்பள்ளி
மலை ---
வாயுவுக்கும்
ஆதிசேடனுக்கும் வலிமையில் யார் பெரியவர் என்ற ஒரு போட்டி நடந்தது.
ஆதிசேடன்
தன் ஆயிரம் பணாமகுடங்களால் திருக்கயிலாய மலையின் சிகரங்களை மூடினான். வாயுதேவன்
ஓங்கி வீசி கயிலையின் மூன்று சிகரங்களை அடித்துத் தள்ளினான். ஒன்று காளத்தி, ஒன்று திரிசிராப்பள்ளி, ஒன்று திருக்கோணமலை. இந்த மூன்றும்
தட்சிண கைலாயம் எனப்படும்.
முன்னர்
வீழ்ந்திடு சிகரி காளத்தியா மொழிவர்,
பின்னர்
வீழ்ந்தது திரிசிரா மலை என்னும் பிறங்கல்,
அன்னதின்
பிறகு அமைந்தது கோணமா அசலம்,
இன்ன
மூன்றையும் தட்சிணை கயிலை என்று இசைப்பர். --- செவ்வந்திப் புராணம்.
உருவளர்
குன்று உடையார்க்கு ஒரு திலதம் எனும்படி
தோற்றிய
---
"குன்றுடையார்"
என்ற சொல் திருஞானசம்பந்தர் இத்தலத்தில் பாடியருளிய, "நன்றுடையானை" என்ற
திருப்பதிகத்தில் “சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிருமே” என்ற
பகுதியை நினைவூட்டுகின்றது.
சிவபெருமானுடைய
நெற்றிக் கண்ணிலிருந்து திலகம் போல் முருகர் தோன்றினார்.
கருத்துரை
திரிசிராப்பள்ளி
முருகவேளே! மாதர் வசமாகி அடியேன் அலையாமல் ஆண்டருள்வீர்.
No comments:
Post a Comment