திருச்சிராப்பள்ளி - 0335. அழுது அழுது





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

அழுது அழுது ஆசார -  திருச்சிராப்பள்ளி

முருகா! பொதுமாதர் வசமாகி அழியாமல் காத்து அருள்


தனதன தானான தானன
தனதன தானான தானன
     தனதன தானான தானன ...... தந்ததான


அழுதழு தாசார நேசமு
முடையவர் போலேபொய் சூழ்வுறும்
     அசடிகள் மாலான காமுகர் ...... பொன்கொடாநாள்

அவருடன் வாய்பேசி டாமையு
முனிதலு மாறாத தோஷிகள்
     அறுதியில் காசாசை வேசைகள் ...... நஞ்சுதோயும்

விழிகளி னால்மாட வீதியில்
முலைகளை யோராம லாரொடும்
     விலையிடு மாமாய ரூபிகள் ...... பண்பிலாத

விரகிகள் வேதாள மோவென
முறையிடு கோமாள மூளிகள்
     வினைசெய லாலேயெ னாவியு ...... யங்கலாமோ

வழியினில் வாழ்ஞான போதக
பரமசு வாமீவ ரோதய
     வயலியில் வேலாயு தாவரை ...... யெங்குமானாய்

மதுரையின் மீதால வாயினில்
எதிரம ணாரோரெ ணாயிரர்
     மறிகழு மீதேற நீறுப ...... ரந்துலாவச்

செழியனு மாளாக வாதுசெய்
கவிமத சீகாழி மாமுனி
     சிவசிவ மாதேவ காவென ...... வந்துபாடும்

திருவுடை யாய்தீதி லாதவர்
உமையொரு பாலான மேனியர்
     சிரகிரி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


அழுது அழுது ஆசார நேசமும்
உடையவர் போலே பொய் சூழ்வுறும்
     அசடிகள், மாலான காமுகர் ...... பொன் கொடா நாள்

அவருடன் வாய் பேசிடாமையும்,
முனிதலும் மாறாத தோஷிகள்,
     அறுதி இல் காசு ஆசை வேசைகள், ...... நஞ்சு தோயும்

விழிகளினால் மாட வீதியில்,
முலைகளை ஓராமல் ஆரொடும்
     விலை இடும் மாமாய ரூபிகள், ...... பண்பு இலாத

விரகிகள், வேதாளமோ என
முறையிடு கோமாள மூளிகள்,
     வினை செயலாலே என் ஆவியும் ...... மயங்கல்ஆமோ?

வழியினில் வாழ்ஞான போதக
பரம சுவாமீ! வரோதய!
     வயலியில் வேலாயுதா! வரை ...... எங்கும் ஆனாய்,

மதுரையின் மீதுஆல வாயினில்
எதிர் அமணார் ஓர் எணாயிரர்
     மறிகழு மீது , நீறு  ...... பரந்து உலாவச்

செழியனும் ஆள்ஆக வாதுசெய்
கவிமத சீகாழி மாமுனி!
     சிவசிவ மாதேவ கா என ...... வந்துபாடும்

திரு உடையாய்! தீது இலாதவர்,
உமை ஒரு பால் ஆன மேனியர்,
     சிரகிரி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.


பதவுரை


      வழியினில் வாழ் --- அருள் நெறியில் வாழ்கின்ற,

     ஞானபோதக பரம சுவாமீ --- ஞான உபதேசம் புரியும், உலகங்களை எல்லாம் உடைமையாக உடைய பெரியவரே!

      வர உதய --- சிவபெருமான் தேவர்கட்குத் தந்த வரத்தால் தோன்றியவரே!

      வயலில் வேலாயுதா --- வயலூரில் வாழ்கின்ற வேலாயுதரே!

      வரை எங்கும் ஆனாய் --- மலைகள் அனைத்திலும் வீற்றிருப்பவரே!

      மதுரையின் மீது ஆலவாயினில் --- மதுரையாகிய ஆலவாய் என்ற திருத்தலத்திலே,

     எதிர் --- எதிர்த்து வந்த,

     அமணோர் ஒரு எணாயிரர் --- எண்ணாயிரம் சமணர்களும்,

     மறி கழு மீது ஏற --- அழியுமாறு கழுவின் மீது ஏறவும்,

     நீறு பரந்து உலாவ --- திருநீறு எங்கும் பரவுமாறும்,

     செழியனும் ஆள் ஆக --- பாண்டியனும் அடிமைப் படவும்,

     வாது செய் கவிமத சீகாழி மாமுனி --- வாது செய்த, தமிழ் மறையாகிய மதத்தைப் பொழிந்த, சீகாழியில் வந்த பெரிய முனிவரே!

      சிவ சிவ மாதேவ --- சிவ சிவா! மகா தேவா!

     கா என --- நீர் காப்பாற்றும் என்று

     வந்து பாடும் திருவுடையாய் --- இறைவன் முன்வந்து பதிகம் பாடியருளிய தெய்வத்தன்மையுடையவரே!

      தீது இலாதவர் --- தீமை இல்லாதவரும்,

     உமை ஒரு பால் ஆன மேனியர் --- உமாதேவியை ஒரு புறத்தில் கொண்ட திருமேனியரும் ஆன சிவபிரானுடைய

     சிரகிரி வாழ்வு ஆன --- திரசிர கிரியில் வாழ்வு கொண்டிருக்கும்,  

     தேவர்கள் தம்பிரானே --- தேவர்கள் போற்றும், தனிப் பெருந்தலைவரே!

      அழுது அழுது --- மேலும் மேலும் அழுது,

     ஆசார நேசம் உடையவர் போலே --- ஆசாரமும் அன்பும் உடையவர்களைப் போல் நடித்து,

     பொய் சூழ் உறும் அசடிகள் --- பொய்யான சூழ்ச்சிகளைச் செய்யும் அறிவில்லாதவர்கள்,

     மால் ஆன காமுகர் --- தம் மீது மயக்கம் கொண்ட காமிகள்  

     பொன்கொடா நாள் --- பொன் கொடுக்க முடியாத நாள்களில்,

     அவருடன் வாய் பேசிடாமையும் --- அவர்களோடு வாய் பேசாதிருத்தலும்,

     முனிதலும் --- கோபித்தலும்

     மாறாத தோஷிகள் --- நீங்காத குற்றமுடையவர்கள்,

     அறுதி இல் காசு ஆசை வேசைகள் --- முடிவு இல்லாத பணத்தாசை கொண்ட வேசைகள்,

     நஞ்சுதோயும் விழிகளினால் --- நஞ்சு தோய்ந்த கண்களினால்,

     மாடவீதியில் --- மாட வீதிகளில்,

     ஓராமல் ஆரொடும் முலைகளை விலையிடும் மா மாய ரூபிகள் --- ஆராயாமல் எவரோடும் முலைகளை விலைக்கு விற்கும் பெரிய மாய வடிவினர்கள்,

     பண்பு இலாத விரகிகள் --- நற்குணம் இல்லாத வஞ்சகிகள்,

     வேதாளமோ என முறை இடு கோமாள மூளிகள் --- பேயோ என்னும்படி, கூக் குரலிட்டழுது கும்மாளம் போடும் விகாரம் உடையவர்கள்,

     இத்தகைய பொதுமாதர்களின்,

     வினை செயலாலே ஆவி உயங்கலாமோ --- மாயச் சூழ்ச்சிகளால், அடியேனுடைய உயிர் வருந்தலாமோ?


பொழிப்புரை

      நன்னெறியில் ஞானோபதேசம் செய்யும் பெரிய சுவாமியே!

     உலகங்களை எல்லாம் உடைமையாக உடைய பெரியவரே!

     வரத்தால் தோன்றியவரே!

     வயலூரில் வாழ்பவரே!

     வேலாயுதரே!

     எல்லா மலைகளிலும் இருப்பவரே!

     மதுரையாகிய ஆலவாயிலில் எதிர்த்த சமணர்கள் எண்ணாயிரம் பேர்களும் கழுவில் ஏறவும், திருநீறு எங்கும் பரவவுமாறும் பாண்டியனும் அடிமைப் படவும் வாது செய்து, தமிழ் வேதமாகிய மதத்தைப் பொழிந்த சீகாழி மாமுனிவரே!

     சிவசிவா! மகாதேவா! காத்தருள் என்று மதுரையில் வந்து பாடியருளிய தெய்வத் தன்மையுடையவரே!

     குற்றமில்லாதவரும் உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவருமாகிய சிவபிரானுடைய திரிசிராப்பள்ளியில் வாழ்கின்றவரே!

     தேவர்கள் போற்றும் பெருமையின் மிகுந்தவரே!

     மேலும் மேலும் அழுதும், ஆசாரமும் அன்பும் உடையவர்கள் போல் பொய்மையாக நடித்தும் வஞ்சனையைச் செய்யும் அறிவற்றவர்களும், தம்மீது மயக்கமுற்ற காமுகர்கள் தராதபோது, அவருடன் பேசாமலும் கோபித்தும் சாகசம் புரியும் குற்றமுடையவர்களும், முடிவில்லாத பணத்தாசையுடைய வேசைகளும், நஞ்சு படிந்த கண்களினால் மாடவீதியில் தனங்களை ஆராயாமல் எவருடனும் விலைக்குத் தருபவர்களும், பெரிய மாய வடிவத்தினர்களும், நற்குணம் இல்லாத வஞ்சகிகளும், பேயோ பிசாசோ என்னும்படி கூக்குரல் செய்த கும்மாளமிடும் மூளிகளும் ஆகிய பொது மாதர்களின் கொடுஞ் செயல்களாலே அடியேனுடைய உயிர் வருந்தலாமோ?

விரிவுரை

அழுது அழுது ஆசார நேசமும் உடையவர் போலே ---

பொது மகளிர் தம்மை விரும்பி வந்தவர், மேலும் மேலும் விரும்பும் பொருட்டு, கண்டபோதெல்லாம் மாயக் கண்ணீர் வடித்து அழுவர். “ஆ! எத்தனை அன்பு நம் மீது இவள் வைத்திருக்கிறாள்” என்று ஆடவர் மயங்கித் தியங்குவர்.

அநாசாரமே குடிகொண்டிருக்கின்ற அவர்கள் மிகுந்த ஆசாரமுடையவர் போலும், ஒரு துளிகூட நேசமின்றி, மிக்க நேசமுடையவர் போலும் நடித்துக் கொள்வார்கள்.
  
பொய் சூழ்வுறும் அசடிகள் ---

தமக்கு ஏதோ கடன் இருப்பது போலும், நகைகளை அடகு வைத்து விட்டது போலும், நோய் வந்தது போலும் பேசிப் பெருந் தொகைகளைப் பறிப்பார்கள்.

மாலான காமுகர் பொன் கொடாநாள், அவருடன் வாய் பேசிடாமையும் முனிதலும் மாறாத தோஷிகள் ---

கை வறண்ட காரணமாக ஆடவர் காசு கொடுக்கவில்லை யானால் உடனே பிணக்கமுற்று, அவருடன் சீற்றங்கொண்டு பேசாமல் இருப்பார்கள். பலகாலும் அள்ளி அள்ளித் தந்ததை மறந்து விடுவார்கள்.

பாக்கு மரத்துக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டே இருக்க வேண்டும், ஒருநாள் விடவில்லையானால் வாடிவிடும். 

வினை செயலாலே என் ஆவி உயங்கலாமோ? ---

பலப்பல மாயஞ் செய்யும் பரத்தையர்களின் கொடுஞ் செயல்களால் ஆவி வருந்தி அழியலாமோ! அழிவது கூடாது.

வழியினில் வாழ் ஞானபோதக ---

அறவழியில் வாழ்கின்ற ஞானதேசிகன் முருகன்.

வழி-மலைப்பக்கம். ‘மலைப் பக்கங்களில் வாழ்பவரே’ எனினும் பொருந்தும்.

பரம சுவாமீ ---

பரமன்-பெரியவன்.  சுவாமீ-எல்லாவற்றையும் தனக்கு உடைமையாக உடையவன் சுவாமி என்ற சொல் முருகனுக்கே உரிய சொல். வடமொழி நிகண்டு அமர சிம்மம். “தேவசேனாபதி சூர; சுவாமி கஜமுக அனுஜ;” என்று கூறுகின்றது.

வரோதய ---

வர-உதய-சிவபெருமான் பால் தேவர்கள்.

ஆதியும், நடுவும், அருவமும், உருவும், ஒப்பும்,
ஏதும், வரவும், போக்கும், இன்பமும், துன்பும் இன்றி,
வேதமும் கடந்து நின்ற விமல! ஓர் குமரன் தன்னை
நீ தரல் வேண்டும் நுன்பால், நின்னையே நிகர்க்க என்றார்.

இவ்வாறு வேண்டிய தேவர்களின் முறையீட்டுக்கு இரங்கிய முக்கட்பெருமான், ஆறுமுகங் கொண்டு தன்னுடைய ஆறு நெற்றிக் கண்களிலிருந்து முருகனைத் தோற்றுவித்தார். அந்த வரத்தால் உதயமானவர் ஆனதால் ‘வரோதய’ என்றார்.
  
வயலியில் வேலாயுதா ---

வயலூர் என்னுந் திருத்தலத்தில் அருணகிரிநாதருக்கு திருப்புகழ் பாடும் தன்மையை முருகவேள் தந்தருளினார்.

பாதபங்கயம் உற்றிட உட்கொண்டு ஓதுகின்ற திருப்புகழ் நித்தம்
பாடும் என்பது செய்ப்பதியில் தந்தவன் நீயே”         --- (கோலகுங்கும) திருப்புகழ்.

வரை எங்குமானாய் ---

முருகவேள் குறிஞ்சி நிலக் கடவுள். எல்லா மலைகளிலும் அவர் எழுந்தருளியிருக்கின்றார். “பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே”, “மலைக்கு நாயக” என்றெல்லாம் அடிகளார் பாடுகின்றார்.

எதிர் அமணார் ஓர் எணாயிரர் ---

சமண குருமார்களாகவும் தலைவராகவும் இருந்தவர்கள் எண்ணாயிரவர்கள். இவர்களின் இடையறாத பிரசாரத்தால் பாண்டி நாடு முழுவதும் சமண இருள் மூடிவிட்டது.

மறி கழுமீது ஏற ---

சமணர்கள் ‘நாங்கள் தோற்றால் கழுவேறுவோம் என்று கூறியவாறு, அனல்வாதம் புனல்வாதம் புரிந்து தோல்வியுற்று, தாங்கள் வாய் மதத்தால் கூறியவண்ணம் கழுக்களை நாட்டி ஏறினார்கள்.

நீறு பரந்து உலாவ ---

திருநீறு பாண்டியநாடு முழுவதும் பரவியது. அதன் பெருமை உலகெங்கும் பரவியது.

செழியனும் ஆளாக ---

திருஞானசம்பந்தப் பெருமானுடைய அருள் திறத்தைக் கண்ட பாண்டியன் அவருடைய திருவடியில் வீழ்ந்து அடியவன் ஆனான்.

வாதுசெய் கவிமத சீகாழி மாமுனி ---

திருஞானசம்பந்தர் ஞான வேழம். அது தேவாரமாகிய மதத்தைப் பொழிந்தது.

தளம்பு நெஞ்சுடைய எண்ணாயிரம் சமண் தலைவராயோர்
உளம் பரிவொடு கழுக்கண் யோசனை அகலம் ஏற
வளம்பட வந்து செய்த வாரணம் என்னும் நாமம்
விளங்கியது அன்று முன்னா மேதகு தராதலத்தே.    --- திருவிளையாடற் புராணம்.

சிவசிவா மகாதேவகா என வந்து பாடும் திருவுடையாய் ---

திருஞானாம்பந்தர் சிவபெருமானை அமணருடன் “வாது செயத் திருவுள்ளமே” என்று பாடி வேண்டினார். இந்தவுலகம் சமண இருளால் மூடியழியா வண்ணம் காத்தருள் என்று சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டருளினார்.

தீதிலாதவர் உமை ஒரு பால் ஆன மேனியர் ---

திருஞானசம்பந்தர் திரிசிராப்பள்ளி தேவாரத்தில், “நன்றுடையானைத் தீயதில்லானை நரைவெள்ளேறு ஒன்றுடை யானை உமையொரு பாகம் உடையானை” என்று பாடியருளியதை இங்கேஅருணகிரியார் நமக்கு நினைவூட்டி அந்த அழகிய சொற்களை அமைத்தருளினார்.


கருத்துரை

திரிசிரபுரம் வாழ் தேவா! பரத்தையர் வசமாகி அழியா வண்ணம் பாதுகாத்தருள்வீர்.


No comments:

Post a Comment

பொது --- 1097. உறவின் முறையோர்க்கும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உறவின்முறை யோர்க்கும் (பொது) முருகா!  தேவரீரை அன்பொடு துதிக்க அறிவு தந்து அருளுவாய். தனதனன தாத்த தனதனன ...